Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 20

2 Posts
2 Users
1 Reactions
216 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#237]

அத்தியாயம் 20

 

தான் துபாய் சொல்வதாக சொல்லி அரை மணி நேரத்திற்கு எல்லாம் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தான் தேவ். 

 

விஸ்வநாதனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை திருமணம் முடிந்து மருமகளை விட்டுவிட்டு அவன் மட்டும் இப்படி பொறுப்பில்லாமல் செல்வது கோபமாக வந்தது. அதை "நீ செய்வது சரியில்லை தேவ். இன்னும் விடுமுறை நாள் இருக்க, மருமகளை அழைத்துக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் இப்படி நீ தனியாக செல்வது சரியில்லை" என்று அவனிடமே சற்று கோவத்தை காண்பித்தார். 

 

"அப்பா, அவசர வேலை என்று சொல்கிறார்கள். இப்பொழுது போகவில்லை என்றால் என் வேலையை போய்விடும் பரவாயில்லையா?" என்றான் அவனும் கோபமாக. 

 

"வேலை முக்கியம்தான்! அதற்காக இப்படி அவசர அவசரமாக செல்வாயா? அவர்களிடம் உனக்கு இப்பொழுது தான் திருமணம் முடிந்தது என்று சொல்ல வேண்டியதுதானே! அதைக்கூட அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்களா? அல்லது உனக்கு கல்யாணம் முடிந்துவிட்டது என்று உனக்கு ஞாபகம் இல்லையா?.. 

அவளையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும், இல்லை என்றால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று எங்களிடமோ சிவன்யாவின் பெற்றோரிடமோ சொல்ல வேண்டும். திருமணம் முடிந்து முதல் முறை ஊருக்கு செல்கிறாய்! அவளது பெற்றோர் இடத்தில் சொல்ல வேண்டும் என்று அறிவு கூட உனக்கு இல்லையா?" என்றார் மிகவும் கோபமாக. 

 

தந்தை அறிவில்லையா என்று கேட்டதும் அவனுக்கு கோவம் வர, "யாருக்கு அறிவில்லை? நான் இப்பொழுது உங்களிடம் கல்யாணம் பண்ண சொல்லி கேட்டேனா?" என்று அவனும் கோபமாக அவரிடம் எகிறினான். 

 

நிலைமை மோசமாவதை உணர்ந்த பார்வதி, "தேவ் அப்பாவிடம் குரல் உயர்த்தி பேசலாமா?" என்று கூறிவிட்டு, 

"என்னங்க, அவன் தான் அப்படி பேசிக்கொண்டு இருக்கிறான், செய்கிறான், என்றால் நீங்களும் அவனிடம் அப்படி நடந்து கொள்ளலாமா?" என்று இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். 

 

இதுவரை அவசர கல்யாணத்தினால் தன்னை ஏற்றுக் கொள்ள சங்கடப்படுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த சிவன்யா, இன்று கோபத்தில் அவனுக்கு இந்த திருமணமே பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டாள். 

 

எப்படியும் அவன் தன்னை விரும்புவான் என்று நினைத்து காத்துக் கொண்டிருந்தவள் இப்பொழுது அவன் விஸ்வநாதனிடம் கோபமாக பேசியதில் பயந்து விட்டாள். 

 

அவளது பயம் கவலை எல்லாம் கண்ணீராக வழிய, "மாமா, அவர் அவசர வேலை என்று தானே செல்கிறார். அவர் செல்லட்டும், நான் பின்னால் செல்கிறேன். ஊருக்கு செல்பவரிடம் கோபத்தை காட்டாதீர்கள் மாமா!" என்றாள் கலங்கிய கண்ணுடன். 

 

அவளின் நிலையை கண்டு விஸ்வநாதனுக்கு கண்களும் கலங்கிவிட்டது. "பாருடா எவ்வளவு அருமையான பெண். நியாயமாக பார்த்தால் அவள் தான் இப்பொழுது சண்டை பிடித்திருக்க வேண்டும். ஆனால் அவள் சூழ்நிலையை புரிந்து கொண்டு உனக்காக என்னிடம் பேசுகிறாள். அவளை விட்டுவிட்டு போவதற்கு உனக்கு எப்படி மனது வந்தது" என்றார் கவலையாக. 

"இல்லைமா, எனக்கு அவன் இப்படி திடீரென்று கிளம்புவது வருத்தம் தானே தவிர அவன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை அம்மா. உன்னையும் அழைத்துச் செல்லலாம் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார் சிவன்யாவிடம் தன்மையாக. 

 

"சரிப்பா, நீங்கள் பொறுமையாக அப்புறமா பேசிக்கோங்க. எனக்கு நேரம் ஆகிவிட்டது, நான் கிளம்புகிறேன்" என்றான் தேவ். 

 

அவனை முறைத்தார் விஸ்வநாதன். 

பார்வதியோ "என்னப்பா இப்படி அவசரமா கிளம்புற, காலையில இருந்து சாப்பிடலையே! சாப்பிட்டு விட்டு போ. அம்மா சிவன்யா, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைம்மா" என்று மகனிடம் ஆரம்பித்து மருமகளிடம் முடித்தார். 

 

"நான் காலையில வெளியே சாப்பிட்டேன் மா. வீட்ல சாப்பிடலன்னா அப்படியே பட்டினியா கிடப்பேன்னு உங்களுக்கு நினைப்பா? நான் சாப்பிட்டு விட்டு தான் வந்தேன். எனக்கு நேரம் ஆகிவிட்டது கிளம்புகிறேன்" என்று தன் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல பார்த்தான். 

 

அவனைத் தடுத்த விஸ்வநாதன் "அவசரமா கிளம்புற சரிதான், அதை உன் மாமனார் மாமியாருக்கு ஃபோன் பண்ணி சொன்னியா? இல்லையா? முறைப்படி பார்த்தா நீ நேர்ல போய் அவங்க கிட்ட சொல்லிட்டு போகணும், ஆனால் இப்படி அவசரமா கிளம்புற" என்றார் கோவமாக. 

 

"அப்பா எனக்கு ஃபோன் பண்ணி சொல்லலாம் நேரம் இல்ல, நீங்களே எல்லாத்தையும் பாத்துக்கோங்க" என்று தந்தையிடம் சொல்லிவிட்டு, 

"நீ உங்க அப்பாக்கு ஃபோன் பண்ணி அர்ஜெண்டா கிளம்பிட்டேன்னு சொல்லிட்டு சிவன்யா" என்று மனைவியிடமும் கூறிவிட்டு, 

"நான் ஊருக்கு சென்றதும் அவளுக்கு விசா எடுப்பதற்கான வேலைகளை செய்து அனுப்புகிறேன். விசா வந்ததும் அனுப்பி வைங்க" என்று பொதுவாக சொல்லிவிட்டு, அவர்கள் பதில் எதையுமே கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான். 

 

அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றாள் சிவன்யா. 'இவர் என்ன மாதிரியான மனுஷன், என்ன மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்' என்று அவள் கலங்கி நின்றாள். 

 

விஸ்வநாதனுக்கு மகனின் செயலில் மிகுந்த கோபம் உண்டாகியது. கலங்கி நின்ற சிவன்யாவை வேதனையாக பார்த்த விஸ்வநாதன், "உன் பையன் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறான்? திருமணம் முடித்த பிறகு இப்படித்தான் நடந்து கொள்வானா?" என்று மகனின் மீது இருந்த கோபத்தில் மனைவியை திட்டினார்.  

 

"எங்களை மன்னித்து விடுமா! அவன் எப்பொழுதும் எல்லாரும் மீதும் பாசமாகத்தான் இருப்பான்! இப்பொழுது ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்குமே தெரியவில்லை? உண்மையிலேயே அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று தான் நினைக்கிறேன். இதுவரை அவன் அவனது அப்பாவை எதிர்த்து பேசியது கிடையாது. அவன் செய்த செயலுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று சிவன்யாவின் கைகளை பிடித்து கெஞ்சினார் பார்வதி.

 

"ஐயோ அத்தை, நீங்கள் ஏன் இதற்குப் போய் மன்னிப்பு கேட்கிறீர்கள்? ஏதோ முக்கியமான வேலையாகத்தான் இருக்கும்! இல்லையென்றால் அவர் இப்படி செல்ல மாட்டார் அல்லவா? அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. 

அதான் விசா எடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாக சொல்லி இருக்கிறாரே? ஆகையால் என்னை நினைத்து வருந்தாதீர்கள், அவரிடம் கோபப்படாதீங்க மாமா என்று அத்தையிடம் ஆரம்பித்து விஸ்வநாதனிடம் முடித்தாள் சிவன்யா. 

 

"இவன் இப்படி பண்ணிட்டு போயிட்டானே! நான் எப்படி சம்மந்திக்கு விஷயத்தை சொல்வேனோ தெரியவில்லையே? அவர்கள் எவ்வளவு கலங்குவார்கள்? கல்யாணம் முடிந்த சிறிது நாளிலேயே இப்படி விட்டு விட்டு போயிட்டான் என்று தானே சொல்லுவாங்க!" என்று கலங்கியபடியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார் விஸ்வநாதன். 

 

"அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க மாமா. அதை நினைத்து நீங்கள் வருந்தாதீர்கள். நானே அப்பாவுக்கு ஃபோன் செய்கிறேன்" என்றாள் சிவன்யா. 

 

"இல்லம்மா, நானே பண்ணி அவர்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன், இவன் பண்ணினா வேலைக்கு நீ பேசினாள் சரியா வராது" என்று அவர் சிவநேசனுக்கு ஃபோன் செய்வதற்காக தன் கைபேசியை எடுத்தார். அவர் ஃபோனை எடுக்கவும் அவருக்கு ஃபோன் வரவும் நேரம் சரியாக இருந்தது. அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டு "உங்க அப்பாவே ஃபோன் பண்ணிட்டாரு" என்று அதிர்ச்சியாக கூறினார். 

 

அவரின் அதிர்ந்து முகம் கண்டு, "ஏன் மாமா பயப்படுறீங்க? அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு. தைரியமா ஃபோனை எடுத்து பேசுங்க" என்று பயந்தபடி ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த தன் மாமாவிற்கு தைரியமூட்டினாள் சிவன்யா. 

 

இனி வேறு வழியும் இல்லை. மகன் செய்ததற்கு தான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட விஸ்வநாதன், ஃபோனை எடுத்ததும் "ஹலோ சம்பந்தி" என்று கலக்கமாக ஆரம்பித்தார். 

 

விஸ்வநாதன் சிவநேசனிடம் பேசவே தயங்கிக் கொண்டு இருக்க, எந்த தயக்கமோ, பயமோ, கவலையோ, இல்லாமல் "ஹலோ ஜோ, ஒரு வழியாக வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன். இன்று இரவு நேரில் பார்க்கலாம்" என்று விமான நிலையம் நோக்கி காரில் பயணித்துக் கொண்டே ஃபோனில் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தான் தேவ்.

 

- தொடரும்..

 

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 27, 2026 5:06 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

ninacha mariye ivan yaraiyo love pani irukan atha ippdi oduran


 
Posted : July 28, 2026 3:11 pm

Scroll to Top