பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-28
அத்தியாயம்-28
திருமணம் முடிந்ததும் தேவியுடன்தான் லாவண்யா பெரும்பாலும் சுற்றிக் கொண்டிருந்தாள். அதனால் அலமேலு, புருஷோத்தமன் இருவரும் அவளைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. மாலதியின் சம்பந்தி வீட்டாரை கவனிப்பதிலும், வந்திருந்த உறவினர்களை உபசரிப்பதிலும் அவர்களுக்கே நேரம் சரியாக இருந்தது.
மண்டபத்திலிருந்து முதலில் மாலதியைப் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு, அதன் பிறகு அனைவரும் தங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்தனர்.
பையன் வீட்டுக்காரர்கள் ஒவ்வொருவராக விடைபெற்று கிளம்பும் வரை வீடே பரபரப்பாக இருந்தது. அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, விக்னேஷ் மட்டும் மாலதியுடன் இருந்தான்.
அதுவும் அன்று இரவே சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், வீட்டில் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஏதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். ஒருவர் அறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க, இன்னொருவர் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றார். பெண்கள் ஒருபுறம் மாலதியைச் சுற்றி நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில்தான் தேவி கிளம்புவதாகச் சொன்னாள்.
"நான் கிளம்புறேன் லாவண்யா. வீட்டுக்குப் போகணும்."
"நானும் உன்னை பஸ் ஏத்திவிட வர்றேன்." என்று லாவண்யா சொல்ல, அவளது தந்தையிடம் அனுமதி கேட்டாள்.
"அப்பா... நான் தேவியை பஸ் ஏத்திவிட்டு வரட்டுமா?" என்று கேட்க, சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகள் மட்டுமே வீட்டில் மீதமிருந்ததால், "சரி" என்று அனுமதித்தனர்.
அலமேலு, தேவியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லுவதற்காக ஸ்வீட், மிக்சர் ஆகியவற்றை அழகாகப் பேக்கிங் செய்து ஒரு பையில் வைத்து பரிசு தட்டு புதிதாக டிபன்பாக்ஸ் எல்லாம் கொடுத்தார்.
அதைப் பார்த்த லாவண்யா, அருகில் இருந்த இரண்டு மூன்று சிறிய பேக்கேஜ்களையும் எடுத்துக்கொண்டு தேவியின் கையில் திணித்தாள்.
"இதையும் சாரதிகிட்ட கொடுத்துடு." தேவி உடனே முகத்தைச் சுளித்தாள்.
"ப்ச்... தேவி செல்லம்ல." என்று அவளது தாடையைப் பிடித்துக் கொஞ்சியபடி பேக்கேஜை அவளிடம் நீட்டினாள் லாவண்யா.
தேவி அதை வாங்கிக் கொண்டாலும், அந்தப் பொட்டலத்தைப் பார்த்ததும் சந்தேகம் வந்தது.
"இதென்னடி? கிஃப்ட் பேக்கிங் பண்ணி இருக்கு. உங்கக்காவுக்காக வந்த கிஃப்ட்ல ஏதோ தூக்கிப் போட்டது போல தெரியலையே." என்று கேட்டாள்.
லாவண்யா உடனே உதட்டில் விரலை வைத்து,
"ஷ்ஷ்... இது சாரதிக்காக வாங்கின கிஃப்ட். இங்க இருந்தா அம்மா பார்த்துடுவாங்க. நீ கொண்டு போய் அவர்கிட்ட தந்துடு." என்றாள்.
"என்ன கிஃப்ட்?"
"வாட்ச் தான். அதை சாரதியிடம் கொடுத்துட்டு பாரு." தேவி அவளை முறைத்தாள்.
"ஆக மொத்தம் என் நெத்தில 'தேவி புரொஃபஷனல் கொரியர் சர்வீஸ்'ன்னு எழுதிட்ட" என்றதும் அதற்கு லாவண்யா சிரித்தபடி, "என் கண்ணுக்கு தேவி தூது செல்லும் கிளியா தெரியற." என்றாள்.
"அடிப்பாவி!" என்று தேவி அவளை மெதுவாக மொத்தியபடி சிரித்தாள்.
"சரி... கொடுக்கிறேன். ஆனா அடுத்த தடவை என்னை இப்படி யூஸ் பண்ணாத." என்றாள்.
"சரி செல்லம்.'" என்று லாவண்யா சிரித்தாள்.
தேவி புறப்படத் தயாரானதும், அவள் தனியாகச் செல்வதைப் பார்த்த அலமேலு,
"லாவண்யா... நீயும் போய் தேவியை பஸ் ஏத்திவிட்டு வா. தனியா வராத. இஷிதாவையும் கூட்டிட்டு போ." என்று சொல்ல, வேறு வழியில்லாமல் லாவண்யாவும் இஷிதாவை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.
சிறிது நேரத்தில் ஸ்கூட்டரில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தனர்.
பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரத்திற்கே உரிய பரபரப்பு இருந்தது. ஒருபுறம் வீடு திரும்ப அவசரப்படும் மக்கள், மறுபுறம் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் என்று அந்தச் சிறிய இடமும் சுறுசுறுப்பாகவே இருந்தது.
இஷிதா உடன் இருப்பதால், லாவண்யாவும் தேவியும் சற்று ஜாக்கிரதையாகவே பேசிக்கொண்டனர்.
அப்போது இஷிதா திடீரென்று, "அக்கா... ஐஸ்க்ரீம்!" என்று கேட்டாள்.
"கல்யாண வீட்டுல சாப்பிட்டல்ல?" என்றாள்.
"இன்னொண்ணு வேணும்." என்று அடம்பிடிக்க, லாவண்யா சிரித்தபடி பணத்தை அவளிடம் கொடுத்தாள்.
"போய் வாங்கிக்கோ." இஷிதா கடைக்குள் ஓடிச் சென்றதும், தேவி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டாள்.
"அப்புறம்... கேட்கணும்னு நினைச்சேன். அதென்னடி... காலையில கல்யாண மண்டபத்துல சாதி சங்கத்து ஆட்களா? அரை மணி நேரம் மண்டபத்துல அவங்க தலைதான் அதிகமா தெரிஞ்சது." என்றாள்.
லாவண்யா உடனே, "சொன்னேன்ல... சுத்தி சுத்தி இருப்பாங்க." என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள்.
ஆனால் தேவி அவளை விடவில்லை. "இந்த ரணகளத்துல நீ காதலிச்சிருக்க பாரு. அதிலும் சாரதி அண்ணாவை... கண்டக்டரை!" என்றதும் லாவண்யா சிரித்தாள்.
"அவர் பி.காம் முடிச்சிருக்கார். அதுவொரு பிளஸ்."
"அதெல்லாம் இப்பதான் உனக்குத் தெரியும். நீ காதலிச்சப்ப அந்த அண்ணா படிச்சாரா? இல்லையா?, என்ன படிச்சாருன்னு கூட தெரியாம காதலில் விழுந்திருக்க. அதென்ன தைரியமோ?" என்றாள்.
லாவண்யா சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாக, "ம்ம்... குறுட்டு தைரியம்." என்றாள்
தேவி முறைக்க, "நீ வேற... அவரைப் பிடிச்சிருந்தது. நல்லவரா, பண்பானவரா தெரிஞ்சார். அவரைக் கட்டிக்கிட்டா கண் கலங்காம பார்த்துப்பார்னு தோணுச்சு. அவ்ளோதான். அதுக்கு மேல யோசிக்கலை." லாவண்யா சொன்னபோது குரலில் எந்தத் தயக்கமும் இல்லை.
சாரதி என்ற மனிதனைப் பற்றி அவளுக்குள் உருவாகியிருந்த நம்பிக்கை, அவள் காதலைவிடப் பெரியதாகவே இருந்தது.
தேவி அவளை சில நொடிகள் பார்த்தாள். "ஆனா இப்ப..." என்று இழுத்தவள், "என்னை மாதிரியே வீட்டுல யோசிப்பாங்களானு சந்தேகம் இருக்கு." லாவண்யாவின் முகத்தில் இருந்த புன்னகை சற்றே குறைந்தது.
"ஆனா சாரதியோட நல்ல குணத்தையும் பார்த்துட்டேன். அதனால எனக்கு நம்பிக்கை இருக்கு." என்றாள்.
லாவண்யா தேவியை பார்த்து மெதுவாகச் சிரித்தாள்.
தேவிக்கு இப்போதும் லாவண்யாவின் காதலை கண்டு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஒரு கண்டக்டரைப் பார்த்து, அவர் என்ன படித்திருக்கிறார், குடும்பம் எப்படி, வருமானம் என்ன என்று எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் முன்பே காதலித்திருக்கிறாள்.
ஆனால் அவளுடைய காதலில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது.
அவளுக்கு சாரதியைப் பிடித்திருந்தது. அந்த அண்ணாவை தேவியும் நம்பியிருந்தாள்.
அந்த நேரத்தில் இஷிதா ஐஸ்க்ரீமுடன் ஓடி வந்தாள்.
"அக்கா.." என்று ஐஸ்க்ரீமை சுவைத்தாள்.
சிறிது நேரத்தில் தேவி தன் பையைச் சரி செய்து கொண்டிருந்தபோது, தொலைவில் பேருந்து ஒன்று வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
"ஏய்... சென்னை போற பஸ்!" என்று அவள் அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள்.
"வா, வா!" என்று லாவண்யாவும் அவளது கையைப் பிடித்துக் கொண்டு பேருந்து நிற்குமிடத்தில் அழைத்துச் சென்றாள்.
பேருந்து நின்றதும், தேவியை ஏற்றி அவளது இருக்கையில் அமர வைத்தாள். அவளது உடைமைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுத்தாள்.
கடைசியாக சாரதிக்கான கிஃப்ட் பேக்கையும் அவளிடம் கொடுத்துவிட்டு, "இதை மறக்காம கொடு." என்று நினைவூட்டினாள்.
பிறகு அலமேலு கொடுத்திருந்த ஸ்வீட், மிக்சர், தட்டு, கிண்ணம், தேங்காய் என்று அனைத்தையும் தனித்தனியாகக் காட்டினாள்.
"அம்மா கொடுத்த ஸ்வீட், மிக்சர் எல்லாம் ஆன்ட்டிக்கிட்ட கொடு. நடுவுல ஜாக்கிரதை. நகை கிகை எல்லாம் வாடகை தானே... ஆனாலும் ஜாக்கிரதை."
"சரிடி." என்று தேவி சிரித்தாள்.
"நீ உங்க வீட்டுக்குப் பத்திரமா போ. போயி சேர்ந்ததும் கால் பண்ணறேன்."
"சரி. நீயும் வீட்டுக்குப் போய் சேர்ந்து எனக்கு மெசேஜ் பண்ணு." என்று சொல்லி லாவண்யா கையை அசைத்தாள்.
பேருந்து நகர்ந்ததும், இருவரின் பார்வையும் சில நொடிகள் ஒருவரை ஒருவர் தொடர்ந்தது. பிறகு லாவண்யா இஷிதாவின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஸ்கூட்டரில் புறப்பட்டாள்.
வீட்டிற்கு திரும்பியதும் இஷிதாவை அழைத்துக் கொண்டு வந்த லாவண்யாவுக்கு மாலை சிற்றுண்டி கொடுக்கப்பட்டது.
அன்று காலை முதல் நடந்த கல்யாண பரபரப்புக்குப் பிறகு, வீடு இப்போது மெதுவாக அமைதியாகிக் கொண்டிருந்தது.
வந்திருந்த உறவினர்களில் சிலர் கிளம்பியிருந்தனர். இன்னும் சிலர் சாப்பிட்டு முடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் இலக்கியா மாலதியையும், சுரேஷ் சாந்தி முகூர்த்த அறையையும் அலங்கரிக்கச் சென்றார்.
லாவண்யாவும் இஷிதாவும் சற்று தள்ளி மாடிக்குச் சென்றனர்.
அன்றிரவு அவர்கள் மாடியில்தான் உறங்கப் போகிறார்கள். மாடியில் ஏற்கனவே வரிசையாக பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. அதன் மேல் பெட்ஷீட்கள் போடப்பட்டிருந்தன. ஒரு பக்கம் தலையணைகள் அடுக்கப்பட்டிருந்தன.
கீழே வீட்டில் நடக்கும் சத்தம் மாடிக்கு மெல்லியதாகத்தான் கேட்டது.
இஷிதா ஏற்கனவே தாத்தா ஆவுடையப்பன் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
லாவண்யா படிக்கட்டின் அருகில் சற்று தள்ளி சென்று நேராக அமர்ந்துக் கொண்டாள்.
யாராவது மேலே வந்தால் உடனே போனை மறைத்துவிட வேண்டிய நிலை வரக்கூடாது என்பதால், அவளே சாரதிக்கு அழைக்க முடிவு செய்தாள்.
போனை எடுத்ததும், சாரதியின் பெயரைப் பார்த்தவுடன் அவளுடைய முகத்தில் தானாகவே ஒரு புன்னகை வந்தது.
அதே நேரத்தில் சென்னையில்... குளித்து முகம் அலம்பி முடித்திருந்த சாரதி, பனியன், ஷார்ட்ஸ் அணிந்தபடி ஹாலுக்கு வந்தான்.
காஞ்சனா பக்கத்து வீட்டில் ஒரு பிளவுஸ் தைத்து விட்டு அதை நேரிடையாக தந்துவிட்டு பணம் வாங்க சென்றிருந்தார்.
டிவியைப் போட்டு வைத்திருந்தாலும், அவனுடைய கவனம் நிகழ்ச்சியில் இல்லை.
மீண்டும் மீண்டும் லாவண்யா அனுப்பியிருந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் அவளுடைய அழைப்பு வரவும், உடனே போனை அட்டெண்ட் செய்தான்.
"சொல்லு." அவனுடைய குரல் கேட்டதும் லாவண்யாவின் முகத்தில் இன்னும் பெரிய புன்னகை.
"என்ன சொல்லணும்?"
"நீ தானே... கூப்பிட்ட?"
"ம்ம்ம் எல்லாம் போட்டோவும் பார்த்தியா. என் டிரஸ் எப்படி இருக்கு? போட்டோஸ் எல்லாம் வந்ததுக்கு வெறும் ஹார்ட்டினா அனுப்பிட்ட. பதில் இல்லை." என்று நொடித்தவளாக பேச, சாரதி சிரித்தான்.
"இருக்கற இதயத்தைக் குட்டி குட்டியா அனுப்பினேன். மேல சொல்ல என்ன இருக்கு? அதான் மொத்தமா பஞ்சர் பண்ணிட்டியே." என்றான்.
"சாரதி..."
"ம்ம்"
"வீட்ல இருக்கியா?"
"அம்மா பிளவுஸ் தைச்சிட்டு பக்கத்துல ஒரு வீட்டுக்கு கொடுக்க போயிருக்காங்க. நான் டிவி பார்க்கறேன்னு போட்டுட்டு, உன் போட்டோவைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கேன். நீ என்ன பண்ணற" என்றதும் அவள் சிரித்தாள்.
"கீழே அக்காவுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ரூம் அரேஞ்ச் பண்றாங்க. நான் இஷிதாவோட மாடிக்கு வந்துட்டேன்." என்றாள்.
அதை கேட்டதும் சாரதியின் குரலில் உடனே ஒரு மாற்றம்.
"மாடியா?"
"ம்ம்.''
"குழந்தை பிள்ளைங்க மாடில இருப்பது பெட்டர்." என்று அவன் சிரிக்காமல் சொன்னான்.
"சாரதி.. நான் ஒன்னும் குழந்தைபிள்ளை இல்லை" என்றாள்
"ஏய்... நீ சின்ன பொண்ணு இல்லையா" என்று கள்ளத்தனமாய் சிரித்தான்.
"உன்னை..." என்று அவள் பற்களைக் கடித்தாள்.
"அதை விடு. தேவி கல்யாணத்துக்காக வந்தால்ல... அவளிடம் ஸ்வீட், கிஃப்ட் எல்லாம் தந்திருக்கேன். காலையில அவ எங்க வர்றான்னு பார்த்து வாங்கிக்கோ."
"சரி."
"அப்புறம் ஒரு குட்டி சர்ப்ரைஸ்." என்றாள்.
"ஏன்? நீயும் வர்றியா என்ன?" அவன் கேட்ட விதத்தில் இருந்த சிறிய எதிர்பார்ப்பை லாவண்யா கவனித்தாள்.
"ஆசைதான். ஆனா விடமாட்டாங்க. லீவு முடியற வரை இங்கதான். சித்தி, சித்தப்பா, இஷிதா, தாத்தா எல்லாம் நாளை சாயந்திரம் கிளம்பிடுவாங்க." என்று கூறினாள்.
"ம்ம்... பொறுமையா வா. நான் தேவியிடம் ஸ்வீட் மிக்சர் வாங்கிக்கறேன். நீ எதுவும் பேசி பேசி மாட்டிக்காத." என்றான்.
"உன் நினைப்பாதான் இருக்கு சாரதி." அவளுடைய குரல் மென்மையானது.
"அழகழகா டிரஸ் போட்டு உன் கண்ணு முன்னாடி நிற்கலையேன்னு." அந்த வார்த்தை சாரதியின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
"போட்டோஸ் பார்த்தேன். நிஜமா அழகாயிருக்க." லாவண்யாவின் கன்னங்கள் சூடாகின.
"சுத்தி போடு. இல்லன்னா... கல்யாண வீட்டுல தங்கச்சியைக் கட்டித் தாங்கன்னு எவனாவது வந்து நிக்கப் போறாங்க." என்றான்.
"வாயை வச்சிட்டு சும்மாயிரு சாரதி!" என்று அவள் சிரித்தபடி கோபப்படுவது போல நடித்தாள்.
அவன் மறுபுறம் சிரித்தான். அந்த நேரத்தில் கீழிருந்து படிக்கட்டில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்டது.
லாவண்யா உடனே திரும்பிப் பார்த்தாள். "யாரிடம் டி பேசற?" என்று அலமேலுவின் குரல் கேட்டது.
அந்த குரலைக் கேட்டவுடனே லாவண்யாவின் முகத்தில் இருந்த புன்னகை ஒட்டு மொத்தமாய் மறைந்து, பதற்றம் வந்து அமர்ந்தது.
போனை சற்றே விலக்கிப் பிடித்தபடி, ''சா...சா..'' என்றவள் எச்சி விழுங்கி, "ர..ரதியிடம் பேசறேன்... ரதி" என்று அவள் தடுமாறினாள்.
அலமேலு அவளைப் பார்த்தபடி நின்றாள்.
அந்த ஒரு நொடி லாவண்யாவுக்கு கீழே இருந்த வீட்டின் எல்லா சத்தங்களும் மறைந்துப் போனது போல இருந்தது.
அவளுடைய காதல் ரகசியமாக இருந்தாலும், அவளுடைய முகத்தில் மட்டும் அதை மறைக்க முடியாத அளவுக்கு ஏதோ ஒன்று தெரிந்துக் கொண்டிருந்தது.
அலமேலுவோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு, லாவண்யாவை நெருங்கி வந்தார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 28)
ம்.. லவ் பண்றவங்களுக்கு
ஃப்ரெண்ட்டா இருந்தால்
'ஃப்ரீ புரொஃபஷனல் கொரியர் சர்வீஸா' தான் மாறியாகணும்.
அட ராமா..! மாட்டிக்கிட்டாளோ ?கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு டிக்குத் தாளம் என்கிற மாதிரி அத்தனை முன்னேற்பாடோட மாடியில
உட்கார்ந்திருந்தும் சட்டுன்னு
பொய் சொல்லி சமாளிக்க முடியாமல் செமையா மாட்டிக்கிட்டாளோ...?
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-49-50
1 hour ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-48
2 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-47
2 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
2 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
2 hours ago
- 26 Forums
- 377 Topics
- 1,918 Posts
- 1 Online
- 442 Members
