பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-32
அத்தியாயம்-32
இரண்டு வாரங்கள் கல்லூரியும், பேருந்துப் பயணமும் அழகாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது.
தினமும் காலை ஏழு மணிப் பேருந்தில் லாவண்யாவும் தேவியும் ஏற, வழக்கம்போல சாரதி கண்டக்டராக இருப்பான். கூட்டத்தின் நடுவிலும் லாவண்யாவுக்கென்று அவன் பார்வையில் ஒரு சிறிய சிரிப்பு இருக்கும். யாரும் கவனிக்காத அந்தச் சின்னச் சின்ன நொடிகளே இருவருக்கும் அந்த நாளுக்கான சந்தோஷமாக மாறியிருந்தது.
அப்படியிருக்க... ஒரு நாள் கல்லூரியிலிருந்து திரும்பும் நேரம், பேருந்தில் ஏறிய லாவண்யா, சாரதியின் முகத்தில் வழக்கமான சிரிப்பு இல்லை என்பதை கவனித்தாள்.
கல்லூரியிலிருந்து பேருந்தில் கிளம்பி வழக்கமான நிறுத்தங்களைத் தாண்டிக் கொண்டிருக்க, அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்பத்தூர் எஸ்டேட் டிப்போவில் இறங்கும் நேரம் பயணிகள் ஒவ்வொருத்தராக இறங்கிட, சாரதியும் இறங்கி விசிலடித்து டிப்போவுக்குள் வண்டி செல்ல உதவ, "என்னாச்சு சாரதி? ஏன் சோகமா இருக்கீங்க?" என்றாள் லாவண்யா.
அவன் ஒரு நொடி அவளைப் பார்த்துவிட்டு, பெருமூச்சை விட்டான்.
டிப்போவிலிருந்து இறங்கியது கேட்பவளிடம், "எனக்கு இனிமேல் ஆப்டர்நூன் ஷிப்ட் போட்டிருக்காங்க." என்றான்.
"அதனால என்ன?" லாவண்யாவுக்கு முதலில் அதன் அர்த்தம் புரியவில்லை.
சாரதி மெல்ல சிரித்தான். அந்தச் சிரிப்பிலும் சோகம் இருந்தது. "இனி மதியம் ரெண்டு மணிக்கு வேலைக்கு வரணும். நைட்டு பத்து மணி வரைக்கும் வேலை. உன்னோட நேரம் செலவழிக்கறதும், பேசறதும்... ஏன், நேர்ல சந்திக்கறதுகூட கொஞ்சம் கஷ்டமாயிடும்." அந்த வார்த்தைகளைக் கேட்டதும் லாவண்யாவின் முகமும் சுருங்கியது.
அதே நேரத்தில் அருகில் இருந்த முத்து அண்ணா சாரதியைப் பார்த்தார்.
"சாரதி யாருப்பா?" என்று குரல் கொடுத்தார்.
"தெரிஞ்சவங்க அண்ணா." அவன் உடனே சமாளித்துவிட்டு லாவண்யாவைப் பார்த்தான்.
"நீ போ. கால் பண்ணிப் பேசறேன்." லாவண்யா அமைதியாக இறங்கினாள்.
அவளுடன் நடந்துக் கொண்டிருந்த தேவிக்கு அவளது முகமே எல்லாவற்றையும் சொல்லிவிட்டது.
"லாவண்யா... கொஞ்சம் கஷ்டம் தானே. அதுக்காக இப்படி ஃபீல் பண்ணாத. இதே ஊர்தானே? உன் வீட்டைத் தாண்டித் தானே அவரும் போவாரு."
"அது எனக்குத் தெரியும் தேவி" லாவண்யாவின் குரலில் ஏக்கம் தெரிந்தது.
"ஆனா தினமும் காலையில அவரோட டிராவல் பண்ண முடியாதே தேவி..." அந்த ஒரு விஷயம் தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தேவி அவளை வேறு பக்கம் திருப்புவதற்காக, "சரி... அந்த பவன் என்ன ஆனான்? ஆளையே காணோம்?" என்று கேட்டாள்.
"அவன் ஃபைனல் இயர் முடிச்சிட்டான். அதனால வரலை." என்று பதில் தந்தாள்.
"உனக்கு எப்படித் தெரியும்?" என்று தேவி கேட்டதும் லாவண்யா மெல்லத் தயங்கினாள். ஏனெனில் அவன் பைனல் இயர் என்றது எல்லாம் லாவண்யா எப்பொழுது அறிந்து வைத்திருந்தால் என்ற எண்ணம்.
"ஒருநாள் கொஞ்சம் சப்பியா இருக்கிற ஒரு அக்கா என் பக்கத்துல உட்கார்ந்தாங்க. அப்போ பவனை காம்பஸ்ல குத்திட்ட. 'கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. அவன் பெரிய இடம்'ன்னு சொன்னாங்க." தேவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"அதுக்கு அடுத்த நாள் நீ காய்ச்சல்னு லீவு எடுத்த. நீ இல்லைன்னு தெரிஞ்சதும், பவன் என்னைப் பார்த்துப் பேச வந்தான்." என்றாள்.
"என்ன பேசினான்?" என்று ஆச்சரியமாய் கேட்க, "பேச வந்தானா... மிரட்ட வந்தானானே தெரியலை." லாவண்யா சற்றே முகம் சுளித்தாள்.
"அப்போ நான் அவன்கிட்ட, 'உன் அம்மா பின்னாடி இப்படி யாராவது தட்டி மேல கை வச்சா சும்மா இருப்பியானு?'ன்னு கேட்டேன்." தேவி கண்களை விரித்தாள். அவனிடம் இப்படி பேசினால் என்ன செய்திருப்பான்.
"அப்புறம்?"
"என்னனு தெரியலை.. சாரி கேட்டான். இனிமேல் என்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொன்னான். அப்பத்தான் அவன் ஃபைனல் இயர் படிக்கறான்னே தெரிஞ்சுக்கிட்டேன்." என்றாள்.
"அடிப்பாவி! என்னிடம் இவ்வளவு லேட்டா சொல்ற?" என்று தேவி செல்லமாக அவளைத் திட்டினாள்.
ஆனால் பவன் தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன விஷயத்தை மட்டும் லாவண்யா தேவியிடமும் சொல்லவில்லை.
எப்படியும் ஃபைனல் இயர் என்பதால், இனிமேல் தொல்லை கொடுக்காமல் போய்விடுவான் என்று அவள் நினைத்திருந்தாள்.
அதன்பிறகு இருவரும் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.
வீட்டிற்கு வந்ததும் உடையை மாற்றிக்கொண்ட லாவண்யா, தேவி வந்ததும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்கச் சென்றாள்.
ஆனால் புத்தகம் முன்னால் இருந்ததே தவிர, அவளது கவனம் அதில் இல்லை.
நொடிக்கொரு முறை போனை எடுத்துப் பார்த்தாள்.
சாரதி கால் பண்ணியிருக்கிறானா? மெசேஜ் அனுப்பியிருக்கிறானா? என்று திரையைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அதை கவனித்த தேவி சிரித்தாள். "அந்த அண்ணா வருவாருப்பா... பேசுவார். நீ இப்படி போனைப் பார்த்துக்கிட்டே இருக்காத." அந்த நேரத்தில்தான் வெளியே பைக் சத்தம் கேட்டது.
லாவண்யா உடனே எழுந்தாள். வாசலை நோக்கிப் பார்த்தாள்.
சாரதிதான் அவன் பைக்கில் கடந்து சென்றான்.
ஆனால் எப்போதும் லாவண்யாவைக் கண்டதும் முகத்தில் மலரும் அந்தச் சிரிப்பு இல்லை.
அவன் முகம் முழுவதும் சோகம். ஒரு நொடி கூட அவளைத் பிரியாதவனாக அந்த சோகம் எடுத்துரைத்தது.
அதைப் பார்த்ததும் லாவண்யாவின் கண்களில் கண்ணீர் திரண்டது.
தன்னை விட அவன்தான் இந்தப் பிரிவை அதிகமாக உணர்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.
"என்னடி இது? இதுக்கே அழற?" என்று தேவி அவளை உலுக்கினாள்.
"தெரியலை தேவி..." கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னாள்.
"சாரதி சோகமா இருந்தா... என்னால தாங்க முடியலை." தேவி அவளைப் பார்த்து சிரிப்பதா, பரிதாபப்படுவதா என்று தெரியாமல் நின்றாள்.
சரியாக பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு லாவண்யாவின் போன் ஒலித்தது.
திரையில் அவனது பெயரைப் பார்த்ததும் அவள் உடனே எடுத்தாள்.
"சாரதி" மறுமுனையில் சில நொடிகள் அமைதி. பிறகு சாரதியின் குரல் கேட்டது.
"லயா..." அந்த ஒரு அழைப்பிலேயே அவனது ஏக்கம் தெரிந்தது.
"இனி காலையில உன்னைப் பார்க்க முடியாது. மதியம்தான் வேலைக்குப் போவேன். பத்து மணிக்குத்தான் திரும்புவேன். இந்த ஈவினிங் உன்கிட்ட பேசற வாய்ப்பும்... சாட் பண்ற நேரமும் மிஸ் ஆகிடும். நைட்டு பத்து மணிக்குத்தான் வருவேன். அதனால நைட்டெல்லாம் பேச முடியாது." சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும் சொன்னான்.
"நீ எல்லாம் ஒன்பது, பத்து மணிக்கே படிச்சுட்டு தூங்கிடுவ. ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு தோணுதுடி." லாவண்யாவின் தொண்டையிலும் ஏக்கம் வந்து நின்றது.
ஆனாலும் அவள் அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள்.
"சாரதி... ஒரே ஏரியா தானே. அதெல்லாம் பார்க்கலாம். எதுவானாலும் பார்த்துக்கலாம். நீங்க ஃபீல் பண்ணாதீங்க." அருகில் இருந்த தேவி அதை கேட்டுவிட்டு சிரித்தாள்.
'இவளுக்கே நான் ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கு... இவ அண்ணாவுக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருக்கா!' லாவண்யா அவளை முறைத்தாள்
அந்த நேரத்தில் போனின் மறுமுனையில் காஞ்சனாவின் குரல் தெளிவாகக் கேட்டது.
"சாரதி... டீ போட்டுட்டேன். வந்து குடி. அடிக்கடி கதவைச் சாத்திக்கிட்டா என்னடா அர்த்தம்?" சாரதி உடனே குரலைத் தாழ்த்தினான்.
"அம்மா கூப்பிடறாங்க. நீ வை."
"சரி..." லாவண்யாவும் போனை அணைத்தாள்.
ஆனால் அந்த இரவு மட்டும்... அவர்களால் அவ்வளவு எளிதாகப் பிரிந்து தூங்கிவிட முடியவில்லை. சாரதி மீண்டும் கால் செய்தான்.
அந்த நாளெல்லாம் சொல்லாமல் விட்ட விஷயங்களையும், சொல்லாமல் இருந்த ஏக்கங்களையும் ஒவ்வொன்றாகப் பேசிக்கொண்டே இருந்தான்.
"காலையில உன்னைப் பார்க்காம இருக்கப் பழகணும்னு நினைக்கிறேன்... ஆனா எப்படி பழகுவேன்னு தெரியல."
"நானும் உங்களை மிஸ் பண்ணுவேன்."
லாவண்யா போர்வைக்குள் மெதுவாக ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு படுத்திருந்தாள். பேசிக்கொண்டிருந்தபோது சுரேஷ் உள்ளே வந்து எட்டிப் பார்த்தார். உடனே லாவண்யா கண்களை மூடிக்கொண்டாள்.
அவன் திரும்பிப் பார்த்தால் தூங்கிவிட்டதுபோல நடித்தாள். சுரேஷ் சென்றதும், சில நொடிகள் கழித்து மீண்டும் கண்களைத் திறந்தாள்.
மறுமுனையில் சாரதியின் குரல் இன்னமும் கேட்டுக் கொண்டிருந்தது. அன்று அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், பிரிவுக்கான ஏக்கத்தை சொல்லியது.
அடுத்த நாள் காலையில் கல்லூரிக்குச் செல்ல லாவண்யா வழக்கம்போல பேருந்து டிப்போவில் நின்றிருந்தாள்.
பேருந்து வந்து நின்றதும், பழக்கமான முகத்தைத் தேடியபடியே அவளது பார்வை பேருந்துக்குள் சென்றது.
ஆனால் டிரைவரும் கண்டக்டரும் வேறு.
அவளது முகம் அப்படியே சுருங்கிப்போனது. வழக்கமாக சாரதி இருக்கும் இடத்தில் வேறு ஒருவர் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கவே அவளுக்குப் பேருந்து மாறிப்போனது போல இருந்தது.
பேருந்தில் ஏறி தேவியுடன் அமர்ந்தாலும், அவளது பார்வை மட்டும் எப்போதும் சாரதி நிற்கும் இடத்தையே தேடிக்கொண்டிருந்தது.
அவள் முகமே வருத்தத்தை சொல்லிக் கொண்டிருந்தது.
வேறு பேருந்து, வேறு கண்டக்டர், வேறு முகங்கள். சாரதி மட்டும் இல்லை. "சாரதி இல்லாத பேருந்துல பயணம் செய்யவே பிடிக்கலை'' என்று கூற லாவண்யா உதடு துடித்தது.
அதே நேரத்தில் பேருந்தில் ஏறும் போது, அவசரமாக ஓடிவந்த ஒரு பெண் படியில் கால் வைக்கும் போது தடுமாறி கீழே விழப்போனார்.
'அம்மா... பார்த்து ஏறுங்க!' என்று சாரதியாக இருந்தால் பதறுவான்.
பேருந்து நகரத் தொடங்கியிருந்தது. ஆனால் அந்த பேருந்து கண்டக்டர் எரிச்சலாக, "பஸ் மூவாகறப்ப படில ஏறுறீங்க! அடுத்த பஸ்ல ஏற வேண்டியதுதானே? காலையிலயே தாலி அறுக்கறீங்க!'' என்று கடுகடுப்பாகப் பேசினார்.
அந்த வார்த்தைகள் லாவண்யாவுக்கும் தேவிக்கும் காதில் விழுந்தன.
லாவண்யா அமைதியாக இருந்தாள். தானாக சாரதியைப் பற்றி பேசினால் தேவிக்கே எரிச்சலாக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் அவளுக்குள் சாரதியுடன் ஒப்பிடாமல் இருக்கவே முடியவில்லை.
தேவியே சிறிது நேரம் கழித்து,
"சாரதி அண்ணா என்னைக்காவது இப்படி அசிங்கமா பேசியிருக்காரா? காலையிலேயே எப்படியெல்லாம் பேசுறாங்க!"என்று சொல்லிவிட்டு, "பஸ் மிஸ் ஆகும்னு தானே ஓடி வந்து ஏறுறாங்க. என்ன இருந்தாலும்... சாரதி அண்ணா பஸ் ஸ்பெஷல்தான்." என்றாள்.
லாவண்யா அவளைப் பார்த்தாள். தேவிக்கே சாரதி இல்லாதது இவ்வளவு வித்தியாசமாகத் தெரிகிறதே...
தனக்கு எப்படி இருக்கும்? அவள் மனம் இன்னும் சுருங்கியது.
அதே நேரத்தில் சாரதியும் அந்தக் காலையை வேறு விதமாகத்தான் தொடங்கியிருந்தான்.
கண் விழித்ததும் அவனுக்கு முதலில் நினைவுக்கு வந்தது லாவண்யாதான்.
இன்று காலை அவளைப் பார்க்க முடியாதா? என்ற எண்ணம் மனதிற்குள் எழுந்தது.
ஒருவேளை சீக்கிரமாக எழுந்து தயாராகி அவள் செல்லும் நேரத்தில் அந்த வழியாகப் போனால், அவளை ஒரு நிமிடமாவது பார்த்துவிட்டு செல்லலாம். ஆனால் உடனே அவனே அந்த எண்ணத்தை நிறுத்திக்கொண்டான்.
இன்று மதியம் இரண்டு மணிக்குத்தான் டூயூட்டி. இரவு பத்து மணிக்குத்தான் வேலை முடியும். டிப்போவிலிருந்து வீட்டுக்கு வரவே பத்தரை ஆகிவிடும்.
வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, உடை மாற்றி படுக்கும்போது பதினொன்று மணி ஆகிவிடும்.
அதற்குப் பிறகு எப்போது தூக்கம் வரும்? மறுநாள் அதிகாலை ஆறு... ஆறரை மணிக்கு எழுந்து, அவள் பேருந்தில் ஏறும் நேரத்திற்கு தினமும் சென்று நிற்க முடியுமா?
தெரியவில்லை. ஒருநாள் பார்த்துவிட்டு, அடுத்த நாள் போக முடியாமல் விட்டால்? அவளுக்கும் தினமும் காலையில் தன்னைப் பார்ப்பாள் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடக்கூடாது. அதனால் இப்போதைக்கு அவளைப் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்தான்.
காலை ஏழு மணிக்குத்தான் எழுந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தான்.
பிறகு வெறுமனே டிவியில் ஒரு படத்தைப் போட்டுவிட்டு அமர்ந்தான்.
திரையில் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அவனது கவனம் அதில் இல்லை.
காஞ்சனா தையல் மெஷினில் ஜாக்கெட் தைத்தபடியே, அடிக்கடி மகனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வழக்கமாக இந்த வயசுப் பையன் காதலிக்கிறான்னா போனை மடியில் வைத்துக்கிட்டு ஏதாவது செய்துக் கொண்டிருப்பான்.
ஆனால் இவன் போனைத் தொடவே இல்லையே! என்று அவளுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.
"வயசுப் பையன் காதலிக்கறான்னா போனை மடில வச்சிட்டு உட்காருவானே... இவன் பாட்டுக்கு படம் பார்த்துக்கிட்டு இருக்கானே சாரதி காதலிக்கலையா.?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டர்.
ஆனால் மகனிடம் எதுவும் கேட்கவில்லை. மதியம் சூடாகச் சாதமும் குழம்பும் ஊற்றிக் கொண்டிருந்தபோது சாரதி குளித்துவிட்டு வெளியே வந்தான்.
"சாரதி... சாப்பிட்டுட்டு டிப்போ போ." என்று காஞ்சனா சொல்லிக்கொண்டே பரிமாறினார்.
இனிமேல் இரவு பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு வருவான் என்பதால், மகன் சாப்பிடாமல் பட்டினியாக கிடந்துவிடக்கூடாதே என்ற கவலை அவருக்கு.
"முத்து அண்ணா எப்படியும் டீ குடிப்பார்... சிகரெட்டும் பிடிப்பார். நீ அவரைப் பார்த்து அந்தப் பழக்கமெல்லாம் பழகிக்காத சாரதி." என்று அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தாள்.
"டீ வேண்டும்னா குடிச்சிக்கோ. அதோட ஏதாவது பஜ்ஜி, சமோசானு சாப்பிடு."
"ம்..."
"வயிறைக் காயவிடாத. நைட்டு பசிச்சா வெளியே சாப்பிடு. வீட்டுக்கு வந்து தான் சாப்பிடணும்னு நினைச்சுக்கிட்டு இருக்காத." சாரதி ஒவ்வொன்றுக்கும் தலையை ஆட்டினான்.
சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் காஞ்சனா அவனது நெற்றியில் விபூதி வைத்தார்.
சாரதி ஒரு நொடி வீட்டுக்குள் இருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு வெளியேறினான்.
வழக்கமான ஷிப்ட்தான். ஆனால் வாழ்க்கையின் நேரம் மட்டும் மாறிவிட்டது.
இதுவரை வேலை முடித்து மாலை வீட்டுக்கு வந்துவிடுவான். இனிமேல் இரவு வரை காத்திருக்க வேண்டும்.
மகன் சாப்பிட்டிருப்பானா? சோர்வாக வருவானா? வீட்டுக்கு வந்து சாப்பிடுவானா?என்றெல்லாம் காஞ்சனாவின் மனதில் புதுப் புதுக் கவலைகள் தோன்றின.
கல்லூரி முடிந்து திரும்பும்போது லாவண்யாவின் முகம் கடுகடுவென்று இருந்தது.
பேருந்துப் பயணமே அவளுக்குப் பிடிக்காத ஒன்றாக மாறிவிட்டது போல இருந்தது.
வழக்கமாக பேருந்தில் ஏறியதும் சாரதியைத் தேடும் கண்கள்.
இன்று வெறுமனே ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தன.
வீட்டுக்கு நடந்து செல்லும்போதுகூட, ''சாரதி எங்க இருக்க? பார்க்க முடியுமா?" என்று கேட்டாள்.
அதற்கு போனில் அவன் பதில் அனுப்பினான்.
"இல்ல... இப்பத்தான் பஸ் புறப்பட்டுடுச்சு. வரவே முடியாது லயா. பார்க்குற மாதிரி அமையாது."
அந்தச் சிறிய பதில் கூட அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
சாரதி என்பவன் தன்னை விட்டு ஏழு மலை, ஏழு கடலைத் தாண்டி எங்கோ தொலைவில் இருப்பது போலவே லாவண்யாவுக்குத் தோன்றியது.
உண்மையில் அவன் இருந்தது அதே ஊரில்தான்.
அதே சாலைகளில்தான் பயணம் செய்துக் கொண்டிருந்தான்.
ஆனால்... அவனைச் சந்திக்க முடியாத அந்தச் சிறிய இடைவெளியே அவளுக்கு அளவில்லாத தூரமாக மாறியிருந்தது.
தேவியிடம் நீண்ட நேரம் பேசினாள். பிறகு துணிகளை மடித்தாள், பாடம் எழுதினாள், படிக்கவும் முயன்றாள்.
மாலை இஷிதாவுடன் சிறிது நேரம் விளையாடினாள்.
இரவு சாப்பிட்டாள், படுக்கைக்குச் சென்றாள். ஆனால் மனம் மட்டும் போனிலேயே இருந்தது.
சாரதி இரவு வீட்டுக்கு வந்ததும் குறுஞ்செய்தி அனுப்புவானா? என்ற எதிர்பார்ப்புடன் போனை அருகில் வைத்துக்கொண்டாள்.
திரையை ஒருமுறை பார்த்தாள். அதற்குள் உறக்கம் அவளை மெதுவாகத் தழுவத் தொடங்கியது.
போன் கையில் இருந்தபடியே, சாரதியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வரும் என்ற ஆசையோடு காத்திருந்த லாவண்யா, உறக்கத்தில் மூழ்கிப் போனாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 32)
அட ராமா ! காதல்ல விழுந்துட்டாலே இப்படியெல்லாம் பைத்தியக்காரத்தனமா புத்தி போகுமோ என்னவோ ?
மதிய ஷிஃப்ட் தானே, திரும்பவும் அது மார்னிங் ஷிஃப்ட்டா மாறலாம் தானே, அதுக்கு ஏன் இந்தளவுக்கு நொந்து நூடூல்ஸாகுறாங்கன்னுத்
தெரியலையே ???
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-42
4 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-33
21 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-31
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-30
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-29
2 weeks ago
- 26 Forums
- 377 Topics
- 1,911 Posts
- 2 Online
- 442 Members
