மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-15
அத்தியாயம்-15
உலக வாழ்க்கை ஒரு தற்காலிக அனுபவம்.
-குர்ஆன் 3:185
தியானாவும் பிரணவும் உயிரற்ற பொம்மைகளைப் போல நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இருவருடைய மனதிலும் ஒரே போராட்டம்.
ஒருவரை ஒருவர் விரும்பியும், அந்தக் காதலைக் கையில் ஏந்திக்கொண்டு வாழ்க்கையை நோக்கி ஒன்றாக நடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
தியானாவின் வார்த்தைகள் பிரணவின் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
‘என்னை மறந்துடுங்க, பிரணவ்!’ மறப்பது அவ்வளவு எளிதா என்ன? அவளிடம் தன் காதலைச் சொல்லிவிட்டால் மனதிலிருக்கும் பாரம் குறைந்துவிடும் என்று நினைத்தான்.
ஆனால், அவளிடம் காதலைச் சொன்ன பிறகுதான் அவளை இழந்துவிடுவோமோ என்ற பயம் அவனை இன்னும் அதிகமாக வாட்டியது
அவன் கையில் இருந்த கைப்பேசியை ஒருமுறை பார்த்தான். தியானாவிடமிருந்து ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் இப்போதும் அவனை விடவில்லை.
அவளிடமிருந்து எந்தச் செய்தியும் வராததைப் பார்த்ததும், எரிச்சலுடன் கைப்பேசியைத் தூரமாக வீசியெறிந்தான்.
அவனுடைய நடவடிக்கைகளை அறையின் மறுபுறத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.
பிரணவும் சூர்யாவும் நெருக்கமாக பழகியதில்லை. இருவரும் அறையைப் பகிர்ந்துக் கொள்ளும் நண்பர்கள் மட்டுமே. அதனால், அவனுடைய தனிப்பட்ட விஷயங்களில் அதிகமாகத் தலையிட சூர்யா விரும்பவில்லை.
ஆனால், மாலை வேலை முடிந்து அறைக்கு வந்ததிலிருந்து இரவு வரையிலும், மறுநாள் காலையிலும் பிரணவ் அவனுடன் தானே இருந்தான். வழக்கமாகச் சிரித்துப் பேசும் அவன், இப்போது எதையோ பறிகொடுத்தவன் போல அமைதியாக இருந்தது சூர்யாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவனருகில் வந்து அமர்ந்தான்.
"என்னடா பிரணவ், ஏன் ஒரு மாதிரியாவே இருக்க? வீட்டுல ஏதாவது பிரச்சனையா?"
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைடா."
"பின்ன என்ன? ஏதோ ஒண்ணைப் பறிகொடுத்தவன் மாதிரி இருக்கியே!" பிரணவ் சில நொடிகள் மௌனமாக இருந்தான். பிறகு, மனதுக்குள் அடைத்து வைத்திருந்த உணர்வுகளை இனியும் மறைக்க முடியாதவனாகத் தலையைக் குனிந்தபடி சொன்னான்.
"நான் தியானாவை லவ் பண்ணறேன் சூர்யா."
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சூர்யா அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
"என்னடா சொல்ற? அந்த முஸ்லிம் பொண்ணையா?"
"ம்.."
"அடப்பாவி அவ முஸ்லீம் பொண்ணு வேற. எப்போ இருந்து இந்தக் காதல்?"
"கொஞ்ச நாளாவே அவளைப் பிடிச்சிருந்தது. இப்போ அது காதல்னு புரிஞ்சிருச்சு."
பிரணவின் ஒற்றைச் சொல்லில் இருந்த வேதனையைச் சூர்யாவால் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும், நண்பனின் வாழ்க்கை சிக்கலாகிவிடுமோ என்ற கவலை அவனுக்கு அதிகமாக இருந்தது.
''டேய், நமக்கு இந்தத் தலைவலி எல்லாம் வேண்டாம்டா. பேசாம சைட் அடிச்சோமா, ரசிச்சோமான்னு கடந்து போயிட வேண்டியதுதானே! காதல் வர்றதெல்லாம் தப்பில்லை. ஆனா, வாழ்க்கைன்னு வரும்போது ஆயிரம் விஷயங்களை யோசிக்க வேண்டியிருக்கும். அதுவும் மதம் வேற வேறன்னா இன்னும் நிறையப் பிரச்சனைகள் வரலாம். பேசாம அவளை மறந்துட்டு உன் வேலையைப் பாரு." சூர்யா சொன்னதைக் கேட்ட பிரணவ் அவனை நிமிர்ந்து பார்த்தான்.
"அவள்கிட்ட காதலிக்கிறதைச் சொல்லிட்டேன்.'
"என்னடா குண்டு தூக்கி போடற" சூர்யா தன்னையும் அறியாமல் சத்தமாகக் கேட்டான்.
"எப்போடா?
"ஒரு வாரத்துக்கு முன்னாடி."
"ஒரு வாரத்துக்கு முன்னாடியா? இவ்வளவு பெரிய விஷயத்தை இப்போ வந்து சொல்றே?"
"அவளும் என்னைக் காதலிக்கிறா. ஆனா ரெண்டு பேரும் வேற வேற மதமென்ற காரணத்தால, இந்தக் காதல் வாழ்க்கைக்கு ஒத்துவராதுன்னு சொல்லி விலகப் பார்க்கிறா." சூர்யா பெருமூச்சு விட்டான்.
"அப்போ, அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. ஆனா, ஏத்துக்க முடியாம மதத்தை ஒரு காரணமா சொல்லி விலகுறா. கரெக்ட் தானடா. அவளே தெளிவா சொல்லிட்டா, உங்களால ஒண்ணா வாழ முடியாதுன்னு. அப்புறம் எதுக்கு அவளைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு இருக்க? அவளுடைய முடிவை மதிச்சு விலகுறதுதான் நல்லது." என்றான்.
"என்னால முடியலைடா சூர்யா.' அவளை மறக்க முடியலை. எனக்கு அவ வேணும்." என்று குழந்தை பொம்மையை கேட்டு அடம்பிடிப்பது போல கேட்டான்.
அடுத்த நொடி சூர்யாவின் முகம் மாறியது. "டேய்! என்ன விளையாடுறியா? காதலிக்கிறேன்னு சொல்றது வேற, வாழ்க்கை முழுக்க அவளோட வாழணும்னு நினைக்கிறது வேற. மதம், குடும்பம், எதிர்காலம், குழந்தைகள்... எத்தனையோ விஷயங்கள் இருக்கு. இதையெல்லாம் யோசிச்சுப் பார்த்தியா?" என்று அடுக்கியதற்கு பிரணவிடம் பதிலில்லை.
"உண்மையைச் சொல்லணும்னா, நீ இப்போ காதல்ல விழுந்திருக்க. எல்லாம் சரி தான். ஆனா, அந்தக் காதலை வாழ்க்கையா மாறும் போது உன்னால எல்லாத்திலும் விட்டுக்கொடுத்து போக முடியுமா? இல்லை உன் மதத்தை யோசிச்சிருக்கியா?"
சூர்யாவின் கேள்விகள் பிரணவின் மனதை மேலும் குழப்பின. தியானாவிடம் பேசும்போது அவள் எழுப்பிய கேள்விகளும் இப்போது சூர்யாவின் வாயிலிருந்து வெளிவந்தன.
அவளை இழக்கக் கூடாது என்று நினைத்திருந்தான். ஆனால், அவளோடு வாழ்வதற்காகத் தன்னால் என்னென்ன செய்ய முடியும் என்று இதுவரை முழுமையாக யோசித்திருக்கவில்லை. அந்த நேரம் சூர்யா வீட்டிலிருந்து அழைப்பு வரவும் "சரி, இப்போ இதைப் பத்திப் பேசிப் பயனில்லை. நீ கொஞ்சம் அமைதியா இரு. நான் வீட்டுல பேசிட்டு வர்றேன்." நண்பனின் முகத்தில் இருந்த வேதனையைப் பார்த்தபடி எழுந்த சூர்யா, தன் மனைவியுடன் பேசுவதற்காக அறையின் மறுபுறம் சென்றான்.
பிரணவ் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தான். 'அவளுக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் ஆனா என்ன செய்யறது' அந்தக் கேள்விக்கு அவனிடம் இன்னும் பதில் இல்லை.
சிறிது நேரத்தில் பிரணவின் கைப்பேசியும் ஒலித்தது.
திரையில் அண்ணன் நிர்மலின் பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்றான்.
"சொல்லுண்ணா! எப்படி இருக்கீங்க? அம்மா நல்லா இருக்காங்களா?"
"நாங்க எல்லாரும் இருக்கோம்டா. நீ எப்படி இருக்க? வேலை எல்லாம் ஒழுங்கா போகுதா?"
"ம்... நல்லா போகுதுண்ணா." என்றான்.
"சரி, ஒரு விஷயம் சொல்லணும்.” நிர்மலின் குரலில் இருந்த தயக்கம் பிரணவுக்கு ஏதோ விபரீதம் நடந்திருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
“என்னண்ணா? என்னாச்சு?'' என்று கேட்டான
"பிரணவ் இதை எப்படி சொல்லறதுனு தெரியலை. ஆனா அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சுடா."
"என்னண்ணா சொல்றீங்க?" பிரணவ் பதற்றத்துடன் எழுந்து நின்றான்.
"அன்னைக்கு அம்மா வீட்டுல இருந்தவங்க திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க. நினைவே இல்லாம இருந்ததால உடனே ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனோம். பரிசோதனை பண்ணிப் பார்த்துட்டு, ஹார்ட் அட்டாக் வந்திருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.
பிரணவின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டதைப் போல இருந்தது.
"அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்கா?"
"ஆமாடா. இதயத்துல ரெண்டு மூணு இடத்துல அடைப்பு இருக்குன்னு டாக்டர் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லியிருக்கார். இப்போதைக்கு மருந்து மாத்திரை கொடுத்து நிலைமையைச் சமாளிச்சிருக்காங்க. ஆனா, அடுத்தது என்ன பண்றதுன்னு தெரியலைடா." நிர்மலின் குரலில் இருந்த கலக்கம் பிரணவையும் நிலைகுலையச் செய்தது.
அம்மாவின் முகம் அவன் கண்களுக்கு முன்னால் வந்தது. தன்னை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகக் குடும்பம் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வந்தன. அவனுடைய எதிர்காலத்துக்காக எத்தனையோ ஆசைகளை ஒதுக்கி வைத்திருந்த அம்மா, இப்போது மருத்துவமனையில் படுத்திருக்கிறார் என்ற செய்தியை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"அண்ணா... அம்மா இப்போ எப்படி இருக்காங்க?"
"இப்போ பரவாயில்லைடா. ஆனா, டாக்டர் சொன்னதைக் கேட்டதிலிருந்து மனசே சரியில்லை. ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்னு கூட இன்னும் முழுசா தெரியலை. அதான் உன்கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்." பிரணவ் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
அம்மாவைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி என்று தெரியவில்லை. கையில் இருந்த பணம் போதுமா என்பதும் புரியவில்லை.
"நான்... ஏதாவது வழி கிடைக்குமான்னு பார்க்கிறேண்ணா." அவனுடைய குரல் உடைந்தது.
அந்த நேரத்திலும் நிர்மல் ஏதோ சொல்லத் தயங்குவது போல இருந்தான்.
"இன்னொரு விஷயம் இருக்குடா..."
"என்னண்ணா?"
"நான் மறுபடியும் அப்பாவாகப் போறேன்டா!" ஒரு கணம் பிரணவுக்குப் புரியவில்லை.
"என்னண்ணா சொல்றீங்க?"
"உங்கண்ணி திரும்ப கன்சீவா இருக்காடா. இன்னைக்குத்தான் உறுதியா தெரிஞ்சது."
நிர்மலின் குரலில் இருந்த மகிழ்ச்சி, அவனுடைய தம்பியின் மனநிலையை நினைத்து அடுத்த நொடியே அடங்கியது.
"இந்தச் சந்தோஷமான விஷயத்தை உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். ஆனா, அம்மாவுக்கு இப்படி ஆனதால எதையும் சந்தோஷமா சொல்ல முடியலைடா."
அத்தனை கவலைகளுக்கு நடுவிலும் அண்ணனுக்குக் கிடைத்த அந்தச் செய்தி பிரணவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
"அட, வாழ்த்துகள்ணா! ரொம்ப சந்தோஷமா இருக்கு. அண்ணிக்கிட்டயும் என் வாழ்த்துகளைச் சொல்லுங்க. அண்ணி இருக்காங்களா?" என்று கேட்க, "அவ கவினுக்கு சாப்பாடு வாங்கி ஊட்டிவிட கேன்டீன் போயிருக்கா. நான் அம்மா இருக்கற ஐசியூ வார்டுக்கு வெளியே இருக்கேன். சங்கரி வந்ததும் சொல்லறேன். கவின் கூட உன்னோட பேசணும்னா ஆசைப்பட்டான். ஆனா அம்மாவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டா வரவும் முகமே டல்லாகிடுச்சு."
பிரணவ் குரலில் இருந்த சோர்வுக்கிடையே ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.
"நல்லதும் கெட்டதும் கலந்து வர்றது தானே வாழ்க்கை, அண்ணா. கவலைப்படாதீங்க. அம்மாவையும் நல்லபடியா பார்த்துக்கலாம். எல்லாம் சரியாகிடும். அண்ணியிடம் கேட்டதாக செல்லுங்க. கவினிடம் பிறகு பேசறேன் ." தன் மனமே உடைந்து கிடந்தாலும், அண்ணனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான் பிரணவ்.
அந்த வார்த்தைகளைச் சொன்னபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு தியானாவின் கதையில் படித்த வரிகள் நினைவுக்கு வந்தன.
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துயரமும் மாறி மாறி வருவது இயல்புதான். ஒரு துயரம் வந்துவிட்டதென்று வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைத்துவிடக் கூடாது
அவளுடைய கதைகளில் வரும் வரிகள், இப்போது அவனுடைய வாழ்க்கையிலேயே எதிரொலிப்பது விந்தையாக இருந்தது.
தியானாவை நினைத்ததும் அவனுடைய மனம் மீண்டும் கனத்தது.
"சரி, அண்ணா. அண்ணியை நல்லா பார்த்துக்கோங்க. அம்மாவையும் கவனமா பார்த்துக்கோங்க. ஆபரேஷன் பத்தி டாக்டர் என்ன சொல்றார்னு எனக்குச் சொல்லுங்க. நான் இங்கே பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்த்துட்டு உங்களுக்குக் கூப்பிடுறேன்."
"சரிடா. நீயும் உடம்பைப் பார்த்துக்கோ." அழைப்பு துண்டிக்கப்பட்டதும் பிரணவ் கைப்பேசியை மெதுவாகக் கீழே இறக்கினான்.
ஒரே நேரத்தில் எத்தனை பிரச்சனைகள்.
ஒருபுறம் தியானாவுடனான காதல். மறுபுறம் அம்மாவின் உடல்நிலை. அண்ணனின் புதிய வாழ்க்கை, வரவிருக்கும் குழந்தை, மருத்துவச் செலவுகள். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எப்படி எதிர்கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
அம்மாவுக்குத் தேவையான பணத்தை எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் இப்போது அவனுடைய முதல் கடமை.
அறைக்குள் இங்கும் அங்கும் நடந்தவன், கடைசியில் நாற்காலியில் அமர்ந்தான். தனக்குத் தெரிந்த வழிகளை ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்தான். ஆனால், உடனடியாகப் பணம் கிடைக்கக்கூடிய எந்த வழியும் அவனுக்குத் தோன்றவில்லை.
வீட்டிலிருந்து கடன் வாங்கிச் சமாளிக்க முடியாத நிலைமை. அண்ணனும் தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியவன். இப்போது அம்மாவின் மருத்துவச் செலவும் சேர்ந்துவிட்டது.
‘என்ன செய்யலாம்?’ நீண்ட நேரம் யோசித்தும் அவனுக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.
மறுநாள் நேராகத் தன்னுடைய சீனியர் செஃப் மாதவனைச் சந்தித்துப் பேச வேண்டும். அவசரமாகப் பணம் தேவைப்படுவதை விளக்கி, முன்பணமாக ஏதாவது தொகை கிடைக்குமா என்று கேட்க வேண்டும்.
அது கிடைத்தால், அம்மாவின்
சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
அந்த நம்பிக்கையோடு அன்றைய இரவை எப்படியோ கடத்தினான் பிரணவ்.
ஆனால், அவன் எதிர்பார்த்தது போல மறுநாள் அமையுமா?
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 15)
சூர்யா சொல்றது உண்மை தானே,
காதலிக்கிறேன்னு சொல்றது வேற, வாழ்க்கை முழுக்க அவளோட வாழணும்ன்னு நினைக்கிறது வேற. மதம், குழந்தைகள், எதிர்காலம்ன்னு..
எத்தனையோ முரண்பாடுகள்
இருக்குத்தானே ?
ஆக மொத்தம் அண்ணன்காரன் நிர்மல், தன்னோட காரியத்துல மட்டும் கருத்தா இருந்திருக்கான்னுத் தெரியுது.
துன்பமான விஷயம் தம்பிக்கு, சந்தோஷமான விஷயம் அண்ணனுக்கு. அதாவது செலவு தம்பிக்கு, வரவு அண்ணனுக்கு..
என்னவொரு ப்ளானிங் மைண்டுடா ?
எனக்கென்னவோ, ப்ரணவ் வேற வழியில்லாமல் பணத்துக்காக நான்வெஜ் சமைக்கிற பொறுப்பை வலியப்போய் ஏத்துப்பான்னுத் தோணுது.
😴😴😴
CRVS (or) CRVS2797
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-20
1 hour ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-20
4 hours ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-19
22 hours ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-18
2 days ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-17
2 days ago
Currently viewing this topic 1 guest.
- 26 Forums
- 380 Topics
- 1,923 Posts
- 3 Online
- 442 Members
