பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-8
அத்தியாயம்-8
சாரதி பூங்காவில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவை சுட்டிக்காட்டி, போலீஸ் ஸ்டேஷனில், "இதான் சார்... எங்கப்பாவோட சைக்கிள். இவர் தான் சார் திருடிட்டு போயிருக்கார். சார் சார்.. யார் என்னனு பார்த்து பிடிச்சி என் சைக்கிளை வாங்கி தாங்க சார்" என்று போலீஸிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான் நாயகன்.
போலீஸோ சிசிடிவியை பார்த்து பொறுமியவாறு, "டேய்... தம்பி... இந்தாளு லோக்கல் ரவுடி டா. நிறைய திருட்டு கேஸ் இருக்கறவன் தான். உன் சைக்கிளை தூக்கிட்டு போன சாட்சிக் கூட இருக்கு. நான் அவனை கூப்பிட்டு கேட்கலாம். ஆனா...." என்று இழுத்தார்.
"என்ன சார் ஆனா..?" என்று அவரையே நோட்டமிட, "யோவ் கான்ஸ்டேபிள்.. வந்து புரியவையா" என்று கூற, கான்ஸ்டேபிளும் சாரதியை பார்த்து, "தம்பி... இவனுக்கு ஆளுங்கட்சி எதிர்கட்சி இரண்டு பேருக்குமே தெரிந்தவன். இவனிடம் போய் நின்னா... மதிக்கவே மாட்டான். உன்னோடதாவது ஆஃப்ட்ரால் சைக்கிள். சிலரிடம் நகை ராயல்பீல்ட் வண்டினு திருடியே ஏப்பமிட்டவன்பா. திரும்ப வரும்னு நம்பிக்கையில்லை." என்றார்.
சாரதியோ "சார் அவரை சந்திக்க முடிந்தா நானே கேட்டு வாங்கிக்கறேன் சார். ஜஸ்ட் அவரை முன்ன நிறுத்துங்க போதும்" என்று கேட்டுநின்றான்.
காஞ்சனாவோ தொடர்ச்சியாக அலைப்பேசியில் சாரதியை அழைத்த வண்ணம் இருந்தார். எடுக்கவே தயங்கி இப்பொழுது வரை தவிர்க்கின்றான்.
மணி ஒன்பதாகவும், "சரிப்பா... ட்ரை பண்ணறோம். நீ இப்ப கிளம்பு" என்றதும் தான் அரை மனதாய் புறப்பட்டான்.
மனம் முழுக்க அன்னையிடம் சைக்கிளை பற்றி எவ்வாறு விவரிப்பதென தவித்தவனாக தான் பொடி நடையாக வந்தான்.
தெருவை பார்த்தது போல இருக்கும் அறையில் தையல் மிஷினுடன் தைத்துக் கொண்டிருக்க வேண்டிய காஞ்சனா மகன் தன் அழைப்பை ஏற்காமல் போகவும், வாசலில் அமர்ந்து மகனது வரவை எதிர்பார்க்க, சாரதி துவண்டபடி நடந்து வரவும், பதற்றத்துடன் "ஏன்யா.. என்ன இப்படி வர்ற. சைக்கிள் எங்க? என் இப்படி வேர்த்து நடந்துட்டு வர்ற" என்று சேலையால் சாரதி முகத்தை கழுத்தை துடைத்து விட்டார். தையல் மிஷன் முன் தைக்க இருக்கும் இருக்கையில் அவனை உட்கார வைத்தார்.
"அம்மா... அம்மா.. அப்பா சைக்கிள் தொலைந்து போச்சும்மா." என்று அழுதான்.
இவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகை வெடித்தது. காஞ்சனாவின் இடையை கட்டிக்கொண்டு சிறு குழந்தை போல கூறினான்.
"எய்யா.. என்னாச்சு. முதல்ல அழாத. நீ அழறதை பார்க்க கஷ்டமாயிருக்கு" என்று கண்ணீரை கையால் துடைத்து விட்டார்.
"நம்ம ஏரியா புட்பால் கிரவுண்ட் வரை போயிருந்தேன்மா கொஞ்ச நேரம் விளையாடலாம்னு. அங்கிருந்து வீட்டுக்கு வர்றப்ப, நம்ம ஏரியா பார்க்குக்கு முன்ன ஒரு பாப்பா மயங்கி விழுந்துச்சு. சைக்கிளை நிறுத்திட்டு அந்த பாப்பாவை பார்த்து தண்ணி எல்லாம் தந்தேன். பேசிட்டு திரும்பினா சைக்கிளை யாரோ திருடிட்டாங்கம்மா.
ரொம்ப நேரம் நாலைந்து தெருவுல போய் தேடினேன்.
அப்பறம் பார்க் பக்கம் இருக்கற சிசிடிவியில ஏதாவது பதிவாகியிருக்குமானு அதை தேடி போனேன். அப்பறம் அந்த சிசிடிவி பதிவை தந்தாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல போய் எப்.ஐ.ஆர் கொடுத்தேன். ஆனா கிடைக்குமானு அப்பவும் சந்தேகமா சொல்லறாங்க. ஆனா ஆளை வரச்சொன்னா பேசி பார்க்கறதா அனுப்பிட்டாங்க. இவ்வளவு நேரம் சைக்கிளை தேடிட்டே இருந்தேன்மா. அதனால தான் போன் எடுக்க முடியலை. உன்கிட்ட பேசினா உடைஞ்சிடுவேன்மா. அப்பா.. அப்பாவோட சைக்கிள்மா" என்றான்.
காஞ்சனாவோ மகனது அழுகையை நிறுத்தி, "சரிய்யா.. சரிய்யா.. அழாதய்யா. புரிது. சைக்கிள் தானயா. கிடைச்சிடும் கிடைச்சிடும். நீ ஏன்யா அதுக்குன்னு போனை எடுக்கலை. அம்மாக்கு பயமா போச்சுல. உனக்கு ஏதாவது ஆகிடுச்சோனு பெத்த வயிறு பதறிடுச்சுயா. எப்பவுமே அம்மா போனை எடுக்காம இருக்காதையா." என்று கூறினார்.
தான் போன் எடுக்காமல் போனதில் அன்னை எந்தளவு பதறியிருப்பாரென புரியவும், "சரிம்மா..." என்றான்.
"என்ன காஞ்சனாக்கா.. பையன் ஏன் அழுவறான். என்னாச்சு." என்று கேட்க, "சைக்கிள் திருட்டு போச்சும்மா." என்றார்.
"அதுக்கா அழுவறான். கல்யாண வயசுல இருந்துட்டு அழுதுட்டு. அட களவாணி ஊர்ல சைக்கிளை ஒத்த கையால தூக்கிட்டு போவாங்க. இதுக்கெல்லாமா அழுவாங்க" என்றார்.
காஞ்சனாவோ "ராசா.. சாரதி.. உள்ளாற வா" என்று அழைத்து செல்ல, சாரதி வீட்டுக்குள் நுழைந்தான்.
காஞ்சனாவோ முதல் வேலையாக, "இங்க பாரு ராசா.. எது நடந்தாலும்... உன் வாழ்க்கையில நீ அம்மா எதிர கலங்கிட்டு நிற்காதய்யா. சும்மா கல்லூ மாதிரி இருக்கணும். நீ அழுதா அசிங்கம்னு சொல்ல மாட்டேன். ஆனா பெத்தவ எதிர பிள்ளைங்க அழுதா, பெத்தவங்க அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா?
எந்த அம்மைக்கு அப்பனுக்கும் புள்ளைங்க ராஜா கணக்கா இருக்கணும். நம்மகிட்ட எது இல்லைன்னாலும் பரவாயில்லை. அம்மைக்கு பிள்ளை ராசா தான். அதனால இந்த ராசா என் முன்னாடி அழவே கூடாது." என்று கூற தலையாட்டினான்.
"சைக்கிள் தானே.. உங்கப்பாவே ஏதாவது சூழ்நிலையை உருவாக்கி உன்னிடம் ஒப்படைக்கற வழியை காமிப்பாரு" என்று கூறவும், சாரதி லேசாக தெளிந்தான். வலியுடன் கூடிய அழுகை குறைந்தது. ஆனால் லேசான தெளிவு பிறந்தது.
அதன் பின் காஞ்சனா கையால் உணவை விழுங்கி படுத்துவிட்டான்.
காஞ்சனாவோ சைக்கிள் எப்பொழுதும் நிறுத்தியிருக்கும் இடத்தை ஏக்கமாய் பார்த்து உறங்க முற்பட்டார்.
அடுத்த நாள் காலை எழுந்த போது சாரதிக்கு அப்படியொன்றும் பொழுது புலர்ந்தது போல இல்லை. மனதில் இறுக்கம் இன்னமும் நெஞ்சில் இறுகியிருந்தது.
பல் தேய்த்து முடிக்க, பக்கத்து அறையில் இருந்த காஞ்சனா டீயை ஆற்றியபடி வந்தார்.
"சாரதி... டீ" என்று நீட்டவும் வாங்கி பருகினான்.
முகத்தில் சிறு மலர்ச்சி கூட இல்லை. காஞ்சனா மகனது சோகத்தை களைய முடியாத வருத்தத்தில் இருந்தார்.
கூழை காய்ச்சியிருக்க அதை சொம்பில் ஊற்றிவிட்டார். மதியத்திற்கு பூண்டு குழம்பை செய்து வைத்திருந்தார் அவிச்ச முட்டை என்று பேக் செய்ய, குளித்துவிட்டு வந்த சாரதி 'கிளம்பறேன் மா" என்று சைக்கிள் சாவியை வைக்கும் இடத்தில் கையை கொண்டு சென்றான்.
சைக்கிள் தான் தொலைந்து விட்டதே என்ற எண்ணம் வந்து, வார் செருப்பை மாட்டி, புறப்பட்டான்.
காஞ்சனா மகன் நடந்து செல்ல, தவிப்பாய் கதவோரம் நின்று பார்த்தார். வேகமாய் நடந்தால் தான் ஏழு மணிக்குள் கையெழுத்து போட்டு வண்டியில் டிக்கெட் கொடுக்க முடியும். நேரம் கழித்து சென்றால் அது வேறு அவஸ்தை. அதனால் நடையிலே ஓட்டமிருந்தது.
இங்கு வேகமாய் வந்தவன், அவசரமாய் டிப்போவில் கையெழுத்து போடவும் வேர்த்து கிடந்தான்.
டிப்போவில் கூட்டமும் கூடியிருக்க, ஆர்வமின்றி படிக்கட்டில் ஏறினான்.
டிக்கெட் கொடுக்க பயணிகள் நீட்டவும், சத்தமின்றி விசிலடித்து டிக்கெட்டை நீட்டினான்.
எப்பவும் 'டிக்கெட் டிக்கெட்' என்றவனது குரலே ஒருவிதமான புத்துணர்சியை முத்துக்கு தருவிக்கும். முத்துவோ கண்ணாடி வழியாக சாரதியை கண்டவன், ஏதோ சரியில்லையே... சரி பிராட்வே போய் கேட்டுப்போம் என்று வண்டியை இயக்கினார்.
ஏற்கனவே தேவி லாவண்யா பேருந்தில் தான் இருந்தனர்.
யார் முகத்தையும் பாராமல் டிக்கெட் தந்துக் கொண்டிருந்தவனிடம், "சை..சைக்கிள் கிடைச்சுதா?" என்ற குரலில் நிமிரிந்தான்.
லாவண்யா தான் மனம் கேளாது கேட்டுவிட்டாள்.
"இ..இல்லைங்க.. போலீஸ் கம்பிளைன் தந்திருக்கேன். பார்க் சிசிடிவில ஒருத்தன் சைக்கிளை தூக்கிட்டு ஓடியிருக்கான். அவன் கிடைச்சா தகவல் சொல்வாங்க" என்று கூறிவிட்டு பஸ்பாஸில் டிக்கும் அனுப்பிவிட்டு அடுத்து முன்னேற, கழுத்தை திருப்பி மறுபுறம் சாரதி இருக்கும் பக்கமாக பார்த்து, "இஷிதாவுக்கு உடனடியா உதவ வந்ததுக்கு சித்தி தேங்க்ஸ் சொல்ல சொன்னாங்க. நானுமே நேத்தே தேங்க்ஸ் சொல்ல முடியாம போச்சு" என்றாள்.
சாரதியோ டிக்கெட் என்று பயணிகள் பலரும் சில்லறையை நீட்டி கேட்டதற்கு காசை வாங்கி டிக்கெட்டை கிழித்து தந்தவன், "பரவாயில்லை" என்று நகர்ந்தான்.
தேவியோ பேருந்து கம்பியை பிடித்து, லாவண்யா பேசியதை கவனித்தவளாக, "என்ன மேடம்.. சாரி தேங்க்ஸ் எல்லாம் சொல்லியாச்சா?" என்று கேட்க லாவண்யா தலையாட்டினாள்.
அதற்குள் இரண்டு பேர் பேருந்தில் இருந்து இறங்கவும், தேவி அமர்ந்துக் கொண்டாள்.
"என்ன சொல்லு... வீட்லயிருந்து சேர்ந்து வர்றப்ப புலம்பி தள்ளிட்ட. இப்ப ஹாப்பி தானே" என்றாள்.
லாவண்யாவோ "பச்... அவரோட சைக்கிள் கிடைக்கலையேடி. இஷிதாவால சைக்கிள் போயிடுச்சு." என்றாள்.
அதற்கு தேவியோ "அட பழைய சைக்கிள்மா. புதுசா இருந்தா கூட பரவாயில்லை." என்று சலித்தாள்.
"எனக்கு பழசா தெரியலை. எண்ணெய் போட்டு நல்லா துடைச்சி புதுசா வச்சிருந்தார்" என்றாள்.
தேவியோ "ஆஹ்ஹ் அது பழைய சைக்கிள். இப்ப அந்த சைக்கிளே மானுபேக்சர் பண்ணலை. அந்த ஆளே மறந்திருப்பான். நீ வேற.. சதா நொய் நொய்னு. முதல்ல டெஸ்டுக்கு படிச்சியா?" என்று கேட்க லாவண்யா படித்ததாக தலையாட்டினாள்.
அதற்குள் சாரதி முன்னே டிக்கெட் எல்லாம் தந்துவிட்டு நடத்துனர் சீட்டில் வந்து அமர்ந்தான். லாவண்யா நின்றுக் கொண்டு வந்ததால் அடிக்கடி சாரதியை பார்த்து வைத்தாள்.
எதையோ இழந்த வேதனை என்பார்களே, அப்படி தான் அவன் முகமிருக்க கண்டாள்.
'சாதாரண சைக்கிளுக்கு ஏன் இப்படி பண்ணறார்.' என்று எண்ணினாள்.
"லாவண்யா.. வழிவிடு.. இங்க உட்காரு" என்று தேவி கூறவும் தான் வழிவிட்டு, அமர்ந்தாள். அப்படி அமர்ந்தாலும் அடிக்கடி கழுத்தை திருப்பி, சாரதியை பார்த்தாள்.
அண்ணா நகர் வந்ததும் அவள் இறங்க, சாரதியோ யார் ஏறினால் எனக்கென்ன? யார் இறங்கினால் எனக்கென்ன? என்று தான் வேலையில் இருந்தான்.
தன்னை ஒருத்தி பாவமாக பார்ப்பதை அவன் அறியவில்லை.
அன்றைய பயணம் முடிந்து லாவண்யா இறங்கியப்பின்னும் கல்லூரி சென்றப்பின்னரும் கண்டெக்டர் நினைவுடனே இருந்தாள். அவன் பெயரையும் அவள் இன்னமும் அறியாதவள் தானே?
பிராட்வே சென்று டிப்போவில் வண்டி நின்றதும் முத்து வந்து தோளில் கைவைத்து முகம் வாடி இருப்பதை கேட்டார். சைக்கிள் களவு போன கதையை கூறினான்.
'என்ன சாரதி.. பைக் ஏதாவது வாங்கிக்கோனு சொல்லியும், அப்பா சைக்கிள்னா.. அப்பா நினைவா வச்சியிருக்கேன்னு சொல்லிட்டு இருந்த. இப்ப அது களவு போச்சா? ஆமா... யார் களவான்டது? போலீஸ் என்ன சொல்லிருக்கு." என்று கேட்க விஷயத்தை கூறினான்.
''இதுவேறையா... இந்த போலீஸுங்க பவர் இருக்க தட்டி வாங்கி தருவானுங்கனு பார்த்தா, அவனுங்களே களவானி கூட்டத்துல தான் கெஞ்சிட்டு இருக்கானுங்க. என்னவோ.. சைக்கிள் திரும்ப கிடைச்சா பார்ப்போம். எனக்கென்னவோ நீ ஏதாவது பைக் வாங்கிக்கோப்பா. உங்கப்பா இருக்கறப்பவே சொல்வான். பையன் வேற பைக் கேட்டுட்டு இருக்கான் முத்து. வாங்கி தரணும்.. ஏதாவது கடன்கிடன் தர்றவங்களை தெரியுமானு கேட்பான். கடன் வாங்க ஆளெள்ளாம் கூட பார்த்து வச்சான். என்ன பண்ணறது... தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டான்.'' என்று கூடுதலாக தான் சாரதியின் மனதில் தந்தை நினைவை பிழிந்துவிட்டு சென்றார் முத்து.
பிராட்வே டூ எஸ்டேட், மீண்டும் எஸ்டேட் டூ பிராட்வே சென்ற நேரம், சாரதிக்கு ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
"ஏம்பா... அந்த சைக்கிள் காணோம்னு சொன்ன பைய தானே?" என்று கேட்க, ஆ..ஆமா சார்." என்றான்.
"அந்த சைக்கிளை களவாடியவனை சார் பார்க்க ஏற்பாடு பண்ணிட்டார். நீ வந்து நீயாச்சு அந்த திருட்டு பயலாச்சு. அவ்ளோ தான் பேவர் பண்ண முடியும். நீயே சைக்கிளை பத்தி கேட்டுக்கோ. இப்ப வர்றியா?" என்று கேட்டார்.
''சர்ர் சார்... நான் கன்டெக்டரா டூயூட்டில இருக்கேன் சார். ஈவினிங்கா ஷிப்ட் முடிஞ்சு வரட்டுமா." என்று கேட்க, "சைக்கிள் கிடைக்குமோ கிடைக்காதோ.. அந்த ஆளிடம் நீ வர்றதை சொல்லிடறேன். வா" என்று அணைத்தார்.
சாரதிக்கு இதுவே ஒரு பெரிய நிம்மதியாக இருந்தது.
எப்படியாவது சைக்கிளைத் திரும்ப வாங்கிவிட வேண்டும் என்ற நம்பிக்கை அவனுக்குள் மீண்டும் சிறிதாக முளைத்தது.
முத்து அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, மாலை டூட்டி முடிந்ததும் நேராக அந்த ஆளைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
முத்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்ததால், அவனிடம் சொல்லுவதற்காக சாரதி எழுந்து முன்னால் சென்றான்.
அவனது முகத்தில் பல மணி நேரத்திற்குப் பிறகு ஒரு சிறிய நம்பிக்கை தெரிந்தது.
ஆனால்... அந்த நம்பிக்கை உண்மையிலேயே அவனுடைய அப்பாவின் சைக்கிளை அவனிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்குமா?
அல்லது... அவனே எதிர்பாரத அவனுடைய வாழ்க்கையில் வேறொரு புதுவிதமான வழியை காட்டப் போகிறதா? என்று இனிதான் அறிவான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 8)
அட ராமா ! பெரிய ரவுடிங்கிறான், போயும், போயும் ஒரு பழைய சைக்கிளையாத் திருடணும்...?
திருடுவனை தெரிஞ்சும் இந்த போலீஸ் கை கட்டி, வாய் பொத்தி பார்க்குதே... இந்த கர்மத்தை எங்கேன்னுத்தான் போய் சொல்றது...? சரியான கூட்டு களவாணிங்க.
ஈவீனிங் போய் பார்த்தால் சைக்கிள் கிடைக்குமா..இல்ல போனது போனது தானா ?
அப்படியென்ன எதிர்பாராத புதுவிதமான வழியை சாரதி வாழ்க்கையில காட்டப் போகுதுன்னு தெரியலையே..?
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
18 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-9
2 days ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 329 Topics
- 1,582 Posts
- 1 Online
- 420 Members
