வெளிச்சம் - 09
அத்தியாயம் 09
தங்கையின் திருமணத்திற்காக ஊரில் இருந்து வந்திருந்த விருந்தினர்களை, சென்னையைச் சுற்றி காண்பிக்க அழைத்துச் சென்றான் மேகநாதன்.
அதன்படியே சென்னை கடற்கரையை காண்பித்து, இரவு உணவை ஹோட்டலில் முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வந்தார்கள்.
மேக நாதனை பற்றி விஸ்வநாதனிடம் புகழ்ந்து தள்ளினார்கள் மாப்பிள்ளை வீட்டினர். மேக நாதன் தம்பியும், அவருடைய நண்பர்களும் எங்களை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க. இப்படிப்பட்ட குடும்பத்துல பெண் எடுப்பதற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும் என்று.
அவரும் தன் சொந்தக்காரர்களின் கூற்றில் மகிழ்ந்தார்
அன்றைய பொழுது அப்படியே அனைவருக்கும் மகிழ்ச்சியாக கழிந்தது
இரவு விஸ்வநாதனிடம், "நாளை காலை நாம் இருவரும் சென்று, மாப்பிள்ளையை அழைத்து வரலாம், மாமா" என்றான்.
அவரோ தயக்கமாக "இல்லை தம்பி, அவன் நேராக ஹோட்டலுக்கு சென்று விடுவதாக கூறுகிறான். யாரையும் வந்து அலைய வேண்டாம் என்றும் சொல்கிறான்" என்றார் தயக்கமாக.
"இதில் என்ன அலைச்சல் இருக்கு மாமா. வீட்டிற்கு முதன் முதலில் வரும் மாப்பிள்ளையை நேரில் சென்று வரவேற்பது எங்களது கடமைதானே" என்றான்.
அவரோ தயக்கமாக பார்க்க,
'மாப்பிள்ளைக்கு தங்கள் வீட்டில் இருந்து வருவதை விரும்பம் இல்லை போல' என்று நினைத்துக் கொண்டு,
"அப்படி என்றால் என் நண்பன் சங்கரிடம் சொல்கிறேன் மாமா. அவன் டிராவல்ஸ் தான் வைத்து இருக்கிறான். காலையில் உங்களையெல்லாம் அழைத்து வர வந்தானே" என்று கூற, அவரும் ஆமாம் என்று தலையாட்டினார்.
"அவன் சென்று மாப்பிள்ளையை அழைத்து, ஹோட்டலில் விட்டு விடுவான். இதற்கும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அவ்வளவாக சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்" என்று தன் வருத்தத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டான் மேகநாதன்.
அவருக்கும் இதற்கு மேல் மறுப்பது தவறாக பட, "சரி தம்பி, நான் அதை அவனிடம் சொல்லிவிடுகிறேன்" என்று கூறிவிட்டு அவனுக்கு ஃபோனில் வாய்ஸ் மெசேஜ்ல் சங்கர் நம்பரையும் அனுப்பிவிட்டார்.
சிறிது நேரம் அங்கு அமைதியாகவே நின்று இருந்தான் மேகநாதன். அவனின் தோளில் கைவைத்த விஸ்வநாதன், "என்ன தம்பி?" என்றார் அமைதியாக.
ஒன்றும் இல்லை என்று தலையாட்டிய மேகநாதன், "நாளைக்கு ஹோட்டலுக்கு வந்த பிறகாவது எங்கள் கிட்ட பேசுவாரா?" என்று சந்தேகமாக கேட்டான்.
அதில் வருந்திய விஸ்வநாதன் "எனக்குமே அவன் ஏன் இப்படி செய்கிறான் என்று தெரியவில்லை தம்பி? இதற்கு முன்பு எல்லாம் அவன் எல்லோரிடமும் கலகலவென்று தான் பேசுவான். துபாய்க்கு வேலைக்கு போகும் போது கூட முதலில் விருப்பம் இல்லாமல் தான் சென்றான். ஆனால் இப்பொழுது அவனுக்கு இங்கு வருவதற்கு விருப்பமே இல்லை. எங்களிடமும் அதிகம் அவனாக பேசுவதில்லை. நாங்களா பேசினாக்கா, கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு வைத்து விடுவான்" என்றார் சோகமாக.
'தேவ் இயற்கை குணமே இப்படித்தான் போல' என்று நினைத்துக் கொண்ட மேகநாதன், விஸ்வநாதன் முகத்தில் இருந்த கவலையை கண்டு, தாமும் அவரை மேலும் கவலை படுத்தி விட்டோமே என்று வருந்தினான்.
"சாரி மாமா, நான் கேட்டது உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிச்சுக்கோங்க? மனசுக்குள்ள இருந்ததை அப்படியே கேட்டுட்டேன்!" என்றான் அவரை மன்னிப்பாக பார்த்தபடி.
"இதில் என்ன தம்பி இருக்கு? அதெல்லாம் பரவாயில்லை! எனக்குமே அவன் செயல் வருத்தமாக தானே இருக்கிறது" என்ற படி,
"சரி தம்பி நீங்களும் கல்யாண வேலையா அலைந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் பொழுது சற்று ஓய்வெடுங்கள்" என்று கூறி அவனை உறங்குவதற்கு அனுப்பினார்.
மறுநாள் அனைவருக்குமே இனிமையாக விடிய, மதியம் வரை அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு நேரத்தை ஓட்டி, மதிய உணவிற்கு பிறகு ஒவ்வொருவரும் நிச்சயத்திற்கு கிளம்ப சென்றனர்.
மதியம் உணவிற்கு பிறகு சிவன்யாவுடன் நளினி சிவசாமி மற்றும் பார்வதி அனைவரையும் ஹோட்டலுக்கு அனுப்பி விட்டான் மேகநாதன்.
விஸ்வநாதன் சிவநேசன் இருவரும் வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றையெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களும் சாயங்காலம் போல ஹோட்டலுக்கு கிளம்பி விட்டார்கள்.
விஸ்வநாதனின் உறவினர் ஒருவரிடம், வீட்டில் இருப்பவர்களை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு வரும்படியும், கவனமாக வீட்டை பூட்டிவிட்டு வாருங்கள்" என்று பொறுப்பை ஒப்படைத்து, தனது டூவீலரில் நிச்சயதார்த்தம் நடக்கும் ஹோட்டலுக்கு கிளம்ப பார்த்தான்.
பொறுப்புகளை வாங்கியவர், "நேற்று வரை உங்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி எப்பொழுது இல்லையே! ஏன் தம்பி?" என்று மேகநாதன் முகத்தை பார்த்து கேட்டார்.
"அப்படியா?" என்று அங்கு சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் தன் முகத்தை இருபுறமும் பார்த்து, "தெரியலையே சித்தப்பா, ஒருவேளை அலைச்சலாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு, "பத்திரமாக எல்லோரையும் கூட்டிட்டு வாங்க" என்று மீண்டும் கூறி கிளம்பினான்.
அவன் மனம் முழுவதும், இன்று காலை சங்கர் சொல்லிய விஷயத்தை ஓடிக்கொண்டு இருந்தது. நேற்று விஸ்வநாதனிடம் சங்கர் சென்று மாப்பிள்ளையை அழைத்துக் கொள்வான் என்று விஷயத்தை சொல்லிய பிறகு, சங்கருக்கு அழைத்து, நாளை காலை, மூன்று மணி அளவில் ஏர்போர்ட்டுக்கு போய், மாப்பிள்ளையை அழைத்து. ஹோட்டல் அறையில் விட்டு விடும்படி கேட்டான்.
"அதில் உனக்கு எதுவும் சிரமம் இல்லையே சங்கர்?"
"டேய், இதுல என்ன சிரமம் இருக்கப் போகிறது. நம்ம தங்கச்சிக்காக செய்றேன். அது மட்டும் இல்லாம, என்னுடைய வேலையே அதானே!" என்றவன்.
சொல்லியபடியே மூன்று மணிக்கு ஏர்போர்ட் சென்று விட்டான். அங்கு தேவ்வையும் பார்த்தான். பார்த்தவுடன் அவனுக்கு பிடித்து விட்டது. சிவன்யாவிற்கு சிறந்த ஜோடி தான் என்று நினைத்துக் கொண்டான்.
புன்னகையுடன் "தான் மேகநாதனின் நண்பன் சங்கர்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,
அவனும் முகத்தில் எந்த ஒரு சிறு புன்னகை கூட இல்லாமல், தலையை மட்டும் ஆட்டி, காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.
என்ன இவர் எதுவும் பேசாமல் இருக்கிறாரே! என்று அவன் கொண்டு வந்த இரண்டு பெட்டிகளையும் வண்டியில் ஏற்றிவிட்டு, அவன் வண்டியை ஹோட்டலுக்கு நோக்கி செலுத்தியபடியே, தேவ்விடம் பேசிக் கொண்டே வந்தான்.
அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என்ற பதில் மட்டும் தான் வரும். அல்லது வெறுமனே தலையாட்டல் இருக்கும். சங்கருக்கு ஒரு கட்டத்தில் அவனுடன் பேசுவதற்கே வெறுப்பாகிவிட்டது.
'பார்த்ததும் தங்கைக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவர் வாயை திறந்து பேசவே இவ்வளவு யோசிக்கிறாரே? சிவன்யாவோ கலகலவென்று பேசும் பெண். எப்படி பொருத்தமாக இருக்கும்?' என்று நினைத்து, தேவ்வை மேலும் கீழும் பார்த்தான்.
சற்று நேரத்திற்கு எல்லாம் அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டல் வந்துவிட, செக் இன் செய்து, அவனது அறையில் விட்டு விட்டு, "எது என்றாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்றான்.
அவனும் சரி என்று தலையை மட்டும் ஆட்டி, "நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும், யாரையும் ஃபோன் பண்ண வேண்டாம் என்று சொல்லிடுங்க" என்று கூறி கதவை சட்டென்று மூடிவிட்டான்.
மேக நாதன் காலை எழுந்ததும், சங்கரிடம் மாப்பிள்ளை பற்றி விசாரிக்க, அவன் அனைத்தையும் சொல்லிவிட்டு, "எப்படிடா நம்ம தங்கச்சி அவன் கூட வாழ்வா? பேசக்கூட காசு கேட்பார் போல இருக்கே?" என்று வருத்தப்பட்டான்.
நண்பன் கூறியது அவனது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க, அவன் முகம் சற்று பொலிவிழந்து போயிட்டு. அதை சரியாக கண்டுபிடித்து ஒருவர் கேட்டு விட, தன் குழப்பத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, 'நேரில் சென்று பார்த்துக்கொள்வோம். ஒருவேளை சங்கர் என்றதால் பேசாமல் இருந்திருக்கலாம்' என்றும் ஒரு பக்கம் நினைத்துக் கொண்டான்.
திருமணம் நடக்கும் ஹோட்டலுக்கு மேகநாதன் நுழைந்ததும், சிவநேசன் அவனை, "மாப்பிள்ளை சென்று பார்த்து வரலாம்" என்று அழைத்துக் கொண்டு சென்றார்.
சிவன்யாவையும் நளினியையும் அறையில் விட்டுவிட்டு, இருவரது பெற்றோரும் மேகநாதனும் தேவ்வின் அறைக்குச் சென்றார்கள்.
"அவனின் அறைக்குச் சென்று கதவை தட்ட, கதவை திறந்த தேவ், தாய் தந்தையரை பார்த்து புன்னகைத்து, "வாங்க" என்றான்.
அவன் பின்னால் நின்ற, சிவநேசன் சிவகாமி மற்றும் மேகநாதன் அவர்களை குழப்பமாக பார்த்தான்.
முன்னால் சென்ற விஸ்வநாதன், "இவர் தான் பெண்ணின் அப்பா சிவநேசன், அம்மா சிவசங்கரி, அண்ணன் மேகநாதன்" என்று மூவரையும் அறிமுகப்படுத்த, அனைவரையும் பார்த்து புன்னகைத்த தேவ், பெரியவர்களை கையெடுத்து கும்பிட்டு "வணக்கம்" கூறி வணங்கி, மேகநாதன் கைப்பற்றி குலுக்கி "ஹாய் மச்சான்" என்றான்.
அவன் பேசியதில் அனைவருக்குமே மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. அவன் எப்படி தங்களிடம் பார்ப்பான், பேசுவான், பழகுவான் என்று யோசித்துக் கொண்டே தான் மூவரும் இருந்தார்கள். அவன் வெகு இலகுவாக மேகநாதனிடம் பேசியதில், அவனும் அவன் அருகில் அமர்ந்து கொண்டு, "சாரி மச்சான், உங்களிடம் முன்பே பேசணும் என்று நினைத்தேன். ஆனால் அப்பா ஃபோன் பண்ணும் போது கூட நீங்கள் எடுக்கவில்லையாம். அதுதான் என்று தயங்கினான்" மேகநாதன்.
"ஆமாம், அங்கு எனக்கு வேலை கொஞ்சம் அதிகம். திருமணத்திற்கு மற்றும் தங்கையின் திருமணம் என்று வரிசையாக இருபது நாட்களுக்கு மேல் விடுப்பு எடுப்பதால், அதற்குரிய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வர வேண்டிய கட்டாயம். அதனால் தான்" என்றான் அவனும் மென்மையாகவே.
"ஆமாம் மாப்பிள்ளை, வேலையை முடித்துவிட்டு வந்தால் தானே நிம்மதியாக இங்கு இருக்கும் நாட்கள் இருக்க முடியும்!" என்று கூறிய சிவநேசன், "நீங்கள் நன்றாக ஓய்வெடுத்தீர்களா? பயண களைப்பு ஏதும் இருக்கிறதா?" என்றார்.
"இல்லை மாமா, நல்லா தூங்கி எழுந்திருச்சிட்டேன். தொந்தரவு இல்லாம இருக்கணும்னு தான் யாருக்குமே ஃபோன் பண்ணலை. இப்ப கொஞ்சம் பரவாயில்லை!" என்றான்.
தேவ். மூவரிடமும் நல்ல விதமாக பேச, சிவன்யாவின் குடும்பத்திற்கு இவ்வளவு நாள் இருந்த அழுத்தம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. அவர்களும் நிச்சயதார்த்த நேரம் சொல்லி, "அப்பொழுது தயாரானால் போதும், அதுவரை நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுங்கள்" என்று சொல்லிவிட்டு நிச்சயதார்த்தத்திற்கு அவன் அணிய வேண்டிய உடுப்புகளை கொடுத்துவிட்டு சென்றார்கள்.
அவர்கள் சென்ற பிறகு விஸ்வநாதன் மகனிடம் கடிந்து கொண்டார். "இப்பொழுது இப்படி பேசுபவன், அவர் ஃபோன் பண்ணும் பொழுது எடுத்து பேசி இருக்கலாம் இல்லையா. அவரும் கொஞ்சம் நிம்மதியாக கல்யாண வேலையை பார்த்திருப்பார் இல்லையா?" என்று மகனை கண்டித்தார்.
"அதனால் என்னப்பா? இப்பொழுது தான் அவங்க கிட்ட நல்லா பேசினேனே. அவங்களுக்கும் அது சந்தோஷமா தானே எடுத்துக்கிட்டாங்க. முடிந்ததை விடுங்க, நிச்சயதார்த்த வேலை எதுனா பார்க்க வேண்டியது இருந்தால் போய் பாருங்க. நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறேன்" என்று கூறி, தாய் தந்தையரை அறையில் இருந்து வெளியேற்றினான் தேவ்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 17
14 hours ago
-
வெளிச்சம் - 16
14 hours ago
-
வெளிச்சம் - 15
3 days ago
-
வெளிச்சம் - 14
3 days ago
-
வெளிச்சம் - 13
3 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
