Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 05

3 Posts
2 Users
2 Reactions
27 Views
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 
[#148]

அத்தியாயம் 05 

 

தான் அனுப்பிய புகைப்படங்களை, அண்ணன் இன்னும் பார்க்கவில்லை என்று வருத்தமாக கூறிய நளினிக்கு, ஆறுதலாக கூறிய சிவன்யாவை மிகவும் பிடித்து விட்டது. 

 

சிவன்யாவை இறுக்கமாக அணைத்த நளினி, "ரொம்ப நன்றி அண்ணி, நீங்கள் எங்கள் என் அண்ணனை புரிந்து கொண்டதற்கு" என்று கூறினாள்.

 

"இதில் என்ன இருக்கு நளினி, வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு என்ன வேலை இருக்குமோ என்று நமக்கு தெரியாது அல்லவா? இதுவரை அவர் ஓய்வு நேரத்தில் எல்லாம் உன்னுடன் பேசிக் கொண்டுதானே இருந்தார். அதுபோல இன்றும் பேசுவார், கவலைப்படாதே" என்றாள் சிவன்யா. 

 

"உண்மையில் நீங்க என் அண்ணியாக வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றாள் நளினி மகிழ்ச்சியாக. 

 

"அப்படியா!"  என்று புன்கைத்த சிவன்யா, "இதில் என்ன இருக்கிறது?" என்றாள். 

"இல்ல அண்ணி, எங்க அண்ணனுக்கு நாங்கள் நிறைய வரன் பார்த்தோம். எல்லோரும் வெளிநாடு என்றதும் வேண்டாம் என்று சொல்றாங்க. அது மட்டும் இல்லாமல்  எங்களிடம் போன் நம்பர் வாங்கி, அண்ணனிடம் பேசி அவரின் சம்பளம், சொத்து விவரம் எல்லாவற்றையும் கேட்கிறார்கள். 

 

அப்படி கேட்பவர்களை எங்கள் அண்ணனுக்கு பிடிக்கவே மாட்டேங்குது. இந்த திருமண பேச்சு வந்து இவ்வளவு நாள் ஆகியும் நீங்களும் சரி, அத்தை மாமாவும் சரி, அவரிடம் இன்னும் பேசவே இல்லையாம். பணத்திற்கு ஆசைப்படாதவர்கள் என்று, நேற்று அப்பா சொல்லி மிகவும் மகிழ்ந்தார்" என்று மகிழ்ச்சியாக கூறினாள். 

 

அவள் கூறியதை புன்னகையுடன் கேட்டுக் கொண்ட சிவன்யா, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும் நளினி. நான் அப்பா அம்மா அண்ணா என்று பாசமான குடும்பத்தில் வளர்ந்தவள். எங்கள் வீட்டில் பணத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். உறவும் பாசமும் தான் இங்கு நிறைந்து இருக்கும். அதுபோல் ஒவ்வொருவரின் அலுவலக வேலையை பற்றியும், அவர்களின் தனிப்பட்ட வேலையையும் நாங்கள் புரிந்து வைத்திருப்போம்" என்று மென்மையாக கூற, பெருமையாக சிவன்யாவை பார்த்தாள் நளினி. 

 

இப்படியே நேரம் போவது தெரியாமல் நளினியை பற்றி சிவன்யாவும் சிவன்யாவை பற்றி நளினியும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார்கள். 

"நீங்கள் முன்பே என் வீட்டிற்கு வந்திருக்கலாம் அண்ணி. இப்ப பாருங்க, உங்க கல்யாணம் முடிஞ்சதும் எனக்கும் கல்யாணம். கொஞ்ச நாள் தான் நான் உங்க கூட இருக்க முடியும்" என்று வருத்தமாக கூறினாள் நளினி. 

 

"அதற்கெல்லாம் கவலை படலாமா? நளினி. உன் திருமணம் வரை உன்னுடன் தானே இருப்பேன். நீ திருமணம் முடிந்து உன் கணவன் வீட்டுக்கு போனபிறகு, அருகில் இருந்து பார்த்துக் கொள்ளாவிட்டாலும் தினமும் நாம் ஃபோனில் பேசிக்கொள்ளலாம், சரியா?" என்று அவளின் நாடி பிடித்து கேட்டாள். 

 

"சரி அண்ணி" என்று மகிழ்ச்சியாக கூறிய நளினி சிவன்யாவை தோளுடன் அணைத்துக் கொண்டாள். 

 

இப்படியே இவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த சிவகாமி, "என்ன நாத்தனாரும் நாத்தனாரும் பேசிக்கொண்டே இருக்கிறீர்களா?" என்று சொல்லிக்கொண்டு இருவருக்கும் சிற்றுண்டியை கொடுத்தார். 

 

அதை வாங்கிய சிவன்யா, "நளினி நல்ல பேசுகிறாள் மா!" என்று அவளின் கைப்பற்றிக் கொண்டே கூற,

 

சிவகாமியும் "ஆமாம், இவளும் உன்னை போல சுட்டி தான் போலிருக்கு. இவங்க அம்மா பார்வதி இவளை பற்றி தான் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்" என்றார் புன்னகையுடன். 

 

"எங்க அம்மாவா அத்தை? என்னைப் பற்றி எல்லாம் பெருமையாக சொல்ல மாட்டாங்களே! ஒரு வேலையும் செய்ய மாட்டேங்குறா, அப்படி இப்படி என்று குறை தானே சொல்லிக் கொண்டிருப்பார்கள்" என்று சலிப்பாக கேட்டாள். 

 

புன்னகைத்த சிவகாமி, "அதையும் தான் சொன்னாங்க. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணி போகப் போறியாம், அங்க போயி எப்படி வேலை செய்வாயோ? என்று கவலையாக சொல்றாங்க!" என்றார். 

 

"அதெல்லாம் எங்க அத்தை வீட்டிற்கு போன பிறகு வேலை செய்வேன். அம்மா வீட்டில் நான் ஏன் வேலை செய்ய வேண்டும். இல்லையா அண்ணி?" என்று அவளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, "நீங்கள் உங்க வீட்டில் வேலை எதுவும் செய்கிறீர்களா என்ன?" என்றாள். 

 

அவள் கேட்கும் விதத்தில் புன்னகை வந்துவிட்டது சிவகாமிக்கு. அதை மறைத்துக் கொண்டு, "அப்போ மாமியார் வீட்டில் போய் வேலை செய்ய வேண்டும் என்றால், என் மகளும் உங்கள் வீட்டிற்கு வந்து, உனக்கும் சேர்த்து தான் வேலை செய்ய வேண்டுமா?" என்று கோபமாக கேட்பது போல் கேட்டார். 

 

அவர் அப்படி கேட்டதும் பயந்து விட்டாள் நளினி. "அத்தை.. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அத்தை. அண்ணி அங்க வந்து எதுவும் செய்ய வேண்டாம். நானும் அம்மாவுமே பார்த்துக் கொள்வோம்" என்று படபடப்பாக கூறினாள். 

 

"ஹேய் நளினி, ரிலாக்ஸ். அம்மா உன்னிடம் விளையாடுகிறார்கள். அதற்கு ஏன் இப்படி பயப்படுகிறாய்?" என்ற சிவன்யா அவளின் கைப்பற்றி அவளை அமைதியாக இருக்கும் படி செய்துவிட்டு,‌ "பாருங்க அம்மா, அவள் எப்படி பயப்படுறாள் என்று" என்று கூறி, "அவளை சமாதான படுத்துங்கள்" என்றாள். 

 

"இல்ல அண்ணி, அண்ணனுக்கு நாங்க வரன் பார்க்கும்பொழுது, அவருக்கு தங்கை இருக்கிறாள் என்று சொல்லியே, நிறைய வரன்கள் தட்டி சென்றது. அதனால் தான்" என்று பயந்தபடியே சிவகாமியை பார்த்தாள். 

 

அவளின் முகம் கண்டு சிவகாமிக்கும் வருத்தம் ஆகிவிட்டது. அவளை தன்னுடன் அணைத்துக் கொண்ட சிவகாமி, "என் மகள் போல் தான் நீயும். அவளுடன் பேசுவது போல தான் உன்னிடமும் பேசினேன். அதற்குப் போய் இப்படி பயப்படலாமா?"  என்று அவளின் நாடி பிடித்து கொஞ்சினார். 

 

"பெண் பிள்ளைகள் எல்லோருக்குமே, திருமணத்திற்குப் பிறகு ஒரு பொறுப்பு தன்னாலயே வந்து விடும் என்று எனக்குத் தெரியும். தங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இளவரசியாக வாழ்வார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு சென்ற பிறகு, அந்த வீட்டின் மகாராணி ஆகி விடுவார்கள். 

 

இளவரசிக்கு அவ்வளவாக பொறுப்புகள் இருக்காது. ஆனால் மகாராணியால் அப்படி இருக்க முடியாது அல்லவா? ஆகையால் தன்னாலேயே திருமணம் முடிந்ததும் பெண்களுக்கு பொறுமையும் பொறுப்பும் வந்துவிடும். 

 

உங்கள் வயதை தாண்டி தானே நாங்களும் வந்திருக்கிறோம். அதனால் உங்களைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் என் மகளை பார்த்துக் கொள்வது போல, பார்வதி அவள் மகளை பார்த்துக் கொள்வது போலத்தான், அவரவர்கள் வீட்டுக்கு வரும் மருமகளையும் பார்ப்போம். ஆகையால் எதைப் பற்றியும் நினைத்து கவலை படக்கூடாது, சரியா?" என்றார்.

 

பின்னர் "சரி எதையும் யோசிக்காமல் டிபன் சாப்பிடு" என்று கூறி வெளியில் இருப்பவர்களை கவனிக்கச்  சென்றார். அனைவரும் டிபன் சாப்பிட்டு முடித்ததும், "அடுத்து கல்யாண வேலையை சிறப்பாக ஆரம்பிக்கலாம்" என்று பேசி விடை பெற்று சென்றார்கள். 

 

மாப்பிள்ளை வீடு சென்றதும் சிவநேசன், மேக நாதனிடம் "நாளை மண்டபத்தை சென்று பார்த்துவிட்டு வரலாம்" என்றார். 

 

சிவனேசனின் சித்தப்பா ஒருவர் "நாங்களும் எங்கள் வீட்டு அருகில் உள்ள மண்டபத்தை பற்றி விசாரிக்கிறோம் சிவநேசா. அப்படி மண்டபம் கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் ஏதாவது பெரிய ஹோட்டலில் வைத்து சிறப்பாக பண்ணிடலாம். அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் மற்ற வேலைகளையும் பார்" என்று கூறினார். 

 

இரவு உணவிற்குப் பிறகு மீதி இருந்த சொந்தங்களும் கிளம்பி விட்டனர். வீட்டினர் மட்டுமே அமர்ந்து, மாப்பிள்ளை வீட்டை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். 

 

"மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும், நல்ல குணமாக இருக்கிறார்கள் இல்லைங்க" என்று கணவனிடம் கேட்டார் சிவகாமி. 

 

"ஆமாம் சிவகாமி. நம் மகளை கிண்டல் செய்த அவர்கள் உறவினரை கூட விஸ்வநாதன் கண்டித்தார் பார்த்தாயா?" என்றார் மகிழ்ச்சியாக.

 

மேகநாதன் சிவன்யாவிடம் "உன் மாமனார் பள்ளிக்கூட வாத்தியாராம். திருமணத்திற்குப் பிறகு ஒழுங்காக, அவர் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து விடு. இல்லை என்றால் பிரம்பெடுத்து விளாசி விடுவார்" என்றான் கிண்டலாக. 

 

"நான் வேலை செய்ய வருந்துபவளும் இல்லை. அவரும் அப்படி அடிப்பவரும் இல்லை" என்றாள் அவனை முறைத்துக் கொண்டு. 

 

"பாருங்கமா, இப்பதான் கல்யாணம் உறுதி செய்துட்டு போயிருக்காங்க. அதுக்குள்ள அவங்க மாமனாருக்கு சப்போட்டா பேசுகிறாள்"என்று தாயிடம் கூறி ஆச்சரியப்பட்டான் மேகநாதன். 

 

"பெண் பிள்ளைகளே அப்படித்தானே மேக நாதா. திருமணத்திற்கு முன், என் அப்பா, என் அண்ணன் என்பார்கள். கல்யாணம் முடிந்த அடுத்த நொடியே, என் புருஷன் என்றும் அவர்தான் அவர்களுக்கு முதன்மையாக போய்விடும்" என்று மகளைப் பூரிப்புடன் பார்த்துக் கொண்டே கூறினார் சிவநேசன். 

 

"அப்பா நீங்களும் அண்ணா கூட சேர்ந்து என்னை கிண்டல் செய்றீங்க இல்லையா" என்று கூறி அவரின் தோள் சாய்ந்து கொண்டாள் சிவன்யா. 

 

"அப்படி இல்லடா, பெண் பிள்ளைகளின் இயற்கையான குணமே அதுதானே! அதைத்தான் சொன்னேன்" என்று புன்னகையுடன் கூறி, "அப்படி இருப்பது தான் நல்லது. அதுதான் எங்களுக்கும் பெருமை" என்றார். 

 

தந்தையை புன்னகையுடன் பார்த்த சிவன்யாவிற்கு, கொஞ்சம் கொஞ்சமாக கல்யாண கனவுகள் வர ஆரம்பித்தது. 

 

மகளின் முகத்தில் இருந்த பூரிப்பை கண்டு பெரியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க, "சரி நேரம் ஆகிவிட்டது, எல்லோரும் போய் விடுங்கள்" என்று பொதுவாக கூறிய சிவகாமி, 

மகனைப் பார்த்து "நாளையிலிருந்து உனக்கு கல்யாண வேலையும் ஆரம்பித்து விட்டது. அப்பாவிற்கு ஒத்தாசையாக அவர் கூடவே இரு மேக நாதா" என்று மகனிடம் முடித்தார்.

 

தாய் கூறியதும் உடனே எழுந்து உறங்குவதற்கு அவளது அறைக்குச் சென்று விட்டாள் சிவன்யா. 

 

மேகநாதன் "ஆமாம் அம்மா. அது என் கடமை தானே!" என்று அம்மாவை பார்த்து கூறிவிட்டு, "நீங்கள் எங்கும் அழைய வேண்டாம் அப்பா, என்ன என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு சொன்னால் மட்டும் போதும். நான் அதை செய்து முடிக்கிறேன்" என்று தந்தையிடம் முடித்தான். 

 

"நீ இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை மேக நாதா!" என்று மகனிடம் சொன்ன சிவனேசன், 

"நமக்கு தோதாக அருகில் இருக்கும் மண்டபங்கள் பார்த்தாயா?" என்றார்.  

 

அவனும் ஃபோனை எடுத்து அவரின் அருகில் அமர்ந்து கொண்டு, "மதியம் ஜோசியர் தேதி சொன்னதுமே சில மண்டபங்களில் விசாரித்தேன் அப்பா. இங்கு அருகில் எதுவும் அப்பொழுது ஃபிரீயாக இல்லை. பார்ப்போம், என் நண்பர்களிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். நாளைக்குள் மண்டபம் கிடைக்குமா என்று தெரிந்துவிடும்" என்று சில மண்டபகங்களை புகைப்படத்தை காண்பித்து விவரம் கூறி முடித்தான் மேகநாதன். 

 

திருமணம் என்று பேசியதுமே, மகன் அதற்கான வேலையை ஆரம்பித்ததை கண்

டு மகிழ்ந்தார்கள் சிவநேசன், சிவகாமி தம்பதியினர்.

 

 

- தொடரும்.. 

 

- அருள்மொழி மணவாளன்..

 


 
Posted : July 7, 2026 8:42 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

kalyana velaiyellam vegama start panranga


 
Posted : July 8, 2026 12:03 pm
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 

@kalidevi thank you 😊😊


 
Posted : July 8, 2026 1:43 pm

Scroll to Top