Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 26

1 Posts
1 Users
1 Reactions
262 Views
(@arulmozhi-manavalan)
Posts: 32
Trusted Member
Topic starter
 
[#247]

அத்தியாயம் 26

 

நளினிக்கோ இவர்கள் சொல்லுவது எல்லாம் கேட்பது மிகவும் சிரமமாக இருப்பது போல் இருந்தது. அது அவள் முகத்தில் கவலையாக தெரிய ஆரம்பித்தது. அதை கவனித்த சிவன்யா, "அத்தை அவள் இஷ்டத்திற்கு இருக்க விடுங்க, அவளை ரொம்ப கட்டுப்படுத்தாதீங்க. அவளுக்கும் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாம் தெரியும், இல்லடா?" என்று நளினியின் நாடி பிடித்து கேட்டாள். 

 

உடனே ஆமாம் என்று தலையாட்டிய நளினி "என்ன செஞ்சாலும் அதை செய்யாதே இதை செய்யாதே என்று சொல்றாங்க அண்ணி" என்று அவளிடம் மீண்டும் புகார் வாசித்தாள்.  

 

"எல்லோரும் உன் நன்மைக்காகத்தான் சொல்லுவாங்க நளினி, கொஞ்சம் கவனமா இருந்துக்கோ, சரியா?" என்று மென்மையாக அவள் தலை தடவி கூறிய சிவன்யா, 

பார்வதியை பார்த்து "அவள் பயப்படும் படி எதுவும் சொல்லாதீங்க அத்தை. பொறுமையா அவளுக்கு புரியும்படி சொல்லுங்க" என்றாள். 

 

"நான் என்ன செய்வேன் சிவன்யா? எனக்கு அவள் துள்ளிக் குதித்து நடப்பதை பார்க்கும் பொழுது பயமாக இருக்கிறது. அதில் கொஞ்சம் சத்தமாக சொல்லி விடுகிறேன் என்று நினைக்கிறேன்" என்றார் தன் மனதில் உள்ளதை மறைக்காமல் 

 

"அது அவள் சுபாவம் தான் அத்தை. அவளுக்கு ஏற்றபடியே அவளது குழந்தையும் அவளுக்குள் பத்திரமாக வளரும். நீங்கள் கவலைப்பட்டு அவளையும் பயமுறுத்தாதீர்கள்" என்று தனது மாமியாருக்கும் புரியும்படி மென்மையாக கூறினாள் சிவன்யா.

நளினிக்கு குழந்தை உண்டாகியதில் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.  

மறுநாள் காலையிலேயே வந்த நளினியின் கணவன் அவளை அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். 

 

அதன் பிறகு தான் மற்றவர்களை பார்த்து சிரித்து அனைவரின் நலனையும் விசாரித்தான். அனைவரும் அவனிடம் மகிழ்வாக பேச, சிவன்யா "பார்த்தாயா நளினி, உன் கணவருக்கு இவ்வளவு நேரம் நாங்கள் எல்லாரும் இங்கு இருப்பது கண்ணுக்கு தெரியவே இல்லை" என்றாள் கிண்டலாக. 

 

ஏற்கனவே எல்லோரையும் முன்னாடி அவன் கட்டி அணைத்ததில் வெட்கப்பட்டுக் கொண்டிருந்த நளினி, அண்ணியின் கிண்டல் பேச்சில் மேலும் வெட்கமடைந்து "போங்க அண்ணி" என்று சொல்லி தனது அன்னையின் பின்னால் மறைந்து கொண்டாள். 

 

ஏற்கனவே இன்று இரவு சிவன்யா ஊருக்குச் செல்வதால் விருந்து ஏற்பாடு செய்திருக்க நளினி குழந்தை உண்டானதும் விருந்து தடால் புடலானது. காலையிலிருந்து நளினிக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டே அனைத்தையும் செய்ய தொடங்கி விட்டார் சிவகாமி. 

 

காலை அனைவரும் உட்கார்ந்து உண்ணும் பொழுது, "பாருடா! ஊருக்கு போறது நான். எனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு சமைக்காம, இந்த ஊரிலேயே இருக்க போற புள்ளைகிட்ட கேட்டு சமைக்கிறாங்க" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள் சிவன்யா. 

 

அதில் பதறிய பார்வதி "இல்லம்மா உனக்கும் பிடித்தது என்று தானே அம்மா சொன்னார்கள்" என்று பதட்டமாக கேட்க, 

"அத்தை, நான் சும்மா கிண்டலுக்கு சொல்கிறேன்" என்றாள் சிவன்யா.  

 

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் பொழுது சிவன்யாவை பார்த்த நளினியின் கணவன் "மச்சான் ஃபோன் பண்ணினாரா அக்கா?" என்றான். 

 

அவளோ இல்லை என்று மறுப்பாக தலையாட்டி, "மெசேஜ் தான் அனுப்புவார்" என்று சொல்லிவிட்டு மௌனமாக சாப்பிட்டாள். 

 

இவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்த அந்த இடம் தேவ்வின் பேச்சு வந்த பிறகு அமைதியாகிவிட்டதை சங்கடமாக உணர்ந்த நளினியின் கணவன், "சாரிக்கா, நீங்க ஊருக்கு போறீங்களே, எப்படி அவர் ரிசீவ் பண்ண வருவாரா? பேசினாரா? என்று கேட்பதற்காக தான் கேட்டேன்" என்றான். நளினியின் மூலமாக தேவ்வின் நடவடிக்கையையும் தெரிந்து இருந்தவனால் தான் இந்த பேச்சை எடுத்து அனைவரும் சந்தோஷத்தையும் கெடுத்து விட்டோமோ என்று வருந்தினான். 

 

ஆனால் இதுவரை எப்படியோ இனிமேல் சிவன்யாவும் தேவ்வும் அங்கு தனியாகத்தானே இருப்பார்கள். இங்கு விமானம் ஏறும் வரையில்தானே எல்லோரும் கூட இருப்போம். அதன் பிறகு அவன் தானே அவளை கவனித்துக் கொள்ள வேண்டும் ஆகையால் அவன் ஃபோன் செய்து இருப்பான் என்று தான் நினைத்துக் கொண்டு கேட்டான். 

 

அவன் முகம் கவலையில் இருப்பதைக் கண்ட சிவன்யா "பரவாயில்லை விடுங்க, எப்படியும் என்னை அழைத்து போவதற்கு ஏர்போர்ட்டுக்கு அவர் தானே வருவார். அதன் பிறகு என்னிடம் அவர் பேசித்தானே ஆக வேண்டும்" என்று அவனுக்கு ஆறுதல் சொல்வது போல் தனக்கும் சொல்லிக் கொண்டாள் சிவன்யா. 

 

தேவ்வை பற்றிய பேச்சு வந்ததிலிருந்து மேகநாதனின் முகம் கோபத்தில் சிவந்தது. "உங்கள் மகன் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை மாமா. யாரும் இல்லாத ஊருக்கு அவரை நம்பி தான் நாங்கள் எங்கள் தங்கையை அனுப்புகிறோம். இங்கு வந்த நாளிலிருந்து இன்று வரை அவர் ஒருமுறை கூட ஃபோன் செய்து எங்களிடம் பேசவில்லை. என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்? சிவன்யாவிடம் கேட்டால் அவர் அவளிடம் பேசுவதாக சொல்லி விடுகிறாள். அது கூட உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. இப்படிப்பட்ட வரை நம்பி நான் சிவன்யாவை அங்கு அனுப்ப வேண்டுமா என்ற யோசனை கூட எனக்கு அடிக்கடி வருகிறது" என்றான் கோபமாக.  

 

"என்ன மேகநாதா, இப்படி பேசுகிறாய்? சம்பந்திக்கு வருத்தமாக இருக்கும் இல்லையா? அதான் சிவன்யாவிடம் அவர் பேசுவதாக சொல்கிறாள் தானே! நம்மிடம் பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன? அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தால் போதுமல்லவா? இப்படி பேசி நீ சம்மந்தியையும் வருத்தப்பட வைக்கிறாய் பார்!" என்று மகனை கண்டித்தார் சிவநேசன். 

 

"பரவாயில்ல விடுங்க சம்பந்தி, மாப்பிள்ளை கரெக்டா தானே சொல்றாரு. உங்கள் வீட்டு பெண்ணை கட்டி இருக்கிறான், உங்களிடமும் அவன் பேச வேண்டும் தானே?" என்றார் கவலையாக.  

 

"எங்களிடம் பேச வேண்டும் என்று கூட அவசியம் இல்லை சம்மந்தி. ஆனால் சிவன்யா உடன் அவர் மகிழ்ச்சியாக பேசினால், வாழ்ந்தால் போதும்" என்று மகளை பார்த்துக் கொண்டே கூறினார். 

 

சிவன்யாவிற்கு தான் ஏன் இப்படி மாறிவிட்டோம் என்று எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது. இதுவரை தன் தாய் தந்தையிடமோ அண்ணனிடமோ எந்த விஷயத்தையும் மறைத்தது, பொய் சொல்லியதோ கிடையாது. ஆனால் தேவ் இன்றுவரை தன்னுடன் இரவில் ஃபோனில் பேசுகிறான் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அவன் இதுவரை அவளுடன் ஃபோன் செய்து பேசியதே கிடையாது. இவளாக மெசேஜ் அனுப்பி கேள்வி கேட்டால் அதற்கு மட்டும் அவன் பதில் சொல்லியும் முடித்து விடுவான். அதைத் தாண்டி ஒரு வார்த்தை கூட அதிகம் இதுவரை அவன் மெசேஜ்ஜில் கூட பேசியது கிடையாது. 

 

இன்று மேகநாதன் கேட்ட கேள்வி அவளுக்குள்ளும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டோமோ என்று! ஆனால் பெற்றோர் பார்த்து வைத்த திருமணத்தை குறை சொல்லவும் அவளுக்கு மனது வரவில்லை. இன்று இல்லை என்றாலும் என்றாவது அவனுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துக் கொண்டு, இன்று வரை இருந்து விட்டாள்.  

 

இப்படித்தான் ஒவ்வொருவரும் தனித்தனியாக மனதிற்குள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இன்று மேகநாதன் கோவமாக பேசியதில் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து எல்லோரிடமுமே ஒரு மௌனம் குடி கொண்டது. எல்லோரும் முகத்திலும் தெரிந்த கவலையைக் கண்டு கலங்கினாள் நளினி. 

 

நேற்று வரை அண்ணனைப் பற்றிய எந்த பேச்சும் இல்லாமல் இருந்ததே மகிழ்ச்சியாக இருந்ததற்கு காரணம் புரிந்தது. அவளுக்கு அவளது அண்ணனை மிகவும் பிடிக்கும். ஆனால் இப்பொழுது கொஞ்சம் அவன் ஒதுங்கி விட்டது போல் அவளுக்குமே தெரிந்தது. இருந்தாலும் சிவன்யா அண்ணியாக வந்ததில் மகிழ்ந்து. அண்ணனுக்கும் சேர்த்து சிவன்யாவுடன் பேசி பழகி தன் ஆசையை தீர்த்துக் கொண்டாள். இன்று தன் அண்ணனால் தன் தந்தை சிவன்யா குடும்பத்தின் முன் தலை குனிந்து இருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

 

"அண்ணன் செய்தது தவறுதான் அத்தான். ஆனால் அதற்காக நீங்கள் அப்பாவிடம் கோபப்படுவது சரியில்லையே! அப்பாவும் அண்ணனின் செயல் நினைத்து வருந்தி கொண்டு தானே இருக்கிறார்!" என்று கவலையாக கூறினாள் நளினி. 

 

அவள் கூறியதை கேட்டதும் அங்கிருந்த அனைவருக்கும் மிகவும் வருத்தமாகி விட்டது. 

மேகநாதனும் தன் தவறை உணர்ந்து "சாரி மாமா, உங்களை வருத்தப்பட வைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் சிவன்யாவின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயத்தில் தான் அப்படி பேசி விட்டேன். அதுதான் இப்பொழுது அவள் கணவனுடன் தானே செல்ல போகிறாள், நான் பேசியதற்கு என்னை மன்னித்து விடுங்கள் மாமா" என்று விஸ்வநாதனிடம் மன்னிப்பு கேட்டான். 

 

"உங்கள் மீதும் தவறு இல்லை மாப்பிள்ளை. நடந்த விஷயத்தில் முழு தவறும் எங்கள் மீது தான் உள்ளது. நான் அவனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேனே தவிர, அவனை கல்யாணம் பண்ணி வரும் பெண்ணின் நிலைமை என்ன ஆகும் என்று யோசிக்கவில்லை" என்று அவரும் வருந்தினார். 

 

"யார் மீதும் தவறு இல்லை சம்மந்தி. இதுவரை என்ன நடந்ததோ! எப்படி நடந்ததோ! ஆனால் இது எதுவும் இனிமேல் அப்படியே இருக்கப் போவது இல்லை. இதோ இன்று சிவன்யா மாப்பிள்ளையுடன் வாழ்வதற்கு அவரின் இடம் தேடி தானே செல்கிறாள். அவளும் அங்கு சென்று இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள். அதனால் நடந்து முடிந்ததை பற்றி இனிமேல் யாரும் பேச வேண்டாம். யாருக்கும் குற்ற உணர்வு வேண்டாம். இனிமேல் அவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். இன்று அவள் நல்லபடியாக ஊருக்குப் போய் சேர வேண்டும் என்று நினைத்து அதற்குரிய வேலைகளை செய்வோம்" என்று நிலைமையை சரியாக முயன்றார் சிவநேசன். 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 29, 2026 3:48 pm
Kalidevi reacted

Scroll to Top