Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-21

5 Posts
5 Users
0 Reactions
48 Views
(@praveena-thangaraj)
Posts: 275
Member Admin
Topic starter
 
[#366]

அத்தியாயம்-21

லாவண்யாவுக்கும் சாரதிக்குமான காதல், தினசரி பேருந்துப் பயணத்திலேயே மெல்ல மெல்ல மலர்ந்தது.

அது பெரிய பெரிய வார்த்தைகளோடு தொடங்கிய காதல் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரே பேருந்தில் சந்திப்பது. கூட்டத்துக்குள் ஒருவரை ஒருவர் தேடிக் கொள்வது. கிடைக்கும் சில நொடிகளில் மட்டும் பேசிக் கொள்வது.

  மற்றவர்கள் கவனிக்காத அளவுக்கு ஒரு பார்வையைப் பரிமாறிக் கொள்வது. பெரும்பாலும் பேருந்து பயணத்தில் பயணிகளில் உள்ள காதலர்கள் பார்வையால் வருடுவது தான். இங்கே கண்டெக்டர் சாரதிக்கு பயணிக்குமே சிறுசிறு தருணங்கள் தான் அவர்களுடைய காதலுக்கு வேர் விட்டுக் கொண்டிருந்தன.

காலை நேரப் பேருந்து வழக்கம்போல் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். யாரோ அலுவலகத்துக்குச் செல்லும் அவசரத்தில் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருப்பார்கள். யாரோ கைப்பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு,
"கண்டக்டர்... ஒரு டிக்கெட்."
என்று குரல் கொடுப்பார்கள்.

ஜன்னல் வழியாகச் சாலையோரக் கடைகள், தேநீர் கடைகள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்குப் புறப்படும் மனிதர்கள் என்று நகரம் வேகமாகப் பின்னோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த ஓட்டத்துக்குள்,
லாவண்யாவின் உலகம் மட்டும் சாரதியைச் சுற்றியே நின்றுவிடும். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், இருவரது பார்வையும் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டே இருக்கும். சில சமயம் சாரதி டிக்கெட் கொடுத்துக் கொண்டே அவளைப் பார்த்துவிட்டு அடுத்த பயணியிடம் செல்வான்.
சில நேரம் அவள் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, அவன் தேவையில்லாமல் அந்தப் பக்கமாகவே ஒரு முறை நடந்து செல்வான்.
அவளுக்கு அது தெரியும்.
அவனுக்கும் அது பிடிக்கும்.
ஆனால் இருவரும் தெரியாதது போல நடித்துக் கொள்வார்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சாரதி ஓரிரு வார்த்தைகள் பேசுவான்.

அவளும் அந்தச் சிறிய பேச்சையே நாள் முழுவதற்குமான சந்தோஷமாக எடுத்துக் கொள்வாள். நடுவில் பவன் அவனது நண்பர்கள் என்று பயமுறுத்தும் விதமாக நின்றார்கள்.
அதையெல்லாம் பெரிதாக மனதில் அலட்டிக் கொள்ளவில்லை. அவளது கவனம் முழுவதும் சாரதியிடம் தான். அவன் டிக்கெட் கொடுப்பதை கூட ரசிப்பாள்.

   பயணிகளிடம் பேசுவதை கவனிப்பாள். யாராவது அவனிடம் கோபமாகப் பேசினால், அவன் எப்படி அமைதியாகச் சமாளிக்கிறான் என்று பதபதப்புடன் பார்ப்பாள்.

சாரதிக்கோ அவளுடன் அதிகமாகப் பேச முடியவில்லை.
பேருந்து முழுவதும் பயணிகள்.
கையில் டிக்கெட் கட்டு.
இடுப்பில் பணப்பை.
காதில் நிற்காத சத்தங்கள்.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறும், இறங்கும் கூட்டம்.
அத்தனைக்கும் நடுவில் அவளுக்காகக் கிடைக்கும் அந்த ஓரிரு நிமிடங்கள்தான் அவனுடைய தனிப்பட்ட நேரம்.
ஒருநாள் அப்படித்தான் தேவி புத்தகத்தை வைத்து படிக்க, லாவண்யா அவனையே விழுங்கவும், சாரதி அவள் அருகே வந்தான், "காலேஜ்ல டெஸ்ட் இருக்கா?" என்று மெதுவாகக் கேட்டான்.
"ம்... இருக்கு." என்று சலித்தாள்.
"படிச்சியா?"
"கொஞ்சம்."
"கொஞ்சம்னா தேவியெல்லாம் படிக்கறா. நீயென்ன உட்கார்ந்துட்டு வர்ற?" என்று அவன் புருவத்தை உயர்த்திக் கேட்க, லாவண்யா உதட்டைச் சுழித்தாள்.
"உங்களைப் பார்த்துட்டு இருந்தா எப்படி படிக்க முடியும்?"
அவள் குரல் மற்றவர்களுக்குக் கேட்காத அளவுக்கு மெதுவாக முனங்கினாள். ஆனால் சாரதிக்கு மட்டும் தெளிவாகக் கேட்டது.
அவனது முகத்தில் தெரியாமல் ஒரு புன்னகை மலர்ந்தது.

"அதான் பிரச்சனை... நான் இருந்தா உனக்கென்ன. நீ படி"
என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
"கண்டக்டர்... பிராட்வேக்கு இரண்டு டிக்கெட்டை கொடுப்பா!" என்று பின்னால் ஒருவர் குரல் கொடுத்தார்.

சாரதி உடனே லாவண்யாவிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டான்.‌ "முதல்ல படிக்கிற வழியைப் பாரு." என்று அவளை அதட்டிவிட்டு அடுத்த பயணியிடம் சென்றான்.

அவன் அங்கிருந்து சென்றதும், லாவண்யா ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி சிரித்தாள்.
அவனது அதட்டலுக்குள்ளும் இருந்த அக்கறையை அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் சொன்னதற்காக பேருந்தில் படிக்க புத்தகத்தை திறந்தாள் இதுபோன்ற சிறுசிறு தருணங்களில்தான் அவர்களுடைய காதலும், அவர்களுக்கே தெரியாமல் இன்னும் ஆழமாகிக் கொண்டிருந்தது.

மாலை நேரங்களிலும் அவர்களது பார்வைக்கான சந்திப்புகள் தொடர்ந்தன. சில நாட்களில் லாவண்யா தேவியுடன் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பாள்.

மாடியில் வீசும் மெல்லிய காற்று மட்டும் அந்தச் சத்தங்களைத் தாண்டி முகத்தைத் தழுவும்.
அப்படியொரு நேரத்தில் சாரதி சைக்கிளில் அந்த வழியாகக் கடந்து செல்வான். தொலைவில் அவனைப் பார்த்தாலே லாவண்யாவின் பேச்சு தானாகவே மெதுவாகிவிடும். அவன் அவளைப் பார்த்தானா?
பார்த்துவிட்டு சென்றானா?
என்று அவளது பார்வை அவனைப் பின்தொடரும்.
சில சமயம் சாரதியும் சைக்கிளை ஓட்டிக் கொண்டே மேலே ஒருமுறை பார்ப்பான்.
அந்த ஒரு பார்வை போதும்.
லாவண்யாவுக்கு அப்போது முகத்தை வருடிச் சென்ற தென்றல் கூட சாரதியாகவே தோன்றும். அவன் கடந்து சென்ற பிறகும், அவன் சென்ற பாதையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அதை கவனிக்கும் தேவி,
"அம்மாடி... சைக்கிள்ல போன ஆளு வீட்டுக்கே போயிருப்பார். இவ்வளவு நேரம் தெருவை பார்த்துட்டு இருக்க?" என்று கிண்டல் செய்வாள்.

"போடி..." என்று லாவண்யா அவளைத் துரத்துவாள்.
இரவு நேரமும் அவர்களுடைய காதலுக்கு இன்னொரு முகத்தைத் தந்தது.

பகலில் பேருந்துக்குள் கிடைக்காத பேச்சுகள், இரவில் போனில் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பத் தொடங்கின.
ஆரம்பத்தில் இரண்டு மூன்று நிமிடங்கள். சட்டென துண்டித்து பேச்சை முடித்தனர்

பிறகு பத்து நிமிடங்கள் கூடியது. அதற்குப் பிறகு நேரம் போவது தெரியாமல் பேச்சு நீளத் தொடங்கியது. லாவண்யா எப்போதும் வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகுதான் போனை எடுத்துக் கொள்வாள்.

சித்தியும் சித்தப்பாவும் உறங்கியிருக்கிறார்களா என்று முதலில் பார்த்துக் கொள்வாள்.
இஷிதா தூங்கிக் கொண்டிருக்கிறாளா என்று உறுதி செய்து கொள்வாள்.

பிறகு போனின் பிரைட்னஸ்ஸை மிகவும் குறைத்துவிட்டு, போர்வைக்குள் முகத்தை மறைத்தபடி சாரதியிடம் பேசுவாள்.

அந்த நேரத்தில் அவளது குரலுக்கே ஒரு தனி மென்மை வந்து விடும்.
  அன்றைய நாளில் நடந்த அனைத்தையும் ஒப்பிப்பது போல பேசி தீர்ப்பார்கள். நடுவே இலக்கியா சில நேரம் எட்டி பார்த்து யாரிடம் பேசற லாவண்யா என்று கேட்டால் 'அக்கா அம்மா' என்று மழுப்பினாள்.
  அல்லது புதிதாக தேவியை தவிர்த்த தோழியின் பெயரை கூறி தப்பித்தாள்.

சாரதி கூட பேச்சு  சுவாரசியத்தில் மூழ்கிடுவான். ஒரு சில நேரம் சுதாரித்து, "படிக்க வந்த இடத்துல கெட்ட பேர் வாங்காம போய் தூங்கு." என்று அதட்டுவான்.

இப்படியே பேசிப் பேசித்தான் இருவரும் போனிலும் ஓரளவு நெருக்கமாக மாறினார்கள்.

ஒரு இரவு வழக்கம்போல் பேசிக் கொண்டிருந்தபோது, லாவண்யா திடீரென்று,
"சரி... நீங்க என்னைப் பற்றி எதுவுமே தெரியாம தானே காதலிச்சிருக்கீங்க?" என்று கேட்டாள்.
சாரதி சிரித்தான். "உன்னைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும்" என்பான்

"என்ன தெரியும் சொல்லுங்க பார்க்கலாம்" என்பாள்.

மெதுவாகத் லாவண்யா குடும்பத்தைப் பற்றி பேசத் தொடங்கினான்.
'உங்கப்பா பெயிணட், ஹார்ட்வேர் இதெல்லாம் சேல்ஸ் பண்ணற கடை நடத்துகிறார்.
அம்மா ஹவுஸ்ஒய்ப்.
பெரிய படிப்பு படிக்கலை என்றாலும், அந்தக் காலத்திலேயே பத்தாம் வகுப்பு முடிச்சவங்க.
அவனது குரலில் அவளது குடும்பத்தை அறிந்து வைத்த, ஒரு விதமான பெருமை இருந்தது. எல்லாம் அவளது பேச்சிலே கண்டறிந்தது தான்‌.

அதே நேரத்தில் ஒரு சிறிய பயமும் இருந்தது. லாவண்யாவோ "எங்கம்மா பட்டுனு பேசிடுவாங்க. எதையும் சுற்றி வளைக்க மாட்டாங்க. என்னை மாதிரியே."
என்று கூற,  சாரதியோ "உன்னை மாதிரியேவா... அப்ப மாமனார் தான் நல்லவரோ" என்பான்.

"சாரதி... கொல்ல போறேன் பாரு. நான் எங்கம்மா பொண்ணு தான். நானும் குட் கேர்ள் தான்" என்பாள்.
  அதன்பிறகு மாலதியைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.
"என் அக்கா மாலதி... பி.ஏ தமிழ் முடிச்சிருக்கா. இப்போ விக்னேஷ்னு ஒருத்தரோட நிச்சயம் முடிஞ்சிருக்கு. கல்யாண நாளும் நெருங்கிடுச்சு. நிறம் குறைச்சல்னு பீல் பண்ணுவா. ரொம்ப அமைதியான குணம். எதுக்கெடுத்தாலும் கொஞ்சம் பயப்படுவா. நான் அதுக்கெல்லாம் ஆப்போசிட்." என்பாள்.

'அதான் பார்த்தாலே தெரியுமே. விரட்டி விரட்டி வீடு தேடி வந்தவ தானே நீ" என்று சாரதி சிரிப்பான்.

சிறிது நேரம் கழித்து லாவண்யாவின் குரலில் பழைய நினைவின் சாயல் வந்தது. "எனக்கு பி.காம் படிக்கணும்... வேலைக்குப் போகணும்னு அடம் பிடிச்சேன். வேலூர்ல படிச்சு, எங்க சம்பாரிக்கறது? எங்கம்மா என்னை நக்கலா கேட்டாங்க.

வேலைக்குப் போகணும்னா சென்னையில படிச்சா அது இன்னும் பெட்டரா தெரிந்தது. முதல்ல அம்மா ஒத்துக்கல. அக்காவுக்கு பொண்ணு பார்க்க தரகர் இரண்டு பேரை கூட்டிட்டு வந்தார்.
வந்த இரண்டு தடிமாடுகளும் அக்காவோட இருக்கிற என்னைப் பார்த்துட்டு, 'இவளை கட்டிக்கறேன்'ன்னு கை காட்டுச்சுங்க." சாரதி உடனே அச்சோ' என்றான்.

லாவண்யா அதை நினைத்தும் சிரித்தாள். "ம்ம்ம் எங்கம்மா அசிங்கமா ஏசி விட்டுட்டாங்க. நான் கூட இருந்தா அக்காவுக்கு வரன் அமையாதோன்னு நினைச்சுட்டு.. படிக்கத்தானே கேட்ட? சித்தப்பா வீட்டுல போய் படி’ன்னு அனுப்பிட்டாங்க.

இல்லன்னா வேலூரைத் தாண்ட என்னை விட்டிருக்க மாட்டாங்க." அவளது குரலில் அந்தச் சம்பவத்தைப் பற்றிய கோபம் இல்லை.
மாறாக, அம்மாவின் அன்புக்குள் இருந்த கட்டுப்பாட்டை அவள் புரிந்துக் கொண்டவள் போலப் பேசினாள்.

"எத்தனை கண்டிப்பு நம்பிக்கை வச்சி அனுப்பியிருக்காங்க. அப்படியிருந்தும் காதல் கீதல்னு இருக்க. இது தப்பு தானே லயா"
என்று கேட்டான்.

லாவண்யா சற்று அமைதியாகி,
"தப்புதான்." என்றாள். சாரதி எதுவும் சொல்லாமல் இருந்தான்.

அவள் தொடர்ந்து பேசினாள்.
"படிக்க வந்த இடத்துல காதலிச்சது தப்புதான். ஆனா...
நீ நல்லவனா இருக்க, என் மனசுல இவனோட வாழ்ந்தா நான் சந்தோஷமா வாழ்வேன்னு தோணுறப்ப... உன்னை நேசிப்பது சரிதானே?" என்றாள்.

சாரதியின் மனம் அந்த வார்த்தையில் மெதுவாக நெகிழ்ந்தது. அவள் அவனைப் பற்றி எவ்வளவு நம்பிக்கையோடு பேசுகிறாள் என்பதே அவனை அமைதியாக்கியது.

"நல்லா பேசற." என்று மட்டும் சொன்னான்.
   "ம்கூம்... இந்த ஒரு வருஷம் இத்தனை பிள்ளைங்களோட காலேஜ்ல பேசி பழகி இதைக்கூட கத்துக்கலைன்னா எப்படி?" என்று சிரித்தாள்.

"அதுவுமில்லாம எங்கம்மா குணம் பட்டுனு பேசிடும்ல எனக்கும் அதே ரத்தம். பொசுக்குனு காதல் வந்ததும் உங்களிடம் சொல்லிட்டேன்" என்பாள்.

"சரி எக்ஸாமுக்கு படி." என்று சாரதி பேச்சை முடிக்க முயன்றான்.

  செகண்ட் செமஸ்டரும் வந்தது. அதற்காக நிறைய நேரம் படிப்பில் கவனம் செலுத்தினாள்‌. அன்று அண்ணாநகர் வந்ததும் தேவி லாவண்யா இறங்கவும் பவனும் அவனது நண்பர்களும் பின்னாலே இறங்கவும், இவன் ஸ்டாப் இன்னும் மூன்று இருக்க, இங்க ஏன் இறங்கறான் என்று சாரதி பதட்டமாய் லாவண்யாவை கவனித்தான்.

லாவண்யாவும் தேவியும் பரீட்சையை பற்றி பேசி செல்ல, சாரதியை பார்த்து புன்னகைத்து திரும்பியதால் பவன் பின்னால் வருவதை அவள் சுத்தமாய் கவனிக்கவில்லை. அவன் இந்த நிறுத்தமும் இல்லையே!

கூடவே பவனும் செல்வதை கவனித்த சாரதி செய்வதறியாது தடுமாறினான்.
  பேருந்தில் இருந்து இறங்கி லாவண்யாவிற்காக பின்னால் செல்லவும் முடியாது‌. அதே நேரம் மனமும் திக்திக் என்று பதட்டமாக, போனில் லயா என்ற எண்ணிற்கு அழைத்து காதில் வைத்தான்.

   கல்லூரியில் நுழையும் போதே போனை சைலண்டில் போட்டு விடும் வழக்கமிருக்க, லாவண்யா எடுக்கவில்லை.

இங்கே சாரதி லாவண்யாவிற்கு ஏதேனும் பிரச்சனையா என்ற ரீதியிலேயே பயணித்தான். அது கிட்டதட்ட முள்ளில் பயணம் செய்வதாக இருந்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : September 18, 2026 6:23 am
(@crvs2797)
Posts: 198
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 21)

ம்... ரெண்டு பேரும் ஓரப் பார்வையிலும், ஸூவீட் நத்திங்ஸ் செல் போன் பேச்சிலும் ரொம்ப நல்லாவே காதல் பயிரை வளர்த்துட்டிருக்காங்க, யார் கண்ணும் படாமல் இருந்தால் சரி தான்.

அது சரி, இந்த பவனும் அவனோட நண்பர்களும் எதுக்கு இப்ப லாவண்யா பின்னாடியே இறங்குறாங்க, ஏதாவது பிரச்சினை பண்ணுவாங்களோ ?

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 18, 2026 8:01 am
(@guna-sundari)
Posts: 148
Estimable Member
 

Wow cute love. Bavan what will do now? Very intresting sis.


 
Posted : September 18, 2026 9:28 am
(@subhakumar85)
Posts: 122
Estimable Member
 

Yenna plan panni vachirukaano


 
Posted : September 18, 2026 11:16 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 137
Estimable Member
 

Pavan ah la ethachum prachanai vandhudumo Sarathy bayapadura thu pola 


 
Posted : September 18, 2026 7:02 pm

Scroll to Top