வெளிச்சம் - 27
அத்தியாயம் 27
இத்தனை நாள் வாழ்ந்த வீட்டை விட்டு, தன்னை வளர்த்த பெற்றோரை விட்டு, தனது ஊரை விட்டு, ஏன் இந்த நாட்டை விட்டே பயணம் செய்கிறாள் சிவன்யா.
இரண்டு நாட்கள் பிறந்த வீட்டாரும் புகுந்த வீட்டார் அவள் தேவைகளை உணர்ந்து நன்கு கவனித்து, அவளது திருமண வாழ்க்கையை தொடங்குவதற்காக, அவன் கணவன் இருப்பிடமான துபாய்க்கு விமானம் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.
விமானத்தில் தன் இருக்கையில் வந்து அமர்ந்த சிவன்யாவிற்கு இத்தனை நாட்கள் பெற்றோர் முன் அழுது விடக் கூடாது என்று அடக்கி வைத்திருந்த அழுகை இப்பொழுது கட்டுப்பாடு இன்றி வந்தது.
அவள் அழுவதை கண்ட பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி, "முதல் முறை விமான பயணமா?" என்று கேட்டு "பயப்படாமல் இருமா, ஒன்றும் பிரச்சனை இருக்காது" என்று ஆறுதல் கூறினார். விமானத்தில் பயணம் செய்ய பயப்படுகிறாள் என்று நினைத்து.
தன்னை சமாளித்துக் கொண்ட சிவன்யா "இல்லை ஆண்டி, அப்பா அம்மாவை விட்டு செல்கிறேன் அல்லவா! அதுதான் அழுதுவிட்டேன்" என்று சொல்லி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
பின்னர் திருமணம் முடிந்து பெற்றோரை விட்டு பிரிந்து கணவன் இருப்பிடம் செல்லும் தன் கதை முழுவதையும் சொல்லி அவரைப் பற்றி விசாரிக்க, அவருடைய கணவரும் இங்குதான் வேலை செய்வதாகவும் வருடம் ஒருமுறை அவரை பார்ப்பதற்கு தான் வந்து விடுவதாகவும் கூறனார். அந்தப் பயணத்தில் சிவன்யாவிற்கு ஒரு நல்ல நட்பு கிடைத்தது.
அவருடன் பேசிக்கொண்டு இருந்தாலும் கணவனை காணும் ஆவல் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வெகுநாள் கழித்து பார்க்கப் போகிறாரே! ஆவலாக தன்னிடம் வந்து பேசுவாரா? தன்னை லேசாக அணைத்து கொள்வாரா? என்று வெகு நாள் கழித்து கணவனை காணும் இளம் மனைவிக்கு வரும் எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் வந்து சென்றது.
அதே கற்பனையுடன் அவள் அமர்ந்திருக்க, விமானமும் துபாய்யை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் பரபரப்பாகவும் அவசரமாகவும் வெளியேறினர். அவளுடன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த பெண்மணியும் அவளுடன் பேசிக்கொண்டே தூரத்தில் நின்ற தன் கணவனை பார்த்து கையை காண்பித்து விட்டு அவளிடமும் மீண்டும் பார்ப்போம் என்று கூறி விடை பெற்றார்.
திருமணம் முடிந்த நாளிலிருந்து இதுவரை தன்னுடன்
அதிகம் பேசாவிட்டாலும் இன்று நாட்டை விட்டு வெகு தொலைவில் வந்திருப்பதால் தன்னை அழைக்க தன் கணவன் வருவான் என்று ஆவலுடன் காத்திருந்தாள் சிவன்யா.
பரபரப்பாக அங்கும் இங்கும் செல்லும் மக்களை வேடிக்கைப் பார்த்தபடியே இருந்தாள். நேரம் கடந்தது. தேவ் வந்தபாடில்லை.
நேரம் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குள் பயம் வர ஆரம்பித்தது. வரவில்லை என்றால் அவன் இருக்கும் இடத்திற்கு எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அவள் ஃபோனிலிருந்து இப்பொழுது யாருக்கும் ஃபோன் செய்ய முடியாத நிலைமை. விமான நிலையத்தில் உள்ள உதவி செய்வோர் மூலம் ஏதும் உதவி பெற்றுக் கொள்ள முடியுமா? என்று பார்ப்போம் என்று திரும்பி விமான நிலையத்திற்குள் செல்ல பார்த்தாள்.
அப்பொழுது அவளின் முன் வேகமாக ஓடி வந்து நின்றான் ஒருவன். கிட்டத்தட்ட 35 வயது இருக்கும். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளின் முன் நின்று, "சாரி சிஸ்டர், கொஞ்சம் லேட் ஆயிடுச்சு" என்றான்.
சிவன்யாவோ அவனை புரியாமல் பார்க்க,
"ஓ, சாரி. என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை இல்லையா?" என்று சொல்லி, "என் பெயர் உன்னிகிருஷ்ணன். நான் தேவ்வோட ஃப்ரெண்ட்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, "நீங்கள் சிவன்யா சிஸ்டர் தானே?" என்று அவளைப் பார்த்து கேட்டான்.
அவனது பேச்சிலேயே அவன் மலையாளி என்பதை கண்டுகொண்டு ஆமாம் என்று தலையாட்டினாள்.
"உங்களை அழைத்துச் செல்வதற்கு தான் வந்திருக்கிறேன். தேவ் தான் என்னை அனுப்பினான்" என்றான் அவளின் பெட்டியே இழுத்துக் கொண்டு.
அவளோ தெரியாத ஒருவருடன் எப்படி செல்வது என்று தயங்கி அங்கேயே நிற்க, தன் மொபைலில் இருந்து தேவ்வுடன் தான் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, "அவன் ஒரு முக்கிய வேலையாக இருக்கிறான். அதனால் தான் உங்களை அழைத்து வர என்னை அனுப்பினான்" என்று கவலையாக கூறினான்.
அவனது கவலை முகத்தை பார்த்து தாம் அவரை நம்பவில்லை என்று வருந்துகிறார் போல என்று நினைத்து, "இல்லை அண்ணா. அவர் எதுவும் சொல்லவில்லையே!" என்றாள் தயங்கி.
"பயப்படாமல் என்னுடன் வாமா, உன்னை எதுவும் செய்து விடமாட்டேன்" என்று லேசாக புன்னகைத்து அவர்கள் செல்வதற்கு டாக்ஸி புக் செய்தான்.
பின்னிருக்கையில் அவள் கூடவே ஏறி அமர்ந்த உன்னிகிருஷ்ணனை எவ்வளவு தூரம் நம்புவது என்று சிவன்யாவிற்கு தெரியவில்லை. கலக்கமாகவே அமர்ந்திருந்தாள்.
வாகனம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதும், "இருக்கும் போக்குவரத்து நெரிசலில் எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆகும்" என்று சிவன்யாவிடம் சொல்லிவிட்டு தன் சட்டை பையில் இருந்து ஒரு சிம்கார்டை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.
என்ன என்று அவள் பார்க்க, "சிம்கார்டு உங்கள் ஃபோனில் போட்டுக்கோங்க" என்றான்.
தயக்கத்துடன் அவள் வாங்கி தனது போனில் போடுவதற்கு முயற்சி செய்ய, அவனே வாங்கி முறைப்படி போட்டுவிட்டு, பழைய சிம்மை எடுத்து அவள் கையில் கொடுத்து "பத்திரமா வச்சுக்கோங்க" என்று சத்தமாகவும் "சீக்கிரம் யூஸ் ஆகும்" என்று வாயுக்குள் முணங்கியபடி சொன்னான்.
பின்னர் சிறிது நேரம் கழித்து "இப்பொழுது ஃபோன் செய்து யாரிடம் வேண்டுமென்றாலும் பேசுங்கள்" என்று அவள் கையில் ஃபோனை கொடுத்துவிட்டு "சென்னையில் இருந்து துபாய் வருவதற்கு யோசிக்கவில்லை ஆனால் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு போவதற்கு எவ்வளவு யோசனை!" என்றான் அலட்சியமாக.
முதலில் அவள் போன் செய்தது தேவ்விற்குத்தான். அவள் ஃபோன் செய்ததும் எடுத்த தேவ், "சேட்டா வந்துட்டான் அல்லவா? அவன் கூட வீட்டுக்கு வா" என்று சொல்லிவிட்டு அவள் அதற்கு பதில் சொல்வதற்கு முன்பே ஃபோனை வைத்து விட்டான்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த உன்னிகிருஷ்ணன் நக்கலாக சிரிப்பது போல் தோன்றியது சிவன்யாவிற்கு. மேலும் அது கலக்கத்தை தர அடுத்து தனது தந்தைக்கு ஃபோன் செய்து பத்திரமாக இறங்கி விட்டதாகவும், அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதால் அவரது நண்பனை என்னை அழைத்து வர அனுப்பியிருக்கிறார் என்றாள்.
அதைக் கேட்டதும் சிவநேசனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பாசமாக வளர்த்த மகளை தனியாக பிரதேசம் அனுப்பவதற்கே மிகவும் வருத்தப்பட்டார். எப்படியும் மருமகன் வந்து அழைத்துச் செல்வார் என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டு இருந்தார். ஆனால் தாலி கட்டிய மனைவியை வந்து அழைக்க கூட அவரால் முடியவில்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது.
"உன்னை அழைத்துச் செல்ல வந்த தம்பி பக்கத்தில் இருக்குதாமா?" என்றார். அவள் ஆமாம் என்றதும் "அவரிடம் ஒரு நிமிடம் ஃபோனை கொடு" என்றார். சிவன்யாவும் உன்னிகிருஷ்ணனிடம் ஃபோனை நீட்டி, "அண்ணா, அப்பா உங்களிடம் பேச வேண்டுமாம்" என்றாள்.
அவனும் உடனே வாங்கி சிவனேசனுடன் பேசினான். அவருக்கு பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினான். இங்கு தேவ்வின் வீட்டில் அருகே தான், தானும் குடியிருப்பதால் உங்கள் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்றான். வீட்டிற்கு சென்றதும் சிஸ்டர் அவர் கணவருடன் உங்களுடன் பேசுவார் அங்கிள் என்று கூறி போனை வைத்தான்.
திருமணம் முடிந்து இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட தேவ் தன் தந்தையிடம் இப்படி பாசமாகவும் மரியாதையாகவும் பேசியதாக சிவன்யாவிற்கு தோன்றவில்லை. அவன் பேசி முடித்ததும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவன்யாவிடம் "என்ன சிஸ்" என்றான்.
ஒன்றுமில்லை என்று மறுப்பாக தலையாட்டி விட்டு "நீங்கள் அவருடன் வேலை செய்கிறீர்களா? ஒரே இடத்தில் தான் தங்கி இருக்கிறீர்களா? அவர் வேலை துபாயில் என்றார் ஆனால் தங்கி இருப்பது சார்ஜா என்றாரே! நீங்களும் அப்படித்தானா? என்று அவன் முகத்தை பார்த்தாள்.
"ஆமாம் சிஸ்டர், இருவரும் ஒரே இடத்தில் தான் வேலை செய்கிறோம். முதலில் ஒரு வீடு எடுத்து ஒன்றாக தங்கி இருந்தோம். எனக்கு அது கட்டுப்படி ஆகவில்லை. அதனால் நான் இப்பொழுது அவர் தங்கி இருக்கும் இடத்தின் அருகிலேயே ஸ்டுடியோ பிளாட் எடுத்து தங்கி இருக்கிறேன்" என்று தான் இங்கு வந்ததிலிருந்து தேவ்வுடன் நண்பனான கதையை சொல்ல ஆரம்பித்தான் உன்னிகிருஷ்ணன்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 26
1 day ago
-
வெளிச்சம் - 25
2 days ago
-
வெளிச்சம் - 24
2 days ago
-
வெளிச்சம் - 23
2 days ago
-
வெளிச்சம் - 22
2 days ago
Currently viewing this topic 1 user ( Arulmozhi Manavalan ) and 25 guests.
- 25 Forums
- 232 Topics
- 844 Posts
- 27 Online
- 330 Members
