வெளிச்சம் - 08
அத்தியாயம் 08
மணமகனின் குடும்பம் வீட்டிற்கு வந்ததும் கல்யாண வீடு பரபரப்பாகியது போல் தோன்றியது. அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் சிவநேசன் சிவகாமி தம்பதியினர்.
அவர்கள் அனைவரும் குளித்து தயாராக இடங்களை காண்பித்த மேகநாதன், "எல்லோரும் கொஞ்சம் சீக்கிரம் தயாராகி வந்தீங்கன்னா, அப்படியே பந்தக்கல் நடும் வேலையை ஆரம்பித்து விடலாம்" என்றான்.
அவர்களும், சரி தம்பி சீக்கிரம் வந்துவிடுகிறோம் என்று கூறி தயாராக சென்றார்கள்.
அவர்கள் ஒவ்வொருவராக குளித்து தயாராகி வர, அனைவருக்கும் குடிப்பதற்கு சூடாக பானம் கொடுக்கப்பட்டது. முதலில் தயாராகி வந்த விஸ்வநாதன் பார்வதி மற்றும் நளினி மூவரும், மருமகள் சிவன்யாவைச் சென்று பார்த்து வந்தார்கள். பின்னர் பந்தக்கல் நடுவேலையை ஆரம்பிக்க, ஒவ்வொருவராக வந்து அனைவரும் கலந்து கொள்ள, பந்தக்கால் நடும் சடங்கு மிகவும் சிறப்பாக முடிந்தது.
மாப்பிள்ளை வீட்டிலிருப்பவர்கள், சென்னை வருவதால், ஐந்து நாள் கணக்கில் முன்பே தேவ்வின் வீட்டில் பந்தத்தால் நடும் விழா முன்றைய தினமே முடிந்திருந்தது.
விஸ்வநாதன் உடன் வந்த அவனது சொந்தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதில் ஒருத்தர் "அண்ணா, நாங்க பொண்ணு வீட்டுக்காரங்களாக ஆகிட்டது போல இருக்கு" என்று கூறி சிரித்தார்.
"இதுல என்ன இருக்கு மா? திருமணத்திற்கு பிறகு எல்லோரும் ஒரே குடும்பம் தானே!" என்று அவரும் மகிழ்ந்தார்.
அனைவருக்கும் காலை உணவு தயாராகி கொண்டிருக்க, மணப்பெண்ணிற்கு நலுங்கு வைக்க வேண்டும் என்று கூறிய சிவகாமி, அவர்கள் வீட்டு ஹாலிலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். போட்டோகிராஃபரும் காலையிலேயே வந்திருக்க, நீல நிற புடவையில் அழகாக மயில் போல் வந்து அம்மா சொன்ன மணையில் அமர்ந்தாள் சிவன்யா.
சிவனேசன் சிவகாமி வீட்டில் நெருங்கிய சொந்தங்களும் மற்றும் மாப்பிள்ளை வீட்டில் நெருங்கிய சொந்தங்களாக அவர்களது வீடு நிறைந்து இருந்தது.
சிவன்யாவின் தோழிகள் சிலரும் வந்திருக்க அவர்களுடன் சேர்ந்து கொண்ட நளினி சிவன்யாவை ஏதேதோ கேலி பேசி மகிழ்ந்தாள். இப்படியே மகிழ்ச்சியாக மணப்பெண்ணிற்கு நலங்கு வைக்கும் சடங்கும் தொடங்க, அனைத்தையும் புகைப்படக்காரர் புகைப்படங்களாக எடுக்க, அதற்கு முன்னரே நளினி ஒவ்வொன்றையும் எடுத்து அவளது அண்ணனுக்கு அனுப்பி வைத்தாள்.
நலுங்து வைக்கும் சடங்கு சிறப்பாக முடிந்ததும், அனைவரையும் காலை உணவு உண்ண படி வீட்டின் பக்கத்தில் போட்டிருக்கும் பந்தலுக்கு அழைத்துச் சென்றான் மேகநாதன். திருமண ஏற்பாடுகளை எல்லாம் பார்த்த விஸ்வநாதன், மேகநாதன் பாராட்டினார்.
"எல்லாம் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் தம்பி. உங்கள் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர். அவருக்கு வேலை செய்ய நீங்கள் இருக்கிறீர்கள்" என்று மகிழ்வாக கூறினார்.
"இதில் என்ன இருக்கு மாமா, மாப்பிள்ளையும் இங்கு இருந்தால் உங்களுக்கு துணையாக இருந்திருப்பார். அவர் வெளிநாட்டில் அல்லவா இருக்கிறார்?" என்று சொல்லிவிட்டு "அவர் எப்பொழுது வருவார் மாமா?" என்று அவரின் முகம் பார்த்தான்.
"இன்று பின் இரவு அங்கிருந்து கிளம்புவதாக கூறினான். எப்படியும் நாளை விடியற்காலைக்கு வந்து விடுவான். நாளை இரவு தானே நிச்சயதார்த்தம்" என்று மேகநாதன் பார்த்த விஸ்வநாதன், "அவன் உங்களிடமும் பேசவில்லையா தம்பி" என்று கவலையாக கேட்டார்.
அவனும் இல்லை என்று மறுப்பாக தலையாட்டி, "ஃபோனில் பேசுவதற்கு தயங்கி இருக்கலாம மாமா, நாளை காலை தான் வந்து விடுவாரே! அப்பொழுது நேரிலேயே பேசிக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, "அனைவரும் நன்றாக சாப்பிட்டீர்களா?" என்று விசாரித்தான்.
விஸ்வநாதன் குடும்பத்தின் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இன்று வந்திருக்க, அவர்களை தங்கள் வீட்டின் மாடியிலேயே தங்க வைத்து விட்டார் சிவநேசன்.
நாளை மற்றவர்கள் எல்லாம் ஊரிலிருந்து வருவார்கள் என்று சொல்லி இருக்க அவர்களுக்கு திருமணம் நடக்கும் ஹோட்டலுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
மணமகனுக்கு திருமணம் நடக்கும் ஹோட்டலிலேயே அறை ஏற்பாடு செய்திருக்க, அவன் நண்பர்களுக்கு அறை எதுவும் வேண்டுமா என்று மேகநாதன் கேட்கும் பொழுது, "யாரும் வரவில்லையாம் தம்பி. அவனுக்கு மட்டும் ஒரு அறை போதும் என்று சொல்லிவிட்டான்" என்றார்.
முந்திய நாள் இரவு நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடக்க வேண்டும் என்று தேவ் கூறி இருப்பதாக சொல்லப்பட்டதால், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே நிச்சயத்திற்கு அழைக்கப் பட்டிருந்தார்கள்.
நிச்சயம் முடிய எப்படியும் இரவு தாமதம் ஆகிவிடும். அதன் பிறகு மணப்பெண்ணை கூட்டிக்கொண்டு அலைய வேண்டாம் என்று ஒரு ஐந்து அறைகள் அங்கேயே புக் செய்திருந்தான் மேகநாதன். அதில் ஒன்று மணமகனுக்கு கொடுத்து விட, ஒன்றில் தன் தாய் தந்தையை இருக்க சொல்லலாம் என்று நினைத்திருந்தான்.
சிவன்யாவிற்கும் இரண்டு நேரத்திலும் மேக்கப் போட இருப்பதால், அவர்களுக்காக தனி அறையை ஒதுக்கி இருந்தான். நளினியும் அவளுடனேயே தங்கிக் கொள்வதாக சொல்லியிருக்க, அவர்கள் தாய் தந்தையருக்கும் ஒரு அறை மற்றும் தனக்கும் தன்னுடைய நண்பர்களுக்கு என ஒரு அறை, என்று முடிவு செய்து வைத்திருந்தான்.
அதைப்பற்றி அன்று மதியம் அனைவரும் இருக்கும் பொழுது தன் தந்தையிடமும் விஸ்வநாதனிடமும் தெரியப்படுத்த, அவரும் அதற்கு சம்மதம் சொல்லி தங்கள் சொந்தத்திடம் விளக்கினார்.
அவர்கள் சொந்தங்களுமே "அதுவும் சரிதான், நிச்சயம் முடிந்ததும் நாங்கள் இங்கு வந்து விடுகிறோம். எல்லோரும் அங்கு தங்க வேண்டுமென்றால் இன்னும் பல அறைகள் எடுக்க வேண்டியது இருக்கும். அதற்கே குறைந்தது லட்ச ரூபாய்க்கிட்ட ஆகும். வீடு தான் இவ்வளவு பெரிதாக இருக்கிறதே. அதை விட்டுவிட்டு வீம்புக்கு என்று ஹோட்டலில் அறை எடுத்து எதற்கு தங்க வேண்டும்? தம்பி சொல்வது போல் நீங்கள் மட்டுமே அங்கு இருங்கள். நீங்கள் தானே சீக்கிரமாக தயாராக வேண்டும். நாங்கள் எல்லோரும் முகூர்த்த நேரத்திற்கு முன்பு வந்து விடுவோம்" என்று கூறி அதற்கு சம்மதித்தார்கள்
சிவநேசனுக்கு வந்திருந்த சொந்தங்களை கண்டு உண்மையில் மனமகிழ்ச்சியாக இருந்தது. மாப்பிள்ளை வீடு சொந்தங்கள் நாங்கள் என்று முறுக்கிக் கொள்ளாமல் எளிமையாக எல்லாவற்றிற்கும் அனுசரித்துப் போவதே நினைத்து மகிழ்ந்தார்.
அதை விஸ்வநாதனிடம் பேசும் பொழுது மகிழ்ச்சியாக தெரிவிக்க,
"யாருடைய பணமாய் இருந்தால் என்ன சம்பந்தி? அனாவசியமாக செலவு செய்வது எனக்கு பிடிக்காது. மண்டபம் கிடைத்திருந்தால் எல்லோரும் மண்டபத்திலேயே தங்கி இருப்போம். இந்த செலவு கூட உங்களுக்கு இருந்திருக்காது.
எனக்கு பணத்தை அனாவசியமாக செலவு செய்வது பிடிக்காது சம்பந்தி. அந்த பணம் இருந்தால் நம் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்யலாம் என்று தான் எனக்கும் தோன்றும். அது மட்டும் அல்ல, இங்கு போல் எங்கள் ஊரில் எதுவும் ஆடம்பரமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்காதே.
திருமணம் மண்டபத்தில் நடந்தாலும் சொந்த பந்தம் என்று கூடினாலும் தேவையில்லாமல் ஆடம்பரமாக எந்த ஒரு செலவும் இருக்காது. எனக்கு நீங்கள் ஹோட்டலில் அறை எடுத்து இருப்பது கூட வருத்தமாகத்தான் இருக்கிறது" என்றார் சற்று கவலையாக.
"ஐயோ சம்மந்தி, அதெல்லாம் ஒன்றும் இல்லை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எப்படியும் அந்த ஹோட்டலுக்கும் நம் வீட்டிற்கும் குறைந்தது முக்கால் மணி நேர பயணம் செய்யணும். இரவு நிச்சயம் முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகுதான் அங்கிருந்து நம்மால் வெளியே வர முடியும். பின்னர் காலையில் எல்லோரும் வருவதற்கு முன்பு நாம் தயாராக அங்க போய் இருக்க வேண்டும். அப்படி என்றால், நாம் போவது, வந்து கிளம்புவது இப்படித்தான் ஓய்வில்லாமல் இருக்கும். அதற்காகத்தான் மேகநாதன் நம்மை அங்கே தங்கச் சொல்லி இருக்கிறான்" என்றார் சிவநேசன்.
"புரிகிறது சம்பந்தி, அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. பொதுவாக அனாவசிய செலவு பண்ண வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்" என்றார் அவரும்.
நாளை சாயங்காலம் தான் நிச்சயதார்த்தம் என்பதால், ஊரில் இருந்து வந்திருப்பவர்களை மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்று வரலாம் என்று மேகநாதன் ஏற்பாடு செய்திருக்க, அதை விஸ்வநாதனிடம் தெரிவித்தான்.
"இந்த திருமண வேலையில் இதை வேற நீங்க ஏன் தம்பி இழுத்துப்போட்டு செய்றீங்க?" என்று அவர் சங்கடப்பட்டார்.
"இதில் ஒன்றும் கஷ்டமில்லை மாமா. எல்லோருக்கும் சென்னை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்க தானே செய்யும். ஏதாவது வீட்டு விசேஷம் என்று வரும் பொழுது தானே அவர்களும் சென்னைக்கு வருகிறார்கள். திருமணம் முடிந்ததும் அன்று சாயங்காலத்திற்கே அனைவரும் கிளம்புவதாக சொல்கிறார்கள். அதனால் தான் இன்று போய் வரலாம் என்று சொல்கிறேன்" என்றான் மேகநாதன்
அவரும் அவர்கள் ஊரில் இருந்து வந்தவர்களிடம் கேட்க, அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நண்டு சிண்டு எல்லாம் கடற்கரைக்கு போகிறோம் என்று ஒரே குதியாக குதிக்க, மகிழ்ச்சியாக கடற்கரைக்குச் செல்ல கிளம்பினார்கள்.
நளினிக்கு கடற்கரைக்கு செல்ல ஆசை இருந்தாலும், சிவன்யாவை விட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்று தயங்கின்படி இருக்க,
"திருமணத்திற்கு பிறகு நான் உன் கூட தானே இருக்க போகிறேன். நீ இன்று அவர்களுடன் போயிட்டு வா. அதுதான் அவர்களுக்கும் மகிழ்வாக இருக்கும் " என்று சொல்லி அனுப்பி வைத்தால் சிவன்யா.
மேகநாதனும் அவனது நண்பர்கள் இருவரும் இரு வேன்களில் வந்திருப்பவர்களை அழைத்துக் கொண்டு மெரினா பீச்சுக்கு சென்றார்கள்.
அதிலிருந்த பெரியவர்கள் எம்ஜிஆர் சமாதி கலைஞர் சமாதிக்கும் செல்ல வேண்டும் என்று சொல்ல, இளையவர்களோ கடலில் விளையாட வேண்டும் என்றனர்.
வெளிச்சமாக இருக்கும் பொழுது சுற்றிப் பார்க்கும் இடங்களை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிய மேகநாதன், அதன்படியே முதலில் சமாதிகளை காண்பித்து விட்டு, உழைப்பாளர் சிலைகளுக்கு அருகே இருந்து அனைவரும் புகைப்படம் எடுக்க வைத்து, பின்னர் கடைகளை எல்லாம் காண்பித்து கடற்கரைக்கு அழைத்து வந்தான்.
வந்திருப்பவர்கள் சிலருக்கு முதல் முறை கடற்கரை அனுபவமாக இருக்க அவர்கள் மிகவும் மகிழ்ந்து ரசித்தனர்.
அவர்களின் வெகுளித்தனமான பேச்சையும், ரசனையையும் கண்டு மேகநாதனும் அவனது நண்பர்களுக்கும் மிக வியப்பாகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அதில் இருந்தவர்கள் அனைவரையுமே நண்பர்கள் இருவருக்கும் பிடித்து விட, ஒவ்வொருவருக்கும் தேவையானதை கேட்டு கேட்டு பார்த்து செய்தார்கள்.
மேகநாதனின் நண்பர்களையும் கண்டு மகிழ்ந்த பெரியவர்கள், 'உண்மையில் உனக்கு மிகவும் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் தம்பி" என்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்
-
வெளிச்சம் - 17
14 hours ago
-
வெளிச்சம் - 16
14 hours ago
-
வெளிச்சம் - 15
3 days ago
-
வெளிச்சம் - 14
3 days ago
-
வெளிச்சம் - 13
3 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
