தொலைதூர வெளிச்சம் நீ-1
ஈக்களின் கூட்டம் போல் எங்கும் கருப்பு வெள்ளை உடைகளில் மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார்கள். ஆங்காங்கே காக்கி உடையில் நிற்கும் காவலாளி அருகே உள்ள குற்றவாளியிடம் எப்படியாவது பேசிவிடலாம் என்று தவிப்பாய் நிற்கும் அவர்களது குடும்பத்தார்கள். ஒரு கையில் கருப்பு கோட்டையும், சில கோப்புகளையும் ஏந்தியபடி அங்கும் இங்கும் இளம் வயது முதல், வயதானர் வரை நடந்து கொண்டிருக்கும் வக்கீல்களின் எண்ணிக்கை கண்டு வியந்து தான் போனாள் சிவன்யா.
சென்னை உச்சநீதிமன்றத்தில் குடும்ப நலப் பிரிவின் அருகே, தனது விவாகரத்திற்காக காத்திருந்த சிவன்யாவின் கண்களுக்கு, நாட்டில் இத்தனை கணவன் மனைவிகளுக்குள் பிரச்சனையா? என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
சிவன்யா.
வயது 22 ஆகிறது. ஒல்லியான தேகம். கோதுமையின் நிறம். கல்லூரி படிக்கும் வரை பட்டாம்பூச்சி போல் பறந்து கொண்டு இருந்தவள். இன்று குடும்ப நீதிமன்றத்திற்கு விவாகரத்திற்காக காத்திருக்கிறாள்.
வேப்பமரத்து அடியில் இருந்த கல்லில் உட்கார்ந்தபடி அவளது கண்கள் அந்த நீதிமன்றத்தை சுற்றி அலசியது. ஆனால் முகமோ வெறுமையாக இருந்தது. அவளது அருகில் தவிப்பாய் நின்றிருந்தார் அவளது தந்தை சிவநேசன். மகளின் வாழ்க்கையை இனி என்ன ஆகும் என்ற தவிப்பு, அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
அவளது பிஇ படிப்பு முடிந்ததும், அவளுக்கு திருமணம் செய்து வைத்தார். உறவுக்காரர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு மிகவும் சீரும் சிறப்புமாக நடந்தது தான் சிவன்யா கல்யாணம்.
எல்லா பெண்களையும் போலவே சிவன்யாவும் மிகவும் மகிழ்வாகவே திருமண வாழ்வுக்குள் நுழைந்தாள். ஆனால் எதிர்பாரா விதமாக ஆறு மாதங்கள் முடியும் முன்னரே, அவளது திருமண வாழ்க்கை இன்று முடிவுக்கு வருகிறது.
அதை நினைக்க நினைக்க அவளுக்குள் ஓர் அழுத்தம் குடி வராமல் இல்லை. ஏன் எனக்கு இப்படி நடக்க வேண்டும்? என்று இதுவரைக்கும் ஆயிரம் தடவைக்கு மேல் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் சிவன்யா. ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை. தனக்கு திருமணம் நடக்காமலேயே இருந்திருக்கலாம் என்பது தான் அவளது இறுதி எண்ணமாக முடியும்.
அவளது எண்ணம் தந்தை அவளிடம் திருமணம் பற்றி கூறிய நாளிற்கு சென்றது. கல்லூரியின் இறுதி பரீட்சை முடித்துவிட்டு நண்பர்களுடன் ஹோட்டலில் உண்டு விட்டு, சாயங்காலம் கடற்கரைக்கும் சென்று விட்டு, மிகவும் சந்தோஷமாக வீட்டிற்குள் வீட்டிற்கு வந்தாள் சிவன்யா.
"ஏன்டி, காலையில போனது. இருட்டின பிறகு வீட்டுக்கு வருகிறாய். பரிட்சை எழுதி முடிச்ச உடனே ஃபோன் பண்ணுனதோட சரி. எத்தனை தடவை உனக்கு நான் கூப்பிட்டேன். ஒருதலயாவது எடுத்து பேசினாயா?" என்று அவளை திட்டிக் கொண்டே, பார்வையால் அவளை மேலிருந்து கீழ் அலசினார் அவளது தாய் சிவகாமி.
ஈர உடைகளை கண்டு, "பீச்சுல நல்லா ஆட்டம் போட்டியா? பாரு டிரஸ் எல்லாம் எவ்வளவு ஈரமா இருக்கு! சீக்கிரம் போயிட்டு குளிச்சிட்டு, டிரஸ் மாத்து. ஈரத்துணியோடு இருந்தீன்னா உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகிறது" என்று அவர் அவளை திட்டுவது போல் அக்கறையா கூறினார். அதிலேயே அவள் மேல் உள்ள பாசம் தெரிந்தது.
"ஏன்ம்மா? தங்கச்சிய வந்ததும் திட்றீங்க. இன்னைக்கு தானே அவளுடைய கல்லூரியின் கடைசி நாள். சந்தோஷமா பிரண்ட்ஸ் கூட இருந்துட்டு வந்து இருப்பா. அந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடுங்க. திட்டி கெடுத்துடாதீங்க" என்று தங்கைக்காக பேசியபடியே டிவியை ஆன் செய்தான் மேகநாதன். அவரது அண்ணன். கல்லூரி படிப்பு முடிந்ததும், கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலைக்கு கிடைக்க, பரிச்சை முடித்த கையோடு பிரபல ஐடி கம்பெனியில் வேலையில் சேர்ந்து விட்டான். இன்று கை நிறைய சம்பாதிக்கும் பாசக்கார அண்ணன்.
"அண்ணனும் அப்பாவும் அவளை எதுவும் சொல்லிடாதீங்க? நீங்க ரெண்டு பேரும் கொடுக்கிற செல்லம் தான், அவள் இப்படி சின்ன பிள்ளை மாதிரி துள்ளி குதிச்சுக்கிட்டு இருக்கா. கல்யாணம் பண்ற வயசு வந்த மாதிரியா நடந்துக்குறா. வெளியே போயிட்டு வீட்டுக்கு வரும் வரைக்கும் நான் படுற பாடு எனக்கு தான் தெரியும்.
டிவில செய்தியை ஆன் பண்ணாலே, வெளியே போயிட்டு வர பொம்பள பிள்ளைகளை நினைச்சு மனசு பக்குன்னு தான் இருக்கு. காலாகாலத்தில் அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி அனுப்பிட்டோம்னா, நிம்மதியாக இருக்கும்" என்று சராசரி தாய்க்கான பயத்துடன் பேசும் தாயை கண்டு,
சிரித்துக் கொண்டே
"அது எப்படிமா? கல்யாணம் பண்ணி ஒருத்தன் கையில கொடுத்த பிறகு நீங்க நிம்மதியா இருக்க முடியும். கல்யாணம் பண்ணி என்னை கூட்டிட்டு போறவன் என்ன கொடுமை படுத்தினா, என்ன பண்ணுவீங்க?" என்றாள் அண்ணனின் கையில் இருந்து ரிமோட்டை பிடுங்கிக் கொண்டு.
அவள் தலையில் நங்கென்று கொட்டி "அபசகுணமா பேசாதடீ" என்றார் தாய்.
"ஏய் வாலு, ரிமோட்டை கொடு. நான் செய்தி பார்த்துகிட்டு இருக்கேன்" என்று அவள் கையில் இருந்து ரிமோட்டை பிடிங்கினான் மேகநாதன்.
"அச்சோ அண்ணா, பயங்கர போர். நியூஸ் பார்க்கணும்னா உங்க ஃபோன்ல போய் பாருங்க. நான் பாட்டு போடுறேன்" என்று சன் மியூசிக் ஆன் செய்துவிட்டு டிவியில் ஒளிக்கும் பாடலை அவளும் பாடத் தொடங்கினாள்,
"யார்ரா அந்தப் பையன்,
நான் தான் அந்த பையன், என்று.
"ஒரு நல்ல பாட்டா வை டி, தையதக்கா என்று குதிக்கிற பாட்டையே வைக்கிறது" என்று சொல்லிவிட்டு "கல்யாணத்தைப் பற்றி பேச்சு எடுத்தா ஏதாவது அவசகுணமா பேசாதடி" என்றார் சோகமாக.
தன் அன்பு அம்மாவின் முகத்தில் தெரிந்த கவலையை கண்டு, 'நான் எங்கே பேசினேன்' என்று யோசிக்க, "அம்மா, அது ஒரு ஃப்லோல வந்துச்சு. அதை நினைத்து வருந்துவீர்களா? போங்கம்மா, இன்னைக்கு நைட் நல்ல டேஸ்ட்டா ஏதாவது சமைங்க" என்றாள் புன்னகையுடன்
"ஏன் இவ்வளவு நாள் நான் சமைச்சது நல்லா இல்லையோ?" என்று அவளிடம் வம்புக்கு நிற்க,
"சின்ன பிள்ளை கூட என்னடி போட்டி போட்டுக்கிட்டு இருக்க" என்றபடியே மகளின் அருகில் வந்து அமர்ந்தார் அவளது தந்தை.
"அப்படி சொல்லுங்க அப்பா" என்று அவர் மீது சாய,
"ஏய், ஈர உடுப்போட அவர் மேல் சாயாதே, முதலில் குளித்து உடை மாற்றி வா" என்று அவளிடம் சொல்லிட்டு
"ஆமா சின்ன பிள்ளை, நீங்க தான் மேச்சுக்கணும். இவ வயசுல எனக்கு மேகநாதன் பொறந்துட்டான். இன்னும் சின்ன பிள்ளையாமே! போன வருஷம் வந்த, வரனுக்கு கட்டிக் கொடுத்து இருந்தா, இன்ன நேரம் அவ கையிலேயே ஒரு சின்ன பிள்ளை இருந்திருக்கும். என் பொண்ணு படிக்கட்டும் அப்படின்னு சொல்லி அனுப்பிட்டு பேச்ச பாருங்க" என்று கணவனின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, கழுத்தை சுளிக்கிக்கொண்டு சமையலறைக்கு சென்றார்.
"அப்பா! எப்படி அப்பா இந்த அம்மாவோட நீங்க குடும்பம் நடத்துறீங்க? எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க" என்று தாயைப் பற்றி தந்தையிடம் குறை கூற,
"அவள் திட்டுவதெல்லாம் உன் மேல் உள்ள பாசத்தில் தான் டா" என்றார் மனைவியை விட்டுக் கொடுக்காமல்.
"அதானே பார்த்தேன் நீங்களாவது அம்மாவை விட்டுக் கொடுப்பதாவது" என்றதும்,
அவரும் சிரித்துக் கொண்டு "உன் அம்மா எது சொன்னாலும், சரியாகத்தான் இருக்கும் அது உனக்கும் தெரியும்தானே!" என்று கூறி "சரி அவளை கோவப்படுத்தாமல் போய் குளிச்சிட்டு வா" என்றார்
இங்கு மூவரும் பேசிக் கொண்டிருக்க ஃபோனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் கையில் இருந்து டக்கென்று ஃபோனை பிடிங்கினாள் சிவன்யா.
"ஏய், ஃபோனை கொடுடீ" என்று அவளிடம் இருந்து வேகமாக ஃபோனை வாங்கிக்கொண்டு, "ஃபோன்ல கை வைக்கிற வேலை வெச்சுகிட்டு இருந்த, அவ்வளவுதான்" என்று கோபமாக சொல்லிவிட்டு, தனது அறைக்கு சென்று விட்டான்.
அவன் திட்டுவதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், "பாருங்கப்பா, ஃபோன் எடுத்ததறக்கு அவனுக்கு கோவம் வருது. லவ்வுன்னு எதுலையாவது மாட்டிக்க போறான், ஜாக்கிரதை இருங்க" என்று விளையாட்டாக கூறி, "அம்மா திட்ட ஆரம்பிக்கும் முன், நான் குளிச்சிட்டு வரேன்" என்று தனது அறைக்கு ஓடினாள் சிவன்யா.
மகளின் செயலில் புன்னகையாக அமர்ந்து டிவியை பார்க்க ஆரம்பித்தார் சிவனேசன்.
"என் பையனை அவள் கிண்டல் செய்துவிட்டு போறா, உங்களுக்கு சிரிப்பு வருதா?" என்ற படியே அவரின் அருகில் வந்து அமர்ந்தார் சிவகாமின்.
மனைவியின் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு, "இப்ப நான் என்ன செய்யணும்? ஏன் இப்படி கடுகடு என்று இருக்கிற?" என்றார் மனைவி ஏதோ மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருக்கின்றார் என்று.
"என்ன என்று தெரியவில்லைங்க? இந்த கல்யாண பேச்சை எடுத்ததிலிருந்தே ஏதோ படபடப்பாகவே இருக்கிறது. கல்யாணம் பண்ணலாமா வேண்டாமா என்று குழப்பமாகவும் இருக்கிறது" என்றார் சோகமாக.
"ரொம்ப யோசிக்காத சிவகாமி. பையன் குடும்பம் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நல்ல குடும்பமா இருக்காங்க. விசாரித்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டில இருப்பாங்க, அவ்வளவுதான். எப்படியும் புள்ள குட்டி வந்த பிறகு நம்ம கூட தானே இருப்பாங்க! ஆகையால் மற்றதை நினைத்து வருந்தாதே" என்று கூறி
"பொதுவா பொம்பள புள்ளைய கட்டி கொடுக்கும்போது, அப்பாகளுக்கு தான் இப்படி தோணும்னு சொல்லுவாங்க. ஆனா இங்க எல்லாம் தலை கீழ். அவளை எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கிறாய். ஆனால் அவள் வெளிநாடு போய் விடுவாளோனு இப்படி கவலைப்படவும் செய்யிறாய்" என்றார் சிரித்துக் கொண்டே.
"போங்க உங்களுக்கு எப்ப பார்த்தாலும் என்னை கிண்டல் செய்வது தான் வேலை" என்று கூற,
சரியாக அப்பொழுது அங்கு வந்த சிவன்யா, "என்ன? பிள்ளைங்க ரெண்டு பேரும் ரூமுக்கு போன உடனே, நீங்க ரொமான்ஸ் பண்றீங்களா?" என்று கூறி இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அவள் தோளில் செல்லமாக அடித்து "பாருங்க! என்ன பேச்சு பேசுறா?" என்று அதற்கும் தன் கணவனிடம் குறைபட்டுக் கொண்டார் சிவகாமி.
"சரி சரி, ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க. சாப்பாடு தயாராயிடுச்சுன்னா மேகநாதனை கூப்பிடு, சாப்பிடலாம்" என்றார் தாயையும் மகளையும் சண்டை போடாமல் பிரிக்கும் பொருட்டு.
எல்லாம் தயாராதான் இருக்கு" என்று கணவனிடம் சொல்லிவிட்டு, "சிவன்யா, போய் அண்ணாவை சாப்பிட கூட்டிட்டு வா" என்று கூறி சாப்பாட்டை எடுத்து வைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார் சிவகாமி.
மேகநாதன் வந்ததும், நால்வரும் குடும்பமாக அமர்ந்து இரவு உணவை முடித்தனர்.
உணவு உண்டு முடித்ததும் மகளிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி அவள் கையில் ஒரு கவரை எடுத்து கொடுத்தார் சிவனேசன்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 17
14 hours ago
-
வெளிச்சம் - 16
14 hours ago
-
வெளிச்சம் - 15
3 days ago
-
வெளிச்சம் - 14
3 days ago
-
வெளிச்சம் - 13
3 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
