Forum

மௌஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-20

2 Posts
2 Users
0 Reactions
6 Views
(@praveena-thangaraj)
Posts: 315
Member Admin
Topic starter
 
[#415]

அத்தியாயம்-20

பொறுமையாலும் தொழுகையாலும் உதவி தேடுங்கள்.”

— குர்ஆன் 2:45

உண்மையிலே தொழுகை தீமையைத் தடுக்கிறது.

— குர்ஆன் 29:45

வீட்டுக்கு வந்த பிறகும் தியானாவின் மனம் அமைதியடையவில்லை.

 

வழக்கம்போல் தன்னுடைய வேலைகளைச் செய்தாள். உம்மாவிடம் பேசினாள். இரவு உணவுக்கான ஏற்பாடுகளில் உதவினாள்.

 

ஆனால், அவளுடைய மனம் மட்டும் பிரணவிடமே தங்கியிருந்தது.

 

'அவனுடைய அம்மா இப்போது எப்படி இருக்கிறாரோ? அவன் அந்தக் கிச்சனில் இன்னமும் சிரமப்படுகிறானோ?

அவனுக்குப் பிடிக்காத வேலையைச் செய்யும்போது அவன் எவ்வளவு தவித்திருப்பான்.

 

எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.

 

அவனிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

 

அவனுடைய எண்ணைத் திறந்து பார்த்தாள். அவனுடைய பெயரைப் பார்த்ததுமே மனம் படபடத்தது.

 

விரல்கள் அழைப்புக்கான குறியைத் தொடுவதற்காக நகர்ந்தன. ஆனால், கடைசி நொடியில் அவற்றைத் தடுத்து நிறுத்தினாள்.

 

'நான் ஏன் அவனுக்குப் போன் செய்ய வேண்டும் அவனிடம் பேச ஆரம்பித்தால், மீண்டும் அவனுடைய காதலுக்குள் நான் விழுந்துவிட்டால் என்ன செய்வது? அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ள என்னால் முடியுமா? என் குடும்பத்தையும் என் மதத்தையும் கடந்து அவனுடன் வாழும் தைரியம் எனக்கு இருக்கிறதா?' அந்தக் கேள்விகளுக்கு அவளிடம் இன்னமும் பதில் இல்லை.

 

ஆனால், அவனை மறந்துவிட வேண்டும் என்று நினைத்த ஒவ்வொரு முறையும் அவன் இன்னும் ஆழமாக அவளுடைய நினைவுகளில் பதிந்துக் கொண்டிருந்தான்.

 

 டாக்ஸியில் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.

 

அவன் தன்னிடம் சொல்லாமல் மறைத்த வேதனையை, அவனுடைய குரலில் இருந்த சோர்வை, அம்மாவைப் பற்றிப் பேசும்போது அவன் முகத்தில் தோன்றிய கவலையை அவளால் மறக்க முடியவில்லை.

 

பிரணவ் தன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவனாக மாறிவிட்டான் என்பதை அவள் ஒப்புக்கொள்ளத் தயங்கினாள்.

 

பிரணவ் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

 

ஆனால், அவன் விலகிச் செல்வதை அவளுடைய மனமே ஏற்றுக்கொள்ள மறுத்தது.

 

அவளுடைய காதல் அவளை முன்னோக்கி இழுத்தது. அவளுடைய பயம் அவளைப் பின்னோக்கித் தள்ளியது.

 

இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டு, தியானா இரவு முழுவதும் தன்னுடைய மனதுடன் போராடிக் கொண்டிருந்தாள்.

அவனை மறக்க வேண்டுமா? இல்லை, ஒருமுறை அவனிடம் பேசிப் பார்க்க வேண்டுமா?

அவளுடைய விரல்கள் இன்னமும் கைப்பேசியின் திரையில்தான் இருந்தன.

 

ஆனால், அந்த அழைப்பைச் செய்யும் தைரியம் மட்டும் அவளிடம் இன்னமும் வரவில்லை.

மறுநாள் வேலைக்கு வந்து, அன்றைய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்றாள். அப்போது ரிசப்ஷனுக்கு வந்த அழைப்பை ஏற்றாள்.

 

"ஹலோ! குட் ஆஃப்டர்நூன். ஜிஃப்ரான் ஹோட்டல் ரிசப்ஷன். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”

 

"எங்க ரூம்ல ஒரு கண்ணாடி வேஸ் உடைஞ்சிடுச்சு. அதைச் சுத்தம் செய்ய ஆட்களை அனுப்ப முடியுமா?" என்று விருந்தினர் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்டார்.

 

"சர்ட்டன்லி, சார்! உங்கள் ரூம் நம்பர் சொல்ல முடியுமா?”

 

அவர் அறை எண்ணைச் சொல்லவும், தியானா அதைக் குறித்துக்கொண்டு ஹவுஸ்கீப்பிங் டிபார்ட்மென்ட்டுக்கு அழைத்தாள்.

 

"ஹலோ! ரூம் நம்பர் 248. அங்கே ஒரு கண்ணாடி வேஸ் உடைஞ்சிருக்காம். உடனே யாரையாவது அனுப்பி சுத்தம் செய்யச் சொல்லுங்க. உடைந்த கண்ணாடித் துண்டுகள் எதுவும் தரையில் இருக்கக் கூடாது. விருந்தினருக்கு எந்தச் சிரமமும் வரக்கூடாது. உங்க பெயர்" என்று யார் சுத்தம் செய்ய போகின்றாரோ அந்த பெயரை கணிணியில் பதிய ஆங்கிலத்தில் கேட்டு முயன்றாள்

 

"சூர்யா மேம். ஓகே, மேம் பார்த்துக்கிறோம்." மறுமுனையில் பேசியது சூர்யா.

 

அந்தப் பெயரைக் கேட்டதும் தியானாவின் மனம் ஒரு கணம் திடுக்கிட்டது.

 

சூர்யா என்ற பெயரை பிரணவ் ஒரு முறை அவனைப் பற்றிச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. 'என் ரூம்மேட் சூர்யா... அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு'. அன்று பிரணவ் இயல்பாகச் சொல்லியிருந்த அந்தச் சில வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்ததும், அவளுடைய மனம் அவனை நோக்கி ஓடத் தொடங்கியது.

 

அவனுடைய நண்பன். அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் சட்டென்று அதிகரித்தது.

 

ஆனால், அந்த எண்ணத்தை வெளிக்காட்டாமல் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு, உடைந்த பொருளுக்கான கட்டணத்தை விருந்தினரின் பில்லில் சேர்க்க வேண்டியிருந்ததால், அதற்கான ரசீதை எடுத்துக்கொண்டு தியானாவே அந்த அறைக்குச் சென்றாள். ரிசப்ஷனில் வேறு பெண்ணை அமர்த்தினாள். 

 

அறைக்குள் இருந்த விருந்தினர் கதவைத் திறந்து ரசீதை வாங்கிக் கொண்டார். அவர் தான் தெரியாமல் உடைத்திருந்தார்.

 

"தேங்க் யூ!"

 

"யூ ஆர் வெல்கம், சார்!" புன்னகையுடன் பதிலளித்துவிட்டு அவள் லிஃப்டை நோக்கி நடந்தாள்.

 

அதே நேரத்தில் ஹவுஸ்கீப்பிங் பணியை முடித்துவிட்டு வந்த சூர்யாவும் லிஃப்டுக்குள் நுழைந்தான்.

 

அவன் சட்டையின் மார்புப் பகுதியில் இருந்த பெயர்ப்பட்டையைப் பார்த்த தியானா, அவனை அடையாளம் கண்டுகொண்டாள்.

 

சூர்யாவும் அவளுடைய பெயரைப் பார்த்தான்.

 

"நீங்க தியானாவா?" அவனுடைய கேள்வியில் சற்றே ஆச்சரியப்பட்டவள், "ஆமா.." என்றாள்.

 

"நான் பிரணவோட ஃப்ரெண்ட். ஒரே ரூம்ல தங்கியிருக்கோம்." பிரணவின் பெயரைக் கேட்டதும் அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது.

 

"ஓ... தெரியும். பிரணவ் ஒருமுறை சொல்லியிருக்கார்."

 

"நல்லா இருக்கீங்களா?"

 

"ம்." அவள் பதில் சொன்னாலும், குரலில் இருந்த தயக்கத்தைச் சூர்யாவால் உணர முடிந்தது.

 

லிஃப்ட் கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

 

சில நொடிகள் அமைதியாக இருந்தவன், அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டு, "பிரணவ் உங்களை லவ் பண்றான்னு சொன்னான். நீங்க அவனை ரிஜெக்ட் பண்ணிட்டதாவும் சொன்னான்." அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தியானாவின் முகம் மாறியது.

 

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.

அவளுடைய மௌனமே சூர்யாவுக்கு ஓரளவு பதிலைச் சொல்லிவிட்டது.

 

"பிரணவ் இப்ப எல்லாம் உங்க கதை படிக்க மட்டும் தான் போனை எடுக்கறான்" என்றதும் கதை வாசிக்கின்றானா என்றெண்ணினாள். 

 

"அவன் நான்-வெஜ் கிச்சன்ல வேலை பார்க்கவும் வந்ததும் வராததும் குளிச்சிட்டு கதை படிக்கறது தான் முதல் வேலை.. செய்யற வேலைஐ மனதை மறக்கடிக்கற சக்தி கதைக்கு இருக்காம். உங்களுக்கு அவன் நான்வெஜ் கிச்சன்ல வேலை மாறியது தெரியுமா?" என்றான் சூர்யா. தியானா சட்டென்று அவனைப் பார்த்தாள்.

 

"தெ..தெரியும். ரீசண்டா டாக்ஸியில வரும்போது டிரைவர்கிட்ட சொல்லியிருந்தார்."

 

"அப்படியா?"

 

"ம்."

 

சூர்யா சிறிது நேரம் யோசித்துவிட்டு, "அவனுக்கு அந்த வேலை எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். முன்னாடி அந்தப் பக்கம் வேலை செய்யவே மாட்டேன்னு பிடிவாதமா இருந்தவன். இப்போ என்னென்னவோ கத்துக்கிட்டு இருக்கான்." அந்த வார்த்தைகள் தியானாவின் மனதில் ஏதோ ஒன்றை அசைத்தன.

 

அவன் ஏன் அப்படியெல்லாம் செய்ய வேண்டும்? அவளுடைய சிந்தனையைக் கலைக்கும் விதமாக, அருகிலிருந்த பள்ளிவாசலிலிருந்து பாங்கு ஒலித்தது.

 

அந்த அழைப்பொலி கேட்டதும் சூர்யா தன்னிச்சையாக அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தான்.

 

"இந்த நேரம் பிரணவும் சலீம் செஃப்பும் தொழுகைக்குப் போயிருப்பாங்க." அவன் சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தைகள் தியானாவின் காதுகளில் மட்டும் அழுத்தமாக விழுந்தன.

 

பிரணவ்... தொழுகைக்குப் போயிருக்கிறானா?

 

அவள் அவனைப் புரியாமல் பார்த்தாள்.

 

"ஆமாங்க.. தொழுகைக்காக ஒதுக்கப்பட்ட இடத்துல சலீம் சாரோட போய் எனக்கும் இதெல்லாம் கத்து தாங்கனு கேட்டு கத்துக்கிட்டு இருக்கான்.  சரி, நான் கிளம்புறேன். என்னோட டிபார்ட்மென்ட் வந்தாச்சு. உங்களைச் சந்திச்சதுல சந்தோஷம்" என்றவன் லிஃப்டிலிருந்து இறங்கிவிட்டான்.

 

தியானாவோ அங்கேயே சில நொடிகள் நின்றாள்.

 

அவள் இறங்க வேண்டிய தளத்தை லிஃப்ட் அடைந்தபோதுதான் தன்னிலைக்கு வந்தாள்.

 

ரிசப்ஷனுக்குத் திரும்பி வந்தவளுடைய உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், மனம் மட்டும் அந்த ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.

 

பிரணவ் தொழுகை செய்கிறானா? ஏன்? நான் அவனுடைய காதலை மறுத்த பிறகும் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும்? அவளுடைய மனம் கேள்விகளால் நிறைந்தது.

 

பிரணவ் அவளைக் காதலிப்பது அவனுடைய விருப்பம். ஆனால், அந்தக் காதலுக்காக அவன் தன்னுடைய பழக்கவழக்கங்களையே மாற்றிக்கொள்ள முயல்வதை அவளால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

 

அவள் அவனிடம் மதத்தைப் பற்றிப் பேசியிருக்கிறாள். உணவுப் பழக்கங்களைப் பற்றிப் பேசியிருக்கிறாள். அவர்களுடைய எதிர்காலம் எவ்வளவு சிக்கலானதாக இருக்கக்கூடும் என்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறாள்.

 

அப்படியிருக்க, அவன் ஏன் இன்னமும் அவளுடைய மனதுக்குள் நுழைய முயல்கிறான்? சூர்யா சொன்னது உண்மைதானா?

 

அன்று மாலை வேலையை முடித்துக்கொண்டு பிரணவ் வெளியே வரும்போது அவனிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

 

தான் மறுத்தும் அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்று அவனிடமே கேட்டுவிட வேண்டும்.

 

அவன் தன்னைத் தவிர்ப்பதற்குள் பேசிவிட வேண்டும்.ஆனால், அவள் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை.

 

பிரணவ் வெளியே வந்தான்.

தியானா அவனைப் பார்த்தாள்.

அவனும் அவளைப் பார்த்தான்.

 

ஒரு நொடி. அவனுடைய பார்வையில் எந்தச் சலனமும் இல்லை. அவள் அங்கே நிற்பதையே கவனிக்காதவனைப் போல, தன்னுடைய போனைப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றான்.

 

தியானா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

என்ன திமிர் இவருக்கு? நான் தான் பேச நினைக்கிறேன். கொஞ்சம் நின்று என்னவென்று கேட்க வேண்டியதுதானே?

 

அவளுடைய கோபம் அதிகரித்தது. பெரிய காதலராம்! நான் நிராகரித்தாலும் காதலித்துக்கொண்டே இருப்பாராம்! இப்போ என்னைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி போறாரே.

 

மனதிற்குள் அவனைத் திட்டித் தீர்த்தவள், வேகமாக நடந்து சென்று டாக்ஸியைப் பிடித்தாள்.

 

அவளுடைய மனக்குமுறலை அறியாதவனைப் போலப் பிரணவ் அதற்குள் முன்னால் சென்றிருந்த மற்றொரு டாக்ஸியில் ஏறிவிட்டான்.

 

ஆனால், அவனுடைய மனதில் மட்டும் அப்போது வேறொரு உலகம் விரிந்திருந்தது.

 

தியானா என்னோடு பேசுவதற்காகத்தான் நின்றாளா? அவளுடைய பார்வையில் தெரிந்த தயக்கத்தை நினைத்துப் பார்த்தான். என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைத்தாளோ? அவனுடைய மனம் துள்ளத் தொடங்கியது.

 

என் பிரிவு அவளை வாட்டுகிறதா? என்னைப் பார்க்காமல் இருக்க முடியாமல் தவிக்கிறாளா? மதத்தை எல்லாம் தாண்டி, காதல்தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டாளா?

 

அடுத்த நொடியே தன்னுடைய கற்பனையை நினைத்துச் சிரித்துக்கொண்டான். அவசரப்படாதே, பிரணவ். அவள் இன்னும் ஒப்புக்கொண்டு வரவில்லை. அதற்குள் அவனுடைய போனில் ஒரு அறிவிப்பு வந்தது.

 

தியானாவின் புதிய கதைப் பதிவு. அதைத் திறந்தவன், அவளுடைய எழுத்துகளுக்குள் மூழ்கத் தொடங்கினான்.

 

அவள் பேசாமல் இருந்தாலும், அவளுடைய எழுத்துகள் அவனுக்குத் துணையாக இருந்தன.

 

வீட்டிற்கு வந்த சூர்யா, பிரணவ் அறைக்குள் அமர்ந்து போனில் எதையோ படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

 

"என்னடா, இன்னைக்கு முகமே வேற மாதிரி இருக்கு" என்றான் சூர்யா.

 

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை."

 

"பிரணவ்.., இன்னைக்கு லிஃப்ட்ல தியானாவைச் சந்திச்சேன்." பிரணவின் விரல்கள் சட்டென்று நின்றன.

 

ஆனால், நிமிர்ந்து பார்க்கவில்லை. "அப்படியா" 

 

"ஆமாண்டா! உன்னைப் பற்றிப் பேசினோம். நீ அவளை லவ் பண்றதையும், அவள் உன்னை ரிஜெக்ட் பண்ணிட்டதையும் சொன்னேன்." 

 

பிரணவ் போனைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

"அப்புறம்?"

 

"அப்புறமா? இன்னைக்கு பாங்கு சத்தம் கேட்டுச்சு. அந்த நேரம் நீயும் சலீமும் தொழுகைக்குப் போயிருப்பீங்கன்னு சொன்னேன்." இப்போது பிரணவ் நிமிர்ந்து பார்த்தான்.

 

"அதுக்கு அவ என்ன சொன்னா?"

"ஒண்ணும் சொல்லலை. ஆனா, அவ முகமே மாறிடுச்சு. ஏதோ புரியாத புதிரைப் பார்க்கிற மாதிரி என்னைப் பார்த்தா."

 

பிரணவின் உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது. அப்படியா, தியானாவுக்கு குழப்பமாக இருக்கும். அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. தான் தொழுகை செய்வது அவள் அறிந்து என்னைப் பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்கலாம். 

 

அப்படியென்றால், இன்னும் என் காதலுக்கு வாய்ப்பு இருக்கிறது!

 

"டேய், என்னடா தனியா சிரிக்கிற?"

 

"ஒண்ணுமில்லை." அவன் மீண்டும் போனை எடுத்தான்.

 

அப்போது சூர்யா திடீரென்று இன்னொரு கேள்வியைக் கேட்டான்.

 

"பிரணவ் ஒரு சந்தேகம்"

 

"என்ன?"

 

"இன்னைக்கு பாங்கு சத்தம் கேட்டதும் நீயும் சலீமும் தொழுகைக்குப் போயிருப்பீங்கன்னு சொன்னேன். அப்போ தியானா எதுவும் சொல்லலை. ஆனா, அவளும் தொழுகை செய்வா தானே? 

 

பெண்களும் ஐந்து நேரம் தொழுவாங்கன்னு நீயே சொல்லியிருக்கே. அப்புறம் அவ ஏன் அந்த நேரம் தொழுகைக்குப் போகலை?”

 

பிரணவ் ஒரு கணம் யோசித்தான்.

 

"ஆமால்ல..." அவனுடைய முகத்தில் சிந்தனை படர்ந்தது.

 

"என்னடா யோசிக்கிற"

 

"இல்லைடா. பெண்களுக்கும் ஐந்து நேரத் தொழுகைதான். ஆனா, மாதவிடாய் காலத்துல அவங்க தொழுகை செய்ய மாட்டாங்க. குழந்தை பிறந்த பிறகு ஏற்படுற இரத்தப்போக்கு காலத்துலயும் தொழுகை செய்ய மாட்டாங்க." என்றான்.

 

"ஓ இப்படியும் இருக்குமோ" என்று சூர்யா புரிந்துக் கொண்டதைப் போலத் தலையசைத்தான்.

 

“சலீம் பாய்கிட்ட நிறைய கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அவரும் பொறுமையா சொல்லிக் கொடுத்தார். ஐந்து முறை தொழுகை, ஃபஜ்ர் (Fajr) அதிகாலை 4:30–5:30, 

லுஹர் (Dhuhr)-மதியம் 12:15–1:15,

அஸர் (Asr) பிற்பகல் 3:30–4:45,

மக்ரிப் (Maghrib) சூரிய அஸ்தமனம் மாலை 6:00–6:30,

இஷா (Isha) இரவு 7:15–8:45 இப்படி நேரம் தவறாம தொழுகை செய்வாங்க

  அவங்க கடைப்பிடிக்கிற சில வழக்கங்கள்... எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டேன். அப்படி தெரிந்துக்க முயன்றப்ப தான் சலீம் பாய் பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் குழந்தை பிறந்த பிறகு மட்டும் தொழுகை பண்ணறதை தவிர்ப்பதை சொன்னார்.

 

"அடேங்கப்பா!" சூர்யா அவனருகில் வந்து அமர்ந்தான்.

 

"உன் காதலுக்காக நீ ரொம்பவே இறங்கி வந்துட்டடா. முதல்ல நான்-வெஜ் கிச்சனுக்குப் போன. இப்போ தொழுகை, மத வழக்கம்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிற. இவ்வளவு முயற்சி பண்ணியும் உன் காதல் தோத்துடுச்சுன்னா என்னடா பண்ணுவ?"

 

பிரணவ் அவனைப் பார்த்தான். அந்தக் கேள்விக்கு அவனிடம் நீண்ட விளக்கம் எதுவும் இல்லை.

 

தன் காதலின் எதிர்காலம் என்னவாகும் என்று அவனுக்கும் தெரியாது. தியானா தன்னை ஏற்றுக் கொள்வாளா என்பதும் தெரியாது.

 

ஆனால், அவள் ஏன் தயங்குகிறாள் என்பதைப் புரிந்துகொள்ளாமல், அவளுடைய அச்சங்களை மதிக்காமல், அவளை மட்டும் தன்னுடைய காதலுக்குள் இழுத்துவிட முடியாது என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

 

அவளுடைய மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் தன்னைப் போலியாக மாற்றிக்‌ கொள்ளவில்லை.

 

அவள் வாழும் உலகத்தைப் புரிந்துகொள்ள முயன்றான்.

 

அவளுடைய நம்பிக்கைகள், அவளுடைய பயங்கள், அவள் கடைப்பிடிக்கும் வழக்கங்கள இவை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டால்தான் அவளுடைய மனதை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைத்தான்.

 

“என்னடா அமைதியாகிட்ட?"

 

பிரணவ் சூ

ர்யாவைப் பார்த்தான்.

 

அவன் கண்களில் உறுதி இருந்தது.

 

"நான் என் காதலை நம்புறேன்." அந்த ஒரு வார்த்தையில் அவனுடைய நம்பிக்கையும், பொறுமையும், காதலின் மீதான பிடிவாதமும் அடங்கியிருந்தன.

 

சூர்யா அவனைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டான்.

 

-தொடரும்.

 


 
Posted : October 24, 2026 8:30 am
(@guna-sundari)
Posts: 183
Estimable Member
 

Wow pranav super. U changed for ur love..diya will think over it. Very intresting sis 


 
Posted : October 24, 2026 10:41 am

Scroll to Top