மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-13
அத்தியாயம்-13
தியானாவின் பதிலுக்காகக் காத்திருந்த பிரணவுக்கு, ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது.
அவன் அனுப்பிய செய்தியைப் படித்த பிறகு தியானா என்ன நினைத்திருப்பாள்? அவளுடைய மனதிலும் தன்மீது காதல் இருக்கிறது என்று அவன் நம்பினான். ஆனால் அந்தக் காதலை அவள் ஏற்றுக்கொள்வாளா? இல்லை, மதத்தைக் காரணம் காட்டி அவனை விட்டு விலகிவிடுவாளா?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் அவனுடைய மனம் தவித்துக் கொண்டிருந்தது.
மறுபுறம், தியானாவோ தனியறையில் அமர்ந்துகொண்டு பிரணவ் அனுப்பிய செய்தியை மீண்டும் மீண்டும் படித்தாள்.
ஒவ்வொரு முறையும் அவன் எழுதிய வரிகள் அவளுடைய இதயத்தை ஏதோ செய்தன. உதடுகளில் புன்னகை அரும்பியது. அடுத்த நொடியே கண்கள் கலங்கின.
'நான் உன்னை விரும்புறேன், தியானா' அந்த ஒற்றை வரி அவளுக்குள் ஆயிரம் உணர்வுகளை எழுப்பியது.
தன்னை ஒருவர் இத்தனை ஆழமாக நேசிக்கிறார் என்பதை நினைத்தால் மனம் மகிழ்ந்தது. அதே நேரத்தில், அந்தக் காதலை ஏற்றுக்கொண்டால் என்னவெல்லாம் நடக்கும் என்ற பயமும் அவளைச் சூழ்ந்துகொண்டது.
நானும் அவரைக் காதலிக்கிறேனே. அந்த உண்மையை அவளால் மறுக்க முடியவில்லை.
பிரணவின் குரலைக் கேட்க வேண்டும் என்று தோன்றிய நாட்கள் எத்தனை? அவனுடன் சேர்ந்து பயணிக்க முடியாமல் போனபோது ஏமாற்றமடைந்த தருணங்கள் எத்தனை? அவன் தன்னிடம் பேசாமல் போனால் காரணம் தேடி மனம் அலைந்த நேரங்கள் எத்தனை?
அப்படியிருக்க, அவனைப் பிடிக்கவில்லை என்று எப்படிப் பொய் சொல்ல முடியும்?
ஆனால், காதலிப்பது ஒன்றும் திருமணம் செய்துகொள்வது ஒன்றும் எளிதல்ல.
அவளுடைய வாழ்க்கையில் மதம் என்பது ஏதோ பெயரளவுக்கு இருந்த அடையாளம் அல்ல. சிறு வயதிலிருந்து அவளோடு வளர்ந்த நம்பிக்கை. தினமும் தொழுகையில் தலைவணங்கிய இறைவன் மீதான பற்றுதல். தன் வாழ்வின் முக்கியமான முடிவுகளிலும் அவள் விட்டுக்கொடுக்க விரும்பாத ஒன்று.
அப்படியிருக்க, தன் காதலுக்காக அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட அவளால் முடியுமா?
பிரணவிடம் தன்னுடைய காதலை ஒப்புக்கொண்டால், அடுத்ததாக அவன் என்ன செய்வான்? அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவான். அதற்காக அவளுடைய குடும்பத்திடம் பேச முன்வருவான். ஆனால், அவளுடைய குடும்பம் அவனை ஏற்றுக் கொள்ளுமா?
அவளுக்கே தெரியாத கேள்விகளுக்கு அவனிடம் என்ன பதில் சொல்வது?
தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு அழுதாள்.
காதலிக்கக் கூடாது என்று தன் மனதுக்குக் கட்டளையிட்டிருக்கலாம். ஆனால், காதலித்துவிட்ட பிறகு அந்த உணர்வை அழித்துவிட முடியும் என்று யார் சொன்னது?
கண்ணீரைத் துடைத்தவள், ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்டாள்.
இப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்த்துக்கொண்டும், மனதுக்குள் காதலைச் சுமந்துகொண்டும் வாழ்வது சரியல்ல. இந்தப் பழக்கத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
அவனிடம் தன்னுடைய முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.
முடிவு செய்தவள், கைப்பேசியை எடுத்தாள்.
தியானா: நாளை மாலை உங்களைச் சந்திக்க வேண்டும். வேலை முடிந்ததும் கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?"
செய்தி அனுப்பிய சில நொடிகளிலேயே பதில் வந்தது.
பிரணவ்: முடியும். எங்கே சந்திக்கலாம்?
தியானா: ஹோட்டலுக்கு வெளியே இருக்கும் காபி ஷாப்பில். வேலை முடிந்ததும் வருகிறேன்.
பிரணவ்: சரி வெயிட் பண்ணறேன்.
அந்தப் பதிலைப் பார்த்ததும் பிரணவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
பதினைந்து நாட்களாக அவனைத் தவிக்கவைத்தவள், இன்று தானாகவே சந்திக்க அழைத்திருக்கிறாள். ஒருவேளை அவளும் தன்னுடைய காதலை ஒப்புக்கொள்ளப் போகிறாளோ?
அந்த நம்பிக்கை அவனுக்குள் துளிர்விட்டது. அதே நேரத்தில், அவனுடைய மனதின் ஓரத்தில் இன்னொரு எண்ணமும் தோன்றியது.
ஒருவேளை என்னை மறுக்கப் போகிறாளோ? அந்த எண்ணத்தை உடனே ஒதுக்கிவைத்தான்.
நாளை எதுவாக இருந்தாலும் அவளிடம் மனம் திறந்து பேசிவிட வேண்டும். அவள் காதலை ஏற்றுக்கொண்டால், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று இருவரும் சேர்ந்து யோசிக்கலாம்.
அவனுடைய எதிர்பார்ப்புகள் வளர்ந்துகொண்டிருந்தன.
ஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னால் நிற்கப்போகும் கேள்விகள் அவனுக்குத் தெரியவில்லை.
அந்த ஆனந்தத்திலேயே அடுத்த நாள் வேலைக்கு புறப்பட்டு வந்தான்.
ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டலில் அன்றைய நாள் வழக்கத்தை விடப் பரபரப்பாக இருந்தது.
சமையலறையில் ஏற்கெனவே வேலைப்பளு அதிகமாக இருந்த நிலையில், நிர்வாகத்திடமிருந்து வந்த ஒரு தகவல் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
போலியான பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி வேலைக்கு வந்திருந்த சிலர் கண்டறியப்பட்டதால், அவர்களுடைய பணியை நிர்வாகம் நிறுத்தியிருந்தது. அவர்கள் அதிகாரிகள் அழைத்து சென்றுயிருக்க, அதில் அசைவ உணவுப் பிரிவில் பணியாற்றிய நான்கு பேரும் அடங்குவர். சைவ உணவுப் பிரிவிலும் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இதனால் இரு பிரிவுகளிலும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
குறிப்பாக, அசைவ உணவுப் பிரிவில் ஒரே நேரத்தில் பல ஆர்டர்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததால், அங்கிருந்த சமையல்காரர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது.
பிரணவ் வேலை செய்த சைவ உணவுப் பிரிவிலும் ஆட்கள் குறைந்திருந்ததால், ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வேலையோடு கூடுதல் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
அன்றைய பரபரப்புக்கு இடையே, மேற்பார்வையாளர் சமையலறைக்குள் வந்தார்.
“எல்லாரும் ஒரு நிமிஷம் கவனிங்க!” என்று அவர் குரல் கொடுக்க, சமையலில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களுடைய வேலையைச் சற்றே நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தனர்.
"அசைவ உணவுப் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை அதிகமா இருக்கு. அங்கே வேலை செய்றவங்களால எல்லா ஆர்டர்களையும் குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியலை. அதனால, சைவப் பிரிவில் இருக்கிறவங்கள்ல வேகமாவும், சுவையாவும் சமைக்கத் தெரிஞ்சவங்க யாராவது அங்கே உதவ முன்வந்தா, அதற்காகக் கூடுதல் ஊதியம் வழங்க நிர்வாகம் முடிவு செய்திருக்கு."
அவர் சொல்லி முடித்ததும் சமையலறையில் ஒருவித அமைதி நிலவியது. கூடுதல் ஊதியம் என்பது எல்லோருக்கும் தேவைதான். வெளிநாட்டில் வேலை செய்து குடும்பத்துக்குப் பணம் அனுப்புகிறவர்களுக்கு, கிடைக்கும் ஒவ்வொரு கூடுதல் தொகையும் முக்கியமானது.
ஆனால், சைவ உணவுப் பிரிவில் வேலை செய்பவர்கள் பலருக்கும் அசைவ உணவுகளைத் தயாரிப்பதில் விருப்பமில்லை. சிலருக்கு அது தனிப்பட்ட விருப்பம். இன்னும் சிலருக்குத் தங்களுடைய உணவுப் பழக்கத்தோடும் நம்பிக்கையோடும் தொடர்புடைய விஷயம்.
எனவே, கூடுதல் பணம் தருவதாகக் கூறியபோதும் பலரும் மறுத்துவிட்டனர்.
பிரணவும் அவர்களில் ஒருவன்.
"சாரி, சார். என்னால அங்கே போய் வேலை செய்ய முடியாது," என்று அவன் தெளிவாகச் சொல்லிவிட்டான்.
மேற்பார்வையாளர் அவனை ஒருமுறை பார்த்தார். "பிரணவ், கூடுதல் சம்பளம் கிடைக்கும். உன்னோட திறமை எங்களுக்குத் தெரியும். கொஞ்ச நாளைக்கு உதவி செய்தா போதும்."
"புரியுது, சார். ஆனாலும் என்னால முடியாது." அவன் குரலில் தயக்கம் இல்லை.
மேற்பார்வையாளர் வேறு சிலரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகும் சமையலறையின் பரபரப்பு குறையவில்லை.
ஒருபுறம் காய்கறிகளை நறுக்குவது, மறுபுறம் உணவுகளைத் தயாரிப்பது, இன்னொருபுறம் ஆர்டர்களைச் சரிபார்ப்பது என்று எல்லோருடைய கைகளும் ஓய்வின்றி இயங்கின.
பிரணவும் தன்னுடைய வேலையில் முழுமையாக மூழ்கினான்.
அவன் சைவ உணவுகளைத் தயாரிப்பதில் திறமையானவன். தன்னுடைய பணியை விரும்பிச் செய்பவன். ஆனால், கூடுதல் பணம் கிடைக்கும் என்பதற்காகத் தனக்குச் சரியென்று தோன்றாத ஒன்றைச் செய்ய அவன் விரும்பவில்லை.
சில நேரங்களில் மனிதர்கள் பெரும் தொகையைக்கூட தன் கொள்ளைக்காக மறுப்பார்கள். அதற்குப் பின்னால் பணத்தைவிட வலிமையான ஏதோ ஒன்று இருக்கும்.
அந்த நேரத்தில் பிரணவின் முடிவுக்குப் பின்னால் இருந்த காரணம் அவனுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது.
மாலை நேரம்.
ஹோட்டலுக்கு வெளியே இருந்த காபி ஷாப்பின் ஓரமான இருக்கையில் அமர்ந்திருந்தான் பிரணவ்.
அவன் முன்னால் இருந்த காபி ஆறிக் கொண்டிருந்தது. ஆனால், அதைத் தொடக்கூட அவனுக்குத் தோன்றவில்லை.
அவள் வரப்போகிறாள் என்ற எண்ணமே அவனுடைய கவனத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
வாசலை நோக்கிப் பார்ப்பதும், கைப்பேசியை எடுத்துப் பார்ப்பதும், மீண்டும் நேரத்தைச் சரிபார்ப்பதுமாக இருந்தான்.
அவள் வரும்போது என்ன பேசுவது?
முதலில், இத்தனை நாட்கள் ஏன் தன்னைத் தவிர்த்தாள் என்று கேட்கலாமா? அவள் தன்னை விரும்புகிறாளா என்று நேரடியாகக் கேட்கலாமா? இல்லை, அவளே பேசட்டும் என்று அமைதியாக இருக்கலாமா?
அவனுடைய மனதுக்குள் பல கேள்விகள். அப்போது வாசலில் அவளைக் கண்டான்.
கருப்பு நிறப் பர்தாவும் ஹிஜாபும் அணிந்தபடி, சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே வந்தாள் தியானா.
அவர்கள் இருந்த ஜிப்ரான் ஹோட்டலில் இதுபோன்று அமர்ந்து திர்ஹான் செலவழித்து இருக்க இயலாது. அங்கே விலைகள் கூடுதல். இது சின்ன காபி ஷாப் என்பதால் பிரணவின் வசதிக்கும் ஏற்றதாக இருந்தது.
ஒரு சிப் பருகியதும், தியானா வருவதை கண்டதும் பிரணவின் முகம் மலர்ந்தது.
அவன் மரியாதைக்கு எழுந்து நின்றான்.
தியானாவும் அவனைப் பார்த்தாள். ஆனால், அவளுடைய முகத்தில் அவனைப் போல மகிழ்ச்சியில்லை. மனதுக்குள் ஏதோ ஒரு முடிவைச் சுமந்துகொண்டு வந்தவளின் சோர்வு தெரிந்தது.
"உட்காரு, தியானா" என்றான் பிரணவ்.
அவள் நன்றாக அமர்ந்துக் கொண்டாள்
"என்ன குடிக்கிற" என்று அவன் கேட்டான்.
"எதுவும் வேண்டாம்." என்று மறுத்தாள்
"ஏதாவது குடிக்கலாம். காபி? இத்தனை நாளுக்குப் பிறகு சந்திக்கிறோம்." என்று காபியே ஆர்டர் தந்தான்.
"பிரணவ்.." அவள் அவனை இடைமறித்தாள். "நான் உங்களிடம் பேசத்தான் வந்திருக்கேன்.”
அவளுடைய குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்தவன் அமைதியானான்.
"சொல்லு." தியானா ஒரு ஆழமான மூச்சை இழுத்தாள். அவன் முகத்தை நேராகப் பார்த்தாள்.
"நீங்க அனுப்பின மெசேஜைப் படிச்சேன்." பிரணவின் இதயம் வேகமாகத் துடித்தது.
"அதுக்குப் பதில் சொல்லத்தான் வந்திருக்கேன்." அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"நானும் உங்களை லவ் பண்ணுறேன், பிரணவ்" என்றாள்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவனுடைய முகம் முழுவதும் புன்னகை பரவியது.
அவள் தன்னை விரும்புகிறாள். தான் எதிர்பார்த்தது உண்மைதான் என்ற மகிழ்ச்சியில் அவன் கண்கள் ஒளிர்ந்தன.
"தியானா.." என்று அவன் மெதுவாக அழைத்தான்.
ஆனால், அவளுடைய அடுத்த வார்த்தைகள் அந்தப் புன்னகையை அப்படியே நிறுத்தின.
"ஆமா. நான் உங்களைக் காதலிக்கிறேன். அந்த உண்மையை இனிமேலும் மறைக்க முடியலை. என் கண்கள், என் செயல்கள், உங்களைப் பார்க்கும் போதெல்லாம் நான் நடந்துகொண்ட விதம். எல்லாமே என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்குச் சொல்லியிருக்கும். அப்படியிருக்க, நான் ஏன் பொய் சொல்லணும்?" அவளுடைய கண்கள் கலங்கின.
'உங்களைப் பிடிக்கலைன்னு சொல்லி என்னை நானே ஏமாத்திக்க விரும்பலை. உங்களை நினைக்கிறேன். உங்களோடு பேசணும்னு ஆசைப்படுறேன். உங்களைப் பார்க்க முடியாதபோது ஏமாற்றமா இருக்கு. நீங்க என்கூட இல்லாத நேரத்தில்கூட உங்களைப் பற்றிய நினைவுகள் என்னைத் தொந்தரவு செய்யுது. இதெல்லாம் காதல் இல்லைன்னா வேற என்ன?"
பிரணவ் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவளுடைய காதலை வார்த்தைகளில் கேட்கும் அந்த நொடி அவனுக்கு உலகமே புதிதாகத் தெரிந்தது.
"அப்போ..." என்றவனை
"ஆனா." என்று அவள் அவனை இடைமறித்தாள்.
அவனுடைய புன்னகை மெதுவாக மறைந்தது. "இந்தக் காதல் நமக்குச் செட்டாகாது, பிரணவ்." என்று தீவிரமான குரலில் கூற அவன் முகம் இறுகியது.
"ன்ன சொல்ற, தியானா?"
“"இனிமேலும் பூசி மொழுகிப் பேச எனக்கு விருப்பமில்லை. நாம ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். ஆனால், நம்ம வாழ்க்கை ஒண்ணாக முடியுமா? அந்தக் கேள்விக்கான பதில் எனக்கு உனக்கும் தெரியும்"
"மதத்தைப் பற்றிச் சொல்றியா?"
"ஆமா." அவள் தயங்காமல் பதில் சொன்னாள்.
"எனக்கு என் மதம் முக்கியம், பிரணவ். சின்ன வயசுல இருந்து நான் கடைப்பிடிச்சு வர்ற தொழுகை, இறைவன் மீதான நம்பிக்கை, எங்க மதம் சொல்லித் தர்ற வாழ்க்கை முறை... இதையெல்லாம் வெறும் காதலுக்காக விட்டுக்கொடுக்க என்னால முடியாது." அவளுடைய குரல் நடுங்கியது.
"அதே நேரத்தில், உங்களையும் மதம் மாறச் சொல்ல எனக்கு மனசில்லை. உங்களுடைய நம்பிக்கை உங்களுக்கு முக்கியமா இருக்கலாம். அதை மாற்றச் சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கு?"
"தியானா, நம்ம வீட்டுல பேசிப் பார்க்கலாமே!"
"வேண்டாம்!" அவள் சட்டென்று மறுத்தாள்.
"முதல்ல, மதத்தை காரணம் காட்டி விலக நினைக்கிறவள் நான்தான். என் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். உங்களை என் வாழ்க்கைக்குள் அனுமதிச்சுட்டு, நாளைக்கு உங்களுக்காக என் நம்பிக்கைகளையும் விட்டுக்கொடுக்க முடியாம, உங்களையும் காயப்படுத்தி, என்னையும் காயப்படுத்திக்க நான் விரும்பலை." அவள் இருக்கையிலிருந்து எழுந்தாள்.
"நாம முதன்முதலில் சந்திச்சப்போ எப்படி இருந்தோமோ, அப்படியே திரும்பிப் போயிடலாம். நான் ரிசப்ஷனில் வேலை பார்க்கிற ஒரு பொண்ணு. நீங்க இங்கே வேலைக்காக வந்த ஒரு ஸ்ட்ரேஞ்சர். அவ்வளவுதான்." பிரணவ் அவளையே பார்த்தான்.
அவனுடைய மனதில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக, அவள் பேச பேச கரைந்துக் கொண்டிருந்தது.
-தொடரும்
பிரவீணா தங்கராஜ்
மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 13)
எனக்கென்னவோ, தியானா தெளிவா முடிவெடுத்த மாதிரித்தான் தெரியுது. பிரணவை தன் வாழ்க்கைக்குள்ள அனுமதிச்சிட்டு, நாளைக்கே அவகுக்கான அவளோட நம்பிக்கைகளையும், மதத்தையும் விட்டுக்கொடுத்திட்டு, தன்னையும் காயப்படுத்திக்கிட்டு, பிரணவையும் காயப்படுத்துறதை விட இப்பவே விலகிக்கிறது தான் நல்லதுன்னுத் தோணுது. ஏன் பிரணவ் வீட்ல மட்டும் ஒரு முஸ்லீம் பொண்ணை மருமகளா கொண்டு வர அத்தனைச் சுலபமா சம்மதிச்சிடுவாங்களா என்ன ?
😴😴😴
CRVS (or) CRVS2797
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-20
4 hours ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-20
6 hours ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-19
24 hours ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-18
2 days ago
-
மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-17
2 days ago
- 26 Forums
- 380 Topics
- 1,923 Posts
- 0 Online
- 442 Members
