Forum

நின் பார்வை தவமல்லவ...
 
Notifications
Clear all

நின் பார்வை தவமல்லவா!-7

2 Posts
2 Users
0 Reactions
100 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#131]

அத்தியாயம்-7

  "என்னங்க அந்தம்மா இப்படி பேசறாங்க" என்று ஜானகி பயந்து போய் கேட்டார். ஏனெனில் மகள் செழியன் மீது உயிரையே வைத்திருப்பது இந்த காலகட்டத்தில் வரதராஜனை விட நேரில் பார்த்தவர் ஆயிற்றே.

வரதராஜனோ "மாப்பிள்ளையிடம் முதல்லயே சொன்னேன். நான் பார்த்துக்கறேன் மாமானு கோவில்ல வச்சி சத்தியம் பண்ணிருக்கார். அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஜானகி. நீ போய் தூங்கு." என்றார்.

  "அன்னைக்கே என்னிடம் நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல" என்று கேட்க, "சொல்லிருந்தா..‌ நிம்மதியா இருந்திருப்பியா? தினம் தினம் முள்ளுல நடக்கற மாதிரி இருக்கும் ஜானகி. அந்தம்மாவுக்கு தெரிந்தது எனக்கு பெரிய விஷயமா தோணலை. காலையில் நம்ம மக கழுத்துல மாப்பிள்ளை தாலி கட்டினா போதும். மத்தபடி சண்டை சச்சரவு வந்தா கூட பரவாயில்லை" என்று எதிர்கொள்ள தயாரானார்.

   ஜானகி உறங்கும் மகளை பார்வையிட்டு செழியன் மீது குருட்டு நம்பிக்கை வைத்தபடி அங்கிருந்த சேரில் சாய்ந்தார்.
   சுகந்தி காலையில் முகம் சிடுசிடுக்க, அங்கும் இங்கும் அலைந்தார்.

  காலையில் கணவர் கிருபானந்தனிடம் வர்ஷினி டாக்டர் இல்லை என்றதை கதை கதையாக தெரிவித்தார்.

  அதற்குள் செழியன் குளித்து முடித்து  மாப்பிள்ளை கோலத்தில் வந்து நின்றான்.

  ஜானகியும் மணமகன் தயாராவதை கண்டு வர்ஷினியிடம் எதையும் தெரிவிக்காமல் அவளையும் தயார்படுத்தினார்.

  இதில் கடுப்பான சுகந்தி, மகனிடம் "இந்த கல்யாணம் நடக்காது. நம்மாளுங்க எல்லாரும் எந்திரிச்சு நம்ம ஊரை பார்த்து கிளம்புங்க" என்று மேடையில் கத்த, "அம்மா ஏன்மா என்னாச்சு" என்று செழியன் வந்தான்.

"என்னடா தெரியாத மாதிரி நடிக்கற, அந்த பொண்ணு டாக்டர் இல்லை. பிறவு எதுக்கு கல்யாணம்." என்று மகனை பிடித்து இழுத்து செல்ல, ''அம்மா... எனக்கு அவ டாக்டர் இல்லைன்னு தெரியும்" என்று பேசினான்.

  "உனக்கு தெரியும்னு எனக்கும் தெரியும். என்ன நெஞ்சழுத்தம் இருந்தா, இந்த சிறுக்கிக்காக பெத்த ஆத்தா அப்பனிடம் கூட கலந்து பேசாம கல்யாணத்துக்கு பத்திரிக்கை தினுசு தினுசா அடிச்சிருப்ப?" என்று கோபமானார்.

  "அம்மா...‌ சொன்னா புரிஞ்சுக்கோங்க. கல்யாணம் முடியட்டும். ஒரு டிகிரி தானே. நம்ம வீட்ல நான் டாக்டரா இருப்பது போதும்‌" என்று கூறினான்.‌

  "சரிடா... ஒரு டாக்டர் போதும். அப்ப நான் கேட்ட நகையை இப்பவே மேடையில் வைக்க சொல்லு. கல்யாணத்துக்கு தாலியை நானே எடுத்து கொடுக்கறேன்." என்றார் தடாலடியாக.

என்ன நகை எத்தனை சவரன் என்று அறியாமல் "அதெல்லாம் தருவாங்க" என்று மேடைக்கு வர, "இல்லைடா.. இப்ப நகையை வைக்க சொல்லு. இல்லைன்னா நீ என் கூட வா. இப்ப நீ வரலை. இந்த விஷத்தை குடிச்சிடுவேன்" என்று கையில் ஒரு விஷபாட்டிலை வைத்து மிரட்டினார்.

  "என்னம்மா விளையாடறியா?" என்று செழியன் கத்த, அங்கே கல்யாண மேடையும் கல்யாணத்திற்கு ஒவ்வொருத்தராய் வருவதிலும் மண்டபத்தில் ஆட்கள் நிரம்ப ஆரம்பித்தனர்.

  "இப்ப நான் செத்து போறேன். நீ கல்யாணம் பண்ணி வாழு" என்று சுகந்தி அழிச்சாட்டியம் செய்ய, "மாமா அம்மாவிடம் பேசிட்டு வர்றேன். வர்ஷினி என்ன ஏதுனு புரியாம அழறா பாருங்க. அவளை பாருங்க" என்று மேடையிலிருந்து அம்மாவை தேடி நடந்தான்.

  வர்ஷினிக்கு ஏதோ அபத்தம் புரிய, ஜானகி வேறு நேற்று நடந்தவையை மளமளவென உரைத்திட மணமகள் அறைக்கு அழுதபடி சென்றாள்.

கூடவே ஜானகியும் சென்றிட, செழியன் கையில் விலங்கு மாட்டினார்கள் மப்டியில் வந்த போலீஸ். நேற்று சேனல்காரன் தனக்கு தெரிந்த போலீஸிடம் வரதட்சனை கேட்டு கல்யாணம் நடக்கின்றதென்று அறிவிக்க, போலீஸும் அங்கே வந்திருந்தனர். கல்யாணம் கமுக்கமாய் நடந்திருந்தால் வந்த வழியே சென்றுவிடுவதாகவும், அவ்வாறு நடக்காவிட்டால் செழியனை விலங்கிட்டு அழைத்து செல்வதாகவும் கூறினார்கள். சேனல்காரனுக்கு அங்கு நடந்த சம்பாஷனைகள் கேட்டு, வீடியோ கவரேஜ் எடுத்திருந்தான். அது சாட்சிக்கானதாக மாறியது.

  கல்யாண மண்டபத்தில் திடீரென போலீஸ் வந்து விலங்கு போடுவதை செழியன் அதிர்ச்சி கலந்து பார்வையிட்டான். வரதராஜன் செய்ததாக முடிவு செய்து "மாமா.. என்‌மேல நம்பிக்கை இல்லையா?" என்று கேட்க "எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறினார்.

போலீஸுக்கு தேவை வரதட்சனை கேட்பதையும் பேசுவதையும் ஆதாரமாக இருக்க, மேற்படி இழுத்து செல்ல எண்ணினார்கள்.

  போலீஸோ சுகந்திக்கும் விலங்கு போட முயல, "சார்... நான் சொல்லறதை கேளுங்க. நான் வரதட்சனை கேட்கவேயில்லை." என்று கூற அதை செவி சாய்க்க போலீஸ் உடன்படவில்லை‌

நிலைமை கை மீறி போக, "சார் அம்மாவை விட்டுடுங்க. நான் மட்டும் வர்றேன்" என்று கூறினான் செழியன்.

  அவனுக்கு தன்னை படிக்க வைத்த அம்மாவை போலீஸ் விலங்கு போடுவதில் உடன்பாடு இல்லாததால் அவ்வாறு கூறினான்.

போலீஸும் செழியன் கூறவும் விட்டுவிட்டனார். பெண் கைதி என்றால் பெண் போலீஸ் வேண்டும் இந்த நேரத்தில் அலைய முடியாது என்றதால் அவரை விட்டுவிட்டார்.

  வரதராஜனுக்கோ செழியனுக்கு வரதட்சனை கேட்டதாக பழி வேறு வேண்டாம் என்று "நான் மாப்பிள்ளை மீது கேஸ் பைல் ஆகாம பார்த்துக்கறேன். போலீஸ் ஸ்டேஷன் போனா தான் விடுவு கிடைக்கும். பொண்ணை ஜாக்கிரதையா பார்த்துக்கோ" என்று புறப்பட்டார். கிருபானந்தன் மகன் செல்லும் போதே பின்னாடியே சென்றிருந்தார்.

  வரதராஜன் தலை மறைய சுகந்தியோ வாயுக்கு வந்த வார்த்தைகளை திரட்டி, சாபத்தை வழங்கி வர்ஷினியை அர்ச்சித்தார். தாயுள்ளம் மகளை சபிக்கும் சுகந்தியை கண்டு கூப்பாடு போட, இரண்டு பெண்மணியும் மண்டபம் அதிர கத்தினார்கள்.

  அம்மா அம்மா சும்மாயிரும்மா." என்று வர்ஷினி தன் தாயை பிடிக்க, "இந்தாடி.. இதுக்கு மேலயும் என் பையனை வளைச்சி போடணும்னு பார்த்த, அவ்ளோ தான்" என்று கூற, வர்ஷினியோ சுகந்தியின் புது அவதாரத்தில் ஆடிப்போயிருந்தாள்.

  ஜானகியோ "எம் பொண்ணை இன்னமும் உன் பையனுக்கு கட்டி வைப்பேன்னு பார்த்தியா? என் கூடவே காலம் முழுக்க வச்சாலும் வச்சிப்பேன். உன் பையனுக்கு கட்டி தரமாட்டேன்" என்று ஜானகி மொழிந்தார்.

   அதன்பின் கல்யாண மண்டபத்தில் , சுகந்தியை துரத்தாத குறையாக நடையை கட்ட, ஜானகி மகளிடம் சுகந்தி நேற்று நடந்தவையை விரிவாக வேறு பேசி புலம்பினார்.
 
   வர்ஷினிக்கு அப்பொழுது தான் செழியன் தன்னை டாக்டர் என்று எண்ணி தன்னுடன் பேசி பழகினாரா?' என்று கவலைக் கொண்டாள்.
  வர்ஷினி வீட்டில் தான் அதிர்ந்து பேசுபவள். மற்ற இடத்தில் வாயில்லா பூச்சி. செழியன் தன்னை அவனாக விரும்பி மணப்பதாக கோட்டை கட்டியிருக்க, டாக்டர் என்ற கோணத்தில் தான் கண்ணை மூடி மணக்க சொன்னாரா? இப்பொழுது பழகிய பின் வேறு வழியின்றி மணக்க நினைத்தாரோ?! என்று துவண்டாள்.

  அதோடு சுகந்தியின் அவதாரம் கண்டதில் பேரதிர்ச்சியில் இருந்தாள்.

  இப்படியொரு மாமியார் தனக்கு வேண்டவே வேண்டாம் என்றது மனம்.  அந்தளவு பயத்தில் ஆட்கொண்டு இருந்தாள்.

   போலீஸ் ஸ்டேஷனில் வரதாராஜன் பின்னாலே சென்று, செழியனை சிறைக்குள் தள்ளும் முன், அவர் மேல தப்பில்லைங்க. நான் கம்பிளைன் தராம எப்படி அவரை அழைச்சிட்டு வருவிங்க?" என்று கேட்டார்.

  "சார்... ஆதாரம் எல்லாம் இருக்கு." என்று கூற நேரில் பார்த்ததை கூறுவதாக எண்ணி, "சார் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்." என்று ஆரம்பித்து வரிசையாக நடந்ததை விவரித்தார்.

  'என்னய்யா என்னென்னம்மோ சொல்லற. இப்ப கேஸ் போடவா வேண்டாமா" என்று அலுத்துக்கொள்ள, வேண்டாம் என்று பதில் தந்து எழுதி தந்தார். அப்படியும் செழியனை மொத்தமாய் விடுவிக்க மதியம் ஆனது. கிருபானந்தன் நன்றி தெரிவிக்க வரதராஜனோ செழியனிடம் "என்னை மன்னிச்சிடுங்க தம்பி" என்று கும்பிடு போட்டு வேகமாக சென்றார்.

  "மாமா... மாமா..." என்று பின்னால் செல்ல பார்த்தவனை, "தம்பி இதுல கையெழுத்து போட்டுட்டு உங்க திங்க்ஸை வாங்கிட்டு போங்க" என்று கூறினார் போலீஸ்.

    கேஸ் ஏதும் பதிவாகாமல் செல்ல, செழியன் மெதுவாய் கல்யாண மண்டபம் வர மண்டபமே காலியாக காட்சி அளித்தது.
 
  இங்கே மருத்துவராய் வேலை செய்வதால் சென்னையில் தங்கிய செழியன் வீட்டுக்கே கிருபானந்தன், சுகந்தி மூவரும் வந்தார்கள். செழியன் கதவை திறந்து வீட்டுக்கு வரும் வரை இடைவிடாமல் வர்ஷினிக்கு, வரதராஜனுக்கு, ஜானகிக்கு என்று போன் போட்டு போட்டு பார்த்தான்.

  மூவருமே அனைத்து வைத்து திருநெல்வேலிக்கு செல்வதில் முனைப்பாய் இருந்தனர்.

செழியனின் சென்னை வீட்டில், நிசப்தமான கூடாரத்தில் அந்த தொலைக்காட்சி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.

அதில் பிரபல செய்தி அலைவரிசை சேனலில் 'சென்னை திருமங்கலத்தில், 'வெங்கி கல்யாண மண்டபத்தில்' கல்யாண மேடை வரை வந்து நின்ற திருமணம்.
   டாக்டர் மாப்பிள்ளை அதிகபட்ச வரதட்சனை கேட்டதால் திருமணம் நின்றதாக தெரியப்படுகின்றது.
     கைது செய்யப்பட்ட டாக்டர் செழியன், திருமங்கலத்தில் மலர் மருத்துவமனையில் டாக்டராக பணிப்புரிபவர். படித்த பண்பான தொழிலில் வேலை செய்பவர்களே வரதட்சனையை பிடித்து தொங்குவது சமூகத்தின் அவலம். இதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தியான கருத்துகளை வெளிப்படுத்தி செழியனை தண்டிக்க கூறிவருகின்றனர்' என்று அவனை காட்டி ஒளிப்பரப்ப, செழியன் வெகுண்டு எழுந்து, டிவி ரிமோட்டை வீசினான். அந்த ரிமோட் டிவியில் பட்டு தெறித்து விழுந்தது.

  அதில் டிவியில் லேசான கோடுகள் வர ஆரம்பித்தது. இனி இந்த டிவியின் நிலையோ பழைய இரும்பு கடைக்கு தான் செல்லும் என்பது பட்டவர்த்தமாய் காட்சியளித்தது.

   அங்கே அனலாய் ரிமோட்டை தூக்கி வீசியெரிந்த செழியனோ, "போதுமா... டிவி சேனல்ல பக்கம் பக்கமா நியூஸ். என்னை பத்தி தான்... பெருமைப்படுங்க.. டாக்டர் படிக்க வச்சி, பட்டம் வாங்கி தந்து, ஊரே கொண்டாடணும்னு பெருமை பேசுவிங்கள்ல..  இப்ப வரதட்சனை கேட்டு டாக்டர் பட்டத்தை விட பெரிய பட்டம் வாங்கி தந்துயிருக்கிங்க. இதுக்கு உங்க கால்ல விழுந்து வணங்கணும்." என்று கிண்டலும் கேலியுமாக, கத்தினான்.‌

  சற்று முன் ஒளிப்பரப்பான செய்தி அவனை பற்றி தான். ஆனால் துளியும் அந்த செய்திக்கும் அவனுக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்றால், 'இல்லை' என்று கண்ணை மூடி உரைத்திடலாம்.

  உண்மையில் நகை நட்டு கேட்டு செழியன் அந்த திருமணத்திற்கு தலை அசைக்கவேயில்லை. அவனுக்கு வர்ஷினியை போட்டோவில் பார்த்ததும் பிடித்தது. அவளோடு வாழும் ஆசையில், கூடீதலாக அவளும் டாக்டர் என்றதில் மகிழ்ந்தான். அவள் டாக்டர் அல்ல என்று தெரிந்தப்பின்னும் அவன் காதல் சிறிதும் குறையவில்லை.

  ஆனால் தனக்கு பின் தன் அன்னையாலே, இவ்வாறான வியாபார உக்தி நடக்குமென அறியாது போனான்.

   அங்கே தாய் தந்தையரை பார்க்க  பிடிக்காமல், "போங்க... இங்கிருந்து போங்க." என்று கர்ஜித்தான்.

-தொடரும்.

‌‌பிரவீணா தங்கராஜ் 


 
Posted : July 3, 2026 4:22 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

செழியன் பாவம், கடைசி பழி ஓரீடம், பாவம் ஓரீடம் என்கிற மாதிரியாகிடுச்சு.

😔😔😔

CRVS (or) CRVS 2797


 
Posted : July 4, 2026 11:55 am

Scroll to Top