Forum

மௌஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மௌஹபத் முதல் நிக்காஹ் வரை-11

3 Posts
3 Users
0 Reactions
14 Views
(@praveena-thangaraj)
Posts: 314
Member Admin
Topic starter
 
[#396]

அத்தியாயம்-11

தியானாவின் கதைகளை வாசிப்பது பிரணவின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஓர் அம்சமாக மாறியிருந்தது.
வேலைக்குச் சென்று திரும்பியதும், உடை மாற்றிக்கொண்டு அவளது கதைகளை வாசிக்கத் தொடங்கிவிடுவான். இரவு உறங்கச் செல்லும் வரை அவனது உலகம் தியானாவின் கதைகளுக்குள்ளேயே சுழன்றது.

ஆரம்பத்தில் பொழுதுபோக்காகத் தொடங்கிய வாசிப்பு, இப்போது அவனுக்குள் ஒருவிதமான எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தைவிட, அதை எழுதிய தியானாவைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலே அவனிடம் மேலோங்கியிருந்தது. ஒருவரின் எழுத்தை வைத்து கூட மனிதரின்‌ மனதை அறிய முடியும் அல்லவா?

டாக்ஸியில் பயணிக்கும் நேரத்தைக்கூட வீணாக்க விரும்பாதவன், கூடுதலாகக் கதை வாசிக்கலாம் என்பதற்காகவே வீட்டுக்குச் செல்ல டாக்ஸியில் பயணிக்கத் தொடங்கியிருந்தான்.
அதற்காகத் தனியாகத் திர்ஹம்களைச் செலவிடுவதுகூட அவனுக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. காதல் தன்னிலையை கூட மறந்து செலவழிக்க வைத்தது.அதிலும் ஒரு லாபம் என்னவென்றால் தியானா அதே டாக்ஸியில் வருவாள். இருவருமோ இடைந்து சரிபாதியாக திர்ஹாமை தருவார்கள்.

தியானாவும் பிரணவும் ஒரே டாக்ஸியில் பயணிக்க நேர்ந்த நாட்களில், அந்தப் பயணமே அவர்களுக்கான தனிப்பட்ட உரையாடல் நேரமாக மாறியது.

முந்தைய நாள் வாசித்த கதையைப் பற்றி இன்று அலசுவான். கதாநாயகன் செய்தது சரியா, கதாநாயகி ஏன் அப்படி நடந்துக்கொண்டாள் என்று விவாதிப்பான். சில இடங்களில் கதாபாத்திரங்களின் செயல்களை விமர்சிப்பவன், வேறு சில இடங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசவும் செய்வான்.

காதல் கதைகளைப் பற்றிய அவர்களது உரையாடல்கள், இருவருக்கிடையேயான நெருக்கத்தையும் மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டிருந்தன.

அவளது கதைகளைப் படிப்பதற்காகத்தான் அவளிடம் பேசுவதாகப் பிரணவ் நினைத்துக் கொண்டிருந்தாலும், அந்தக் கதைகளின் வழியாக அவளுடன் பேசிக் கொண்டிருப்பதுதான் அவனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது.

அவனது அறை நண்பனான சூர்யாவுக்குக்கூட இந்த மாற்றம் நன்றாகத் தெரிந்தது.

"என்ன பிரணவ், ஆளே மாறிட்டீங்க போலிருக்கே. கூடயிருக்கற என்னோட பேச கூட நேரமில்லை." என்று ஒருநாள் கிண்டலாக ஆரம்பித்தவன், "முன்னாடியெல்லாம் நான் ஏதாவது கேட்டா உடனே ரிப்ளை பண்ணுவ. இப்போ நான் பேசினாலே காதுல வாங்குறது கிடையாது. உன்கிட்ட பேசுறதைவிட என் பொண்டாட்டிக்கிட்ட பேசுறதே மேல் போல" என்று சொல்லிவிட்டு மனைவியுடன் பேசத் தொடங்கினான்.

பிரணவ் அதையெல்லாம் காதில் வாங்கினால் தானே‌

அவனது கவனமெல்லாம் தியானாவின் கதைகளிலும், அவளுடன் நடக்கும் உரையாடல்களிலும் மட்டுமே இருந்தது.

அன்றும் வழக்கம்போல இருவரும் ஒரே டாக்ஸியில் பயணித்தனர்.

அன்று வாசித்த கதையில் வந்த காதல் காட்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவன், திடீரென்று பேச்சை வேறு திசைக்குத் திருப்பினான்.

"தியானா, நீங்க முஸ்லிம் பொண்ணையும் பையனையும் வச்சு காதல் கதைகள் எழுதியிருக்கீங்களா?" அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

"ஏன் கேட்கிறீங்க?"

"சும்மாதான். காதல் கதைகள் எழுதுறீங்க இல்லையா? உங்க சமூகத்துல இருக்கிறவங்களோட காதலைப் பத்தியும் எழுதலையானு கேட்க தோணுச்சு" என்றான்.

அவனது கேள்வியில் இருந்த அர்த்தம் புரிந்ததுபோல அவளது புருவங்கள் சுருங்கின.

"என்ன? முஸ்லிம் பொண்ணும் இந்து பையனும் காதலிக்கிறதைப் பத்தி எழுதினா உங்களுக்குப் பிடிக்காதா? இல்ல, காதலையே உங்க ஆளுங்க ஏத்துக்க மாட்டாங்களா?" என்று கிடுக்குபிடி போட்டான்.

தியானா அவனை முறைத்தாள். "எல்லாரையும் ஒரே மாதிரி நினைச்சுப் பேசாதீங்க" அவளது குரலில் இருந்த கண்டிப்பைக் கவனித்தவன், உடனே சமாளிப்பதுபோலப் புன்னகைத்தான்.

"அடடா! நான் பொதுவாகத்தான் கேட்டேன். சரி, ஒரு விஷயம் கேட்கிறேன். 'பம்பாய்'னு ஒரு படம் வந்திருந்ததே பார்த்திருக்கீங்களா?" என்றாள்.

"இல்லை. பார்த்ததில்லை." அவள் சொன்ன பதிலில் சிறிதும் தடுமாற்றம் இல்லை. ஆனால் அது முழுப் பொய்!

ஐந்து வேளை தொழுகையையும் தவறாமல் நிறைவேற்ற முயலும் தியானா, அந்த நிமிடத்தில் பொய் சொல்லியிருந்தாள். பம்பாய் திரைப்படத்தைப் பார்த்திருந்தாள். அதில் வரும் காதலும், அந்தக் காதலைச் சுற்றியிருக்கும் மதம் மற்றும் குடும்பம் சார்ந்த போராட்டங்களும் அவளுக்கு நன்றாகவே நினைவிருந்தன.

பார்த்திருக்கேன்னு சொன்னா, அடுத்து என்ன கேட்பானோ? எதுக்கு இப்போ தேவையில்லாத பேச்சை வளர்க்கணும்? என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக் கொண்டாள்.

அவளது பதிலில் திருப்தியடைந்தவனாகப் பிரணவ் தொடர்ந்தான்.

"நேரம் கிடைச்சா பாருங்க. நல்ல படம். நீங்க எழுதுற ரொமான்ஸ் கதைகள் மாதிரி அங்கங்க சாங்ஸும் ரொம்ப ரொமான்டிக்கா இருக்கும்" குறும்பாகக் கண்ணடிக்காவிட்டாலும், அவனது குரலில் இருந்த விஷமத்தைக் கண்டுபிடிக்கத் தியானாவுக்குச் சிரமமாக இருக்கவில்லை.

"உங்களுக்கு வேற வேலையே இல்லையா. ஏன் என் இதையை படிக்கறிங்க. பொதுவா ஆண்கள் பெண்கள் எழுதற கதையை படிக்க மாட்டாங்க." என்று அவள் முணுமுணுத்தாள்.

"யார் சொன்னா.. அதெல்லாம் ஆண்கள் பெண்கள் எழுதற கதைகளை வாசிப்பிங்க. ஏன் டிவி சீரியல் கூட பார்ப்பாங்க. அதுவும் அமைதியான சுபாவம் கொண்டவங்க. யாரிடமும் சட்டுனு‌ பேசி பழக இயலாத மனம் கொண்டவர்கள், புத்தக்ததை நாடி புத்தகத்தை நண்பர்களா ஏற்றுக்கறவங்க. பலதரப்பட்ட புத்தகம் வாசகனிப்பாங்க. ஆனா கதைகளைப் படிக்கிறது மட்டும் இல்லாம எழுதிய எழுத்தாளரிடம் நடுவுல இதெல்லாம் பேசுறதும் முக்கியம்தானே." அவன் சொன்ன விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அதை வெளிப்படுத்தாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்கள் இருவரும் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

பிரணவ் இறங்க வேண்டிய இடம் வந்ததும், கட்டணத்தைச் செலுத்திவிட்டு அவன் டாக்ஸியிலிருந்து இறங்கினான்.

"பை, தியானா! நாளைக்கு நீங்க எழுதுற அடுத்த எபிசோடைப் படிச்சுட்டு வர்றேன். அப்போ பேசலாம்!"

"சரி. ஆனா நாளைக்கு லேட்டா வேலைக்கு வந்துடாதீங்க. கதை படிக்கிறதுக்கு வேலை நேரத்தைத் தியாகம் பண்ண வேண்டாம்!" அவள் சொன்னதைக் கேட்டு அவன் சிரித்தான்.
'அட்வைஸ் பண்றதுக்கு மட்டும் குறைச்சலே இல்லை. இந்து முஸ்லிம் காதல் பத்தி வாய் திறக்கறாளா?' என்று புன்னகையுடன் கையசைத்து விட்டுச் சென்றான்.

டாக்ஸி நகரத் தொடங்கியதும், இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பைத் தியானா மெல்ல உதிர்த்தாள்.

இந்த மனுஷனுக்கு என்னை வம்பிழுக்கிறதுல அப்படி என்ன சந்தோஷமோ? என்று நினைத்தவளுக்கு, அவன் சொன்ன பம்பாய் திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது.

அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த காதல் காட்சிகளும், பாடல்களும் அவளது நினைவில் மிதந்தன. குறிப்பாக, அரபிக் கடலோரத்தில் இடம்பெறும் அந்த ரொமான்டிக்கான பாடல் காட்சியை நினைத்ததும் அவளது கன்னங்களில் மெல்லிய சிவப்பு படர்ந்தது.

இவருக்கு எதுக்கு இந்தப் படத்தைப் பத்திப் பேசணும்னு தோணுச்சு? என்று யோசித்தவளின் மனம், அடுத்த நொடியே வேறொரு திசையில் பயணித்தது.

ஒருவேளை... நானும் பிரணவும் இப்படியெல்லாம் காதலிச்சா எப்படி இருக்கும்? அந்த எண்ணம் தோன்றியதும் அவளது இதயம் வேகமாகத் துடித்தது.

இருவரும் ஒன்றாகப் பேசிச் சிரிப்பது, ஒருவரையொருவர் புரிந்துகொள்வது, தன்னுடைய கதைகளை அவன் ஆர்வமாக வாசிப்பது எனச் சின்னச் சின்ன நிகழ்வுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவில் வந்தன.

அந்த நினைவுகளின் தொடர்ச்சியாக, பிரணவுடன் அழகானதொரு வாழ்க்கையை வாழ்வதுபோலக் கற்பனையும் விரிந்தது.

'அஸ்தஃபிருல்லாஹ்! என்ன நினைச்சுட்டிருக்கேன் நான்?என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.

ஆனால் அந்தக் கற்பனையை முழுமையாகத் துரத்திவிட அவளால் முடியவில்லை.

டாக்ஸி அவள் இறங்க வேண்டிய இடத்தை அடைந்ததும், பணம் கொடுத்துவிட்டு இறங்கினாள். மனம் இன்னும் பிரணவின் நினைவுகளிலேயே இருக்க, வீட்டை நோக்கி நடந்தாள்.

படிகளில் ஏறிக் கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை மிச்சமிருந்தது. ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததும் அந்தப் புன்னகை மெல்ல மறைந்தது.

ஹாலில் அமர்ந்திருந்த வாப்பாவையும் உம்மாவையும் பார்த்ததும், அவளது மனம் சட்டென்று நிதர்சனத்துக்குத் திரும்பியது.

'யா அல்லாஹ்! நான் என்ன செஞ்சுட்டிருக்கேன்? திரும்ப திரும்ப அதே தவறை நினைச்சு பார்க்குதே' என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்.

பிரணவுடன் பேசுவதும், அவனது கேள்விகளுக்குப் பதில் சொல்வதும், அவனை நினைத்துப் புன்னகைப்பதுமாக இருந்தவளுக்கு, வீட்டின் வாசலுக்குள் நுழைந்ததும் வேறொரு பயம் ஆட்கொண்டது.

தன்னுடைய மனத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் உணர்வுகளை உம்மாவோ வாப்பாவோ தெரிந்துக் கொண்டால் என்ன ஆகும்?

அதிலும், தன்னுடைய தொலைபேசியில் பிரணவின் பெயரைப் பார்த்துவிட்டால்?

அந்த எண்ணமே அவளுக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியது.

''வந்துட்டியா, தியானா?" என்று உம்மா கேட்டார்.

"ம்... வந்துட்டேன், உம்மா."

"வேலை எல்லாம் நல்லா போச்சா?"

"அல்ஹம்துலில்லாஹ், நல்லா போச்சு."

"கொண்டு போன சாப்பாடு எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டியா? எனக்குக் கொஞ்சம் முட்டி வலி அதிகமா இருக்கு. இன்னைக்கு சமையல் வேலைகளை முடிக்க முடியல. கிச்சன் அப்படியப்படியே வச்சிட்டேன்" என்றார்.

"பரவாயில்லை, உம்மா. நான் பார்த்துக்கிறேன். நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க." தாயின் வலியைப் பற்றிக் கேட்டதும், தியானாவின் கவனம் உடனே அதன்பக்கம் திரும்பியது. அவருக்கு உதவ வேண்டியதை நினைத்ததும், மனத்திலிருந்த குழப்பத்தைச் சற்று ஒதுக்கிவைத்தாள்.

வாப்பாவும் வேலை பற்றியும் வீட்டுத் தேவைகள் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வழக்கம்போல அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், தன்னுடைய முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று அவளுக்குள் ஓர் அச்சம் இருந்தது.

எல்லாம் இயல்பாகவே முடிந்ததும், நிம்மதிப் பெருமூச்சுடன் தன் அறைக்குள் சென்றாள்.

அறைக்குள் நுழைந்ததும் கதவை மூடிவிட்டு, தலையில் இருந்த ஹிஜாபைக் கழற்றினாள். அதை மடித்து ஓரமாக வைத்துவிட்டு, முகத்தைக் கழுவிக்கொள்ளத் தயாரானாள்.

பின்னர் கண்ணாடியின் முன் வந்து நின்றாள்.

தன்னுடைய முகத்தையே சில நொடிகள் உற்றுப் பார்த்தாள்.

அவளது கண்களில் இன்னும் அந்தப் புன்னகையின் மிச்சம் இருந்தது.

என்ன ஆச்சு எனக்கு? என்று கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்திடமே கேட்டுக்கொண்டாள்.

பிரணவ் பேசினா சந்தோஷமா இருக்கு. அவன் என் கதையைப் படிக்கிறான்னு நினைச்சாலே மனசுக்குள்ள ஏதோ ஒரு நிறைவு. அவன் வராத நாளில் அவனோட பேச முடியலையேன்னு தோணுது. இப்போ அவனோட சேர்ந்து வாழ்றதைப் பற்றிக்கூட கற்பனை பண்ண ஆரம்பிச்சுட்டேனே!

அவளது புன்னகை மெல்ல மறைந்தது. இது காதலா? அந்தக் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

ஒருவேளை அது வெறும் ஈர்ப்பாக இருக்கலாம். தன்னுடைய எழுத்துகளை மதித்து வாசிக்கும் ஒருவன் என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியாக இருக்கலாம். அல்லது, அவளுக்கே தெரியாமல் அவனிடம் மனம் சாயத் தொடங்கியிருக்கலாம்.

எதுவாக இருந்தாலும், அவளது வாழ்க்கை இப்போது இருப்பதைப் போல எளிமையானதல்ல என்பதை அவள் அறிவாள்.

பிரணவ் வேறு மதத்தைச் சேர்ந்தவன். அவனுடன் பேசுவதைக்கூட வீட்டில் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறாள். அப்படியிருக்க, அவனைப் பற்றிய இத்தகைய கனவுகளுக்கு என்ன அர்த்தம்?

கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்துவிட்டாள்.

"யா அல்லாஹ்... என் மனசுல என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலை. எனக்கு எது நல்லதோ, அந்த வழியைக் காட்டுப்பா" என்று மெல்லிய குரலில் வேண்டிக்கொண்டாள்.

பின்னர் கண்ணாடியில் தன் முகத்தை இன்னொருமுறை பார்த்தவள், தலையைச் சிலுப்பிக்கொண்டாள்.

முதல்ல இந்தக் கதைகளையாவது ஒழுங்கா எழுதணும். தேவையில்லாம எதையாவது நினைச்சு மனசைக் குழப்பிக்கக் கூடாது! என்று தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொண்டு, மேசையின் முன் சென்று அமர்ந்தாள்.

போனில் எழுதும் பக்கம் திறந்து, அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்காக வெற்றுப் பக்கத்தைப் பார்த்தாள்.

ஆனால் சில நொடிகளிலேயே திரையில் தோன்றிய கதாநாயகனின் முகத்துக்குப் பதிலாகப் பிரணவின் முகமே அவளது மனக்கண்ணில் வந்து நின்றது.

தியானா தலையில் கைவைத்துக் கொண்டாள்.

'யா ரப்பி... இந்த மனசை என்ன செய்யப் போறேனோ' என்று நினைத்து புலம்பியவளுக்கு இந்த நான்கு மாதம் பிரணவுடன் பழகியதில் கொஞ்சம் கொஞ்சமாய் மனதில் புகுந்துக் கொண்டதை தெளிவாக உணர்ந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : October 15, 2026 9:14 am
(@guna-sundari)
Posts: 183
Estimable Member
 

Wow super Pranav. Diya stories are awesome like writer. Very intresting sis 


 
Posted : October 15, 2026 5:00 pm
(@crvs2797)
Posts: 237
Reputable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 11)

பிரணவ் கொஞ்சம் கொஞ்சமா தியானா பைத்தியம் ஆகிட்டே வரான், அதே மாதிரி தியானா வாயிலயும் பொய்யும் புரட்டும் நிறைய வருது.

அது சரி, பம்பாய் படம் பார்த்தப் பிறகுமா திரும்பவும் இந்து முஸ்லிம் காதல்ல இறங்குறாங்க..?
இவங்க ரெண்டு பேருக்கும் துணிச்சல் அதிகம் தான்.
ஓ மை காட் ! தியானாவோட வாப்பாவையும் உம்மாவையும் நினைச்சால் இப்பவே கண்ணை
கட்டுதே.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 15, 2026 8:42 pm

Scroll to Top