Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-34

7 Posts
7 Users
0 Reactions
108 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#380]

அத்தியாயம்-34

சாரதியும் லாவண்யாவும் ஒருவரையொருவர் மறந்து நெருக்கமாக நின்றிருந்த அந்த நேரத்தில், வெளியே பெய்து கொண்டிருந்த சாரல் சற்று குறைந்திருந்தது.

அதே நேரத்தில் "சாரல் கொஞ்சம் குறைஞ்சிருச்சு. சாரதிக்கு வேற சாப்பாடு ஏதாவது செஞ்சு வைக்கணுமே." என்று நினைத்தபடி காஞ்சனா ரம்யாவின் வீட்டிலிருந்து தன் வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.

மகன் மதியம் வேலைக்குக் கிளம்புவதற்கு முன்பு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டும் என்ற எண்ணம்தான் அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தது.

வீட்டின் அருகில் வந்ததும் கதவு திறந்திருப்பதைப் பார்த்தார்.

"அட... கதவு திறந்தே கிடக்குதே..." என்று முணுமுணுத்தபடி உள்ளே வந்தார்

ஹாலில் மாடியிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த துணிகள் சோபாவின் அருகே கொட்டிக் கிடந்தன.

அதைப் பார்த்தவர், "அப்பாடி... துணி அந்தளவுக்கு நனையலை போல..." என்று சொல்லியபடியே, அவற்றை எடுத்துக் கொண்டு பிறகு ஒழுங்காக மடித்து வைக்கலாம் என்று நினைத்தார்.

சமையலறைக்குச் சென்று, "சாரதிக்கு என்ன சாப்பாடு செய்யலாம்?" என்று யோசித்தபடி இரண்டு அடி எடுத்து வைத்தார்.

அப்போது தான் மகனின் அறைப் பக்கம் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. காஞ்சனா நின்றார்.

ஒரு பெண்ணின் குரல் மகனின் பெயரை உச்சரித்தது போல, மிக மெதுவான முனங்கும் சத்தம் போலவும் காதில் விழுந்தது.

காஞ்சனாவின் புருவம் சுருங்கியது. 'சாரதி அறையில யாரு இருக்கா?' என்ற சந்தேகம் எழுந்தது.

மெதுவாக அந்தப் பக்கம் திரும்பியவர், அறைக்கதவு முழுவதுமாக மூடப்படாமல் இருப்பதைப் பார்த்தார்.

அடுத்த நொடி "சாரதி!" என்று அதிர்ந்து போய் கத்தினார்.

அந்தக் குரல் வீட்டையே உலுக்கியது. சாரதி திடுக்கிட்டு லாவண்யாவிடமிருந்து உடனடியாக விலகினான்.

லாவண்யாவும் பயந்து பின்னால் நகர்ந்தாள்.

சில நொடிகளுக்கு முன்பு இளமை பொங்கும் காதலால் நிறைந்திருந்த அறைக்குள், இப்போது ஒரு கனமான அமைதி.

காஞ்சனா வாசலில் நின்றபடியே இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய முகத்தில் அதிர்ச்சியும் கோபமும் கலந்து இருந்தது.

"என்ன... எ... என்னடா இது?"

அவருடைய குரலில் இருந்த நடுக்கம் சாரதிக்கு புரிந்தது.

அவன் தலைகுனிந்தான்.

"நா... நான்..." வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கின. ஆனால் இன்னும் மறைத்து என்ன பயன்?.

"நான் லாவண்யாவை விரும்பறேன் மா." அவ்வளவுதான். அடுத்த நொடி காஞ்சனா பளாரென அவனை அடிக்க, காஞ்சனா கை சாரதியின் கன்னத்தில் விழுந்தது.

சாரதி அதிர்ந்து நின்றான் அவன் கன்னம் எரிந்தது. ஆனால் அதைவிட அவனுக்கு வலித்தது. தன் அம்மாவின் கண்களில் தெரிந்த ஏமாற்றம்.

காஞ்சனா மகனைப் பார்த்தபடியே சில நொடிகள் மூச்சை இழுத்தார்.

பிறகு பார்வை லாவண்யாவின் மீது திரும்பியது. அந்தப் பார்வையில் இருந்த கோபத்தைப் பார்த்ததும் லாவண்யா நடுநடுங்கிப் போனாள். "வெளிய போடி." என்றார். 

லாவண்யாவுக்கு உடனே வார்த்தை வரவில்லை. "ஆன்ட்டி... நான்..." என்று சாரதியை விரும்புவதை தான் கூற வந்தாள்.

"வெளிய போடின்னு சொன்னேன்!" இந்த முறை காஞ்சனா சத்தமாகக் கத்தினார்.

லாவண்யா பதறினாள்.

"ஆன்ட்டி... நான் எந்த..." அவள் முடிப்பதற்குள் காஞ்சனா அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு வாசல் வரை இழுத்துச் சென்றார்.

லாவண்யா செய்வதறியாமல் அவரைப் பார்த்தாள்.

சாரதி ஒரு அடி முன்னால் வந்தான்.

"அம்மா..." என்றான்.

"ஏதாவது பேசின அசிங்கப்பட்டு போயிடுவா!" என்று காஞ்சனா கடுமையாகக் கூறிவிட்டார்.

லாவண்யா கண்களில் நீர் தேங்கியபடி நின்றாள்.

சாரதி அவளைப் பார்த்தான். அவளிடம் இப்போது பேசுவதற்கான வாய்ப்பே இல்லை. 'நீ போ... நான் பார்த்துக்கறேன்.' என்பதைப் போல இமை மூடி உதட்டசைவில் மட்டும் கூறினான்.

லாவண்யா அதை புரிந்துக் கொண்டாள். தலைகுனிந்தபடி வெளியே வந்தாள்.

மழைத்தூறல் இன்னும் லேசாக விழுந்துக் கொண்டிருந்தது.

அந்தத் தூறல் தன் தலைமீது விழுகிறதா, கன்னத்தில் வழியும் கண்ணீரா என்று கூட அவளால் உணர முடியவில்லை. வீட்டுக்குத் திரும்பும் பாதையில் அவள் ஒரு முறை கூட பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை.

வாசல் மூடப்பட்டதும் காஞ்சனா சாரதியை நோக்கித் திரும்பினார். அவருடைய கண்களில் இன்னும் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது.

"வேலைக்குக் கிளம்புவியேன்னு அவசரமா உனக்காக சமைக்க வந்தேன் பாரு..." என்று சொல்லியபடியே தலையில் கை வைத்துக் கொண்டார்.

"என் புத்தியை செருப்பால அடிச்சிக்கணும்." சாரதி அமைதியாக நின்றான்.

"என்ன வேலைடா பார்த்து வச்சிருக்க? என்று கேட்க காஞ்சனா குரல் இன்னும் நடுங்கியது.

"அப்ப அன்னிக்கு இவளுக்குத் தான் சுடிதார் வாங்கி வச்சியோ? என்னடா நாம பார்த்த கவர் அடுத்த நாளே காணோமேனு நினைச்சேன். இவ வந்துட்டு போனதும், நான் அழுததை கூட பொருட்படுத்தாம வெளிய போனியே. அன்னிக்கே அவ கையில தந்திருப்ப. அப்படித்தானே? இதுல என்ன கோட்டுக்காரியா மாத்திட்ட பார்த்தியா?" சாரதி தலைகுனிந்தான்.

"என்ன மாதிரி பொய் பேசி என் வாயை அடைச்ச?" சில நொடிகள் அமைதியாக அவனைப் பார்த்தவர்.

"ஆகா... சார் காதலிக்கிறீங்களோ?" அந்த நக்கல் சாரதியின் நெஞ்சை இன்னும் அழுத்தியது. அவன் எதுவும் பேசாமல் நின்றான்.

அதுவே காஞ்சனாவுக்கு பதிலாக அமைந்தது.

"என்னடா இது?" அவருடைய பார்வை மீண்டும் சாரதியின் கைகளில் இருந்த லாவண்யாவின் துப்பட்டா மீது விழுந்தது.

"அவ துப்பட்டாவை கையில சுத்திட்டு... இதுதான் உன் லட்சணமா? இப்படி தான் வளர்த்தேனாடா?" சாரதி உடனே, "அம்மா..." என்று தொடங்கினான். ஆனால் காஞ்சனா நிற்கவில்லை.

"மேல போடுற மாராப்பை உன் கையில தந்துட்டு, அவ என்ன... கண்ணை மூடிக்கிட்டு உன் இஷ்டத்துக்கு தொடவிட்டு, வளைஞ்சு நின்னாளா?" அவருடைய குரலில் கோபத்தோடு சேர்ந்து அவமானமும் இருந்தது.

"வெட்கங்கெட்டவளா இருக்கா." சாரதி தலையை உயர்த்திப் பார்த்தான்.

"அம்மா... என்னை என்ன வேணும்னாலும் பேசுங்க. அவளை ஏதும் பேசாதிங்க. அவ மேல எந்தத் தப்பும் இல்லை." காஞ்சனா ஒரு கணம் அவனைப் பார்த்தார்.

"ஓ... அந்தளவுக்கு போயாச்சா?" என்று கசப்பாகச் சொல்லிவிட்டு, அங்கிருந்த கணவர் சண்முகத்தின் புகைப்படம் அருகே சென்று நின்றார். புகைப்படத்தைப் பார்த்ததும் அவருடைய கண்களில் இருந்த கோபம் மெதுவாகக் கண்ணீராக மாறியது.

"பார்த்தீங்களா..." கணவரிடம் பேசுவது போல குரல் உடைந்தது. "உங்க புள்ள லட்சணத்தைப் பார்த்தீங்களா?"

சாரதி அசையாமல் நின்றான்.

"நீங்க அப்பவே படிச்சுப் படிச்சு சொன்னீங்கல்ல..." காஞ்சனா கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

"ஏன்டி அவன் இன்னும் பொறுப்பில்லாம திரியறான்... என்னத்த கனிவா பேசறதுன்னு." அவருடைய குரல் உடைந்தது. "இப்ப புரியுது. நீங்க நினைச்சதுதான் கரெக்ட்."

சாரதியின் கண்களிலும் நீர் தேங்கியது.

"என்ன பாசம் வச்சோம்... எவ்வளவு நம்பிக்கை வச்சோம்... அவன் எவ பின்னாடியோ திரியறான். அதுவும் பட்டப்பகல்ல வீட்டுக்குள்ள... ரூம்ல... அவளை கட்டிப்பிடிச்சு முத்தமிட்டு மேல் துணியை கையில சுத்திட்டு இருக்கான்." 

அதற்குமேல் அவரால் சொல்ல முடியவில்லை.

"நான் இல்லன்னா இந்த வீட்டுல இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ?" என்று சொல்லியபடியே அழுதார்.

"அம்மா..." சாரதி மெதுவாக அருகில் வந்தான்.

"அம்மா... நான் எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்மா. ஐ நோ மை லிமிட்ஸ்" என்றான்.

"பேசாதடா... அவளிடம் முத்தம் வச்சி கொஞ்சி பேச தான் கதவை கதவை மூடினியா? இன்னிக்கு கதவை மூடியிருந்தா தெரிந்திருக்கும். நான் குறுக்கே வந்துட்டேன்ல" இல்லை என்று சாரதி பேச வர, காஞ்சனா உடனே கையை உயர்த்தினார்.

சாரதி அப்படியே நின்று விட்டான். "லாவண்யா நல்லவம்மா. நானும் அவளும் காதலிக்கிறோம். நாங்க எல்லை மீறியிருக்க மாட்டோம்‌." அவன் மெதுவாகச் சொன்னான்.

"நானே நேரம் பார்த்து உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சிருந்தேன்." என்றான்.‌

"பேசாதடா. அவளை முத்தம் கொடுத்தது பெரிய தப்பா தெரியலை இல்லை.." காஞ்சனாவின் குரல் இன்னும் உயர்ந்தது.

"என் நெஞ்சில கத்தியை வச்சி சொருகிட்டியே." அதற்குப் பிறகு சில நொடிகள் எதுவும் பேசவில்லை.

"இன்னொரு வார்த்தை பேசாத." என்று சொல்லிவிட்டு, அங்கேயே முட்டிக்கட்டி மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

சாரதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மாவை சமாதானப் படுத்துவதற்காக ஒரு வார்த்தை சொன்னாலும் அது தவறாகப் போய்விடும்.

லாவண்யாவைப் பற்றி இன்னும் பேசினாலும் பிரச்சினை பெரிதாகிவிடும்.

அதனால் அமைதியாக நின்றான்.

அவரை அப்படியே அழவிட்டு, சிறிது தூரத்தில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் மெதுவாக நகர்ந்தது. சாரதி கடிகாரத்தைப் பார்த்தான். வேலைக்குக் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் காஞ்சனா இருந்த இடத்தைவிட்டு இம்மியும் நகரவில்லை.

சாரதி மெதுவாக, "அம்மா... " என்று அழைத்தான். பதில் இல்லை. "வேலைக்குப் போகணும்." என்றான்

மீண்டும் அமைதி. "சமைக்க எந்திரிங்கம்மா. நடந்ததைப் பிறகு பேசலாம்."

அவன் குரலில் கோபமோ அவசரமோ இல்லை.

அம்மாவை எப்படி அணுகுவது என்று தெரியாத ஒரு தயக்கம் மட்டும் இருந்தது.

காஞ்சனா மெதுவாகத் தலை நிமிர்ந்தார். கண்கள் சிவந்திருந்தன.

"உனக்கு ஒரு கும்பிடு சாமி." என்று கைகளை இணைத்தார்.

"என்னை ஆளை விடு. தோளுக்கு மேல வளர்ந்துட்டிங்க... சமைக்க எதுக்கு நானு.‌ கடையில போய் வாங்கி திண்ணு." அந்த வார்த்தைகள் சாரதியின் மனதை இன்னும் கனமாக்கின.

அவன் ஒரு கணம் அம்மாவைப் பார்த்தான்.

பிறகு எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று வேலைக்குத் தயாராக ஆரம்பித்தான். ஆனால் அந்த வீட்டுக்குள் சில மணி நேரங்களுக்கு முன்பு இருந்த அமைதி. இப்போது முற்றிலும் புயலடித்து ஓய்ந்தது.  

வாசலுக்கு வெளியே லாவண்யாவின் காலடித் தடங்கள் மட்டும் இன்னும் ஈரமாகத் தெரிந்தன.

அந்த ஈரம் எப்போது காயும் என்று தெரியவில்லை.

அதேபோல்... இந்த வீட்டுக்குள் விழுந்திருந்த இந்தப் புயலும் எப்போது அடங்கும் என்று யாருக்கும் தெரியவில்லை.

லாவண்யாவோ ஈரத்துடன் அவளது  வீட்டிற்கு வந்தாள்‌. இஷிதாவோ "அக்கா மழையில நனைச்சிட்டியா" என்று கூற, "பொறுமையா இருந்து வரக்கூடாது. காஞ்சனா அக்கா வீடு தானே." என்றார் இலக்கியா.

லாவண்யா என்னவென்று கூறுவாள். காஞ்சனா ஆன்ட்டி வீடு தேடி வந்து கத்தினால் மானம் போகுமே. கைகள் உதறல் எடுக்க, "அம்மா அக்காவுக்கு நடுங்குது" என்றாள் இஷிதா. 

  லாவண்யாவுக்கு எந்த நேரமென்றாலும் சாரதியின் அன்னை இங்கு வந்து நடந்ததை கூறினால் அசிங்கமாக போகுமே‌! அல்லது போனில் தெரிவித்துவிட்டால்? மனம் படபடவென அடித்துக் கொண்டது. 

   அழுகையை அடக்கி, கண்ணீரை வெளிக்காட்டாமல், சமாளிக்க முயன்றாள். 

   தேவியிடம் கூறலாமென்றாலும் இஷிதா கூடவே இருந்தாள். மாடிக்கும் செல்ல முடியாது. மழை பொழிகின்றது. 

   சாரதி எப்படியும் இந்த பக்கம் செல்வானே! எட்டி பார்ப்போமா? என்று தோன்றியது. ஆனால் கால்கள் நகர மறுத்தது. 

    போனை எடுத்து, 'உங்கம்மா எங்க சித்தியிடம் போன்லயோ நேர்லயோ நடந்ததை சொல்லிட்டா என்ன செய்ய சாரதி' என்று அனுப்பினாள். 

சாரதியோ சட்டையை போட்டபடி வாட்சப் மெஸேஜை கவனித்தவன், 'அம்மா அப்படி பண்ண மாட்டாங்கனு நினைக்கறேன். நீயா பயப்படதா. சப்போஸ் அப்படி ஏதாவது நடந்தா, நான் பார்த்துக்கறேன். ஏதாவது அசிங்கமா பேசினா வீட்ல தெரிந்தா, எனக்காக அமைதியா இரு. இப்ப டியூட்டிக்கு கிளம்பறேன்' என்று அனுப்பினான்.‌

காதலில் பொய் கள்ளத்தனம் மட்டுமா உண்டு. வீட்டில் காதலிப்பதை தெரிந்தால் அசிங்கமும் அவமானமும் அடைந்து தான் காதலை கடக்க முடியும் என்று புரிய, கையை பிசைந்து 'ம்ம்' என்று அனுப்பினாள்.

     சாரதி அவனது அடையாள அட்டையை எடுத்தபடி அன்னையிடம், "நான் வேலைக்கு போறேன்மா. என் மேல இருக்கற கோபத்துல சாப்பிடாம இருக்காதிங்க. ஏதாவது செய்து சாப்பிடுங்க." என்று சென்றான். காஞ்சனா மகனது பேச்சை காதில் வாங்காமல் இருந்தார். 

சாரதி பைக் சாவி எடுக்க சென்றதும், கை மாற்றாக தந்தையின் சைக்கிள் சாவியை தான் எடுத்தான். 

  சாரதி சென்றதும், காஞ்சனா அழுதார். மகன் சாப்பிடாமல் கொள்ளாமல் செல்கின்றான். அவனுக்காக தான் எதுவும் செய்யவில்லை. செய்யும் மனநிலையும் இல்லை. ஒருபக்கம் மகன் சாப்பிடாமல் போகும் அளவிற்கு அவன் வயிற்றை காயப்போட்டு விட்டாயே என்று வலித்தது.

மறுமனமோ சாரதி அந்த பெண்ணிடம் முத்தமிட்டு அவளிடையை பிடித்து நெருக்கமாய் நின்ற கோலமும் கண்ணை விட்டு நீங்காமல் இருந்தது. மகனை இப்படியா வளர்த்தோம்? இப்படி காணவா பாசத்தை கொட்டினோம்? என்றெல்லாம் மனம் துடித்தது. 

   லாவண்யா இலக்கியா வீட்டில் அல்லவா இருந்து படிப்பதாக அறிந்து வைத்திருக்க, இலக்கியாவின் கணவர் சுரேஷின் பெரியப்பாவின்,  அண்ணன் மகள் என்றவரை தெரிந்து வைத்திருந்தார். 

  அதுக்கூட இந்த பிளவுஸ், குழந்தைக்கான பாவாடை சட்டை, சுடிதார் தைக்க என்று வந்து செல்லவும், விவரம் தெரியும். 

  தற்போது இலக்கியாவிடம் இந்த விவகாரத்தை பற்றி மூச்சுவிட யோசித்தார். அந்த வீட்டுக்கு சென்று ஏதாவது கூறி, சாரதிக்கு தெரிந்தால், அவன் எந்தவிதமாக கோபத்தை காட்டுவானோ?!

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ். 

Kindly register login to read and share ur valuable comments. Thank u 


 
Posted : September 28, 2026 8:35 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Omg. Sema twist. Sarathy and laya so sad. But Kanchana wil. Understand sarathy. Very intresting sis.


 
Posted : September 28, 2026 9:31 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 34)

நான் சொன்னேனா ? அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள், இடையில ஆத்தக்காரியும் நோக்கி அடித்து நொறுக்கினாள்ன்னு... நான் சொன்னேனா, இல்லையா ?
இது இவங்களுக்குத் தேவையா ?
அதான் அவளுக்கு இன்னும் ரெண்டு வருசப் படிப்பு இருக்குத்தானே, அதுக்குள்ள இந்த முத்தம், சத்தமெல்லாம் தேவையா ? வெஜ் லவ்வே பண்ண மாட்டாங்களோ ? அந்தளவுக்கு கூட பொறுமை இல்லையோ ? ஆக்கப் பொறுத்தவனுக்கு, ஆற பொறுக்கலையோ ?

இப்ப இவன் என்ன பண்ணப் போறாள் ? தான் வளர்த்த பிள்ளை அப்பாவி பிள்ளை கிடையாது, அடப்பாவி பிள்ளைத்தான்னு தெரிஞ்சால்.. அந்த தாய் மனசுக்கு எந்தளவுக்கு வலிக்கும்..? நல்ல பிள்ளையா இருந்திருந்தால் முதல்ல அம்மா கிட்ட லவ்வை சொல்லியிருக்கணுமோ இல்லையா, அதை விட்டு அறைக்கதவை சாத்திக்கிட்டு கில்மா பண்ணிட்டிருந்தால் எந்த தாய்க்குத்தான் பொறுக்கும் ?
தன் பிள்ளையோட மறுமுகம் தெரிஞ்சால் எந்த தாய்க்குத்தான மனம் பொறுக்கும் ? இனி அந்த தாய் பிள்ளையை நம்புவாள் என்கறிங்க, நிச்சயம் மாட்டாள்.
மனசு விட்டுப் போயிடுவாள். காலானாலும் சரி, பாசமானாலும் சரி... முதல்ல நாம நேசிச்சவங்க மேல நம்பிக்கை இருக்கணும், அவங்களுக்கு உண்மையா இருக்கணும். ஆனால் இந்த
அமுக்கிணி சாரதிக்கு அது இருந்ததா ?

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : September 28, 2026 10:07 am
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Ethu romba too much.. thevaya evangaluku


 
Posted : September 28, 2026 10:55 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Sarathy unga amma ah va emathama kadhal ah solli irundhu irukalam aana endha amma ipadi oru katchi ah parthutu amaithi ah iruku mataga la 


 
Posted : September 29, 2026 4:44 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

செம டிவிஸ்ட் இனி தான் இவர்களின் காதலின் ஆழம் தெரிய வரும்


 
Posted : October 7, 2026 10:15 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super 


 
Posted : October 8, 2026 1:30 pm

Scroll to Top