Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-43-44

9 Posts
9 Users
0 Reactions
57 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#390]

அத்தியாயம்-43

சாரதி வீட்டுக்குச் சென்று முகம் கழுவி, வேறு உடை அணிந்து கொண்டு மீண்டும் இறப்பு நடந்த வாசலுக்கு வந்தான்.

வரும் போதே கையில் ஒரு வாட்டர் பாட்டில் இருந்தது. அதற்குள் தண்ணீர் இல்லை. வீட்டில் இருந்த ஆரஞ்சு ஜூஸை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

லாவண்யாவை பார்த்ததும் அவளிடம் அந்த பாட்டிலை நீட்டினான்.

"தண்ணி வேண்டாம்" என்று சோர்வாக முகம் சுளித்தவள், பாட்டிலை வாங்காமல் இருக்க,

"தண்ணி இல்ல ஆரஞ்சு ஜூஸ்" என்றான் சாரதி.

அதன்பின்னே அவளுடைய கை உடனே நீண்டு பாட்டிலை வாங்கிக் கொண்டது.

"குடி... கொஞ்சமாவது உடம்புக்கு தெம்பா இருக்கும்."

லாவண்யா அவனைப் பார்த்தபடியே சிறிது குடித்தாள்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த புருஷோத்தமனின் பார்வை மகளிடம் இருந்து சாரதியிடம் சென்றது.

அவனுடைய மகள் உடம்பு சரியில்லாமல் இருக்கிறாள் என்பதைவிட, அவளை எப்படி பார்த்துக் கொள்கிறான் என்பதுதான் அவருடைய கண்களில் அதிகமாகப் பதிந்தது.

அவருடைய பார்வையை உணர்ந்த லாவண்யா திருட்டு முழியுடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

"அம்மா... அம்மா... தூக்கமா வருது..." என்று அன்னையின் தோளில் நின்றபடி சாய்ந்தாள்.

அலமேலு உடனே, "சும்மா இருக்க மாட்ட... இங்க எங்க தூங்கறது?" என்று அதட்டினார். மகள் தான் வாந்தியை எடுத்ததும் இன்றி சாரதியுடன் வ்நதிறங்கியே நாறடித்து விட்டாளே என்ற எண்ணம்.

லாவண்யா ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டாள். தாய்தந்தை அமைதியாக சாரதியின் செயலில் இருப்பதே பெரிய விஷயமென நினைத்தாள்.

ஆவுடையப்பனை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வரை அனைவரும் சாலையோரம் போடப்பட்டிருந்த சேர்களில் அமர்ந்திருந்தனர். சென்னை என்பதால் வீட்டை விட வாசலில் தான் சேர் இருக்க அதில் ஆண்கள் அமர்ந்திருந்தனர்.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.

புருஷோத்தமன் மகளை பார்த்தாரோ இல்லையோ... சாரதியை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தார். சாரதியின் பார்வையும் அவ்வப்போது லாவண்யாவைத் தேடிக் கொண்டிருந்தது. அவள் சோர்வாக நின்றிருப்பதைப் பார்த்ததும், அவளுக்காக ஒரு சேரை எடுக்க சாரதி எழுந்தான்.

ஆனால் அதற்குள் புருஷோத்தமன் வேகமாக முந்திக் கொண்டு, "லாவண்யா... இங்க உட்காரு." என்று தானே ஒரு சேரை இழுத்து அவளை பக்கத்தில் உட்கார வைத்தார். அவருடைய அந்தச் செயலால் சாரதிக்கு சிரிக்க தான் தோன்றியது. ஆனால் இவ்விடத்தில் புன்னகை உதிர்க்கவும் வழியில்லை.

லாவண்யா உட்கார்ந்ததும் பக்கத்தில் இருந்த அலமேலுவைக் கட்டிக் கொண்டாள்.

அம்மாவின் தோளில் தலையை சாய்த்தவள் கண்களை மூடிக் கொண்டாள். ஆவுடையப்பனை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்தன

அந்த வேலைகளில் எல்லாம் முன்னின்று ஓடியது சுரேஷ் தான்.

அவருடைய அப்பா ஆவுடையப்பன், லாவண்யாவிடம் தவறாக நடக்காமல் நல்ல பெயரோடு வாழ்ந்திருந்தால், இன்று புருஷோத்தமனும் அவருடைய அருகில் மகன் ஸ்தானத்தில் நின்றிருப்பார். ஆனால் நடந்தது வேறு. அந்த நினைவு புருஷோத்தமனுக்கும் இருந்தது.

அதனால்தான் அவர் சற்று ஒதுங்கியே நின்றார். அதற்கு மட்டும் சிலர் கிசுகிசுத்தனர். ஆனால் சொந்த மகன் இல்லை என்பதால் அந்த பேச்சு பெரிதாக இழுபடவில்லை‌

ஓரளவு கூட்டம் வந்ததும், ஆவுடையப்பனை எடுத்துச் செல்ல ஆரம்பித்தார்கள்.

அந்த நேரத்தில் சாரதி பைக்கை எடுத்துக் கொண்டு, "அம்மா... நானும் போறேன்."என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானான்.

விக்னேஷும் கூடச் செல்ல வந்ததால், புருஷோத்தமன் பெரிய மாப்பிள்ளையுடன் நடந்தார். 

மாலதி சற்று நேரம் நின்றிருந்துவிட்டு, "அம்மா... கொஞ்ச நேரம் படுக்கணும் போல இருக்கு" என்றாள்.

அதைத் தொடர்ந்து லாவண்யாவும், "எனக்கும்" என்று மெதுவாகச் சொன்னாள்.

அலமேலு உடனே இருவரையும் பார்த்தார். "விளையாடறீங்களா? இஷிதா, இலக்கியா... இலக்கியா வீட்டு ஆளுங்கனு குளிச்சிட்டு வீட்டை க்ளீன் பண்ணி கழுவணும். இலக்கியா வீட்டுல அவங்க அப்பா அம்மா சொந்தக்காரங்க வேற இருக்காங்க. எப்படி அங்க போய் படுப்ப?" மாலதி எதுவும் சொல்லாமல் நின்றாள்.

அந்த நேரத்தில் காஞ்சனா, அலமேலு பேசுவதை கேட்டு

"பேசாம அங்க வந்து குளிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்திருக்கட்டும். அதுக்குள்ள போனவங்க வந்துடுவாங்க. இல்லைன்னா கூட நீங்க இங்க வந்துடுங்க. மாசமாயிருக்கற பிள்ளை எவ்வளவு நேரம் ஓய்வெடுக்காம இருக்க முடியும்?" என்று சொல்லிவிட்டு,

"லாவண்யா அக்காவையும் கூட்டிட்டு வா." என்றார் காஞ்சனா.

லாவண்யா உடனே அன்னையைப் பார்த்தாள்.

"தேவி வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்... ஆனா... ஆன்ட்டி வீடுன்னா சௌகரியமா இருக்கும்." என்றாள் கூடுதலாக.

மாலதியும் அலமேலுவைப் பார்த்தாள். லாவண்யா உடனே,

"அம்மா... ரொம்ப டயர்டா இருக்கும்மா. வாம்மா" என்று அன்னையின் கையைப் பிடித்து இழுத்தாள்.

அலமேலு காஞ்சனாவைப் பார்த்தார். அவர் முகத்தில் இருந்த அழைப்பை பார்த்த பிறகு மறுக்க முடியாமல்,

"சரி" என்று கிளம்பினார்கள்.

இலக்கியா வீட்டில் சொந்தபந்தங்கள் இருந்ததால், அவர்களிடம் சொல்லிவிட்டு வர வேண்டியிருந்தது. "சரிங்க அக்கா... குளிச்சிட்டு கொஞ்ச நேரத்துல வந்துடுங்க." என்று இலக்கியா சொல்ல,

"சரி." என்று அலமேலு பதில் சொல்லிவிட்டு வந்தார்.

ஏற்கனவே இலக்கியா, காஞ்சனா, சாரதி ஆகியோரைப் பற்றி அலமேலுவிடம் ஏதோ சொல்லி வைத்திருந்ததால், அலமேலுவின் மனதில் இவர்கள் மீது ஒரு பார்வை இருந்தது. அதனால் காஞ்சனாவின் வீட்டை நோக்கி நடக்கும் போதே அவர் சுற்றிலும் கவனித்துக் கொண்டே வந்தார்.

இதே வேறு நேரமாக இருந்திருந்தால் லாவண்யா இந்த வீட்டை நோக்கி நடப்பதே ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்கும். அதுவும் அம்மா கூடவே வருகின்றாரே என்று. சாரதி வீட்டுக்கு செல்கின்றோம் என்ற எண்ணமே அவளுடைய முகத்தில் புன்னகையை வரவழைத்திருக்கும்.

இன்று உடம்பெல்லாம் தளர்ந்து போயிருந்தது. டெங்கு காய்ச்சல் அவளுடைய உற்சாகத்தையே உறிஞ்சி எடுத்திருந்தது.

காஞ்சனா வீட்டுக்கு வந்ததும், புடவையின் முந்தானையிலிருந்த சாவியை எடுத்துத் கதவைத் திறந்தார்.

"உள்ள வாங்க" என்று அன்பாக அழைத்தார். அலமேலு தயங்கினார். "இல்லைங்க... பெரியவ மாசமா இருக்கா. சின்னவ டெங்குல அரை ஆளா ஆகிட்டா. அவங்க குளிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்திருக்கட்டும். நான் இலக்கியா வீட்ல இருக்கேன்." என்றார்.

"அட... உள்ள வாங்க. நீங்களுமே கொஞ்ச நேரம் இளைப்பாறலாம்." என்று காஞ்சனா விடாமல் அழைத்தார். அலமேலு தயக்கத்துடன் உள்ளே வந்தார்.

மாலதி உடனே, "அம்மா... நான் குளிச்சிட்டு வர்றேன். நீங்க கொஞ்ச நேரம் படுத்திருக்கலாம்." என்று சொல்லி சோபாவை காட்டினாள்.

அலமேலுவோ "துஷ்டி வீட்டிலிருந்து வந்து வீட்ல உலாத்தறோம் குளிக்காம?"  என்று மாலதியை அதட்டினார்.

காஞ்சனா சிரித்தபடி, "அட... அவங்க உட்காரட்டும். நீங்க குளிச்சிட்டு வாங்க. நம்ம வீடு தானே. அதெல்லாம் லேசா தலையில தண்ணி தெளிச்சிட்டு உட்காருங்க." என்று சொல்லி மாலதி மீது நீரை தெளித்து அமர வைத்தார்.

அலமேலுவும் கணவர் வருவதற்குள் குளித்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் துணியை எடுத்துக் கொண்டு சென்றார்.

ஹாலில் ஒரு பாத்ரூம் வசதியாக இருந்தது. 

அதற்குள் காஞ்சனா அடுப்பில் டீ வைத்தார். லாவண்யா அங்கேயே சோர்வாக நின்று கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த காஞ்சனா,

"லாவண்யா... நீ வேண்டும்னா உள்ள போய் சாரதி ரூம்ல குளிச்சிட்டு வந்துடு." என்றார்.

"சாரதி ரூம்லயா?" என்றதும் சோர்வாக இருந்த அவளுடைய முகத்தில் ஒரு சிறிய வெளிச்சம் வந்தது. தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அறைக்குள் சென்றதும் சுற்றிலும் பார்த்தாள்.

இந்த அறைக்குள் அவளது முதல் முத்தம் நிகழ்ந்துள்ளது‌. இன்று அந்த அறை வேறொரு உணர்வைக் கொடுத்தது.

அவனுடைய வாசம் இன்னும் அங்கே இருந்தது. அதெல்லாம் நினைத்தபடி குளிக்க சென்றாள். 

வெளியில் மாலதி அமர்ந்திருந்தாள்.

காஞ்சனா அவளிடம், "இப்ப எத்தனை மாசம்மா?" என்று கேட்டார்.

"ரெண்டு மாசம் முடிஞ்சிருக்கு."

என்றாள் மாலதி. காஞ்சனா முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

''அப்படியா" என்று சொல்லி வீட்டில் இருந்த பழத்தை அறுத்து அவளிடம் நீட்டினார்.

மாலதி எடுத்துக் கொண்டாள்.

அவர்கள் இருவரும் ஏதோ சாதாரணமான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள், யாருக்கு எத்தனை பிள்ளைகள் என்றெல்லாம் மாலதிக்கு பெரிதாக தெரியாதே..

சிறிது நேரத்தில் லாவண்யா குளித்துவிட்டு வெளியே வந்தாள். 

அலமேலு துணியை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று காயப்போட்டுக் கொண்டிருந்தார். மாலதியும் குளிக்கச் சென்றிருந்தாள்.

அலமேலு வீட்டை ஒரு பார்வை பார்த்தபடி கீழே வந்தார்.

அப்போது காஞ்சனா,

"டீ" என்று ஒரு டம்ளரை அவரிடம் நீட்டினார்.

டீயை வாங்கிய அலமேலுவின் பார்வை அங்கே இருந்த காலண்டரின் மீது விழுந்தது.

அதில் இருந்த சாமி படத்தைப் பார்த்தவரது நெற்றி சுருங்கியது.

அதை கவனித்த அலமேலுவோ 

"எங்க பெரிய மாப்பிள்ளையோட குலதெய்வம்." என்றார்.

"அப்படியா... எங்களுக்கும் இந்த அம்மன் தான் குலதெய்வம். அவரு இறந்து வருஷங்கள் ஆகப்போகுது. இப்போ ஊருக்குப் போறதும் குறைஞ்சிடுச்சு." என்று காஞ்சனா இயல்பாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் லாவண்யா சோபாவில் கால் நீட்டி சாய்ந்து கொண்டாள். அதைப் பார்த்த அலமேலு முறைத்தார்.

லாவண்யா உடனே, "வாய் கசக்கு... உடம்பு வலிக்கும்மா... முறைச்சிட்டே இருக்காதம்மா. உனக்கு டெங்கு வந்தா தெரியும்." என்று முணுமுணுத்து சரியாக உட்கார்ந்தாள்.

காஞ்சனா லாவண்யாவை பார்த்து, "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறதா இருந்தா எடு மா."

என்றார். அலமேலு அமைதியாக டீயைப் பருகிக் கொண்டிருந்தார்.

அப்போது மாலதி குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தாள். லாவண்யாவின் அருகில் வந்து அமர்ந்தவள் சுற்றிலும் பார்த்தாள்.

"யார் வீடு டி இது?" என்று மெதுவாகக் கேட்டாள்.

லாவண்யா சற்றும் தயங்காமல்,

"என் மாமியார் வீடு." என்றாள்.

மாலதியின் புருவம் உயர்ந்தது.

பிறகு தங்கையின் முகத்தைப் பார்த்தவள், அன்னையின் நடத்தையையும், காஞ்சனா காட்டும் அன்பையும் கவனித்தாள்.

சற்றே அவளிடம் நெருங்கி, "லவ் பண்ணறியா?" என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

லாவண்யா அசதியிலும் கண்களைச் சிமிட்டி ஆமோதித்தாள். 

அத்தியாயம்-44

இங்கே இடுகாட்டில் ஆவுடையப்பனை எரித்து முடித்திருந்தார்கள்.

சுடுகாட்டின் வெப்பம் குறைந்திருந்தாலும், அனைவருடைய உடலும் சோர்ந்து போயிருந்தது.

விக்னேஷ் நடந்து கொண்டே, "மாமா... திரும்ப நடக்கணுமா? பச் காரை இங்க வரை கொண்டு வந்திருக்காம போயிட்டேன் என்று சலிப்புடன் கேட்டான

சாரதி பைக்கை உதைத்தான்.

வண்டியை இயக்கப் போனவன், பின்னால் வந்த விக்னேஷையும், மாமனார் புருஷோத்தமனையும் பார்த்தான்.

ஒரு நொடி தயங்கினான்.

பின்னர் என யோசித்தானோ, "இரண்டு பேர் ஏறினா ட்ரிபிள்ஸ் போயிடலாம். சோர்வா இருக்காது. வர்றிங்களா.. மா..மாமா" என்று அழைத்தான்.

விக்னேஷ் ஏற்கனவே சாரதியைப் பற்றி வேறு விதமாக நினைத்திருந்தான்.

லாவண்யா வாந்தி எடுத்தபோது அவளைப் பார்த்த விதமும், அவள் வாந்தி எடுத்த இடத்தைத் தானே சுத்தம் செய்ததும், தண்ணீர் கொடுத்ததும் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது.

அதனால் சாரதி தங்கள் சொந்தக்காரன் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

விக்னேஷை பார்த்து "ஏறுங்க... மாமா ஒன்னும் சொல்ல மாட்டார்." என்று புருஷோத்தமனின் மௌனத்தினால் சாரதி சொன்னான்.

விக்னேஷ் முதலில் ஏறினான்.

புருஷோத்தமன் ஒரு கணம் சாரதியைப் பார்த்துவிட்டு, பின்னர் பைக்கில் அமர்ந்தார்.

சாரதியின் மனதில் ஒரு சிறிய பதற்றம் இருந்தாலும், முகத்தில் எதையும் காட்டாமல் வண்டியை ஓட்டினான்.

சுரேஷ் வீட்டில் முதலில் விட வேண்டியவர்கள் இருந்தாலும், தங்களுடைய வீடு முதலில் வந்ததால் அங்கேயே வண்டியை நிறுத்தினான்.

அதே நேரத்தில் அலமேலு டீயை பருகி முடித்துக் கொண்டு எழுந்திருந்தார். கணவரை வாசலில் பார்த்ததும் அவருடைய முகமே மாறியது

'இங்கதான் இருக்கியா?' என்ற அனல் பார்வை அவர்மீது விழுந்தது.

அலமேலு உடனே தடுமாறினார்.

அப்போது சாரதி, "அட அத்தை... லாவண்யா இங்க தான் இருக்காங்க." என்று இயல்பாகச் சொன்னான்.

புருஷோத்தமன் அலமேலுவை பார்த்தார். "அதுவந்து... மாலதி சோர்வா இருக்குனு சொன்னா. உங்க தம்பி வீட்ல இலக்கியா சொந்தக்காரங்க இருந்தாங்க. அதனால இங்க..." என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல், "பாத்ரூம் போய் குளிச்சிட்டு வாங்க"

என்று மாப்பிள்ளை விக்னேஷை அனுப்ப,

அந்த நேரத்தில் மாலதி துணியை எடுத்துக் கொண்டு வந்து நீட்ட, "போங்க... குளிச்சிட்டு வாங்க." என்றாள்

விக்னேஷும் ஒன்றும் கேட்காமல் உள்ளே சென்றான்.

சாரதி உடனே, "நான் குளிச்சிட்டு வந்துடறேன்மா. மாமாவுக்கு டீ கொடுங்க. வந்துடறேன்." என்று 'மாமா' என்று உறவுமுறையோடு உரிமையாக தயக்கமின்றி சொல்லிவிட்டு உள்ளே ஓடினான்.

லாவண்யா தூரத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'என்ன அப்பாவை மாமானு சாரதி சொல்லறான்... அம்மாவையும் இங்க கூட்டிட்டு வந்துட்டோம்' என்று நினைத்தவளுக்கு சிரிப்பு வந்தது.

உடம்பு சரியில்லாத நேரத்திலும் அந்த காட்சியை சோர்வையும் மீறி ரசித்தாள்.

சாரதி வேகமாக குளித்து முடித்து வெளியே வந்தான்.

அங்கே அவனுடைய உடையுடன் லாவண்யா குளித்துவிட்டு வைத்திருந்த உடையும் கிடந்தது.

அதைப் பார்த்தவனுடைய உதட்டில் புன்னகை வந்தது.

அதை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று காயப்போட்டான்.

அதைப் பார்த்த அலமேலு,

"ஏன்டி... குளிச்சா துணியை காயப்போட மாட்ட?" என்று மகளை அதட்டினார்.

"மறந்துட்டேன்மா... எனக்கு தான் உடம்பு சரியில்லை பார்க்கறல்ல. ஏதாவது சொல்லிட்டே இருக்காதம்மா. மத்த நேரமா இருந்தா அடிவாங்க தெம்பு இருக்கும். இப்ப அதுவும் இல்லை‌. சாரதி ஒன்னும் நினைக்க மாட்டான்" என்று லாவண்யா மெதுவாகச் சொன்னாள்.

சாரதி ஒன்றும் பேசவில்லை.

அவன் மட்டும் சிரித்தபடி அந்தத் துணியையும் காயப்போட்டுவிட்டு கீழே வந்தான். விக்னேஷ் தலையைத் துவட்டியபடி வெளியே வந்தான்.

"உங்களுக்கும் குலசாமி காமாட்சி அம்மனா?" என்று காலெண்டரை பார்த்து சாரதியிடம் கேட்டான்.

"ஆமா" என்று சாரதி பதில் சொன்னான். பிறகு மெதுவாக புருஷோத்தமனைப் பார்த்தான்.

அவருடைய பார்வையும் சாரதியிடமே இருந்தது.

சாரதிக்கு ஏற்கனவே இவ்விஷயம் தெரியும்.

லாவண்யா மாலதியின் கல்யாண பத்திரிக்கையிலேயே சாரதி அந்த விவரம் எல்லாம் கவனித்தான். 

அதனால் சாதியை வைத்து பெரிய பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று லாவண்யா பயந்த தருணத்தில் எல்லாம் பெரிதாக அலட்டவில்லை‌ அவன் ஒரே சாதிக்குள் தான் இருப்பதை அறிந்திருந்ததையும் அவளிடம் கூறவில்லை. சாதி பார்த்தா காதல் அரும்பியது? என்ற எண்ணம்.

ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் அது தானாகவே வெளியில் வரும் என்று அவன் நினைக்கவில்லை.

"மாமா... நானும் மாலதியும் வந்த கார்ல கிளம்பறோம். ஏதும் துணி எடுத்து கட்டறதா இருந்தா சொல்லுங்க. பணத்தை மட்டும் அனுப்பிடறேன்." என்றான்.

புருஷோத்தமன் முதலில் பெரிய மாப்பிள்ளையான விக்னேஷை வழியனுப்பி வைத்தார். சாரதியை சொந்தக்காரன் என்ற ரீதியில் தான் கூறியிருந்தார். அதுவும் லாவண்யாவுக்கு அத்தை முறை என்று.

மாலதியும் கணவரோடு கிளம்பத் தயாரானாள்.

அப்போது அலமேலு மாலதியிடம் மெதுவாக,

"ஏதாவது உன் வீட்டுக்காரர் கேட்டா தூரத்து சொந்தக்காரங்கன்னு மட்டும் சொல்லு. பேசி பழகியது ரொம்ப குறைவானது. இந்த இறப்பில் பார்த்ததாக சொல்லு." என்று அறிவுறுத்தினார்.

'சரிம்மா" என்றாள் மாலதி.

விக்னேஷும் மாலதியும் புறப்பட்டுச் சென்றனர்.

சாரதி அவர்களைப் பார்த்தபடி புன்னகையுடன் நின்றான்.

பிறகு புருஷோத்தமனை நோக்கி, "ஒரே கேஸ்ட்னு தெரிஞ்சதால தான் லேசா யோசிக்கறீங்க... லாவண்யாவிடம் நான் பழகறதை கூட பெருசா தடுக்காம, என்னை கன்சிடர் பண்ணறீங்க. ரைட்? இதே வேற கேஸ்டா இருந்தா பிரிச்சி வச்சி அவளை எவனுக்காவது இந்நேரம் கட்டி வச்சிருப்பிங்க அப்படி தானே?" என்று கோபமாய் கேட்டான். இத்தனை நேரம் இழுத்து பிடித்த பொறுமை பறந்து. 

  ஏனெனில் வந்ததிலிருந்து புருஷோத்தமன் பார்வை செய்கை, சாரதியை அந்தளவு அளவிட்டதே. அந்த பார்வைக்கு எல்லாம் அர்த்தம் புரியாதவனா?!

"சாரதி!" என்று காஞ்சனா அதட்டினார்.

"என்ன காரணமாக இருந்தால் என்ன? தற்போது வீட்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறாரே. அதுவே பெரிய விஷயம்." என்று அமைதியாகச் சொன்னார்.

சாரதி இன்னும் ஏதோ பேச வர, புருஷோத்தமனோ 

"இதப்பாருப்பா... எந்தப் பெத்தவங்களும் பொண்ணு காதலிச்சா யோசிக்கத்தான் செய்வாங்க. சின்னது எது கேட்டாலும் முடிஞ்சளவு அது முகம் வாடாம பார்த்துப்பேன். இதுல காதலிக்குதுனு தெரியவும், படிப்பும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்னுதான் முதல்ல நினைச்சேன்.

இலக்கியா தான் ஒரே கேஸ்ட்னு சொல்லுச்சு. அலமேலு பி.காம் படிச்சவனு சொல்லுச்சு. சுரேஷுக்கும் தெரிஞ்சவன், நல்லவன்னு எல்லாம் சொல்லவும் கொஞ்சம் யோசித்தேன். 

நீ என்னடான்னா, அவளை பைக்ல கூட்டிட்டு வந்து நிறுத்திட்டு, பத்திரமா பார்த்துக்கறதை சுத்தியிருந்த சொந்தம் பார்த்துச்சு தெரியுமா? இதெல்லாம் என்ன தைரியம்னு தெரியலை." சாரதி அமைதியாக இருந்தான்.

"இதுக்கு மேல என்ன செய்யணும்னு தான் உன்னிடம் பேச பைக்ல வந்தேன். 

சாதிசனம் பார்க்கத்தான் செய்வோம். நாளைப் பின்ன ஏதாவது பிரச்சனைன்னா தெரிஞ்சவங்களை வச்சி பேசி சமாதானம் ஆகறதுக்கு. கண்ணை மூடி பொண்ணை தரமுடியாதுல. எந்த அடிப்படையில யாருனே தெரியாதவனுக்கு பெத்தவங்க பொண்ணை தருவாங்க. ." என்றார் புருஷோத்தமன். 

சாரதி ஏதோ பதில் சொல்ல வாயைத் திறந்தான்.

"சாரதி... " என்று காஞ்சனா தடுத்தார். "என்னய்யா இது?

இதெல்லாம் சுட்டிக்காட்டி பெருசுபடுத்தி என்ன சாதிக்கப் போற? உனக்கு லாவண்யா வேண்டுமா வேண்டாமா?" என்றார். 

சாரதி உடனே, "வேணும்." என்றான்.

"அப்ப எதிர்த்து பேசாத. பெத்தவங்க எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க. எதையும் பார்க்காத பெத்தவங்க யாரும் இல்லை. நீ நல்லவனா இரு. இல்லை... சில கொள்கையை வச்சிக்கோ. எல்லாரும் அப்படியே இருக்கணும்னு எதிர்பார்க்க முடியாது." என்று சொல்லிவிட்டு, "சாதி மதம் பார்க்க மாட்டேன்னு சொல்லுறவங்களுக்குக்கூட, பார்த்துட்டு சேர்த்து வைக்க யோசிக்கறாங்க. அவங்க இஷ்டப்படி விடேன்." என்றார்.

அந்த நேரத்தில் லாவண்யாவுக்கு திடீரென வாந்தி வர, அவள் எழுந்து ஓடுவதற்குள் சாரதி தான் முதல் ஆளாக அவளிடம் ஓடி வந்தான்.

"லாவண்யா..." அவன் அவளுடைய முதுகைத் தடவிக் கொடுத்தான்.

"டெங்குக்கான மாத்திரை போட்டியா இல்லையா? ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க?" என்று பதற்றமாகக் கேட்டான்.

லாவண்யா வாயைக் கொப்பளித்துக் கொண்டு,

"இப்படித்தான் இருக்குமாம்... சரியாகி கொஞ்சம் கொஞ்சமா உடம்பை தேத்திக்க சொன்னாங்க. சாப்பிட்டு மாத்திரை போடணும்" என்றாள்.

சாரதியின் முகத்தில் கவலை தெளிவாகத் தெரிந்தது.

"நல்லா ரெஸ்ட் எடுத்து சாப்பிட வைக்கணும். எதையும் சாப்பிடறாளா இல்லையானு தெரியலையே. அங்க ஹாஸ்டல்ல கொசு அதிகமா இருக்கு." என்று அலமேலு கவலைப்பட்டார்.

சாரதி உடனே, "நான் மாதுளை பழம் வாங்கிட்டு வந்துடறேன். ரெஸ்ட் எடு. அம்மா.. சாப்பிட வையுங்க வந்திடறேன்." என்று பைக்கின் சாவியை எடுத்தான்.

லாவண்யா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாரதியோடு உடல் சோர்வோடு வந்தப்போது, புது பிரச்சினை ஆரம்பமாக போகுது. என்று எண்ணினாள். சாரதியும் ஒரே கேஸ்ட் என்றது வரை புரிய, லேசான நிம்மதி. அதிலும் அன்னை கூடவே வந்து நிற்க, தந்தை இங்கு வந்ததும் 'மாமா' என்ற அழைப்பு வேறு இதமளித்தது. ஆனால் சாரதி கேஸ்ட் பார்த்து தான் சும்மா இருக்கிங்க? என்று கோபப்பட பயந்தாள். 

ஆனால் தனக்கொன்று என்றதும், அவனுக்கு உலகமே மறந்து போய்விடுகிறதே என்று அவளுக்குள் ஒரு சிறிய நிம்மதி.

சாரதி பைக்கை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் காஞ்சனா புருஷோத்தமனைப் பார்த்தார்.

"குடைச்சல் தந்தவரும் இறந்துட்டார். பேசாம இலக்கியா வீட்டிலேயே மறுபடியும் லாவண்யாவை ஒப்படைக்கலாமே. இலக்கியா நல்லபடியா பார்த்துப்பா. நானும் ஏதாவது செய்தா கொண்டு போய் கொடுத்து ஒரெட்டு பார்த்துப்பேன். ஏதோ பரீட்சை வருது.. லீவும் போடமுடியாது."  என்றார்.

புருஷோத்தமன் எதுவும் சொல்லவில்லை.

அவருடைய மனதில் வேறு ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது.

லாவண்யாவின் படிப்பு, அவளுடைய எதிர்காலம், குடும்பத்தின் பெயர், உறவினர்களின் பார்வை...

எல்லாமே அவருடைய மனதில் இருந்தது. ஆனால் இன்று...

அவருடைய கண்களுக்கு முன்னால் லாவண்யா வாந்தி எடுத்தவுடன் முதல் ஆளாக ஓடி வந்த சாரதி. அவளுடைய முகத்தைத் துடைத்தவன்.

தண்ணீர் கொடுத்தவன். அவளுடைய உடல்நிலை பற்றி பதறியவன். அவள் குளித்த துணியைக்கூட யாரும் சொல்லாமல் மாடியில் காயப்போட்டவன் மற்றும்... தங்கள் முன்னிலையிலேயே அவளை விட்டுக் கொடுக்காமல் நின்றவன். புருஷோத்தமன் அந்தக் காட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக நினைத்துப் பார்த்தார்.

சாரதி படித்தவன், அரசாங்க வேலை இருக்கிறது. தன் தந்தையின் நினைவுக்காக அந்த வேலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். தங்கள் மகளை நேசிக்கிறான்.

அவள் உடம்பு சரியில்லாதபோது முகம் சுளிக்காமல் பார்த்துக் கொள்கிறான்.

லாவண்யாவும் தந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கண்களில் ஒரு பயமும் இருந்தது.

அதே நேரத்தில், 'அப்பா என்ன முடிவு எடுக்கப் போறாரோ?' என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

புருஷோத்தமன் மட்டும் எதுவும் சொல்லாமல் திரும்பினார்.

ஆனால் இந்த முறை.. அவர் மனதில் ஒரு மகளைப் பற்றி தெளிவான முடிவு உருவாகத் தொடங்கியிருந்தது.

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : October 7, 2026 9:30 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Wow fantastic sarathy. U won laya father's heart. Same caste so no more big problem. Laya u too enjoy the situation in sarathy home. Kanchana received them very well.  Sarathy love wins by his nature and behavior.  Eagerly waiting for sarathy and laya marriage. Fantastic narration sis


 
Posted : October 7, 2026 9:59 am
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Ethuku apramum mudiyathunu solla enna erukku


 
Posted : October 7, 2026 10:12 am
(@lachu-balu-varadhan)
Posts: 10
Active Member
 

Enaku terinchu sarathy kuda ipave marriage panni vaika poranga lavanya parents crct ah sis?


 
Posted : October 7, 2026 11:31 am
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

சூப்பர். ...


 
Posted : October 7, 2026 11:56 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Lavanya ava love la veetu ah nenachi.bayandha vishayam yae indha caste than ippo athu vae ivanga same caste na ra thu na la no.problem nu aagiduthu and purushothaman avaruku sarathy laya ah care panra vitham rombhavae pidichi iruku ennaku ennavo sikkiram marriage fix panniduvaga nu thonuthu parpom 


 
Posted : October 7, 2026 4:25 pm
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயங்கள் - 43 & 44)

சாரதியோட அம்மா, உண்மையில் மனசால உயர்ந்தவங்கத்தான்.
அலமேலுவுக்கு ஒரு கௌரவம் இருக்கிற மாதிரித்தானே, காஞ்சனாவுக்கும் இருக்கும். ஆனால், அதையெல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு மனுசங்களை மனுசங்களாவே மதிக்கிறது தான் உண்மையான மனிதநேயத் தத்துவம்ன்னு தன் செயல்வழியாவே காட்டிட்டாங்க.

அடப்பாவி..! சைக்கிள் கேப்ல மாமா, அத்தைன்னு உறவுமுறை சொல்லி வேற கூப்பிட ஆரம்பிச்சிட்டானே..? ஆகமொத்தம், எதிராளியை யோசிக்கவே விடாமல் அன்பாலயே அடிச்சு தள்ளுறான் போங்க.

இதுல வருங்கால மனைவியோட ஈரத்துணியை வேற காய வைக்குறான்... ம்...நீ அசத்துடா சாரதி.

அதெல்லாம் புருஷோத்தமன், சாரதி லாவண்யா கல்யாணத்துக்கு சம்மதிச்சிடுவாரு பாருங்களேன். அதுவும் அவள் படிச்சு முடிக்கிறவரைக்கும் கூட காத்திட்டிருக்க மாட்டாருன்னுத் தோணுது. லாவண்யா ஜாலியா சாரதியோட பஸ்லயே காலேஜ்க்கு
போயிட்டு வரப்போறாள்.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : October 7, 2026 4:36 pm
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super nalla mudiva edunga


 
Posted : October 8, 2026 3:34 pm
(@kalidevi)
Posts: 170
Estimable Member
 

sarathy romba thairiyamana aalu than yar irunthalum lavanya va nalla pathukuran ena tha irunthalum pethavanga kadhalicha konjam yosipanga thana athu mari than ipo kandipa unake kalyanam pana sampanga


 
Posted : October 23, 2026 2:39 pm

Scroll to Top