Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 16

1 Posts
1 Users
0 Reactions
4 Views
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 
[#228]

அத்தியாயம் 16

மலர்ந்த முகமாக பதிலுக்கு காலை வணக்கம் சொல்லிய தங்கையின் முகத்தை புன்னகையாக பார்த்துக் கொண்டே அமர்ந்தான் மேகநாதன். 

 

"இரவு மண்டபத்தில் இருந்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டதா அண்ணா?" என்று கேட்டுக் கொண்டே அவன் குடிப்பதற்கு காபி எடுத்து வர இருக்கையில் இருந்து எழும்பொழுது, அங்கு வந்த பார்வதி மேகநாதனின் கையில் காபியை கொடுத்தார். 

 

புன்னகையுடன் நன்றி சொல்லி வாங்கிய மேகநாதன் தங்கையின் அருகில் அமர்ந்து கொண்டு காபியை குடித்துக்கொண்டே அவளுடன் பேசலானான்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, சிவன்யாவின் தாயும் தந்தையும் அங்கு வந்துவிட, வேலையை முடித்து பார்வதியும் வந்து அமர்ந்தார். 

 

காலை தினசரி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், அனைவரும் ஹாலில் கூடியிருப்பதை கண்டு, "என்ன எல்லோரும் உட்கார்ந்து கதையடித்து கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். 

 

தந்தை வந்ததும் எழுந்து அவர் கையில் இருந்த நாளிதழை வேகமாக வாங்கி கொண்டு வந்து அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள் நளினி. 

 

"பரவாயில்லையே, வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாலும் தினசரி படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறாயே என்று அவளை பாராட்டினான் மேகநாதன். 

 

"அட போங்க தம்பி நீங்க வேற, கடைசியில சினிமா பக்கத்தை தான் எடுத்து பார்த்துட்டு உட்கார்ந்து இருப்பா. அதை தவிர நியூஸ் பேப்பர்ல எதையும் பார்க்க கூட மாட்டா" என்று அவளை கலாய்த்தபடி நக்கலாக கூறினார் பார்வதி. 

 

"அம்மா" என்ற சிணுங்கிய நளினி அவர் கூறியது போலவே சினிமா பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு, தினசரியை மடித்து தந்தையின் கையில் கொடுத்துவிட்டு அவருக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள். 

 

அவளின் செயல் கண்டு அனைவரும் புன்னகைத்து கொண்டிருக்க, "மாமா இன்று சாயங்காலம் நாங்கள் ஊருக்கு கிளம்பலாம் என்று இருக்கிறோம்" என்றான் மேகநாதன். 

 

அதில் அதிர்ந்த சிவன்யா "என்னண்ணா சொல்றீங்க? நான்கு நாட்கள் இருப்பதாக தானே சொன்னீர்கள். அப்படித்தானே டிக்கெட்டும் எடுத்து இருந்தீர்கள்?" என்று அதிர்ச்சியாக கேட்டாள். 

 

தங்கையை சங்கடமாக பார்த்த மேகநாதன், "அப்படித்தான் எடுத்திருந்தேன் குட்டிமா. ஆனால் அலுவலகத்தில் கொஞ்சம் அதிக வேலை இருக்கிறது. என் விடுப்பை ரத்து செய்துவிட்டு வரும்படி சொல்லிவிட்டார்கள்" என்றான் தயக்கமாக. 

 

அண்ணன் அப்படி கூறியதும் அவளுக்கு தன்னால் கண்களில் கண்ணீர் முட்டியது. எழுந்து தாயின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு "அம்மா, அண்ணன் என்னம்மா இப்படி சொல்றாங்க? நீங்களாவது சொல்லுங்கம்மா? ஒரு நான்கு நாட்கள் இருந்துவிட்டு செல்லுங்கள் என்று கண்ணீருடன் தாயின் கைகளை பிடித்துக் கொண்டாள். 

 

மகள் அழுவது பெற்றோருக்கு வருத்தமாக இருக்க, "அழாதே குட்டிமா. எப்படியும் நாங்கள் நளினி கல்யாணத்திற்கு வருவோம் தானே! அப்பாவிற்கும் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டது. அண்ணனுக்கும் விடுமுறை இல்லை. அதனால் நாங்கள் இப்பொழுது போய்விட்டு நளினி கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வர பார்க்கிறோம்" என்று மகளின் தலையை தடவி விட்டபடியே கூறினார் சிவனேசன். 

 

சிவன்யாவிற்கு திடீரென்று தான் தனித்து விட்டது போல் தோன்றியது. தந்தையின் தோளில் அமைதியாக சாய்ந்து கொண்டாள். 

 

இவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்த வீடு சற்று என்று அமைதியாகிவிட்டது. அதில் பார்வதிக்கும் சங்கடமாகி போய்விட்ட, "நான் காலையிலேயே சொன்னேன் அண்ணி. பாருங்கள் இப்பொழுது சிவன்யா முகம் வாடிவிட்டது" என்றார் மருமகளின் வாடிய முகத்தை கண்டு வருந்திய படியே.

 

"அவர்களுக்கும் மகளை விட்டு பிரிந்து செல்வதற்கு விருப்பமா என்ன? அவசர வேலை என்று தானே உடனே கிளம்புகிறார்கள். நீ வேறு ஏதாவது பேசி மருமகளையும் அவர்களையும் சங்கடப்படுத்தாதே!" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, 

"உன்னுடன் இருப்பதற்காக தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். ஏதோ அவசர வேலை என்று உடனே கிளம்புகிறார்கள். நீ இப்படி வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் அவர்களும் நிம்மதியாக கிளம்ப முடியுமா? நீ கொஞ்சம் தைரியமாக இருமா. உன் அப்பா அம்மா போல நானும் உன் அத்தை உன்னை நன்கு கவனித்துக் கொள்வோம். நீ சந்தோஷமாக இருந்தால் தான் அப்பாவும் அம்மாவும் அங்கு நிம்மதியாக இருப்பார்கள்" என்று சிவன்யாவிற்கு ஆறுதல் கூறினார் விஸ்வநாதன். 

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தேவ் எழுந்து வந்தான். மேகநாதனின் அருகில் "என்ன எல்லோரும் சீரியஸா ஏதோ பேசிக்கிட்டு இருக்கீங்க போல?" என்ற படியே அமர்ந்தான். 

 

"அது ஒன்றும் இல்லை மாப்பிள்ளை. எனக்கும் மேகநாதனுக்கும் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டது. அதனால் இன்று சாயங்காலம் ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்தோம். அதைப்பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்" என்றார் மருமகனிடம் சிவனேசன். 

 

"ஓ" என்று மட்டும் சொல்லிவிட்டு தன் தாயைப் பார்த்த தேவ், "அம்மா டிபன் ரெடி ஆயிடுச்சா? மணி ஒன்பதாக போகிறதே!" என்றான். 

 

அவன் சிவனேசன் கூறியதற்கு எந்த மறுப்போ, காரணமோ கேட்காமல் சாப்பாட்டை பற்றி கேட்டதில் பார்வதியும் சற்று அதிர்ந்து விட்டார். அந்த அதிர்ச்சி குறையாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, எழுந்து உணவை எடுத்து வைக்க சென்று விட்டார். 

 

அவன் அப்படி மொட்டையாக பேசியது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. அவனின் அலட்சியம் சிவன்யாவின் கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்தது. மென்மையாக தன் மகளை பார்த்த சிவனேசன் எதுவும் பேசாமல் அவளது கண்ணீரை துடைத்து விட்டார். அவருக்கும் தேவ்வின் செயல் வருத்தமாக இருந்தாலும் தன் வருத்தத்தை மகளின் முன் காண்பிக்க கூடாது என்று அமைதியாக அழாதே என்று மறுப்பாக மகளிடம் தலையாட்டினார். 

 

அனைவரும் முகத்திலும் ஒருவித இறுக்கம் தோன்றியது. சூழ்நிலை மோசமாவதை உணர்ந்த விஸ்வநாதன், "என்ன தேவ்? அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து தான் ஊருக்கு செல்வதாக இருந்தது, இப்பொழுது திடீரென்று கிளம்புவதால் சிவன்யா வருத்தமாக இருக்கிறாள். அதனால் அவளுக்கு ஆறுதல் சொல்லும் படி ஏதாவது சொல்வாய் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி அவர்களை இன்னும் கொஞ்ச நாள் இருக்க சொல்லலாம் அல்லவா? அதை விட்டுவிட்டு இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?" என்று மகனின் அலட்சியத்தை பொறுக்காத விஸ்வநாதன், கண்டிக்கும் பாணியில் அவனிடம் கேட்டார். 

 

"இதில் என்னப்பா இருக்கிறது? அவர்கள் நான்கு நாட்கள் இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி தானே வந்தார்கள்? அவசர வேலை என்று கிளம்புகிறார்கள். அவர்களை எப்படி தடுக்க முடியும்? அது மட்டுமல்லாது பத்து மணிநேர பயணம் தானே! வேலை முடிந்தால் மகளைப் பார்க்க விரைந்து வரப்போகிறார்கள். இதில் நான் பார்மாலிட்டேசிற்காக பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்று சொல்லிவிட்டு, "வாங்க எல்லோரும் ஒன்றாக சாப்பிடலாம்" என்று உணவு மேசை நோக்கி நடந்தான். 

 

முதலில் அவனது செய்வதில் வருந்திய சிவநேசன், தேவ் கூறியதை கேட்டு நிம்மதி அடைந்தார். மருமகன் நிலவரத்தை புரிந்து கொண்டு சகஜமாக இருப்பதில் மகிழ்ந்த சிவநேகன், "அதைத்தான் நான் சிவன்யாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன் மாப்பிள்ளை. அவள் தான் அழுது கொண்டு இருக்கிறாள்" என்று நிலைமையை சீராக்கும் பொருட்டு சொல்லிக்கொண்டு, மகளை சாப்பிட அழைத்து வந்தார். 

 

அனைவரும் சுற்றி அமர்ந்து விட, பார்வதியும் சிவகாமியும் பரிமாற ஆரம்பித்தனர். "ஏன் அத்தை? எல்லோரும் பக்கத்தில் தானே இருக்கிறோம். நீங்களும் உட்காருங்கள் எல்லோருமே ஒன்றாக சாப்பிடலாம்" என்று சிவகாமியிடம் ஆரம்பித்து "உட்காருங்கள் அம்மா" என்று தன் அருகில் இடத்தை தன் தாய்க்கு காண்பித்து முடித்தான்.

 

அதன் பிறகு அனைவரும் சாதாரணமாக அவரவர்களே பரிமாறி உண்டுகொள்ள, "சாப்பாடு சூப்பர் அத்தை" என்றான் மேகநாதன். 

 

"நீங்கள் தான் அனைத்தையும் செய்தீர்களா அம்மா?" என்றான் தேவ் தாயை பார்த்து. 

 

அவரும் ஆமாம் என்று தலையாட்ட, "இன்று சிவன்யாவோட அப்பா அம்மா ஊருக்கு கிளம்புகிறார்கள் அவர்களிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருங்கள். மதிய உணவை வெளியே வாங்கிக் கொள்ளலாம், சரியா?" என்று தாயிடம் சொல்லிவிட்டு, "அப்பா, எந்த ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இருக்குமோ அங்கு மதியத்திற்கு சாப்பாடு சொல்லிவிடலாம்" என்றான் தந்தையிடம்.

 

அவருக்கும் மகன் சொல்லுவது சரியாகப்பட்டது. சரிப்பா, என்று தலையாட்டி காலை உணவை அனைவரும் பேசி உண்டு முடித்தனர். 

ஆண்கள் அப்படியே ஹாலில் உட்கார்ந்து பேச, 

சிவகாமி "நான் துணிகளை எல்லாம் எடுத்து வைக்கணும் அண்ணி" என்று சொல்லி அவர்களது அறைக்குச் செல்ல, 

பின்னாடியே பார்வதியும் அவருக்கு உதவி செய்வதற்காக சென்றார். 

 

துணிகளை எல்லாம் எடுத்து அடுக்கி மடித்து வைத்துக் கொண்டு இருக்கும் பொழுது, அங்கு அமைதியாக இருந்த நளினியை பார்த்தார் சிவகாமி. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 26, 2026 7:06 pm

Scroll to Top