உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -10
உதயம் 💏 10💏
பிரபல துணிக்கடை ஒன்றின் முன் வண்டி நிற்க, நான் இறங்கியபோது விஷ்ணு அங்கிளும் அவரது மனைவி பவித்ராவும் எங்களை வரவேற்றனர்.
"சாரி விஷ்ணு, வந்து ரொம்ப நேரம் ஆச்சா?"
"இல்லடா. நாங்க இப்ப தான் வந்தோம். நாங்க வண்டியை விட்டு இறங்குறோம். நீங்க வந்துட்டீங்க."
"எப்படிமா இருக்க பவித்ரா!"
"எனக்கு என்னண்ணே என் மருமக எப்போ வீட்டுக்கு வருவான்னு காத்துகிட்டு இருக்கேன்." என என் அருகில் வந்தவர் என் கன்னத்தை வருடினார்.
நான் லேசாக புன்னகைத்தேன்.
"வாங்க நல்ல நேரம் போறதுக்குள்ள முகூர்த்த பட்டை எடுத்துருவோம்." என பாட்டி சொல்ல,
"சரிங்கம்மா..." என பார்வதி ஆண்டியும் ஒத்துக் கொண்டு முன்னே நடந்தார்.
"விஷ்ணு ஆதித்யா வரலையா?"
"நானும் கூப்பிட்டேன் டா. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டான்."
"அப்போ அவரோட டிரஸ்ஸ எப்படி எடுக்குறது." என் அம்மா கேட்டா
"அதான் தியா இருக்கால. அவ எடுக்கட்டும். தியா எந்த டிரெஸ் எடுத்தாலும் ஆதித்யாக்கு நிச்சயம் பிடிக்கும்."
'அடப் பக்கிகளா நான் எடுத்தேன்னு சொன்னா தான் அவன் போட மாட்டான்.' என மனசுக்குள் சொன்னேனே தவிர தப்பித் தவறி கூட வாய் வழியே சொல்லவில்லை.
"முதல்ல தியாக்கு புடவை எடுத்திருவோம்." என பவித்ரா கூற எல்லோரும் பட்டு செக்சனுக்குள் புகுந்தனர்.
ஆண்கள் இருவரும் ஓரமாக நின்று பிசினசை பற்றி மும்முரமாக பேசிக் கொண்டிருக்க, பெண்களோ புடவை கடலில் மூழ்க ஆரம்பித்தனர்.
"இந்த சேலை எப்படி இருக்கு அண்ணி?"
"அம்மா இது நல்லா இருக்குமா?"
"இதைவிட அந்த கலர் நல்லா இருக்கே"
'நடக்காத கல்யாணத்துக்கு யாருக்குடா புடவை எடுக்குறீங்க.' என சிரித்துக்கொண்டே அமைதியாக அங்கிருந்து நழுவினேன்.
சரண்யா வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதனால் மாயாவை இங்கு அழைத்தேன்.
ஆனால் அவள் இன்னும் வரவில்லை. எப்பொழுதும் நேரத்திற்கு முன்னால் வருபவள் இன்று இன்னும் ஆளை காணவில்லை.
அவள் இருந்தால் கொஞ்சம் பொழுது போயிருக்கும். என எண்ணியவாறு அங்கிருந்த புடவைகளை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டே சென்றேன்.
அங்கு ஒரு பொம்மை சிறிய தங்க நிற பார்டர் கொண்ட கருப்பு நிற டிசைனர் சேலையில் அழகாய் ஜொலித்தது. அதன் அருகில் சென்றேன். அதை வருடினேன்.
மிருதுவான சேலையில் என் கை நழுவியது. அதன் முந்தானையை எடுத்து என் மீது வைத்துப் பார்த்தேன்.
"என்னடி இது அபசகுனமா? கல்யாணத்துக்குப் புடவை எடுக்க வந்தா, கருப்பு கலர் எடுத்து மேல் வைச்சுக்கிட்டிருக்க." என என்னிடமிருந்து புடிங்கி சேலையை வீசி எறிய அந்த பொம்மை கீழே விழுந்தது.
"என்ன பண்றீங்க பாட்டி?"
"கொஞ்சமாவது அறிவு இருக்கா. முத முதல கல்யாணத்துக்காக புடவை எடுக்க வந்தா. இப்படி அபசகுணமா பண்ணிக்கிட்டு இருக்க. வா வந்து என் கூட நில்லு." என என்னை இணைத்துக் கொண்டு சென்றார், என் பாட்டி.
'கல்யாணம் மட்டும் நிக்கட்டும். உனக்கு இருக்கு கிலவி.' என வறுத்துக்கொண்டே என் பாட்டியின் பின் சென்றேன்.
என்னை பார்த்ததும் பவித்ரா ஆண்டி என் அருகில் வந்தது
" என்னடா ஆதித்யா இல்லாம தனியா துணி இருக்குறது கஷ்டமா இருக்கா?" என கேட்டாள்.
"அப்படியெல்லாம் இல்லை ஆண்ட்டி." வெளியில் சொன்னாலும் அந்த ஒரு காரணத்தால்தான் சந்தோசமா இருக்கேன் என மனதிற்குள் மகிழாமல் இல்லை.
"இன்னும் என்னடா ஆன்ட்டின்னு மூணாவது மனுஷன கூப்பிடுற மாதிரி கூப்பிடுற. அத்தன்னு உரிமையா கூப்பிடு." என சொல்ல சிறிது தயங்கினாலும்,
" சரிங்க அத்தை." என்றேன்.
"கவலை படாதே. நான் ஆதிக்கு போன் பண்ணி இருக்கேன். அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான். அப்புறம் நீயும் அவனும் சேர்ந்து உங்க கல்யாண டிரஸ்ஸை செலக்ட் பண்ணுங்க." அலுங்காமல் குலுங்காமல் குண்டை தூக்கி போட்டு விட்டு நகர்ந்து விட்டாள்.
'என்ன ஆதித்யா வா' என என் கண்கள் விரிய, 'கடவுளே இப்ப என்ன பண்றது' என உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்தேன்.
அம்மா பாட்டி பவித்ரா அத்தை மூவரும் என்னுடைய புடவைக்கான தேர்வை விட்டுவிட்டு அவர்களுக்கான புடவையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர்.
மீண்டும் ஆதித்யாவை சந்தித்தாக வேண்டும். மீண்டும் அவனை எதிர்கொள்ள வேண்டும் என எண்ணும் போதே என் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.
"பூபூபூபூ..." என்ற சத்தம் பின்னிருந்து கேட்க இதயம் ஒரு நொடி நின்றே விட்டது. அதன் பிறகே அந்த குரலை உணர்ந்து ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு திரும்பி நின்று முறைத்தேன்.
"எருமமாடு கொஞ்சமாவது அறிவு இருக்கா பின்னாடி வந்த கத்தற. கொஞ்ச நேரத்துல உசுரே போயிருச்சு."
"தியா இதுக்கே இப்படி பயந்தா எப்படி" என என் தோளில் கையை வைத்தவள்,
" எங்க உன்னோட ஆளையே காணோம்." என வம்பிழுக்க,
" இப்ப வருவான். அவன்கிட்டயே கேளு." என் தோள் மேல் இருந்த அவள் கையை இறக்கி விட்டு சேலையை தேர்வு செய்வதாக பாவலா காட்டினேன்.
"அடடே வாப்பா ஆதி..." என என் பாட்டியின் குரல் கேட்க ஆதித்யா வந்து விட்டதை உணர்ந்தேன்.
"தியா செமயா இருக்கான். அப்படியே கொஞ்சம் திரும்பி பாரு." என என் தோளை கிடைக்க இடிக்க,
" வாயை மூடிக்கிட்டு சும்மா இருடி. இல்ல வாயில இருந்து வண்ண வண்ணமாய் வந்துடும்." என அவளை எச்சரித்துவிட்டு கண்டும் காணாமல் சேலையை பார்ப்பதிலேயே கவனத்தை செலுத்தினேன்.
"தியா, இங்க வாமா." என்ற பவித்ரா அத்தையின் குரல் கேட்க மறுக்க முடியாமல் அங்கு சென்றேன். ஆனால் தப்பி தவறியும் ஆதித்யாவை மட்டும் பார்க்கவில்லை.
"சொல்லுங்க அத்தை."
"இதோ ஆதித்யா வந்துட்டான். நீ அவன கூட்டிட்டு போயி உங்க ரெண்டு பேருக்கும் புடிச்சுத செலக்ட் பண்ணி எடுத்துக்கோங்க."
"சரிங்க அத்தை." என நான் தலையை ஆட்டினேன்.
"தியா நீ ரொம்ப வெக்கப் படுற. ஆனா உன் ஆளு கொஞ்சம் கூட எல்லாரும் பாக்குறாங்கிற நினைப்பு இல்லாம உன்னை சைட் அடிக்கிறான்."என என் காதில் ஓதினாள்.
"என்னை சைட் அடிக்கிறானா எவ்வளவு தைரியம்" என நான் நிமிர்ந்து அவனை முறைக்க, அவனோ என்னை எரித்து விடும் அளவிற்கு முறைத்துக் கொண்டிருந்தான்.
'அடிப்பாவி சைட்டுக்கும் முறைக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாம இப்படி கோர்த்து விட்டுடியேடி' என மாயாவை ஓரக்கண்ணால் முறைத்துவிட்டு திரும்பி நின்றேன்.
"நாங்க முதல்ல என்கேஜ்க்கு லெகங்கா செலக்ட் பண்றோம்மா?" என பெரியவர்களிடம் சொன்னவன், அவளின் பதிலுக்கு காத்திராமல் என் கையைப் பற்றி அழைத்துச் சென்றான்.
அவன் பற்றிய கையில் அழுத்தம் கொடுத்து இழுக்க நான் பின்னால் திரும்பி என் பெற்றோர்களை பார்க்க, அவர்களோ ஆதித்யா என்னிடம் உரிமையோடு பழகுகிறான் என நம்பி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் பார்வையிலிருந்து மறைந்ததும் என் கையை உறுவ முயற்சிக்க, என்னை முன்னால் கொண்டு வந்து கையை விட சிறிது தடுமாறினாலும் நிலையாக நின்றேன்.
"நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?" என ஆக்ரோஷமாக வார்த்தைகள் வெளிவர எனக்கு வியர்த்துக் கொட்டியது.
"அவ்வளவு சொல்லியும்...." என ஆரம்பித்தவன் என்னை நெருங்கி என் கண்ணங்களை அவன் உள்ளங்கையில் தாங்கினான்.
"சாரிடா. எனக்கு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதனாலதான் என்னால வர முடியல. எப்ப நீ நான் இல்லாம சோகமா இருக்கேன்னு சொன்னாங்களோ அப்பவே இன்னைக்கு மீட்டிங்க விட உன்னோட சந்தோசம் தான் முக்கியம்ன்னு ஓடி வந்துட்டேன்." என சொன்னவன் அவன் நெற்றியை என் நெற்றி மீது முட்டினான்.
இப்போது என்ன நடக்கிறது என்பதை என்னால் சுத்தமாக உணர முடியவில்லை ஆதித்யா என்னிடம் சாந்தமாக பேசுகிறானா அதுவும் ரொமான்டிக்காக. என்னால் நம்ப முடியவில்லை.
"சரி வா. நம்ம லைஃப்ல நடக்கப்போற மெமரபிலான மொமன்ட்க்கு டிரஸ் செலக்ட் பண்ணலாம்." என லெஹங்கா செக்சனுக்கு அழைத்துச் சென்றான்.
அங்கிருந்த துணிகளை மேய்ந்து பரபரப்பாக லெகங்காவை செலக்ட் செய்து கொண்டிருந்தான்.
ஆகாய நீல நிற துப்பட்டாவை எடுத்து என் தோளில் வைத்தவன் என் கண்களையே பார்த்தவண்ணம் "ரொம்ப அழகா இருக்க" என என் அருகில் நெருங்கியவன் என் இரு முழங்கைகளையும் பற்றியவன், என்னை நோக்கி துணியால் குனிய எனக்கு மேல் மூச்சு எடுத்தது.
என் கன்னத்தை முத்தமிடுவது போல் நெருங்கியவன் என் காதோரம் வந்தான்.
என் முழங்கையை அழுத்தினான். எனக்கு வலி எடுக்க அவனிடம் இருந்து விலக நினைக்க அவன் அழுத்தத்தை கூட்டினான். வலி அதிகமானது.
"நம்ம அப்பா பின்னாடி நாம என்ன பண்றோம் பாத்துக்கிட்டு இருக்காங்க. இப்படி மலங்க மலங்க முழிளிக்கிறத நிப்பாட்டு." என்றவன் என்னை திருப்பி கண்ணாடியை பார்க்க வைத்தான்.
"எப்படி இருக்கு?" என கேட்டான்.
எனக்கு புரிந்தது. எங்களை பின்னால் இருந்து வேவு பார்த்துக் கொண்டிருக்கும் என் அப்பாவையும் விஷ்ணு அங்கிளையும் காட்டுவதற்காகவே என்னை திருப்பினான் என.
ஆனால் ஏன் எல்லோரிடமும் அன்னியோன்யமாக காட்டிக் கொள்ள வேண்டும் என எனக்கு புரியவில்லை.
நான் திரும்பி அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தேன்.
"அவங்க பார்த்தா எனக்கு என்ன? லீவ் மீ." என இன்னும் என்னை பற்றி இருந்த அவன் கையை எடுத்து விட்டேன்.
அவன் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை. அவனுக்கு சிரிக்க கூட தெரியுமா என நினைத்து கொண்டிருக்கும் போதே அந்த சிரிப்பு நக்கலாக மாறியது.
"இது தான் எனக்கு வேணும். எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்ல முடியாது. இப்ப நீ கோவமா பேசுனத நம்ம ரெண்டு பேரோட அப்பாவும் பார்த்துட்டாங்க. உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லி நானே உன் அப்பாகிட்ட சொல்ல போறேன். " என்றான், எனக்கு மட்டும் கேட்கும் குரலில்.
எனக்கு எதிராக திட்டம் போட்டு என்னை சிக்க வைக்க பார்க்கிறான். இவனுக்கு நான் யார் என காட்ட வேண்டாமா?
அவன் இடது முழங்கையை என் இரு கையால் பற்றி அவனின் தோள் சாய்ந்தேன்.
" ஏன் ஆதி எனக்கு பிடிக்கும்னு உங்களுக்கு பிடிக்காத கலர்ல எடுக்குறீங்க." என சத்தமாக வருத்தப்படும் குரலில் கூறினேன்.
அப்பொழுது தானே எங்கள் அப்பாக்களின் காதில் விழும்.
"ஹலோ மிஸ்டர் ஆதித்யா உங்க தோசைய உங்க பக்கமே திருப்பிட்டேன். இப்போ என்ன பண்ணுவீங்க."
பற்களை நறநறவென கடித்துக் கொண்டு என் அருகே வந்து லாவண்டர் நிற துப்பட்டாவை என் மீது வைத்தான்.
"நான் என்ன சொன்னேன்னு நீ மறந்துட்டியா. என்னை கல்யாணம் பண்ணி மிஸ்ஸஸ் ஆதித்யா குமார் ஆகலாம் னு கனவுல கூட நினைக்காத. ஒழுங்கா இந்த கல்யாணத்தை நிப்பாட்டிரு. இல்ல நடக்குற எதுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன். இப்போ நீயே சமாளி." என்றவன் விறுவிறுவென வெளியேறினான்.
திமிரு பிடித்தவன். எனக்கு என்ன ஆசையா மிஸ்ஸஸ் ஆதித்யா குமார் ஆகனும்னு. எல்லாம் என் தலையெழுத்து. ஆமா இப்போ எதை சமாளிக்க சொன்னான் என யோசித்துக் கொண்டு இருக்கும் போதே பவித்ரா அத்தை வர "எங்கம்மா போறான்?"
ஆஹா இதை தான் சமாளிக்க சொன்னானா.
" அது அத்த. அவரு எனக்காக மீட்டிங் விட்டுட்டு வந்துட்டாரு. போன் மேல் போன் வந்தது அதான் நான் அவர் போக சொல்லிட்டேன்."
ஆமாம் நான் ஏன் இவனை இப்போது காப்பாற்றினேன்.
- 25 Forums
- 215 Topics
- 762 Posts
- 1 Online
- 329 Members
