Forum

நின் பார்வை தவமல்லவ...
 
Notifications
Clear all

நின் பார்வை தவமல்லவா!-5

2 Posts
2 Users
0 Reactions
111 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#129]

அத்தியாயம்-5

வீட்டிலிருந்தே செழியன் சொல்லி அழைத்து வந்ததாதால், சுகந்தி வாய் திறவாமல் ஜானகியிடம் முகமலர்ந்து உள்ளே நுழைந்தார்.

    "வீடு ரொம்ப அழகா இருக்கு" என்று சுகந்தி பேச்சை ஆரம்பித்தார்.
  வீட்டில் மருத்துவமனைக்கு அருகே மருந்துக்கடை என்பதாலும், சில பொருட்கள் மருந்துக்கடையில் இலவசமாக கிடைக்க பெறும்‌. அதில் சிலதை வர்ஷினி வீட்டில் வைத்திருந்தாள். பஸ்ட் எயிட் பாக்ஸ், பிபி பிரஷர் பார்க்கும் கருவி. ஸ்டதஸ்கோப், காய்ச்சல் காட்டும் தெர்மாமீட்டர் எல்லாம் அவளிடமும் இருந்தது.

   "ஒரு டாக்டர் வீட்ல என்ன இருக்குமோ எல்லாம் இருக்குடா" என்று சுகந்தி பேச, மாப்பிள்ளையாக வரப்போகின்றவன் டாக்டர் என்பதால் அவ்வாறு பேசுவதாக வர்ஷினி நினைத்துக்கொண்டாள்.

  பட்டுப்புடவை அணிந்து அடக்கவொடுக்கமாய் எதிரே வீற்றிருந்த செழியனை பார்வையிட தயங்கி தடுமாறினாள்.

  செழியனோ 'நான் அவங்களிடம் தனியா பேசலாமா?" என்று அவனாக முன் வந்தான்.‌

  சுகந்தியோ முட்டைக்கண்ணை உருட்ட, கிருபானந்தன் "டாக்டருங்க இல்லையா... வேலையை எப்படி மாற்றலாம்னு பேசிக்கவா இருக்கும். நாம மத்ததை பேசலாம்" என்று மைந்தனை தனியாக பேச போக கூறினார்.
வரதராஜனும் மகளை "பார்த்தும்மா ஊர்காரங்க பார்த்தா ஏதாவது பேசுவாங்க. நம்ம தோட்டத்து பக்கம் வேப்பமரத்தாண்ட பேசுங்க" என்று அனுப்பினார்.

   வர்ஷினியை பின் தொடர்ந்து செழியனை பேச வந்தான்.‌

   "என்ன பத்தி உங்கப்பா என்ன சொல்லியிருப்பார்னு தெரியலை. பட் என்னோட தரப்பில் சொல்லிடலாம்னு தான். அதோட எனக்கு உங்க நம்பர் வேண்டும். உங்கப்பா பார்க்க பிரெண்ட்லியா இருக்கார். ஆனா எங்கம்மா அப்பா எதிரே நம்பர் கேட்டா அம்மாவுக்கு பிபி ஏறும். அவங்க பழைய காலத்து ஆளு. பையன் டாக்டர் படிச்சிருக்கான். ஏதோ நல்ல சம்பளம், பட்டினத்துல இருக்கான். டாக்டர்னா மரியாதை மதிப்பு தரணும். அம்மானு இல்லை அப்பாவும் அப்படி தான்‌.

அதனால் தான் சாதாரணமா ஆர்ட்ஸ் குரூப்பே போதும்னு இருந்த நான் பிளஸ் டூ வந்தப் பிறகு தான் டாக்டர் படிக்கணும்னு முடிவே எடுத்தேன். என்னால முடியும் என்னும் போது டாக்டராக மெனக்கெட்டேன். அவங்களும் உங்க அப்பா மாதிரி தான் கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டாங்க.
  இப்ப எனக்கு ஊரறிய கல்யாணம் செய்யணும் அவ்ளோ தான் அவங்க ஆசை.
  அவங்க கூடவே இருக்கணும்னு கூட எதிர்பார்க்கலை. பிகாஸ்... நான் சென்னையில் டூயூட்டி இருப்பதால் நீயும் அங்க என் கூட வந்து வேலை பார்த்தா போதும் என்பது அவங்க எண்ணம்.

இந்த கூட்டு குடும்பம், இதே கிராமத்துல நீ இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.'' என்று பேசினான். ஏனெனில் டாக்டர் பெண் இதே இடத்தில் கூட்டுகுடும்பமாய் வாழ வேண்டுமா என்று சலிப்படைய கூடாது என்றும், மீதி வாழ்வு செ ன்னையில் தன்னோடு என்பதை புரிய வைக்கும் விதமாக பேசினான்.

வர்ஷினிக்கு பதிலுக்கு என்ன உரைப்பது என்று அறியாது அவனை தயங்கி பார்வையிட்டவள் மலைத்து போனாள்.

  வேப்பங்காற்றில் அசைந்திடும் கேசம், தன்னையே ரசனையாக துளைக்கும் விழிகள், நீண்ட நாசி, நறுக்கிவைத்த மீசையில், இளஞ்சிவப்பு உதடு, ஏற்கனவே ஆறடிக்கு தென்னை மரம் போல நின்றவனின், மிடுக்காக உடையும் அவனை நாளெல்லாம் ரசிக்க தூண்டியது.

"நீ எதுவும் பேசமாட்டேங்கற? " என்றதும் செழியன் மீது பதித்த பார்வையை தாழ்த்தினாள்.

  "ஆக்சுவலி... உன்னை இப்பவே தாலி கட்டி கூடவே அழைச்சிட்டு போயிடலாமானு ஆசையா இருக்கு. நல்லா பொம்மை கணக்கா இருக்க‌. அதிலையும் இந்த பச்சை பட்டுபுடவை  குட்டி குட்டி பிளிட்ஸ் வச்சி, இப்பவே கல்யாண பொண்ணு மாதிரி இருக்க. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? நான் அதை கேட்கவேயில்லை." என்று வழிந்தான்.

  "உங்களை பிடிக்காம போகுமா?" என்று மட்டும் முத்து போல பேசினாள்.

  "எனக்கு உன்னோட நம்பர் வேண்டும்" என்று கேட்க மடமடவென ஒப்பித்தாள்.

"டாக்டர் நிறைய பேச முடியாது அதுயிதுன்னு நிராகரிக்காம கிடைக்கற கேப்ல பேசுவோம்" என்று கூற சம்மதமாய் தலையாட்டினாள்‌.

"உங்கம்மா.. எட்டியெட்டி பார்க்கறாங்க. மீதி போன்ல பேசுவோம் வர்ஷு" என்றான்.‌

  வெட்கப்பட்டு சரியென்றா வர்ஷினி உரைத்தாள்.
 
  அறைக்குள் நகை பணம் பற்றிய பேச்சும், யாருக்கு எந்தெந்த கல்யாண செலவும், இந்த நாளை பரிசம் போட்டதாக எடுத்துக் கொண்டு பூவை சூடினார் சுகந்தி.
 
  செழியனுக்கு லீவு கிடைப்பது அரிதாக, நேரடியாக திருமண நாளை குறித்தனர்.

  சொந்தப்பந்தம் முன்னே பேசுவோமே என்று வரதராஜன் அபிப்ராயம் கூற, கிருபானந்தனோ "ஏற்கனவே பையன் சென்னையில் தனியா ஒண்டி கட்டையா வாழறான். சட்டுபுட்டுனு கல்யாணம் செய்தா பொண்ணுக் கூட குடித்தனம் செய்வான். மருமகளும் வாய்க்கு ருசியா சமைச்சி போடுவாங்க" என்று பேசி முடிவெடுத்திருந்தனர். 

  சுகந்திக்கு பொன் விற்கும் விலைக்கு தங்கள் வசதிக்கு, ஜானகி போடுவதாக சொன்ன நகையே மலைக்க வைத்தது. மேற்படி வேலைக்கு எதில் சென்று வருகின்றாள்? காலையில் கிளம்பும் நேரமும், திரும்பும் நேரத்தையும் கேட்டுக் கொண்டார்கள்.
 
   பேச்சும் பொத்தம் பொதுவாய், ஹாஸ்பிடல் பக்கத்துல மெடிக்கல் கடை சௌகரியம்' என்று சுகந்தி பேச,  ஜானகி ஆமோதிப்பாய் புன்னகைத்தார்.

இனிப்பும் காரத்தையும் சாப்பிட்டுவிட்டு கொண்டு வந்த மலர்சரத்தை வர்ஷினி தலையில் சூடி கிளம்பினார்கள்.

"கல்யாணத்துக்கு பிறகு நம்ம மக சென்னைக்கு போயிடுவாளாங்க?" என்று ஜானகி வருத்தப்பட, "அட டாக்டர் மாப்பிள்ளை அமையறதே அதிசயம். இதுல நல்ல பையனா இருக்கான். இப்ப எல்லாம் டாக்டர் படிச்ச பசங்களை வச்சி பேரம் நடந்தி வரதட்சனையா எக்கசக்கம் பிடுங்கறாங்க. அந்த தம்பி எங்க வசதி இது தான், அதனால் பொண்ணு எனக்கு பிடிச்சிருக்கு கட்டி வச்சா போதும்னு பேசிட்டு போறார். இதுக்கு மேல வேற என்ன வேண்டும். சென்னை என்ன அடுத்த நாட்டுலயா இருக்கு?" என்று வரதராஜன் ஆறுதல்படுத்தினார்.

ஜானகி அப்படியிருந்தும் முக்குறிந்தார். "அந்தம்மா சுகந்தி நல்லா தான் பழகறாங்க. ஆனாலும் என்னமோ நெருடுதுங்க'' என்று கவலைக் கொண்டார்.

   "உனக்கு இப்படியொரு கலக்கம் இருந்தா மாப்பிள்ளையை பற்றியும் ஊர்ல அவங்க குடும்பத்தை பத்தியும் விசாரிச்சிடறேன் ஜானகி" என்று கல்லூரி பேராசிரியராக முடிவெடுத்தார்.

    இதே முடிவை கிருபானந்தன் அல்லது சுகந்தி எடுத்திருக்கலாம். ஆனால் டாக்டர் வர்ஷினி எம்.பி.பி.எஸ் என்ற பலகையை தாங்கியதை பார்த்து கடந்து விட்டது அவர்களது அறியாமை.

   வரதராஜன் அடுத்த நாளே தனக்கு தெரிந்தவர் மூலமாக செழியனை பற்றி விசாரித்தனர்‌. நல்லவன் பண்பானவன், எளிமையானவன், நல்ல டாக்டர், பழகுவதில் இனிமையானவன் என்று கேட்ட இடத்தில் எல்லாம் தகவல் தந்தனர்.

திருநெல்வேலியிலிருந்து நாகர் கோவிலில் உள்ள செழியன் ஊருக்கு வந்து, சுகந்தி கிருபானந்தன் வீட்டிற்கு அருகாமையில் குடும்பத்தை பற்றி விசாரிக்க, "பையன் டாக்டர், அந்தம்மா கொஞ்சம் அப்படியிப்படி, யாராவது உரண்டை இழுத்தா, பதிலுக்கு தெருவே திரும்பி பார்க்கும் விதமா 'லபோதிபோ'னு கத்தும். அந்த பஞ்சாயத்தை எல்லாம், செழியனோட அப்பா கிருபானந்தன், மன்னிப்பு கேட்டு, கலைத்து நல்லவிதமா மாத்தி பொஞ்சாதியை கூட்டிட்டு போயிடுவார். மத்தபடி அவங்க நல்லவங்க' என்று கூறினார்கள்.

சுகந்தி பற்றி சற்று பயம் கவ்வினாலும், மாமியார் என்றாலே சில பிக்கல் பிடுங்கல் உண்டு. அதோடு செழியனோடு சென்னைக்கு சென்றிடுவதால் பெரிதாக தினசரி சண்டைக்கு வாய்ப்பு இருக்காது. என்றாவது தானே அதை மகளே கவனித்துக் கொள்வாள். அதோடு பையன் நல்லவன், டாக்டர் என்பதால் மணமுடிக்க பூரண சந்தோஷத்தோடு கல்யாண வேலையை ஆரம்பித்தார்.

   மறுபக்கம் செழியன் வர்ஷினியோடு காதல் பறவையாக கதை அளந்தான்.‌

  மருத்துவம் பற்றியோ எந்த காலேஜ், ஹாஸ்பிடல்ல பற்றியோ பேசுவதை முதிலிலேயே செழியன் தவிர்த்துவிட்டான்.‌
  
  நான் மெடிஸன், நீயும் மெடிஸன் பத்தி பேசினா லைப் போர் அடிக்கும். ஹாஸ்பிடல் டாக்டர் மருந்துமாத்திரை இதை தாண்டி பேசலாமா? நாம லவ் பண்ணலாமா?' என்று ஆசையாக கேட்டு அவளையும் மனம் திறக்க வைத்து பேசினான்.

அதன் வெளிப்பாடு, வர்ஷினி மருத்துவம் பயின்றதாகவே செழியன் அறியலில்லை.
   நம்ம ஆப்டர் மேரேஜ் வீட்டுக்கு வந்ததும் குளிச்சிட்டு, ஒன்னா சமைச்சி, ஒன்னா சாப்பிட்டு ஒன்னா பிளேட் வாஷ் பண்ணிட்டு ஒன்னா தூங்குவோம்.

  எனக்கு பையன் பொண்ணு இரண்டு குழந்தை வேண்டும்.' என்று பேச, "எத்தனை வயது இடைவெளியில் பையன் முதல்ல பிறக்கணுமா? பொண்ணு முதல்ல பிறக்கணுமா? என்று வர்ஷினியும் கேட்கும் அளவிற்கு குறுகிய கால கட்டத்தில் ஒருமனதாக மாறியிருந்தனர். நீயன்றி நான் இல்லை, நான் இன்றி நீயும் இல்லை என்ற ரீதியில் தான், பத்திரிக்கையில் பெயர் போடும் நாள் வந்தது.

    கிருபானந்தனிடம் தான் வரதராஜன் முதலில் வந்து "மாப்பிள்ளை சென்னையில் கல்யாணம் வைக்கறதா சொல்லிருந்தார். வெங்கடாசலம் மண்டபமா வெங்கி கல்யாண மண்டபமா? குழப்பமா இருக்கு?" என்று கேட்க வந்தார்.

  செழியன் ஊர்ல தான் இருக்கான். இப்ப வந்துடுவான். நீங்களே கேளுங்க" என்று கூறிவிட்டார்.

  அதுவரை அங்கிருக்கும் கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு வரதராஜன் சென்றார்.

  வரதராஜன் கோவிலில் மகளின் திருமணத்தை நல்லபடியாக முடித்து வைக்கும் பொருட்டு வேண்டினார்.

  செழியனும் அவரருகே வந்து சேர்ந்தான்.‌

சாமி கும்பிட்டு இளப்பாரும் விதமாக ஒரத்தில் அமர்ந்தனர்.‌

  "நானே சந்திக்கணும்னு நினைச்சேன் மாமா. நீங்களே வந்துட்டிங்க. கல்யாண பத்திரிக்கை அடிக்க மண்டம் பேரு தெரியலைனு கேட்டதா அப்பா சொன்னார்." என்று கேட்டான்.

  "ஆமா மாப்பிள்ளை... இந்த பக்கம் வர்ற வேலை இருந்தது. அப்படியே சம்பந்தியிடம் கல்யாண மண்டபம் பெயர்ல குழப்பம் இருந்ததா நேர்ல கேட்டுடலாம் வந்தேன்." என்று பத்திரிக்கைக்காக எழுதி வைத்ததை காட்டினார்.‌

  செழியன் அதை வாங்கி வாசித்து, "வெங்கி கல்யாண மண்டபம்' தான் மாமா." என்று திருத்தி கொடுத்தவன் கண்ணில் வர்ஷினி பெயர் பார்த்து வருடினான்.‌
பக்கத்தில் எம்.பி.பி.எஸ் என்ற பெயருக்கு பதிலாக பி.பார்ம் என்று இருக்கவும், "மாமா... வர்ஷினி எம்.பி.பி.எஸ் எம்.டி தானே வரணும். இதென்ன பி.பார்ம் போட்டிருக்கு?' என்று கேட்டான்.

  "என் மக பி.பார்ம் தானே மாப்பிள்ளை‌ படிச்சிருக்கா. அவ வேலை செய்யற மெடிக்கல் ஷாப்புக்கு பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல்ல தான் வர்ஷினினு டாக்டர் இருக்காங்க." என்று இலகுவாய் கூறினார்.

  ''மாமா அப்ப வர்ஷினி டாக்டருக்கு படிக்கலையா?" என்று அதிர்ந்தான்‌.

  அதை கேட்டு வரதராஜனோ "என்ன மாப்பிள்ளை இப்படி கேட்கறிங்க. அவ மெடிக்கல் ஷாப்ல வச்சியிருக்கா." என்று குறிப்பிட்டார்.

  செழியனோ ஜாதகத்தை போட்டோ எடுத்து வைத்ததால் அதை போனில் கேலரியிலிருந்து எடுத்துக்காட்டி, "இதுல டாக்டர்னு போட்டிருக்கு" என்று எடுத்து காட்டினான்.

"தம்பி.. அம்மா அப்பா பெயர்ல விஸ்வநாதன் ஜானகினு இருக்கு பாருங்க. இது நம்ம வர்ஷினி ஜாதகம் இல்லை." என்று அவரிடமிருந்த மகள் வர்ஷினி ஜாதகத்தை எடுத்து காட்டினார்.‌

  அப்பா பெயரில் விஸ்வநாதன் என்றிருக்க, குலதெய்வ பெயராக வரதராஜன் இருக்குமென்றா அல்லவா நினைத்து விட்டான்.

  செழியன் முகம் வெளிறியது. அதை விட, வரதராஜனோ "என்ன மாப்பிள்ளை இப்ப வந்து இப்படி கேட்கறிங்க. உங்களுக்கு முன்ன தெரியாதா? என் மக டாக்டர் இல்லைனு. அச்சோ.. டாக்டர் பையன் டாக்டர் பொண்ணு என்பதால தான் வர்ஷினியை கல்யாணம் செய்ய வீடு தேடி வந்திங்களா? இப்ப என் மக அப்படியில்லைன்னா என்னாகும்.

  என் பொண்ணுகிட்ட தினமும் பேசுவிங்களே அவகூட சொல்லலையா?" என்று கண்ணீரை சுரந்து புலம்பினார்.‌

  "கல்யாண பத்திரிக்கை வரை வந்துடுச்சே.. கல்யாணம் நின்றா அசிங்கமாச்சே... அய்யோ.. வெளியே தெரிந்தா என்னவோ நாங்க உங்களை டாக்டர் பொண்ணுனு சொல்லி மோசடி செய்ததா இல்லையா பேச்சு வரும்" என்று இடைவிடாமல் பதறி அழுதார்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்


 
Posted : July 3, 2026 3:52 am
(@crvs2797)
Posts: 102
Estimable Member
 

அட ராமா!  பெண்ணோ பெயர் மட்டுமில்லை, அம்மாவோட பெயரும் தான் ஒரே மாதிரி இருக்கு, அதான் ஓரேயடியா குழம்பிட்டாங்க போல.

 

😔😔😔

CRVS (or) CRVS 2797


 
Posted : July 4, 2026 11:36 am

Scroll to Top