Forum

மௌஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-19

2 Posts
2 Users
0 Reactions
11 Views
(@praveena-thangaraj)
Posts: 315
Member Admin
Topic starter
 
[#413]

அத்தியாயம்-19

அசைவ உணவுக் கிச்சனில் பிரணவின் நாட்கள் மெல்ல நகரத் தொடங்கின.

முதல் நாள் அந்தக் கிச்சனுக்குள் நுழைந்தபோது, சுற்றிலும் இருந்த இறைச்சியையும் அதன் வாசனையையும் சகித்துக்கொள்ள முடியாமல் தவித்தவன், இப்போது குறைந்தபட்சம் அங்கே நின்று வேலை செய்யப் பழகியிருந்தான். ஆனால், அதற்காக அவனுக்கு அசைவ உணவின் மீது இருந்த ஒவ்வாமை முற்றிலும் மறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

அந்தக் கிச்சனில் இறைச்சியைச் சுத்தம் செய்வதற்கும், தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கும், வெவ்வேறு உணவுகளுக்குத் தேவையான அளவுகளில் வெட்டுவதற்கும் தனியாகவே ஊழியர்கள் இருந்தனர். அதனால், சமையல்காரர்கள் அந்த வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பிரணவுக்கு அது ஓரளவு நிம்மதியாக இருந்தது.

ஆனால், சலீம் அவனை அங்கே வெங்காயம் உரிப்பதற்கும், காய்கறிகளை நறுக்குவதற்கும் மட்டுமே வைத்திருக்கவில்லை.

"பிரணவ், இங்கே பாரு. இறைச்சியைச் சுத்தம் செய்யறதுக்கு தனி ஆளுங்க இருக்காங்க. அதனால, நாம அவங்களோட வேலையைச் செய்ய வேண்டியதில்லை. நம்ம வேலை சமையல்." என்றவர், சமையல் மேடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களைக் காட்டினார்.

"இங்கே பாரு. இது சிக்கன், இது ஆட்டு இறைச்சி, இது மீன், இது இறால். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு உணவுக்காகத் தயார் செய்யப்பட்டு, தனித்தனி பாத்திரங்கள்ல வைக்கப்பட்டிருக்கும். எந்த உணவுக்கு எவ்வளவு இறைச்சி வேணுமோ, அந்த அளவுக்கு ஏற்கெனவே எடை பார்த்து வச்சிருப்பாங்க. அதோட சேர்க்க வேண்டிய மசாலா, சாஸ் எல்லாம்கூட அந்தந்த உணவுக்குத் தகுந்த மாதிரி தயார் பண்ணி வச்சிருப்போம்.

"ஆர்டர் வந்ததும், அதுக்கான பொருட்களை எடுத்துச் சமைக்க வேண்டியதுதான். ஆனா, எல்லாத்தையும் ஒண்ணு போலச் சமைக்க முடியாது. ஒவ்வொரு உணவுக்கும் தனித்தனி செய்முறை இருக்கு. எவ்வளவு நேரம் வேகணும், எவ்வளவு சூட்டுல சமைக்கணும், எப்போ மசாலாவைச் சேர்க்கணும், எப்போ இறக்கணும்... இதெல்லாம் சரியா தெரிஞ்சிருக்கணும்." பிரணவ் கவனமாகக் கேட்டுக் கொண்டான்.

சைவ உணவுக் கிச்சனில் சமையல் செய்வது அவனுக்குப் பழக்கமானதுதான். ஆனால், இங்கே ஒவ்வொரு உணவின் பெயரையும், அதன் செய்முறையையும், அதற்கான அளவுகளையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

சலீம் முதலில் ஒரு சிக்கன் உணவைச் செய்து காட்டினார்.

"இது சிக்கன் கிரேவி. இதுல மசாலா நல்லா இறங்கியிருக்கணும். இறைச்சி வெந்திருக்கணும். ஆனா, அதிக நேரம் சமைச்சா துண்டுகள் உடைஞ்சு போயிடும். குழம்போட பதமும் மாறிடும். அதே மாதிரி தொக்கு செய்யும்போது தண்ணீர் அதிகமா இருக்கக்கூடாது. மசாலா இறைச்சியோட ஒட்டியிருக்கணும்."

அடுத்ததாக ஹனி சிக்கன் செய்வதைக் காட்டினார்.

"இதுக்கு சாஸோட அளவு ரொம்ப முக்கியம். தேன் அதிகமா போனா இனிப்பு தூக்கலா இருக்கும். சிக்கன் சரியான பதத்துல வெந்து, சாஸ் அதுல ஒட்டியிருக்கணும். ஜப்பானீஸ் ஸ்டைல் சிக்கன் செய்யும்போது இதே அளவுகளைப் பயன்படுத்த முடியாது. அதுக்கு வேற சுவை, வேற செய்முறை."

பிறகு சிக்கன் லாலிபாப், சிக்கன் கபாப் என ஒவ்வொன்றாகக் காட்டினார். சில உணவுகளுக்கு அதிக வெப்பத்தில் வறுக்க வேண்டியிருந்தது. சிலவற்றுக்கு மிதமான வெப்பத்தில் உள்ளே வரை வேகுமாறு கவனிக்க வேண்டியிருந்தது. சில உணவுகளைச் சமைத்த பிறகு சாஸ் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும். வேறு சிலவற்றில் இறைச்சி உலர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

"நிறத்தை மட்டும் வச்சு எல்லா உணவும் வெந்துடுச்சுன்னு முடிவு பண்ணக்கூடாது, பிரணவ். ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு பதம் இருக்கும். இறைச்சி உள்ளே வரை சரியா வெந்திருக்கணும். அதே நேரம் அதிகமா சமைச்சு அதன் தன்மையைக் கெடுத்துடக்கூடாது. வெப்பநிலையும் நேரமும் முக்கியம்.

மீன் உணவுகளிலும் இதே கவனம் தேவைப்பட்டது. சில மீன்கள் விரைவாக வெந்துவிடும். அதிக நேரம் அடுப்பில் வைத்திருந்தால் அவற்றின் சதை உடைந்து, உணவின் தோற்றமே மாறிவிடும். இறால் உணவுகளுக்கும் தனியான நேரக் கணக்கு இருந்தது.

சலீம் ஒவ்வொரு உணவையும் செய்து காட்டும்போது, அதன் பெயர், பயன்படுத்தும் பொருட்கள், சமைக்கும் முறை என எல்லாவற்றையும் பிரணவுக்கு விளக்கினார்

பிரணவ் அவற்றை மனதில் பதியவைக்க முயன்றான்.

முதல் சில நாட்களில் உணவுகளின் பெயர்களைக் கூட ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொண்டான். ஒரு உணவுக்கான மசாலாவை இன்னொரு உணவுக்கான பொருட்களுடன் சேர்த்துவிடாமல் இருக்க, ஒவ்வொரு முறையும் பெயரைச் சரிபார்த்துக்கொண்டான்.

சலீம் அவசரப்படுத்தவில்லை. "தப்புப் பண்ணக்கூடாதுன்னு பயந்து நின்னா எப்படி வேலை கத்துக்க முடியும்? சந்தேகம் வந்தா கேட்டுத் தெரிஞ்சுக்கோ. ஆனா, ஒருமுறை சொன்னதை அடுத்த முறை ஞாபகம் வச்சுக்க முயற்சி பண்ணு," என்று அறிவுறுத்தினார்.

பிரணவ் அதையே மனதில் வைத்துக்கொண்டான்.

மெல்ல மெல்ல அவனுக்கு உணவுகளின் பெயர்கள் பழக்கமாகின. எந்த உணவுக்கு எந்த மசாலா, எந்த உணவுக்கு எந்த அளவு இறைச்சி, எந்த உணவை எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும் என்பதையெல்லாம் புரிந்துகொள்ளத் தொடங்கினான்.

 

இருந்தாலும், ஒரு உணவைச் சமைத்துக் கொண்டிருக்கும்போது அடுத்த ஆர்டர் வந்துவிட்டால், இரண்டையும் சரியான நேரத்தில் முடிக்க வேண்டிய பரபரப்பு அவனைத் தடுமாறச் செய்தது.

 

பத்து நாட்கள் கழித்துத்தான் கிச்சனின் வேகத்துக்கு ஓரளவு ஈடுகொடுக்க முடிந்தது.

 

அந்தப் பத்து நாட்களும் அவனுக்கு வெறும் சமையலைக் கற்றுக்கொள்வதற்கான நாட்களாக இருக்கவில்லை. தன்னுடைய மனம் ஏற்றுக்கொள்ளாத ஒன்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்துடன் ஒவ்வொரு நாளும் போராடிய நாட்களாகவும் இருந்தன.

 

இதற்கிடையில், மகாலட்சுமியின் உடல்நிலையும் மெல்லச் சீராகத் தொடங்கியது.

 

அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்திருந்தது. மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வந்தார்.

 

அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் ஒவ்வொரு முறையும் பிரணவுக்கு மனம் நிறைந்தது.

 

"அம்மா, இப்போ எப்படி இருக்கீங்க? ஏதாவது வலிக்குதா? டாக்டர் என்ன சொன்னாங்க?”

 

என்று அவன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவான்.

 

"எனக்கு ஒண்ணுமில்லைடா கண்ணா. நீ ஏன் இவ்வளவு கவலைப்படுற? நான் நல்லா இருக்கேன். நீ ஒழுங்கா சாப்பிடுறியா? உன் உடம்பைப் பார்த்துக்கோ. அங்கே உன்னைப் பார்த்துக்க யாருமில்லை அதான் என் கவலை." மகாலட்சுமி அவனிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்.

 

மகனின் குரலைக் கேட்டாலே அவருக்குள் ஒரு நிம்மதி பிறக்கும். ஆனால், அந்த நிம்மதியுடன் சேர்ந்து இன்னொரு கவலையும் அவரை வாட்டியது.

 

மகனின் பணத்தில்தான் அறுவைச் சிகிச்சை நடந்திருக்கிறது. அந்தப் பணத்தை அவன் எப்படிச் சம்பாதித்தான்? அதற்காக என்னவெல்லாம் செய்தானோ?

 

அதை நேரடியாகக் கேட்கவும் தயக்கமாக இருந்தது.

 

ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபோது, "டேய் பிரணவ், ஆபரேஷனுக்காக இவ்வளவு பணம் அனுப்பியிருக்கியே.  அதெல்லாம் எப்படி ஏற்பாடு பண்ணின? உனக்குத் தேவையில்லாத சிரமம் ஏதாவது வந்திருக்கா" என்று கேட்டுவிட்டார்.

 

பிரணவின் மனம் ஒரு கணம் தடுமாறியது. "அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சுக்குவாங்க. வேற எந்தக் கஷ்டமும் இல்லை. நீங்க அதை நினைச்சுக் கவலைப்படாதீங்க. நீங்க நல்லா இருக்கீங்க... அது போதும்''

 

அவன் குரலில் இருந்த இயல்பான பாசம், அம்மாவின் சந்தேகத்தை ஓரளவு குறைத்தது. ஆனால், உண்மையைச் சொல்லத் துணியவில்லை.

 

அம்மா, உங்களுக்காகத்தான் எனக்குப் பிடிக்காத வேலையைச் செய்ய ஒத்துக்கிட்டேன். அசைவ உணவின் வாசனையைக்கூடச் சகிக்க முடியாமல் எத்தனை முறை தவித்திருக்கிறேன் தெரியுமா? என்று சொல்லத் தோன்றியது.

 

ஆனால், அறுவைச் சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறிக்கொண்டிருக்கும் அம்மாவிடம் இதையெல்லாம் சொல்லி அவருடைய மனதை ஏன் நோகடிக்க வேண்டும்?

 

அதனால், அவளிடம் எதையும் மறைக்க நினைக்காத மகனாக இருந்தும், அந்த ஒரு விஷயத்தை மட்டும் மறைத்துவிட்டான்.

 

அம்மாவை நேரில் சென்று பார்க்க முடியாத தவிப்பு ஒருபுறம் அவனை வாட்டியது. தன்னுடைய மகன் தனக்காக என்ன செய்துக் கொண்டிருக்கிறானோ என்ற கவலை மறுபுறம் மகாலட்சுமியை வாட்டியது.

 

இருவருமே ஒருவருக்கொருவர் தங்களுடைய உண்மையான கவலையை மறைத்துக்கொண்டு, நலமாக இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

 

---

 

பிரணவ் அசைவ உணவுக் கிச்சனில் வேலை செய்யத் தொடங்கி இரண்டு வாரங்களை நெருங்கியிருந்தது.

 

முதல் சில நாட்களில் இறைச்சியின் வாசனை வந்தாலே முகத்தைச் சுளித்தவன், இப்போது அந்த வாசனையை உணர்ந்தாலும் உடனடியாக வேலையை விட்டுவிட்டு ஓடும் நிலை குறைந்திருந்தது.

 

அதற்காக அவன் முழுமையாகப் பழகிவிட்டான் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் இன்னமும் குமட்டல் எழும். சில உணவுகளைப் பார்க்கும்போது மனம் சுருங்கும்.

 

ஆனால், முன்பைவிடச் சமாளிக்கும் திறன் வந்திருந்தது. இத்தனை நாட்கள் அவன் செய்ததெல்லாம் அம்மாவுக்காகத்தான்.

 

'அம்மாவுக்கு ஆபரேஷன் நடக்கணும். அவங்க நல்லபடியா குணமாகணும். அதுக்காக நான் இதைச் செய்யணும்.' இதுதான் அவனுடைய ஒரே எண்ணமாக இருந்தது.

 

ஆனால், இப்போது அவனுடைய மனதில் இன்னொரு எண்ணமும் மெல்லத் தலைதூக்கத் தொடங்கியிருந்தது.

 

தியானா அவள் ஒருமுறை சொன்ன வார்த்தைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன.

 

'இந்த மாதிரி ஒரு கிச்சன்ல உங்களால இயல்பைத் தொலைக்காமல் இருக்க முடியுமா, பிரணவ்?' அப்போது அவள் கேட்டதன் அர்த்தத்தை அவன் முழுமையாகப் புரிந்துக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது அவளுடைய கேள்விக்குள் இருந்த தயக்கமும் கவலையும் அவனுக்குப் புரிவதுபோல இருந்தது.

 

அவள் தன்னுடைய நம்பிக்கைகளைப் புரிந்துக் கொள்ள முயன்றாள். அவன் அவளுடைய நம்பிக்கைகளைப் புரிந்துக் கொள்ள முயன்றானா?

 

அவளுடைய மதம், அவளுடைய குடும்பம், அவள் வளர்ந்த சூழல் என எதையும் முழுமையாக அறியாமல், காதல் ஒன்றே போதுமென்று நினைத்துவிட்டானோ?

 

அந்த எண்ணம் அவனைச் சிந்திக்க வைத்தது.

 

தியானாவுக்காகத் தன்னுடைய நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அதே நேரத்தில், அவளுடைய நம்பிக்கைகளை மதிக்கவும், அவளுடைய வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ளவும் அவன் தயாராக இருக்க முயன்றான்.

 

அவளுக்காக அவன் அசைவ உணவுக் கிச்சனில் வேலை செய்வதை ஏற்றுக் கொண்டுவிட்டான் என்பதற்காக, அது அவளுக்காகச் செய்த தியாகம் என்று சொல்லிவிட முடியாது. அவன் அந்த முடிவை எடுத்ததற்கான முதன்மையான காரணம் அம்மாவின் உயிர்.

 

ஆனால், அந்த அனுபவம் அவனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

சைவம், அசைவம் என்ற வேறுபாட்டைத் தாண்டி, ஒருவருடைய நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள முயல்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவன் உணரத் தொடங்கியிருந்தான்.

 

'தியானா... உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்றது மட்டும் காதலா? உன்னைப் புரிஞ்சுக்கவும் நான் முயற்சி செய்ய வேண்டாமா?' அவன் மனதுக்குள் கேட்டுக்கொண்டான்.

 

அவளை நினைத்ததும் அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவள் குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது. அவளுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து, அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது.

 

ஆனால், அவனாகச் சென்று பேசினால், மீண்டும் அவளே தன்னை விலக்கிவிட்டால்?

அந்தப் பயம் அவனைத் தடுத்து நிறுத்தியது. அவள் தன் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அதே நேரத்தில், அவள் மனமில்லாமல் தன்னிடம் திரும்பிவரவும் அவன் விரும்பவில்லை.

 

இந்தப் போராட்டத்திற்கு நடுவேதான் அவனுடைய நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன.

 

---

 

அன்றைய மதிய நேரம்.

 

கிச்சனில் ஆர்டர்கள் அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தன. பிரணவ் ஒரு சிக்கன் உணவைத் தயாரித்து, அதைத் தட்டில் அலங்கரித்துப் பரிமாறுவதற்குத் தயார் செய்தான்.

 

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவின் சுவை மட்டுமல்ல, அதன் தோற்றமும் முக்கியம். தட்டில் உணவு வைக்கப்படும் முறை, அதனுடன் சேர்க்கப்படும் சாஸ், காய்கறிகள், அலங்காரப் பொருட்கள் என ஒவ்வொன்றிலும் கவனம் தேவை.

 

பிரணவ் தன்னால் முடிந்த அளவுக்கு உணவை அழகாக அலங்கரித்தான்.

 

பிறகு சலீமிடம் எடுத்துச் சென்றான்.

 

சலீம் அதைச் சுவைத்துப் பார்த்தார்.

 

ஒரு கணம் அமைதியாக இருந்தவர், பிறகு தலையசைத்தார்.

 

"ஸ்பைசி போதலையே, பிரணவ்!" பிரணவின் முகம் சுருங்கியது.

 

"சாரி... பாய். இன்னொரு முறை முயற்சி பண்றேன்."

 

"சாரி சொல்ல வேண்டாம். எங்கே குறை இருக்குன்னு புரிஞ்சுக்கோ. நீ போட்ட அளவு தவறில்லைன்னு நினைக்கிற. ஆனா, இந்த உணவுக்கான சுவை இன்னும் வரலை. அடுத்த முறை மசாலாவோட அளவையும் சுவையையும் சரியா கவனிச்சுச் செய்." பிரணவ் அந்த உணவைத் திரும்ப எடுத்துக்கொண்டான்.

 

'இது என்னய்யா சோதனை' என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டாலும், முயற்சியைக் கைவிடவில்லை.

 

சலீம் சொல்லிக்கொடுத்தபடி மீண்டும் தயாரித்தான்.

 

அன்று வேலை முடியும் நேரத்தில், அவன் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான் இருந்தது.

 

'என்ன ஆனாலும் இந்த வேலையைச் சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.' ஆனால், அந்த முடிவை அவன் எடுத்ததற்குக் காரணம் அம்மா மட்டுமல்ல என்பது அவனுக்கே மெல்லப் புரியத் தொடங்கியிருந்தது.

மாலை நேரம்.

 

வேலை முடிந்த பிரணவ் வழக்கம்போல் ஹோட்டலுக்கு வெளியே வந்து டாக்ஸிக்காகக் காத்திருந்தான்.

 

அப்போது அவனுக்குப் பழக்கமான டிரைவர் ஒருவர் காரை நிறுத்தினார்.

 

"என்ன தம்பி! இன்னிக்கு நீங்கதானா வாங்க, ஏறுங்க!" பிரணவ் புன்னகையுடன் அருகே சென்றான். அவன் முதலில் இங்கு வந்த பொழுது பழக்கமான டாக்ஸி டிரைவர்

 

அந்த நேரத்தில், சற்று தொலைவில் தியானா வருவதைக் கவனித்தான்.

 

அவளும் டாக்ஸிக்காகத்தான் வந்திருக்க வேண்டும். பிரணவின் மனம் உடனே பரபரத்தது.

 

இத்தனை நாட்களுக்குப் பிறகு அவளை நேரில் பார்க்கிறான். அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால், அவளுடைய முகத்தில் தெரிந்த தயக்கம் அவனை அமைதியாக நிற்க வைத்தது.

 

டிரைவர் தியானாவைப் பார்த்துவிட்டார். "என்ன தம்பி, மேடமையும் கூப்பிடலையா? அவங்களும் வரட்டுமே" என்று இயல்பாகக் கேட்டார்.

 

தியானா உடனே, "இல்லைண்ணா, நான்." என்று ஏதோ சொல்ல முற்பட்டாள்.

 

அதற்குள் பிரணவ் காரின் கதவைத் திறந்து, அவளுக்கு வழிவிட்டுவிட்டு மறுபுறமாகச் சென்று ஏறிக்கொண்டான்.

 

அவனுடைய செயலைப் பார்த்த தியானா ஒரு கணம் தயங்கினாள்.

 

இப்போது மறுத்துவிட்டால், அது தேவையில்லாத பிடிவாதமாகத் தோன்றும். டிரைவரிடமும் காரணம் சொல்ல வேண்டியிருக்கும்.

 

வேறு வழியின்றி அவளும் காரில் ஏறி அமர்ந்தாள். பிரணவ் டிரைவரிடம் இயல்பாகப் பேசத் தொடங்கினான்.

 

தியானா மட்டும் அமைதியாக இருந்தாள். டிரைவரைப் பார்த்து அளவான புன்னகையை உதிர்த்தவள், பிரணவின் பக்கம் பார்வையைத் திருப்புவதைத் தவிர்த்தாள்.

 

அவனுக்குத் தன்னிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால், என்ன பேசுவது என்று தெரியவில்லை.

 

அந்தச் சமயத்தில் டிரைவரே பேச்சைத் தொடங்கினார்.

 

"என்ன தம்பி, வேலை எல்லாம் எப்படி போகுது? வீட்டுக்குப் பணமெல்லாம் ஒழுங்கா அனுப்புறீங்களா?"

 

''வேலை நல்லா போகுது, அண்ணா" என்று தொடங்கிய பிரணவ், சிறிது நேரம் தயங்கிவிட்டுத் தொடர்ந்தான்.

 

"எங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. இதயத்துல இரண்டு மூன்று இடங்கள்ல அடைப்பு இருந்ததால ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்துச்சு. இப்போ ஒரு மாசம் ஆகப்போகுது. நல்லபடியா முடிஞ்சிடுச்சு. ஆனா, நேர்ல போய்ப் பார்க்க முடியலையேன்னுதான் வருத்தமா இருக்கு."

 

"அச்சச்சோ" என்று டிரைவர் அனுதாபத்துடன் தலையசைத்தார். "இப்போ அம்மா நல்லா இருக்காங்களா, தம்பி?"

 

"இப்போ கொஞ்சம் தேறியிருக்காங்க, அண்ணா. அதுவே பெரிய நிம்மதி" பிரணவ் பேசிக் கொண்டிருந்தாலும், அவனுடைய கவனம் முழுவதும் தியானாவிடமே இருந்தது.

 

அவள் அவனைப் பார்க்கிறாளா என்று ஓரக்கண்ணால் கவனித்தான்.

 

அவன் எதிர்பார்த்தபடியே, தியானா அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

அவளுடைய கண்களில் அதிர்ச்சியும் கவலையும் தெரிந்தன. அவளுக்குத் தெரியாது. அவளிடம் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால், அவளுடன் பேச முடியாத நிலையில் இருந்ததால் சொல்லாமல் விட்டுவிட்டான்.

 

இப்போது அவனுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையும், அதற்காக அவன்பட்ட சிரமத்தையும் அவள் அறிந்துகொள்ள வேண்டுமென்று அவனுடைய மனம் விரும்பியது.

 

டிரைவர் மீண்டும் கேட்டார். "ஆபரேஷன் செலவெல்லாம் எப்படி சமாளிச்சீங்க, தம்பி? ஊர்ல உங்க அண்ணன் பார்த்துக்கிட்டாரா?"

 

"அண்ணாவால அவங்க குடும்பத்தைப் பார்க்கவே சரியா இருக்கு, அண்ணா. அண்ணிக்கும் இரண்டாவது குழந்தை பிறக்கப் போகுது. அதனால நான்தான் பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்துச்சு." சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், பிறகு தொடர்ந்தான்.

 

"அதுக்காகத்தான் சைவக் கிச்சன்ல இருந்து அசைவ உணவுக் கிச்சனுக்கு மாற வேண்டியதாயிடுச்சு. அங்கே ஆள் பற்றாக்குறை இருந்ததால, என்னை உதவிக்கு அனுப்பினாங்க. கூடுதல் சம்பளமும் தர்றாங்க. ஆபரேஷனுக்குத் தேவையான பணத்தை முன்பணமாக இல்லாமல், அந்தக் கூடுதல் வேலைக்கான சம்பள ஏற்பாட்டின் மூலமா கொடுத்தாங்க. எங்க செஃப் மாதவன்தான் இதுக்கு உதவி செய்தார்."

 

"அப்படியா?" என்று டிரைவர் ஆச்சரியப்பட்டார். அவருக்கு பிரணவ் சைவம் மட்டும் செய்வான் என்று தெரியாதே.

 

அவனுடைய பதிலைக் கேட்ட தியானா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

 

அவனுக்குச் சைவ உணவின் மீது இருந்த ஈடுபாடு அவளுக்குத் தெரியும். அசைவ உணவைச் சமைக்க வேண்டிய நிலை வந்தால் அவன் எவ்வளவு சிரமப்படுவான் என்பதையும் அவள் அறிவாள்.

 

அப்படியிருக்க, அம்மாவுக்காக அவன் அந்த வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறான்!

 

அவளுடைய இதயம் கனத்தது. டிரைவர் பெருமூச்சு விட்டார்.

 

"பரவாயில்லை தம்பி. கடவுள் ஒரு கதவை மூடினாலும், இன்னொரு வழியைத் திறந்து வைப்பார்னு சொல்வாங்க. உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதே பெரிய விஷயம். அதுக்கு மேல வேற என்ன வேணும்?"

 

"ஆமாண்ணா. ஆபரேஷன் சக்சஸ். அம்மா இப்போ நல்லா இருக்காங்க. ஒரு மாசம் இச்சு. அதுவே போதும்." என்றவன், தியானாவை ஒரு கணம் பார்த்தான்.

 

'ஒரு மாசமாகிவிட்டது, தியானா'

அவன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

 

'அம்மாவுக்கு ஆபரேஷன் நடந்து, நான் இந்தக் கிச்சனில் வேலை செய்ய ஆரம்பித்தும் ஒரு மாசமாகப் போகிறது. நீ மட்டும் இன்னமும் என்னிடம் பேசாமல் இருக்கிறாய்.' அவனுடைய பார்வையை எதிர்கொண்ட தியானா உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

 

ஆனால், அந்த ஒரு பார்வையே அவளுக்குள் இருந்த உணர்வுகளை அலைக்கழிக்கப் போதுமானதாக இருந்தது.

 

ஹிஜாபுக்குள் தன் கண்களில் திரண்ட கண்ணீரை மறைத்துக்கொண்டாள்.

 

அவன் இத்தனை சிரமப்பட்டிருக்கிறான் என்பதை நினைத்ததும் அவளுக்குத் தன்னைப் பற்றியே கோபம் வந்தது.

 

அவனுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவன் எவ்வளவு தவித்திருப்பான்! பணத்துக்காக அவன் எத்தனை போராடியிருப்பான்!

 

தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள முடியாததால் விலகி நின்ற அவள், அவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டாளே.

 

அவனிடம் பேச வேண்டும் என்ற ஆசை மனதைப் பிசைந்தது.

ஆனால், பேசத் துணிவில்லை. கார் பிரணவ் இறங்க வேண்டிய இடத்தை நெருங்கியது.

 

பிரணவ் உடனே பணத்தை எடுத்தான்." அண்ணா, இது என்னோட திர்ஹாம். மேடமோட பயணக் கட்டணத்தை அவங்களிடமே வாங்கிக்கோங்க." என்று புன்னகையுடன் கூறிவிட்டு, டிரைவரிடம் விடைபெற்றான்.

 

தியானாவைத் திரும்பிப் பார்க்காமல் இறங்கிச் சென்றான்.

 

அவன் அப்படிச் சென்றது தியானாவுக்கு இன்னும் வலியை ஏற்படுத்தியது.

 

ஒரு காலத்தில் தன்னைப் பார்த்ததும் புன்னகைத்தவன், தன்னுடன் பேசுவதற்காகக் காத்திருந்தவன், இன்று தன்னை

ப் பார்க்காமலேயே சென்றுவிட்டான்.

 

அவள் எதிர்பார்த்தது அதைத்தானே? தன்னை மறந்துவிடும்படி அவனிடம் கூறியதும் அவள்தானே?

 

அப்படியிருக்க, இப்போது அவன் மேடம் என்று கூறி விலகிச் செல்வதைப் பார்த்து ஏன் மனம் வலிக்கிறது?

 

அவளுக்கே பதில் தெரியவில்லை.

 

-தொடரும். 

 


 
Posted : October 23, 2026 7:39 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 19)

இது தான் பிரணவ் காதலுக்கும், தியானா காதலுக்கும் உள்ள வித்தியாசமே. தியானா அவனோட நம்பிக்கைகளை புரிந்துக் கொள்ள
முயன்றாள், பிரணவ் அதற்கான முயற்சிகளைக் கூட எடுத்து வைக்கவில்லை. அவளுடைய மதம், குடும்பம், சூம்நிலைன்னு எதையும் புரிந்துக் கொள்ளவோ, அறிந்துகொள்ளவோ முயலவில்லை. எடுத்தேன், கவிழ்த்தேன் என்கிற மாதிரியே காதலை மட்டும் சொல்லிட்டான்
அவ்வளவு தான்.

அப்பாடா..! ஒரு மாச கதையை டிரைவர் மூலமா தியானாவுக்கு சொல்லி முடிச்சிட்டானா, தலை தப்பியது தியானா புண்ணியம்.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 23, 2026 2:24 pm

Scroll to Top