வெளிச்சம் - 23
அத்தியாயம் 23
சிவன்யாவை சென்னை அழைத்து செல்வதாக சிவநேசன் கூறியதும் அதிர்ந்தனர் விஸ்வநாதனும் பார்வதியும்.
"ஏன் இப்போ இவ்வளவு பதட்டமடைகிறீங்க? இதில் பதறுவதற்கு ஒன்றும் இல்லை! மாப்பிள்ளை ஊருக்கு சென்று விட்டார். அடுத்து இவளையும் மாப்பிள்ளையுடன் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யணுமல்லையா? அப்புறம் பாஸ்போர்ட் விசா என்று எல்லாம் எடுக்க வேண்டும். அதற்கு அவள் அங்கிருந்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும். அது மட்டும் அல்ல திருமணம் முடிந்து அவள் அங்கு வரவே இல்லை.
மருமகனுக்கு இன்னும் பத்து நாட்கள் விடுமுறை இருக்கிறதே, அதற்குள் ஒருமுறையாவது வந்து விடுவார் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அவராலும் வர முடியவில்லை அல்லவா? இவளும் ஊருக்கு சென்று விட்டால், மீண்டும் எப்பொழுது வருவாள் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. அதான், அதுவரைக்கும் அவள் எங்கள் வீட்டில் இருக்கட்டுமே!" என்று தயங்கி தயங்கி கூறி முடித்தார் சிவனேசன்.
அவர் கூறுவதும் நியாயமாகப்பட்டது விஸ்வநாதனுக்கு. "இதற்கு எதற்காக சம்பந்தி தயங்கி தயங்கி கேட்கிறீர்கள். இதில் மறுப்பதற்கு எங்களுக்கும் எந்த காரணமும் இல்லையே! சொல்லப்போனால் நான் உங்களிடம் மன்னிப்பு தான் கேட்க வேண்டும்" என்றார்.
பார்வதிக்கு மருமகளை தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் மகன் இங்கே இல்லாமல் அவள் இங்கு தனியே இருப்பது அவருக்கும் வருத்தமாக தான் இருந்தது. தன் பெற்றோருடன் இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சியாகவாது இருப்பாள் என்ற எண்ணம் தோன்ற, அவரும் "நீங்க சொல்லுவதும் சரிதாங்க, சிவன்யா அவர்கள் வீட்டிற்கு சென்று வரட்டும்" என்று தன் சம்மதத்தையும் தெரிவித்தார்.
இருவரும் சம்மதித்தது சிவன்யாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களை விட்டுச் செல்வதற்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. அதை "அத்தை, நீங்களும் மாமாவும் நான் ஊருக்கு போகும் வரைக்கும் அம்மா வீட்டுக்கு வாங்களேன். எல்லோரும் ஒன்றாகவே இருக்கலாம்" என்று உடனே தன் அத்தையின் கைகளை பிடித்துக் கொண்டு கூறினாள்.
"எனக்கும் உன் கூட இருக்கணும் என்று ஆசை தான். ஆனால் மாமாவிற்கு இங்கே வேலை இருக்கிறது. நீ ஊருக்கு செல்வதற்கு எல்லா ஏற்பாட்டையும் செய். அதன் பிறகு கொஞ்ச நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அங்கு வந்து உன்னுடன் இருக்கிறோம், சரியா?" என்றார் மென்மையாக.
நளினிக்கோ, சிவன்யா சென்னை செல்வதை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது. "அண்ணி நீங்கள் ஊருக்குப் போகும் வரைக்கும் இங்கேயே இருக்க முடியாதா?" என்றாள் வருத்தமாக.
"அது எப்படி நளினி முடியும்? விசாவிற்கு எல்லாம் ஏற்பாடு செய்யணும் இல்லையா? அதற்கு அவள் சென்னையில் இருந்தால் தானே வசதியாக இருக்கும்" என்று தன் மகளுக்கு புரிய வைத்தார் பார்வதியும்.
"இல்லைம்மா, இன்னும் கொஞ்ச நாள் இங்க இருப்பாங்க என்று நினைத்தேன்" என்று சொல்லிவிட்டு, "அண்ணிக்கு விசா கிடைத்த பிறகு எனக்கு திருமணம் செய்து இருக்கலாம். அது வரை நான் அண்ணி கூடவே இருந்து இருப்பேனே!" என்றாள்.
அவள் தலையில் மெதுவாக கொட்டி, அவள் கன்னத்தை செல்லமாக பிடித்துக் கொண்ட சிவன்யா இப்பவும் ஒன்றும் குறைந்து போயிடலை. நீயும் உன் கணவரும் துபாய்க்கு என் கூடவே வாருங்களேன்" என்றாள்.
"வாவ் அண்ணி, இதுவும் சூப்பரா தான் இருக்கு" என்று சிவன்யாவுடன் ஹை ஃபை அடித்துக் கொண்டாள் நளினி.
பார்வதிக்கு தான் பக் என்று இருந்தது. நளினியின் மாமியார் வீட்டை பற்றி நன்றாக தெரியும் அல்லவா? இப்பொழுது தான் திருமணம் முடிந்திருக்கிறது. உடனே வெளிநாடு அழைத்துச் செல்ல இவள் கேட்டால், அவ்வளவுதான். பெரிய பிரச்சினையாகி விடும். அதை நினைத்து பயந்த பார்வதி "முதலில் அண்ணி அங்கு போய் எல்லாவற்றையும் பார்த்து பழகி தயாராகட்டும். அதன் பிறகு நாம் எல்லோருமே போவோம், அவசரப்படாதே!" என்று மகள் எங்கே உடனே கிளம்ப வேண்டும் என்று சொல்வாளோ என்று படபடத்தார்.
"ஐயோ அம்மா, ஏன் இப்ப இவ்வளவு டென்ஷன் ஆக்குறீங்க? ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். உங்க நாத்தனார் கிட்ட நான் எதையும் போய் கேட்க மாட்டேன், கவலைப்படாதீங்க" என்று நக்கலாக கூறினாள்.
அவளின் செயலைக் கண்டு விஸ்வநாதனுக்கும் சிரிப்பு வந்துவிட, இன்னும் நீ விளையாட்டு பெண்ணாகவே இருக்கிறாய் நளினி" என்றார் வாய் விட்டு.
அனைவருக்குமே அவளின் செயலில் புன்னகை வர, "உண்மைதான் அண்ணா. அவள் இன்னும் சின்ன பிள்ளை தான். பாருங்களேன் எவ்வளவு பெரிய விஷயத்தை விளையாட்டு போல் சொல்லி விடுகிறாள்" என்றார் சிவகாமியும்.
அவரை முறைத்த நளினி, நான் ஒன்றும் விளையாட்டுக்கு சொல்லல. இப்பவே என் அத்தைக்கு ஃபோன் செய்கிறேன்" என்று ஃபோனை எடுக்க,
அவன் கையில் இருந்த ஃபோனை படக்கென்று பிடிங்கிய பார்வதி, "சும்மா இரு நளினி. அதான் சொல்றேன் இல்ல, முதலில் அண்ணி போகட்டும் என்று" என்றார்.
"அந்த பயம் இருக்கட்டும்" என்று சிவன்யாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு, "மாமா, எத்தனை நாள் இங்கே இருப்பீங்க" என்றாள் சிவனேசனிடம்.
"சம்மந்தி ஓகே சொல்லிட்டா, இன்னைக்கு சாயங்காலமே கிளம்பிடலாம். என்ன சொல்றீங்க சம்மந்தி?" என்று விஸ்வநாதனை பார்த்தார் சிவநேசன்.
"உங்களுக்கு அவசர வேலை எதுவும் இல்லை என்றால், ஒரு வாரம் இருந்துவிட்டு செல்லலாமே!" என்று தன் ஆசையை தெரிவித்தார் விஸ்வநாதன்.
எனக்கும் ஆசை தான் சம்பந்தி. ஆனால் இப்பவே போனா, விசா வேலையையும் பார்க்க ஆரம்பிக்கலாம். எனக்கும் அதிக விடுப்பு இல்லை. உண்மையில் நேற்று சிவன்யாவின் குரல் கேட்ட பிறகு என்னால் அங்கு இருக்க முடியவில்லை. அதுதான் இவளையும் அழைத்துக் கொண்டு உடனே வந்து விட்டேன்" என்றார்.
அவருக்கும் வேலை இருக்கும் என்று உணர்ந்த விஸ்வநாதன், "நீங்கள் சொல்லுவதும் சரிதான் சம்மந்தி. இன்று ஒரு நாளாவது இருந்துவிட்டு, நாளை செல்லலாமே!" என்றார்.
இதற்கு மேலும் மறுக்க விரும்பாத சிவநேசனும், "சரி சம்மந்தி" என்று சொல்லிவிட்டு, மேகநாதனுக்கு அழைத்தார், தாங்கள் நாளை கிளம்புவதாக.
அவனும் உடனே அவரது ஃபோனிற்கு டிக்கெட்டை அனுப்பி விட்டான்.
அதைக் கண்டு ஆச்சரியமாக "என்னடா? எப்படி உடனே டிக்கெட் கிடைத்தது?" என்றார்.
"எதற்கும் இருக்கட்டும் என்று, காலையில் தக்களில் டிக்கெட் போட்டேன் பா" என்றான் மேகநாதன்.
அவனுக்கும் தேவ் இப்படி தங்கையை விட்டுச் சென்றது வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது ஆனால் அதை பெரியவர்களிடம் காண்பிக்க முடியாது என்று நினைத்தான்.
தந்தை நேற்று கிளம்பியதும், "நாளை சாயங்காலமே அவளை அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள் அப்பா. கார் வேண்டும் என்றால் புக் செய்து கொள்ளலாம்" என்றான்.
"வேண்டாம், ரயில் பயணம் தான் சுலபமாக இருக்கும்" என்றார்.
உடனே மூன்று பேருக்கும் அங்கிருந்து சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணி விட்டான்.
"சம்பந்தியிடம் சொல்ல வேண்டும். அவர்கள் சம்பந்தம் வேண்டும். அதற்குள் ஏன் இப்படி அவசரப்படுகிறாய்" என்றார் சிவநேசன்.
"அதெல்லாம் மாமா ஒன்றும் சொல்ல மாட்டார்கள். எதற்கும் நாளை மறுநாளுக்கும் நாளை காலையிலேயே புக் பண்ணுகிறேன்" என்று சொன்னது போல் செய்துவிட்டான் போலிருக்கு.
டிக்கெட்டை பார்த்ததும் அவருக்கு மகனின் அவசரம் புரிந்து லேசாக புன்னகையும் தோன்ற, விஸ்வநாதனிடம் நடந்த அனைத்தையும் கூறினார்.
"மாப்பிள்ளைக்கு என் மீது கோபம் போலிருக்கு" என்றார் சோகமாக
"அட விடுங்க சம்பந்தி. சின்ன பிள்ளைகள், எல்லாத்துக்கும் இப்படித்தான் இருப்பார்கள். போகப் போக சரியாகிவிடும்" என்றார்.
"தன் கணவனுக்கு ஃபோன் செய்து, அண்ணி நாளை ஊருக்கு செல்வதால். இன்று அம்மாவின் வீட்டிலேயே இருப்பதாக சொல்லிவிட்டு, தனது அத்தைக்கும் ஃபோன் செய்து அண்ணி ஊருக்கு சென்றதும் வீட்டிற்கு வருவதாக கூறி விட்டாள் நளினி.
- தொடரும்
- அருள்மொழி மணவாளன்
-
வெளிச்சம் - 25
2 hours ago
-
வெளிச்சம் - 24
2 hours ago
-
வெளிச்சம் - 22
4 hours ago
-
வெளிச்சம் - 21
4 hours ago
-
வெளிச்சம் - 20
6 hours ago
- 25 Forums
- 225 Topics
- 804 Posts
- 0 Online
- 329 Members
