Forum

மௌஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-18

3 Posts
3 Users
0 Reactions
15 Views
(@praveena-thangaraj)
Posts: 315
Member Admin
Topic starter
 
[#410]

அத்தியாயம்-18

சலீம் பிரணவை அழைத்துக் கொண்டு கிச்சனின் ஒரு பக்கமாகச் சென்றார்.

அங்கே பெரிய பெரிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேசைகள் வரிசையாக இருந்தன. ஒவ்வொரு மேசையிலும் ஒவ்வொரு வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து, தேவையான அளவுகளில் வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
  
   இன்னொரு பக்கம் மீன்களை தயார் செய்துக் கொண்டிருந்தார்கள்.
    மற்றொரு பகுதியில் பெரிய பாத்திரங்களில் இறைச்சி ஊறவைக்கப்பட்டிருந்தது.

சமையல் மேடைகளில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் வெவ்வேறு நிறங்களில் மசாலாக்கள், சாஸ்கள், மூலிகைகள் எனப் பல பொருட்கள் இருந்தன.

அடுப்புகளின் வெப்பம் ஒருபுறம் தகிக்க, சமைக்கப்படும் உணவுகளின் வாசனை மறுபுறம் மூக்கைத் துளைத்தது.

அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான பொறுப்புகள் இருந்தன. யாரும் தேவையில்லாமல் நின்றுக் கொண்டிருக்கவில்லை. ஒரு உணவு தயாராகும் நேரத்திற்குள் அடுத்த உணவுக்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கிச்சன் என்பது வெறும் சமைக்கும் இடம் மட்டுமல்ல. ஒவ்வொரு பொருளும் சரியான இடத்தில் இருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

சைவம், அசைவம் ஆகியவற்றுக்கான பாத்திரங்களும் உபகரணங்களும் தட்டுகளுமே தனித்தனியாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
சுத்தத்தில் சிறு குறைபாடுகூட இருக்கக்கூடாது. இதில் அசைவ மணமும் எங்கும் இல்லாத அளவுக்கு சுத்தமாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அத்தனை பரபரப்புக்கு நடுவிலும் சலீம் நிதானமாகவே செயல்பட்டார். பிரணவிற்கு சுற்றிலும் இறைச்சியாக பார்த்ததும் மயக்கம் வராத குறை. அதிலும் ரத்தமும் சதையுமாக சுத்தம் செய்யும் மெஷின் பக்கம் பார்வை திருப்பியவனுக்கு லேசாக குமட்டல் கூட வந்தது. தன்னை தானே சமாளித்தபடி வந்தான்.

"தம்பி, முதல்ல இந்தப் பக்கத்துல இருந்து ஆரம்பிப்போம்," என்று ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேசையைக் காட்டினார்.

அங்கே சமையலுக்குத் தேவையான வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா போன்ற பொருட்கள் தனித்தனி கூடைகளில் வைக்கப்பட்டிருந்தன.

"இந்த வெங்காயம், பூண்டு, இஞ்சி எல்லாத்தையும் உரிச்சு, தேவையான அளவுக்கு நறுக்கி வைக்கணும். கொத்தமல்லி, புதினாவை நல்லா அலசி, தண்ணீர் வடிஞ்சதும் தனித்தனியா வச்சிடு. இதெல்லாம் முடிச்சதும் இங்கே இருக்கிற பாத்திரங்களைச் சுத்தம் பண்ணி, அந்தந்த இடத்துல அடுக்கி வைக்கணும்." பிரணவ் அந்தப் பொருட்களைப் பார்த்தான்.

குறைந்தபட்சம் அவனுக்கு இறைச்சியைத் தொட வேண்டியிருக்கவில்லை. காய்கறிகளையும் பாத்திரங்களையும் கையாள்வதில் அவனுக்குப் பிரச்சினை இல்லை.

"அவ்வளவு தானா பாய்?"  என்று சற்றே நிம்மதியுடன் கேட்டான்.

"இப்போதைக்கு அவ்வளவுதான். ஆனா, ஒரு விஷயம். இந்தக் கிச்சன்ல சுத்தம் ரொம்ப முக்கியம். வேலை முடிஞ்சதும் கழிவுகளை அதற்கான தொட்டியில போடணும். காய்கறிகளுக்குப் பயன்படுத்துற கத்தி, பலகையை இறைச்சிக்குப் பயன்படுத்துற உபகரணங்களோட சேர்த்து வைக்கக்கூடாது. எதையும் பயன்படுத்தின பிறகு அதற்கான இடத்துல வைக்கணும். புரியுதா? கொஞ்ச நாளில் நீயும் இறைச்சி வெட்டி சமைக்க நான் சொல்லித் தர்றேன். நீ புதுசு என்பதால இந்த சலுகை. ஆனா சமைக்கறவங்க யாராவது ஏதாவது உதவி கேட்டா மறுக்காம செய்" என்றார்.

"புரியுது பாய்."

''சரி. மெதுவா ஆரம்பி. ஏதாவது சந்தேகம்னா கேளு."

சலீம் அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

பிரணவ் கைகளை நன்றாகக் கழுவிவிட்டு, கையுறைகளை அணிந்துகொண்டு வேலையை ஆரம்பித்தான்.

முதலில் வெங்காயத்தை உரித்தான். அதன் காரம் கண்களைக் கசியச் செய்தது. இருந்தாலும், அது அவனுக்குப் பழக்கமான வேலை என்பதால் வேகமாகவே செய்தான். அடுத்ததாகப் பூண்டை உரித்தான். இஞ்சியைச் சுத்தம் செய்து நறுக்கினான். கொத்தமல்லியையும் புதினாவையும் அலசி, தண்ணீர் வடிவதற்காகத் தனித்தனியாக வைத்தான்.

சின்னச் சின்ன வேலைகள் தான். ஆனால், ஒரு வேலையை முடித்ததும் அடுத்த வேலை காத்திருந்தது.

அவன் கைகள் வேலையைச் செய்துக் கொண்டிருந்தாலும், மனம் மட்டும் அந்த இடத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

கிச்சனின் மற்றொரு பகுதியில் இறைச்சி வெட்டப்படும் சத்தம் கேட்டபோதெல்லாம் அவனுடைய உடல் தன்னிச்சையாக இறுகியது. காற்றில் மிதந்துவந்த அசைவ உணவின் வாசனை மூக்கைத் துளைத்தபோதெல்லாம், மூச்சை அடக்கிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

என்னால முடியுமா? அந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் மனதுக்குள் எழுந்தது.

சைவ உணவுப் பிரிவில் வேலை செய்தபோது, ஒவ்வொரு நாளும் அவன் நிம்மதியாக இருந்தான். மணத்தை சுவாசித்து ருசியை சொல்வான். இங்கேயோ ஒவ்வொரு நிமிடத்தையும் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. குமட்டலையும் அடக்க வேண்டிய சூழல்.

அம்மாவின் முகம் நினைவுக்கு வந்ததும், கையில் இருந்த கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

அம்மாவுக்காகத் தானே இதையெல்லாம் செய்ய வந்திருக்கிறேன். இன்னும் சில நாள்கள்... கொஞ்சம் பொறுத்துக் கொள்ள முடியாதா?

ஆனால், அடுத்த கணமே தியானா முகம் அவனுடைய நினைவில் தோன்றியது.

தியானா அவளுடைய கண்கள், பேசும்போது உதட்டோரத்தில் தோன்றும் மெல்லிய புன்னகை, தன்னிடம் பேசாமல் விலகிச் சென்ற அந்தக் கடைசி நிமிடம் என எல்லாமே நினைவுக்கு வந்தன.

அவளும் தான் இந்த மாதிரி அசைவ கிச்சனில் உன்னால் இயல்பை தொலைத்து நிற்க முடியாது. என்றாள். இப்போது அவன் இந்த நிலைக்கு வந்திருக்க, அவளது பழக்கம் ஏற்பது முடியுமென்று தோன்றியது.

அந்தக் கேள்வி அவனுக்குள்ளேயே ஒரு கணம் எழுந்து மறைந்தது.

தியானாவைக் காதலித்ததற்காக அவன் வருந்தவில்லை. அவளைப் பொறுத்தவரை, அவனுடைய மனதில் இன்னமும் எந்தக் கோபமும் இல்லை. அவள் சொன்ன காரணங்கள் அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், அவளுடைய மதமும் தன்னுடைய நம்பிக்கைகளும் இடையில் சுவராக நிற்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் அவனால் முடியவில்லை.

அவளுடைய மனதில் தனக்கான இடம் இருந்தும், அந்த இடத்தில் தன்னால் வாழ முடியாதா? அவன் கையில் இருந்த வெங்காயத்தை மேசையில் வைத்தான்.

தியானா... உன்னைக் காதலித்தது என் தவறா? கடவுள் அதற்கான சோதனைகளாக என் முன் இக்கட்டை கூட்டுகின்றாரா? அவனுக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.

அவளிடம் தன்னுடைய காதலைச் சொல்லியிருக்கா விட்டால், ஒருவேளை இப்போது இத்தனை வலியிருக்காது. ஏனோ காதல் வலியும் அவனை விடாமல் துரத்துகின்றது. அவளுடன் பேச ஆசையாக இருந்தது. மடியில் புதைத்து அழ தோன்றியது.
ஆனால், அவளைச் சந்தித்திருக்காவிட்டால், அவளுடன் பேசியிருக்காவிட்டால், அவளுடைய எழுத்துகளைப் படித்திருக்காவிட்டால், அவனுடைய வாழ்க்கையில் இத்தனை அழகான உணர்வு ஒன்று வந்திருக்குமா?

இல்லை

அவளை நினைத்தபடியே நின்றிருந்தவனுக்குத் திடீரென்று சலீமின் குரல் கேட்டது.

"தம்பி, வெங்காயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா?" பிரணவ் திடுக்கிட்டுத் திரும்பினான்.

"இன்னும் கொஞ்சம் இருக்கு, பாய்."

"சரி, முடிச்சிட்டு இந்தப் பாத்திரங்களை அந்த ரேக்குல அடுக்கி வை. மதியத்துக்கு ஆர்டர்கள் அதிகமா வரும். அதுக்குள்ள எல்லாத்தையும் தயார் பண்ணிடணும்."

"சரிங்க பாய்." மீண்டும் வேலையில் இறங்கினான்.

அந்தக் கிச்சனில் மாதவனை விட சலீம் இன்னமும் நன்றாக பழகுவதாக தோன்றியது.
செஃப் என்று கூறாமல் பாய் என்று கூப்பிடு, என்று கூறியது மட்டுமில்லாமல் தோளில் கைபோட்டு பேசியது அவனுக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமா பழகிடலாம். தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

ஆனால், அடுத்த கணமே அந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியது அவனுடைய மனம். அந்த நேரம் பெரிய ஒட்டகத்தின் இறைச்சியை இருவர் பிளேட்டில் வைத்து எடுத்து செல்ல வாசனையையும் தோற்றத்தையும் சகித்துக் கொள்ளயியலாது வாஷ்பேஷன் பக்கம் ஓடினான்.

வாசனையைக்கூட என்னால சகிக்க முடியலையே! அப்படியிருக்க, வரப்போகும் நாள் முழுக்க இங்கே எப்படி வேலை செய்யப் போறேன்? ஒவ்வொரு முறையும் குமட்டிக்கிட்டே இருந்தா என்ன செய்வது?

அவன் கண்களை மூடி ஒரு நொடி நின்றான்.

அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. இனி அவளுடைய உடல்நிலை சீராக வேண்டும். அதற்காகத் தானே இத்தனை பெரிய முடிவை எடுத்திருக்கிறான்?

அப்படியிருக்க, இப்போது மனம் தளர்ந்தால் எப்படி?  என்ன ஆனாலும் முயற்சி செய்து பார்க்கணும்.' என்று எண்ணியிருக்கும் நேரத்தில் சலீம் வந்தார்.
  "பழக்கமில்லாத ஒரு இடத்துக்கு வந்திருக்க உடனே எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமா பழக முயற்சி செய்யலாம்." என்று கூறவும் தலையாட்டினான்.

பிரணவ் மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, சலீம் சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அவனைக் கடந்து சென்றார். அப்போது காற்றில் பரவிய இறைச்சியின் வாசனை மீண்டும் பிரணவின் வயிற்றைப் புரட்டியது.

அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்தான். இம்முறை தியானாவின் முகம் மறுபடியும் நினைவில் வந்தது.

நீ மட்டும் என் காதலை ஏற்றுக்கொண்டிருந்தால், ஒருவேளை இப்போது இப்படி ஒரு வேலையைச் செய்ய வேண்டிய அவசியம் வந்திருக்காதோ?

அந்த எண்ணம் தோன்றியதுமே தன்னையே கடிந்துக் கொண்டான்.

இது என்ன முட்டாள்தனம்! அம்மாவுக்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். இதற்கும் தியானாவுக்கும் என்ன சம்பந்தம்?

ஆனால், அவன் மனதுக்குத் தெரிந்திருந்தது.

தியானாவை மறக்க முடியாமல் தவிப்பதும், அவளுக்காகத் தன்னுடைய வாழ்க்கையில் எதையாவது மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதும், அவளுடைய பிரிவால் மனம் உடைந்திருப்பதும் இந்த முடிவை இன்னும் கடினமாக்கியிருந்தன.

அவளை நினைத்தாலே வலித்தது. அவளை நினைக்காமல் இருக்க முயன்றாலும், அவளே நினைவுக்கு வந்தாள்.

இப்போது அவன் நின்றுக் கொண்டிருக்கும் இந்த அசைவுக் கிச்சன்கூட, அவளுடைய காதலுக்காக அவன் எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறான் என்பதை அவனுக்கே உணர்த்தும் இடமாக மாறியிருந்தது.

ஆனால், காதலுக்காகச் செய்யும் தியாகம் என்று இதைச் சொல்ல முடியுமா? இது அம்மாவுக்காக அவன் ஏற்றுக்கொண்ட கட்டாயம் அல்லவா?

பிரணவுக்கே பதில் தெரியவில்லை. அவன் முன்னால் இருந்த வெங்காயக் கூடையை எடுத்துத் தேவையான இடத்தில் வைத்துவிட்டு, அடுத்த வேலையை ஆரம்பித்தான்.

அம்மாவின் உடல்நிலை, குடும்பத்தின் மீதான பொறுப்பு, தியானாவின் மீதான காதல் என எல்லாமே அவனுடைய மனதை வெவ்வேறு திசைகளில் இழுத்தன.

அந்தக் கிச்சனில் அவனுடைய கைகள் மட்டும் வேலையைச் செய்துகொண்டிருந்தன.

மனம் மட்டும், தன்னால் இன்னும் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரம் சலீம் வந்து, "மாதவன் சொல்லறப்ப கூட நீ தாக்குப்பிடிக்க முடியாதுனு நினைச்சேன் பிரணவ். ஆனா அல்லா அம்மாவுக்காக எந்த தியாகமும் செய்யற மகனை தான் தந்திருக்கார்.
  நீ உன் அன்னைக்காக இந்தளவு போராடறது எனக்கு பிடிச்சிருக்கு. கவலைப்படாத... நீ அசைவ சமையலிலும் ஒரு கலக்கு கலக்குவ" என்று பாராட்டினார். கூடுதலாக "இந்தா இந்த லெமன் ஜூஸை குடிச்சிட்டு வேலை பாரு‌. லெமன் பிளேவரில் ஒரு மிட்டாய் வடிவத்தில் என்றை நீட்டி, இது குமட்டலை கட்டுப்படுத்தும். வாசனையும் இருக்கும்." என்று தர, பெற்றுக் கொண்டு நன்றி நவில்ந்தான்.

-தொடரும்.


 
Posted : October 22, 2026 9:21 am
(@guna-sundari)
Posts: 183
Estimable Member
 

Omg piranav u r great. Really u have more patience and tolerance.  Very good. Awesome narration sis. Nook and corner u explained the chef work. Very intresting sis 


 
Posted : October 22, 2026 3:16 pm
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 18)

உண்மைதான், இறைச்சியை வெட்டும்போதும், சுத்தம் செய்யும் போதும் வரும் அசைவ உணவின் வாசனையை சகித்துக் கொள்வதே ரொம்பவே கடினம் தான். நல்லா மாட்டிக்கிட்டான் பையன்.

ஆனால், இவன் தியானாவுக்காக
அசைவ பிரிவுக்கு வரவில்லையே,
அவன் அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப் படுவதால் தானே இந்த வேலை செய்யவே ஒத்துக் கொண்டான்.
இதுல தியானாவுக்காக தியாகம் எல்லாம் எங்கிருந்து வந்தது ?
இது இவன் மனதுக்கு இவனே சொல்லிக்கொள்ளும் சமாதானம் போலத்தான் தெரியுது.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 22, 2026 6:50 pm

Scroll to Top