மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-14
அத்தியாயம்-14
தியானா பேசிவிட்டு எழவும், "அவ்வளவு சுலபமா சொல்லிட்ட, தியானா?" என்றவன் பேச்சில் நின்றாள்
அவள் பதில் சொல்லவில்லை.
"நீ என்னைக் காதலிக்கிற. நானும் உன்னைக் காதலிக்கிறேன். அதை ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டோம். ஆனா, நம்ம காதல் நமக்குச் செட்டாகாதுன்னு நீயே முடிவும் பண்ணிட்ட. இதுல என் மனசுக்கு இடமே இல்லையா?" என்றான்.
எழுந்தவள் மீண்டும் சலிப்புடன் அமர, "பிரணவ், நான்" என்றவளிடம், "இல்லை, தியானா. நீ என்னை விரும்புறது உண்மை. மதம் காரணமா என்னை விட்டுப் போக நினைக்கிறதும் உண்மை. அந்த முடிவை எடுக்க உனக்கு உரிமை இருக்கு. நான் அதை மறுக்கலை.'' அவன் குரல் சற்றே தணிந்தது.
"ஆனா, ஒரு விஷயம் கேட்கிறேன். எத்தனை நாள் உன்னோட மனசை நீயே ஏமாத்திக்க முடியும்?" தியானா அவனைப் பார்த்தாள்.
"என்னை விரும்புற. அதை உன்னால மறுக்க முடியலை. இப்போ என்னை விட்டுப் போயிடலாம்னு முடிவு பண்ணியிருக்க. சரி. என்னை மனசுல இருந்து தூக்கி எறிஞ்சுட்டு, இரண்டு மூணு வருஷம் கழிச்சு உங்க வாப்பா சொல்ற ஒருத்தரைத் திருமணம் செய்துக்க உன்னால முடியுமா? என்னை தவிர்த்து வேறொருத்தனை உன்னால நேசிக்க முடியுமா?" என்றதும் அவள் திடுக்கிட்டாள்.
"பிரணவ்" என்று உச்சரித்தாள். ஏன் இவ்வாறு பேசுகின்றானென்ற வலி.
"சும்மா கேட்கிறேன், தியானா. உன் மனசுல நான் இருக்கும்போது, வேற ஒருத்தரை வாழ்க்கைத் துணையா ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படி ஏற்றுக்கிட்டாலும், நம்ம காதலை மறந்துட்டுத்தான் அந்த வாழ்க்கைக்குள் போவியா?
அல்லா மீதான நேசத்தால் நாள் தவறாம தொழுகை பண்ணறதா சொல்லறியே.. அந்த அல்லா ஒருத்தனை நேசிச்சிட்டு அவன் மனதை காயப்படுத்திட்டு இன்னொருத்தரை ஏத்துக்கோனு சொல்லிருக்காரா?" அவள் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
பிரணவ் அவளைத் துன்புறுத்த வேண்டும் என்று பேசவில்லை. ஆனால், அவள் எளிதாக எடுத்துவிட்ட முடிவுக்குப் பின்னால் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை அவளுக்குப் புரியவைக்க விரும்பினான்.
"மதம் உனக்கு முக்கியம்னு எனக்குப் புரியுது. அதைக் குறை சொல்ல நான் யாரு? ஆனா, காதலிச்ச ஒருத்தனை மறந்துட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் செய்துக்கிறதுதான் அதற்கான ஒரே வழியா?'' தியானாவின் கண்கள் கலங்கின.
"நீங்க என்னை இன்னும் கஷ்டப்படுத்துறீங்க." என்றாள்.
"உன்னை நான் கஷ்டப்படுத்த விரும்பலை. ஆனா, உன் மனசுக்குள்ள இருக்கிற உண்மையை நீயே பார்க்கணும்னு நினைக்கிறேன். நான் பேசறதே கஷ்டம்னா.. உனக்கு அதை தான் வருங்காலம் வாழ்க்கையா முன்ன நிற்கும்." என்றான்.
"இன்னொரு விஷயம். நம்ம குழந்தைக்கு என் பெயரை வச்சு சமாளிக்கலாம்னு கூட நினைக்க முடியாது." என்றான் கேலியாக.
அவள் புரியாமல் பார்த்தாள். "ஏன்னா, என் பெயர் பிரணவ். அது வெறும் பெயர் இல்லை. சமஸ்கிருதத்தில் ‘பிரணவம்’ என்பது புனிதமான ‘ஓம்’ என்ற ஒலியைக் குறிக்கிற பெயர். என்னோட மத அடையாளத்தோடு தொடர்புடைய பெயர்." என்றான். அவனுடைய பேச்சு அவளை மேலும் மௌனமாக்கியது.
"நான் உன்னை நேசிக்கிறேன் என்பதற்காக, நீ உன் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கணும்னு நான் சொல்ல முடியாது. அதேபோல, நீ என்னைக் காதலிக்கிற என்பதற்காக நான் யார் என்பதையே மறந்துடணும்னு இல்ல. நாம பேசி முடிவு செய்வோம்" அவன் சொன்னது அவளுக்குள் ஆழமாகப் பதிந்தது.
ஆனால், அவள் வந்த முடிவிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை.
"அவசியமில்லை பிரணவ். நான் எப்படியாவது உன்னை மறந்துடுவேன்" என்று அவள் இமைகளை மூடிக்கொண்டு சொன்னாள்.
"உங்களுக்கு என்ன? நீங்க உங்க வாழ்க்கையைப் பார்த்துக்கலாம்.”
அவளுடைய குரலில் இருந்த வலியை உணர்ந்தும், பிரணவால் அமைதியாக இருக்க முடியவில்லை.
"அவ்வளவு எளிதா என்னை மறந்துடுவியா?"
"மறந்துடுவேன்"
தியானா அவனை வெறித்துப் பார்த்தாள்.
அவளுடைய கண்களில் காதலும் கோபமும் வலியும் ஒன்றாகக் கலந்திருந்தன.
"உங்களால முடியுமா, பிரணவ்? நீங்க மட்டும் என்ன உங்க மனசுக்குத் தோணினதை எல்லாம் காதலுக்காக தியாகம் செய்ய முடியுமா?" அவன் புரியாமல் பார்த்தான்.
"மதம் ஒரு பிரச்சினையே இல்லைன்னு பேசுறீங்க. காதலிச்சா எல்லாமே சரியாகிடும்னு நினைக்கிறீங்க. ஆனால், எதார்த்தம் அப்படியா இருக்கு?" அவள் குரல் உயர்ந்தது.
"நம்ம ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்ல இப்போ என்ன நடக்குதுன்னு தெரியுமா? அசைவ உணவுப் பிரிவில் ஆட்கள் இல்லாம வேலை பாதிக்கப்பட்டிருக்கு. சைவப் பிரிவில் இருக்கிறவங்களைக் கூடுதல் சம்பளம் தர்றோம்னு சொல்லி அங்கே உதவ வரச் சொல்றாங்க. ஆனா, நீங்க என்ன சொன்னீங்க? எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கே போய் வேலை செய்ய முடியாதுன்னு மறுத்துட்டீங்க!" என்று கூறினாள். எல்லாம் மேனேஜர் சூப்பர்வைசர் புண்ணியத்திலும், பிரணவ் வேலை செய்யும் இடத்தில் நடக்கும் பிரச்சனையை அறிந்துக்கொள்ளும் ஆர்வமுமாக தெரிந்து வைத்திருந்தாள்.
"அது வேலை என்னோட விருப்பம் தியானா." என்று குழப்பமாய் உரைத்தான்.
"ஆமா. உங்க விருப்பம் தான். உங்க நம்பிக்கை தான். அதை மீறி உங்களால செய்ய முடியாதுன்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க. அதேபோலத் தான் எனக்கும் என் நம்பிக்கை இருக்கு!" அவளுடைய கண்களில் கண்ணீர் திரண்டது.
"எங்க வீட்டுல வாரத்துக்கு மூணு நாள் அசைவம் சமைப்போம். அது எங்க குடும்பத்தோட உணவுப் பழக்கம். நாளைக்கு நாம ஒரே வீட்டுல வாழ்ந்தா என்ன செய்வோம்? நீங்க சைவ உணவு மட்டும் தான் சமைப்பீங்களா? எங்க வீட்டுல இருக்கிறவங்க சாப்பிடுற உணவைக்கூட உங்களால ஏற்றுக்கொள்ள முடியாத நிலை வந்தா, அதை எப்படிச் சமாளிப்போம்?" அவள் கேள்விகள் ஒவ்வொன்றாக அவன் முன்னால் விழுந்தன.
"உங்களுக்கு சில கொள்கை இருக்கு. எனக்கு என் நம்பிக்கை முக்கியம் வாழ்க்கை முறை இருக்கு. அப்படியிருக்க, நம்ம காதலுக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க முடியும்னு எப்படிச் சொல்றீங்க?" பிரணவ் அவளை இடைமறிக்க முயன்றான்.
''தியானா, நான் அப்படி"
"வேண்டாம்!"
அவள் கையை உயர்த்தி அவனைத் தடுத்தாள்.
"என்னைப் பார்த்து, உங்களை எப்படி மறப்பேன்னு கேட்கிறீங்க. முதல்ல உங்களை நீங்களே கேட்டுக்கோங்க. உங்களுடைய நம்பிக்கைகளை மீறி, என்னோட வாழ்க்கைக்குள் வரத் தயாரா இருக்கீங்களா? இல்லையா காதல் மட்டும் போதும்னு நினைக்கிறீங்களா?" அந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை பிரணவால்.
ஏனெனில், இதுவரை அவன் அவளைப் பற்றித்தான் யோசித்திருந்தான். அவளுடைய காதலைப் பெற வேண்டும், அவளுடைய குடும்பத்திடம் பேச வேண்டும், இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசைகள்தான் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.
ஆனால், அந்த வாழ்க்கையில் என்னென்ன மாறும்? எதையெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்? எதை விட்டுக்கொடுக்கவே முடியாது?
அந்தக் கேள்விகளை அவன் முழுமையாக எதிர்கொண்டதே இல்லை.
தியானா அவனை இன்னும் சில நொடிகள் பார்த்தாள்.
பிறகு, தன் கண்களில் திரண்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் மறைக்க முயன்று முகத்தைத் திருப்பினாள்.
அவள் நகர முயன்றபோது, காற்று வேகமாக வீசியது. அவளுடைய ஹிஜாபின் ஒரு பகுதி விலகி அசைந்தது. உடனே அதைச் சரிசெய்துகொண்டாள்.
அந்தச் சிறிய அசைவைக்கூடக் கவனித்த பிரணவ், அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
'என்னால் உங்களை மறக்க முடியுமா என்று கேட்கிறீர்களே, பிரணவ்... எனக்கே தெரியவில்லை' அந்த உண்மையை மனதுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டாள்.
வெளியே, அவளுடைய குரல் மட்டும் உறுதியாக ஒலித்தது.
"நான் எப்படியாவது மறந்துக்கறேன். இனிமேல் என்னைத் தேடி வராதீங்க. நாம பழகினதை இத்தோட நிறுத்திக்கலாம்." அவள் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
பிரணவ் அவளைத் தடுக்கவில்லை.
அவள் சில அடிகள் சென்றதும், அவனுடைய குரல் பின்னால் கேட்டது.
"தியானா" என்றான்
அவள் நின்றாள். ஆனால், திரும்பிப் பார்க்கவில்லை.
"நீ சொன்ன கேள்விகளுக்கு இப்போ என்னிடம் பதில் இல்லை. அதை நான் ஒத்துக்கிறேன். ஆனா, பதில் இல்லைன்னு சொல்லிட்டு உன்னை நேசிக்கிறதை மட்டும் என்னால நிறுத்த முடியாது.”
அவளுடைய தோள்கள் லேசாக நடுங்கின.
"உன்னைக் காதலிக்கிறதுக்காக நீ உன் நம்பிக்கையை விட்டுக்கொடுக்கணும்னு நான் கேட்க மாட்டேன். அதேபோல, என் மனசுல இருக்கற உன்னை மறக்கவும் முடியாது." அவன் குரலில் இருந்த வலி அவளைத் திரும்பிப் பார்க்கத் தூண்டியது.
ஆனால், அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
'என்னை மறந்துடுங்க, பிரணவ்' என்று மட்டும் சொல்லிவிட்டு நடந்தாள்.
அவள் சென்ற பாதையைப் பார்த்தபடி நின்றிருந்தான் பிரணவ்.
அவளுடைய கண்களில் இருந்த காதலை அவன் பார்த்திருந்தான். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த வலியையும் உணர்ந்திருந்தான்.
ஆனால், அவள் எழுப்பிய கேள்விகளுக்கு அவனிடம் பதில் இல்லை.
அவளை இழக்க விரும்பவில்லை.
அதே நேரத்தில், அவளைப் பெறுவதற்காகத் தன்னுடைய நம்பிக்கைகளை எவ்வளவு தூரம் மாற்றிக்கொள்ள முடியும் என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை.
அன்று முதல் முறையாக, காதல் என்பது ஒருவரை ஒருவர் விரும்புவதில் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்பதை அவன் உணர்ந்தான்.
அதற்குப் பின்னால் வாழ்க்கை இருக்கிறது. நம்பிக்கைகள் இருக்கின்றன. விட்டுக்கொடுக்க முடியாத கொள்கைகள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோமா என்பதுதான் உண்மையான கேள்வி.
தியானா அவன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள்.
ஆனால், அவள் கேட்ட கேள்விகள் மட்டும் அவனுடைய மனதிலிருந்து மறையவில்லை.
அவளைப் பெறுவதற்காகப் பிரணவ் தன்னை மாற்றிக்கொள்வானா? அல்லது, தன்னுடைய காதலை மறந்து அவள் எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வானா? அவனுக்கே குழப்பமாய் தான் இருந்தது.
- தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 14)
காதல்ன்னா... டெய்லி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து நாலு வார்த்தை பேசிட்டு, அவளுக்குப் பிடிச்சதை வாங்கி கொடுத்து, அவனுக்குப் பிடிச்சதை அவன் வாங்கி தின்னுட்டு.. ஹாய், பாய்ன்னு சொல்லிட்டுப்போறது ரொம்பவே சுலபம்.
ஆனால், கல்யாணம் என்கிற கமிட்மென்ட்ஸ்க்குள்ள வந்துட்டால் நிறைய விட்டுக் கொடுத்தல், அனுசரிப்பு, புரிதல்ன்னு எத்தனையோ இருக்கும். வெறும் அரைமணியோ, ஒரு மணி நேர சந்திப்போ கிடையாது கல்யாணம் என்பது. கல்யாணம் பண்ற ரெண்டு பேருமே வீடு என்னும் ஒரே கூரையின் கீழ் வாழ ஆரம்பிக்கிறச்ச தான்... இருவரின் நிறை குறைகளும் தெரிய வரும்.
அதை தாக்குப்பிடித்தால் தான் இருவருமே சேர்ந்து வாழ முடியும்.
இல்லை என்றால் பிரிதல் அங்கு நிச்சயமாகி விடுகிறது. ஒரு முடிவை எடுப்பது அத்தனை சுலபமல்ல, எடுத்த பிறகு அதிலிருந்து பின்வாங்குவதை
விட அசிங்கம்,கோழைத்தனம் வேறெதுவும் இல்லை. இது தான் நிதர்சனம்.
எனக்கென்னவோ, தியானா யோசிச்ச அளவுக்கு பிரணவ் யோசிக்கவில்லையோ என்று தோணுகிறது.
😴😴😴
CRVS (or) CRVS2797
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-20
57 minutes ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-19
1 day ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-18
2 days ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-17
2 days ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-16
4 days ago
- 26 Forums
- 379 Topics
- 1,924 Posts
- 2 Online
- 442 Members
