வெளிச்சம் - 04
அத்தியாயம் 04
தேவதை போல் தயாராகி இருந்த சிவன்யாவை கண்டு உள்ளம் மகிழ்ந்த சிவகாமி, மகளுக்கு திருஷ்டி நொடித்து, "என் கண்ணே பட்டுடும் போல இருக்கு சிவன்யா. ரொம்ப அழகா இருக்க" என்று அவளது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தார்.
தாயின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்த சிவன்யாவும், "உங்கள் கண்களுக்கு எப்பொழுதுமே நான் அழகா தான் தெரியுவேன்" என்று சாதாரணமாக சொல்லிவிட்டு, கண்ணாடியில் தன்னை ஒரு முறை மீண்டும் பார்த்துக் கொண்டாள்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துருவாங்களாம். அவுங்க வந்த உடனே நான் கூப்பிடுறேன், அப்போ சிவன்யாவை அழைத்துக் கொண்டு வாருங்கள், சரியா?" என்று அவளது தோழிகளிடம் சொல்லிவிட்டு, வருபவர்களை வரவேற்பதற்காக விரைவாக வாசலுக்கு சென்றார் சிவகாமி.
"உங்க அம்மா ரொம்ப சுறுசுறுப்பா இருக்காங்கடி" என்று சிவகாமியை பற்றி கூறிவிட்டு, அவளுக்கு மேலும் எதுவும் செய்ய வேண்டுமா? என்று ஆராய்ந்தார்கள். மீண்டும் முகத்தில் எதையோ போட வர, "ஏய், போதும் டி" என்று தடுத்து விட்டாள் சிவன்யா.
"மாப்பிள்ளையும் வருவாரா? கல்யாணம் முடிச்சதும் உன்னை துபாய்க்கு கூட்டிட்டு போயிடுவாரா? அதுக்கு அப்புறம் நீ சென்னைக்கு வரவே மாட்டியா?" என்று ஆளாளுக்கு கேள்வி மேல் கேள்வி அவளைக் கேட்க,
அனைத்திற்கும் புன்னகையாக "எனக்கு என்னடி தெரியும்! கல்யாணத்துக்கு பிறகு தான் எல்லாவற்றையும் அவரிடம் கேட்க வேண்டும்" என்றாள்.
"ஃபோன் நம்பர் வாங்கிக் கொள்ளவில்லையா? அவரிடம் பேசவில்லையா?" என்று ஆச்சரியமாக கேட்டனர் அவளது தோழிகள்.
இல்லை என்று மறுப்பாக தலையாட்டிய சிவன்யா "நான் எப்படி ஃபோன் நம்பர் கேட்பது? அவர்களாக தந்தாலோ அல்லது அவர் பேசினாலோ பேசிக் கொள்ளலாம்!" என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே.
அவளின் வெட்கத்தைக் கண்டு மேலும் அவளை கிண்டல் செய்து மேலும் வெட்கப்பட வைத்தனர் தோழிகள்.
இவர்கள் இப்படி பேசி சிரித்துக் கொண்டிருக்க ஹாலில் சலசலப்பு கேட்டது. அவள் தோழி ஒருத்தி "மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போலிருக்கு. இரு, நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று வெளியே சென்றாள். ஹாலில் ஒரு பத்துப் பதினைந்து பேருக்கு மேல் இருந்தனர், இரண்டு வீட்டு நெருங்கிய சொந்தங்கள் மட்டும்.
இவர்கள் வயதை ஒத்த ஒரு பெண் சுற்றும் முற்றும் பார்த்தபடி, தன் அருகில் இருந்த தாயிடம் "அண்ணி எங்கே இருக்கிறார்கள் என்று தொரியவில்லையே மா?" என்றாள் ரகசியமாக.
அவரும் சிவகாமியிடம் "மருமகள் எங்கே இருக்கா சம்மந்தி? நளினி பார்க்கணும் என்கிறாள்" என்றார்.
சிவன்யா இருக்கும் அறையை காண்பித்து "அங்கே தான் இருக்கிறாள். அவள் தோழிகளும் இருக்காங்க, நீ போய் பாரும்மா" என்று அனுப்பினார்.
அவர் சொன்னது தான் தாமதம், "சரிங்க அத்தை" என்று வேகமாக எழுந்து ஓடினாள்.
அங்கு நான்கைந்து பேர் இருந்ததும் சற்று தயங்கி நிற்க, சிவன்யாவின் தோழிகள் அவளை வரவேற்று, தங்களை அறிமுகப்படுத்தி கொண்டார்கள்.
நளனியும் புன்னகையுடன் அனைவருக்கும் வணக்கம் சொல்லி, "என் பெயர் நளினி. என் அண்ணா பெயர் தேவா. அவரைத் தான் சிவன்யா அண்ணிக்கு பார்த்திருக்கிறோம்" என்றாள்.
பின்னர் சிவன்யாவின் அருகில் வந்து, "அண்ணி, நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்" என்று கூறினாள்.
சிவன்யாவும் புன்னகைத்துக் கொண்டு "உன்னை விடவா?" என்றாள்.
சிவன்யாவின் தோழியும் "நீயும் பார்க்க ரொம்ப அழகாகத் தான் இருக்கிறாய். உன் அழகில் கொஞ்சமாவது உன் தேவா அண்ணா இருப்பாரா? எங்கள் தோழிக்கு பொருத்தமாக இருக்குமா?" என்று கிண்டலாக கேட்டாள்.
"எங்க அண்ணனும், அண்ணி ரொம்ப பொருத்தமா தான் இருப்பாங்க. எங்க அண்ணன் என்னை விட அழகு" என்று பெருமையாக கூறிவிட்டு,
சிவன்யாவை பார்த்து, "உங்களுக்கு தெரியும் தானே அண்ணி? நீங்கள் புகைப்படம் பார்த்திருப்பீர்களே!" என்றாள்.
"இல்லை நளினி" என்ற சிவன்யாவை ஆச்சரியமாக பார்த்த நளினி,
"ஒரு நிமிடம் இருங்கள். என் ஃபோன் வெளியேயே வைத்துவிட்டு வந்து விட்டேன். போய் எடுத்துட்டு வரேன்" என்று வேகமாக ஓடினாள்.
அவள் சென்றதும் தன் தோழிகளிடம் "ஏன்டி கிண்டல் பண்றீங்க?" என்று கேட்டாள் சிவன்யா
"ஏய், ஒரு சில வீட்ல பொம்பள பிள்ளைங்க அழகா இருந்தா, பையன் அவ்வளவு அழகா இருக்க மாட்டாங்க டி. அதுதான் கேட்டேன். உதாரணத்துக்கு உங்க வீட்டை எடுத்துக்கோ, உங்க அண்ணன் எவ்வளவு அழகா, ஹேன்சம்மா இருக்காங்க. ஆனா நீ பாரு" என்று கூற அவள் தலையில் வேகமாக கொட்டிய சிவன்யா,
"அப்பன்னா நான் என்ன அழகா இல்லன்னு சொல்றியா?" என்று சற்று விளையாட்டு கோபமாக.
"ஏய், சும்மா சொன்னேன் டி. அதுக்குன்னு இவ்ளோ வேகமா கொட்டுவியா?" என்று அழுவது போல் முகத்தை வைத்தாள் சிவன்யாவின் தோழி.
அதற்குள்ளாக தனது ஃபோனை எடுத்துக் கொண்டு வந்த நளினி, "இங்கே பாருங்க, எங்க அண்ணனை" என்று புகைப்படத்தை காண்பித்தாள்.
சிவன்யாவை தவிர மற்றவர்கள் வேகமாக வாங்கி பார்த்தனர். "உண்மையிலேயே ரொம்ப அழகா இருக்காருடி" என்று ஒருத்தி கூற, மற்றொருத்தியோ "பார்ப்பதற்கு மம்முட்டி மாதிரி இருக்காரு இல்ல?" என்று கேட்டாள்.
உடனே நளினியும் "ஆமா, என் பிரெண்ட்ஸ் கூட அப்படித்தான் சொல்லுவாங்க" என்று பெருமையாக கூறினாள்.
திருநெல்வேலி பக்கம் நளினியின் ஊர் என்பதால், அவளது தமிழ் சென்னைவாசிகளான சிவன்யாவின் தோழிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்க, அவளிடம் ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
அவளது குழந்தை தன்மையான பேச்சில், சிவன்யாவிற்கும் நளினியை மிகவும் பிடித்து விட்டது.
இவர்கள் இப்படி பேசி விளையாடிக் கொண்டிருக்க, நளினியின் அத்தை முறையில் உள்ள ஒரு பெண்மணி, அவர்களது அறைக்கு வந்து நளினியிடம், "பொண்ணை கூட்டிட்டு ஹாலுக்கு வரச் சொல்றாங்க" என்று சொல்லிவிட்டு சிவன்யாவை பார்த்து, "நான் நளினிக்கு அத்தை மா. உனக்கு சித்தி முறை வரும்" என்று சொல்லி அவள் முகத்தைப் பார்த்து, "அழகா இருக்கிற" என்று சொல்லிவிட்டு,
நளினியிடம் "உங்க அண்ணியை கைப்பிடித்துக் கொண்டு ஹாலுக்கு அழைத்து வா" என்று சொல்லி, எல்லோரையும் பார்த்து புன்னகைத்து விட்டு வெளியே சென்றாள்.
அவர் சென்றதும், "வாங்க அண்ணி" என்று சிவன்யாவின் கையைப் பிடித்துக் கொண்ட நளினி, "நீங்க எல்லாருமே வாங்க" என்றபடி அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.
அவளின் அறையை விட்டு வெளியே வந்ததும் ஹாலில் தெரிந்த கூட்டத்தைக் கண்டு, தன்னால் சிவன்யாவின் தலை வெட்கத்தில் குனிந்தது. வெட்கப்பட்டுக் கொண்டே நடந்து வரும் சிவன்யாவை கண்ட மாப்பிள்ளை வீட்டார், "பரவாயில்லையே, நகரத்தில் படித்து வளர்ந்த பிள்ளைக்கு வெட்கபட தெரியாதே என்று நினைத்தோம். உங்க மகள் நல்லா தான் வெட்கப்படுகிறாள்" என்று கிண்டலாக கூற,
"கிராமமோ, நகரமோ, பெண் என்றாலே திருமணம் என்று வந்துவிட்டால் வெட்கமும் தானால் வந்துவிடும்" என்று கூறினார் நளினியின் தந்தை விஸ்வநாதன்.
உடனே "உன் பெண்ணையே கிண்டலுக்கு எங்களை பேச விடமாட்டாய்! உன்னுடைய மருமகளை மட்டும் விட்டுக் கொடுக்கவா போகிறாய்!" என்றார் அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர்.
"நம்ம பிள்ளைங்களை நாம தானே பாதுகாக்கணும் அக்கா" என்று அப்பெண்மணிக்கு விஸ்வநாதன் பதில் கொடுத்தார்.
அப்படியே அங்கிருந்த தனி சோஃபாவில் சிவன்யாவை அமர வைத்தார் நளினியின் தாய் பார்வதி.
பின்னர் அவர்கள் உறவின் முறையில் உள்ளவர்கள் அனைவரும் அவளுக்கு நலுங்கு வைத்து, தலையில் பூச்சூட்டி, அவர்கள் மகன் தேவாவிற்கு சிவன்யாவை முடிவு செய்தனர்.
அப்படியே அனைவரும் பேசி மகிழுந்து இருக்க, மதிய உணவு நேரம் வந்ததும் அனைவரையும் சாப்பிடும் படி கூறினார் சிவகாமி.
வயதானவர்கள் உணவு மேஜையிலும், இளையவர்களுக்கு கீழே அமர்ந்து கொள்ள பந்தி பரிமாற பட்டது.
சிவகாமி சற்று தடுமாற, "நீங்கள் பதட்டப்படாமல் இருங்க அண்ணி. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று பார்வதி கூற, அவரின் சொந்தக்காரர்களே அனைவருக்கும் உணவு பரிமாறினர்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் சிவன்யா அவளது அறைக்குச் சென்று விட, அவள் தோழிகளும் நேரம் ஆகிவிட்டது என்று கூறி, அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
அதன்பிறகு பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். நல்ல நாள் பார்த்து முடிவு செய்ய, ஜாதக பொருத்தம் பார்க்கும் ஜோதிடரையும் வர வைத்திருந்தார் சிவநேசன்.
அவருடன் இருவரது ஜாதகத்தையும் கொடுத்து, வரும் மாதத்தில் நல்ல நாள் குறிக்க கூற, அவரும் நாள் குறித்துக் கொடுத்து சென்றார்.
ஜோதிடர் குறித்த கொடுத்த நாள் இன்னும் ஒரு மாதமே இருக்க, சென்னையில் ஒரு மாதம் இருக்கும் பொழுது, மண்டபம் கிடைப்பது கடினமாயிற்றே என்று யோசித்த சிவநேசன் "அதற்குள் அனைத்தையும் செய்ய முடியுமா?" விஸ்வநாதனிடம் கேட்டார்.
"அதெல்லாம் சிறப்பா செய்திடலாம். நீங்கள் கவலைப்படாமல் வேலையை ஆரம்பியுங்கள்" என்றார்.
தன் மகனை குழப்பமாக பார்த்தார் சிவநேசன்.
"மண்டபம் எதுவும் இல்லையென்றால், ஏதாவது ஹோட்டலில் இருக்கும் பார்ட்டி ஹாலில் வைத்தாவது நடத்திக் கொள்ளலாம் சம்மந்தி" என்று அவருக்கு ஆலோசனை கூறினார் விஸ்வநாதன். அதுவும் சரியாகவே பட்டது சிவனேசனுக்கு.
"நீங்கள் சொல்லுவதும் சரிதான். நானும் மேகநாதனும் மண்டபத்தை பற்றி விசாரிக்கிறோம். இல்லை என்றால் நீங்கள் சொல்லுவது போல ஹோட்டலிலேயே வைத்துக் கொள்ளலாம்" என்றார்.
பேசி முடித்ததும் மாப்பிள்ளை வீட்டார் கிளம்புவதாக கூற,
"சாயங்காலம் காஃபி குடித்துவிட்டு செல்லலாம்" என்ற சிவகாமி அவர்களுக்கு காஃபிக்கும் டிபனும் ஏற்பாடு செய்யும்படி வேலை செய்யும் பெண்மணியிடம் கூறினார்.
சிவன்யாவின் அறைக்கு வந்த நளினியும் சிவன்யாவும் நிறைய பேசி இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டார்கள்.
சிவன்யாவுடன் சேர்ந்து நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அவற்றை உடனே அவரது அண்ணாவிற்கு அனுப்பியும் வைத்தாள். அண்ணா பார்த்து என்ன சொல்கிறார்கள் என்று நொடிக்கு ஒரு தரம் ஃபோனை எடுத்து பார்த்துக் கொண்டும் இருந்தாள்.
அவள் கவனம் ஃபோனில் இருப்பதைக் கண்டு, "என்ன? ஓயாமல் ஃபோனை பார்த்துக்கிட்டே இருக்கிறாய்? ஏதாவது முக்கியமான கால் வர வேண்டுமா?" என்று அவளிடம் கேட்டாள் சிவன்யா.
"இல்லை அண்ணி. நாம் இரண்டு பேரையும் ஃபோட்டோ எடுத்து அண்ணனுக்கு அனுப்பினேன். அண்ணன் ஏதாவது சொல்லும்ன்னு பாத்துட்டு இருக்கேன். ஆனா அண்ணன் இன்னும் ஃபோட்டோஸ் எல்லாம் பார்க்கவே இல்லை" என்று வருத்தமாக கூறினாள் நளினி.
"அதற்கு ஏன் கவலைப்படுகிறாய்? நேரம் கிடைக்கும் பொழுது பார்த்துவிட்டு உன்னிடம் பேசுவார். வருந்தாதே!" என்றாள் சிவன்யா.
சிவன்யாவின் பேச்சில் மகிழ்ந்து அவளை வேகமாக அணைத்துக் கொண்டு, "ரொம்ப நன்றி அண்ணி. அண்ணனை புரிந்து கொண்டதற்கு" என்று மகிழ்ச்சியாக கூறினாள் நளினி.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 17
14 hours ago
-
வெளிச்சம் - 16
14 hours ago
-
வெளிச்சம் - 15
3 days ago
-
வெளிச்சம் - 14
3 days ago
-
வெளிச்சம் - 13
3 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 2 Online
- 329 Members
