பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-35
அத்தியாயம்-35
சாரதி சைக்கிளில் தெருவைக் கடந்து செல்லும்போது, இரண்டு மூன்று முறை பெல் அடித்தான்.
வாசலுக்குள் இருந்த லாவண்யாவுக்கு அந்தச் சத்தம் நன்றாகவே புரிந்தது.
'சாரதி...' என்று மனதுக்குள் நினைத்தவள், ஒரு கணம் வாசலை நோக்கிப் பார்த்தாள்.
வெளியே வந்து அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் காஞ்சனா ஆன்ட்டி வீட்டில் நடந்ததை நினைத்ததும், அவளுடைய கால்கள் அப்படியே நின்றுவிட்டன.
வெளியே வரவில்லை. சாரதியும் அவள் வருவாள் என்று எதிர்பார்த்தபடி ஒரு கணம் மெதுவாகச் சென்றாலும், பிறகு சைக்கிளை வேகப்படுத்திக் கொண்டு போய்விட்டான்.
சாரதி பணிக்கு வந்ததும், நடந்ததை மனதிலிருந்து ஒதுக்கிவிட்டு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
அன்று மதியம் வீட்டில் சாப்பிடாமல் டிப்போவில் வேலையை தொடர வேண்டியிருந்தது.
அவன் சாப்பிட்டு வருவான் என்று தெரிந்திருந்த முத்து, நேரத்தை வீணாக்காமல் வண்டியை எடுத்துவிட்டார்.
சாரதியும் வழக்கம்போல பயணிகளிடம் டிக்கெட் கொடுப்பது, கணக்கைப் பார்த்துக் கொள்வது என்று வேலையில் மூழ்கிவிட்டான்.
ஆனால் வீட்டில் இருந்த காஞ்சனாவால் மட்டும் மனதை வேறு எதிலும் செலுத்த முடியவில்லை.
மதியம் சாரதி சென்று ஒரு மணி நேரம் கடந்தும் மனம் கேட்கவில்லை.
'சாப்பிடாம போயிருக்கானே...' என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்தது. கடைசியில் போனை எடுத்தார்.
முத்து அண்ணாவுக்கு நேரடியாக அழைக்க நினைத்தும், சாரதியிடம் போன் கொடுத்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் முத்து அண்ணாவை விட்டால் வேறு வழியில்லை.
பேருந்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது முத்து போன் எடுக்க மாட்டார்.
அன்று பிராட்வே வந்து வண்டியை நிறுத்திய பிறகுதான் போனை எடுத்துப் பார்த்தார்.
காஞ்சனாவின் அழைப்பைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார்.
"என்ன... தங்கச்சி கால் பண்ணிருக்காங்க? சாரதிக்கு போடாம எனக்கு போன் பண்ணிருக்காங்க." என்று முணுமுணுத்தபடி வண்டியிலிருந்து இறங்கினார்.
உடனே திரும்பி அழைத்தார். "என்னம்மா... கால் பண்ணிருக்க?" என்றார்.
அந்தப் பக்கம் "அண்ணா... ஏன், எதுக்குனு கேட்காதீங்க." காஞ்சனாவின் குரலில் இருந்த சோர்வு முத்துவுக்குப் புரிந்தது.
"மதியம் சாப்பாடு ஆக்கலை. சாரதி வெறும் வயித்தோட வந்துட்டான். நீங்க டீ குடிக்கறாப்பிள்ள கூட்டிட்டுப் போய் அவனை ஏதாவது சாப்பிட வைக்கிறீங்களா?
அவனிடம் எதுவும் சொல்லாதீங்க. நான் கால் பண்ணினேன்னு கூட சொல்ல வேண்டாம்." என்றார் காஞ்சனா.
"என்னம்மா... என்னாச்சு? வீட்டுல ஏதாவது பிரச்சனையா?" என்று முத்து கேட்டார்.
காஞ்சனா பெருமூச்சு விட்டார். 'இதுக்கு மேல பேச வேண்டாம்னு நினைச்சேன்...' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு,
"சின்னதா ஒரு பிரச்சனை. நான் தான் கோச்சிக்கிட்டேன். அதனால சமைக்கலை. அவனை மட்டும் ஏதாவது சாப்பிட வைங்கண்ணா." என்று கூறினார்.
"சரிம்மா." என்று முத்து போனை வைத்தார். அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று இரண்டு டீயும் சில சமோசாக்களும் வாங்கினார். அவற்றை எடுத்துக்கொண்டு டிப்போவுக்குத் திரும்பியபோது, சாரதியும் கணக்குகளை முடித்துவிட்டு வெளியே வந்தான்.
"சாரதி..." என்று அழைத்த முத்து, "சமோசா சூடா வாசனையா இருந்தது. சாப்பிட வாங்கினேன். உனக்கும் வாங்கிட்டேன். எடுத்து சாப்பிடு." என்று ஒரு பொட்டலத்தை அவன் கையில் கொடுத்தார்.
சாரதி முதலில் சமோசாவைப் பார்த்தான். பிறகு முத்துவைப் பார்த்தான்.
"அண்ணா... நீங்க வெளிய எண்ணெய் பலகாரம் சாப்பிட மாட்டீங்களே. எதுக்கு வாங்கினிங்க?" என்று கேட்டவன், அடுத்த நொடி ஏதோ புரிந்தது போல, "எங்கம்மா போன் பண்ணினாங்களா?" என்று நேரடியாகக் கேட்டான்.
முத்து ஒரு கணம் அவனைப் பார்த்தார். மறைக்க என்ன இருக்கிறது? "ஆமாய்யா. காஞ்சனா தான் கால் பண்ணிச்சு." சாரதி அமைதியானான்.
"ஏதோ வீட்டுல பிரச்சனையாம். கோபத்துல சமைக்கலையாம். நீயும் சாப்பிடாம வந்துட்டேன்னு சொல்லுச்சு." பிறகு பொட்டலத்தை அவன் பக்கம் நீட்டி, "என் பையனுக்கு சாப்பிட வைங்கன்னு கேட்டுச்சு." என்று சிரித்தபடி, "சாப்பிடு." என்றார்.
சாரதி மெதுவாக சமோசாவை எடுத்துக் கொண்டான். அவன் விழுங்கிய முதல் கடியோடு மனதுக்குள் ஏதோ ஒன்று நெகிழ்ந்தது.
அம்மா எவ்வளவு கோபமாக இருந்தாலும், அவன் சாப்பிடாமல் இருப்பதை மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
முத்து அவனைப் பார்த்தபடி, "ஏன்பா... என்ன பிரச்சனை?" என்று கேட்டார்.
சாரதி அமைதியாக இருந்தான். ''புட்பால் கோச்சிங் போகச் சொல்லுதா? இல்லை இந்த வேலை வேண்டாம்னு சொல்லுதா?" மீண்டும் கேட்டவர்,
"அம்மா சொன்னா கேட்டுக்கலாம்ல?" என்றார்.
"இல்லைண்ணா... அதெல்லாம் ஒண்ணுமில்லை."
"ஏதோ சொல்லத் தயக்கமா?" முத்து அவனை சில நொடிகள் பார்த்தார். சாரதி அமைதியாக சொல்ல இயலாது நிற்க, "சரி. விடு." என்று சொல்லிவிட்டு அவன் தோளில் லேசாகத் தட்டினார்.
"சாப்பிடு." சாரதி அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
முத்து மெதுவாகச் சொன்னார். "உங்கப்பா இருந்தப்பவும், அவனும் என்மகன் என்கிட்ட எதையும் சொல்ல மாட்டேங்கறான்னு புலம்புவான்." சாரதி தலைகுனிந்தான்.
"இப்ப என்கிட்ட சொல்லப் போறியா?" அவர் சிரித்தார்.
"சொல்லணும்னு தோணினா சொல்லு. ஆனா ஒண்ணு மட்டும்..." சாரதி அவரைப் பார்த்தான். "உங்கம்மாவை அழ வைக்காத." அந்த வார்த்தை சாரதியின் மனதைத் தொட்டது.
"நீயா ஏதாவது பிரச்சனையில இருந்தா, என்கிட்ட சொல்லு. காது கொடுக்க நான் இருக்கேன்." என்று சொல்லிவிட்டு முத்து அங்கிருந்து நகர்ந்தார்.
சாரதி சில நொடிகள் அவரைப் பார்த்தபடி நின்றான். பிறகு மீதமிருந்த சமோசாவை வேகமாக சாப்பிட்டு முடித்தான்.
உடனே போனை எடுத்தான். லாவண்யாவுக்கு அழைத்தான்.
அப்போது லாவண்யா படுக்கையில் படுத்திருந்தாள். போன் ஒலித்ததும் திடுக்கிட்டு எழுந்தாள். அருகில் இலக்கியா இருந்ததால், உடனே போனை எடுத்துக் கொண்டு சித்தியைப் பார்த்தாள். அவர் வேறு பக்கம் திரும்பியிருப்பதை உறுதி செய்துகொண்டு காதில் வைத்தாள்.
"ஹலோ..."
"எங்கம்மா வரலை தானே?" என்று சாரதி முதல் கேள்வியாகக் கேட்டான்.
"வரலை." லாவண்யாவின் குரலில் இருந்த பயம் அவனுக்குத் தெரிந்தது.
"ஆனா... பயமாவே இருக்கு சாரதி"
"பயப்படாத." சாரதி மெதுவாகச் சொன்னான்.
"என்னை மீறி அம்மா எதுவும் பண்ண மாட்டாங்க. அவங்க உன்னை வெளிய அனுப்பியதெல்லாம்... மனசுல வச்சுக்காத." என்றான்.
"ம்ம்ம்..."
"சாப்பிட்டியா?" என்று கேட்டாள் லாவண்யா.
"வீட்ல அம்மா சோறே ஆக்கலை." சிறிய சிரிப்புடன் சொன்னான்.
"நான் வந்துட்டேன். இங்க முத்து அண்ணாவிடம் போன் பண்ணி சாப்பிடச் சொல்லியிருக்காங்க போல. டீ, சமோசா வாங்கித் தந்து பேசினார்." லாவண்யாவுக்கு சிறிது நிம்மதி வந்தது.
"எப்படியும் அம்மா கோச்சிட்டு இருப்பாங்க. நான் முடிஞ்ச அளவுக்கு சரி பண்ணறேன்." அவன் குரல் நிதானமாக இருந்தது.
"நீ உன் படிப்பைப் பாரு பயந்து தொலைக்காத அதுக்கு தான் கால் பண்ணினேன்."
"சரி..." என்று மெதுவாகச் சொன்னவள் போனை வைத்தாள்.
பயம் முழுவதுமாகப் போகவில்லை. ஆனால் சாரதி இருக்கிறான் என்ற எண்ணம் மட்டும் அவளுக்குள் சிறிது நிம்மதியைத் தந்தது.
போனை அருகில் வைத்துவிட்டு, எழுத வேண்டியதை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
மாலை வரை காஞ்சனா வெளியே வரவில்லை. இலக்கியாவுக்கும் எந்தப் போனும் வரவில்லை. அதனால் லாவண்யாவுக்கு மனதுக்குள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.
மாலை சனி கிழமை என்பதால் தேவியுமா வரவில்லை. டீ எல்லாம் குடித்தாள். இரவு இலக்கியாவுடன் வழக்கம்போல சிரித்துப் பேசினாள், சாப்பிட்டாள், பிறகு படுக்கச் சென்றாள்.
ஆனால் சாரதி மட்டும் அன்று இரவு வழக்கத்தைவிட தாமதமாகத்தான் வீடு திரும்பினான்.
கையில் ஒரு பொட்டலம். பரோட்டாவும் குருமாவும் வாங்கி வந்திருந்தான்.
வீட்டுக்குள் வந்ததும் அதை மேசையில் வைத்துவிட்டு முகம் அலம்பச் சென்றான்.
அவன் கொண்டு வந்த பொட்டலத்தைப் பார்த்த காஞ்சனாவின் உதடு துடித்தது.
மதியம் சாப்பாடு செய்யாமல் விட்டுவிட்டதால்... இப்போது மகன் வெளியே வாங்கிச் சாப்பிட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டான் என்று.
கண்ணில் தேங்கிய நீரை உடனே துடைத்துக் கொண்டார்.
சாரதி முகம் அலம்பிவிட்டு வந்தான்.
"அம்மா..." என்று அழைத்தான்.
காஞ்சனா அமைதியாக இருந்தார்.
"பரோட்டா வாங்கிருக்கேன். வந்து சாப்பிடு." அவரோ திரும்பிப் பார்க்கவில்லை.
"எப்படியும் என்னை சாப்பிடச் சொல்லி முத்து அண்ணாவுக்குக் கால் பண்ணி சொன்ன நீ, மதியம் சோறாக்கியிருக்க மாட்ட." அவன் மெதுவாகச் சொன்னான்.
"சாயந்திரம் டீ குடிச்சுட்டு இப்ப நைட்டும் சாப்பிடாம இருப்பேன்னு தெரியும்." என்று உள்ளதை கூறினான்.
"சேர்ந்து சாப்பிடலாம். வாம்மா."
என்றான்.
காஞ்சனா மெதுவாகத் திரும்பினார். "இதப்பாரு... தோசை சுடலாம்னு இருந்தேன். நீயே வாங்கிட்டு வந்திருக்க." அவருடைய குரலில் இன்னும் கோபம் இருந்தது.
"சாப்பிட்டு தூங்கு." என்று சொல்லிவிட்டு எழுந்தார்.
சாரதி உடனே, "இங்க பாரும்மா... மதியம் சாப்பிடலை. சமோசா, டீ மட்டும் தான் சாப்பிட்டேன். ஈவினிங் டிப்போல டீ, பஜ்ஜி சாப்பிட்டேன்." காஞ்சனாவின் முகம் சற்றே மாறியது.
"மத்தபடி வயிறு செமையா பசிக்குது." என்று சொல்லியவன், "நீ வந்து சாப்பிடுவேன்னா சேர்ந்து சாப்பிடலாம். இல்லையா... இதை அப்படியே வச்சிடுவேன்." என்றான்.
காஞ்சனா அசையவில்லை.
சாரதி தரையில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்தான்.
"நான் இத்தோட இங்க சாப்பிடவே கூடாதுன்னுஒ முடிவு எடுத்துடுவேன்." என்று கடிகாரத்தைப் பார்த்தான்.
ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நொடிகள் கரைய, காஞ்சனா அப்படியே நின்றுக் கொண்டிருந்தார்.
ஐந்து நிமிடங்கள் ஆனதும், சாரதி உண்மையிலேயே சாப்பிடாமல் எழுந்துவிடுவான் என்று புரிந்தது.
அவனுடைய வயிறு பசியில் இருக்கிறது. தன்னுடைய கோபத்துக்காக மகனை மீண்டும் பட்டினி போட முடியவில்லை. மெதுவாக வந்து அவனுக்கு எதிரே அமர்ந்தார்.
சாரதி எதுவும் சொல்லவில்லை. அவன் தட்டில் பரோட்டாவைப் பிய்த்து வைத்தான். காஞ்சனாவும் இரண்டு பரோட்டாவை எடுத்துக் கொண்டார்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட்டார்கள். பேச்சு மட்டும் இல்லை. ஆனால் அந்த அமைதிக்குள்... காஞ்சனாவின் கோபமும் இருந்தது.
சாரதியின் குற்ற உணர்வும் இருந்தது.
அதையெல்லாம் தாண்டி இருவருக்கும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த பாசமும் இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் சாரதி தன் அறைக்குச் சென்றான். அன்றிரவு அவன் அறைக்கதவை பூட்டவில்லை. திறந்தே வைத்துவிட்டு படுத்தான். காஞ்சனா அதை ஒருமுறை திரும்பிப் பார்த்தார்.
பிறகு எதுவும் சொல்லாமல் தன் இடத்தில் படுத்துக் கொண்டார்.
அம்மாவை சாப்பிட வைத்துவிட்ட திருப்தியில் சாரதியின் மனம் கொஞ்சம் இலகுவானது. அதோடு லாவண்யாவோடு பேசாவிட்டாலும், காலையில் பேசிய முத்தமழை அவன் வயதிற்கு திருப்திக்கரமாக இருக்க முதல் முத்தம் பற்றி நிதானமாக நித்திரையை தர நினைத்து பார்த்து மகிழ என்று நொடிகளை இனிதாக்கியது.
மறுபுறம் லாவண்யாவுக்கும் உறக்கம் வரவில்லை. கண்களை மூடி படுத்திருந்தாலும், அவளுக்கும் காலை நடந்த சம்பவமே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. சாரதியின் மென்னிதழ் முத்தம் வந்து கிளர்ச்சி தந்தாலும், காஞ்சனாவின் கோபமான முகம்... "வெளிய போடி..." என்ற அந்தக் குரல். எல்லாமே மனதை அழுத்தியது. புரண்டு படுத்தவள் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள்.
போன் அருகிலேயே இருந்தது.
அந்த நேரத்தில் அவளுடைய காலில் ஏதோ ஊர்வது போலத் தோன்றியது.
இஷிதா முழித்துவிட்டாளா?பாத்ரூம் போக தன்னை தொட்டு எழுப்புகிறாளா? என்று நினைத்தவள், கண்களைத் திறக்காமல் அந்தத் தொடுதலை உணர முயன்றாள். அது ஒரு சின்னக் கை இல்லை.
சற்று கனமாக இருந்தது. அடுத்த நொடி அவளுடைய உடல் முழுவதும் பதறியது.
யாரோ ஒரு ஆணின் கை. லாவண்யா திடுக்கிட்டு எழுந்தாள்.
அவள் வாயிலிருந்து சத்தம் வருவதற்குள், அந்த நபர் உடனடியாக அவளுடைய வாயை தன் கையால் பொத்தினார்.
லாவண்யாவின் கண்கள் பயத்தில் பெரிதாகின. அவள் முழு பலத்தோடு அந்த கையைத் தள்ள முயன்றாள்.
ஆனால் அந்த நபர் அவளிடம் மிக மெதுவான குரலில், "சத்தம் போடாத." என்று கிசுகிசுத்தது.
அந்தக் குரலைக் கேட்ட அடுத்த நொடி லாவண்யாவின் கண்களில் இருந்த பயம் இன்னும் பெரிதானது. அந்தக் குரல் அவளுக்குப் பழக்கமானதே.
-தொடரும்
பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 35)
அப்பாடா ! ஒருவழியா சாரதி தன்னோட அம்மாவை சாப்பிட
வைச்சு கொஞ்சமா சமாதானப் படுத்திட்டான். இதற்கப்புறம்
என்ன செய்யப் போறான்னுத் தெரியலை.
அய்யய்யோ..! அதுக்குள்ள இங்க யாரு லாவண்யா கிட்டு அத்து மீறரது ? சுரேஷா ? இல்ல ஆவுடையப்பனா ? அநேகமா ஆவுடையப்பனாத்தான் இருக்கணும். ஏன்னா, அந்த ஆளுத்தான் லாவண்யாவை பார்க்குற விதமே சரிளில்லை. தவிர, இந்த பெருசுங்களை நம்பித்தான் இப்ப இருக்கவே முடியறதில்லை.
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-49-50
3 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-48
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-47
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
4 hours ago
- 26 Forums
- 377 Topics
- 1,918 Posts
- 1 Online
- 442 Members
