Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-20

5 Posts
5 Users
0 Reactions
75 Views
(@praveena-thangaraj)
Posts: 275
Member Admin
Topic starter
 
[#365]

அத்தியாயம்-20

 

பூங்காவிலிருந்து வெளியே வந்ததும், தேவியும் லாவண்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தார்கள்.

 

சில நிமிடங்களுக்கு முன்பு வரை இருவருக்கும் நடுவே இருந்த சாரதி பற்றிய பேச்சு, இப்போது இருவரது முகத்திலும் தனித்தனி சந்தோஷமாகப் படிந்திருந்தது.

 

"சரி... நான் இங்கிருந்து போறேன். நீ வீட்டுக்குப் போ. இல்லன்னா உங்க தாத்தா நம்ம ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல விசாரிக்க ஆரம்பிச்சிடுவாரு." என்று தேவி சிரித்தாள்.

 

லாவண்யா தலையசைத்தாள். ஆனால் நடக்கத் தொடங்கிய பிறகும் அவளது மனம் மட்டும் பூங்காவிலேயே நின்றிருந்தது.

 

'எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, லாவண்யா...' சாரதி சொன்ன அந்த வார்த்தைகள் காதுக்குள் மீண்டும் மீண்டும் தித்திப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தன.

 

அவள் இதுவரை கற்பனை செய்த காதல் வேறு. இன்று நடந்தது வேறு. பெரிய வசனங்கள் இல்லை. காதல் கவிதைகள் இல்லை. அவளைப் பார்த்து நீண்ட நேரம் பேசவும் இல்லை. அவன் கண்களில் இருந்த தயக்கமும், குரலில் இருந்த தவிப்பும், கடைசியில் வந்த அந்த ஒரு ஒப்புதலும், அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

 

சாரதியும் வீட்டுக்குத் திரும்பியிருந்தான்.

 

சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, கைகளை கழுவியவன் வழக்கம்போல் அம்மாவிடம் இரண்டு வார்த்தைகள் பேசினான்.

 

சாப்பிடும் போதும் அவன் முகத்தில் இருந்த மாற்றத்தை காஞ்சனா கவனித்தார்.

 

"என்னடா... இன்னிக்கு ஏதோ யோசனையில இருக்க" என்றார்.‌

 

"ஒண்ணுமில்லம்மா." என்று மழுப்ப முயன்றான்.

 

"ம்ம்ம எதுனாலும் அம்மாவிடம் தான் சொல்வ அப்ப பார்த்துக்கறேன்." சாரதி லேசாகச் சிரித்தான்.

 

"சாப்பிடுங்கம்மா." அதற்குமேல் காஞ்சனா கேட்கவில்லை. சாரதி மனதுக்குள் மட்டும் லாவண்யா முகம் நிலைத்து பதிந்தது. 

 

  வெறும் வார்த்தைகளால் காதலிப்பதாக தெரிவித்து விட்டான். ஆனாலும் நெஞ்சுக்குள் பெரிய பொறுப்பு உள்ளே வந்து அழுத்தியது. 

  அதே சிந்தனையில் இருந்தான். 

   சரியோ தவறோ லாவண்யாவை பிடித்துவிட்டது. அவளில்லாத நாட்கள் இதயம் அதிவேகமாய் அவளை தேடியது. அந்த வேகத்தில் காதலையும் தெரிவித்துவிட்டான். 

   மனதின் ஓரத்தில், அவளும் நானும் காதலிப்பது எங்களுக்கு சரியா வருமா? இல்லை அவங்க அவங்க வீட்டுக்கு தெரிய வந்தா, இது எப்படிப்பட்ட பிரச்சனையை இழுத்து வைக்கும்? 

 

   நான் ஒரு கண்டெக்டர். என்ன தான் சம்பளம் அரசாங்க உத்தியோகம் என்றாலும் பெருமையா சபையில என் வேலைக்கு அங்கீகாரம் இருக்கா? லாவண்யா அம்மா அப்பா என்னை ஏற்பாங்களா? அவங்களிடம் காதலை சொல்லி கல்யாணத்தை பேசறப்ப வில்லங்கம் முளைக்குமா? 

   அம்மா எப்படி எடுத்துப்பாங்க. அப்பா இல்லாத இந்த காலத்துல அவங்களுக்கு நான், எனக்கு அவங்க மட்டும் தான் வலியோட வாழ்ந்தோம். அப்படியிருக்க அம்மாவை மதிக்காம நானா ஒருத்தியே தேடியதா நினைச்சிட்டா. 

   அம்மாவுக்கு லாவண்யாவை பிடிக்குமா?

 

இரவு சாப்பாடு முடிந்து அறைக்குள் சென்றதும், சாரதி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.

 

போனை கையில் எடுத்தான். திரையில் இருந்த பெயரைப் பார்த்ததும் உதட்டின் ஓரம் தெரியாமல் உயர்ந்தது.

 

லயா. சிற்சிலநொடிகள் அந்தப் பெயரையே பார்த்துக் கொண்டிருந்தவன், இறுதியில் குறுஞ்செய்தி அனுப்பினான்.

 

சாரதி 'தூங்கலையா?' என்று கேட்க, லாவண்யாவுமே உடனடியாக, 'ஒரு வழியா காதலை அக்செப்ட் பண்ணிட்டிங்க. கூடுதலா இரண்டு வார்த்தை கூட பேச முடியலை. நீங்க ஓகே சொன்னதையே நினைச்சிட்டு இருக்கேன்' என்றாள். 

 

சாரதி அந்தச் செய்தியைப் பார்த்து சிரித்தான்.

''நல்லது தான். என்னால உன் கண்ணுக்கு நேரா பார்த்து பேசற சக்தியுமில்லை". என்றான். 

 

அந்தச் செய்தியைப் பார்த்ததும் லாவண்யாவின் முகம் மலர்ந்தது. அவள் படுக்கையில் தலையணையை அணைத்துக் கொண்டாள்.

 

லாவண்யாவோ 'ஊர்ல அக்காவுக்கு நிச்சயம் நடந்தது. அங்க போனப்ப, என்னை யாரோ பொண்ணு கேட்டதா அக்கா சொன்னா தெரியுமா' என்றதும் வாசித்த சாரதியின் பார்வை அப்படியே நின்றன.

 

அடுத்த செய்தியைத் வந்திட அதை  திறந்தான். 'அம்மா அதுக்கு, "இவ படிப்பு முடியட்டும்"ன்னு சொல்லிட்டாங்க. படிப்பு முடியற வரைக்கும் அம்மா என்னை தொந்தரவு பண்ண மாட்டாங்க' என்று அனுப்பினாள். 

 

மேலும், 'வீட்ல கொஞ்சம் போராட வேண்டிய நிலை வந்தாலும் நான் பார்த்துக்கறேன். உங்க வீட்ல ஏதாவது தடை வருமா?' என்று கேட்டாள். 

சாரதி அந்தக் கேள்வியை வாசித்து, பிறகு மெதுவாகப் பதில் தட்டச்சு செய்தான்.

 

'எனக்கு அம்மா மட்டும் தானே. அதெல்லாம் தடை போட மாட்டாங்கன்னு நினைக்கறேன்.

அப்பா இருந்தப்பவே எனக்குனு யோசிப்பாங்க. அவர் போனதுக்கப்புறம் நான் மட்டும் தான் அவங்களுக்கு உலகம். அதனால என் காதலுக்கு சம்மதிப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு.' என்றான்.

 

அதைப் படித்த லாவண்யாவின் முகத்தில் இருந்த குறும்புச் சிரிப்பு மெதுவாக மென்மையான புன்னகையாக மாறியது. அதை எமோஜி மூலமாக சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பி, 'தேங்க் காட். ஆன்ட்டி சாஃப்டா தெரியறாங்க.' என்றாள். 

 

சாரதி உடனே பதில் அனுப்பினான். 'சாஃப்ட்டா? எங்கம்மாவா?' என்று அதற்குள் இன்னொரு செய்தியும் அனுப்பினான். 

'சண்டைன்னா வந்து பாருன்னு இருப்பாங்க.' என்றான்.

 

லாவண்யா சிரித்தாள். சாரதி உடனடியாக, 'சரி... நீ படி. இப்ப எதுவும் பேச வேண்டாம்.' என்று கூறியதும், லாவண்யா சரி என்றவாறு இதய எமோஜியை அனுப்ப, அதை பார்த்ததும் சாரதி போனை மார்பின் மீது வைத்துக் கொண்டு சில நொடிகள் அப்படியே படுத்திருந்தான்.

 

அன்றிரவு அவனுக்கு உறக்கம் முற்றிலும் வரவே இல்லை.

 

எத்தனை வருடங்களாக ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்கின்றான்.

காலை எழுந்துக்கொண்டு, 

பேருந்து, பயணிகள், டிக்கெட், டிப்போ, வீடு, சாப்பாடு, தூக்கம். அன்னையின் அன்பும் வாசமும்.

 

அதே சுழற்சிக்குள் இப்போது லாவண்யாவின் பெயர் வந்து நின்றுவிட்டது.

 

கண்களை மூடினாலும் லாவண்யாவின் முகம். அவள் கோபப்படுவது, சிரிப்பது, தன்னைப் பார்த்ததும் கண்கள் பிரகாசிப்பது, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு... அவன் சொன்ன அந்த வார்த்தை கூட அவனுக்கே புதிதாக இருந்தது.

 

காதல் வந்தால் இப்படித்தான் தூக்கம் போய்விடுமோ? என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டு, இருட்டில் சிரித்தான்.

 

அதே நேரம் லாவண்யாவுக்கும் தூக்கம் வரவில்லை.

 

போனை எடுத்தால் இஷிதா விழித்துக் கொள்வாள். ஹாலில் தாத்தா ஆவுடையப்பன் வேறு படுத்திருந்தார். அதனால் போனை மீண்டும் ஓரமாக வைத்துவிட்டாள்.

 

கண்களை மூடி சாரதியை நினைத்தாள். முதலில் பேருந்தில் அவனைப் பார்த்த நாள்... அவன் டிக்கெட் கொடுத்த விதம்... அவனிடம் தேவையில்லாமல் பேச்சு கொடுத்தது. அவன் கோபப்பட்டது... அவனைப் பார்த்து அவள் சிரித்தது... அவன் தன்னைத் தவிர்க்க முயன்றது... தான் விடாமல் பின்தொடர்ந்தது... இருவருக்குமான பிரிவு சண்டை, இன்று பூங்காவில் அவன் நின்ற விதம்...

 

அவன் கண்களில் இருந்த தவிப்பு... எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக மனதுக்குள் ஓடியது.

 

கடைசியில்... ''எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு  லாவண்யா.' என்று கூறிவிட்டானே.

 

அந்த வார்த்தையிலேயே அவளது நினைவுகள் மெதுவாக மங்கின. அவளுக்கே தெரியாமல் புன்னகையுடன் உறங்கிவிட்டாள்.

 

மறுநாள் காலையில் வழக்கத்தைவிட உற்சாகமாக எழுந்தாள் லாவண்யா.

 

குளித்து முடித்து, முடியை நன்றாக வாரி பின்னிக் கொண்டு கல்லூரிக்குத் தயாரானாள்.

 

முகத்தில் காரணமில்லாத பிரகாசம். அதை கண்ணாடியில் பார்த்தவளுக்கே சிரிப்பு வந்தது.

 

"என்னடி இவ்வளவு சந்தோஷம்?" என்று இலக்கியா சித்தி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று நினைத்தபடி வெளியே வந்தாள். ஆனால் இலக்கியாவுக்கு இருக்கும் பெரிய பொறுப்பு இஷிதாவை பள்ளிக்கு அனுப்பும் விஷயம். அதிலேயே மற்றவர்களை இலக்கியா கவனிப்பது குறைவே. அப்படி தான் லாவண்யாவின் மாற்றங்களை அவள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. சுரேஷ் சற்று தாமதமாக தான் வேலை முடித்து வந்து உறங்குவதால் எழுவதும் தாமதமாக தான் எழுவார். ஆவுடையப்பன் தான் காலையிலிருந்து இஷிதாவை லாவண்யாவை கவனிப்பார்.

   அதிலும் காலையிலேயே டிவியில் செய்தியை போட்டுவிட்டு, சோபாவில் அமர்ந்து கொஞ்ச நேரம் பார்ப்பவர், பிறகு குளித்து முடித்து அவருமே போனில் தான் மூழ்கியிருப்பார்.

 

லாவண்யா காதல் தற்போது யார் காதுக்கும் செல்லாத வகையில் டிப்போவை அடைந்தாள். 

 

தேவி ஏற்கனவே அங்கே நின்றிருந்தாள்.

 

"வந்துட்டிங்களா மேடம் நீங்க வராம பஸ் இனி நகராது தானே" என்று தேவி கிசுகிசுக்க, லாவண்யா அவளை முறைத்தாள்.

 

"சத்தம் போடாதடி. அதெல்லாம் இல்லை.. நேரத்துக்கு அவர் எடுத்துடுவார்." என்றாள். 

 

"ஓகே ஓகே.. நேத்து போன்ல ஏதாவது பேசினியா?" என்று கேட்டாள் தேவி.

 

"பஸ்ல புறப்படட்டும் அப்பறம் சொல்றேன்." இருவரும் பேருந்தில் ஏறினார்கள்.

 

அந்த நேரத்தில் சாரதி டிக்கெட் கட்டை கையில் எடுத்துக் கொண்டு முன்னால் வந்தான்.

 

அவனது பார்வை லாவண்யாவைத் தழுவியது. கண்டதும் ஒரு கணம் இதயம் நின்றது. அவளும் அவனைப் பார்த்தாள்.

 

இருவருக்கும் இடையே நேற்றைய மாலை அப்படியே மீண்டும் வந்து நின்றது.

 

ஆனால் அந்த நொடியில்... பவன் பேருந்தில் ஏறி வந்தான். அவன் நேராக லாவண்யா, தேவியின் முன்பாக வந்து நின்றான்.

 

அவர்கள் இருவருக்கும் நடுவே தடுப்புச் சுவர் போல. தேவி உடனே லாவண்யாவை இழுத்து ஜன்னல் பக்கம் அமர வைத்தாள்.

 

சாரதியின் முகத்தில் லேசான இறுக்கம் தோன்றியது. அவன் எதுவும் பேசாமல், அருகிலிருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

 

பவன் மட்டும் அவர்களைப் பார்த்தபடியே இருந்தான். அவன் முகத்தில் இருந்த பார்வை, நேற்றையதை விட வேறுபட்டிருந்தது.

 

'ரொம்ப பாதுகாப்பா பார்த்துக்கறியோ...' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், சாரதியை நோக்கி ஒரு முறை பார்த்தான்.

 

'டேய்... அவளை ஒரு நாள் அசிங்கப்படுத்தலைன்னா என் பெயர் பவன் இல்லை.' என்ற ரீதியில் இருந்தது அவன் நிலை.

 

அடுத்த சில நிறுத்தத்தில் அவன் இறங்கிவிட்டான். பவன் படிக்கட்டில் இறங்கியதும் தான் தேவி, லாவண்யா இருவரும் ஒரே நேரத்தில் மூச்சை விட்டனர்.

 

"பார்த்தியா அந்த எருமை மறுபடியும் வந்திருக்கு. ஆனா நீ சொன்ன மாதிரி அதான் சாரதி இருக்காரே.. அண்ணா கில்லாடிதான்." என்று கேலி செய்ய, லாவண்யா அவளை முறைத்தாலும், சாரதி இன்னும் பக்கத்தில் நின்றிருப்பதைப் பார்த்ததும் நிம்மதி வந்தது.

 

அந்தப் பயணத்துக்குப் பிறகு மீண்டும் செமஸ்டர் பாடங்கள், டெஸ்ட்கள், படிப்பு என்று கல்லூரி வாழ்க்கை வேகமெடுக்க ஆரம்பித்தது.

 

காதல் வந்திருந்தாலும் பாடப்புத்தகங்களை அவள் விட்டுவிடவில்லை.

 

டெஸ்ட் என்பதால் பெரிதாகக் கவலைப்படாமல், இருந்ததைப் படித்து தேர்வை எழுதி மதிப்பெண் வாங்கிக் கொண்டாள்.

 

  சாரதிக்கு தான் பொறுப்புகள் கூடுதலாக அமைந்தது. லாவண்யாவை தினமும் ரசித்து பார்த்து இறங்கி செல்வதை கவனித்து இளைஞருக்கே உண்டான காதல் அவஸ்தை, அழகியலாக தெரிந்தாலும், இனி வரும் காலம் லாவண்யாவை பாதுகாப்பாக, துணைவியாக கைப்பிடிக்க எவ்விதமான சூழ்நிலை அமையுமென்றும் நொடிக்கு நொடி எண்ணாமல் இருக்க முடியவில்லை‌. இதில்

பவனின் பார்வையும் சாரதிக்கு சரியாக தோன்றவில்லை. ஏதாவது ஏழரையை இழுத்து வைப்பானோ என்ற உறுத்தல் உருவானது. 

 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

 

 

 


 
Posted : September 17, 2026 7:02 am
(@crvs2797)
Posts: 198
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 20)

எல்லாருக்கும் காதல் வந்தப்பிறகு
தான் வில்லன் என்ட்ரீ கொடுப்பான். பட்.. இவங்க ரெண்டு பேரோட லைஃப்ல காதலுக்கு முன்னாடியே வில்லன் என்ட்ரீ கொடுத்துட்டானோ ? ம்.. இனிமேல் தான் ரொமான்டிக்காவும் இருக்கப் போகுது, திக்திக்காவும் இருக்கப் போகுதுன்னுத் தோணுது

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 17, 2026 8:09 am
(@guna-sundari)
Posts: 148
Estimable Member
 

Wow super super love birds. But there will be a twist. Becz our writer will do like this. Very intresting sis.


 
Posted : September 17, 2026 9:32 am
(@subhakumar85)
Posts: 122
Estimable Member
 

Kandipa eluppann..


 
Posted : September 17, 2026 10:30 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 137
Estimable Member
 

Adei avanga love ku yae already enna prachanai varum nu theriyala ithula indha pavan vera ya 


 
Posted : September 17, 2026 10:43 am

Scroll to Top