வெளிச்சம் - 11
அத்தியாயம் 11
நிச்சயம் முடிந்து வந்திருந்த விருந்தினர் அனைவரும் சென்ற பிறகு, மீதம் இருந்த மணமகன் மணமகள் வீட்டினர் மட்டுமே உணவு உண்ண அமர்ந்தனர். அப்பொழுது தேவ் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசினான்.
சிவன்யாவின் குடும்பத்தில் உள்ள மூவருக்குமே இத்தனை நாள் அவன் பேசாமல் இருந்த வருத்தம் எல்லாம் மறைந்து, அவனுடன் மகிழ்வாகவே பேசினார்.
பேசியபடியே சாப்பிட்டு முடிக்க, நேரம் பன்னிரெண்டு நெருங்கிக் கொண்டு இருந்தது. காலையில் சீக்கிரம் எழ வேண்டுமே என்று, சிவன்யாவையும் நளினியையும் சென்று உறங்கும்படி கூறினார் சிவகாமி.
அவர்கள் இருவரும் தலையாட்டி எழ, அவளின் அருகில் இருந்த தேவ், "குட் நைட் சிவன்யா" என்றான் புன்னகைத்து.
அவளும் அவனைப் பார்த்து "குட் நைட்" என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, நளினியுடன் அவளது அறைக்கு செல்ல, அவர்களுக்கு துணையாக மேகநாதன் எழுந்து "நான் போய் விட்டு விட்டு வருகிறேன்" என்று அவர்களை பின்தொடர்ந்தான்.
திரும்பி வந்த மேகநாதன் "எல்லோருமே போய் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே!" என்றான்.
தேவ்வும், "நானே சொல்லலாம் என்று தான் இருந்தேன். கொஞ்சம் எனக்கு ரெஸ்ட் வேணும், காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கணும்மா?" என்று தன் தாயிடம் கேட்டான்.
"நீ கொஞ்சம் சீக்கிரம் எழுந்து வா தேவ். உனக்கு நலுங்கு எல்லாம் வைக்க வேண்டுமே!" என்றார்.
"ஏன்மா? அதெல்லாம் பண்ணனுமா? அதான் ஐயர் வைத்து தானே திருமணம் செய்கிறோம்! எல்லா சடங்கும் அதிலேயே வருமே!" என்று தயக்கமாக கேட்டான்
விஸ்வநாதனும் "விடு பார்வதி, இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்திருந்தாலாவது, அனைத்தையும் செய்யலாம். இன்று காலையில் தான் வந்து இறங்கி இருக்கிறான். அவனை எதற்கு தொந்தரவு செய்கிறாய்? நன்றாக தூங்கி எழுந்தால் திருமணத்திற்கு பொழிவாக இருப்பான்" என்று மனைவியிடம் ஆரம்பித்து "நீ போய் தூங்கு பா" என்று மகனிடம் முடித்தார்.
அவனுக்கு பக்கத்து அறை தான் மேகநாதன் உடையது என்பதால், அவனும் "சரி அப்பா அம்மா, நீங்களும் போய் தூங்குங்கள். உங்கள் அறைக்கு வந்து உங்களை விட வேண்டுமா?" என்று கேட்டான்.
"இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிய சிவநேசன், மருமகனிடம் "நல்லா துங்கி ஓய்வெடுங்க மாப்பிள்ளை" என்று கூறி அனுப்பினார்.
தேவ்வும், மேகநாதனும் அங்கிருந்து கிளம்பியதும், விஸ்வநாதனின் கையை பற்றி கொண்ட சிவநேசன், "இப்பதான் எனக்கு நிம்மதியாக இருக்கு சம்பந்தி. மாப்பிள்ளை மதியம் வரை பேசாமல் இருந்தது, எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போ நல்ல கலகலன்னு பேசுறாரு. என் பொண்ணு நல்லா பார்த்து பாருன்னு எனக்கு நம்பிக்கை வந்து விட்டது" என்றார் உணர்ச்சிவசமாக.
"ரொம்ப நன்றி சம்பந்தி. உங்கள் வாயிலிருந்து இந்த வார்த்தை இப்பொழுதாவது வந்ததே! என்று எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
என்னதான் நீங்கள் எங்களுடன் சிரித்து பேசினாலும், உங்கள் முகத்தில் ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது. அதற்கு காரணம் தேவ் தான் என்று எங்களுக்கு நன்கு தெரியும். அவனிடமும் நான் பலமுறை சொல்லியிருந்தேன், உங்களிடமும் எல்லோரிடமும் பேசும்படி, ஆனால் அவன் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தான்.
நேற்று இரவு கூட மேகநாதன் தம்பி ரொம்ப வருத்தப்பட்டார். அதுவும் எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போ உங்க எல்லாரும் முகத்திலும் சிரிப்பை பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது" என்றார்.
"சரிங்க சம்பந்தி, இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும். வாங்க போய் தூங்குவோம்" என்று உறங்குவதற்கு அவரவர் அறைக்கு சென்றார்கள். அடுத்தடுத்த அறை என்பதால் ஒன்றாகவே சென்றார்கள்.
மறுநாள் இனிமையாக விடிந்தது. காலையில் எழுந்த சிவகாமி விரைவாக தன் மகளை எழுப்பினார். அலங்காரம் செய்யும் பெண்கள் வருவதற்குள் குளித்து தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு இருவருக்கும் குடிப்பதற்கு வாங்கி கொடுத்தார்.
சூடாக பால் உள்ளே சென்றதும் சற்று சுறுசுறுப்படைந்த பெண்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் குளித்து, பியூட்டிஷியன் வரவிற்காக காத்திருக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்களும் வந்து, மணப்பெண் அலங்காரத்தை தொடங்கி விட்டார்கள்.
முகூர்த்த நேரம் நெருங்க ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள். மேகநாதன் தன் நண்பன் சங்கருக்கு போன் செய்து, வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் தயாராகி விட்டார்கள் என்றால், அழைத்து வரும்படி சொல்லி, இங்கு வருபவர்களை கவனிக்க தொடங்கினான்.
மேடையில் ஐயர் கேட்கும் பொருட்களை சிவகாமியும், பார்வதியும் எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். குறித்த நேரத்தில் திருமணத்திற்கு உரிய சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் ஆரம்பம் ஆகியது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்து, மண உடையை கொடுத்து அனுப்பிய ஐயர், முகூர்த்தத்திற்கான ஏற்பாடை செய்ய தொடங்கினார்.
முதலில் தயாராகி வந்த தேவ்வை அமர்த்தி, திருமணத்திற்கான மந்திரங்களை சொல்லி கொண்டு இருக்க, கல்யாணம் பெண்ணை அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் சொன்னதும், நளினியும், உறவுக்கார பெண்களும் சென்று, சிவன்யாவை அழைத்து வந்தார்கள்.
தேவதை போல தோழிகளுடன் நடந்து மண மேடைக்கு வந்தாள் சிவன்யா.
சபையினரை வணங்கி, தேவ்வின் அருகில் சிவன்யா அமர்ந்ததும், திருமணத்திற்கு உரிய மந்திரங்களை ஐயர் சொல்லிக்கொண்டே, மணமக்கள் இருவரையும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய வைத்தார்.
நல்ல நேரம் நெருங்க, மாங்கல்யம் வந்திருந்த பெரியவர்கள் ஆசீர்வதித்து மேடைக்கு கொண்டு வந்தததும், ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்ல, மங்கல வாத்தியங்கள் உச்சஸ்தாணியில் முழங்க, ஐயர் கூறியபடி தேவ் பொண் தாலியை எடுத்து சிவன்யாவின் கழுத்தில் அணிவித்து தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.
இரு கரங்கள் கூப்பி வணங்கி, தலை கவிழ்ந்து தேவ் அணிவித்த தங்கத் தாலியை ஏற்று, அவனை தன் கணவனாக உளமார ஏற்றுக் கொண்டாள் சிவன்யா.
தேவ் சிவன்யா கழுத்தில் தாலி அணிவிக்கும் பொழுது வந்திருந்த சொந்தம் பந்தம் அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதித்து மகிழ்தனர்.
சிவன்யாவின் அருகில் இருந்த அவளது தோழிகளோ "ஓஹோ" என்று கத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அடுத்தடுத்து செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் ஐயர் சொல்லச் சொல்ல மணமக்கள் ஸ்ரத்தையாக செய்தார்கள்.
திருமணம் என்று முடிவாகியதிலிருந்து இன்று வரை, சிவன்யாவை பார்க்கும் வரை அவன் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனால் இன்று அவளுடன் மிக சகஜமாக சாதாரணமாகவும் பேசுவது அவளுக்கு ஆச்சரியமாகவும் நிம்மதியாகவும் இருந்தது.
அவளுக்குத்தான் அவனுடன் பேசுவதற்கு வெட்கமாகவும் தயக்கமாகவும் இருந்தது. இப்படியே அனைத்து சம்பிரதாயங்களும் முடிய, வந்திருந்த சொந்தங்களும் பந்தங்களும் இருவருக்கும் வாழ்த்து சொல்லி, புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவையும் முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
நல்ல நேரத்தில் மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த சிவன்யாவின் பெற்றோர்கள், அவர்களை வரவேற்பதற்காக தான் முதலில் சென்று விடுவதாக சிவகாமி கூறினார்.
அதன்படி சிவகாமியும் சிவநேசனும் முதலில் வீட்டிற்குச் சென்று விட, மணமக்களை அழைத்துக் கொண்டு விஸ்வநாதன் பார்வதி நளினி மூவரும் ஒரு காரில் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
ஹோட்டலில் முடிக்க வேண்டிய கணக்கு இருக்க, நண்பன் சங்கரை அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு, திருமண செலவு கணக்கை ஹோட்டலில் முடித்துவிட்டு வருவதாக கூறினான் மேகநாதன்.
ஏற்கனவே சிவன்யாவின் குடும்பங்கள் சொந்தங்கள் வீட்டில் இருக்க அவர்கள் மணமக்களை வரவேற்பதற்கு தயாராக ஆழம் கரைத்து வைத்திருந்தனர்.
சற்று நேரத்திற்கெல்லாம் மணமக்கள் வந்துவிட, அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று அமர வைத்து, பாலும் பழமும் கொடுத்து, மற்றும் வீட்டில் செய்ய வேண்டிய சில சம்பிரதாயங்களை செய்தார் சிவகாமி. பின்னர் தேவ்வை பார்த்து "நீங்க வேண்டுமென்றால், கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோங்க தம்பி" என்றார் மருமகனிடம்.
அவனுக்கும் ஓய்வு தேவைப் பட்டாலும், இன்று அவர்களின் சொந்தங்கள் உடனே ஊருக்கு கிளம்புவதால், "பரவாயில்லை அத்தை. எல்லோருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
ஒரு மணி நேரத்தில் மேகநாதனும் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட, அனைவருக்கும் இரவு உணவு தயார் செய்து, அவர்களை வழி அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் சிவகாமி.
"எதற்கு அண்ணி நீங்கள் இப்படி கஷ்டப்படுறீங்க. நாங்கள் ரயில்வே ஸ்டேஷனிலேயே ஏதாவது வாங்கி சாப்பிட்டு கொள்வோமே!" என்றார் விஸ்வநாதனின் சொந்தங்களில் ஒருவர்.
"இதில் என்ன இருக்கிறது. பயணத்திற்கு இலகுவாக இட்லி தான் தயார் செய்ய சொல்லி இருக்கிறேன். வழியில் ஏதாவது வாங்கி சாப்பிட்டு, சிறுவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?" என்ற சிவகாமி, அனைவருக்கும் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, அடிக்கடி வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைக்க, மேகநாதனின் நண்பன் சங்கர் வழக்கம் போல் அவர்களை ஏற்றிக் கொண்டு, ரயில் நிலையத்தில் விட்டு வருவதாக கிளம்பினான்.
மேகநாதன் அவன் கூடவே கிளம்ப, "நீங்கள் எதற்கு தம்பி அலைகிறீர்கள். அதான் சங்கர் தம்பி எங்க கூட வராரு இல்ல, அதுவே போதும். நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுங்கள்" என்று பெரியார் ஒருவர் கூற,
"அதெல்லாம் பரவாயில்லை சித்தப்பா. ஸ்டேஷன் வரை வரவில்லை என்றால் எனக்கும் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும். இனிமேல் அவ்வளவாக வேலை இல்லையே! ஓய்வு தானே, மெதுவாக எடுத்துக் கொள்ளலாம்" என்று தாய் தந்தையரிடமும் சொல்லிவிட்டு, அவர்களுடனே ரயில் நிலையம் சென்று அனைவரையும் பத்திரமாக வண்டியில் ஏற்றிவிட்டு, வண்டி கிளம்பியதும் நண்பனுடன் அங்கிருந்து கிளம்பினான்.
ஒரு வண்டி மட்டும் நேராக வீட்டிற்கு வந்து மேக நாதனே இறக்கி விட, சங்கரிடம் "நாளைக்கு உன் ஆபீஸ்க்கு வந்து எவ்வளவு என்று கணக்கு பார்த்து தருகிறேன் டா" என்றான்.
"ஒன்றும் அவசரம் இல்லைடா. உன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மெதுவா வா" என்று சொல்லிவிட்டு அவனும் கிளம்புவதாக கூற, வீட்டிற்கு அழைத்து வந்த மேகநாதன், தாயிடம் சங்கர் கிளம்புவதை பற்றி கூறினான்.
அவனுக்கு சில பலகாரங்களை, "வீட்டிற்கும் உன் அலுவலகத்தில் பணிபுரிவர்களுக்கும் கொடு" என்று கொடுத்து அனுப்பினார் சிவகாமி.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 17
14 hours ago
-
வெளிச்சம் - 16
14 hours ago
-
வெளிச்சம் - 15
3 days ago
-
வெளிச்சம் - 14
3 days ago
-
வெளிச்சம் - 13
3 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
