பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-25
அத்தியாயம்-25
எஸ்டேட் டிப்போ நெருங்கும் போதே லாவண்யினாவிடம் தந்த கண்டக்டர் உடையான காக்கியை வாங்கி, மேலே அணிந்துக் கொண்டான். போதாத குறைக்கு எழுந்து நின்று, படிக்கட்டில் வந்து நின்றான்.
பேருந்து நிற்கும் போது, சாரதி படியிலிருந்தே இறங்கினான். லாவண்யாவோ இதயத்தை பிடித்து 'சாரதி' என்று சத்தமின்றி உச்சரிக்க, "ஏம்மா... வயசு பசங்களுக்கு படிக்கட்டில நிற்பதும் இறங்குவதும் கை வந்த கலை. இதுல உன் ஹீரோ கண்டெக்டர் அதெல்லாம் பார்த்து தான் இறங்குவார். பதறாதிங்க.. பதறாதிங்க" என்றாள் தேவி.
லாவண்யாவோ கிண்டல் செய்தவளை கை முட்டியில் இடித்து, அவனையே பார்வையிட்டாள்.
லாவண்யாவும் தேவியும் இருவரையும் முன்னே நடக்க விட்டுவிட்டு, சாரதி பின்னால் பொடிநடையாக நடந்து வந்தான்.
சைக்கிள், பைக் இரண்டையும் விட்டுவிட்டு வந்ததால் இந்த நடைபயணம்.
தேவி அவளது வீட்டுக்குச் சென்றதும், லாவண்யாவும் அவளது வீட்டை அடைந்தாள். உள்ளே செல்வதற்கு முன்பு ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.
அங்கே சாலையோரம் நின்றிருந்த சாரதியும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளைக் கண்டதும் அவன் மென்னகைத்தான்.
அவளும் மென்முறுவலோடு வீட்டுக்குள் நுழைய, வாசலிலேயே இருந்த ஆவுடையப்பன் லாவண்யாவை உற்றுப் பார்த்தார்.
"எங்க போன? லேட்டா வர்ற மாதிரி இருக்கு?" என்று சுவர் கடிகாரத்தை கவனித்தார்.
"இல்லை தாத்தா... படிக்கறப்ப நேரம் போகாம தேவியும் நானும் நேரம் கடத்திட்டோம்." என்று சமாளித்துக் கூறிவிட்டு உள்ளே செல்ல, "ம்..." என்றபடி அவர் அமைதியாகிவிட்டார்.
அவரிடம் தப்பித்துவிட்டதாக நினைத்து லாவண்யா மனதிற்குள் ஆனந்தப்பட்டாள்.
அதே நேரம் சாரதி அவனது வீட்டுக்குள் நுழையும்போது "ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே...
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே...
இதை உண்மை என்பதா?!
இல்லை பொய்தான் என்பதா?
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே..." என்று பாடலை பாடியபடி வந்தான்.
டிபன் பாக்ஸ் பையை கிச்சனில் வைத்துவிட்டு, சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டினான்.
மகன் ஆனந்தமாய் வரவும் காஞ்சனா அவனையே பார்வையிட்டார்.
இன்று முத்து அண்ணா போன் செய்த போது, சாரதியின் உடல்நிலை பற்றி விசாரித்தார். "நம்ம சாரதிக்கு உடம்பு எப்படியிருக்கும்மா? காய்ச்சல் குறைஞ்சிடுச்சா? நாளைக்கு டூட்டிக்கு வந்துடுவானா?" என்று விசாரித்தார்.
"வந்துடுவான் அண்ணா... நல்லாயிருக்கான். தூங்கறான்."என்று பொய்யைத் தெரிவித்து அழைப்பை அணைத்தார் காஞ்சனா.
மகன் வேலைக்கு சென்றப்பின், லீவெடுத்ததாக அவர் கேட்க, எப்படியோ மகனது பொய்யை நேர்படுத்தி பதில் தந்தார்.
ஆனால் சாரதி எங்கே சென்றிருப்பாரென காஞ்சனா மனதிற்குள் ஓடியது.
டிபன் பாக்ஸைத் திறந்த காஞ்சனா, அது சுத்தமாகக் கழுவி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, "இதென்ன புதுசா கழுவி எடுத்து வந்திருக்க சாரதி?" என்று கேட்டார்.
ஆனால் அவனோ, அன்னை பேசியதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. போனைப் பார்த்தபடி, "இன்னிக்கு உன் கை பிடிச்சு, தோள்ல சாய்ந்தது... ரொம்ப ஆனந்தமா இருந்தது லயா..." என்று மெசேஜ் அனுப்புவதிலேயே கவனமாக இருந்தான்.
மகன் கண்டக்டர் உடையைத் தாண்டி உள்ளே வந்ததும் வேறு சட்டையை அணிந்திருந்ததையும், தான் பேசியதைக் கூட கவனிக்காமல் போனில் மூழ்கியிருப்பதையும் பார்த்த காஞ்சனா, மீண்டும் கிச்சனுக்குள் சென்றார்.
'என்னாச்சு இவனுக்கு? ஏதாவது பண்ணுதா? என்னிடம் பொய் சொல்லிட்டு டூயூட்டி போறதா காட்டிக்கிட்டான். ஆனா அவன் டிப்போவுக்கு போகாம, வேலைக்கு லீவு சொல்லிட்டு எங்க போனான். இதுல வழக்கத்துக்கு மாறாக டிபன் பாக்ஸ் எல்லாம் கழுவி நீட்டா கொண்டு வந்திருக்கான். பஸ் டிப்போல சாப்பிட்டா அப்படியே மூடி வச்சிட்டு இங்க வந்து தானே கழுவ போடுவான். அப்படின்னா இது இவன் வேலை இல்லை..' என்று மனதிற்குள் ஆராய்ந்தவர், சாரதி வழக்கத்தைவிட இன்று மிகவும் ஆனந்தமாக இருப்பதை மட்டும் கவனித்துக் கொண்டார்.
அந்த நேரம் சாரதியிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்கவில்லை என்றதை விட அவசரப்படவில்லை.
அடுத்த நாள் லாவண்யாவுக்கு விடுமுறை என்பதால் சாரதி எப்போதும் போலவே வேலைக்குக் கிளம்பினான்.
காஞ்சனாவும் மகனிடம் அவன் மாற்றத்தைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. ஆனால் மனதிற்குள் மட்டும்,
'இவன் முகத்துல இவ்வளவு சந்தோஷம். அந்த சந்தோஷத்துக்கு என்ன காரணம்? ஏன்னா சந்தோஷம் மட்டும்னா நான் நிம்மதியா இருப்பேன். ஆனா பொய் வேற பேசி மறைக்கறானே' என்று யோசித்துக்கொண்டே இருந்தார். இந்த சந்தோஷமான முகத்தை கண்டால் ஆனந்தமாக தான் காஞ்சனா இருக்க வேண்டும். ஆனால் ஏதோ நெஞ்சில் உறுத்தியது. மகன் ஏதாவது வில்லங்கமாக தவறான வழியில் செல்கின்றானா என்று எல்லா பெற்றோருக்கும் இருக்கும் பயம்.
அதற்கடுத்த நாள் லாவண்யா பரீட்சை எழுதுவதற்காகக் கல்லூரிக்குச் சென்றாள்.
அன்று கடைசி பரீட்சை, விடைத்தாளை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்த லாவண்யாவுக்கு, ஒரு பக்கம் பரீட்சை முடிந்த நிம்மதி இருந்தாலும், இன்னொரு பக்கம் மனதுக்குள் ஒரு சிறிய வெறுமை வந்து அமர்ந்தது.
இனி கல்லூரி திறக்கும் வரை காத்திருக்க வேண்டும். இனி சாரதியைப் பார்க்கும் அந்த வழக்கமான நாட்களுக்காக ஏங்கினாள். இதில் அடுத்த நாளே வேலூருக்குக் கிளம்ப வேண்டும்.
அக்காவின் திருமண வேலைகளுக்காகவும், அதன்பிறகு கிடைக்கப் போகும் செமஸ்டர் விடுமுறைக்காகவும் கிட்டத்தட்ட ஒரு மாதம் கல்லூரி பக்கம் வர வேண்டியிருக்காது.
"என்னடி... இவ்வளவு அமைதியா இருக்க?" என்று தேவி அருகில் வந்து கேட்டதும், லாவண்யா அவளைப் பார்த்தாள்.
"நாளைக்கு அப்பா அம்மா கூட இருப்பேன். வேலூர்ல" என்றாள்.
"அதுக்கா இவ்வளவு பீல் பண்ணற? எல்லாம் அப்பா அம்மா கூட இருக்க தானே விரும்புவாங்க" என்றாள் தேவி.
"பச் சாரதியை பார்க்க முடியாது" என்று சொல்லிவிட்டு அவள் போனை எடுத்தாள்.
திரையில் சாரதியின் பெயரைப் எடுத்து பார்த்தாள். அவளது முகத்தில் தானாகவே ஒரு மென்மையான புன்னகை மலர்ந்தது.
"அவனைப் பார்க்க முடியாதுன்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு தேவி." என்றதும் தேவி சிரித்தாள்.
"போன் இருக்குல? அப்புறம் என்ன?" என்றாள்.
"போன்ல பேசறது வேற... நேர்ல பார்க்கறது வேற." அந்த வார்த்தையில் இருந்த ஏக்கத்தைப் பார்த்த தேவி, அவளை கிண்டல் செய்யாமல் அமைதியாகிவிட்டாள்.
அதே நேரத்தில் லாவண்யாவின் போன் ஒலித்தது.
சாரதி தான் என்பதால் அவள் அழைப்பை உடனே எடுத்தாள்.
"ஹலோ..." அவனது குரல் கேட்டதும் அவளுக்குள் இருந்த சோர்வு பாதியாகக் குறைந்தது.
"பரீட்சை முடிஞ்சிடுச்சா?"
"ம்... முடிஞ்சிடுச்சு."
"எப்படிப் பண்ணியிருக்க?"
"நல்லாத்தான் பண்ணியிருக்கேன்." என்று சொல்லிவிட்டு சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
"நாளைக்கு வேலூர் கிளம்பறேன் சாரதி." என்றதும் அவன் மௌனமானான்.
அந்த அமைதியே அவனுக்கும் அவளைப் பிரிய மனமில்லை என்பதைச் சொல்லிவிட்டது.
"உங்க அக்கா கல்யாணம் முடிஞ்சதும், செமஸ்டர் லீவும் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகும்ல?" என்றான்.
ம்ம்" என்றாள்.
சாரதி தன்னையும் அறியாமல் கேட்டுவிட்டான். அவன் குரலில் இருந்த ஏமாற்றத்தை உணர்ந்தாள்.
ஒரு மாதம் எப்படிக் கழியப் போகிறதோ என்ற எண்ணமே அவளுக்குள் மீண்டும் ஏக்கத்தை நிரப்பியது.
ஆனால் அந்த ஏக்கத்துக்குள்ளேயே ஒரு இனிமையும் இருந்தது.
தொலைவில் இருந்தாலும், ஒவ்வொரு நாளும் பேசிக்கொள்ளலாம்.
அந்த எண்ணத்தோடு வீட்டை நோக்கி நடந்தாள் லாவண்யா.
இதில் வந்ததும் வராததும், இலக்கியாவோ, "லாவண்யா... அந்த டெயிலர் அக்கா வீடு வரை போய் இஷிதாவுக்கு தைக்க கொடுத்த பாவாடை சட்டை மட்டும் வாங்கிட்டு வந்துடறியா. காலையில பாவாடை சட்டைக்கு கொக்கி வச்சிட்டதா சொன்னாங்க. நான் தான் வாங்க மறந்துட்டேன். ப்ளீஸ் டி" என்று கூற, "இதோ போறேன் சித்தி" என்று சிட்டாய் பறந்தாள்.
சாரதியை பார்க்கும் வாய்ப்பை நழுவ விடுவாளா? வேகமாய் நடந்து செல்ல, காஞ்சனா வாசலில் தையல் இயந்திரத்தோடு உறவாட, "ஆன்ட்டி.. ஆன்ட்டி" என்றாள்.
காஞ்சனா சட்டென நிமிர்ந்தார். "இலக்கியா சித்தி இஷிதாவோட பட்டு பாவாடை சட்டை தைக்க கொடுத்தாங்களாம். வாங்கிட்டு வர சொன்னாங்க" என்றதும், "உட்காரும்மா இதோ எடுத்துட்டு வர்றேன்." என்றார்.
'போன்ல சொல்லிட்டு வந்திருக்கணுமோ? சாரதியை காணோமே' என்று எட்டியெட்டி பார்க்க, அறையிலிருந்து முகம் துடைத்தபடி வந்தான்.
லாவண்யாவை பார்த்து முறுவளிப்பானென எதிர்பார்க்க, அவனோ அன்னை இருப்பதால் அடக்கியே வாசித்தான்.
"கொக்கி கட்டியிருந்தா பிளவுஸ் ரெடியானப்பவே தந்திருப்பேன். இந்த பாவாடை சட்டைக்கு லேசா ஸ்டோன் வேற ஒட்ட சொல்லியிருந்தா. அதான் தாமதமாகிடுச்சு" என்று தரவும், வாங்கியவள், ''ஜிபே பண்ணிடவா ஆன்ட்டி" என்று நம்பரை கேட்டாள்.
"பண்ணிடும்மா" என்றார்.
சாரதியும் அமைதியாக, காஞ்சனாவும் அமைதியாக இருக்கவும், கையை பிசைந்தவள், ஜிபேவில் பணத்தை பரிவர்த்தனை செய்தாள்.
"என்னாச்சு ஆன்ட்டி டல்லா இருக்கிங்க?" என்று கேட்க, காஞ்சனா நிமிரவும், "இல்லை.. இரண்டு முறை வந்தப்ப சிரிச்சி ஹாப்பியா இருந்திங்க. இப்ப முகம் வாடியிருக்கு" என்றாள்.
"காய்ச்சல்மா... முந்தா நேத்தெல்லாம் காய்ச்சல். எனக்கு இல்லை... என் புள்ளைக்கு. அதான்.. அவன் வீட்ல இருந்தானா... மனசு கஷ்டமாயிருக்கு" என்று சாரதியை குத்தும் பார்வையை பார்த்தார்.
ஏதோ புரியாமல் அவனை பார்க்க, "அம்மா." என்று ஆரம்பிக்க, "ஜிபேல பணம் வந்துடுச்சும்மா. நீ கிளம்பு.. வேலூர் போகணும். அதோட உங்க அக்கா கல்யாணம்னு இலக்கியா சொன்னா. நல்லபடியா போயிட்டு வாங்க" என்று வழியனுப்ப லாவண்யா ஒரு விதமாக தலையாட்டி துணியை வாங்கி நடந்தாள்.
லாவண்யா போனதும், காஞ்சனாவிடம் "அம்மா சாரிம்மா. தெரியாம பொய் சொல்லிட்டேன்." என்று அவரது காலை தீண்ட, "தொடாத.. பொய்யெல்லாம் பேசறியே. உன்னை தங்கப்புள்ளனு நினைச்சேன்டா. என்கிட்டயே பொய்." என்று சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்து கிச்சனை உருட்ட சென்றார்.
சாரதியோ அன்னையை எட்டி பார்த்து விட்டு, அவசரமாய் தனது அறையிலிருந்து ஒரு கவரை எடுத்துக் கொண்டு பைக் சாவியை திருகிக் கொண்டு பறந்தான்.
காஞ்சனாவோ 'நான் இங்க அழறேன். வெளிய போயிட்டானே' என்று அதிர்ந்தவராய் திண்டில் ஜடமாய் அமர்ந்தார்.
அவசரமாய் பூங்கா தாண்டும் முன் லாவண்யாவை நிறுத்தி, இது உனக்குனு வாங்கிய சுடிதார். அன்னிக்கே வண்டலூர் போற அன்னிக்கு ஏதாவது வாங்கி தர நினைச்சேன். ஆனா பயமாயிருந்தது. நேத்து வாங்கினேன். பிடி" என்றான் அவசரமாய்.
அதை வாங்கியவாறு "ஆன்ட்டி ஏன் ஒரு மாதிரி இருக்காங்க. நீயேன் சைலண்டா இருக்க?" என்றாள்.
"அக்கம் பக்கம் பார்த்தவனாக, அன்னிக்கு டூயூட்டிக்கு போகாதது முத்து அண்ணா மூலமா அம்மாவுக்கு தெரிந்துடுச்சு. அதான் கோபம். நீ போ. நான் அப்பறம் பேசறேன்." என்று சிட்டாய் பறந்தான்.
வீட்டில் அன்னை அழுதிருக்க, அப்படியே வந்ததால் அவன் மனம் வருத்தமுற்றது.
லாவண்யாவோ 'கடவுளே... அதுக்குள்ள பிரச்சனையா. எல்லாம் சால்வ் பண்ணிடு இறைவா' என்று வேண்டியபடி வந்தாள்.
வாசலில் நுழையும் நேரம், 'அச்சோ இந்த பை ஏது... என்ன சுடிதார்னு சித்தி கேட்டா?'என்று விழித்தாள்.
லாவண்யாவோ பயந்து நடந்துவர, "ஆங்... லாவண்யா அந்த பாவாடை சட்டையை நீயே உன் லக்கேஜில் வச்சிடு. என் பை நிரம்பிடுச்சு. ஊருக்கு போய் வாங்கிக்கறேன்" என்றார்.
'சரிங்க சித்தி" என்று நிம்மதியாக அவளது உடை வைத்திருந்த பையில் இஷிதா சட்டையை வைத்தபடி, சாரதி தந்த உடையையும் கமுக்கமாய் வைத்துக் கொண்டாள்.
ஒரு புறம் லாவண்யா ஊருக்கு கிளம்ப, சாரதியோ அன்னையிடம் "அம்மா... தெரியாம பொய் சொல்லி ஊர் சுத்த போயிட்டேன்மா. மன்னிச்சிடும்மா. இனி அப்படி பண்ண மாட்டேன். சாரிம்மா." என்று காலை பிடிக்க, "உங்கப்பா என்னை தனியா விட்டுட்டு போகலை. உன்னை தூண் மாதிரி தந்துட்டு போனாருனு நினைச்சேன். ஆனா நீ.. என்னிடமே பொய் சொல்லிட்ட." என்று வருந்த, சாரதியோ 'காதலிப்பதை சொல்லாமல் காய்ச்சலென்று ஊர் சுற்றியதற்கே இப்படியா? லாவண்யாவை விரும்புவதை அறிந்தால்?' என்று தலையை உலுக்கினான்.
ஆனால் சாரதி யாரையோ விருப்புவதாக காஞ்சனா நேற்றே அறிந்துவிட்டார்.
நேற்று சாரதிமின் துணியை மடித்து வைத்த பொழுது சாரதி பீரோவில் ஒரு கவரில், சுடிதார் உடை இருக்க, மகன் தன் கையை மீறி காத
லில் விழுந்திருப்பதை அறிந்துக் கொண்டாரே. என்ன அது லாவண்யா என்ற வகையில் இன்னமும் தெரியவில்லை. அந்த வகையில் சாரதி தப்பித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 25)
பல நாள் திருட்டு, ஒருநாள் அகப்படும் என்கிற மாதிரி, கெட்டிக்காரன் பொய்யும் திருட்டும் டக்கு முக்கு டிக்குத் தாளம் என்கிற மாதிரியும் ரெண்டும் மாட்டிக்கிட்டு கோட்டான் மாதிரி முழிக்கப் போகுது பாருங்களேன். அதெப்படித்தான், காதல்ன்னு ஒண்ணு வந்துட்டால் அத்தனை கள்ளத்தனமும் வந்துடுதோ தெரியலை.. ஒருவேளை, காதலுக்கும், கள்ளத்தனத்திற்கும் ஸ்ட்ராங்கான தொடர்பு இருக்குதோ என்னவோ..?
அடப்பாவி..! இங்கே ஆத்தாக்காரி கண்ணை கசக்கிட்டிருக்கிறாள் இவன் கொஞ்சம் கூட கண்டுக்காமல் காதலியைப் பார்க்க போயிட்டானே ?
ம்.. காதலின்னு ஒருத்தி வந்துட்டாள் அம்மான்னு ஒருத்தி கூட பின்னாடி போயிடறாங்க போலயிருக்கு.
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-24
22 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-23
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்லோரம்-22
3 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-19
3 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-21
4 days ago
Currently viewing this topic 2 guests.
- 25 Forums
- 341 Topics
- 1,650 Posts
- 5 Online
- 427 Members
