வெளிச்சம் - 06
அத்தியாயம் 06
சிவன்யாவின் திருமண வேலைகளை சிறப்பாக தொடங்கியது.
மேகநாதன் ஒருபுறம் தந்தை சொன்ன வேலைகளை செய்ய, மறுபுறம் சிவகாமியும் சிவநேசனும் சிவன்யாவிற்கு தேவையான பொருட்களையும், நகைகளையும் வாங்க ஆரம்பித்தார்கள்.
சிவகாமி ஏற்கனவே மகளுக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்தது மற்றும் அவரது பழைய நகைகள் இப்பொழுது மேகநாதன் அவளுக்காக கொடுத்த பணத்தில் வாங்கிய நகைகள் என்றும் நூறு பவுன் நகை சிவண்யாவிற்கு வந்தது.
"அம்மா, எனக்கு எதற்கு இவ்வளவு?" என்று தயங்கினாள் சிவன்யா.
"எங்களிடம் இருக்கும்பொழுது உனக்கு செய்கிறோம். நம்மிடம் பணம் இருக்கும் பொழுது, எப்படி இடம் வாங்கி சொத்து சேர்க்கின்றோமோ! அது போல் தான் பெண்களுக்கு இப்பொழுது வாங்கும் நகைகள் எல்லாம் சொத்து. நான் என் தாய் தந்தையர் வாங்கிக் கொடுத்ததை என் மகளான உனக்கு கொடுப்பது போல், பிற்காலத்தில் நீ உன் மகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்து இது" என்றார் புன்னகையுடன்.
"அம்மா, இருந்தாலும் நகை விற்கும் விலைக்கு இப்பொழுது இவ்வளவு அவசியமா? அண்ணாவிற்கும் அடுத்து திருமணம் நடக்குமே! அவர்களுக்கும் தேவைதானே?" என்றாள் தயக்கமாக.
"நகை விலை எப்பொழுதும் ஏறிக்கொண்டே தான் இருக்கும். அதற்காக உனக்கு வாங்காமல் இருக்க முடியுமா? என் மருமகளுக்கு என்று சிலவற்றை நான் எடுத்து வைத்திருக்கிறேன். அவளும் எங்களுக்கு இன்னோர் மகள் தானே. அவற்றை அதைப்பற்றி எல்லாம் நீ கவலைப்படாதே! உன் திருமணம் வேக வேகமாக நடப்பது போல் இருப்பதால், உனக்கு இது அதிகம் என்று தோன்றுகிறது. இதுவே நிறுத்தி நிதானமாக நாம் வாங்கி இருந்தால் நிச்சயம் இதைவிட அதிகமாக தான் வாங்கி இருப்போம், இல்லையா?" என்று அவளின் நாடி பிடித்து கேட்டார்.
அம்மா கூறுவது சரியாக இருந்தாலும், 'திருமணம் முடித்த பிறகு வெளிநாட்டிற்கு செல்கிறோம் அங்கெல்லாம் இவ்வளவு நகை அவசியமா?' என்று தான் சிவன்யாவிற்கு தோன்றியது. அதை மறைக்காமல் தன் தாயிடம் பகிர்ந்தாள்.
"அம்மா, அவங்க என்னை துபாய்க்கு கூட்டிட்டு போறேன் என்று தானே சொல்லி இருக்காங்க, அப்படி இருக்கும் போது இவ்வளவு நகை அவசியமா?" என்று அவனுடன் வெளிநாடு செல்கிறோம் என்று சொல்லும் பொழுது அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.
மகளின் முகத்தில் இருந்த வெட்கத்தைக் கண்டு புன்னகைத்த சிவகாமி, "உனக்கு தேவையான நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு போமா! மற்றதை உன் அத்தை வீட்டிலோ, அல்லது இங்கோ வைத்து விட்டு செல். இதில் என்ன இருக்கிறது?" என்றார் புன்னகை மாறாமல்.
மண்டபம் எதுவும் கிடைக்காததால் பெரிய ஹோட்டலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான் மேகநாதன்.
திருமணத்திற்கான இடம் தேர்வானதும், அடுத்து பத்திரிகை அடித்து இரண்டு நாட்களில் பத்திரிக்கையும் வீட்டிற்கு வந்துவிட்டது. சாமி பூஜை அறையில் வைத்து பூஜை செய்து பிரித்த சிவகாமி, அனைவரும் பத்திரிக்கையை கொடுத்தார்.
பத்திரிக்கை தேர்வு செய்ய, சிவன்யாவை அழைத்தான் மேகநாதன். அவளோ அவனையே தேர்வு செய்து வாங்கும் படி சொல்லிவிட்டாள். மேக நாதனே தனியாக அனைத்தையும் முடிவு செய்து, இன்று அச்சாகி வீட்டிற்கு வந்திருக்கும் பொழுது, அனைவருக்கும் பிடிக்குமா? என்று அனைவரது முகத்தையுமே பார்த்துக் கொண்டிருந்தான் மேகநாதன்.
பத்திரிக்கையை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.
சிவன்யாவிற்கும் பத்திரிக்கையின் மிகவும் பிடித்துப் போயிற்று. தன் பெயர் அருகில் இருக்கும் தேவ் என்ற பெயரை புன்னகையுடன் தடவினாள். அவளுக்குள்ளும் சின்ன சின்ன கல்யாண கனவுகள் மலர ஆரம்பித்துவிட்டது.
மறுநாளே நல்ல நாளாக இருக்க, குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று பத்திரிக்கை வைத்துவிட்டு, அப்படியே ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்து, திருமணத்திற்கு அனைவரையும் அழைத்து வீட்டிற்கு வர ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் பதினைந்து நாட்களே மீதம் இருக்க, ஆளுக்கு ஒரு புறம் சென்று பத்திரிக்கை வைத்து, ஒரு வாரத்தில் பத்திரிக்கை வைக்கும் வேலையை முடித்து விட்டார்கள்.
சிவன்யாவும் தன் தோழர் தோழியர்களுக்கு பத்திரிக்கை வைக்க, அவர்கள் அவளிடம் ட்ரீட் கேட்டார்கள். அன்று இரவு உணவின் பொழுது தன் தோழிகள் ட்ரீட் கேட்பதாக வீட்டில் தெரிவித்தாள் சிவன்யா.
மேகநாதன் உடனே "எந்த ஹோட்டலில் வேண்டும் சிவன்யா?" என்று கேட்க,
சிவகாமியோ, "கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. இனிமேல் அவள் வெளியே எல்லாம் போகக்கூடாது. எல்லோரையும் வீட்டிற்கு வேணா வர சொல்லு. இங்கே அவர்களுக்கு ட்ரீட் கொடுக்கலாம்" என்றார் கராராக.
"அம்மா" என்று சிணுங்கி, "வீட்டில் எப்படி அம்மா?" என்றாள் சோகமாக
"அதெல்லாம் எனக்கு தெரியாது சிவன்யா. வெளியே எல்லாம் போகக்கூடாது என்றால் போக கூடாது. அப்படியே வெளியில் சென்று தான் அவர்களுக்கு நீ விருந்து வைக்க வேண்டும் என்றால், உன் திருமணத்திற்கு பிறகு உன் புருஷனையும் அழைத்துக் கொண்டு செல், அவ்வளவுதான்" என்று சற்று கோபமாகவே கூறிவிட்டார்.
ஏக்கமாக தந்தையின் முகத்தையும் தமையனின் முகத்தையும் பார்த்தாள் சிவன்யா.
மேகநாதன் "அம்மா!" என்று பேச ஆரம்பிக்கும் பொழுதே,
"தயவு செய்து இது சம்பந்தமாக என்னிடம் பேசாதே மேகநாதா" என்று அவனிடமும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
தங்கையிடம் என்னால் முடியாது என்று மறுப்பாக தலையாட்ட, அடுத்து அவள் பார்வை தானாக சென்றது தந்தையிடம்.
அவள் பார்வை கணவரிடம் சென்ற உடனேயே, அவளைப் பார்த்த சிவகாமி, "யார் வந்து சொன்னாலும் உன்னை அனுப்ப மாட்டேன் சிவன்யா! எல்லோரையும் நம் வீட்டிற்கு வரச் சொல்லு. வீட்டிலேயே அவர்களுக்கு என்ன வேண்டுமோ அனைத்தையும் செய்து கொடுக்க சொல்கிறேன். வேண்டுமானால் அன்று நாங்கள் வெளியே சென்று விடுகிறோம். அவ்வளவுதான் இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று விட்டார்
இதற்கு மேல் தாயிடம் கெஞ்சி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்து கொண்ட சிவன்யா, "சரி மா" என்று அரைமனதாக தலையாட்டினாள்.
அன்றே தன் தோழிகளுக்கு அழைத்து விவரத்தை சொல்ல, அதில் பாதி பேருக்கு மகிழ்ச்சியே, வெளியே என்று சுற்றி அலைய தேவையில்லை என்று.
சிலரோ "வீட்டில் என்றால் ரொம்ப அமைதியாக இருக்கணுமே டி" என்று கேட்க,
"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. அண்ணன், அப்பா ஆபீஸ் போயிடுவாங்க. அம்மா மட்டும்தான். அவர்களும் நம்மை தொந்தரவு எதுவும் செய்ய மாட்டாங்க. அதனால ஜாலியாக இருக்கலாம். மாடியில் இருக்கும் வீட்டை பயன்படுத்த சொல்லி இருக்காங்க. அது மட்டுமல்ல உங்க எல்லோருக்கும் என்னென்ன வேண்டுமோ, அதையெல்லாம் வேலை செய்யும் அக்காவிடம் செய்து கொடுக்க சொல்லியிருக்காங்க" என்றாள் மகிழ்ச்சியாக.
அதில் மகிழ்ந்த நண்பர்கள் ஆளுக்கு ஒரு மெனு கொடுக்க அனைத்தையும் குறித்துக் கொண்ட சிவன்யா அவர்களை சந்திக்கும் நாளை எதிர்பாத்திருந்தாள்.
சிவன்யாவிற்கு பூ வைத்து சென்ற பிறகு, தினமும் மூன்று வேளை உணவு உண்பது போல, சிவன்யாவிற்கு அழைத்து விடுவாள் நளினி. அழைத்து ஏதாவது பேசிக் கொண்டேன் இருப்பாள். காதலர்களுக்கு தான் ஸ்வீட் நத்திங் இருக்குமா என்ன? நளினிக்கும் சிவன்யாவிடம் பேசுவதற்கு, ஏதேதோ விஷயங்கள் அவள் மனதினுள் தோன்றிக் கொண்டே இருந்தது.
அதுவும் இரவு எல்லோரும் வீட்டில் இருக்கும் பொழுது வீடியோ கால் செய்வாள், அனைவரிடமும் பேசுவதற்காகவே. அத்தை, மாமா என்று அவள் பெரியவர்களை அழைப்பதும் அத்தான் அண்ணி என்று மேக நாதனையும் சிவன்யாவையும் அழைக்கும் பொழுது சிவகாமிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலத்து பிள்ளைகள் இப்படி முறை சொல்லியும் கூப்பிடுகிறதே என்று.
அவள் கொஞ்சிப் பேசும் தமிழ் எல்லோருக்குமே மிகவும் பிடித்து விட, இரவு அவளது ஃபோனிற்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள். நாளை காலை சுகன்யாவின் தோழிகள் வீட்டிற்கு வருவதால் அவர்களுக்கு தேவையானவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான் மேகநாதன்.
வந்ததும் நேரமாகிவிட்டது உணர்ந்து, "நளினி ஃபோன் பேசி முடித்து விட்டாளா சிவன்யா?" என்று கேட்டான் அவளின் அருகில் அமர்ந்தபடியே.
"இல்லை அண்ணா, இன்னும் ஃபோன் பண்ணலை" என்ற சிவன்யா வாக்கியத்தையும் முடிக்கும் முன்பே, நளினிடமிருந்து போன் வந்துவிட்டது.
அந்த பிள்ளைக்கு ஆயிசு நூறு" என்ற படியே ஃபோனை அட்டென்ட் செய்தார் சிவகாமி.
"அத்தை கல்யாணம் நெருங்கி விட்டதால், இன்னைக்கு கோயிலுக்கு போய் அபிஷேகம் பூஜை எல்லாம் செய்துவிட்டு வந்தோம். அதுதான் லேட்டாயிடுச்சு" என்றபடி தாமதத்திற்கான காரணத்தை முதலில் சொல்லிவிட்டே, "எல்லோரும் எப்படி இருக்கீங்க?" என்றாள் நளினி.
"எல்லோரும் நலமாக இருக்கிறோம். நீ ஃபோன் பேசி ரொம்ப வருடம் ஆகிவிட்டதல்லவா? இந்த நல விசாரிப்பு தேவைதான்" என்றாள் சிவன்யா கிண்டலாக.
"போங்க அண்ணி, உங்களுக்கு எப்பொழுதும் கிண்டல் தான். நாளைக்கு உங்க பிரண்ட்ஸ் எல்லாம் வராங்க இல்ல? எல்லாம் தயார் படுத்துட்டீங்களா?" என்று சிவன்யாவிடம் கேட்டுவிட்டு,
"அத்தான் அண்ணிக்கு என்னெல்லாம் வாங்கி வைத்திருக்கிறீர்கள்?" என்று மேகநாதனிடமும் கேட்டாள்.
அவனும் அவளுக்கு பதில் சொல்ல, "போங்க அத்தான். தங்கச்சிக்கு மட்டும் எல்லாம் வாங்கி கொடுக்குறீங்க நீங்க. ஒரு புள்ளை தனியா கிடைக்குதேனு யோசனை இருக்கா!" என்றால் பொய் வருத்தத்துடன்.
"அதற்கு என்ன நளினி? உன் கல்யாணத்துக்கு முன்னாடியும் இதே மாதிரி, ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிடலாம், கவலைப்படாதே!" என்றான் மேகநாதனும் புன்னகைத்துக் கொண்டே.
"அப்படியா அத்தான்! கண்டிப்பா மறந்திட மாட்டீங்களே?" என்று அவனிடம் உறுதியாக கேட்டு, "சத்தியம் செய்யணும்" என்று சத்தியமும் வாங்கிக் கொண்டாள்.
அவனும் புன்னகைத்துக் கொண்டு, "கண்டிப்பாக சிவன்யாவும் அப்பொழுது அங்கு தானே இருப்பாள். சிறப்பா செய்திடலாம், கவலைப்படாதே!" என்றான்.
அவனது கூற்றில் மிகவும் மகிழ்ந்து விட்டாள் நளினி. "ரொம்ப தேங்க்ஸ் அத்தான்" என்றாள் அதன் வெளிப்பாடாக.
அதன் பிறகு சிவகாமியிடமும், சிவநேசனிடமும் ஏதேதோ பேசிவிட்டு, அவள் ஃபோனை வைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.
நளினி ஃபோனை கட் செய்ததும், "மழை பெய்து ஓய்ந்தது போல் இருக்கிறது" என்றான் மேகநாதன்.
"நல்லா கலகலன்னு பேசுறா. இந்த பிள்ளைக்கு மட்டும் கல்யாணம் முடிவாகவில்லை என்றால், நான் உனக்கே கட்டி வச்சுருவேன்" என்றார் சிவகாமி பெருமூச்சு விட்டுக் கொண்டே.
அன்னையின் கூற்றில் அதிர்ந்தான் மேகநாதன். 'நல்ல வேளை அவளுக்கு கல்யாணம் முடிவாகிவிட்டது' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த சிவன்யா "என்ன அண்ணா, ஜஸ்ட் மிஸ் என்று யோசிக்கிறீங்களா?" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
"ஏய் வாலு, கம்முனு இரு" என்று அவள் தலையில் செல்லமாக கொட்டினான், தன் மனதை தங்கை படித்து விட்டாள் என்று புன்னகைத்துக் கொண்டே.
வழக்கமாக அவனது கல்யாணம் பேச்சை எடுத்தாலே, ஏதாவது இடக்குமடக்காக பதில் சொல்லும் மேகநாதன், இப்பொழுது அமைதியாக இருப்பதையும், அண்ணனும் தங்கையும் ஏதோ ரகசியமாக பேசுவதையும் ஆராய்ச்சியாக பார்த்தார் சிவகாமி.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 17
14 hours ago
-
வெளிச்சம் - 16
14 hours ago
-
வெளிச்சம் - 15
3 days ago
-
வெளிச்சம் - 14
3 days ago
-
வெளிச்சம் - 13
3 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
