வெளிச்சம் - 22
அத்தியாயம் 22
பார்வதி, தேவ் செய்ததையும் செல்லி வருத்தப்பட, சிவன்யாவிற்கு தான் கவலைப்பட்டு வயதானவர்களையும் சங்கடப்பட வைக்கின்றோமோ என்று எண்ணம் வந்தது.
மென்மையாக அவரிடம் இருந்து விலகி, "அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை" என்று தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.
அவளை கட்டிலில் அமர வைத்து, அருகிலேயே தானும் அமர்ந்து கொண்டு, அவளின் ஒரு கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட பார்வதி, தேவ்வின் சிறுவயது நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் கூற தொடங்கினார். அவனது படிப்பு, விளையாட்டு, கல்லூரி என்று.
"எங்கள் மீது அவன் எப்பொழுதுமே பாசமாக இருப்பான். அதிலும் நளினி என்றால் அவனுக்கு உயிர். இங்கு இருக்கும் வரை அவன் எங்களிடம் கலகலப்பாகத்தான் பேசிக்கொண்டு இருந்தான். அதுவும் நளினியும் அவனும் சேர்ந்து விட்டால், வீடு கலகலவென்று ஒரே சத்தமாக இருக்கும். அது மட்டும் அல்ல அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூட மிகவும் நல்ல விதமான தான் பேசுவான்.
அதெல்லாம் அவன் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வரைதான். ஆரம்பித்தில் கூட நலமாக தான் எல்லோரிடமும் பழகிக்கொண்டு இருந்தான். அதன்பிறகு விடுமுறைக்கு வருவதை குறைத்துக் கொண்டான். அப்படியே வந்தாலும் ஒரு சில நண்பர்களுடன் மட்டும் பேசிவிட்டு எப்பொழுதும் தனிமையிலேயே இருக்க ஆரம்பித்தான். இப்பொழுது எங்களுக்குமே அவன் புதிதாக தான் தெரிகிறான் ம்மா. ஒருவேளை வேலை பளுவோ என்னவோ? ஏன் இப்படி இருக்கிறான் என்று தெரியவில்லை. எங்களுக்காக அவனை மன்னித்து விடும்மா" என்று அவளது கைகளில் மென்மையாக ஒரு அழுத்தம் கொடுத்தார்.
அவரது கண் கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டு, "எனக்கு அவர் திடீரென்று கிளம்பியது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது அத்தை. கொஞ்ச நேரத்தில் நான் சரியாகி விடுவேன். அதனால் நீங்கள் எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். நான் கொஞ்சம் தூங்கி எழுந்தால் சரியாகி விடுவேன்.
எனக்கு அவர் மீதோ, உங்கள் மீதோ எந்த கோபமும் வருத்தமும் இல்லை. அதை நினைத்து நீங்கள் வருந்தாதீர்கள். அவர் ஊருக்குச் சென்றதும் என்னை வரவேற்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தானே கூறுகிறார். அதற்குரிய வேலையை பார்ப்போம் அத்தை. நிச்சயம் நாங்கள் சந்தோஷமாகத்தான் வாழ்வோம். நீங்கள் கவலைப்படாதீர்கள், சரியா?" என்று மென்மையாக அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள் சிவன்யா.
மருமகளின் பேச்சில் பார்வதிக்கும் கொஞ்சம் மனதிற்கு இதமாக இருந்தது. இருந்தாலும் அவரது கணவன் கூறியது போல இவ்வளவு நல்ல பெண்ணிற்கு தன் மகன் பொருத்தமானவன் இல்லை போல என்ற எண்ணமும் அவருக்கு வந்தது.
தங்களது மகள் மற்றும் மகனின் வாழ்க்கையை மட்டும் தான் தாங்கள் பார்த்து விட்டோம் போலிருக்கு, ஒரு பெண்ணாக தேவ்வை எப்படி ஏற்றுக்கொண்டு வாழ்வாள் என்று நாம் யோசிக்காமல் போயிட்டோமே? என்று வருந்தினார்.
"சரி மா, அவன் எவ்வளவு சீக்கிரம் உன்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறானோ, அவ்வளவு சீக்கிரம் நீங்கள் அங்கு போய் இருவரும் ஒன்றாக சேர்ந்து நலமாக வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை, உன்னை போலவே எனக்கும் இருக்கு மா" என்று அவள் தலையை மென்மையாக தடவி விட்டு, "சரிடா நீ கொஞ்சம் நன்றாக தூங்கி ஓய்வெடு" என்று சொல்லிவிட்டு தங்களது அறைக்கு சென்று விட்டார்.
அவர் சென்ற பிறகு சிவன்யாவும் தேவ்வை பற்றி அவர் கூறியதை கொஞ்ச நேரம் நினைத்துப் பார்த்துக் கொண்டு அப்படியே தன்னையும் அறியாமல் உறங்கி விட்டாள்.
தன்னையும் மறந்து அசந்து உறங்கிய சிவன்யாவின் காதுகளில் அவரது அன்னை அழைப்பது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்து அமர்ந்தாள். பின்புதான், தான் உறங்கிக் கொண்டிருந்ததை நினைத்து கனவு போல என்று கண்களை கசக்கி கொண்டு எழும் பொழுது, மீண்டும் அவளது அன்னை அவளை அழைப்பது போல் இருக்க, உண்மையிலேயே அம்மா தான் வந்து விட்டார்களா? என்று அவசரமாக எழுந்து சென்று, வேகமாக கதவை திறக்க, உண்மையிலேயே அவளது அம்மா சிவகாமி புன்னகையுடன் நின்று இருந்தார்.
"அம்மா" என்று அதிர்ந்து இறுக்கமாக அவரை அணைத்து கொண்ட சிவன்யாவின் உடல் அழுகையில் குலுங்கியது.
மகளை முதுகில் மென்மையாக தடவி விட்டு "என்னம்மா, ஏன் அழுகிறாய்? அம்மா தான் வந்துவிட்டேனே!" என்று கூறி மென்மையாக அணைத்துக் கொண்டார்.
"எவ்வளவு நேரம் தான் உன் அம்மாவை பிடித்துக் கொண்டு நிற்பாய்? அப்பாவை வா என்று, ஒரு வார்த்தை கேட்க மாட்டாயா?" என்ற தந்தையின் குரலில் தாயை விட்டு விலகி அவரையும் அணைத்துக் கொண்டு "வாங்கப்பா" என்று சொல்லி தன் கண்ணீரை அவரது சட்டையிலேயே துடைத்து விட்டாள்.
அவர்களுக்கு குடிப்பதற்கு காபி கொண்டு வந்த பார்வதி, "இரண்டு பேரும் என் மருமகளை விட்டுவிட்டு வந்து காபி குடிங்க" என்று சொல்லிவிட்டு, "நீயும் வாம்மா" என்றார்.
"இதோ ஒரு நிமிஷம் அத்தை" என்று வேகமாக உள்ளே சென்று தன் காலை வேலைகளை வேகமாக முடித்துவிட்டு, தந்தையின் அருகில் வந்த அமர்ந்து "என்னப்பா? திடீரென்று இங்கு வந்திருக்கிறீங்க?" என்றாள் ஆர்வமாக.
"நேத்து என் பொண்ணு, கவலையா பேசின மாதிரி இருந்துச்சு! அதான் அவளை பாத்துட்டு போலாம் என்று வந்தோம்" என்றார் இழுவையாக.
"அப்பா.. திடீரென்று அவர் கிளம்பியதில் கொஞ்சம் கவலைப்பட்டேன். அதற்குப் போய் இப்படி என்னை கிண்டல் செய்கிறீர்களா?" என்று செல்லமாக சிணுங்கினாள் சிவன்யா.
பின்னர் அண்ணனைப் பற்றி விசாரித்து, ஏன்? அவர்களை அழைத்து வரவில்லை என்று கேட்டாள். வெகு நாள் கழித்து தாய் தந்தையரை பார்ப்பதால் பேசிக் கொண்டே இருக்க,
"இப்படியே பேசிக் கொண்டே இருக்கப் போகிறாயா? அவர்கள் குளித்துவிட்டு வந்தால் சாப்பிடலாம் அல்லவா?" என்றார் பார்வதி.
அதன் பிறகு தான் தாய் தந்தையருக்கு பயணக் களைப்பு இருக்குமே என்று நினைவுக்கு வந்த சிவன்யா அவர்களை அழைத்துச் சென்று ஓய்வெடுக்க அறையை காண்பித்தாள்.
இருவரும் தங்கள் காலை வேலையை முடித்து குளித்துவிட்டு வெளியே வர அவர்களுக்கு காலை உணவு தயாராக இருந்தது.
அனைவரும் ஒன்று போல் அமர்ந்து பேசிக் கொண்டேன் சாப்பிட்டார்கள் அவர்களது பேச்சு முழுவதும் சிவன்யாவிற்கு பாஸ்போர்ட் விசா எடுத்து துபாய்க்கு அனுப்புவதிலேயே இருந்தது.
அவர்கள் சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்து அமர்வதற்கும், நளினி தன் கணவனுடன் வருவதற்கும் சரியாக இருந்தது.
காலையில் திடீரென்று நளினியை கண்டதும் ஆச்சரியமான பார்வதி, "ஏய்! என்னடி? காலையிலேயே வந்து இருக்க, வா வா" என்று மகளை வரவேற்று "வாங்க மாப்பிள்ளை" என்று மருமகனையும் வரவேற்றார்.
வரவேற்ற அம்மாவின் முகத்தைக் கூட பார்க்கவில்லை, இருவரையும் வரவேற்ற விஸ்வநாதனை கண்டு கொள்ளவில்லை,
"எப்படி இருக்கிற நளினி" என்று கேட்ட சிவன்யாவையும் ஏரெடுத்து கூட பார்க்கவில்லை,
"ஏன்? நம்ம வீட்டுக்கு வருவதற்கு நேரம் காலம் பார்த்துட்டு தான் வரணுமா?" என்று படபடவென்று சொல்லி விட்டு, வேகமாக சிவகாமியின் அருகில் சென்று அமர்ந்து "எப்படி இருக்கீங்க அத்தை? அத்தான் எப்படி இருக்காங்க? சென்னை எப்படி இருக்கிறது? மீன் தொட்டியில் மீன்கள் எல்லாம் எப்படி இருக்கிறது?" என்று அனைத்தையும் நலன் விசாரித்தாள்.
அவளின் காதை செல்லமாகத் திருகிய சிவன்யா "ஒரு வாரம் போய் அங்கே இருந்துட்டு, இப்ப வீட்டுல உள்ள மீன் தொட்டி வரைக்கும் விசாரிக்கிறியா? இத்தனை நாள் கழித்து இங்க வந்திருக்கிறாயே! எங்களிடம் நலம் விசாரித்தாயா?" என்று விளையாட்டு கோபமாக அவளை முறைத்தாள்.
"அச்சோ அண்ணி காதை விடுங்க, வலிக்குது. சும்மா உங்களை வெறுப்பேற்ற தான் அப்படி பேசினேன்" என்று அந்த இடத்தையே சிறிது நேரத்தில் கலகலப்பாக்கி விட்டாள் நளினி.
இருவரையும் சாப்பிட கூறினார் பார்வதியின்.
"இல்லத்தை சாப்பிட்டு தான் வந்தோம். இவளை உங்கள் வீட்டில் விட்டுவிட்டு போகிறேன். சாயங்காலம் வேலை முடித்து வரும் பொழுது அழைத்துக் கொள்கிறேன்" என்று தனது அத்தையிடம் சொல்லிவிட்டு,
"அக்கா, எதற்கும் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள். உங்களையே தூக்கி சாப்பிட்டு விடுவாள், இவள்" என்று சிவன்யாவிடம் மனைவியை வாரிவிட்டு, அனைவரிடவும் சொல்லிவிட்டு,
தன்னை முறைத்துக் கொண்டு இருக்கும் நளினியிடம் கண்களால் சென்று வருவதாக கூறிக் கிளம்பினான்.
அன்றைய பொழுது சிவன்யாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது. மதியம் உணவிற்குப் பிறகு சிவநேசன் சிவன்யாவை அழைத்துக் கொண்டு சென்னை செல்வதாக கூறினார். அதில் அதிர்ந்த விஸ்வநாதனும் பார்வதியும்.
"என்ன ஆச்சு சம்பந்தி? ஏன் மருமகளை கூட்டிட்டு போறீங்க?" என்று பதட்டமாக கேட்டார் பார்வதி.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 25
2 hours ago
-
வெளிச்சம் - 24
2 hours ago
-
வெளிச்சம் - 23
2 hours ago
-
வெளிச்சம் - 21
4 hours ago
-
வெளிச்சம் - 20
6 hours ago
- 25 Forums
- 225 Topics
- 804 Posts
- 7 Online
- 329 Members
