Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 21

1 Posts
1 Users
1 Reactions
40 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#240]

அத்தியாயம் 21

தேவ் துபாய் கிளம்பியதும் அதை எப்படி சம்மந்தி வீட்டில் சொல்வது என்று கவலைபட்டுக் கொண்டு இருந்தார் விஸ்வநாதன். 

 

அப்பொழுது சிவநேசனே ஃபோன் செய்துவிட, தயக்கமாக "ஹலோ" என்றார். 

 

விஸ்வநாதன் ஃபோனை எடுத்ததும், "சம்மந்தி எல்லோரும் எப்படி இருக்கீங்க? இப்பதான் மருமகன் ஃபோன் செய்தார். ஏதோ அவசர வேலையாக அவருக்கு ஃபோன் வந்ததால் உடனே கிளம்புவதாக" என்று விஸ்வநாதனின் குரலில் இருந்த கவலையை கண்டு நேரடியாக தனக்கு விசயம் தெரிந்துவிட்டதை உணர்த்தினார்.

 

இப்பொழுது தான் விஸ்வநாதனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. "ஆமாம் சம்மந்தி, இப்போது தான் கிளம்பினான். நான் உங்களுக்கு எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டு இருந்தேன், நீங்களே ஃபோன் பண்ணிட்டீங்க" என்றார். 

 

"இதில் என்ன இருக்கு சம்பந்தி, ஏதோ முக்கிய வேலை என்பதால் தானே அவர்களும் விடுப்பு இருக்கும் பொழுதே அழைத்திருக்கிறார்கள். அவர் சென்ற பிறகு சிவன்யாவிற்கு விசா ஏற்பாடு செய்ததாக கூறியிருக்கிறார். அதனால் அதற்குரிய வேலைகளை பார்ப்போம் சம்மந்தி, திடீரென்று கிளம்பியதால் நீங்கள் வேறு மாப்பிள்ளையை ரொம்ப திட்டினீர்களாம், அதையும் சொன்னார். நான் ஏதும் நினைத்துக் கொள்வேன் என்று நினைத்து நீங்கள் வருத்தப்படாதீங்க" என்று அவரிடம் கூறிவிட்டு, சம்பந்தி சிவன்யா?" என்று தயக்கமாக கேட்டார். 

 

"இதோ ஒரு நிமிஷம் சம்மந்தி" என்று சிவன்யாவின் கையில் ஃபோனை கொடுத்த விஸ்வநாதன், "அப்பா.. பேசுமா!" என்று கூறி மனைவியையும் அழைத்துக் கொண்டு நகன்றார். 

 

"அப்பா" என்று சொல்வதற்குள் சிவன்யாவின் மனது படாதபாடு பட்டது. மகளின் அவளின் குரலிலேயே அவளின் மனநிலையை உணர்ந்து கொண்டார் சிவநேசன். 

 

"மாப்பிள்ளை ஃபோன் பண்ணினாரு மா. வருந்தாதம்மா, வெளிநாட்டில் வேலை செய்யும்போது இப்படித்தானே! அவரு போகவில்லை என்றால் வேலையை விட்டு தூக்கிடு வாங்கலாம், அதனாலதான் உடனே கிளம்பறதா சொன்னாரு" என்று தயங்கிப்படி மகளிடம் பேசினார். 

 

"ஆமாப்பா, அதுதான் சொன்னாரு. புரிந்து கொள்ள முடியுதுப்பா. இங்க அத்தையும் மாமாவும் அவரை திட்டுறாங்க. நான் கவலைப்படவில்லை. என்னை நினைத்து நீங்க வருந்தாதிங்க" என்று தந்தைக்கு ஆறுதல் கூறினார் சிவன்யா.

 

மகள் விட்டுவிட்டு பேசுவதிலேயே அவளின் வேதனையை புரிந்து கொண்டனர் சிவநேசன். திருமணம் முடிந்ததும் பெண் பிள்ளைகளுக்குள் எவ்வளவு மாற்றம் வந்துவிடுகிறது. அவர்கள் கவலையை பெற்றோரிடமே மறைத்து பேச ஆரம்பித்து விடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டார். 

 

இவள் சாதாரணமாக பேசினால், என்னால் அவளின் நிலையை உணரமுடியாது என்று நினைக்கிறாள் போல' என்று அவரும் நினைத்து புன்னகைத்துக் கொண்டு "சரி மா நேரம் கிடைச்சா ஊருக்கு வரேன், சம்பந்தி கிட்டயும் சொல்லு. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதே!" என்று கூறிவிட்டு ஃபோனை வைத்தார் சிவநேசன். 

 

அதன் பிறகு வீடு அமைதியாகவே இருந்தது. நளினி ஃபோன் செய்து அண்ணிக்கு ஆறுதல் கூறினாள். இரவு யாருக்கும் சாப்பிடவே பிடிக்கவில்லை. சிவன்யாதான் மாமனார் மாமியார் இருவரையும் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்தாள். 

 

"அவனுக்கு ஃபோன் பண்ணி பாருமா? கிளம்பிட்டானா? எங்க இருக்கான்?" என்றார் விஸ்வநாதன் சிவன்யாவிடம். 

 

"நான் மெசேஜ் போட்டுக்கிட்டு தான் இருக்கிறேன் மாமா. எதற்கும் அவரும் பதில் சொல்லவில்லை" என்றால் கவலையாக. 

 

அடிக்கடி அவனுக்கு போன் செய்து கொண்டே இருந்தாள் சிவன்யா. 

ஒருதடவை ஃபோனை எடுத்த தேவ், ஃபோனை எடுக்கலை என்றால் ஏதோ வேலையாக இருக்கிறேன் என்று தெரியாதா?" என்றான் கோவமாக. முதல் முறையாக அவளிடம் அவன் கோவமாக பேசியதில் அதிர்ந்து விட்டாள் சிவன்யா. 

 

அவள் பேசாமல் இருப்பதில், தன் தவறை உணர்ந்து, "ஹலோ நான் பிளைட் ஏறிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல டேக் ஆஃப் ஆயிடும். அதன் பிறகு ஊருக்கு போய் தான் பேச முடியும். நானே உனக்கு போன் பண்ணனும் என்று நினைத்தேன். சரியா நீயே பண்ணிட்ட, அப்பா அம்மா கிட்டயும் சொல்லிடு. நான் அங்க போயிட்டு ஃபோன் பண்றேன், சரியா? என்று அவள் எதுவும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவனே பேசி போனையும் வைத்து விட்டான் தேவ்

 

"மாமா அவர் விமானத்தில் ஏறி விட்டாராம். ஊருக்கு சென்ற பிறகு பேசுவதாக சொன்னார்" என்று கூறி, அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டாள். 

 

"பார்த்தாயா? உன் மகன் செய்யும் வேலையை. அவளுடன் அன்பாக ஒரு வார்த்தை பேசுறானா? அவள் பேசுவதை கேட்கக்கூட மாட்டுரான். அவளின் வாடிய முகத்தை பார். நான் அவசரப்பட்டுட்டேன் என்று நினைக்கிறேன். அவனுக்கு இப்பொழுது நாம் திருமணம் செய்து வைத்திருக்க கூடாது. இவனை சிவன்யாவிற்கு கட்டி வைத்து அவளது வாழ்க்கையையும் நான் வீணாக்கி விட்டேன் என்று நினைக்கிறேன்" என்றார் வருத்தமாக. 

 

"ஏங்க எப்படி எல்லாம் பேசுறீங்க? அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வாங்க. ஏதோ அவசர வேலை என்று தானே உடனே கிளம்பி விட்டான்" என்று மகனுக்காக பேசினார் பார்வதி. 

 

"இல்லை பார்வதி, இங்கு இருக்கும் பொழுதும் நீ பார்த்தாய் தானே! அவன் நம் மருமகளிடத்தில் அதிகம் பேசவில்லையே?" என்றார் மகனின் நடவடிக்கையில் கவலையாக. 

 

பார்வதியும் கவனிக்காமல் இல்லை. முதலில் தங்கையின் திருமணம், அதனால் மற்ற வேலைகள் செய்வதால் மனைவியுடன் நேரம் செலவழிக்கவில்லை என்றுதான் நினைத்தார். 

 

ஆனால் நளினி திருமணம் முடிந்து, அவள் புகுந்த வீடு சென்று விட்ட பிறகு கூட பகலில் தேவ் அதிகம் வீட்டில் இருப்பதே இல்லை. அவனிடம் கேட்டால் விடுப்பு இருக்கும் பொழுது தானே நண்பர்களை பார்க்க முடியும்? என்று சொல்லி அவரது வாயை அடைத்து விடுவான். 

 

சிவன்யாவிடமும் அவ்வப்பொழுது சந்தோஷமாக இருக்கிறாயாம்மா என்று கேட்பார். அவளும் அதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தானே கூறினாள். அதனால் அவர்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் என்று இவரே ஒரு முடிவு கட்டி விட்டார்.  

 

ஆனால் இன்றும் அவளிடம் கூட ஊருக்கு போவதை சொல்லவில்லை என்று அவள் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்து கொண்டார். இத்தனை காலம் மகன் தவறு செய்ய மாட்டான் என்று இருமாப்பாக இருந்தவர், இன்று ஒரு பெண்ணாக மருமகளுக்கு அவன் உண்மையாக இல்லையோ என்று நினைத்து வருந்தினார். 

 

'ஏன் இப்படி செய்கிறான்? என்ன தான் அவசரமாக வேலையாக இருந்தாலும் இப்படியா வரச் சொல்வார்கள்!' என்று பலவாறு யோசித்தார். முதல்முறையாக மகனின் மீது ஒரு அதிருப்தி உண்டானது. 

 

இப்படி பலவாறு யோசித்து கொண்டு இருந்தவர் நாம் கண்டதையும் யோசிக்காமல் சிவன்யாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவளது அறைக்கு சென்று கதவைத் திட்டினார் பார்வதி. 

 

தேவ் உடன் பேசிவிட்டு தனது அறைக்கு வந்த சிவன்யா. திருமணம் பேசியதிலிருந்து இன்று நடந்தது வரை ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

 

திடீர் திருமணம் என்பதால் அவருக்கு தன்னை பிடிக்கவில்லை என்று நினைத்து இருந்தாள். ஆனால் இன்று அவருக்கு உண்மையிலேயே தன்னை பிடிக்கவில்லை என்று தெளிவாக தெரிந்தது. அதில் அவள் மனம் மிகவும் கலங்கிவிட கண்களில் தண்ணீர் தன்னால் வடிந்து கொண்டே இருந்தது. கதவு தட்டிய சத்தம் கேட்டதும் அவசரமாக கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கதவை திறந்தாள் சிவன்யா. 

 

சிவன்யாவின் முகத்தைப் பார்த்ததுமே, அவளது நிலையை புரிந்து கொண்ட பார்வதிக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. அவளை மென்மையாக அணைத்துக் கொண்டு "என்னை மன்னித்து விடுமா!" என்றார். 

 

அவரின் அணைப்பு தன் தாயின் நினைவை தூண்ட, அவளுக்கு மேலும் கண்ணீர் வடிந்தது. மௌன அழுகை மெல்லிய தேம்பலாக மாறியது. 

 

அவளது முதுகை ஆதுர்யமாக தடவிக் கொடுத்தபடியே, "எல்லாம் சரியாகும்மா, உண்மையிலேயே எங்களுக்கு அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று தெரியவில்லைம்மா? அவன் இப்படி திடீரென்று கிளம்புவான் என்று நினைக்கவே இல்லை" என்று கவலையாக கூறினார் பார்வதி. 

 

-தொடரும்..

 

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 28, 2026 5:05 pm
Kalidevi reacted

Scroll to Top