வெளிச்சம் - 24
அத்தியாயம் 24
சிவன்யா நாளை சென்னைக்கு செல்வதால் அவளுக்கு பிடித்தது போல் சமையல் செய்ய நினைத்த பார்வதி "நாளைக்கு உனக்கு என்ன வேண்டுமோ சொல். அதையே அத்தை சமைக்கிறேன்" என்றார்.
"நீங்கள் எது செய்தாலும் எனக்கு பிடிக்கும் அத்தை" என்று சிவன்யாவும் கூற,
"நானும் இத்தனை வருடம் இந்த வீட்டில் தான் இருந்தேன். என்றாவது உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு சமைத்து இருக்கிறீர்களா?" என்று தாயை முறைத்தாள் நளினி.
"ஆமாம் உனக்கு பிடிக்காததைத்தான் நான் சமைத்தேன் பார். ஒவ்வொன்றும் உனக்கு பிடித்ததாக தானே பார்த்து பார்த்து செய்தேன். இப்ப என்னன்னா நீ இப்படி பேசுற?" என்று மகளின் கூற்றில் வருத்தமான பார்வதியை அணைத்துக் கொண்ட நளினி,
"அம்மா சும்மா கலாட்டாவுக்கு சொன்னேன். அதற்கு ஏன் நீங்கள் இப்படி வருத்தப்படுகிறீர்கள்" என்று அவரை சமாதானம் படுத்தினாள்.
பார்வதியும் சொன்னது போலவே இரவிற்கு சிவன்யாவிற்கு என்ன பிடிக்குமோ அதை அனைத்தையும் சமைத்தார். இரவு வீட்டிற்கு வந்த நளினியின் கணவனுடன் அனைவரும் பேசி மகிழ்ந்தனர்.
எல்லோரும் சந்தோசமாக இருக்கும் பொழுது, "தேவ்வும் இப்போது இங்கிருந்தால் நன்றாக இருக்கும்" என்று பார்வதி கவலையாக கூறினார்.
"நீங்க கவலைப்படாதீங்க ம்மா. அண்ணனுக்கு தான் இங்கு வருவதற்கு பிடிக்கவில்லை. முதலில் அண்ணி துபாய் போகட்டும். அதன் பிறகு நம்ம எல்லோருமே அங்கு போய் அண்ணனுடன் இருப்போம், சரியா? வருந்தாதீர்கள்" என்று தாயிடம் கூறினாள் நளினி.
"பாத்திங்களா மாப்பிள்ளை? துபாய்க்கு போறதிலேயே குறியாக இருக்கிறாள்" என்று மாப்பிள்ளையிடம் குறைபட்டு கொண்டார் பார்வதி.
அவனும் சிரித்துக்கொண்டே, "நாங்களும் ஒரு பிளான் வைத்திருக்கிறோம் அத்தை. ஒரு இரண்டு மூன்று மாதம் கழித்து துபாய் சென்று வரலாம் என்று" என்றான் புன்னகையுடன்.
இப்படியாக எல்லோரும் பேசிக் கொண்டு உறங்க சென்றனர். மறுநாள் காலையில் நளினியின் கணவன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட, பரபரப்பாகிவிட்டார் பார்வதி.
"அத்தை நீங்க சாதாரணமாக இருங்கள், ஏன் இப்படி டென்ஷனா இருக்கிறீங்க?" என்று தன் மாமியாரிடம் கேட்ட சிவன்யாவும், திரும்ப இங்கே வரமாட்டோம் என்பது போல, இந்த ஒரு மாதத்தில் அவள் தங்கியிருந்த இந்த வீட்டை ஒவ்வொரு இடமாக சென்று பார்த்து பார்த்து வந்தாள்.
"அண்ணி, எப்படியும் அண்ணனுக்கு லீவு இருக்கும்பொழுது நீங்கள் இங்குதான் வருவீங்க, போதும் வீட்டைச் சுற்றிப் பார்த்தது. வந்து என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருங்கள்" என்றாள் நளினி .
"உன்னை வைத்துக்கொண்டு ஒரு வேலையும் செய்ய முடியாது" என்று புழம்பிப் படி அவளின் அருகில் வந்து அமர்ந்தாள் சிவன்யா. அதன்பிறகு பெண் பிள்ளைகள் இருவரும் பேச்சிலேயே இருக்க பெரியவர்கள் இருவரும் சமையல் வேலையை பார்த்தனர். சிவநேசனை அழைத்துக் கொண்டு தனது பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தார் விஸ்வநாதன்.
இப்படியே நேரம் கடக்க சாயங்காலம் அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. நளினியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அவளை சமாதானப்படுத்துவதே சிவன்யாவிற்க்கு பெரிய வேலையாக இருந்தது.
நளினி அழுவதை கண்ட விஸ்வநாதன். அனைவரும் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்ததை கைவிட்டார். மனைவியிடம் "அவள் ரொம்ப அழுதுகிட்டே இருக்கா, அங்க வந்தும் அழுது கொண்டே இருந்தால் கிளம்புவர்கள் மனசுக்கு கஷ்டமாக இருக்கும். அதனால நீங்க ரெண்டு பேரும் வீட்டிலேயே இருங்க. நான் மட்டும் சென்று மருமகளை வழி அனுப்பி விட்டு வருகிறேன்" என்றார்.
பார்வதிக்கும் சிவன்யாவை பிரிவது வருத்தமாக இருக்க, ஸ்டேஷன்ல வைத்து ரயில் கிளம்பும் பொழுது அவரும் அழுதுவிடுவாரோ என்ற கவலையில், சரி என்று சம்மதித்து விட்டார்.
சிவநேசன் மனைவி மகளுடன் பார்வதி மற்றும் நளினியிடமிருந்து விடைபெற்றினர்
ரயில் நிலையம் வந்ததும் "சிவன்யா ஊருக்கு செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள் சம்பந்தி. அவள் துபாய் செல்வதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் நாங்கள் வருகிறோம்" என்றார்.
சிவநேசனும் "சரிங்க சம்பந்தி" என்று கூற,
அவர்களை ரயில் ஏற்றி விட்டு ரயில் கிளம்பும் நேரம் மருமகளிடம் "பத்திரமா போயிட்டு வாம்மா, தினமும் ஃபோன் பண்ணு" என்று கூறி வழி அனுப்பினார்
சிவன்யாவும் நீங்களும் உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் அத்தையையும் பார்த்துக் கொள்ளுங்கள் மாமா என்றாள்.
அவரும் புன்னகையுடன் சரி என்று தலையாட்ட ரயில் கிளம்பி சென்னை நோக்கி சென்றது.
மறுநாள் காலை ரயில் சென்னையில் வந்து நின்றதும், அவர்கள் மூவரும் இறங்குவதற்கு தயாராக, அங்கே வந்தான் மேகநாதன்.
"அண்ணா" என்ற சிவன்யாவின் அழைப்பில், அவளை லேசாக அணைத்து விடுத்து "எப்படி இருக்கிற சிவன்யா?" என்றான்.
"நல்லா இருக்கேன்" என்று சொல்லும் பொழுதே அவள் கண்களில் கண்ணீர் வடிய, அவள் கண்ணீரை துடைத்து விட்ட மேகநாதன் "அழாதடா! அதான் நாங்க எல்லோரும் இருக்கிறோமே!" என்று சொல்லி அவர்களது பயணப் பைகளை தூக்கிக் கொண்டு காருக்கு சென்றான்.
சென்னை வீதியை ஆர்வமாக பார்த்துக்கொண்டு பயணித்தாள் சிவன்யா. பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தங்கையின் முகத்தை பார்த்துக் கொண்டே கார் ஓட்டிய மேகநாதன், "என்ன புதுசா சென்னையை பார்க்குற மாதிரி பார்க்கிற?" என்றான்.
"வெகு நாள் ஆனது போல் இருக்கிறது அண்ணா. அங்கே இவ்வளவு பேரூந்து இரைச்சல் இல்லை" என்றாள் சிவன்யா.
வீட்டிற்கு வந்ததும் தனது அறைக்கு சென்று சுற்றும் மற்றும் பார்த்தாள். பின்னர் காலை வேலைகளை முடித்து, குளித்து விட்டு வர காலை உணவு தயாராக மேஜையில் இருந்தது. இவள் வந்த பிறகு ஒவ்வொருவராக வர, பேசிக்கொண்டே காலை உணவை முடித்தனர்.
"சரி சிவன்யா" நன்றாக ஓய்வு எடு. நான் ஆபீஸ் போயிட்டு வந்துடறேன். அதன்பிறகு பேசலாம்" என்று சொல்லி மேகநாதன் வேலைக்கு கிளம்பி விட்டான்.
சிவநேசனும் ஓய்வெடுப்பதற்கு சென்று விட, அதன் பிறகு தாயும் மகளும் கதை பேசிக்கொண்டே இருந்தார்கள். சிவகாமியும் மகளிடம் ஊரில் நடந்தவற்றை பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.
அவர் மனதிற்குள் ஓடிக் கொண்டு இருந்த விஷயம், மகளும் மருமகனும் கணவன் மனைவியாக வாழ தொடங்கி விட்டார்களா? என்று. அதை மறைமுகமாக அவளிடம் கேட்க, மறுப்பலான பதில்களே சிகன்யாவிடம் இருந்து வந்தது. அதில் கவலை அடைந்தார் சிவகாமி. ஒருவேளை இன்னும் அவர்கள் தனித்தனியாக தான் இருக்கிறார்களோ! என்று.
பின்னர் அவளை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு தானும் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அன்றைய பகல் பொழுது அமைதியாக கழிய, சாயங்காலம் மேகநாதன் வந்ததும் மீண்டும் வீடு கலகலப்பாகியது.
அதன் பிறகு சிவன்யா துபாய் செல்வதற்கு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அனைவரும் கலந்தாலோசித்தனர். நாளை பாஸ்போர்ட் எடுப்பதற்கான ஆயத்தங்களை செய்வதாக கூறினான் மேகநாதன்
அதன் பிறகு பொதுவாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்க "ஆமாம், தேவ் ஃபோன் செய்தாரா?" என்று தங்கையை பார்த்தான்.
அதன் பிறகு தான் இதுவரை அவன் ஃபோன் செய்யாததே அவளுக்கு நினைவுக்கு வந்தது. மறுப்பாக தலையை மட்டும் ஆட்டினாள்.
"சொல்லாம கொள்ளாமல் ஊருக்கு போனவன், மனைவிக்கு போன் பண்ணி விஷயத்தை பேசணும் என்று கூட தெரியாதா?" என்றான் கோபமாக.
"டேய், அவர் இந்த வீட்டு மருமகன் இப்படி மரியாதை இல்லாமல் பேசக்கூடாது" எங்கே தன் கணவனை மரியாதை இல்லாமல் பேசினால், மகள் கோபித்துக் கொள்வாளோ என்று பதட்டமாக கூறினார் சிவகாமி.
"என்னம்மா மரியாதை வேண்டி கிடக்கு? கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை தனியாக விட்டுவிட்டு சென்றிருக்கிறோமே! என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சமாவது இருக்கிறதா?" என்று தாயிடம் கோபமாக பேசிவிட்டு, 'வந்துட்டாங்க மரியாதையா பேசு மண்ணாங்கட்டியா பேசு என்று' தனக்குள்ளேயே முணுமுணுத்தான்.
மகன் தனக்குள்ளேயே ஏதோ பேசிக் கொள்வதை கண்ட சிவநேசன், அவனின் கோபத்தை புரிந்து கொண்டு, "உன் கோபமும் நியாயம் தான் மேக நாதா! இருந்தாலும் பொண்ணு கொடுத்து இருக்கிறோம் இல்ல, அதனால கொஞ்சம் மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும்" என்று கூறி மகனை சமாதானமாக பார்த்தார்.
அண்ணனின் கோபத்தையும், தாயின் பதட்டத்தையும், தந்தையின் சமாதானத்தையும் கண்டு, "நீங்க எனக்காக எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம்" என்று பொதுவாக சொல்லிவிட்டு,
"அண்ணா, உனக்கு அவரை எப்படி கூப்பிட தோன்றுகிறதோ, அப்படியே கூப்பிடு. மரியாதை எல்லாம் மனசில் இருந்தால் போதும்" என்று தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு,
"அப்பா, பொண்ணு கொடுத்தால் நாம் அடிமையாகி விட்டோம் என்று அர்த்தம் இல்லை. எப்படி நீங்கள் அண்ணாவை கூப்பிடுகிறார்களோ! அப்படியே அவரையும் கூப்பிடுங்கள், ஒரு தவறும் இல்லை" என்று தந்தையிடம் சொல்லிவிட்டு,
"அம்மா, உங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்" என்று மூவரையும் பார்த்தாள் சிவன்யா.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 25
40 minutes ago
-
வெளிச்சம் - 23
1 hour ago
-
வெளிச்சம் - 22
3 hours ago
-
வெளிச்சம் - 21
3 hours ago
-
வெளிச்சம் - 20
5 hours ago
Recently viewed by users: Arulmozhi Manavalan 53 minutes ago.
- 25 Forums
- 225 Topics
- 804 Posts
- 12 Online
- 329 Members
