Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-19

7 Posts
7 Users
0 Reactions
73 Views
(@praveena-thangaraj)
Posts: 275
Member Admin
Topic starter
 
[#363]

அத்தியாயம்-19

வழக்கம்போல் ஏழு மணி பேருந்து டிப்போவிலிருந்து புறப்பட்டது. சாரதி கையில் இருந்த டிக்கெட் கட்டை சரி செய்தபடி, பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் தெரிந்த பிரதிபலிப்பை ஒரு முறை பார்த்தான்.

வழக்கமாக அந்த நேரத்தில் டிப்போவுக்கு வந்து, தேவியுடன் பேருந்தில் ஏறும் ஒரு முகம்... இன்று இல்லை. அவன் தெரிந்தும் தெரியாதது போல தேவியை மட்டும் பார்த்தான்.

‘அவ வரலையா?’ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. ஆனால் வாய்விட்டு கேட்கவில்லை.

தேவியிடம் லாவண்யா வரலையா என்று கேட்பது கூட, தன் மனதைத் தானே காட்டிக் கொடுப்பது போல அவனுக்குத் தோன்றியது.

அதனால் அமைதியாகவே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் பேருந்து அடுத்த நிறுத்தத்தைத் தாண்டியதும், அவன் கண்கள் தானாகவே ஜன்னலோரம் தேவி பக்கம் சென்றன.

டிப்போவிலிருந்து பஸ் புறப்படவும், லாவண்யா இப்போது ஓடி வந்து ஏறுவாளோ என்ற எதிர்பார்ப்பு.

அவன் முகத்தில் எதுவும் தெரியவில்லை. ஆனால் உள்ளுக்குள் மட்டும் ஏதோ ஒன்று மெதுவாகக் குடையத் தொடங்கியது.

‘என்னாச்சு அவளுக்கு? எங்கே போயிருப்பா? ஏன் இன்னிக்கு வரலை?’ என்று கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.

  அண்ணா நகர் வந்ததும் தேவி அவள் பாட்டிற்கு இறங்கி நடந்தாள். சாரதிக்குள் தான் ஏதோ வெறுமை சூழ்ந்தது. அந்த நொடி மட்டுமின்றி, அன்றைய நாள் முழுவதும் அவன் மனம் பேருந்தில் இல்லை.

  மதியம் சாப்பிடும் பொழுது கூட சாப்பாட்டின் சுவை தெரியாமல் சுவைத்தான். அன்னை காஞ்சனா போன் போட்டு, "சாரதி.. மன்னிச்சிடுயா குழம்புல உப்பே போடாம சமைச்சிட்டேன்." என்றார். 

அதன் பின்னே நாவிற்கு உணவை கொண்டு சென்றவன், "நான் உப்பு உரப்பை கவனிக்கலைம்மா" என்றான். 

"ஏன்யா.. என்ன நினைப்புல இருக்க?" என்று கேட்டதும், 'லாவண்யா நினைப்பு' என்று கூறவா முடியும்?

"இல்லைம்மா உப்பு தானே இல்லை.. ஒரு நாள்ல சமாளிச்சிடுவேன்" என்று அவனை அவனே சமாதானம் செய்துக் கொண்டான்.

  மதியம் கூட தேவி மட்டும் தனித்து வந்து ஏற, ஏதோ கவலையுடன் திரிந்தான். 

  மாலை வீட்டை கடக்கும் பொழுது, வீடு பூட்டியிருக்கவும், 'குடும்பத்தோட எங்கயோ போயிருக்காங்க போலயே' என்று யூகித்துக் கொண்டான்.  

அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு வேறு. சனிக்கிழமை பைக்கில் செல்லும் பொழுது, இலக்கியா வீட்டில், இஷிதாவுக்கு இலக்கியா தலைவாறி விடுவதை கவனித்தான். 

  லாவண்யா அப்ப வந்திருப்பா' என்று அவ்விடத்தை இரண்டு முறை பைக்கில் சுற்றினான்‌. லாவண்யா இருந்தால் வண்ணத்துப்பூச்சி போல வீட்டிலிருந்து வெளிவந்து தலைக் காட்டியிருப்பாளே. அவள் வரவில்லை‌. டிப்போவிற்கு செல்லும் நேரமும் நெருங்கிட, மாலையில் பார்ப்போமென நினைத்துக் கொண்டான். 

மாலை எப்பொழுது ஆகும், லாவண்யா வீட்டுப்பக்கம் செல்வோமென காத்திருக்க, பெட்ரோல் வீணானது தான் மிச்சம். லாவண்யா வெளிவந்தப்பாடில்லை. தேவியிடம் கேட்கலாம். லாவண்யாவின் போன் எண்ணும் உள்ளது. ஆனால் இரண்டிலும் முயற்சிக்காமல் அவளை தேடினான்.

சாரதியின் பார்வை இயல்பாகவே மாடியைத் தேடியது. ஜன்னல், வராந்தா, மாடிப்படி எங்கும் லாவண்யா தென்படவில்லை.

இரண்டு முறை பின்னால் பார்த்தான். லாவண்யா இல்லையா என்ற அந்தக் கேள்வி அவனுக்குள் இன்னும் பெரிதாகியது.

ஒருவேளை வீட்டில் இல்லையோ? எங்கேனும் வெளியே போயிருப்பாளா? என்று எண்ணியபடியே பைக்கை தொடர்ந்து செலுத்தினான்.

சிறிது தூரம் சென்ற பிறகும் மனம் அமைதியாகவில்லை.

போனை எடுத்து அழைத்து விடலாமா? ஒரு நொடிக்கு அந்த எண்ணம் வந்தது.

அடுத்த நொடியே அதை மறுத்துவிட்டான். 'நான் போன் பண்ணினா... அவ என்ன நினைப்பா? எனக்கு அவளை பிடிச்சிருக்கு போலன்னு நினைச்சிடுவா.' என்று பிடிவாதமாக போனை மீண்டும் பாக்கெட்டில் வைத்தான்.

ஆனால் அவனுக்கே தெரியும்... அது பிடிவாதம் இல்லை. பயம். தன் மனம் என்ன சொல்கிறது என்பதை தானே ஏற்றுக் கொள்ள முடியாத பயம்.

ஞாயிறு கூட சைக்கிளில் நாலைந்து முறை கடந்தான்‌. எல்லாம் வேதனையின் உச்சத்தை தான் அடைந்தான்‌.

  மதிய உணவை வீட்டில் வந்து சாப்பிடுகின்றேன் என்று சாரதி கூறியிருக்க, சிக்கனை திங்காமல் சாப்பாட்டில் கோலமிட்டவனை கண்டு "என்னய்யா... இரண்டு நாளா மோகினி பேய் பிடிச்சி ஆட்டற மாதிரி, மந்திரிச்சு விட்டதாவே திரியற. சாப்பாட்ல கவனமில்லை. 

   அப்பா சிநேகிதர் முத்து அண்ணன் அவரே என்னம்மா ஆச்சு சாரதி சிரிக்க மாட்டேங்கறான், பேசறதை கவனிக்கறதில்லைனு சொன்னாரு." என்று கேட்டு முடிக்கவும், சாரதியோ சுதாரிக்க ஆரம்பித்தான். 

"ஓ.. ஓன்னுமில்லைம்மா... பைக் வேற வாங்கிட்ட, அது கடன் மாதிரி ஆச்சுல்ல. நாம கடனே வாங்க வேண்டாமில்ல யோசனை‌ செய்தோம்" என்றான்.

"அதெல்லாம் பார்க்க முடியுமா சாரதி" என்று வேலையை பார்த்தார்.

ஒரு வழியாக திங்கட்கிழமை வந்தது. 

காலை முதலே சாரதியின் கண்கள் டிப்போ பேருந்தில் பெண்கள் ஏறுபவர்களைத் தேடிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு பெண்கள் ஏறும்போது, அவனுடைய பார்வை ஒரு நொடி அவர்கள் மீது விழுந்தது.லாவண்யாவாக இருக்குமோ என்ற ஆவல். ஆனால் தேவி மட்டும் பேருந்தில் ஏறினாள்.

அவளைப் பார்த்ததும் சாரதியின் மனம் லாவண்யாவை பற்றி அறிய துடித்தது..

‘இப்பவாவது கேட்கலாமா?’ என்று நினைத்தான். ஆனால் அவள் அருகில் வந்ததும், பயணிகள் வேறு இறங்க வேண்டிய இடத்தை கூறி டிக்கெட் கேட்க, வேலையை கவனிக்கும் பொருட்டு, அவனும் டிக்கெட் கிழித்துக் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்தான்.

சில நொடிகள் கழித்து, "தங்கச்சி... அவங்க வரலையா?" என்று ஒருவழியாக கேட்டு விட்டான்.

அவன் குரலில் இருந்த இயல்பற்ற தன்மையை அவனுக்கே உணர முடிந்தது.

தேவி உடனே அவனைப் பார்த்தாள். "யாரு அண்ணா?" என்றவள் தெரிந்தும் தெரியாதது போல கேட்டாள். சாரதி லேசாக தடுமாறினான்.

"அது... உங்க பிரெண்ட்.. லாவண்யா'' என்றான்.

"தெரியல அண்ணா. நீங்க அவ போன் நம்பர் வச்சியிருந்தா... கால் பண்ணிப் பாருங்க." என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு இருக்கைக்குச் சென்றாள்.

சாரதி சில நொடிகள் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தான். போன் நம்பர் அவனிடம் இருந்தது. அதை அவனே சேமித்து வைத்திருந்தான்.

லயா. அந்தப் பெயரைப் பார்த்தாலே மனதில் ஏதோ மென்மையாகிவிடும். ஆனால் அழைக்க மட்டும் முடியவில்லை.

அன்றைய பயணம் முழுவதும் லாவண்யா இல்லாத வெற்றிடம் பேருந்துக்குள் கூட இருப்பது போலத் தோன்றியது.

அவள் வழக்கமாக அமரும் இடம். அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் விதம். அவள் முன்பு டிக்கெட் வாங்கும்போது அவனிடம் நீட்டும் பணம். அவனைக் கோபப்படுத்தும் அளவுக்கு கேள்வி கேட்டது.

சில சமயம் அவன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது. எல்லாமே நினைவுக்கு வந்தது.

டிக்கெட் கொடுக்கும் கைகள் வேலை செய்து கொண்டிருந்தாலும், மனம் மட்டும் அவளிடமே போய்க் கொண்டிருந்தது. அன்றைய மதியப் பயணத்திலும் அவள் இல்லை.

மாலை திரும்பும்போதும் லாவண்யா இல்லை. அவனுக்குள் இருந்த ஏக்கம் இப்போது தவிப்பாக மாறியிருந்தது.

'ஒரு போன் பண்ணி எங்கே இருக்கன்னு கேட்டுடலாம்.' என்று எண்ணினான்.மீண்டும், 'வேலை நேரத்துல போன் பண்ணறது சரியா இருக்காது.' என்று தள்ளிப் போட்டான்.

இரவு வரை காத்திருக்க முடிவெடுத்தான்.

அதே நேரத்தில் வீட்டின் மாடியில் நின்றிருந்த, தேவி லாவண்யாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஏன்டி... காலையில கொஞ்சம் லேட்டா கிளம்பிட்ட. அதனால சாரதி அண்ணா வர்ற பஸ்ஸை வரமுடியலை. காலேஜ் முடிஞ்சு, திரும்பி வேற பஸ்ல ஏறலாம்னு சொன்ன? என்னடி உன் பிளான்?" லாவண்யா சுவரில் சாய்ந்து நின்றாள்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், "அவரிடம் காதலை சொல்லிட்டேன். ஆனா பதில் தரமாட்டேங்கறார்." அவளுடைய குரலில் இருந்த சோர்வு தேவிக்கு புரிந்தது.

"அவரா போன் பண்ணுவார்னு என்னை நானே கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன். அவரு போனே பண்ணலை." லாவண்யா கீழே சாலையைப் பார்த்தாள்.

"இன்னிக்கும் அவரைத் தவிர்த்து பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா முடியலை தேவி." லாவண்யா குரல் மெதுவாக உடைந்தது.

"கஷ்டமா இருக்கு." என்றவளிடம், தேவி கையைப் பிடித்தாள்.

லாவண்யா கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்தாள். "அவர் என்னை விரும்பாட்டினாலும் பரவாயில்லை. நான் அவரை விரும்பறேன். அது மட்டும் போதும். இப்படியே அவரைப் பார்க்காம இருக்க சொன்னா என்னால இருக்க முடியுமா தெரியல." அவளது கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை தேவி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் சாலையில் சைக்கிள் ஒன்று வந்து நின்ற சத்தம் கேட்டது.

லாவண்யாவின் பார்வை தானாகவே கீழே சென்றது. சாரதி அவன்தான். அவளது இதயம் ஒரே துடிப்பில் வேகமெடுத்தது.

சாரதி வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தினான். சுற்றிலும் பார்த்தான். வீட்டின் மாடியை நோக்கிப் பார்த்தான்.

அங்கே லாவண்யா நிற்பதைப் பார்த்ததும், அவனது முகத்தில் ஒரு நிம்மதி.

அவள் இங்கு தான் இருக்கிறாள் அவ்வளவுதான் அவனுக்குத் தேவைப்பட்ட பதில். ஆனால் உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு போகாமல், ஏதோ யோசித்தபடி நின்றான்.

பிறகு சைக்கிளின் செயினை கையால் தொட்டுப் பார்த்தான்.

அது கழன்று விட செய்தான் 'ச்ச..." என்று மெதுவாகச் சொல்லி கீழே குனிந்தான்.

செயினை சரி செய்யும் பெயரில் இன்னும் சில நொடிகள் அங்கேயே நின்றான். மேலே இருந்து லாவண்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தேவி அவளது முகத்தைப் பார்த்து சிரித்தாள் "பார்த்தியா... உன்னைப் பார்க்காம அவராலையும் முடியல." லாவண்யா பதில் சொல்லவில்லை.

அவளது கண்கள் மட்டும் சாரதியிடமிருந்து விலகவில்லை. செயினை சரி செய்தவன் எழுந்து நின்றான்.

ஒரு முறை மேலே பார்த்தான். லாவண்யாவை நேராகப் பார்த்தான். அடுத்த நொடி போனை எடுத்தான்.

லாவண்யாவின் போனில் குறுஞ்செய்தி வந்தது. அவள் அதிர்ச்சியுடன் திரையைப் பார்த்தாள்.

'உன்னை பார்க்கணும் பார்க்குக்கு வா.' அவ்வளவுதான் சாரதியிடமிருந்து வந்தது. வேறு வார்த்தை இல்லை.

லாவண்யாவின் கண்கள் அந்த இரண்டு வரிகளிலேயே நிலைத்தன.

"தேவி..." அவளது குரல் நடுங்கியது.

"என்னடி?" என்ற தேவியிடம் போனை நீட்டினாள்.

தேவி படித்ததும், அவளைப் பார்த்து சிரித்தாள். "போடி... உன்னைப் பார்க்கணுமாம்." லாவண்யாவின் கண்களில் சந்தோஷக் கண்ணீர் துளிர்த்தது.

"அவர்... அவரே கூப்பிடுறாரு தேவி." அவள் அந்தச் செய்தியை மீண்டும் மீண்டும் படித்தாள். சாரதி அதற்குள் சைக்கிளில் புறப்பட்டிருந்தான்.

அவனைப் பார்த்தபடியே லாவண்யா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"வா... பார்க்குக்கு போலாம்." என்று தேவியை இழுத்துக் கொண்டாள்.

பூங்கா வாசலில் இருவரும் வந்து சேர்ந்தபோது, மாலை நேரம் இருளுக்குள் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

பூங்காவுக்குள் குழந்தைகளின் சிரிப்புச் சத்தம். தொலைவில் சில வயதானவர்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர்.

சில இளைஞர்கள் இரும்பு பெஞ்சுகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மரங்களின் இலைகளை வருடிய காற்று, நாள் முழுவதும் இருந்த வெப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டிருந்தது.

லாவண்யாவின் பார்வை மட்டும் சாரதி இருந்த திசையை ஏறிட்டது.

சைக்கிளை பூங்காவின் இரும்புக் காம்பவுண்டில் சாய்த்து, சங்கிலியால் பூட்டிவிட்டு உள்ளே வந்தவனும் அவளை தான் கவனித்தான்.

அவன் நடந்து வருவதைக் கண்டதும் லாவண்யாவின் இதயம் வேகமாகத் துடித்தது.

இத்தனை நாட்களாக தூரத்தில் பேருந்து பயணி என்று நின்று பார்த்தவன். இன்று தானாகவே அவளைப் பார்க்க அழைத்திருக்கிறான்.

சாரதி அருகில் வந்தான். தேவி எழுந்து நின்றாள்.

"நான் கொஞ்சம் அந்தப் பக்கம் போறேன்." என்று சொல்லிவிட்டு அவளுக்கே உரிய குறும்புப் புன்னகையுடன் விலகிச் சென்றாள்.

சாரதி அதை கவனித்தான். லாவண்யாவும் அவனைப் பார்த்தாள். இருவருக்கும் நடுவில் சில நொடிகள் அமைதி.

காற்று மட்டும் அவர்களைக் கடந்து சென்றது.

"இரண்டு நாளா எங்க போன?" என்று சாரதி முதலில் கேட்டான்.

லாவண்யா அவனைப் பார்த்தாள். "நான் ஊருக்குப் போயிருந்தேன். எங்க அக்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது." என்றாள்.

சாரதி சைக்கிள் சாவியை பார்த்து, பேச்சின்றி இருந்தான். 

"என்னைத் தேடினீங்களா?" அவள் கேட்டதும் சாரதி பார்வையைத் தாழ்த்தினான்.

"நான் எதுக்கு தேடணும்?" என்றான்.

"அப்போ எதுக்கு 'எங்க போன'ன்னு கேட்டீங்க? என்னை பார்க்க பார்க்குக்கு வர சொன்னிங்க?" என்றாள். 

சாரதி பதில் சொல்லவில்லை. தடுமாறி முடித்து காதலை கூற தவித்தான். லாவண்யாவின் முகத்தில் மெதுவாகப் புன்னகை மலர்ந்தது.

"என்னை மிஸ் பண்ணீங்களா?" என்றதும் அவன் அவளைப் பார்த்தான். இந்த முறை பார்வையைத் தவிர்க்கவில்லை. "ஆமா." என்றான் ஒரே வார்த்தையில்..

லாவண்யாவின் முகம் அப்படியே மலர்ந்தது. அவளது கண்களில் சந்தோஷம் தெரிந்தது. சாரதி மெதுவாக மூச்சை விட்டான்.

"நீ இல்லாத இரண்டு நாளும்... ஏதோ பரிச்சயமான ஒரு விஷயத்தைத் தொலைச்ச மாதிரி இருந்துச்சு." லாவண்யா அவனைப் பார்த்தபடியே இருந்தாள்.

"பஸ்ல எல்லாரும் இருந்தாங்க. வேலை எல்லாம் நடந்துச்சு. ஆனா... நீ மட்டும் இல்ல என்றதும் தவிக்க ஆரம்பிச்சிட்டேன்" அவனது குரலில் இருந்த தவிப்பு, லாவண்யாவின் கண்களை ஈரமாக்கியது.

"அதனால மட்டும் தான் கூப்பிட்டீங்களா?" என்றாள்.

சாரதி மறுப்பாய் தலையசைத்தான். "நீ என்கிட்ட காதலை சொல்லிட்ட. அதுக்கப்புறம்... நான் தினமும் அதை நினைக்காம இருக்க முயற்சி பண்ணேன்.. முடியல."

லாவண்யாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"சாரதி..." அவள் அவனது பெயரை அவ்வளவு மெதுவாகச் சொன்னாள்.

"நான் உன்னை விரும்பக்கூடாதுனு என் மனசுக்கிட்ட நிறைய காரணம் சொல்லிக்கிட்டே இருந்தேன்." அவன் அவளைப் பார்த்தான்.

"வேலை வேற... குடும்பம் வேற... வாழ்க்கை வேற... ஆனா என் மனசு மட்டும் அதையெல்லாம் கேட்கவே இல்லை." லாவண்யா கண்ணீரைத் துடைத்தாள்.ன

"அதுக்கு" அவள் வார்த்தையை முடிக்க முடியாமல் அவனைப் பார்த்தாள்.

சாரதி அவளது கண்களை நேராகப் பார்த்தான். "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, லாவண்யா." அந்த ஒரு வார்த்தை... அவள் இத்தனை நாட்களாகக் காத்திருந்த பதில்.

லாவண்யாவின் கண்களில் இருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. அவள் சிரித்துக் கொண்டே அதைத் துடைத்தாள்.

"இதைச் சொல்லத்தான் இவ்வளவு நாளா என்னைத் தவிக்க விட்டீங்களா?" என்று அணைக்க நினைத்தாள். ஆனால் இது பொதுவிடம் என்றதும் புத்திக்கு தெரிந்தது. 

  "சரியா தப்பா தெரியலை லாவண்யா. நான் காதலிச்சிட்டேன். என்னை எக்காரணம் கொண்டும் நடுவுல வெறுக்க மாட்டியே?" என்றான்.  இல்லை என்று மறுத்தாள். தேவியோ அவசரமாக லாவண்யா முன் வந்து, "லாவண்யா.. உங்க தாத்தாவோட இஷிதா வர்றா. இங்க இருந்தோம் அப்பறம் மாட்டுவ. இஷிதா பார்க் போகலாம்னு கூப்பிட்டப்ப வரலைனு சொல்லிட்ட. மாடில பேசிட்டு இருந்த நாம, இப்ப இங்க வந்ததை அவ பார்த்தா.. அவ்வளவு தான். குயிக்கா எஸ் ஆகிடலாம்." என்று இழுக்க, லாவண்யா சாரதியை கவனித்து, எழுந்து நின்றாள். 

  சாரதியோ, "கிளம்பு... மனசுல இருந்த பாரம் போச்சு. போன்ல பேசிக்கறேன்" என்று சாரதி முன்னே நடக்க லாவண்யாவோ வெட்கத்துடன் தேவி கூடவே வந்தாள். 

இஷிதாவை நிற்க வைத்து , சாரதி ஏதேதோ பேச, லாவண்யா தேவி வேறு வழியில் நழுவியிருந்தார்கள். காதலை சொன்னவனிடம் நின்று நிதானமாக கூட உணர்வை வெளிப்படுத்தாத நிலையில் இருந்தனர். 

தொடரும். 

பிரவீணா தங்கராஜ்

 

 

 


 
Posted : September 16, 2026 9:58 am
(@kokila)
Posts: 7
Active Member
 

சிக்கிட்டான் சாரதி


 
Posted : September 16, 2026 10:12 am
(@subhakumar85)
Posts: 122
Estimable Member
 

Evan vilunthuttaan.. aduthu villan yeppo entry kudukka porano


 
Posted : September 16, 2026 10:25 am
(@guna-sundari)
Posts: 148
Estimable Member
 

Wow sarathy accepted Lavanya love. Super super. Awesome feel while read sis. Very intresting sis.


 
Posted : September 16, 2026 11:27 am
(@crvs2797)
Posts: 198
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 19)

எப்படியும் கீழே விழுந்தும் மீசையில மண் ஒட்டலைங்கிற கதையா, காதல்ல விழுந்தப் பிறகும் விழாத மாதிரியே பில்டப் கொடுத்திட்டிருக்கிறான் போல இந்த சாரதி. இதைத்தான் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னு சொல்றாங்களோ ?

அப்பாடா ! ஒரு வழியா இந்த பூனைக்கும் மணியைக் கட்டியாச்சு என்கிற கணக்கா, சாரதி வாயாலயே காதலை சொல்லிட்டான் ? இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் லாவண்யா...?

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 16, 2026 3:37 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 137
Estimable Member
 

Sarathy yum love ah express pannitan pa aana sikkal yae ithuku appuram than varum pola 


 
Posted : September 16, 2026 6:51 pm
(@kothaihari)
Posts: 129
Estimable Member
 

பய சிக்கிட்டான்


 
Posted : September 19, 2026 9:24 am

Scroll to Top