Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-33

8 Posts
8 Users
1 Reactions
86 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#379]

அத்தியாயம்-33

இரவு பத்தரை மணியளவில் சாரதி வீட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தான்.

அவன் தெருவுக்குள் நுழைந்ததும், முதலில் அவன் பார்வை லாவண்யாவின் வீட்டைத் தேடியது.

அவளது வீட்டில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.

'லயா தூங்கியிருப்பா... அப்படியே முழிச்சிருந்தாலும் இந்த நேரத்துல கதவைத் திறந்து வெளியே நின்னா நல்லாயிருக்காது.' என்று நினைத்துக் கொண்டவன், பெருமூச்சு விட்டபடி தன் வீட்டுக்குள் பைக்கை நிறுத்தினான்.

வீட்டுக் கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. அதை லேசாகத் திறந்ததும், சோபாவில் காஞ்சனா தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

கதவு திறந்த சத்தத்தில் விழித்துக் கொண்டவர், "வந்துட்டியா சாரதி. கை, கால் அலம்பிட்டு வா... சூடா தோசை ஊத்தறேன்." என்றார்.

"ஏம்மா... நாலு தோசை சுட்டு வச்சுட்டு நீங்க தூங்கலாமே. ஏன் முழிச்சிருக்கீங்க? இல்லைன்னா நான் கூட சுட்டுக்குவேன்." என்றான். 

"இன்னிக்கு முழிச்சிருக்கேன். சுடறேன்யா." என்று சொல்லிவிட்டு காஞ்சனா சமையலறைக்குச் சென்றார்.

சாரதி முதலில் போனை சார்ஜரில் போட்டான். பிறகு முகம், கை, கால்களை அலம்பிக் கொண்டு வந்து லுங்கி, பனியன் அணிந்து கொண்டான்.

அவன் திரும்பி வருவதற்குள் காஞ்சனா இரண்டு தோசைகளை சுட்டு வைத்திருந்தார்.

தோசையை குழம்பில் தொட்டு சாப்பிட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தான் சாரதி.

உடம்பில் உண்மையிலேயே வேலைக்கான களைப்பு இருந்தது. ஆனால் மனதில் இருந்த களைப்பு அதைவிட அதிகமாக இருந்தது.

லாவண்யாவை பார்க்க முடியாத ஏக்கம்... அவளோடு முன்புபோல பேச முடியாத குறை... அந்த நாள் முழுவதும் அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதை காஞ்சனா வேறு விதமாகப் புரிந்துக் கொண்டார்.

மகன் வேலைக்குச் சென்று வந்ததில் மிகவும் களைத்திருக்கிறான் என்று நினைத்தார். சாரதி கடைசி தோசையைப் பிய்த்து குழம்பில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,

"ஏன்பா.." என்றார் காஞ்சனா.

"ம்மா"

"நீ வேற வேலைக்குப் போறதா இருந்தா போப்பா. உன் அப்பா இறந்ததுக்காக நீ இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்க வேண்டாம்." என்றார். சாரதியின் கை அப்படியே நின்றது.

ஒரு கணம் தட்டையே பார்த்துக் கொண்டிருந்தவன், பிறகு மெதுவாகக் கடைசி துண்டை வாயில் போட்டுக் கொண்டான்.

அதை விழுங்கிய பிறகுதான் பேசினான்.

"இல்லைம்மா.. ஆப்ரேஷன் நடக்கறப்ப அப்பாவையும், உன்னையும் ஹாஸ்பிடல்ல விட்டுட்டு... நான் அன்னிக்கு கோச் கூப்பிட்டார்னு விளையாடப் போயிருக்கக் கூடாது." காஞ்சனா அமைதியாக அவனைப் பார்த்தார்.

நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த நாளை சாரதி இன்றும் முழுமையாக மறக்கவில்லை. சண்முகத்துக்கு ஆபரேஷன் நடக்க வேண்டியிருந்த நேரம்.

அந்த நேரத்தில்தான் கோச் அவனை அழைத்து, முக்கியமான போட்டி இருப்பதாகவும், அவன் கண்டிப்பாக வர வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.

'ஆபரேஷன்தானடா... அதெல்லாம் சரியாகிடும். நீ போய் விளையாடு. முடிச்சுட்டு வந்து உங்கப்பாவைப் பாரு. நீ நல்லா விளையாடினதைப் பார்த்து பெருமைப்படுவார்.' என்று கோச் தொடர்ந்து ஏற்றிவிட்டிருந்தார்

அந்த வார்த்தைகளை நம்பிய சாரதி, அப்பாவின் ஆபரேஷன் நடந்துகொண்டிருந்த நேரத்தில்கூட அவருடன் இருக்காமல் விளையாடச் சென்றிருந்தான்.

அவனுக்கு அப்போது என்ன தெரியும்? அது தன் வாழ்க்கையிலேயே திரும்பிப் பெற முடியாத ஒரு முடிவாகிவிடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

கடவுளுக்குமே 'உங்கப்பாவை விட விளையாட்டு முக்கியமாடா. அதனால தான் அப்பாவை எடுத்துக்கிட்டாரோன்னு தோணுது' என்று அன்று சாரதியின் குரல் உடைந்தது.

அதை நினைத்து பார்த்தவாறு, "என்னால என்னை மன்னிக்க முடியாதும்மா." காஞ்சனாவின் கண்களிலும் நீர் தேங்கியது.

ஆனால் சாரதி தொடர்ந்து பேசினான். "இந்த வேலையை நான் எனக்கான தண்டனையா பார்க்கலைம்மா." அவன் நிதானமாகச் சொன்னான்.

"அப்பா ஆபரேஷன் நடக்கும்போது கூட அவர்கூட நான் இல்லை. அட்லீஸ்ட்... இனிமேல் என் வேலை மூலமாவது அப்பாவோட நெருக்கமா இருக்கணும்னு நினைச்சுதான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன். இதுல எந்த மாற்றமும் இல்லைம்மா." அந்த வார்த்தைகளுக்குப் பிறகு காஞ்சனா எதுவும் சொல்லவில்லை.

மகனின் மனதில் அந்தச் சம்பவம் இத்தனை வருடங்களாகவும் அப்படி இருந்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியும்.

சாரதி அந்த வலியை ஜீரணிக்கக் கற்றுக் கொண்டிருந்தான்

சண்முகத்துக்கு நடந்த ஆபரேஷன் எதிர்பார்த்தபடி பலன் தரவில்லை. அவரை காப்பாற்ற முடியவில்லை.

அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள சாரதிக்கு பல வருடங்கள் தேவைப்பட்டிருந்தாலும், இப்போது அவன் அதிலிருந்து ஓரளவு தேறியிருந்தான்.

வலி மட்டும்... அவ்வப்போது பழைய காயம்போல வந்து எட்டிப் பார்த்துவிட்டு போகும்.

அன்றிரவும் அப்படித்தான். ஆனால் இன்று அந்த வலிக்கு நடுவிலும் அவன் மனதை அதிகமாக ஆக்கிரமித்திருந்தது லாவண்யாதான்.

சாப்பிட்டு முடித்தவன் அறைக்குள் சென்றான். போனை சார்ஜரில் இருந்து எடுத்துப் பார்த்தான்.

லாவண்யாவுக்கு கால் செய்யலாமா? என்று யோசித்தான். அவள் தூங்கியிருப்பாளோ?

ஒருவேளை முழித்திருந்தாலும் இந்த நேரத்தில் பேசினால் வீட்டில் யாராவது கேட்டு விடுவார்களோ? என்று நினைத்தவன், கடைசியில் அவளுடைய எண்ணை அழுத்தாமல் போனை வைத்துவிட்டான்.

அதற்குப் பதிலாக கேலரியைத் திறந்தான். வண்டலூரில் தேவியை வைத்து லாவண்யா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இருந்தன. இருவரும் அருகருகே நடந்து வருவது... ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிரிப்பது... சற்று நெருக்கமாக அமர்ந்து பேசுவது... எல்லாமே இயல்பான புகைப்படங்கள்தான். ஆனால் சாரதிக்கு அவை ஒவ்வொன்றும் இப்போது விலைமதிப்பு இல்லாததாகத் தோன்றின.

அவற்றைப் பார்த்தபடியே அவன் முகத்தில் மெதுவாக ஒரு சிரிப்பு வந்தது.

லாவண்யாவை நேரில் பார்க்க முடியாத குறையை அந்தப் புகைப்படங்கள் கொஞ்சமாவது குறைத்தன.

போனை அருகில் வைத்துவிட்டு படுத்தான். அன்றைய நாள் முழுவதும் இருந்த களைப்பு உடலை ஆட்கொண்டிருந்தது.

பதினொன்று பத்து மணியளவில் சாரதி உறக்கத்தில் மூழ்கிப் போனான்.

அடுத்த நாள் லாவண்யாவுக்கும் வழக்கமான நாள்தான்.

ஆனால் அந்த நாளில் மட்டும் எதுவுமே வழக்கம்போலத் தோன்றவில்லை. ஆர்வமே இல்லாமல் கல்லூரிக்குக் கிளம்பினாள்.

டிப்போவில் இருந்து வந்த பேருந்தில் ஏறி தேவியுடன் பேசிக்கொண்டே கல்லூரிக்குச் சென்றாள். பாடங்கள் முடிந்ததும் மீண்டும் அதே பேருந்துப் பயணம். வீட்டுக்கு வந்ததும் வீட்டு வேலைகள். தேவியுடன் சிறிது நேரம் பேச்சு. இஷிதா வந்ததும் அவளுக்குக் கொஞ்சம் பாடம் சொல்லிக் கொடுப்பது.

மாலை டீ, இரவு டிபன் எல்லாமே நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அவளுக்குள் மட்டும் ஏதோ ஒன்று குறைந்திருந்தது.

சாரதியை பார்க்காமல் கடக்கும் நாட்கள். 

அதே நேரத்தில் சாரதியின் பகலும் வேறு விதமாக மாறியிருந்தது. காலை ஏழு, எட்டு மணியளவில் எழுவான். நிதானமாகப் பல் தேய்த்து, டீ குடித்தபடி காலை உணவைச் சாப்பிடுவான். பிறகு கொஞ்ச நேரம் டிவி பார்ப்பான். அதற்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுப்பான்.

அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் பிளவுஸ் எம்மிங் செய்து கொடுப்பான். காய்கறிகளை நறுக்குவான். சமைக்கும் போது காஞ்சனாவுக்கு உதவுவான்.

அப்படியே நேரம் நெருங்கிவிடும். குளித்துவிட்டு மதிய உணவைச் சாப்பிட்டு, வேலைக்குக் கிளம்புவான்.

மீண்டும் இரவு பத்து, பத்தரை மணிக்கு வீடு திரும்புவான். சில நாட்களில் அம்மா சுட்டு வைத்திருக்கும் தோசையைச் சாப்பிடுவான். சில நாட்களில் தானே சோறு வைத்துச் சாப்பிடுவான். பிறகு தூக்கம்.

அடுத்தடுத்த நாள் மீண்டும் அதே வாழ்க்கை. இப்படித்தான் நாட்கள் நகரத் தொடங்கின.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் நினைக்காமல் இருந்த நாள் எதுவும் இல்லை. ஆனால் பேசுவதற்குத்தான் நேரம் கிடைக்கவில்லை.

சில நேரங்களில் போனில் பேச முடிந்தது. அதுவும் முழுமையான நேரமாக இல்லை. முத்து அண்ணா அருகில் இருக்கும் நேரத்தில் டீ குடித்துக்கொண்டே சாரதி லாவண்யாவிடம் பேசுவான்.

"சாப்பிட்டியா?"

"ம்... நீங்க?"

"நான் சாப்பிட்டுட்டேன்.

"இன்னிக்கு வேலை எப்படி இருந்துச்சு?"

"பரவாயில்லை.."

இப்படித்தான் சிறுசிறு பேச்சுகள். குறுஞ்செய்திகளும் பரிமாறிக் கொண்டனர்.

ஆனால் ஒருவருக்கு நேரம் கிடைக்கும் போது இன்னொருவர் வேறு வேலையில் இருப்பார்.

அவர் பதில் அனுப்பும்போது இவளுக்கு நேரம் இருக்காது. இவள் அனுப்பிய செய்தியை அவன் சில நேரம் கழித்துத்தான் பார்ப்பான்.

முன்புபோல ஒரே நேரத்தில் பேசிக்கொண்டே இருக்க முடியவில்லை. அதுதான் இருவருக்கும் பெரிய குறையாக இருந்தது.

சனி, ஞாயிறு மட்டும் அந்தப் பிரிவில் ஒரு சிறிய ஆறுதல் கிடைத்தது.

சாரதி மதியம் வேலைக்குக் கிளம்பும் நேரத்தில் லாவண்யா வீட்டின் வாசலில் வந்து நிற்பாள். அவன் பைக்கில் அந்தத் தெருவைக் கடந்து செல்லும்போது அவளைப் பார்ப்பான்.

அவளையும் பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்வான். அவளும் பதிலுக்கு புன்னகைப்பாள்.

அவ்வளவுதான் சில நேரங்களில் அவன் பைக்கின் வேகம் குறையும். ஆனால் நிற்க மாட்டான். அவளும் அழைக்க மாட்டாள்.

அந்த இரண்டு நொடிகள்தான் அந்த இரண்டு நாட்களுக்கான அவர்களுடைய சந்திப்பு. அந்தச் சிறிய புன்னகையே இருவருக்கும் அடுத்த சந்திப்பு வரை உயிர் கொடுக்கும்.

இலக்கியா இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் எப்போதும் இருப்பதில்லை. வீட்டு வேலைகள், குழந்தைகள் என்று அவளுக்கென்று வேறு வேலைகள் நிறைய இருந்தன. ஆனால் தாத்தா ஆவுடையப்பன் அப்படியில்லை.

லாவண்யாவும் தேவியும் ஒன்றாக வரும்போதெல்லாம் அவருடைய பார்வை மட்டும் கூர்மையாக மாறும். இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

ஆவுடையப்பன் எதுவும் கேட்காமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பார்.

ஒருநாள் அவருடைய பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்த லாவண்யா, "என்ன தாத்தா... அப்படி பார்க்குறீங்க?" என்று கண்ணை உருட்டினாள்.

"ஒண்ணுமில்ல." என்று அவர் சாதாரணமாகச் சொல்வார்.

'என்னைக்கு அகப்படுவேனோ?' என்று முணுமுணுத்தபடி லாவண்யா அங்கிருந்து நழுவிவிடுவாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமல் அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பார்வை, அவள் மறைக்க முயன்ற ஏதோ ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருந்தது.

அன்று சனிக்கிழமை.

சாரதி வீட்டில்தான் இருப்பான் என்பது லாவண்யாவுக்குத் தெரியும்.

காலையிலேயே அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் எழுந்திருந்தாலும், நேரடியாகச் சென்று பார்க்க ஒரு காரணம் வேண்டும் என்று நினைத்தாள்.

அதற்காகவே புதிதாக ஒரு சுடிதார் செட்டை வாங்கி வைத்துக் கொண்டாள்.

"சித்தி... நான் இந்த சுடிதாரை தைக்க கொடுத்துட்டு வர்றேன்." என்று இலக்கியாவிடம் சொல்லிவிட்டு கிளம்பத் தயாரானாள்.

"இப்பத்தான் ரெடிமேட் டிரஸ் எல்லாம் நல்லா வருதே லாவண்யா. அதை ட்ரை பண்ணலாமே?" என்று இலக்கியா கேட்டார்.

அது உண்மைதான். மெட்டீரியல் வாங்கி தைத்து அணிவதைவிட, இப்போது வரும் ரெடிமேட் சுடிதார்கள் அழகாகவும் வசதியாகவும் இருந்தன. ஆனால் லாவண்யாவுக்கு அதில் வேறு ஒரு காரணம் இருந்தது.

''அது வந்து சித்தி... அம்மாவுக்கு துப்பட்டா இல்லாம சுடிதார் போடவே பிடிக்காது. இப்ப வர்ற ரெடிமேட் டிரஸ்ல அப்படி பெரிய துப்பட்டா இல்லையே. அதான்." என்று சமாளித்தாள்.

"சரி... கொடுத்துட்டு வா." என்று இலக்கியா சொல்லிவிடவும், லாவண்யாவுக்கு மனதுக்குள் ஒரு சிறிய நிம்மதி.

தேவியை அழைத்துச் செல்லலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் இப்போது அவளை அழைத்தால் கேள்விகள் வரும்.

அதற்குள் நேரமும் போய்விடும். தேவியை இந்த காதலில் அடிக்கடி இழுக்க வேண்டாமெனவும் நினைத்தாள். அதனால் தனியாகவே கிளம்பினாள்.

வானம் லேசாக இருண்டிருந்தது.மழை வருவதுபோல் இருந்தது.

'மழை வர்றதுக்கு முன்னாடி போயிட்டு வந்துடணும்.' என்று நினைத்தபடி வேகமாக நடந்தாள்.

ஆனால் அவள் சாரதி வீட்டை நெருங்கும் நேரத்திலேயே மழைத்தூறல் ஆரம்பித்து விட்டது. சின்ன சின்ன துளிகள் அவள் மீது பொழிய, சுடிதார் இருந்த கவரை மார்போடு அணைத்தபடி, லாவண்யா வேகமாக நடந்தாள்.

அதற்குள் அவளது தலைமுடியிலும் துப்பட்டாவிலும் லேசாக மழைத்துளிகள் படிந்துவிட்டன.

சாரதி வீட்டை அடைந்ததும், கதவைத் தட்டிவிட்டு, "ஆன்ட்டி... ஆன்ட்டி..." என்று அழைத்தாள்.

பதில் வரவில்லை. 'சாரதிக்கு கால் பண்ணலாமா?' என்று போனை எடுத்தவள், மறுபடியும் தயங்கினாள்.

சனிக்கிழமை காலையிலேயே‌ பத்து மணிக்கு  வந்திருக்கிறோம். அவன் வீட்டில் தான் இருப்பான் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டாள்.

ஆனால் காஞ்சனாவைக் காணவில்லை. மீண்டும், "ஆன்ட்டி." என்று மெதுவாக அழைத்தபடி கதவு லேசாக திறந்திருந்ததைப் பார்த்து உள்ளே எட்டிப் பார்த்தாள்.

வீடு அமைதியாக இருந்தது. அதே நேரத்தில் மேலிருந்து காலடி சத்தம் கேட்டது.

"காயப்போட்ட டிரஸ் எடுத்தாச்சும்மா." என்று சொல்லியபடி சாரதி மாடியிலிருந்து கீழே வந்தான்.

அவனுடைய தலைமுடியிலும் சில மழைத்துளிகள் இருந்தன.

கையில் எடுத்திருந்த துணிகளை சோபாவில் போட்டவன், எதிரே நின்றிருந்த லாவண்யாவைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான்.

"நீ... நீயா?" அவன் முகத்தில் ஆச்சரியத்தோடு சேர்ந்து அடுத்த நொடியே சந்தோஷமும் மலர்ந்தது.

அதே நேரத்தில் சாரதியின் போன் ஒலித்தது. "அம்மா.." என்று எடுத்தான்.

"சாரதி... மழை தூறுது டா. துணியை எடுத்துட்டு வச்சிடு. அம்மா இங்க ரம்யா வீட்ல இருக்கேன். மழை விட்டதும் வர்றேன்." என்றார்.

"சரிம்மா. துணி எடுத்து வச்சிட்டேன்." என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

பிறகு லாவண்யாவைப் பார்த்தான். "ஏய்... நீ எதுக்கு இப்ப வந்த?" குரலில் பதற்றம் இருந்தாலும், முகத்தில் சந்தோஷம் மறைக்கவே முடியவில்லை. அன்னை வேறு இல்லை. லாவண்யா தன் வீட்டிற்கு வந்ததும் சந்தோஷமாக இருந்தான்.

லாவண்யாவும் அந்தப் புன்னகையைப் பார்த்ததும் வெட்கத்தோடு சிரித்தாள். "டிரஸ் தைக்க கொடுக்கிற மாதிரி... உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். ஆன்ட்டி எங்க?" என்றாள். 

"ஆன்ட்டியா? அவங்க வெளியே போயிருக்காங்க. மழை பொழியுதுனு துணி மட்டும் எடுத்து வைக்கச் சொன்னாங்க." என்று சொல்லியவன், அவள் கையில் இருந்த கவரைப் பார்த்தான்.

"சுடிதாரா? பிளவுஸா?" என்று அவள் கொடுத்த கவரை வாங்கிப் பார்த்து, "சுடிதாரா?" என்றான்.

"ம்ம்ம்.." என்று தலையசைத்தாள். அடுத்த நொடியே லாவண்யா மெதுவாகச் சொன்னாள்.

"சுடிதார் வாங்கியதே, தைக்க கொடுக்கற சாக்குல... சாரதியைப் பார்க்க வந்தேன்." என்றாள். அந்த வார்த்தை அவனுடைய முகத்தில் இருந்த சிரிப்பை இன்னும் பெரிதாக்கியது.

இத்தனை நாட்களாக அவளை நேரில் பார்க்க முடியாமல் இருந்தவன், அவள் தானாகத் தேடி வந்திருப்பதை எப்படி சந்தோஷப்படாமல் இருப்பான்?

அன்னை காஞ்சனா வேறு வீட்டில் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துகொண்ட சாரதி, அவளருகில் வந்தான்.

அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான். அந்தத் தொடுதலிலேயே இருவருக்குள் இருந்த நாட்களின் இடைவெளி சற்றே குறைந்தது.

அவள் கையைத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன், "எவ்ளோ நாள் ஆச்சு உன்னைப் பார்த்து." என்று மெல்லச் சொன்னான்.

அவளது விரல்களில் அவனே அறியாது மெதுவாக முத்தமிட்டான். அந்தத் திடீர் நெருக்கத்தில் லாவண்யாவின் மேனி சிலிர்த்தது.

"சா..சா.சாரதி.." என்று அவள் குரல் நடுங்கியது.

அவன் அவளைப் பார்த்தபடியே, "லயா... நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன்." அவனுடைய குரலில் அந்த நாட்களின் ஏக்கம் அப்படியே தெரிந்தது.

"முன்னாடி தினமும் பார்த்தே பழகிட்டேனே? இப்ப பார்க்குற வாய்ப்பே அமையாதது... ரொம்ப கஷ்டமாயிருக்கு." என்று சொல்லியவன் அவளை இன்னும் அருகில் இழுக்க முயன்றான்.

அப்போது அவளுடைய துப்பட்டா ஈரமாக இருப்பதை கவனித்தான்.

"இதென்ன ஈரமா இருக்கு? மழையில நனைஞ்சியா?"

"ம்ம்ம்... லேசா." என்று அவள் தலையசைத்தாள்.

"இரு.." என்று சொல்லிவிட்டு சாரதி அறைக்குள் சென்று ஒரு துண்டை எடுத்துக் கொண்டு வந்தான்.

"சாரதி... சாரதி... ஆன்ட்டி வந்துடப் போறாங்க..." என்று லாவண்யா பதறினாள்.

அவளுடைய கையை விடாமல் பிடித்து அழைத்து வந்திருந்தான்.

"பச்... அம்மா இப்ப வரமாட்டாங்க. மழை பெய்யுது. நனைஞ்சிருக்கியே." என்று துண்டை அவளிடம் நீட்டினான்.

லாவண்யா அதை வாங்க மறுத்தாள். "வேணாம்.." 

"துப்பட்டாவை உதறிவிட்டு முகத்தைத் துடை." என்றான். 

அவள் வீட்டுக்கு அருகில்தானே வந்திருந்தாள் என்பதால், துப்பட்டாவை வழக்கம்போல பின் குத்தாமல் மேலோட்டமாகவே போட்டுக்கொண்டு வந்திருந்தாள்.

சாரதி அதை மெதுவாக விலக்கி, கைக்குள் சுற்றியபடி, அவளுடைய முகத்தில் இருந்த மழைத்துளிகளைத் துண்டால் துடைக்க ஆரம்பித்தான்.

முதலில் நெற்றி, பிறகு கண்களின் ஓரம், கன்னம், என்று மெதுமெதுவாக தீண்ட, அவளுக்குள் ஏதோ புரியாத நடுக்கம்.

இத்தனை நாட்கள் நேரில் பேசாமல் இருந்ததன் தாக்கமா? அல்லது இப்போது திடீரென்று அவனுக்கு இவ்வளவு அருகில் நின்றிருப்பதாலா? அவளுக்கே புரியவில்லை.

அவள் கனவுகள் இன்று அவளை நனவில் அச்சுறுத்த, அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

"லயா." என்று அவன் மெதுவாக அழைத்தான். அவளுடைய முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்த துண்டு அவனுடைய கையிலிருந்து நழுவியது.

அவன் கை மட்டும் அவளுடைய கன்னத்தின் அருகே நின்றது. ஒரு கணம் இருவருடைய பார்வையும் சந்தித்தது. லாவண்யாவின் கருவண்டு கண்கள் இமைகள் படபடக்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன.

அந்தப் பார்வை சாரதியின் மனதில் இருந்த ஏக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

அவன் மெதுவாக அவளருகில் குனிந்தான். அவளது இதழ்களை நோக்கி வந்தவன், ஒரு கணம் தயங்கினான்.

லாவண்யாவும் அவனை விட்டு விலகவில்லை. இமை படபடக்க, நடுக்கத்தோடு, அப்படியே நின்றாள்.

சாரதியின் இதழ்கள் லாவண்யாவின் இதழ்களை மெதுவாகத் தொட்டன. பல நாட்களின் பிரிவுக்குப் பிறகு கிடைத்த அந்த நெருக்கம் இருவரையும் ஒரு கணம் வேறு உலகத்துக்கே அழைத்துச் சென்றது.

சாரதி உடனே விலகவில்லை. அவளுடைய கன்னத்தை மெதுவாகப் பற்றிக் கொண்டவன், அந்த நீண்ட பிரிவின் ஏக்கத்தை ஆழமான முத்தத்தில் வெளிப்படுத்தினான்.

லாவண்யாவும் நடுக்கத்துடன், இமையை இறுகி மூடி, அவனுடைய தோள் வளைவைப் பற்றிக் கொண்டாள்.

இத்தனை நாட்களாக வார்த்தைகளில் மட்டுமே சொல்லிக்கொண்டிருந்த 'நான் உன்னை மிஸ் பண்ணினேன் தெரியுமா?.' என்ற உணர்வு

, அந்த நொடியில் இருவருக்கும் வார்த்தைகளே இல்லாமல் முத்தத்தால் புரிய வைத்தது.வெளியில் மழை சற்று அதிகமாகப் பெய்யத் தொடங்கியது. வீட்டுக்குள் முத்தமழையுமே நீடித்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த இரு இதயங்களின் துடிப்பு மட்டும் தெளிவாகக் கேட்டது. 

-தொடரும்

பிரவீணா தங்கராஜ்

 

Kindly register login to read 


 
Posted : September 27, 2026 5:26 pm
Kalidevi reacted
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Wow fantastic romace between them.  Sarathy Vera level da. Very intresting sis 


 
Posted : September 27, 2026 6:38 pm
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 33)

அய்யய்யோ..! முத்தமே கொடுத்துட்டானா ? அப்பாவி பிள்ளையா இருந்தவன் கூட, இந்த காதல் வந்துட்டால் அடப்பாவி பிள்ளையா ஆகிடுறான் பாருங்களேன். அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள், ஊடால ஆத்தக்காரி நோக்கி நுங்கு எடுப்பாளோ...?

ஏற்கனவே ஆவுடையப்பன் கண்ணுல நல்லெண்ணையை விடாத குறையா உத்து உத்து பார்த்துக்கிட்டிருக்காரு, எப்படா மாட்டுவா அமுக்கி பிடிக்கலாம்ன்னு.... இதுல
இவங்க ரெண்டு பேரும் போற போக்கைப் பார்த்தால் இன்னும் ரெண்டு அத்தியாயத்துலயே
மாட்டிடுவாங்க போலயிருக்கே..?

ஆக மொத்தம், லயா முதல்ல கல்யாணம், அப்புறம் தான் படிப்புன்னு முடிவே கட்டிட்டாப் போல.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : September 27, 2026 7:16 pm
(@lachu-balu-varadhan)
Posts: 10
Active Member
 

Pochchu matta poranga iyo ena aka pokutho


 
Posted : September 27, 2026 7:34 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Sarathy laya innaiku kanchana avanga kita mattaporaga nu thonuthu. 


 
Posted : September 27, 2026 8:16 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

சூப்பர். ..


 
Posted : October 7, 2026 10:10 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super 


 
Posted : October 8, 2026 1:21 pm
(@kalidevi)
Posts: 170
Estimable Member
 

SARATHY PIRIVU IRUKU ATHUKAGA VLO FAST AH IRUPIYA


 
Posted : October 22, 2026 5:22 pm

Scroll to Top