வெளிச்சம் -07
அத்தியாயம் 07
சிவன்யாவின் திருமண நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. இன்று அவளது நண்பர்கள், அவள் வீட்டிற்கு வருவதாக கூறியிருக்க, காலையிலேயே எழுந்து தயாராகி அவர்களின் வரவேற்காக காத்திருந்தாள் சிவன்யா.
அவளுக்கு தேவையான அனைத்தையுமே வாங்கிக் கொடுத்திருந்த மேகநாதன்,
"இன்னும் வேறு ஏதாவது வேண்டும் என்றாலும் உடனே எனக்கு ஃபோன் செய்" என்று கூறி திருமண வேலையை பார்க்க கிளம்பினான்.
பத்து மணிக்கு மேல் நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, சிவன்யா அவர்களை அழைத்துக் கொண்டு மாடி வீட்டிற்கு சென்றாள். "என்ன வேண்டுமோ தயங்காமல் கேள்" என்று என் தாய் அவளை புன்னகையுடன் அனுப்பி வைத்தார்.
ஒவ்வொருவராக வர அனைவருமே கீழே இருந்த சிவகாமி மாடிக்கு அனுப்பும் வேலையை செய்து கொண்டு இருந்தார்.
இரண்டு மூன்று பேர் சேர்ந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும், இன்றோ பதினைந்து பேருக்கு மேல் அங்கு இருக்க, மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்! ஆடல், பாடல் என்று, கீழ் வீடு வரை சத்தம் கேட்டது.
இந்த காலத்து பிள்ளைகள், எப்படி எப்படி எல்லாம் காரணம் சொல்லி, கூடி மகிழ்கிறார்கள் என்று நினைத்து வியந்து, புன்னகையுடன் அவர்களுக்கு தேவையானதை ஒவ்வொன்றாக நேரத்திற்கு பார்த்து செய்து அனுப்பினார் சிவகாமி.
இவர் வீட்டில் செய்த உணவுகளை அனுப்பி கொண்டிருக்க, அவளுக்கு சர்ப்ரைஸ் ஆக கேக் ஆர்டர் செய்து, வர வைத்தனர் தோழிகள். பின்னர் கேக் கட் பண்ணி ஒரே அமர்க்களப்படுத்தி மகிழ்ந்தனர். நேரம் கடக்க ஒவ்வொருவராக சிவன்யாவிற்கு வாழ்த்து சொல்லி கிளம்பி, அனைவருமே சிவகாமிடம் வந்து உணவு மிகவும் சிறப்பாக இருந்ததை சொல்லி மகிழ்ந்து சென்றார்கள்.
சிவகாமி அனைவரையும், திருமணத்திற்கு முந்தின நாளே வந்து மகளுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவர்களும் மகிழ்ச்சியாக "கண்டிப்பா ஆன்ட்டி" என்று சொல்லி சென்றார்கள்.
அன்றைய பொழுது சிவன்யாவிற்கு இனிமையாக மறைய, வழக்கம் போல் இரவு நளினி ஃபோன் செய்து, அனைவரையும் விசாரித்து, சிவன்யாவிடம் கெட்டுகெதர் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டு மகிழ்ந்தாள்.
நாளை அனைவரும் சென்னை வருவதாக கூறினாள்.
"அண்ணன் ஃபோன் பண்ணாங்களா? அண்ணி" என்று சிவன்யாவிடம் கேட்டாள்.
அவளோ "இல்லையே!" என்று மென்மையாக கூற
"அப்படியா! நான் அண்ணாவிடம் சொன்னேனே? உங்களிடம் பேசும்படி!" என்றாள் நளினி கவலையாக.
"அதற்கு நீ ஏன் கவலைப்படுகிறாய் நளினி? இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் முடிந்து விடுமே! அதன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்" என்று கூறும் பொழுது அவளுக்கும் சிறிது வெட்கம் தலைகாட்டியது.
இவர்களது உரையாடல்களை கவனித்துக் கொண்டிருந்த சிவன்யாவின் பெற்றோருக்கு, தேவ் இன்னும் அவர்களை அழைத்து கூட பேசாதது வருத்தமாக தான் இருந்தது.
சிவநேசன் அவருடன் பேச முயற்சி செய்யும்பொழுதும், அவன் ஃபோன் எடுக்கவில்லை. மரியாதைக்காகவது பேச வேண்டுமே! என்று தினமும், ஓரிரு முறை தேவ்விற்கு அழைத்து விடுவார் சிவநேசன். அவன் இதுவரை அவர் அழைப்பை ஏற்கவே இல்லை. அதை நினைத்து அவர் முகத்தில் சிறிது வருத்தம் தோன்றியது.
நளினியுடன் பேசிக் கொண்டிருந்த சிவன்யா, தந்தையின் முகத்திலிருந்த கவலையை கண்டு, என்ன? என்று செய்கையால் கேட்டாள்.
ஒன்றும் இல்லை என்று புன்னகைத்து தலையாட்டிய சிவனேசன், சிவன்யாவிடமிருந்து ஃபோனை வாங்கி, நளினிடம் பேசினார்.
நாளை பத்திரமாக வரும்படி கூறி ஃபோனை வைத்தார்.
பின்னர் விஸ்வநாதனையும் அழைத்து, பயணத்தைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார். அவர்கள் வந்து தங்குவதற்கு, மாடி வீட்டை பயன்படுத்திக் கொள்ளும்படி ஏற்கனவே பேசி இருந்தார்கள். அதன்படியே அன்று பூ வைக்க வந்தவர்கள் கூட இன்னும் நெருங்கிய சொந்தங்கள் அனைவருமே இவர்கள் வீட்டிற்கு வந்து விடுவதாக பேசி இருக்க, தேவ் திருமணம் செய்ய இருக்கும் ஹோட்டலிலேயே தங்கிக் கொள்வதாக கூறிவிட்டான்" என்றார் விஸ்வநாதன்.
"அதுவும் சரிதானே சம்பந்தி, திருமணத்திற்கு முன் பொண்ணு மாப்பிள்ளை ஒரே இடத்தில் இருப்பது சங்கடமாக தானே இருக்கும்" என்றார். பின்னர் மாப்பிள்ளை இன்னும் எங்களிடம்" என்று சொல்லி, "நான் இன்னும் மாப்பிள்ளையிடம் பேசவே இல்லையே! எதுவும் கோபித்துக் கொள்ளப் போகிறார். அவருக்கு திருமணத்தில் முழு சம்பந்தம் தானே?" என்றார் கவலையாக.
"என்ன சம்மந்தி இப்படி எல்லாம் கேட்கிறீங்க? நானும் உங்களிடம் அவனை பேச சொல்லி கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவன் நேரில் வந்து பேசிக் கொள்வதாக கூறினான். அதை நினைத்து எல்லாம் வருந்தாதீர்கள். அவன் முழு சம்மதம் சொன்ன பிறகு தான் திருமண ஏற்பாட்டையே நாங்கள் செய்தோம்" என்று பதட்டமானார்.
அவரின் குரலை வைத்தே, அவர் கலங்கி விட்டார் என்று உணர்ந்து, "ஐயோ சம்பந்தி. எனக்கு மாப்பிள்ளை பேசவில்லை என்றதும் மனதிற்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால் தான் நான் கேட்டேன். நீங்கள் அதை நினைத்து வருந்தாதீர்கள்" என்று விஸ்வநாதனுக்கு ஆறுதல் கூறினார் சிவநேசன்.
இப்படியே சம்பந்தியர் பேசிக் கொண்டிருப்பதை அமைதியாக அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சிவன்யா.
அவர் பேசி முடித்ததும் "ஏன் அப்பா? அவர் பேசவில்லை என்று உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதா?" என்று தந்தையின் முகத்தைப் பார்த்தாள்.
"ஆமாம் டா, ஏற்கனவே அவசர அவசரமாக எல்லாம் நடப்பது போல் ஒரு எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அவரும் இன்னும் பேசவில்லை என்றால் கவலையாக இருக்காதா?" என்றார் மனதில் உள்ளதை மகளிடம் வெளிப்படையாக.
அவரின் கையை அழுத்தியபடி பக்கத்தில் வந்து அமர்ந்த சிவகாமி, "மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லாமலா திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்!" என்று கணவனிடம் கூறிவிட்டு, மகளைப் பார்த்து "நாளை காலையில் அவர்கள் எல்லாம் வந்து விடுவார்கள்ம்மா. அவர்கள் வருவதற்கு முன்பு நீ குளித்து தயாராக வேண்டும் அல்லவா? போய் சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுக்கலாமே!" என்றார் மகளை அக்கறையாக பார்த்து.
தந்தையின் கவலைக்கண்டு வருத்தமாக இருந்தவள், நாளை அனைவரும் வருவதை கேட்டதும் "ஆமாம் அம்மா, நளினி வந்துவிட்டால் பேசுவதற்கே நேரம் பத்தாது. இன்று கொஞ்சம் தூங்கினால் தான் சரியாக இருக்கும்" என்று தாயிடம் சொல்லிவிட்டு, தந்தையைப் பார்த்து "அப்பா உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும்ப்பா. நீங்கள் அவரை நினைத்து வருந்தாதீர்கள்" என்றாள் அவரின் கைகளை பற்றிய படி.
அவரும் சரி "மனசுக்குள்ள ஏதோ ஒரு அழுத்தம் இருந்துச்சு. அதுதான் சம்மந்தி தெளிவா சொல்லிட்டாரே! இப்ப எந்த பிரச்சனையும் இல்ல. நீ போய் ஓய்வெடு" என்று புன்னகையுடன் மகளை உறங்குவதற்கு அனுப்பினார்.
அவள் அறைக்குச் சென்றதும் "ஏங்க அவளே இன்னும் மாப்பிள்ளை பேசவில்லை என்று வருத்தத்தில் தான் இருப்பாள். நீங்களும் இப்படி நம் கஷ்டத்தை அவளிடம் தெரிவித்தால், அவளுக்கு இன்னும் கவலையாக இருக்காதா? இந்த திருமணம் முடிந்து அவள் புகுந்த வீடு செல்லும் வரைக்கும் அவள் மகிழ்ச்சியாக இருக்கணும் இல்லையா என்று கணவனின் முகம் பார்த்தார் சிவகாமி.
"நீ சொல்லுவதும் சரிதான், ஏதோ யோசனையில் அவளிடம் மாப்பிள்ளை பற்றி பேசி விட்டேன்" என்று வருந்தினார்.
அப்பொழுது அங்கு வந்த மேகநாதன் சோர்வாக சோபாவில் அமர்ந்தான். அவனுக்கு குடிப்பதற்கு எடுத்துக் கொடுத்த சிவகாமி, "என்ன மேகநாதா? என்று வேலை அதிகமா?" என்றார் கனிவாக.
"ஆமாம்மா, இன்னும் இரண்டு நாட்கள் தானே இருக்கிறது. நாளை காலை பந்தக்கால் வைக்க வேண்டுமே! அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துவிட்டு வந்தேன். அப்படியே மொட்டை மாடியில் சார்மியானா போடச் சொல்லி இருக்கிறேன். அது போலவே முன்பக்கமும் பின்பக்கமும் வெயிலுக்கு மறைவாக போட சொல்லி இருக்கிறேன்" என்று தாயிடம் சொல்லிவிட்டு,
தந்தையைப் பார்த்து "அவளுக்கு தேவையானது எல்லாம் வாங்கியாச்சு இல்லையா அப்பா? வேற எதுவும் வாங்க வேண்டும் என்றாலும் சொல்லி விடுங்கள். நாளை ஒரு நாள் அந்த வேலையெல்லாம் முடித்து விடலாம்" என்றான் பொறுப்பான அண்ணனாக.
திருமணம் முடிவானதிலிருந்து அனைத்து பொறுப்பையும் எடுத்துக்கொண்ட மேகநாதன் அனைத்தையுமே திறம்பட செய்து கொண்டிருப்பதை கண்டு பூரித்து போயின பெற்றோர்கள் இருவரும்.
"எல்லாம் ஓரளவுக்கு திருப்தியாகவே வாங்கியாச்சு மேக நாதா. அது போல உன்னை நினைத்தும் எனக்கு ரொம்ப பெருமையாகவே இருக்கிறது. எனக்கு எந்த வேலையும் அதிகம் இல்லாமல் அனைத்தையுமே நீ சட்டென்று முடித்து விடுகிறாய்" என்று மகிழ்வாக கூறினார் சிவநேசன்.
"என் தங்கச்சிக்காக செய்கிறேன் அப்பா. அது மட்டும் அல்லாது நான் வெளி வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டால், உங்களுக்கும் கொஞ்சம் அழைச்சலும் டென்ஷனும் குறையும் அல்லவா!" என்று சொல்லிவிட்டு, "நான் போய் குளித்துவிட்டு வருகிறேன்" என்று எழுந்தான்.
"சீக்கிரம் வா, சாப்பிடனும் இல்ல!" என்றார் சிவகாமி.
"ஆமாம்மா" என்று சொல்லிய மேகநாதன், "நீங்கள் இருவரும் சாப்பிட்டீர்களா? சிவன்யா சாப்பிட்டாளா?" என்று அனைவரும் உண்டு விட்டார்களா? என்று கேட்டு தெரிந்து கொண்டு, "சீக்கிரம் வந்து விடுகிறேன்" என்று குளிக்கச் சென்றான்
சொன்னது போலவே சீக்கிரமாக குளித்து முடித்து, இரவு உணவையும் முடித்துவிட்டு, அன்றைக்கு அவன் செய்த வேலைகளை சொல்லி அதற்குரிய கணக்குகளையும் தந்தையிடம் காட்டினான்.
பின்னர் "நாளை காலை ஐந்து மணிக்கு பந்த கால் வைக்க, பந்தல் போடுபவர் வந்து தேவையானவற்றை தருவதாக கூறியிருக்கிறார் அம்மா. அதனால் காலையில் என்னை கொஞ்சம் சீக்கிரமாக எழுப்புகிறீர்களா?" என்றான் தாயைப் பார்த்து.
சரி என்று தலையாட்டி சிவகாமி நீயும் கொஞ்ச நேரம் போய் தூங்கு என்று கூறி கதவுகளை எல்லாம் அடைத்து விட்டு கணவனுடன் படுக்கச் சென்றார்.
மறுநாள் நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து குளித்து தயாராகி அனைவரும் குடிப்பதற்கு பால் காய்ச்சிவிட்டு, மகனையும் எழுப்ப மணி ஐந்து ஆகிவிட்டது.
மேகநாதன் எழுந்து தயாராகி வருவதற்கும் வேலை செய்பவர்கள் வருவதற்கும் சரியாக இருக்க, அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லி, தந்தையை மேற்பார்வை செய்ய கூறினான்.
பின்னர் டிராவல்ஸ் வைத்திருக்கும் தன் நண்பனுக்கு, வேன்கள் தயாராக இருக்கிறதா? என்று கேட்க அழைக்கும் பொழுதே வாசலில் ஒரு வேன் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய நண்பனை கண்டு புன்னகைத்து "நீயும் ஸ்டேஷனுக்கே போயிருக்கலாமே டா. நான் பைக்ல வந்திருப்பேன்ல!" என்றான்.
"எதற்கு? எப்படியும் நான் இந்த வழியாக தானே போகணும்! அதான் உன்னையும் அழைத்துக் கொண்டு செல்லலாம் என்று வந்துவிட்டேன்" என்றான் அவனும்.
வேலை செய்பவர்களுக்கும், மேகநாதன் மற்றும் அவன் நண்பருக்கும் சூடாக காபியை கொண்டு வந்து கொடுத்தார் சிவகாமி.
சிவன் யாவை சீக்கிரம் தயாராக சொல்லுங்கள் அவர்கள் வந்ததும் வந்த கால்நடை ஆரம்பிக்க வேண்டும் இல்லையா என்று தாயைப் பார்த்தான் மேகநாதன்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 17
14 hours ago
-
வெளிச்சம் - 16
14 hours ago
-
வெளிச்சம் - 15
3 days ago
-
வெளிச்சம் - 14
3 days ago
-
வெளிச்சம் - 13
3 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
