Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 03

3 Posts
2 Users
2 Reactions
35 Views
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 
[#137]

அத்தியாயம் 03

 

சிவன்யா திருமணத்திற்கு சம்மதித்ததும், மகிழ்ந்த சிவனேசன் உடனே மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து நல்ல நாள் பார்த்து பெண் பார்க்க வரும்படி கூறினார். அதில் மகிழ்ந்த மாப்பிள்ளை வீட்டினரும் நேரம் அதிகம் இல்லாததால் வரும் ஞாயிறு வருவதாக கூறினார்கள். 

 

தங்கள் நெருங்கிய சொந்தங்களை அழைத்து வருவதாகவும் கூறிய மாப்பிள்ளையின் தந்தை "அன்றே பூ வைத்து உறுதி செய்து கொள்ளலாம், திருமணத்திற்கு முந்திய நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம்" என்றார் 

 

அனைத்திற்கும் சரி என்ற சிவநேசன் மனைவிக்கு அழைத்து, வரும் ஞாயிறு அன்று, நம் மகளுக்கு பூ வைக்க வருகிறார்கள் என்று கூறினார். 

அவரும் மகிழ்ச்சியாக சிவன்யாவிடம் தெரிவிக்க, 'இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறதா?' என்று கவலை அடைந்தாள். அவள் மனதிற்குள் எல்லாம் வெகு வேகமாக நடப்பது போல் தோன்றியது. 

 

இருந்தாலும் தாயின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை கெடுக்க விரும்பாமல், "சரி மா" என்றாள். பின்னர் அவளின் நெருங்கிய தோழியர்களுக்கு அழைத்து, வீட்டில் நடக்க இருக்கும் ஃபங்கசன் பற்றி கூறி, ஞாயிறு காலை தங்கள் வீட்டிற்கு வரும்படி அழைத்தாள். 

 

அவர்களும் மிக மகிழ்ச்சியாக வருவதாக கூறி, அவளை சிறிது நேரம் கேலியும் கிண்டலும் செய்து பேசி வைத்தனர். தோழிகளுடன் பேசியதில் அவளுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் கலக்கமும் மறைந்து போனது. மிகவும் மகிழ்ச்சியாக திருமணத்தை வரவேற்க தயாரானாள் சிவன்யா. 

 

நடுவில் ஒரு நாள் தான் இருப்பதால், அன்றே சென்று அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி வரலாம் என்று, அவளையும் அழைத்துக் கொண்டே கடைக்குச் சென்றார் சிவகாமி.  

 

அன்று அவள் உடுத்துவதற்கு, இள ரோஜா வண்ண புடவையை தேர்வு செய்தார் சிவகாமி. தாயின் ரசனையை கண்டு உண்மையில் வியந்து தான் போனாள் சிவன்யா. அவ்வளவு அழகாக இருந்தது புடவை. 

 

அதற்கு தேவையான நகைகளை தேர்வு செய்ய, சிவகாமியோ "கவரிங் நகை எல்லாம் வேண்டாம் சிவன்யா. தங்கத்திலேயே போட்டுக் கொள்ளலாம்" என்றார். 

 

"அம்மா, கல்யாணத்திற்கு தான் தங்கம் போடுவேனே! இதற்கு ஆர்டிபிசியல் நகை அழகாக இருக்கும் அம்மா" என்று சிலவற்றை எடுத்து காண்பித்தாள். 

 

அவருக்கோ அதில் விருப்பம் இல்லாவிட்டாலும், மகளின் ஆசைக்காக "சரி உன் இஷ்டம். ஆனால் திருமணத்திற்கு கவரிங் நகை போடக்கூடாது, சரியா?" என்று இப்பொழுதே உறுதிமொழி வாங்கிக் கொண்டார். 

பின்னர் 'அவர்கள் ஓடி ஓடி சம்பாதிப்பது சேர்த்தது மகளுக்காக தானே! அவளும் இப்படி தங்கம் வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்' என்று நினைத்தார்.  

 

அவள் ஆசைப்பட்டபடி அனைத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர இரவு ஆகிவிட்டது. மறுநாள் முழுவதும் வருபவர்களை கவனிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும், சிவன்யாவின் உதவியுடன் செய்து முடித்தார் சிவகாமி. 

 

நாளை காலையில் மாப்பிள்ளை வீட்டினர் வருவார்கள் என்பதால், சிவகாமி மகளிடம் "சாப்பிட்ட பிறகு சீக்கிரம் சென்று தூங்கி ஓய்வெடுமா. நாளை காலையில் அவர்கள் வரும் பொழுது முகம் தெளிவாக இருக்க வேண்டும் அல்லவா!" என்று கூறி மகளை சாப்பிட வைத்து உறங்க அனுப்பினார். 

 

மகள் உறங்கச் சென்ற பிறகு கணவன் மற்றும் மகனிடம் நாளை என்னென்ன செய்ய வேண்டும் என்று வரிசையாக வேலைகளை சொல்ல, சலித்துக் கொண்ட மேகநாதன், "அம்மா நாளைக்கு காலையில பார்க்க வேண்டியது தானே அம்மா. அதை ஏன் இப்பவே சொல்றீங்க?" என்றான். 

 

"டேய், காலையில் நான் எதையும் மறந்து விட்டால் என்ன செய்வது? அதனால்தான் எல்லாத்தையும் இப்போவே உன்கிட்ட சொல்றேன்" என்று சொல்லி அவன் முகத்தை பாவம் போல் பார்த்தார். 

 

அவரின் முகத்தைக் கண்டு சிரித்துக் கொண்டே "சரி சரி, அதுக்காக மூஞ்ச இப்படி வச்சுக்காதீங்க. நீங்க சொன்னது எல்லாத்தையும் நான் கண்டிப்பா செய்வேன், சரியா?" என்று அவரின் நாடி பிடித்து கொஞ்சி சொல்லிவிட்டு, "நான் போய் தூங்குறேன்" என்று அவனது அறைக்கு சென்று விட்டான் மேகநாதன். 

 

மகள் திருமணத்திற்கு சமாதித்த பிறகு சிவகாமியின் நடவடிக்கையை பார்த்துக்கொண்டு தானே இருந்தார் சிவநேசனும். அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டு "நீ ஏன் இப்போ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருக்கிற? ரிலாக்ஸா எல்லா வேலையும் செய்யலாம். நீயும் பதட்டப்பட்டு அனைவரையும் பதட்டப்படும்படி செய்து கொண்டிருக்கிறாய்!" என்றார் மென்மையாக மனைவியின் கைகளை பிடித்தபடி. 

 

"என்னென்னே தெரியலைங்க. எனக்கு இந்த திருமணம் நல்லபடியாக முடிந்து அவள் நலமாக வாழ வேண்டும் என்று ஒரு எண்ணம் எனக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றே தெரியவில்லை, சில நேரம் இந்த எண்ணத்துடன் இக்கல்யாணம் நடக்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது. எனக்குள் ஏன் இந்த தடுமாற்றம் என்று எனக்கே தெரியவில்லை. நான் என்ன செய்ய?" என்று அவரின் தோளில் சாய்ந்து கொண்டார். 

 

"நீ எதை நினைத்தும் பயப்படாதே சிவகாமி. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். உன் பயம்தான் பதட்டமாக வெளியே தெரிகிறது என்று நினைக்கிறேன்" என்று மனைவியின் தலையை கோதியபடி கூறிய சிவநேசன், 

"எதைப் பற்றியும் யோசிக்காமல், கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடு. காலையில் எழும் பொழுது தெளிவாக இருப்பாய்" என்று கூறி மனைவியை படுக்க வைத்து போர்வை போர்த்தி, "உறங்கு" என்று அவளது தலையை தடவி விட்டார் சிவநேசன். 

 

பொதுவாக சிவகாமி எதையும் வேண்டாம் என்று ஒரு முறை கூறிவிட்டால், அதை உடனே தடுத்துவிடும் சிவநேசன், இம்முறை மனைவியின் இந்த தடுமாற்றத்தில் கொஞ்சம் கலங்கினார். 'ஒருவேளை திருமணம் சிவன்யாவிற்கு நல்லதாக இருக்காதோ? அதுதான் அவளுக்கு அப்படி தோன்றுகிறதோ?' என்ற எண்ணம் அவருக்கு இப்பொழுது வர ஆரம்பித்தது. உடனே 'நாளை பெண் பார்க்க வருகிறார்கள். ஏன் இப்பொழுது இப்படி எனக்கு தோன்றுகிறது?' என்று அவ்வெண்ணத்தை விடுத்து, ஆழ்ந்த உறங்கும் மனைவியின் முகத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.  

 

'அவளை கண்டதையும் யோசிக்காதே என்று சொல்லிவிட்டு, என் மனம் இப்படி கண்டதையும் நினைத்துக் கொண்டிருக்கிறது' என்று நினைத்தார் சிவநேசன். அவர் விருப்ப தெய்வமான சிவனிடம் 'ஐயா, என் பெண்ணிற்கு வாழ்க்கையில் மட்டும் விளையாடி விடாதே! அவளுக்கு நல்லதை மட்டும் செய்' என்று கூறி கடவுளின் மீது பாரத்தை போட்டு, அவரும் கண்ணுறங்க ஆயத்தமானார் . 

 

அனைவரும் நிம்மதியாக உறங்க, மறுநாள் காலை அழகாக விடிந்தது. முதலில் எழுந்த சிவகாமி குளித்து முடித்து, அனைவருக்கும் சூடாக குடிப்பதற்கு எடுத்துச் சென்று அனைவரையும் எழுப்பி விட்டார். 

 

மனைவியின் முகத்தில் தெரிந்த நிம்மதி கண்டு நிம்மதி அடைந்த சிவநேசனும் மனைவி கொடுத்த காபியை குடித்துவிட்டு விரைவாக தயாராகி சிவகாமி கூறிய வேலைகள் அனைத்தையும் செய்தார். 

 

இன்று காலையிலேயே வீட்டு வேலை செய்யும் பெண்கள் இருவரையும் சீக்கிரமாக வரச் சொல்லி இருக்க, அவர்கள் வந்ததும் விருந்தினருக்கு தேவையான உணவுகளை தயாரிக்கும் படி சொல்லி விட்டு, மகள் தயாராகி விட்டாளா? என்று பார்க்கச் சென்றார். 

 

அவளும் குளித்து முடித்து இருக்க அவளுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, "அம்மா உனக்கு தலைவாரி விடட்டுமா?" என்று அன்பாக கேட்டார். 

 

சிவன்யாவோ "அம்மா, என் பிரண்டு ஒருத்தி பியூட்டிஷியன் கோர்ஸ் முடிச்சிருக்கா. அவள்தான் இன்று எனக்கு அலங்காரம் செய்வதாக சொல்லி இருக்கிறாள்" என்று தாயின் முகத்தை பார்க்க, 

 

அவளை நாடி பிடித்து, "சரி. மாப்பிள்ளை வீட்டார் வந்துவிடுவார்கள். அதற்குள் அவள் வந்து விடுவாளா?" என்று கேட்டார். 

 

"இப்பதான் ஃபோன் செய்தேன் அம்மா. அவள் அப்பவே கிளம்பிவிட்டாலாம், வந்து கொண்டு தான் இருக்கிறாள்" என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வேலைக்கார பெண் வந்து, "சிவன்யா பாப்பாவை கேட்டு நான்கைந்து பிள்ளைகள் வந்துருக்கு மா" என்றார். 

 

உடனே வேகமாக வெளியே சென்ற சிவகாமி, அங்கு தன் மகள் வயதில் இருக்கும் நான்கு ஐந்து பிள்ளைகளை கண்டு அன்புடன் புன்னகைத்து வரவேற்று, மகளின் அறைக்கு அழைத்து வந்தார். 

 

அவர்கள் ஒவ்வொருவரையும் தன் அம்மாவிற்கு அறிமுகப்படுத்தினாள் சிவன்யா. 

 

இத்தனை ஆண்டுகளில் சிவன்யா தன் தோழிகள் யாரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தது கிடையாது. முதல் முறை அவர்களது வீட்டிற்கு வந்திருக்கும் தோழிகள் அனைவரும் உங்க வீடு ரொம்ப அழகாக இருக்குது என்று சிவன்யாவை பாராட்டினார்கள். 

 

அங்கிருந்த குடும்ப படத்தை பார்த்த ஒருத்தி, "இது யாரடி? உங்க அண்ணனா ரொம்ப அழகா இருக்காரு" என்று மேக நாதனை பார்த்து சொல்லிவிட்டு, அவர்கள் அம்மா அங்கு நிற்பதைக் கண்டு சங்கடமாக சிரித்தாள் அவள். 

 

பெண் பிள்ளைகள் பேசிக் கொண்டிருக்கட்டும் என்று, அவர்களுக்கு தனிமை கொடுத்து, புன்னகைத்துக் கொண்டே வெளியே சென்று விட்டார் சிவகாமி.  

 

சிவன்யா தன் தாய் வெளியே சென்றதும், அப்படி பேசிய தோழியின் தலையில் கொட்டி, "நீ எங்க அண்ணனை பார்த்து ஜொல்லு விட்டது போதும். அவருக்கு ஏற்கனவே ஆள் இருக்கு, அதனால உன் ஜொல்லை குறைச்சி கிட்டு, வந்த வேலையை பாரு!" என்று சொல்லி புன்னகைத்தாள். 

 

"அதானே! நல்ல அழகா இருக்குற பையன்களுக்கு ஆள் இல்லாட்டினா தான் ஆச்சரியம்" என்று சத்தமாக சொன்னாள் அவளது தோழி. 

 

பின்னர் "சரி சரி, சும்மாதான் உங்க அண்ணனை பார்த்தேன்" என்று சொல்லிவிட்டு சிவன்யாவின் தலையை காய வைப்பதற்கு ஹேர் டிரையரை எடுத்தாள்.  

 

சிவன்யா பள்ளியில் படிக்கும் பொழுது மேக நாதனே அழைத்துச் சென்று, அழைத்து வந்துவிடுவான். பள்ளியிலிருந்து பெற்றோர்கள் வரவேண்டும் என்று சொல்லும் பொழுது, சிவநேசன் சென்று பார்த்து விடுவார், 

 

ஆகவே சிவசங்கரிக்கு அவ்வளவாக அவளது நண்பர்களை பற்றி தெரியாது. சிவன்யாவும் எந்த தோழியர் வீட்டிற்கும் செல்லும் பழக்கமும் இல்லை, அதுபோல் தங்கள் வீட்டிற்கு யாரையும் அழைத்து வருவதும் இல்லை. 

 

ஆகையால் சின்ன பிள்ளைங்க ஏதாவது பேசிக்கட்டும் என்று அங்கிருந்து சென்ற சிவசங்கரி, அவர்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்கு வந்தார். 

 

"எல்லோரும் முதலில் சாப்பிட்டுவிட்டு, மற்ற வேலையை பார்க்கிறீர்களா?" என்று கேட்டு உணவு எடுத்து வர, சிவன்யாவின் தோழிகள் அனைவரும் "உங்களுக்கு எதற்கு சிரமம் ஆன்ட்டி, நாங்கள் வெளியேவே வந்து சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்று கூறி அனைத்தையும் எடுத்துக்கொண்டு உணவு மேஜையில் வைத்து காலை உணவை பேசிக்கொண்டு சாப்பிட்டு ஆரம்பித்தார்கள். 

 

பிள்ளைகளின் கலகலப்பான பேச்சில் சிவசங்கரியும் மகிழ்ந்தார். இரண்டு மூன்று பெண் குழந்தைகள் சேர்ந்தால், வீடு எவ்வளவு அழகாக இருக்கிறது என்று அவர் மனதிற்குள் நினைக்காமல் இல்லை. தன் மகளுக்கு போலவே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார். அனைவரும் திருப்தியாக உண்டு, உணவின் சுவையை பாராட்டி விட்டு சிவன்யாவை அலங்கரிக்க அவளது அறைக்குச் சென்றார்கள்.  

 

சிவசங்கரி சொன்ன நேரத்திற்குள் சிவன்யாவை தேவதை போல் அலங்கரித்து வைத்திருந்தனர் அவளது தோழிகள். 

 

மாப்பிள்ளை வீட்டார் இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக ஃபோன் செய்து கூற, அதை தெரிவிப்பதற்காக சிவன்யாவின் அறைக்குள் வந்தவர் மகளின் அழகை கண்டு மெய்மறந்து நின்றார் சிவகாமி. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 4, 2026 7:29 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

good ponnu kalyanam na summava athuvum alaga dress pani iruntha entha amma tha viduvanga rasikama


 
Posted : July 6, 2026 5:19 pm
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 

@kalidevi thank you 😊😊


 
Posted : July 8, 2026 1:42 pm

Scroll to Top