பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-17
அத்தியாயம்-17
சாரதிக்கு டிப்போவில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே ஷெட்டில் வந்த பொழுது முத்து அண்ணன் டீயை சொல்லியிருக்க, அதை எடுத்து பருகினான்.
சாரதி மனதிற்குள் என்னென்னவோ எண்ணங்கள் ஊர்ந்தது. 'ரொம்ப நெருக்கமா பேசறாளே... உன்னை பிடிக்கலை... செட்டாகாதுனு சொன்னா ஏத்துப்பாளா?' என்று ஒருபுறம் எண்ணினாலும், மறுபுறம் ஒரு பெண் பேருந்தில், தன்னை தினமும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசிப்பது ஜிவ்வென்று தான் இருந்தது.
மீதியிருந்த அன்றைய நாளில் பேருந்து பயணத்தில் கூட டிக்கெட் கொடுத்திருந்தாலும், லாவண்யாவின் நினைப்பு கொஞ்சமும் மறையவில்லை.
டிக்கெட்டையும், அன்றைய பணத்தையும் டிப்போவில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைத்து, சைக்கிளை எடுத்து திரும்பினான்.
இன்று சைக்கிளில் தானே வந்திருந்தான்.
லாவண்யா வீட்டை கடந்த போது, பார்வையிடும் சமயம், அவளாகவே மாடியில் இருந்து கவனித்தாள்.
சாரதி சுதாரித்துவிட்டு, பார்வையை திசை மாற்றிக் கொண்டான்.
"வேண்டுமின்னே பார்க்காம போறார்'' என்று லாவண்யா முனங்க, தேவியோ ''பார்த்ததால தான் பார்க்காம போறார்" என்று சிரித்தாள்.
கொஞ்ச நேரம் போனது. இஷிதாவோடு பூங்காவிற்கு வந்தார்கள் தேவி லாவண்யா.
"உனக்கு தைரியம் தான்டி. சாரதியை பார்க்க வர்றவ, உங்க சித்தி பொண்ணு இஷிதாவை இழுத்துட்டு வர்ற. அவ போய் உங்க சித்தியிடம் ஏதாவது உளறிவைக்க போறா." என்றாள் தேவி.
"அட அவ பாட்டுக்கு விளையாட போறா. சாரதி எப்டியும் நாலடி தள்ளி உட்கார்ந்து பேச போறார்." என்று லாவண்யா தான் நினைத்தாள்.
ஆனால் நேரம் ஆக ஆக சாரதி வரவில்லை. செக்கியூரிட்டி கூட, நேரமாச்சு என்று விரட்டினார்.
இஷிதாவோ தண்ணீரை குடித்து, லாவண்யா கையை பிடித்து வந்தாள்.
"என்னடி... பஸ்.. உன் ஸ்டாப்புக்கே வரலை" என்றாள் தேவி கிசுகிசுப்பாய்.
"வரலைன்னா என்ன? நாம பஸ் இருக்கற டிப்போவுக்கே போவோம்" என்றாள் லாவண்யா.
இஷிதாவுக்கு எதுவும் புரியவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களானால் வேண்டுமாயின் புரியும்.
வீட்டுக்கு வந்ததும், "சித்தி... இந்த பிளவுஸ் எல்லாம் கட் பண்ணியாச்சு. மாலதி அக்காவும் என் சைஸ் என்பதால என்னையோ தைக்க சொல்லிட்டா. அன்னிக்கு கொடுத்த பிளவுஸ் தச்சிட்டாங்களானு கேட்டுட்டு நான் இந்த பிளவுஸ் எல்லாம் கூட கொடுத்துட்டு வந்துடறேன்." என்று கூற, "நல்ல ஐடியா உடனே தச்சிட்டு வந்துடுங்க. இப்ப தந்தா தான் நேரத்துக்கு வாங்க முடியும்" என்று கூற லாவண்யா சாரதி வீட்டுக்கு போக ஏற்பாடு செய்ததை எண்ணி கண்சிமிட்டினாள்.
தேவியோ வேடிக்கை பார்த்தவளாக, ''அதானே பார்த்தேன். வீடு தேடி வருவேன்னு சொன்னியே'' என்று கேட்க ஆமென்று நடந்தார்கள்.
தேவியோ ''முன்ன எல்லாம் எனக்கு போரடிக்கும். ஆனா நீ வந்ததிலருந்து நல்லா டைம் பாஸ் ஆகுது. அதோட நல்லா படிக்கறேன். பட் இந்த விஷயம் தெரிந்தது... கதை கந்தல் தான்" என்றாள்.
தேவி லாவண்யா இருவரும் சாரதி வீட்டுக்கு வந்து சேர, அங்கே தையல் மெஷின் திண்டும் இடமும் காலியாக இருந்தது. அவ்வறையில் காஞ்சனா இல்லை. "என்னடி அந்த ஆன்ட்டி இல்லை போல" என்று தேவி கூறினாள்.
"அச்சோ... தேவி.. உள்ள இருப்பாங்க. அப்படி இல்லைன்னாலும் நம்ம ஆளு இருக்கும். லேசா பயமுறுத்தலாம்" என்று சிரிக்க, சாரதி எதிரே வந்து நின்றான். அதுவும் ராம்ராஜ் பனியன் லுங்கிக்கு விளம்பரத்திற்கு வருபவனை போல வந்திருந்தான். வீட்டுக்கு வந்ததும் உடை மாற்றி விட்டு, கையில் பஜ்ஜி பிளேட் வேறு வைத்து சுவைப்பதை கவனித்தாள்.
லாவண்யாவை கண்டதும் கிச்சன் பக்கம் தலையை திருப்பினான்.
சாரதியின் தொண்டை வறட்சியாக மாறியது. ''இங்க எதுக்கு வந்த?" என்றான்.
"நீ ஏன் பார்க்குக்கு வரலை?" என்றாள் லாவண்யா.
"உதைபட போற. இங்கிருந்து கிளம்பு" என்றான் சாரதி.
லாவண்யாவோ மறுப்பாய் தலையசைத்து, "நீ பேச வரலை... நான் சொன்ன மாதிரி வந்துட்டேன்." என்றாள்.
காஞ்சனாவோ "சாரதி யார்கிட்ட டா பேசிட்டு இருக்க?" என்று குரல் தந்தார்.
சாரதி பதறியவாறு நிற்க, "நான் தான் ஆன்ட்டி. அன்னிக்கு டீ குடிச்சிட்டு பிளவுஸ் தந்துட்டு போனேனே. தச்சிட்டிங்களானு கேட்க வந்தேன். அப்படியே இன்னும் மூனு பிளவுஸ் தைக்க கொடுக்க வந்தேன் அவசரமா வேண்டும்." என்றதும், சாரதி நிம்மதி மூச்சை விடுத்தான்.
காஞ்சனா எட்டி பார்த்துவிட்டு, "ஒரு நிமிஷம் உட்காரும்மா. கடாய்ல எண்ணெய் இருக்கு. விட்டுட்டு வந்தா சரியா இருக்காது.
இரண்டு நிமிஷம்" என்றார்.
"பொறுமையா வாங்க ஆன்ட்டி ஒன்னும் அவசரமில்லை" என்று சாரதியை காண, அவனோ நைஸாக அறைக்கு செல்ல முயல, விக்கி தொலைத்தது.
"சாரதி கண்ணா... தண்ணியை குடிடா" என்று கூற கிச்சன் பக்கம் ஓடினான்.
"அம்மா... முதல்ல பேசி அனுப்பு. நான் அடுப்பை பார்த்துக்கறேன்" என்று அனுப்பிவிட, "சரியா... கையை சுடாம பார்த்துக்கோ" என்று கூறிவிட்டு, வந்தார்.
"பார்த்தியா.. பார்ட்டி எஸ்கேப் ஆகுது" என்று கூறிக்கொள்ள, காஞ்சனா வந்தார்.
"காலையில தான் தச்சி முடிச்சேன். நானே போன் பண்ணணும்னு நினைச்சேன். நீயாவே வந்துட்ட. நூறு ஆயுசும்மா" என்றார்.
"ஆன்ட்டி... போன் நம்பர் இருக்கு. அதுல நீங்க கூப்பிட்டு இருந்தாலும் வந்திருப்பேன். காலையில கூட சொல்லியிருக்கலாம். இப்ப தர்ற டிரஸ் உடனே வேண்டும்" என்றாள்.
சாரதி கிச்சனில் பஜ்ஜியை எடுத்தவனாக, 'இவ நம்பர் அம்மா நோட்ல இருக்குனு எனக்கு சிக்னல் தர்றா.' என்று பல்லைக் கடித்தான்.
"இந்த பிளவுஸ் வீட்ல போய் போட்டு பாரும்மா. சரியா இருக்கும். சப்போஸ் ஏதாவது கை லூசா இருந்தாலோ அல்லது டைட்டா இருந்தாலோ ஆல்டர் பண்ணிடலாம். அப்பறம் இங்க ஓவர் லாக் போட்டாச்சு. இந்த பிளவுஸ் எல்லாம் எப்ப வேண்டும்" என்று கூறி தரவும் அதை எடுத்து பார்த்தாள்.
"நல்லா தைப்பிங்கனு எங்க சித்தி தான் சொன்னாங்க ஆன்ட்டி. இது எங்கக்காவுக்கு நிச்சயதார்த்த சேலை ஆன்ட்டி. அவளும் நானும் அளவு ஒன்னு தான். இதை தச்சி தாங்க. அப்பறம் சுடிதார் தைப்பிங்கனு தேவி சொன்னா. ஒரு செட் சுடிதாரும் தைக்க கொண்டு வந்திருக்கேன். அளவு எடுத்துக்கறிங்களா?" என்று கேட்டுவிட, காஞ்சனா உடனே தையல் டேப்பை எடுத்தார்.
"யார்மா சித்தி?" என்று கேட்க, அடையாளம் கூறினாள்.
"அட இலக்கியாவோட வீட்ல தங்கி படிக்கற பாப்பாவா? உடனே தந்துடறேன்" என்றவாறு அளவெல்லாம் எடுத்து குறித்துக் கொண்டதும், "பஜ்ஜி சாப்பிடறிங்களாம்மா." என்று கேட்க லாவண்யா மறுக்க, "கொடுங்க ஆன்ட்டி" என்றாள் தேவி.
லாவண்யா முறைக்க, காஞ்சனா சிரித்தபடி, ஒரு தட்டில் இரண்டு பஜ்ஜியை நீட்டினார்.
'அன்னிக்கு டீ... இன்னிக்கு பஜ்ஜி.' என்று தேவி கூற, "அட வர்றப்ப எல்லாம் ஏதாவது சாப்பிட கொடுத்தா போச்சு. இந்த நேரம் என் பையன் சாரதி வீட்ல இருப்பான். அவனுக்கு சூடா ஏதாவது செய்வேன்." என்று கூறியபடி அளவெல்லாம் எழுதி மொத்த தொகையையும் கூற, தைச்ச பிளவுஸிற்கு மட்டும் பணத்தை கொடுத்தாள் லாவண்யா.
"இந்த டிரஸுக்கு அடுத்து வர்றப்ப தர்றேன் ஆன்ட்டி. போன் பண்ணுங்க.." என்று கூற, "சரிம்மா... தச்சதும் போன் பண்ணறேன்" என்று கூறினாள்.
தேவி பஜ்ஜி சாப்பிட்டதும், சட்டையில் துடைக்க, லாவண்யாவோ "ஆன்ட்டி.. கையெல்லாம் எண்ணெய்.. கிச்சன்ல வாஷ் பண்ணிக்கவா?" என்று கேட்க தேவியோ 'அடிப்பாவி. அந்த அண்ணாவை இவ துரத்தி துரத்தி போறாளே.' என்று லுக்கை விட்டாள்.
கிச்சனில் வரவும், சாரதி பஜ்ஜியை எடுத்துவிட்டு அடுப்பை அணைத்து அங்கே நின்றிருந்தான்.
கிச்சன் சிங்கில் கையை கழுவியவளாக, கிச்சனை நோட்டமிட்டபடி, 'சாரதியை கண்டு, ஒழுங்குக்காட்ட' அவனோ அன்னை வெளியே இருக்க பதறும் நிலை.
பனியனும் லுங்கியுமாக அவன் இருக்க, 'இவ வந்ததும் மேல சட்டையாவது போட்டிருக்கணும்' என்று தன்னையே கடிந்தான்.
"பொண்ணு மாதிரி கிச்சன்ல வந்து ஒளிஞ்சிட்டு இருக்கிங்க. போன் பண்ணுங்க" என்று அதட்டி கிட்டதட்ட மிரட்டி சென்றாள் நாயகி.
வெளியே வந்து "தேங்க்ஸ் ஆன்ட்டி. போன் பண்ணுங்க." என்று புறப்பட, காஞ்சனாவோ, "ஏய்யா சாரதி இன்னுமா அடுப்படியிலேயே இருக்க?" என்று கேட்க, "இல்லைம்மா முடிஞ்சிடுச்சு." என்று கூறினான்.
"சரியா.." என்று காஞ்சனா லாவண்யா தந்த துணியை அங்கே வைத்துவிட்டு, வேலையில் கவனிக்க ஆரம்பித்தார்.
தேவி லாவண்யா இருவரும் சிரித்தபடி வெளியே வந்தார்கள்.
"இருந்தாலும் உனக்கு இத்தனை தைரியம் ஆகாது லாவண்யா. பாவம் அந்த அண்ணா. அவருக்கு யோசிக்க டைம் கொடுடி. உன்னை பார்த்ததும் பயந்துட்டார்." என்று சிரித்தாள்.
''அதெல்லாம் பயமில்லை. நடிப்பு. என்கிட்ட இருந்து நழுவ கிச்சனுக்கு ஓடறார். அவர் என்னை விரும்பறார் தேவி. ஆனா என்னை ஏற்க தயங்குறார்." என்று சரியாக கூறினாள்.
"என்னவோ... இனி எனக்கு ஜம்முனு டைம் பாஸ் ஆகும்" என்று சிரித்தாள்.
இவ்வாறு இவர்கள் பேசி சென்றனர்.
சாரதியோ அன்னையின் தையல் நோட்டில் உள்ள எண்ணை எடுத்து தன் போனில் பதிய வைக்க, முயன்றான்.
ஆனால் அன்னை இருக்க சட்டென்று அப்படி பகிரங்கமாக எடுக்க இயலாது, இரவு தான் அன்னை சமைக்கும் பொழுது திருட்டுத்தனமாக தையல் அளவு எழுதியிருந்த நோட்டில், போன் நம்பரை தன் போனில் பதிய வைத்துக் கொண்டான்.
இது சரியா தவறா என்றதை தாண்டி, லாவண்யாவை இஷ்டத்திற்கு திட்ட நினைத்து போனை போட்டான்.
லாவண்யா அவளது சித்தி இலக்கியாவிற்கு உதவ கிச்சனில் இருக்க, இலக்கியாவோ "லாவண்யா போன் அடிக்கு பாரு." என்றதும் போனை எடுக்க வந்தாள்.
அதை எடுக்கும் போதே நம்பர் என்றதால் மெதுவாக பேசினாள்.
"ஹலோ." என்று தன்மையாக பேச, "என்ன பேசணும்.. ஆங்.. சொல்லு என்ன பேசணும். வீட்டுக்கு வந்து ரகளை பண்ணற. அவ்வளவு தைரியமா? எங்கம்மாவிடம் மாட்டியிருந்தா தெரிந்திருக்கும்" என்றான்.
போனில் எடுத்ததும் இந்த கத்து கத்துவதில், ''ஓ... நீங்களா.. ஸ்டாப் ஸ்டாப்... அதெல்லாம் நான் பேச வேண்டியதை பேசிட்டேன். நீங்க தான் பதில் தரணும்." என்றாள் லாவண்யா.
"என்ன பதில் தரணும்? கண்டெக்டருக்கும் காலேஜ் பெண்ணுக்கும் செட்டாகாது. இத்தோட இந்த நினைப்பை குழித்தோண்டி புதைச்சி விடு." என்றான்.
"முடியாது.. முடியவே முடியாது. அப்பறம்.. என்னை மறக்க சொல்லாதிங்க. நீங்க என்னை நினைக்காம இருங்க பார்ப்போம்" என்றாள். லாவண்யா அவளது அறையில் ஏதோ புத்தகத்தை தேடுவது போல வந்து பேசினாள். தோழி யாரோ எந்த பாட புத்தகத்தில் சந்தேகம் கேட்பதாக இலக்கியா சுரேஷ் நினைத்தனர்.
சாரதி என்னவென்று பொய்யை கூறுவான். அவனுக்கு தான் லாவண்யாவை நினைக்காமல் இன்றைய பொழுதே ஓடவில்லையே. இதில் மறுக்க முடியுமா என்ன?
''லாவண்யா... நமக்குள் நிஜமாவே செட்டாகாது." என்றான்.
"அதை நான் சொல்லணும்
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு உங்க மூஞ்சிலேயே ஒட்டி வச்சியிருக்கு" என்று கூறினாள்.
அவள் சொன்னதும் மறுபுறம் சில நொடிகள் அமைதி மட்டுமே.
சாரதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
அவள் நேரில் நின்று சொல்லும்போது சமாளித்து விடலாம் என்று நினைத்தான். ஆனால் போனில் அவள் இவ்வளவு இயல்பாக, தயக்கமே இல்லாமல் தன் மனதை சொல்லிவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
"நான் பார்த்தவரை நீங்க நல்லவர். எனக்கு அது போதும். அப்பறம்... சித்தி சமைக்க ஹெல்ப் பண்ண போறேன். நானா வந்து பேசறேன். இல்லை... அவங்க சந்தேக வட்டத்துக்குள்ள இப்பவே விழுந்துடுவோம்" என்று துண்டித்தாள்.
சாரதியோ போனை அணைத்து விட்டவளை நினைத்து, 'லயா' என்று சேமித்து வைத்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 17)அடிப்பாவி மக்கா ! இவளுக்கு இருக்கிற தைரியத்தைப் பாருங்களேன்...? வீட்டுக்கே போய் மிரட்டுறாளே ? பாவம் அந்த அப்பாவி புள்ளை, இவ கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குது.
அவ சொல்றதும் நிசம் தானே, அவளை நினைக்காமல் இருக்கச் சொல்லுங்க, அது முடியாது தானே
அப்புறம் எதுக்கு வாய் சவடால் ?இதோ பாருடா, வேணாம், வேணாம்ன்னு சொல்லிட்டே செல்லப் பேரை வைச்சு நம்பரை ரிஜீஸ்டர் பண்றதை...
'லயா'வாமே...அது சரி.😐😐😐
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-16
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-15
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
3 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
4 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
5 days ago
- 25 Forums
- 333 Topics
- 1,606 Posts
- 2 Online
- 423 Members
