நின் பார்வை தவமல்லவா!-9
அத்தியாயம்-9
இந்நேரம் வர்ஷினி இரயிலில் ஏறியிருப்பாள். சென்னையில் ஒரகடம் என்னும் இடத்தில் இருப்பதாக அறிந்துக்கொண்டான். அங்கே சென்றால் அவளை மீண்டும் சந்திக்க வேண்டும். ஆனால் எந்த ஒரகடம். சென்னையில் இரண்டு இடத்தில் உள்ளது. எதுவாயினும் அலைப்பேசியில் கேட்டுக் கொள்வோம் என்ற மகிழ்ச்சி. அதோடு மருத்துவமனை பெயர் போட்டு தேடலாம்.
நீண்ட நாளுக்கு பிறகு மனதில் சாந்தமடைவது போல உணர, தன் அன்னை சுகந்தியை மன்னித்து பேச சொல்கின்றாளே வர்ஷினி' என்று வியந்தான். ஏனெனில் அவளது நலனை விட இவன் நலனுக்காக யோசிக்கின்றாளே.
அதே நேரம் கிருபானந்தன் போனில் "சென்னை போயிட்டியா ஐயா?" என்று கேட்டார். இங்கு வந்ததை அவரிடம் மட்டும் தெரிவித்திருந்தான். அதுகூட மாநாடு முடிந்து கிளம்பிடுவதாக உரைத்திருந்தான்.
"அதுவந்து... பிளைட் கேன்சல் பண்ணிட்டேன்." என்றான்.
ஏன் என்ற கேள்வியை தாண்டி, "இங்க உங்கம்மாவிடம் நீ நம்மூருக்கு வந்துட்டு போனதை சொன்னேன்.
என் ராசா வந்ததை ஏன் சொல்லலை. அவன் வரலைன்னா என்ன? நான் போய் பார்த்திருப்பேனேனு ஒரே புலம்பல். மதியத்துலயிருந்து சோறு தண்ணி தொடாம இருந்தா, கொஞ்சம் முன்ன மயங்கி விழுந்துட்டா. ஹாஸ்பத்திரியில சேர்த்திருக்கு." என்று கூறினார்.
என்ன தான் அன்னையால் தன் திருமணம் தடைப்பட்டாலும், அன்னையின் உடல்நிலை குறைவு என்றதும் துடிக்காமல் இருக்க முடியுமா "எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கிங்க?" என்று விவரம் கேட்டான்.
"டவுன்ல தான். நீ சென்னை போக பிளைட் கேன்சல் பண்ணியதா சொல்லற. அப்ப மதியம் சென்னை போனியாப்பா?" என்று மகன் இங்கிருந்து அங்கே பத்திரமாக சென்றானா என்று கிருபானந்தன் அக்கறையில் கேட்டார்.
"இல்லை... நான் இன்னும் நம்மூர்ல தான் இருக்கேன்." என்று அவசரப்பட்டு கூறினான்.
"ஐயா செழியா... ஆஸ்பத்திரிக்கு ஒரெட்டு வர்றியா கண்ணா.'' என்று கேட்டுவிட்டு செழியன் திட்டுவானோ என்று பயந்து, "தப்பு தான் இப்படி கேட்டது. மனசு கேட்கலை தம்பி. தனியாளா இங்க உன் அம்மையோட இருக்கறது ஒரு மாதிரி இருக்கு. அதனால் அப்படி கேட்டுட்டேன். அதுக்காக என்னிடம் கோச்சிக்கிட்டு பேசாம விட்டுடாதே" என்று கெஞ்சினார்.
செழியன் மெதுவாக போனை துண்டித்து இரவெல்லாம் சிந்தித்தான். செய்த தவறுக்கு இன்னும் தண்டனை கொடுப்பதா? அல்லது தவறு செய்தவர் அன்னை தானே என்று மன்னித்திடலாமா? வர்ஷினியை கூட மன்னித்து பேசுங்கள் என்றாளே.' அதனால் அதிகாலை ஆஸ்பத்திரிக்கு வந்தான்.
பேஷன்ட் பெயரை கூறி, சுகந்தி இருந்த வார்ட் வரை வந்துவிட்டு கால்கள் வேரூன்றி நின்றான். தந்தை செழியனை கண்டு "ஐயா... வந்துட்டியா" என்று கட்டி பிடித்து அணைக்க, உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சியை அடக்கி, மெதுமெதுவாக, அன்னை இருந்த அறைக்குள் நுழைந்தான்.
"ஐயா செழியா..." என்று சுகந்தி கையில் மாட்டியிருந்த ஊசியால் மருந்தேறியதை பிச்சி போட்டு மகனை கண்டு இறங்கி தடுமாறி விழ, அவர்களை தாங்கி பிடித்தான்.
"என்ன பண்ணறிங்க நீங்க, முதல்ல பெட்ல படுங்க" என்று அதட்டிவிட்டு கையில் மருந்தேறும் சிரேன்ஜை மீண்டும் இணைத்தான். லேசாக ரத்தம் வெளிவந்திருந்தது. அதை பஞ்சுக்கொண்டு துடைத்தான்.
ஒரு மருத்துவனாக முதலில் அன்னையை கவனித்தான். "செழியா... செழியா மன்னிச்சிடுயா.. என்னை மன்னிச்சிடுயா. இந்த கூறுகெட்டவளை மன்னிச்சிடுயா. என்னிடம் பேசாம கொள்ளாம போகாதய்யா. ஒருவாய் சோறு இறங்க மாட்டேங்குது. நிம்மதியா தூக்கம் வரமாட்டேங்குது.
தப்பு தான்யா... நான் செய்தது தப்புதான்யா." என்று கதறினார். நீண்ட காலமாக மகனோடு பேச்சு வார்த்தையில்லாததால் படபடப்பாக பேசினார்.
"உஸ்ஸஸ... கொஞ்சம் அமைதியா இருங்க." என்று கூறியவன், அவர்களை நிதானப்படுத்தி படுக்க கூறினான்.
அதற்குள் கிருபானந்தனும் ''ஏதாவது செய்து அப்படியே போயிடபோறன். சும்மா இரு சுகந்தி" என்று சத்தம் போட்டார்.
சுகந்தி வாயில் கையை வைத்து, 'பேச மாட்டேன்.' என்று தெரிவித்து, மகனை கண்குளிர பார்வையிட்டார். முன்பை விட தலையில் லேசாக தென்பட்ட நரைமுடியை கண்டு மகனின் வயதை எண்ணி உள்ளுக்குள் அழுதார்.
செழியன் சலனமின்றி, அன்னையின் ரிப்போர்டை பார்வையிட்டான்.
நீண்ட வருடமாக பார்ப்பதையே தவிர்த்ததால் அவனுமே பேசுவதற்கும் தயங்கினான். இயல்பாக உரையாட அவனால் முடியவில்லை. அவ்வறையில் அங்கே பணிப்புரியும் டாக்டர் வரவும், அவரோடு அன்னை நலனை பற்றி விசாரித்து பேசினான்.
சற்று நேரம் நலனை பற்றி விவரித்தவர், டாக்டர் என்றதும் தொழில்பற்றி பேச்சு வர, இங்கவொரு செமினார் அட்டன் பண்ண வந்தேன்.' என்று கூறினான்.
இவ்வாறு பேசிட, "ஏன்ப்பா... பிளைட் கேன்சல் ஆகிடுச்சு?" என்று கிருபானந்தன் கேட்க, பேச்சு வாக்கில் செழியனோ, "வர்ஷூவை பார்த்தேன்ப்பா... அன்னைக்கு அவங்க அம்மா இறந்த நாளுக்கு பிறகு அவளை நேத்து தான் பார்த்தேன். அவளிடம் பேசணும்னு" என்று நெஞ்சில் கைவைத்து பெருமூச்சை விட்டான்.
கிருபானந்தன் புரிந்துக்கொண்டார், சுகந்தியோ "அந்த... அந்த பொண்ணு... இப்ப இங்க இருக்காளா? நான் நான் அவளை பார்க்கலாமா? அவளிடம் மன்னிப்பு கேட்கணும். கல்யாணம் கேன்சல் ஆன ஒரு வாரத்துலயே அவங்க அம்மா இறந்துட்டாங்கல்ல, அதுக்கும் நான் தான் காரணம். கல்யாணத்தை நிறுத்தியதுக்கும், அவங்க அம்மா இறந்ததுக்கும் நான் தான் காரணம்" என்று தலையில் தலையில் அடித்து அழுதார்.
"கொஞ்சம் இந்த மாதிரி செய்யாம அமைதியா இருக்கிங்களா" என்று மீண்டும் ஊசி சரியாக உள்ளதா என்று பார்வையிட்டான்.
இங்கு வந்ததும் அன்னையை கண்டவன் ஆடிப்போனான். முன்பு குண்டாக இருந்தவர், இன்று ஒல்லியாக காட்சியளித்து, ஹீமோகுளோபின் கூட குறைவாக உள்ளதை ரிப்போர்டில் பார்த்ததால் அன்னையின் உடல்நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று புரிந்தது. இன்னமும் இயல்பாக பேசாவிட்டாலும் முகதிருப்புதலை தவிர்த்திருந்தான்.
"அவ இப்ப இங்க இல்லை. நேத்தே டிரையின் ஏறி போயிட்டா. பொத்தம் பொதுவா பேசினோம். உங்களிடம் பேசாததும், சொந்த ஊருக்கு வராததும் பேச்சு வாக்கில் சொன்னேன். அவ தான் முதல்ல உங்க அம்மாவிடம் பேசுங்க. இருக்கும் போது அம்மா அருமை தெரியாது. இல்லாத பொழுது நம்ம மனசு ஏங்கும்னு சொன்னா. அவ போனதும் யோசிச்சிட்டு இருந்தப்ப தான் அப்பா கால் பண்ணினார்.
அந்த நேரம் உடனே வர முடியலை. காலையில் இங்க வந்துட்டேன்.
அவ ஒரகடத்துல தங்கி அங்கவொரு ஹாஸ்பிடல்ல வேலை செய்வதா தெரிந்துக் கொண்டேன். அதனால என்ன யூஸ்" என்றவன் மனவருத்தம் கொள்வதை சுகந்தி கண்டார்.
மகனின் தவ வாழ்க்கையை தான் இத்தனை காலம் பார்த்துவிட்டாரே. எந்த பொண்ணை கல்யாணம் செய்துக்கொள்ள கிருபானந்தனிடம் போட்டோ கொடுத்து பேச, போட்டோ பார்க்காமலேயே செழியன் மறுத்துவிடுவதாக உரைத்தாரே.
கல்யாணம் என்றால் இனி நீங்களும் இங்க வராதிங்கப்பா.' என்று முடிவாக உரைத்துவிட்டு அதை போலவே சாமியாராக வாழ்கின்றான்.
"ஏன் கண்ணா... செழியா... நான் வேண்டுமின்னா அந்த பொண்ணிடம் பேசவா' என்று வாய் வரை வந்துவிட்டது. ஆனால் கேட்டு திட்டு வாங்குவோமோ என்று சோர்ந்துவிட்டார்.
"நான் உன்னோட வரவா ராசா'' என்று கேட்டதும், செழியனோ எதுவும் சொல்லாமல் தவிர்த்தான்.
அதோடு மேலும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டான். அன்னையோடு மருத்துவமனையில் கூடவேயிருந்தான்.
அம்மாவோடு இருந்தாலும் வார்த்தைகள் எண்ணி எண்ணி பேசினான்.
வீட்டுக்கு செல்வதற்கு மறுத்துவிட்டான்.
சென்னை கிளம்புவதாக கூற, சுகந்தி மகனோடு செல்லலாமா என்று கிருபானந்தனிடம் கேட்க, அவருமே செழியனிடம் தயங்கி "அம்மாவும் நானும் உன்னோட வரலாமா?" என்று கேட்க, இத்தனை நாள் எப்படியோ, இன்று மறுக்க இயலாது அடுத்த நாள் விமானத்தில் கூடவே அழைத்து வந்தான்.
அன்னையோடு இருக்கும் நேரம் வர்ஷினிக்கு போனில் தொடர்பு கொள்ளவில்லை. இங்கே வந்து அன்னையை பார்த்ததாக கூற அவனுக்கும் தயக்கம். அவள் சொல்லி தான் இங்கே வந்தாலும், அன்னையோடு இருக்கும் நேரம் அவளோடு பேச ஏதோ தடுத்தது.
அவளுமே சென்னை சேர்ந்துவிட்டதாக தகவல் கூட கூறவில்லை. மீண்டும் என்னிடம் பேச அவளுக்கு என்ன தயக்கமோ?
தயக்கங்கள் உடைந்தால் அவளிடம் பேசினால் அடுத்த கட்டம் என்ன?
செழியனுக்கு இதே எண்ணம் ஓடியது.
வர்ஷினிக்கோ இங்கே வந்து ஒரு வாரத்துக்கும் மேலாகியும், தன் இருப்பிடம், வேலை பார்க்கும் மருத்துவமனை தெரிந்தும் செழியன் தன்னை சந்திக்க வரவில்லை. ஒருவேளை அவருக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடக்காமல் இருக்கலாம். வேறொரா காதல் மலர்ந்திருந்தால்...
வர்ஷினி தப்பும் தவறுமாய் செழியனை பற்றி நினைத்து மனம் துவண்டாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
-
நின் பார்வை தவமல்லவா!-10 (முடிவுற்றது)
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-8
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-7
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-6
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-5
3 weeks ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 3 Online
- 329 Members
