பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-24
அத்தியாயம்-24
சாரதி சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். அப்பாவைப் பற்றிப் பேசியதால் மனதில் இருந்த பாரம் கொஞ்சம் இறங்கியிருந்தது.
சில நொடிகளுக்குப் பிறகு லாவண்யாவைப் பார்த்தவன்,
"நான் நடுவுல கோச்சிங் போனதா சொன்னேனே... அது ஃபுட்பால் கோச்சிங்." என்றான்.
"ஃபுட்பாலா" லாவண்யாவின் கண்கள் விரிந்தன.
"ம்ம். ஆக்சுவலா... எங்கப்பா எனக்கு பைக் வாங்கித் தரமாட்டேன்னு சொன்னது அதுக்காகத்தான்.
"அதுக்கும் பைக்குக்கும் என்ன சம்பந்தம்?" என்றாள்.
"சம்பந்தம் இருக்கு." என்று சாரதி சிரித்தான்.
"ஃபுட்பால் கோச்சிங்ல நான் முரட்டுத்தனமா விளையாடுவேன். அதுல பைக் வேற முறுக்கிட்டு ஓட்டுவேன்னு தான் அப்பா பைக்கே வாங்க மறுத்தார். அதோட ஃபுட்பால் கோச்சிங்குக்கும் பணம் செலவாகும். அதையும் அப்பாதான் பார்த்துக்கிட்டிருந்தார்." என்றவன் குரல் மீண்டும் மெதுவானது.
"அப்பா சேமிச்ச பணம் மருத்துவமனைக்குப் போயிடுச்சு. அவரை ஹாஸ்பிடல்ல கூட்டிட்டு போறது, வர்றதுன்னு நாலைஞ்சு மாசம் கோச்சிங்ல சரியா போகவே முடியலை. அதனால கோச் என்னை திட்டி அனுப்பிட்டார்."
லாவண்யா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். "அப்பா இருந்தவரைக்கும்... ஃபுட்பால் சாம்பியன் ஆகணும்னு ஆசை இருந்தது." அவன் சிறிது நேரம் எதையோ நினைத்துப் பார்த்தான்.
"அப்பா போனதும் அந்த ஆசையும் போயிடுச்சு." அவன் முகத்தில் ஒரு வெறுமையான புன்னகை தோன்றியது.
"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ட்ரீம் வேலைன்னு ஒண்ணு இருக்கும். அது எனக்கு கனவாவே இருந்துடுச்சு." லாவண்யா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாரதி தொடர்ந்து பேசினான். "பணமிருக்கோ இல்லையோ... அப்பா இருக்கற பசங்க இளவரசனுங்க. அதே பொண்ணுங்கன்னா இளவரசிங்க. அப்பா இல்லன்னா... ஒரு தனிமனித போர்வீரன் தைரியமா இருந்தா.. . அதே மனதைரியம் இல்லன்னா... கிட்டத்தட்ட அனாதை." அந்த வார்த்தைகள் லாவண்யாவின் நெஞ்சை நேராகத் தைத்தது.
அடுத்த நொடியே அவள் யோசிக்காமல் சாரதியை கட்டியணைத்தாள். சாரதி திடுக்கிட்டு நெளிந்தான்.
இவ்வளவு நேரம் மடைதிறந்த வெள்ளம் போல தன் மனதை அவளிடம் பகிர்ந்திருந்தவன், அவள் அதை இவ்வளவு ஆழமாக எடுத்துக் கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை.
"ஏன் இப்படி பேசற சாரதி.." அவளது குரல் அவன் தோளருகே ஒலித்தது.
சாரதி சில நொடிகள் அப்படியே இருந்துவிட்டு, பதற்றத்துடன், "லயா... யாராவது பார்க்கப் போறாங்க." என்றான்.
அவனது குரலில் வெட்கமும் பதட்டமும் கலந்திருந்தது. அதைக் கேட்டதும் லாவண்யாவும் சட்டென தன் அணைப்பை விலக்கிக் கொண்டாள்.
சுற்றிலும் பார்த்தாள். யாராவது தங்களைப் பார்த்தார்களா என்று உறுதி செய்து கொண்டவள், எதுவும் நடக்காதது போல தண்ணீர் பாட்டிலை எடுத்தாள்.
வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீரை அவசரமாகக் குடித்தாள். பாதி தண்ணீர் அவளது உடையிலும் சிந்தியது.
அவள் பதற்றப்பட்டு தண்ணீர் குடிப்பதைப் பார்த்த சாரதி மென்னகைத்தான்.
"என்னாச்சு?" என்று கேட்காமல் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
லாவண்யா அவனைப் பார்த்ததும், "உங்களுக்கு தண்ணி.." என்று பாட்டிலை அவன் முன் நீட்டினாள்.
சாரதி மெதுவாக வாங்கிக் கொண்டான். இரண்டு மடக்கு குடித்தவன் பாட்டிலை மூடி வைக்க முயன்றபோது, "எனக்கும் தண்ணி" என்று தேவி அங்கே வந்து நின்றாள்.
இருவரும் ஒரே நேரத்தில் அவளைப் பார்த்தனர். தேவி பாட்டிலை வாங்கி மடக் மடக்கென்று குடித்தாள்.
"சைக்கிள் ரேஸ் வச்சி பொடிசோட போட்டி போட்டேன். பேய் மாதிரி ஓட்டுதுங்க. என்னால முடியலை." என்று மூச்சு வாங்கியபடியே சொன்னாள்.
"கொஞ்சம் ரெஸ்ட்..." என்றவள் கீழே அமர்ந்தாள், "லாவண்யா... பசிக்குதுடி." என்றாள்.
"நான் எதாவது வாங்கிட்டு வர்றேன்.'' என்று சாரதி எழுந்தான்.
அருகிலிருந்த கடையை நோக்கி நடந்து சென்றான். அவன் சென்றதும் தேவி உடனே லாவண்யாவை நோக்கி திரும்பினாள்.
"மேடம்... என்ன நீங்க? முதல்ல சாரதி அண்ணா கையைப் பிடிச்சிங்க. அப்பறம் கட்டிப் பிடிக்கறீங்க. எல்லாமே ஃபாஸ்டா போயிட்டு இருக்கு. கண்ட்ரோல் யுவர் செல்ஃப்" என்று தோழியாக இருப்பதால் கேலி செய்தபடி கண்டித்தாள்.
லாவண்யா அவளை முறைத்தாள். "சும்மா இரு. அவர் அப்பாவைப் பத்தி சொன்னாரு. அவர் பி.காம் முடிச்சிருக்காருன்னும் சொன்னாரு." என்று லாவண்யா நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் சொன்னதைக் கேட்ட தேவி முகமே மாறியது. "ஓஎம்ஜி" என்றவள், "அதான் அந்த அண்ணா கண்டக்டர் வேலையை இவ்வளவு ஆத்மார்த்தமா செய்யறாரா?" என்றாள்.
பிறகு தன் தலையில் தானே லேசாகத் தட்டிக்கொண்டாள்.
"சாரி சாரி... நீ கட்டிப் பிடிக்கவும் நான் மத்த லவ்வர்ஸ் மாதிரி நினைச்சிட்டேன்." சிறிது நேரம் சுற்றிப் பார்த்தவள் குரலைக் குறைத்தாள். "பட்... பப்ளிக்ல கட்டிப் பிடிக்காத. போற வர்றவங்க ஒரு மாதிரி முனங்கினாங்க. நான் அதனால வந்துட்டேன்... தப்பா நினைக்காத." லாவண்யா மெதுவாகத் தலையசைத்தாள்.
"இல்லை... தப்பில்லை. நீ சரியாத்தான் சொன்ன. ஆனா... அந்த நேரம் அவரை அப்படிப் பிடிச்சு கட்டிக்கிட்டா ஆறுதலா இருக்கும்னு தோணுச்சு." தேவி அவளைப் பார்த்துச் சிரித்தாள்.
"உன் பாயிண்ட் ஆஃப் வியூல இது சரிதான்." அடுத்த நொடியே அவளது முகத்தில் குறும்பு வந்தது.
"ஏய்... அண்ணா பி.காம் படிச்சிருக்கார்னா, தெரியாத பாடத்தை அவர்கிட்ட கேட்டுப்ப போலயே'' என்று தேவி சிரிக்க, லாவண்யா உடனே "உன்னை கொல்லப் போறான்" என்றாள்
"எதுக்கு? டவுட் கேட்டதுக்கா?" என்றாள் தேவி.
"உன் டவுட்டே வேற மாதிரி இருக்கு." இருவரும் சிரித்துக் கொண்டிருக்க, தொலைவில் சாரதி கையில் சில பாக்கெட்டுகளுடன் வந்து கொண்டிருந்தான்.
"என்ன சிரிப்பு?" என்று கேட்டபடியே அருகில் வந்தான்.
"ஒண்ணுமில்லை அண்ணா" என்று தேவி உடனே முகத்தைச் சீராக்கிக் கொண்டாள்.
சாரதி சந்தேகமாக லாவண்யாவை பார்த்துவிட்டு, கையில் இருந்த பாக்கெட்டுகளைத் திறந்தான்.
பப்ஸ், சாண்ட்விச், ஃப்ரெஞ்ச் ஃப்ரை... எது வேண்டு எடுத்துக்க கூறினான்.
"ஏதாவது ஒன்னை வாங்கியிருக்கலாமே" என்றதற்கு "அட பசிக்கும். சட்டுனு காலியாகிடும்."என்று சாரதி சாதாரணமாகச் சொன்னான்.
அவன் சொன்னது போலவே... சில நிமிடங்களிலேயே எல்லாமே காலியாகிவிட்டது.
மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடித்ததும் தேவி மீண்டும் சாரதியைப் பார்த்தாள்.
"அண்ணா.. அண்ணா... நீங்க பி.காம் படிச்சிருக்கிங்க. புக்கை பார்த்தா சொல்லி தர முடியுமா?" என்றாள். தேவி கேட்டதும் சாரதி கண்களைச் சுருக்கிப் பார்த்தான்.
"தேவி?" என்று லாவண்யா அதட்டினாள்.
"ம்ம்ம புக்கை பார்த்தா எல்லாமே ஞாபகம் வந்துடும்'' என்றான்.
"அப்ப... ஃபுட்பால் கோச்சிங் போகலைன்னாலுமா அதே மாதிரி விளையாடுவிங்களா?" சாரதி உடனே சிரித்தான்.
"நான் ஆல்ரெடி நேரம் கிடைக்கறப்ப க்ரவுண்டுக்குப் போய் விளையாடுவேன்."
"அம்மா தான் பிடிச்சதைச் செய்டான்னு சொல்லுவாங்க" அவன் சொன்னதும் லாவண்யா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
"அப்போ... உங்க ஃபுட்பால் ட்ரீம் இன்னும் கொஞ்சமாவது இருக்கா?" சாரதி பதில் சொல்லாமல் சில நொடிகள் அவளைப் பார்த்தான்.
அந்தக் கேள்வி அவனுக்குள் பல வருடங்களாகத் தூங்கிக் கிடந்த ஒரு ஆசையை மெதுவாகத் தட்டி எழுப்பியது. ஆனாலும் தலையை மறுப்பாய் அசைத்தான்.
"தையல் வருமானத்துல வர்றதை நான் பார்த்துக்கறேன்னு கூட அம்மா சொன்னாங்க. ஏற்கனவே அப்பாவை கஷ்டப்படுத்தியிருக்கேன். இப்ப அம்மாவையும் கஷ்டப்படுத்தி, ஃபுட்பால் கோச்சிங்ல கலந்து பிளேயரா ஆகவும் விரும்பலை. அதனால... இதுவே எனக்கு சாட்டிஸ்ஃபேக்ஷனா இருக்கு." என்றான்.
லாவண்யா அவனைப் பார்த்தபடி மெதுவாகப் புன்னகைத்தாள்.
அவனுக்குள் இருந்த ஆசை முழுமையாக இறந்து விடவில்லை. ஆனால் குடும்பத்தைத் தாண்டி அந்த ஆசையைப் பிடித்துக்கொண்டு ஓட அவனுக்கு மனம் வரவில்லை என்பதை அவள் புரிந்துக் கொண்டாள்.
மூவரும் அப்படியே பேசிக்கொண்டே சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தனர்.
மரங்களின் நிழல் பாதையில் விழுந்திருந்தது. அவ்வப்போது காற்று வீச, மேலே இருந்த இலைகள் ஒன்றோடொன்று உரசி சத்தம் எழுப்பின.
தேவி வழக்கம்போல ஏதாவது ஒன்றைச் சொல்லி லாவண்யாவை கலாய்க்க, அவளும் பதிலுக்கு தேவியை வம்பிழுத்துக் கொண்டே நடந்தாள்.
சாரதி இருவரையும் பார்த்தபடி சிரித்துக் கொண்டே அவர்களுடன் நடந்தான். குறிப்பாக சாரதி கையை லாவண்யா இறுக்கமாய் பிடித்தபடி தான் நடந்தாள். இந்த முறை பதட்டம், நடுக்கம், பயம், தாண்டி, ஒரு நேசம் இருவருக்குள் பாலத்தை கட்டியிருந்தது.
நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் கண்ணை கூசுவதை குறைக்க ஆரம்பித்ததும், தேவி திடீரென்று, "ஏய்... நேரம் ஆகுது. சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்." என்றாள்.
மூவரும் மீண்டும் வேறொரு மரநிழல் இருந்த இடத்திற்கு வந்தனர். லாவண்யா கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸை எடுத்தாள்.
அதைத் திறந்ததும் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவின் வாசனை காற்றோடு கலந்து வந்தது. அதோ போல தேவி சாரதியும் கொண்டு வந்த உணவை திறந்திட, கமகமத்தது.
மூவரும் மரத்தடியில் ஒன்றாக அமர்ந்தனர். எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர். டிபன் பாக்ஸில் இருந்ததை மூவரும் பகிர்ந்து கொண்டனர்.
ஒருவர் எடுத்துச் சாப்பிட, அடுத்தவர் அதையே வாங்கிக் கொள்ள... மாறி மாறி சாப்பிட்டுக் கொண்டே பேசினார்கள்.
தேவி ஏதாவது சொல்லி சிரிக்க வைக்க, லாவண்யா சிரித்தபடி அவளை முறைத்தாள்.
சாரதி இருவரையும் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். அங்கேயே வாஸ்பேஷனில் டிபன் பாக்ஸையும் லாவண்யா கழுவி தந்தாள்.
சாரதியின் டிபன் பாக்ஸும் சேர்த்தே கழுவி நீட்டினாள்.
கூடுதலாக அவன் மீது தண்ணிரை தெளித்து விளையாடினாள்.
சாரதிக்கு தினசரி வேலையை தாண்டி, வேறு கிண்டல் கேலி சந்தோஷம் என்பது குறைவாக இருக்க, இந்த நாள் மிகவும் பொக்கிஷமான நினைவாக மனதில் பதிந்தது. லாவண்யாவுக்கு சொல்லவா வேண்டும்.
வீடு திரும்பும் போதும், அவள் கையை பிடித்து நடந்தாள். அதெல்லாம் விகற்பமாக இல்லை என்பதால் தேவி சுட்டிக்காட்டி கண்டிக்கவில்லை.
பஸ் ஏறிய பொழுதும், கடைசி இருக்கையில் ஜன்னல் அருகே தேவி அமர, முன்னிருக்கையில் ஜன்னலோரம் லாவண்யாவும் அவனளருகே சாரதியும் அமர்ந்தான்.
முதல் முறை சாரதி அருகே பேருந்து பயணத்தில் நெருங்கி அமர்ந்து வருவதும் சுகமாக இருந்தது. இருவரும் மாறி மாறி என்ன பேசினார்கள் என்று கேட்டால் தெரியாது. ஆனால் வாய் கொஞ்சமும் மூடாமல் பேசிக்கொண்டே வந்தாள் லாவண்யா. இதில் லாவண்யா கைகளை சாரதி பின்னி பிணைந்து சொடக்கிட்டு, இறுக பிடித்து, தோள் உரசியபடி மெய்மறந்தனர்.
நான் இந்த டிக்கெட்டை எல்லாம் பத்திரமா வச்சிப்பேன். இது நம்ம பஸ்ட் மெம்மரி" என்று புத்தகத்தில் பதியவைத்தவளிடம், 'லூசு' என்று சிரித்தான்.
சாரதி இது போல ஏதாவது கிண்டலாய் பேசி கேலி செய்தாள். அவன் புஜத்தில் செல்ல அடியும் வழங்கினாள்.அவன் கோச்சிங்கில் விளையாடிய பழைய வீடியோ, கோச்சிங் உடையணிந்து போட்டியில் விளையாடி ஜெயித்த தோரடை போன்ற புகைப்படமும் இருக்க காட்டினான். அதெல்லாம் அவனது முகமலர்ச்சியை சுட்டிக்காட்டியது.
தினமும் தான் பேருந்து பயணத்தில் மூழ்குபவன். பல காதலர்களை சந்தித்து இருக்கின்றான். ஆனால் இன்று அவனே காதலிக்கும் பெண்ணோடு பேருந்தில் பயணம் செய்வது, அதுவும் இப்படி மனதை இதமாய் தருவித்து வரும் நொடிகள் அவனுக்குள் அளவற்ற ஆனந்தத்தை தந்தது.
சாரதிக்கு அழகான முழுமையான நாளைப் போல அமைந்தது.
என்ன இதில் முத்து அண்ணன் சாரதி மீதான அன்பால் வீட்டிற்கு போன் போட்டு "சாரதிக்கு இப்ப உடம்பு எப்படியிருக்கும்மா லீவு எடுத்துட்டானே. ஹாஸ்பிடல் போனிங்களா" என்று கேட்க காஞ்சனா அதற்கு அதிர்ந்தவராக 'அது.. வீட்லயே மருந்து போட்டு தூங்கறான் அண்ணா" என்று மழுப்பியதை அறியாமல் போனான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
கைன்ட்லி கமெண்ட்ஸ் அண்ட் ரெஜிஸ்டர் 😊
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 24)
"அப்பா இருக்கிற பசங்க இளவரவனுங்க, அதே பொண்ணுங்கன்னா இளவரசிங்க.
அப்பா இல்லைன்னா, தைரியமா இருந்தால் ஒரு தனி மனித போர் வீரன், மனதைரியம் இல்லைன்னா அனாதை", வாவ்...! அருமையான அண்ட் நிதர்சனமான வரிகள்.
பரவாயில்லை, ஸூவீட் நத்திங்ஸா இருந்தாலும் அது தானே ஸூவீட் மெமரீஸ்.
அய்யய்யோ..! போட்டுக் கொடுத்தான்யா, போட்டுக் கொடுத்துட்டான்.
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-23
17 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்லோரம்-22
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-19
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-21
3 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-20
4 days ago
Currently viewing this topic 3 guests.
- 25 Forums
- 340 Topics
- 1,644 Posts
- 5 Online
- 425 Members
