Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 10

2 Posts
2 Users
1 Reactions
29 Views
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 
[#169]

அத்தியாயம் 10

தேவ்விடம் பேசிவிட்டு வந்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தனர் சிவன்யாவின் குடும்பத்தினர். மேகநாதனுக்கு இருந்த குழப்பங்கள் அனைத்துமே ஒரு நொடியில் பறந்து விட்டது, தேவ்வின் நடவடிக்கைகளை பார்த்து. 

 

அது போலவே சிவநேசன், சிவகாமி இருவருக்கும் இதுவரை உள்ளத்திற்குள் அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம், குறைந்தது போல் இருந்தது. 

"மாப்பிள்ளை நன்றாக பேசுகிறார், இல்லைங்க" என்று கணவனை பார்த்தார் சிவகாமி. 

அவரும் ஆமாம் என்று தலையாட்டி விட்டு, "இதுவரை அவர் பேசாததால் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஏதோ லேசாகி பறப்பது போல் உணர்கிறேன்" என்று கூறி, 

"எல்லோரும் வர ஆரம்பிக்கிறார்கள். அவர்களை வரவேற்கும் வழியை பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு, 

"சிவன்யா தயாராக ஆரம்பித்து விட்டாளா? ஆறரை மணிக்கு நிச்சயதார்த்தம் ஆரம்பித்து விட வேண்டும்" என்றார். 

 

"ஆமாங்க, முன்பே பியூட்டிசியன் வந்துட்டாங்க. எதற்கும் நான் போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரை நீங்கள் கொஞ்சம் முன்புறம் நின்று, வருபவர்களை வரவேறுங்கள்" என்று சொல்லிவிட்டு, மகள் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார்.

 

சிவன்யாவின் அறைக்கு வந்த சிவகாமி, அங்கு மூன்று பியூட்டிஷியன் தன் மகளுக்கும் நளினிக்கும் அலங்காரம் செய்து கொண்டிருப்பதை பார்த்தார். இருவரையும் பார்த்து "ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்?" என்று சொல்லிவிட்டு, 

பியூட்டிஷியனிடம் "முடிந்து விட்டதா?" என்று கேட்டார். 

 

"ஆமாம்மா. எல்லாம் முடிஞ்சிடுச்சு. இன்னும் கொஞ்சம் பைனல் டச் தான்" என்றதும், 

"நல்லா பண்ணி இருக்கீங்க" என்று அவர்களை பாராட்டிய சிவகாமி, 

தன் மகளை லேசாக அணைத்து, "ரொம்ப அழகாக இருக்கிறாய்டா!" என்று நெற்றியில் பட்டுப்படாமல் முத்தம் கொடுத்தார். 

 

"அண்ணி மட்டும்தான் அழகாக இருக்கிறார்களா?" என்று போலி சோகத்துடன் சிவகாமியை பார்த்தாள் நளினி. 

 

"உனக்கு என்ன ராஜாத்தி. நீ என் பொண்ணை விட ரொம்ப அழகா இருக்குற" என்று அவளின் நாடியை லேசாக பிடித்து கொஞ்சி அணைத்துக் கொண்டார்.  

 

அப்பொழுது அங்கு வந்த மேகநாதன், அலங்காரத்தில் ஜொலிக்கும் தன் தங்கையையும், அவளுக்கு இணையாக இருக்கும் நளினியையும் பார்த்து "இருவருமே ரொம்ப அழகா இருக்கீங்க" என்று பொதுவாக கூறிவிட்டு, 

தாயைப் பார்த்து "அம்மா, நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க வேண்டுமாம். அய்யர் உங்களை வர சொன்னார்" என்று சொல்லிவிட்டு, 

நளினியை பார்த்து, "இன்னைக்கு என் தங்கச்சிக்கு தான் நிச்சயதார்த்தம், நீ என்ன அவளை விட இவ்வளவு மேக்கப் போட்டிருக்க!" என்று அவளை கிண்டல் செய்தான். 

 

அவளோ பயந்து, "அச்சோ அத்தான், ரொம்ப அதிகமா இருக்கா? நான் வேணா தொடச்சிக்கட்டுமா?" என்று அங்கிருந்து டிஷ்யூவை எடுத்து துடைக்க போக, 

அவள் கையை வேகமாக பற்றிய சிவன்யா, "அண்ணன் சும்மா விளையாட்டுக்கு சொல்றாங்க. அதுக்காக இவ்வளவு அழகா இருக்குற மேக்கப்பை களைப்பியா நீ?" என்று செல்லமாக கடிந்து கொண்டாள். 

 

மேகநாதன் விளையாட்டுக்குத்தான் கூறினான். ஆனால் அவள் உடனே துடைக்க செல்லவும் ஒரு நொடி பயந்துவிட்டான். தங்கை தடுத்ததும் நிம்மதி அடைந்தவன், "அம்மா தாயே நான் சும்மா உன்கிட்ட விளையாடினேன். மேக்கப் தொடச்சி முகத்தை விகாரம் ஆக்கிடாதே!" என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சிரித்துக் கொண்டே சென்று விட்டான். 

 

"பாருங்க அண்ணி, அத்தான் நான் மேக்கப் இல்லனா, விகாரமா இருப்பேன்னு சொல்லிட்டு போறாங்க" என்று ஒரு காலை தரையில் உதைத்து சினுங்கினாள் நளினி. 

 

இவர்களின் செல்ல சண்டையை அங்கிருந்த பியூட்டிஷன்கள் கண்டு மென்மையாக சிரித்துக் கொண்டார்கள். 

 

மேகநாதன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த ஒரு பெண்மணி, முதலில் நளினியை பார்த்து "நீ ரொம்ப அழகா இருக்க!" என்று அவருக்கு திருஷ்டி நொடித்தார். பின்னர் சிவன்யாவை பார்த்து, உன்னை மேடைக்கு கூப்பிட்டாங்கம்மா" என்று சொல்லிவிட்டு, நளினியிடம் "உன் அண்ணியை அழைத்துக்கொண்டு மேடைக்கு வா" என்று சொல்லி முன்னே சென்று விட்டார். 

 

அவர் சென்றதும் "அவங்க என்னோட அத்தை அண்ணி. அவங்க பையனுக்கு தான்" என்று வெட்கமாக கூற, 

 

"ஓ.. உன் வருங்கால மாமியாரா?" என்றாள் சிவன்யா.  

 

அதற்குள் இரு சொந்தங்களில் உள்ள பெண்கள், சிவன்யாவை அழைத்துச் செல்ல அங்கு வந்தார்கள். வந்தவர்கள் பியூட்டிஷியனிடம் "கொஞ்சம் நேரம் பொறுங்க, நிச்சயதார்த்த புடவை கொடுப்பாங்க. அதை கட்டிவிட வேண்டும்" என்று சொல்லிவிட்டு சிவன்யாவை அழைத்துக் கொண்டு மேடைக்குச் சென்றார்கள். 

 

மேடைக்குச் சென்றதும் அங்கே இருந்த இரு சொந்தங்களையும் கண்டு வழங்கினாள். அப்படியே வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லி, ஐயர் காட்டிய மணையில் அமர, அவர் சில சாஸ்திரங்கள் செய்து விட்டு புடவையை எடுத்து கொடுக்கும்படி விஸ்வநாதன், பார்வதி தம்பதியிடம் கூற, அவர்களும் அதன்படியே புடவையை எடுத்து சிவன்யாவிடம் கொடுக்க, அவளுடன் சேர்ந்து அவரது தாயும் அதை வாங்கிக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு மணப்பெண் அறைக்கு சென்றார். 

 

பியூட்டிஷியனிடம் புடவையை கொடுத்துவிட்டு, "கொஞ்சம் சீக்கிரம் கட்டி அனுப்புங்க அம்மா" என்று சொல்லி மேடைக்கு சென்று விட்டார். அதன்படியே அவர்கள் கொடுத்த புடவையை, சிவன்யாவிற்கு அழகாக கட்டி விட்டார்கள் பியூட்டிஷியன். 

 

பத்து நிமிடத்திலேயே சிவன்யா தயாராகி விட, நளினி வேகமாக வந்து, "அண்ணி உங்களை கூப்பிடுறாங்க, போகலாமா?" என்றாள். 

பியூட்டிஷியன்சும் அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல, இரண்டு அடி பின்னால் சென்று தன் அண்ணியை, மேலும் கீழும் பார்த்தாள். 

"அண்ணி, இந்த மேக்கப், இந்த புடவைக்கு ரொம்ப செட் ஆகி, ரொம்ப அழகா இருக்கீங்க!"'என்று அவளை இறுக்கமாக அணைத்து விடுத்தாள். 

 

அதில் பதறிய பியூட்டிஷியன், புடவை கசங்கி விட போகிறது என்று படபடத்தார்கள். 

 

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது" என்று அவளே புடவையை லேசாக சரி செய்து, வாங்கண்ணி போகலாம்" என்று அழைத்துக் கொண்டு மணமேடைக்குச் சென்றாள். 

 

அங்கு அதன் பிறகு சில சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்ததும் மணமகனையும் அழைத்து, மணமகள் அருகே நிற்க வைத்தனர். 

 

சிவன்யாவோ குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். பக்கத்தில் நிற்கும் தேவ்வை அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. தனக்குள் இருந்த ஆர்வத்தை மறைத்துக் கொண்டு வெட்கப்பட்டு கொண்டே இருக்க, அவளது தோழிகள் ஒவ்வொருவராக வந்து, அவளின் அருகில் நின்று மாப்பிள்ளை பற்றி கூறி, "பார் டி, பாருடி" என்று அவள் நாடி பிடித்து நிமிரச் செய்தார்கள். 

 

இருந்தும் அவள் தலை குனிந்து இருக்க, தோழிகளின் பேச்சும் அவளின் செய்கையும் அருகில் இருந்த தேவ்விற்கு மிகத் தெளிவாகவே கேட்டது. இருந்தும் அவன் எதையும் சட்டை செய்து கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்டு, வரும் சொந்தங்கள் கொடுக்கும் பரிசுகளையும் வாழ்த்துகளையும் வாங்கிக் கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தான். 

 

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சிவன்யாவின் தோழிகள், "என்ன மாப்பிள்ளை சார்? வந்ததிலிருந்து நீங்க ரொம்ப பிசியா ஃபோட்டோக்கு போஸ் கொடுத்து கொண்டே இருக்கிறீங்க? எங்க ஃபிரண்ட பாக்கவும் மாட்டீங்க? அவள் கூட பேசவும் மாட்டேங்கறீங்க? என்று அவனிடம் கேள்வி கேட்க, 

 

அவனும் தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி, "நீங்க இத்தனை பேர் சுத்தி நிக்கும் போது, நான் எப்படி அவள் கிட்ட பேச முடியும்?" என்றான். 

 

"ஓஹோ.. இப்ப நாங்க இங்க நிக்கிறதுதான், அவருக்கு பிரச்சனையாம்டி" என்று கோரசாக இரண்டு தோழிகள் பேச, "சும்மா இருங்கடி" என்று சிவன்யா அவர்களை தடுத்தாள். 

 

"நாங்க இல்லன்னா, நீங்க சிவன்யா கிட்ட நல்லா பேசுவீங்களோ! அப்ப நாங்க எல்லாம் போயிடட்டுமா?" என்று கேள்வியாக இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனிடம் கேட்க, 

 

இன்னைக்கும் நாளைக்கும் மட்டும்தான் நீங்க அவ கூட இருக்க முடியும். அப்படி இருக்கும் போது நான் உங்களை போகச் சொல்வேனா? அதனால இந்த ரெண்டு நாள் நீங்க அவ கூட தாராளமா பேசி மகிழ்ந்துக்கோங்க, அதுக்கப்புறம் நான் அவள் கிட்ட பேசிக்கிறேன்" என்று சகஜமாகவே பேசினான். 

 

சிவன்யா தன் தோழிகளை தான் கண்டித்தாள். "ஏன் சும்மா அவர்கிட்ட போய் வம்பு இழுத்துகிட்டு இருக்கீங்க?" என்று. 

 

"உன் வருங்கால புருஷனை சொன்னதும், கோபம் வருகிறதோ!" என்று அதற்கும் கிண்டல் செய்தனர் தோழிகள். 

 

நிச்சயம் முடிந்ததும் வந்திருந்தவர்கள் புகைப்படம் எடுத்து உணவு உண்டு கிளம்பினார்கள். 

 

சிவன்யாவின் தோழிகளும் காலையில் வருவதாக சொல்லி கிளம்பிவிட்டு, தேவ்வை பார்த்து, "நாங்க கிளம்பிட்டோம், இனிமேலாவது எங்க சிவன்யாவுடன் பேசுங்க" என்று கூற, 

 

"உங்க சிவன்யாவா?" என்று அவர்கள் சொன்னது போலவே கூற, 

 

சிரித்த தோழிகள் "நாளை காலை, நீங்க அவள் கழுத்தில் தாலி கட்டும் வரை எங்க சிவன்யா தான். அதன் பிறகு தான் உங்க சிவன்யா ஆவாள்" என்று சொல்லிவிட்டு நாள் காலை பார்ப்போம் என்று கிளம்பினர். 

 

அவர்கள் கிளம்பியது "உஃப்" என்று மூச்சு விட்டு, அப்பா மழை பெய்து ஓய்ந்தது போல இருக்கு" என்று சொல்லி சிவன்யாவை பார்த்தான். 

 

அவளும் அவனை வெட்கத்துடன் பார்க்க, "ரொம்ப நேரமா நின்று கொண்டே இருக்கிறோமே! உனக்கு கால் வலிக்கிறதா?" என்றான் அவள் முகம் பார்த்து.

 

"இல்லை" என்று காற்றுக்கு கூட வலிக்காதவாறு கூறி தலை கவிழ்ந்தாள். 

 

'ரொம்ப வெட்கப்படுவா போல இருக்கே' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, "கேட்கலை" என்றான். 

 

உடனே நிமிர்ந்து, அவன் முகம் பார்த்து, மறுப்பாக தலையாட்டினாள். 

 

"சரி, ஆல்மோஸ்ட் எல்லாருமே கிளம்பிட்டாங்க. நம்ம சாப்பிட போகலாமா?" என்றான், மேலும் அவளிடம் பேசும் சாக்கில். 

 

அவளோ சரி என்று தலையாட்டி விட்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள். 

 

மேடையில் அவர்கள் மட்டுமே இருக்க, அந்த ஹாலில் ஆங்காங்கே சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டும், ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள். சிவன்யாவின் கண்களோ தன் தாயை தேடியது. 

 

அப்பொழுது வேகமாக அங்கு வந்த மேகநாதன், இருவரையும் பார்த்து புன்னகைத்து, "சாப்பிட போகலாமா மச்சான்" என்று தேவ்வை பார்த்தான்.

 

"போகலாம், இப்பொழுதுதான் சிவன்யா கிட்டயும் கேட்டுக்கிட்டு இருந்தேன்" என்று சொல்லியபடியே தன் மாலையை கழட்டப் போக, 

அப்பொழுது அங்கு வந்த பார்வதி "நீயாவே கலட்டக்கூடாதுப்பா" என்று சொல்லி மேக நாதனை கழட்டும்படி சொல்லிவிட்டு, சிவன்யா அணிந்திருந்த மாலையை அவர் கழட்டி, அவர்கள் உட்கார்ந்து இருந்த சோபாவில் வைத்துவிட்டு, "வாங்க போய் சாப்பிடலாம்" என்று அவர்களை அழைத்துக் கொண்டு, சாப்பிடும் இடத்திற்கு சென்றார். 

 

அதற்குள் சிவநேசனும் சிவகாமியும் வந்திருப்பவர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அவர்களும் சாப்பிட வந்தார்கள். பெரிய வட்ட மேஜையில் இரு குடும்பங்களும் சுற்றி அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு தேவையானதை ஹோட்டல் ஊழியர்கள்

பரிமாறினார்கள். எல்லோரும் பேசி மகிழ்ந்து சாப்பிட்டு முடித்தனர். 

 

 

 

- தொடரும்..

 

 

- அருள்மொழி மணவாளன்

 


 
Posted : July 13, 2026 1:20 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

DEV NALLA CHARACTER THAN POLA


 
Posted : July 22, 2026 1:42 pm

Scroll to Top