நயனமே நான் தானடி-7
அத்தியாயம்-7
அன்று தேவாவின் வற்புறுத்தலில் ராஜ்குமார் நேத்ராவுக்கு போனில் அழைத்திட, "சார்... நாங்க எங்க பிரெண்ட்ஸோட பெசண்ட்நகர் பீச் போறோம். உங்களிடம் வந்து பேசட்டுமா?" என்று கேட்க, ராஜ்குமார் சரியென்று கூறி துண்டித்துவிட்டான்.
ஏனோ நேத்ரா எப்பொழுதும் பேசியதில் மனம் குதூகலமடையும். இன்று தன்னை கத்தரிப்பதாக எண்ணிவிட்டான்.
தேவாவிடம் "நானா போன் போட்டேன். ஆனா நேத்ரா அவ பிரெண்ட்ஸோட பெசண்ட்நகர் பீச்சுக்கு போறாளாம். என்னை அப்பறமா பேச சொல்லி வச்சிட்டா.
நானா போன் போட்டு இப்படி ஏதாவது அவாய்ட் பண்ணுவாளோனு பயந்தேன் நடந்திடுச்சு. நான் அவளை அடிக்கடி பேசி தொந்தரவு செய்து போரடிச்சிட்டேன் தேவா. தேவா... உனக்கும் என்னோட பழக போரடிக்கா? தொந்தரவா இருக்கா " என்று மனதாங்கலாய் கூறி ராஜ்குமார் துவண்டு கேட்டான்.
"அய்யோ சார் குழந்தையை விட மோசமா இருக்கிங்க. என்னோட வேலையே உங்களை பத்திரமா பார்த்துக்கறது தான். அதோட.. உங்களோட நான் ஒரு தம்பியா, பிரெண்டா மனசார பழகறேன் சார். நீங்க எந்த தொந்தரவும் செய்யலை. நேத்ரா கூட தொந்தரவா நினைச்சிருக்க மாட்டாங்க.
பெசண்ட்நகர் தானே சார். இங்க இருக்கு. வாங்க போன்ல பேசறதுக்கு நேர்ல பார்த்துடுவோம்." என்று அழைக்க, ராஜ்குமாரும் ஆனந்தமாய் புறப்பட்டான்.
"தேவா... நேத்ரா எங்க இருப்பானு தெரியாம போனா என்ன செய்யறது?" என்று கேட்க, "சார்.. அங்க இருக்கற பிளேஸ்ல நாமளா தேடுவோம். இல்லையா இருக்கவே இருக்கு.. உங்ககிட்ட நேத்ரா நம்பரும், என்கிட்ட சங்கவி சிஸ்டர் நம்பரும் இருக்க, யாரிடமாவது லொக்கேஷன் அனுப்பிட சொல்லிடலாம்." என்று நிதானிக்க வைத்தான்.
ராஜ்குமாருக்கு சில நேரம் சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் உணர்வுகளின் ஆட்சியில் மறந்தான்.
அது இப்படி திடீரென ராஜ்குமாரின் பார்வை போனதில், ஏற்பட்ட மாற்றம் என்று தேவா புரிந்துக் கொண்டான்.
அவன் வேண்டுமாயின் வயதில் சின்னவனாக இருக்கலாம். ஆனால் மனம் வாடியவர்களுக்கு அறிவுரை வழங்கி பாதுகாத்து பேணுவதில் முதிர்ச்சி அடைந்தவனே.
பெசண்ட் நகரில் காரை பார்க் செய்துவிட்டு தேவா ராஜ்குமாரை அழைத்து நடந்தான்.
சார்... ஒரு நிமிஷம் இதேயிடத்துல உட்காருங்க." என்று கூறவும் ராஜ்குமார் சம்மதமாய் தலையசைத்தான்.
அப்படியொன்றும் அலைய வைக்காமல் பத்து நிமிடத்தில் நேத்ராவின் நண்பர்களை கண்டறிந்துவிட்டான். சங்கவியிடம் லொக்கேஷன் லைவ் ஆன் செய்து அனுப்ப சொன்னான். சங்கவியிடம் ஏற்கனவே நானும் ராஜ்குமார் சாரும் பீச்சில உங்களோட வந்து கலந்துக்கலாம்னு இருக்கோம். உங்களுக்கு பிரச்சனை இல்லையே? என்று கேட்டறிந்து கொண்டான்.
சங்கவியிடம் "நேத்ராவிடம் சொல்லாதிங்க. சர்பிரைஸா இருக்கட்டும்' என்று கூறியிருந்தான்.
நேத்ரா சங்கவியுடனும், மேலும் ஒரு ஆண் நண்பன், தோழியுடன் வந்திருப்பாள் போல.
உடனடியாக ராஜ்குமாரை அழைத்து வர இங்கு வந்தான்.
"சார்.. நேத்ராவை பார்த்துட்டேன்.
வாங்க கூட்டிட்டு போறேன்" என்று கூற, ஆசையாக எழுந்து நடந்தான்.
இந்த மண்ணில் காலை புதைத்து நடந்து வருவதில் அத்தனை சுகம். மண்ணில் நடப்பது கூட ஏதோ விண்ணில் நடப்பது போன்ற உணர்வு.
"சார்... ஒரு நிமிஷம்" என்று கையை விடுவித்தவன், அங்கே சங்கவி, நேத்ரா, மற்றொரு பெண், ஒரு ஆண் என்று கைகளை பிடித்து நடந்திட, சங்கவி நேத்ரா கைகளை பிரித்து நேத்ரா உள்ளங்கை ராஜ்குமாரிடம் தந்து, தேவா ராஜ்குமார் கையையும், சங்கவி கையையும் பிடித்து கொண்டான்.
சங்கவியின் காதில், "ஹாய் மா. நான் தான் தேவா" என்று அறிமுகத்தை கூறிட அமைதியானாள்.
நேத்ரா கரத்தில் ராஜ்குமார் கரம் பதிந்திருக்க, இது சங்கவி கைகள் கிடையாது. யாரோ என் கையையும் சங்கவி கைகளையும் எடுத்துட்டு இப்ப யாரோ பிடிச்சிருக்காங்க? யாரா இருப்பாங்க?" என்று கைகளை உள்ளத்தால் ஆராய்ந்தாள்.
"ஹாய்" என்று செவியருகே குரல் வேறு அவளது கவனத்தை ஈர்த்தது. "ராஜ்குமார் சார்?" என்று நேத்ரா துள்ளி குதிக்காத குறை.
"எப்படிங்க?" என்று ஆச்சரியப்பட்டு போனான்.
"நான் வர்றதை உங்களிடம் சொல்லியிருந்தேன். நீங்க ஏதோ பேசறதா இருந்திங்க. நான் அந்த ஆர்வத்தை உடைச்சிட்டேன். உங்களுக்கு என்னை பார்த்து பேச வந்துட்டிங்க ரைட்டா?" என்று கேட்க,"கரெக்ட் தான்" என்றவன் அவள் கைகளை ஸ்பரிசித்து உணர துவங்கினான்.
மேலோட்டமாய் பார்த்திருக்க, ராஜ்குமார் கைகள் சாதாரணமாய் நேத்ரா கைகளை தழுவியிருக்க, அதைப் பிடித்திருந்தவன் ஏதோதோ மாயவித்தையை தேடினான்.
இதில் கால்கள் சில்லிட, கடற்கரை அலையை தெட்டுவிட்டதாக உணர்ந்தாள்.
கூடுதலாக ராஜ்குமாரின் கையை இறுக, அவன் உதட்டில் முறுவல்.
"இதுக்கு முன்ன அழகான கடற்கரையை எல்லாம் பார்த்திருக்கேன். ஏன் தனியா பீச் ஹவுஸ்ல கூட டைம் ஸ்பென் பண்ணிருக்கேன்.
பட் திஸ் எக்ஸ்பீரியன்ஸ் இஸ் அமைசிங்" என்றான்.
அதை ஆமோதிப்பதாக நேத்ரா மௌனம்.
தேவாவோ ராஜ்குமாரின் முகத்தையும் நேத்ரா முகத்தையும் தான் கவனித்தான்.
சங்கவியுடன் பேசியபடி, "என்ன விஷேஷம்" என்று கேட்டு முடிக்க, எங்க ரேகா-சுந்தர் அண்ணாவும் மேரேஜ் பண்ணிக்க போறாங்க. அதுக்கு தான் இந்த ட்ரீட்." என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
ரேகா சுந்தர் அவர்களுமே பார்வையற்றோராக இருப்பதாக தேவா கூற, ராஜ்குமாருக்கு ஆச்சரியம் கூடியது.
ஏதோதோ பேச, நேரம் ஓடியது.
சுந்தர் ரேகா இருவரின் திருமணத்திற்கு ராஜ்குமார் வாழ்த்து கூறி அவர்கள் நட்பில் கரம் கோர்த்தான். ரேகா சுந்தர் சற்று தனிமையாக பேச, தேவாவோ சங்கவியை அழைத்து, 'ராஜ்குமார் சார் நேத்ராவோட பேச வந்தார்' என்று கூறியதால் அவளும் விலகி கொண்டாள். சங்கவி தேவாவிடம் தன் தோழி நேத்ராவை பற்றி தான் புகழ்ந்து தள்ளினாள்.
நேத்ராவிடம் சோனாலியை பார்த்துவிட்டு வந்த கதையை விவரித்தான் ராஜ்குமார்.
"உங்களுக்கு திரும்ப வலிச்சிருக்குமே. எப்படி ரெக்கவர் ஆனிங்க?" என்று நேத்ரா துவண்டு கேட்டாள்.
"இல்லைங்க... இந்த முறை ரொம்ப நிம்மதியா இருந்தது. யார் யாரோ சொன்னப்ப என் சோனாலியோட கேரக்டரை நம்ப மறுத்தேன். நேர்ல அவ அங்க தான் இருந்தானு நான் உணர்ந்தப்ப, அவ பேசாம நடிச்சா பாருங்க. அப்பவே ரிலீஃப் ஆகிட்டேன்.
ஒரு விபத்து உண்மை காதல் இதில்லைனு புரியவச்சிடுச்சு. என்ன.. இப்பவும் சில கஷ்டம் இருக்கு. ஆனா பழகிட்டு வர்றேன்." என்று கூறவும், நேத்ராவோ அவன் கையில் இதமாக தீண்டல் புரிந்து, ஆறுதலுரைத்தாள்.
சிற்சில உணர்வுகள் வெளியானாலும், இந்த நேசம் இதமளிக்கும். நேத்ராவால் பார்த்து பேச முடியாது. அப்படியே பேசினாலும் தன்னால் அவளை பார்த்து புரிய முடியாது. உள்ளத்தின் உணர்வை தட்டிக்கொடுப்பதை, அவள் தீண்டலால் தான் தன்னிடம் நானும் உன் இன்ப துன்பத்தில் இருப்பதாக கூறுகின்றாள்.
"சாரிங்க.. உங்க பிரைவேஸில நான் நந்தி மாதிரி வந்துட்டேன். ஆக்சுவலி ஒரு வாரத்துக்கு முன்னவே இதை சொல்ல நினைச்சேன். நடுவுல சில வேலைகள். ஆனா எந்த வேலை என்றாலும் வானவில் எஃப்.எஃம்ல உன் புரோகிராம் கேட்பேன். அதை மிஸ் பண்ணவே மாட்டேன். ஆக்சுவலி எனக்கு அந்த டைம் எனர்ஜிட்டிக்கா இருக்கும்.
அடுத்த வாரம் தேவாவை அழைச்சிட்டு கொடைக்கானல் போகணும்.
வரவு செலவை பார்த்துட்டு வரணும். இந்த முறை அங்க இருக்கலாம்னு ஐடியா" என்றான்.
"ஓ.. சூப்பர் சார். என்ஜாய் பண்ணிட்டு வாங்க" என்றாள் நேத்ரா.
"நான்... நான் புறப்படறேன் நேத்ரா." என்று கைகளை பிடித்து அழுத்த, "சரிங்க சார்" என்றாள் மலர்ந்த புன்னகையுடன்.
ராஜ்குமார் தேவாவை அழைத்து வீட்டுக்கு செல்ல கூறினான். அதோடு சங்கவியிடம், ரேகா சுந்தர் இவர்களிடமும் விடைப்பெற்றான்.
வீட்டுக்கு வரும் வழியில் தேவா, ராஜ்குமாரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று மனதில் உருப்போட்டபடி வந்தான்.
ராஜ்குமாரோ "தேவா... நேத்ரா பத்தி என்ன நினைக்கிற?" என்றான்.
"சார்?" என்று தேவா காரோட்டியபடி பார்த்தான்.
"நான் ஜென்ரலா தெரிந்துக்க கேட்கறேன் தேவா." என்றான்.
"நல்ல பொண்ணு சார். நல்ல குரல்வளம். கண்ணில்லாத குறை இருந்தாலும் அதோட சிரிப்புல எப்பவும் குறைய காண முடியாத அளவுக்கு தெய்வீக சிரிப்பு. ஒருவிதமான அமைதி. கூட இருக்கற பிரெண்ட்ஸ் கூட நல்லா பழகறாங்க. அந்த சங்கவி நேத்ராவை அவ்ளோ புகழுச்சு. எனக்கு எப்ப கஷ்டம் வந்தாலும் அவளிடம் சொன்னா, உடனே உதவிக்கு வந்துடுவா. இப்படி தான் போன முறையும் ஒரு பொண்ணுக்கு பீஸ் கட்ட முடியலை. யார் யாரிடமோ உதவி கேட்டு பீஸ் கட்டினதா அந்த பொண்ணு சொல்லுச்சு சார். உதவணும் என்ற மனசு இருக்கு. முக்கியமா அந்த பொண்ணு தன் குறையை குறையா நினைக்கலை சார்." என்று பேச, ராஜ்குமாருக்கு முறுவல் கூடியது.
எல்லாம் கேட்ட ராஜ்குமாரோ "தேவா... கொடைக்கானல் போக எல்லா ஏற்பாடும் எடுத்து வச்சிக்கோ. உனக்கு குளிருக்கு ஸ்வெட்டர் டிரஸ் வேண்டுமென்றாலும் வாங்கிக்கோ. அதுக்கு தேவையான பணத்தை வாங்கிக்கோ" என்றான்.
"சார்... கொடைக்கானல் எத்தனை நாளைக்கு சார்?" என்று கேட்க, "ஒரு மாசம் அங்க தான் இருக்க போறேன் தேவா." என்று கூறவும் தேவா சரியென்று தலையாட்டினான்.
மடமடவென கொடைக்கானல் செல்வதற்கு உடைகளை எடுத்து வைத்தான் தேவா.
தேவாவிற்கு சென்னை தாண்டி வெளியூர் சென்ற அனுபவம் மிகக்குறைவு. ராஜ்குமாரோடு செல்வதில் ஆர்வமும் ஆவலும் இருந்தது.
ராஜ்குமாரும் இப்படி ஒரு மாதம் அமைதியாக இயற்கையை பார்வையற்று ரசிக்க போவது முதல் முறை. எத்தனை முறை கொடைக்கானலிற்கு சென்றாலும் இரண்டு நாளில் திரும்புவது ராஜ்குமார் வழக்கம்.
அந்த நாளில் எல்லாம் அழகை ரசிக்காத தான், இன்று பார்வை போனதும் ஒருமாதம் இருந்துவிட்டு வரப்போவது தான் என்று மனதின் வினோதமான எண்ணத்தில் பூரித்தான்.
இங்கு ராஜ்குமாரின் அத்தை சந்திராவோ கணவர் சசிகுமாரை தாளிக்காத குறை.
"அவன் ஏன் இங்க வர்றான். ஒரு மாசம் இருப்பேன் மாமா ரூம் ஏற்பாடு பண்ணுங்கன்னு உரிமையா சொல்லறான். எதுக்கு ஒருமாசம்? அவன் இங்க வர்றப்ப இரண்டு நாள் கூட முழுசா தங்கமாட்டான். இப்ப குருடனா மாறியதும் என்னலாம் உரிமை" என்று மனசாட்சியில்லாத வார்த்தையை சாடினார்.
சசிகுமாரோ, "இந்த ஹோட்டல் அவனோடது. அந்த உரிமைடி. நான் இங்க ஜஸ்ட் நிர்வாகி. அவன் வந்து அவனோட இடத்துல தங்கறான். இதுல என்னடி தப்பு? பாவம் அவனுக்கே பார்வை போச்சு. நான் வேற அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். அப்படி இப்படினு இத்தனை மாசமா பார்வையில்லாம தனியா நடமாடினான்" என்றார்.
சந்திராவோ, "ஆஹ் பாவம் பார்க்கறிங்களா? நல்லா பார்த்திங்க. அவன் வர்ற நோக்கமே நம்ம சஞ்சனாவை கல்யாணம் செய்யற நோக்கத்தில தான் இருப்பான்.
முன்ன கேட்டிருந்தா சரி.
இப்ப கண்ணு தெரியாதவனுக்கு என் மகளை கட்டி கொடுக்க மாட்டேன். பாவம் என் அக்கா பையன், அதுயிதுனு பேசி அவனுக்கு எந்த வாக்கும் தந்து தொலைக்காதிங்க.
முடிஞ்சா நம்ம சஞ்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. கல்யாணம் பேசியாச்சுனு பொய் சொல்லி வையுங்க" என்று திட்டத்தை தீட்டி கொடுத்தார்.
'இதே வாய் தான் உங்க அக்கா பையனை எப்படியாவது சஞ்சனாவுக்கு பேசி முடிங்க. சொத்துக்கு சொத்தும் ஆச்சு. உறவுக்கு உறவும் ஆச்சு' என்று காரியமாக பேசியது. இன்று சந்திராவே ராஜ்குமாரை மாப்பிள்ளையாக வேண்டாமென்று கூறுகின்றாள்.
உண்மையில் சசிகுமாருக்கும் மகளை காலம் முழுக்க ஒரு நர்ஸாக அவனை பார்த்துக்கொண்டு வீட்டில் அடைந்திட மனமில்லை. அவளுக்கு நல்ல வரனாக பார்க்க வேண்டும்' என்று எண்ணினார்.
நல்ல வரன்? ராஜ்குமாரை வேண்டாமென்று கூற ஒரு குறை கிடைத்ததில் இவர்கள் எல்லாம் மறுக்க காரணத்தை பாக்கெட்டில் தேடிக் கொண்டு திரிந்தனர்.
-தொடரும்
பிரவீணா தங்கராஜ்
நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 7)
பரவாயில்லை, ராஜ்குமார் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வரான். நேத்ராவோட நட்பு கிடைச்சது மிகப்பெரிய வரம் தான். அதே மாதிரி தேவா மாதிரி ஒரு கேர் டேக்கர் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்.
அது சரி, இப்ப எதுக்கு ஊட்டிக்குப் போறான் ? ஒருவேளை, சசிகுமாரும் ஏதாவது தில்லுமுல்லு பண்ணி வைச்சிருக்காரோ ?
😴😴😴
CRVS (or) CRVS2797
-
நயனமே நான் தானடி-6
2 days ago
-
நயமே நான் தானடி-5
3 days ago
-
நயனமே நான் தானடி-4
4 days ago
-
நயனமே நான் தானடி-3
5 days ago
-
நயனமே நான் தானடி-2
6 days ago
- 26 Forums
- 382 Topics
- 1,935 Posts
- 0 Online
- 443 Members
