Forum

மௌஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-12

3 Posts
3 Users
0 Reactions
17 Views
(@praveena-thangaraj)
Posts: 315
Member Admin
Topic starter
 
[#397]

அத்தியாயம்-12

அல்லாஹ் உன் உள்ளத்தின் ரகசியங்களையும் அறிவான்.

-குர்ஆன் 67:13

பிரணவ் எப்போதும் போல தியானாவுக்காகக் காத்திருக்க, அவளோ அன்றைக்கு முன்கூட்டியே கிளம்பிச் சென்றிருந்தாள்.

 

இது ஒரு நாள், இரண்டு நாள் நடந்த நிகழ்வல்ல. தொடர்ந்து ஒரு வாரமாகவே இப்படித்தான் நடந்துக் கொண்டிருந்தது.

 

வழக்கமாக அவளுடன் ஒரே டாக்ஸியில் பயணிக்கக் காத்திருப்பவன், அவளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் ரிசப்ஷன் பக்கம் வந்தாலும், அவளோ ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அவனைத் தவிர்த்தாள்.

 

தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை. குறுஞ்செய்தி அனுப்பினாலும் பதிலில்லை.

 

என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு? என்று புரியாமல் தவித்தவனுக்கு, குறைந்தபட்சம் கதையின் வழியாகவாவது அவளிடம் பேசிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

 

அவள் எழுதிய கதையின் கீழ் கருத்தைப் பதிவிட்டான். வழக்கமாக அவனது கருத்துகளுக்குப் பதிலளிக்கும் தியானா, இம்முறை அவனது கருத்தை மட்டும் கண்டுக் கொள்ளாமல் விட்டிருந்தாள்.

 

அப்போதுதான் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

 

தியானா தன்னைத் தவிர்க்கிறாள். ஆனால் ஏன்? அவளுக்குத் தன் மீது ஏதேனும் கோபமா? தான் தெரியாமல் ஏதாவது தவறாகப் பேசிவிட்டோமா? இல்லை, வேறு ஏதாவது பிரச்சினையா?

 

பலவிதமாக யோசித்தவனுக்கு, கடைசியாக அவளுடன் பேசிய உரையாடல்தான் நினைவுக்கு வந்தது.

 

பம்பாய் படத்தைப் பற்றிப் பேசினேன்.. ஒருவேளை, நான் அவளைக் காதலிக்கிறேன் என்று அவள் புரிந்துக் கொண்டிருப்பாளோ? அதனால் தான் என்னைத் தவிர்க்கிறாளோ? அந்த எண்ணம் அவனது மனதை வலிக்கச் செய்தது.

 

அவளுக்கு என் மீது அந்த மாதிரியான எண்ணம் இல்லையென்றால், நேரடியாகச் சொல்லிவிட வேண்டியது தானே! எதற்காக இப்படித் தவிர்க்க வேண்டும்? என்று மனதுக்குள் புலம்பினான்.

 

ஆனால் தியானாவின் பார்வை அவனைத் தேடுவதையும், பேசும்போது அவளது கண்களில் தோன்றும் மெல்லிய ஆர்வத்தையும் அவன் மறந்துவிடவில்லை. அவனுடன் பேசும்போது அவள் கண்களில் மலரும் புன்னகையையும், அவன் கிண்டல் செய்யும்போது அதை மறைக்க முயலும் விதத்தையும் அவன் கவனித்திருக்கிறான்.

 

அந்தப் பார்வைகள் பொய்யாக இருக்குமா? அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. ஆனால் என்னைப் போலவே அவளும் அதை வெளிப்படுத்தத் தயங்குகிறாளோ? என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக் கொண்டான்.

 

அதே நேரத்தில், அவளது மௌனத்தைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்வதும் சரியல்ல என்பதை உணர்ந்தான். எத்தனை நாள் தான் மனதை திறக்காமல் நடமாடுவது?

 

அவனது மனம் குழம்பித் தவித்தது. தியானாவுடன் பழகத் தொடங்கிய இந்த நான்கு மாதங்களில், அவளுடைய குணம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவளது பேச்சு, எழுத்தின் மீதான ஆர்வம், குடும்பத்தின் மீது அவள் கொண்டிருந்த அக்கறை என ஒவ்வொன்றும் அவனை அவள்பால் ஈர்த்திருந்தன.

 

தனிப்பட்ட முறையில் அவளை மிகவும் பிடித்திருந்தது. அதுதான் உண்மை.

 

ஆனால், இப்போது அவள் தன்னைத் தவிர்ப்பதற்கான காரணம் என்னவென்று புரியாமல் தவித்தான்.

 

அந்த நேரத்தில் அருகிலிருந்த பள்ளிவாசலிலிருந்து குர்ஆன் ஓதும் சப்தம் மென்மையாகக் கேட்டது. அந்த ஓசை அவனது சிந்தனையை நிகழ்காலத்திற்குத் திருப்பியது.

 

அவள் என்னைத் தவிர்ப்பதற்குக் காரணம் மதமாக இருக்குமோ? அந்தக் கேள்வி எழுந்ததும், அவனுக்குள் மறைந்திருந்த உண்மை வெளிப்பட்டது.

 

தியானாவைப் பிடித்திருந்தாலும், அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தத் தயங்கியதற்கு அவனுக்கும் மத வேறுபாடு ஒரு காரணமாகத் தானே இருந்தது?

 

அவளது குடும்பம் தன்னை ஏற்றுக் கொள்ளுமா? தியானா தன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினாலும், அவளது குடும்பத்தினர் அதற்குச் சம்மதிப்பார்களா? இருவரின் மதங்களும் அவர்களது காதலுக்கு இடையில் தடையாக வந்தால் என்ன செய்வது?

 

இப்படிப் பல கேள்விகள் அவனுக்குள்ளும் இருந்தன.

 

அதே கேள்விகள்தான் தியானாவையும் அச்சுறுத்துகின்றனவோ?

 

அவளது மௌனத்திற்குப் பின்னால் இருக்கும் காரணம் அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தான். அதன்பிறகு அவனும் தியானாவைத் தேடிச் செல்வதைத் தவிர்த்தான். அவனுக்கும் அவசரமாக எதையும் யோசிக்காமல் அவளது மனதை களைத்திட மனமில்லை.

 

அவள் இருக்கும் இடத்திற்குச் சென்று பேச முயற்சிக்கவில்லை. தொலைபேசியில் அழைக்கவில்லை. குறுஞ்செய்திகளும் அனுப்பவில்லை.

 

அவளது கதைகளை மட்டும் தொடர்ந்து வாசித்தான்.

 

கதையின் கீழ் கருத்துகளைப் பதிவிடும்போதுகூட, அவளது பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் வெளியேறி விடுவான்.

 

என்ன செய்வது? இது திரைப்படமோ, கதையோ இல்லையே! காதலித்தால் எல்லாத் தடைகளையும் தாண்டி ஒன்றாகிவிடலாம் என்று நினைப்பதற்கு. நிஜ வாழ்க்கையில் குடும்பம் இருக்கிறது. மதம் இருக்கிறது. அவளுடைய நம்பிக்கைகள் இருக்கின்றன என்று உணர்ந்தான்.

 

தியானாவின் குடும்பம் தன்னை ஏற்றுக்கொள்ளாது என்ற எண்ணம் அவனுக்குள் வலுப்பெற்றது.

 

இப்போதே அவளுடன் பழகியதற்கே மனம் இவ்வளவு வலிக்கிறது. இன்னும் நெருக்கமாகப் பழகி, அவளைப் பிரிய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டால் என்ன செய்வது?

 

அதனால், தன் மனத்தில் முளைத்திருந்த காதலை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும் என்று முயன்றான்.

 

ஆனால் மனம் அவன் சொல்வதைக் கேட்டால்தானே!

 

இப்படியே நாட்கள் கடந்தன.

 

பத்து நாட்களுக்கும் மேலாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை.

 

ஒரே ஹோட்டலில் வேலை செய்தாலும், ஒருவரையொருவர் சந்திப்பதைத் தவிர்ப்பதில் இருவரும் கவனமாக இருந்தனர்.

 

ஆனால் முழுமையாகத் தவிர்க்க முடிந்ததா என்றால், இல்லை.

 

பிரணவ் தியானாவைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் அவள் எழுதிய கதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தான். அவளது கதாபாத்திரங்களின் காதலில் தன்னை மறந்தான். அவளது எழுத்துகளில் அவளது மனதைத் தேடினான்.

 

மறுபுறம், தியானா அவனை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தாலும், ஹோட்டலின் சிசிடிவி கண்காணிப்புத் திரைகளில் அவன் நடமாட்டத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

 

ரிசப்ஷன் பகுதியிலும், எக்ஸிட் பிளேஸிலும் அவன் கடந்து செல்லும் நேரங்களில், தன்னையறியாமல் அவளது பார்வை அந்தப் பக்கம் திரும்பிவிடும்.

 

அவன் நலமாக இருக்கிறானா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அவனது முகத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும். ஆனால் நேரில் அவனை எதிர்கொள்ள மட்டும் தைரியம் வரவில்லை.

 

அவனிடமிருந்து விலகியிருந்த ஒவ்வொரு நாளும் அவளது மனத்தில் அவன் மீதான ஏக்கத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

 

அன்று பதினைந்தாவது நாள்.

 

இத்தனை நாட்களாகத் தன் மனதைக் கட்டுப்படுத்த முயன்ற பிரணவால், அன்றைக்கு மட்டும் அதைச் செய்ய முடியவில்லை.

 

அவளுடன் பேசாமல் இருப்பது அவனைச் சோர்வடையச் செய்திருந்தது. அவளது குரலைக் கேட்காமல், முகத்தைப் பார்க்காமல், அவளுடன் வழக்கம்போலப் பயணிக்காமல் இருந்த நாட்கள் எல்லாம் அவனுக்குள் வெறுமையை உருவாக்கியிருந்தன.

 

இனி எவ்வளவு நாட்கள்தான் இப்படியே இருப்பது? அவளுக்கு அவனைப் பிடிக்கிறதா, இல்லையா என்பதை ஒருமுறையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.

 

தொலைபேசியை எடுத்தான். நீண்ட நேரம் திரையையே பார்த்துக் கொண்டிருந்தவன், இறுதியில் தன் மனத்தில் இருந்ததை வார்த்தைகளாக மாற்றி அவளுக்கு அனுப்பினான்.

 

பிரணவ்: நாம ஆடுற கண்ணாமூச்சி ஆட்டத்துல ரெண்டு பேருமே அகப்படாம தப்பிக்கப் பார்க்கிறோம். ஆனா இந்த ஆட்டத்துல எப்பவாவது ஒருத்தர் கண்ணுல பட்டுத்தானே ஆகணும்!

 

என் மனசு ஆல்ரெடி உன்னோட கண்ணாமூச்சி ஆட்டத்துல தோத்துப் போயிடுச்சு, தியானா. என் இதயத்துல நீ வந்து தங்கிட்ட. உன்னை வெளியே அனுப்பவும் முடியலை; உன்னை மறக்கவும் முடியலை.

 

எஸ்... என் மனசுல நீ தான் இருக்க. நான் உன்னை விரும்புறேன் தியானா.

 

உனக்கும் என் மேல ஏதோ ஒரு உணர்வு இருக்குன்னு என் மனசு சொல்லுது. ஆனா அதை நீயும் என்னைப் போலவே வெளிப்படுத்தத் தயங்குறேன்னு தோணுது. அதுக்குக் காரணம் மதம் தானா?

 

நீ முகத்துக்கு முன்னாடி போட்டிருக்கிற கருப்புத் திரையைப் பார்த்து நான் இதைக் கேட்கலை. அந்தத் திரைக்குப் பின்னாடி இருக்கிற உன் மனசைப் பற்றித்தான் கேட்கிறேன்.

 

உனக்கு அழகே உன் கண்கள்தான். ஆனா, அந்தக் கண்களைப் பார்த்து உன் மனசுல என்ன இருக்குன்னு என்னால முழுசா தெரிஞ்சுக்க முடியல.

 

அதனால நான் உன்னிடம், அந்தத் திரையைக் கழற்றிட்டு என்னைப் பாரு, என் காதலைப் பாருன்னு சொல்ல மாட்டேன்.

 

கண்ணாடியைப் பாரு, தியானா. அதுல தெரியுற உன் கண்களைப் பாரு. உன் மனசுக்குள்ள என்ன இருக்கு என்பதை உனக்கே சொல்லும்.

 

என்னை உனக்குப் பிடிக்கலைன்னா, அதைச் சொல்ல உனக்கு உரிமை இருக்கு. நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். நீ என்னைத் தவிர்க்க விரும்பினா, அதையும் நான் ஏத்துக்கிறேன்.

 

ஆனா, என் மனசுல இருக்கிறதை உன்கிட்ட சொல்லாம என்னால இருக்க முடியலை.

 

நான் உன்னை விரும்புறேன், தியானா!

 

இனிமேல் நீ என்னைத் தவிர்த்தாலும், உன் முடிவை நான் மதிப்பேன். ஆனா, உனக்காக நான் முன்ன மாதிரியே டாக்ஸியில ஏறக் காத்திருப்பேன்.

 

நீ வருவியான்னு தெரியாது. ஆனா, உன்னோட சேர்ந்து பயணிச்ச அந்தச் சின்னச் சின்ன நேரங்களை என்னால அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

 

செய்தியை அனுப்பிவிட்டுப் பிரணவ் கைபேசியைக் கீழே வைத்தான்.

 

அவனது இதயத்தில் இத்தனை நாட்களாக அழுத்திக் கொண்டிருந்த பாரம் சற்றே குறைந்ததுபோல இருந்தது.

 

அதே நேரத்தில், அவளிடமிருந்து என்ன பதில் வருமோ என்ற பயமும் எழுந்தது.

 

இத்தனை நாட்களாகத் தன் மனத்திற்குள் பூட்டி வைத்திருந்த காதலை அவளிடம் சொல்லிவிட்டான்.

 

இனி முடிவெடுக்க வேண்டியது தியானாதான்!

 

அன்று தியானா வீட்டில் இருந்தாள்.

 

கைபேசியில் வந்த குறுஞ்செய்திக்கான அறிவிப்பைப் பார்த்ததும், வழக்கம்போல ஏதோ ஒரு செய்தியாக இருக்கும் என்று நினைத்தவள், அனுப்பியிருப்பது பிரணவ் என்பதைப் பார்த்ததும் உறைந்துப் போனாள்.

 

இத்தனை நாட்களாகத் தவிர்த்துவந்த அவனிடமிருந்து செய்தி வந்திருக்கிறது.

 

தயக்கத்துடன் அதைத் திறந்தாள். முதல் வரியை வாசித்ததுமே அவளது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

 

அடுத்தடுத்த வரிகளை வாசிக்க வாசிக்க, அவளது கண்கள் கலங்கின.

 

நான் உன்னை விரும்புறேன், தியானா!

 

அந்த ஒரு வரியில் அவளது மனம் சிக்கிக்கொண்டது.

 

தன்னுடைய மனத்தில் இத்தனை நாட்களாகப் புதைத்து வைத்திருந்த உணர்வுகளை அவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்தான்.

 

அவன் தன்னை விரும்புகிறான். தன்னுடன் பேசுவதற்காகக் காத்திருந்திருக்கிறான்.

தன்னைப் பார்க்க முடியாமல் தவித்திருக்கிறான். அவளது விரல்கள் கைபேசியை இறுகப் பற்றிக்கொண்டன.

 

மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்த நிமிடத்தில், அவளது மனம் வலியால் நிறைந்தது.

 

'நானும் உங்களை விரும்புறேன், பிரணவ். உங்களைப் பார்க்காம என்னாலயும் இருக்க முடியலை. உங்ககிட்ட பேசாம இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?' என்று மனதுக்குள் கதறினாள்.

 

ஆனால் அந்த வார்த்தைகள் எதுவும் அவளது விரல்களால் பதிலாக எழுதப்படவில்லை.

 

மீண்டும் மீண்டும் அவனது செய்தியை வாசித்தாள்.

 

கண்களில் தேங்கிய கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

 

ஒருமுறை கைபேசியை மார்போடு அணைத்துக் கொண்டாள். அடுத்த நொடியே, அதைக் கீழே வைத்துவிட்டு முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டாள்.

 

அவனைப் பிடித்திருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை.

 

அவனது காதலை அறிந்ததும் மனம் மகிழ்கிறது என்பதையும் மறுக்க முடியவில்லை.

 

ஆனால் அந்தக் காதலை ஏற்றுக்கொண்டால், தன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை நினைத்ததும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

 

வாப்பா என்ன சொல்வார்?

உம்மா இதை எப்படித் தாங்கிக்கொள்வார்? பிரணவ் இந்து. தான் ஒரு முஸ்லிம் பெண்.

 

இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதால் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளும் முடிந்துவிடுமா?

 

அவளுக்குள் எழுந்த கேள்விகளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

 

அழுது அழுது சோர்ந்துப் போனவள், படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.

 

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

 

"தியானா?" என்ற உம்மாவின் குரல். அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். ஆனால் அவளது சிவந்த கண்களை மறைக்க முடியவில்லை.

 

அருகில் வந்த உம்மா, அவளது முகத்தைப் பார்த்ததும் பதற்றமடைந்தார்.

 

''என்னம்மா ஆச்சு? ஏன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு? காய்ச்சலா?" என்று கேட்டபடியே அவளது நெற்றியில் கைவைத்துப் பார்த்தார்.

 

"உடம்பு சூடா இல்லையே. தலைவலி ஏதாவது இருக்கா?" தியானா தலையை அசைத்தாள்.

 

"இல்லை, உம்மா. அப்படியெல்லாம் எதுவும் இல்லை."

 

"அப்புறம் ஏன் இப்படி இருக்க? உடம்புக்கு ஏதாவது முடியலன்னா சொல்ல வேண்டியதுதானே" தாயின் அக்கறையான குரல் அவளது மனத்தை இன்னும் நெகிழச் செய்தது.

 

இத்தனை அன்பாகத் தன்னைப் பார்த்துக்கொள்ளும் உம்மாவிடம், தன்னுடைய மனத்தில் இருப்பதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாளே. அவளது கண்கள் மீண்டும் கலங்கின.

 

அதைப் பார்த்த உம்மா, அவளது கன்னத்தை மென்மையாகத் தடவினார்.

 

''என்ன பிரச்சினைன்னாலும் உம்மாகிட்ட சொல்லலாம்மா. மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு அழுதா, உனக்குத்தான் கஷ்டம்." அந்த வார்த்தைகளைக் கேட்டதும், தியானாவுக்குத் தன் தாயின் மடியில் முகம் புதைத்து அழ வேண்டும் போலிருந்தது.

 

உம்மா... நான் ஒருத்தரை விரும்புறேன். அவரும் என்னை விரும்புறாரு. ஆனா, இந்தக் காதலை உங்கள்கிட்ட எப்படிச் சொல்றது? என்று மனதுக்குள் கதறினாள்.

 

ஆனால் உதடுகள் மட்டும் வேறொரு பதிலைச் சொன்னது.

 

"ஒண்ணுமில்லை, உம்மா. கொஞ்சம் தலைவலி மாதிரி தான் இருந்துச்சு. இப்போ சரியாயிடுச்சு." தன் மனத்தின் வலியை மறைத்துக்கொண்டு, உம்மாவிடம் மெல்லிய புன்னகையை வரவழைத்தாள்.

 

அவளது பதிலில் முழுமையாகத் திருப்தியடையாதவராக இருந்தாலும், உம்மா அவளை மேலும் வற்புறுத்தவில்லை.

 

"சரி, கொஞ்ச நேரம் ஓய்வெடு. எதுவா இருந்தாலும் என்கிட்டச் சொல்லு." என்று கூறிவிட்டு வெளியேறினார்.

 

கதவு மூடியதும், தியானா மீண்டும் கைபேசியை எடுத்

தாள்.

 

பிரணவ் அனுப்பிய செய்தி இன்னும் திரையில் இருந்தது.

 

அவளது கண்கள் அந்த வரிகளின் மீது பதிந்தன. அவனுடைய காதலுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவெடுத்தாள். 

 

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : October 16, 2026 6:52 am
(@guna-sundari)
Posts: 183
Estimable Member
 

Wow wonderful piranav u told ur love to ur diyana. Diyana u should decide now. Painful love narration awesome sis.


 
Posted : October 16, 2026 9:26 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 12)

வேறெதுக்கு.. ஒரு வாரம் சுத்தல்ல விட்டு திரும்பவும் ஸ்டார்ட் தி கேம்ன்னு சொல்லுவதற்காக இருக்கலாம், இல்லையா தனக்குத் தானே சுய பரிசோதனை செய்து கொள்வாளா இருக்கலாம்.

இந்த காதலே இப்படித்தானே, தகுதி, தராதரம், சாதி, அந்தஸ்து பார்த்தே வராது, வந்துட்டால் நம்மளை விட்டே போகாது.
எத்தனை பட்டும் திரும்ப, திரும்ப அதுக்குள்ளத்தான் போய் விமுவோம், மாட்டுவோம், முழிப்போம்.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 16, 2026 4:54 pm

Scroll to Top