Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-16

4 Posts
4 Users
0 Reactions
12 Views
(@praveena-thangaraj)
Posts: 267
Member Admin
Topic starter
 
[#360]

அத்தியாயம்-16

புரசைவாக்கம் வந்ததும், லாவண்யாவும் தேவியும் பேருந்திலிருந்து இறங்கினர்.

அவர்கள் இறங்கியதை சாரதி கவனிக்காமல் இல்லை.

பேருந்து கிளம்புவதற்காக விசில் அடித்தவன், வண்டி நகர்ந்ததும் முன்னால் பார்த்தபடியே இருந்தான்.

ஆனால் சில அடிகள் சென்றதும், ஏதோ தோன்றியது போல பின்னால் திரும்பிப் பார்த்தான்.

லாவண்யா அங்கேயே நின்றிருந்தாள்.

அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவருடைய பார்வையும் ஒரு நொடி சந்தித்தது.

லாவண்யா மெதுவாகக் குனிந்து பேருந்துக்குள் இருக்கும் அவனைப் பார்த்தாள்.

சாரதியின் முகத்தில் இருந்த இறுக்கம் அந்த நொடி சற்றே தளர்ந்தது.

அவன் உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய முறுவல். அவளைப் பார்த்தபடியே பேருந்து நகர்ந்தது.

  லாவண்யாவும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பேருந்து தூரமாகிச் சென்று... ஒரு புள்ளியாகி... கண்களுக்குத் தெரியாமல் மறையும் வரை.

அவளுடைய முகத்திலும் அந்தப் புன்னகை இருந்தது.

அதே நேரம் பேருந்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்த இரு இளைஞர்கள் அந்தக் காட்சியையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

"இவங்களுக்குள் இந்தளவு போகுதுனு பவனுக்கு தெரிந்தா நொந்துடுவான்டா." என்றான்

"ம்ம்... கவனிச்சேன். கண்லையே பேசிக்கறாங்க. காலேஜ் போனப்பிறகு சொல்லலாமா?" இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"பவன்கிட்ட சொல்லலைனா என்னைக்காவது தெரிந்தா ஆடுவான். ஆனா இப்ப வேண்டாம். முதல்ல இன்னும் கொஞ்சம் பார்த்துட்டு சொல்வோம்." அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டிருக்க, பேருந்து அடுத்த நிறுத்தத்தை நோக்கி நகர்ந்தது.

புரசைவாக்கம் லாவண்யாவுக்கு முற்றிலும் புதிதான உலகமாக இருந்தது. சாலையோரம் வரிசையாக இருந்த கடைகள்... அதிலும் பெரிய சரவணா மதர்ஷா, பேஷன் பே, டெக்ஸ்டெயில் இந்தியா,  பட்டுசெண்டர் என்று பெரிய கடை முதல் சாலையோர 

துணிக்கடைகளின் துணிகள் என கண்ணைக் கவரும் விளக்குகளில் தயாரிப்பில் ஆர்வமாக பார்வையிட்டாள்.

புடவை, சுடிதார், ரெடிமேட் ஆடைகள் என்று ஒவ்வொரு கடையின் முன்பும் தொங்கிக் கொண்டிருந்த வண்ணமயமான ஆடைகளில் எதை வாங்க எதை மறுக்க என்று திண்டாடினார்கள். எல்லாம் விலை கேட்டு சிலதை நழுவிய சம்பவமும் இருந்தது.

ஒருபுறம் பழைய கடைகள். மறுபுறம் புதிதாக முளைத்திருந்த சிறிய ஷோரூம்கள். சாலையில் ஓடும் வாகனங்களின் சத்தம்.

ஆட்டோக்காரர்களின் அழைப்புகள். சாலையோரத்தில் விற்கப்படும் பூக்களின் மணம் என்று லாவண்யா கண்ணை சிமிட்டாமல் பார்வையிட்டாள்.

பஜ்ஜி, போண்டா, சமோசா என்று எண்ணெயில் பொரித்துக் கொண்டிருந்த உணவுகளின் வாசனை அதில் இன்றைய பர்சேஸிங்கில் சாப்பிட்டபடி நடந்தனர். 

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே லாவண்யா குழந்தையைப் போல மகிழ்ந்தாள்.

"தேவி... இங்க என்னடி இவ்வளவு கடை இருக்கு" என்றாள்.

"ஆமாடி. நீ புரசைவாக்கத்துக்கு வர்றதே இதுதான் முதல் தடவை. இங்க மட்டும் தான் கடைன்னு நினைக்காத இது ஒரு பகுதி தான். அண்ணா நகர்லயே எடுக்க கூட்டிட்டு போயிருப்பேன். சிலது அங்க ஐ பட்ஜெட் இருக்கும். நீ கொஞ்சம் டைம்பாஸ் பண்ணிட்டு சாரதி அண்ணாவோட கூட பேசுவனு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்." என்று கூறினாள்.

"ம்ம். தேங்க்யூ தேவி." என்று கட்டிக்கொள்ள வந்திட, 

"இப்படி வாயை பிளந்துட்டு சுத்தாம, வாயை மூடிக்கிட்டு போடி." இருவரும் சிரித்துக் கொண்டனர். 

 சரவணா ஸ்டோர் அவர்களை வரவேற்றது. முதலில் புடவை செக்ஷனில் சென்றனர்.

   மாலதியின் நிச்சயதார்த்தத்திற்காக சில புடவைகளை எடுத்துப் பார்த்த லாவண்யா, ஒவ்வொன்றையும் விரித்துப் பார்த்து, "இது நல்லாயிருக்கா?" என்றாள்‌.

"ம்ம்... நல்லா இருக்கு."

"இது?"

"அதுவும் நல்லா இருக்கு."

"தேவி... உனக்கு எதுவும் வாங்கப்போறியா" என்றாள்.

"நான் என்னத்த வாங்கறது. முதல்ல உங்கக்காவுக்கு நிச்சயத்துக்கும், நீ உடுத்த நல்லதா பார்த்து புடவை எடு." என்றாள்.

"அதுவும் சரிதான் அக்காவுக்கு எது பிடிக்கும்னு பார்த்து எடுக்கறது தான் இம்பார்டன்." என்று கடைசியில் இரண்டு புடவைகளைத் தேர்ந்தெடுத்தாள்.

அதற்குப் பிறகு பிளவுஸ் துணி.

அதோடு சேர்த்து வளையல்கள்.

சிறிய செயின்.

காதணிகள்.

மாலதிக்குப் பிடிக்கும் என்று நினைத்த சில சிறிய நகைகளும் வாங்கினாள். வழியில் சாலையோரக் கடையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹேர் கிளிப்பைப் பார்த்ததும்,

"தேவி... இது நல்லாயிருக்கு." என்று விலையெல்லாம் கேட்டு வாங்கினாள்.

மதிய நேரத்தில் இருவரும் ஒரு சிறிய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கடைகளில் சுற்றினர்.

நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. திரும்பும் நேரத்தில் தான் லாவண்யாவுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

"தேவி... தேவி.." என்று நடுரோட்டில் கத்த,

"என்னடி... பஸ் டயர்ல மாட்டின எலி மாதிரி கத்தற" என்றாள். 

"சாரதி இதே ரூட்ல தானே பஸ்ல வருவார்" என்று கூற, தேவி அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

"ஏன்டி இவ்வளவு நேரம் இந்தக் கடையில இருந்து இன்னொரு கடைக்கு இழுத்துட்டு வந்தியே இதெல்லாம் மறந்திருப்பேன்னு பார்த்தேன்... விவரம் தான்" என்று இடுப்பில் கையை வைத்துக் கூறினாள். 

லாவண்யா சிரித்தாள். "ஆமா அவர் வர்ற பஸ்ல போகணும்." என்றாள். 

"சரி. எவ்வளவு நேரம் காத்திருக்கணுமோ காத்திருப்போம்." என்று இரண்டு பேருந்துகள் வந்து சென்றுவிட்டது. தேவியோ "காதலிக்கறவங்க கூடவே இருக்க கூடாதுனு இருந்தேன்டி. கடைசில காலை முதல் மாலை வரை உன்னிடமே கடவுள் கோர்த்து விட்டுட்டார். பாரு... இரண்டு பஸ்ஸை விட்டுட்டு நிற்கறேன்" என்றாள்.‌ 

மூன்றாவது பேருந்தும் வந்தது. லாவண்யா அதையும் பார்க்கவில்லை. தேவி தலையைப் பிடித்துக் கொண்டாள்.

"ஏண்டி... எலி காயுது. எலிப் பொறுக்கை ஏன் காயுது" என்றாள். 

"ஏன்னா.. நீ என்னோட ஜிகிடி தோஸ்து உன்னால நான் இங்க காத்துக்கிட்டு இருக்கேன்."

லாவண்யா சிரித்தாள் "தேவி... சித்திக்கிட்டயும்... உங்க வீட்டுலயும் என் லவ் மேட்டரை சொல்லிடாத." தேவி முகத்தைச் சுழித்தாள்.

"ம்ம்... அப்படியே சொல்லிட்டாலும்!"

"ப்ளீஸ் டி."

"சரி சரி. சொல்ல மாட்டேன்."

அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தொலைவில் ஒரு பேருந்து வந்தது.

லாவண்யா திடீரென்று எழுந்தாள். "ஏய்... அவர் வர்றார்!" தேவி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

"அதெப்படி டி பஸ் வர்றதுக்கு முன்னாடியே சொல்லற? அதுவும் வேற பஸ்ஸா இருந்தா?" என்றாள்.

"இல்ல இது அவர் டியூட்டி பார்க்கற பஸ் தான். முன்ன அந்த டிரைவர்... யாரு... முத்து அண்ணா இருக்காரு பாரு." என்றதும் தேவி கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்.

"ஆமா... அவர் தான்" என்று தேவி வாய்பிளந்தாள்.‌

"பஸ் நம்பரை நான் நோட் பண்ணி வச்சிருக்கேன்." என்றாள் லாவண்யா.

"அடிப்பாவி!" லாவண்யா தேவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு முன்னே சென்றாள்.

பேருந்தில் கொஞ்சம் கூட்டம் இருந்தது. சாரதி முன்பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.

லாவண்யா ஏறியவுடன் அவளை அவன் அடையாளம் கண்டுக் கொண்டான்.

அவள் இரண்டு பைகளுடன் ஏறுவதைப் பார்த்ததும், அவனது பார்வை ஒரு நொடி அவள்மீது நின்றது. பிறகு வழக்கம்போல் தன்னுடைய வேலையைப் பார்த்தான்.

ஆனால் விசில் அடிக்க வேண்டிய நேரத்தில், அவளைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்தவன், விசில் கருவியை வாயில் வைக்காமல் வலது கையை உதட்டருகே குவித்து விசில் சத்தம் எழுப்பினான்.

தேவி உடனே லாவண்யாவின் காதருகில், "பார்டா... உனக்காகத் தான் விசில் சத்தத்தை அந்த விசில்ல அடிக்கல. காதலிக்கறதுக்கு முன்னயிருந்தே அதெல்லாம் அக்கறை வருது பார்றேன்" என்றதும் லாவண்யா அவளை முறைத்தாள்.

"சும்மாயிரு." அந்த நேரத்தில் சாரதி இரண்டு பைகளையும் பார்த்தான்.

"டிக்கெட்." என்று கேட்டான். 

"ரெண்டு அண்ணா நகர்." என்று பணத்தை நீட்டினாள். டிக்கெட்டை கிழித்துக் கொடுத்தான்.

லாவண்யா பின்பக்கத்தில் இடம் கிடைத்ததும் தேவியுடன் சென்று அமர்ந்தாள்.

சாரதி அவளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அவள் அமர்ந்திருக்கிறாளா என்பதை மட்டும் அவ்வப்போது கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தான்.

தேவி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகளுக்குப் பிறகு, ''ஏய் லாவண்யா..." என்று அழைக்க சாரதியையே பார்வையிட்டவள் திடுக்கிட்டு திரும்பினாள். 

"என்ன?" என்று சலித்தாள். 

"நாளை மறுநாள் படம் போகலாமானு பிரெண்ட்ஸ் கேட்டாங்க. நீ டல்லா இருந்தனு நான் அப்ப கேட்கலை. இப்ப போகலாமா? என்ன ஐடியாவுல இருக்க?" என்றாள்.

"அபிராமி தியேட்டர்னு தானே சொன்ன" என்றாள் லாவண்யா.

"ஆமா." என்றாள் தேவி. 

"அப்ப போகலாம்." என்றாள். 

"வீட்ல சொல்லிட்டு வருவியா?" என்று தேவி கேட்க, "ஆங்.. சித்திக்கிட்ட சொல்லிட்டு வருவேன்." என்றாள். 

"அச்சோ... எங்கம்மா உதைப்பாங்க. நான் வீட்ல சொல்ல மாட்டேன்.." என்ற தேவியை கண்டு லாவண்யா சிரித்தாள்.

"ஏன்? படத்துக்குத் தானே போறோம். பசங்களோட போனா தான் பிரச்சனை. நாம நம்ம பிரெண்ட்ஸ் கூட போறோம். நான் உங்க ஆன்ட்டிக்கிட்ட பேசறேன்." என்றதும், தேவி அவளைப் பார்த்து சிரித்தாள்.

"ஏன் லாவண்யா... புரசைவாக்கம் வந்தது உங்க வீட்ல தெரியும். அபிராமி தியேட்டருக்கு போறதும் சொல்லிட்டு போற. அப்ப சாரதி அண்ணாவை லவ் பண்றதையும் சொல்லிட்டு வருவியா?" என்றாள். 

லாவண்யாவின் முகம் உடனே சுருங்கியது. "எங்கம்மாவை பத்தி உனக்குத் தெரியாது." என்றாள் வருத்தமாய். 

"என்ன செய்வாங்க?" என்றாள்.

"விஷயம் தெரிஞ்சதும் கமுக்கமா அக்காவுக்கு நிச்சயம் நடக்கறப்ப எனக்கொருத்தனை பார்த்து, நைஸா பேசி, கல்யாணத்தையே ஏற்பாடு பண்ணிடுவாங்க." என்றதும் தேவி வாயைப் பிளந்தாள்.

"எங்க அப்பா... அதைவிட மோசம். இருக்கற சங்கத்துல எங்க சாதி சங்கம்னு வேற நடத்தறார். அதுல உறுப்பினர் இல்ல... செயலாளரே அவர் தான்... அதனால இப்ப சொல்ல மாட்டேன். காலேஜ் முடிக்கணும். வேலைக்குப் போய் என் கால்ல நான் நிக்கணும். அதுக்கப்புறம்... நான் காதலிக்கிறவன் தான் எனக்கு வேணும்னு சொல்லி அவங்க சம்மதம் வாங்க போராடுவேன்." என்று தேவி அவளைப் பார்த்து சிரித்தாள்.

"நல்ல திட்டம்தான்."

"என்ன?"

"ஒண்ணுமில்லை. காதல் வருவதற்கு முன்னாடியே கல்யாணத்துக்கான திட்டமும் போட்டுட்ட." என்றாள். 

"தேவி!" இருவரும் சிரித்தனர்.

டிப்போ வந்ததும் சாரதி இறங்கினான்.

அவன் பின்னால் லாவண்யாவும் நடந்து வந்தாள்.

சாரதி அதை கவனித்ததும் உடனே திரும்பிப் பார்த்தான்.

"எதுக்காக பின்னாடியே வர்ற?" என்றான் அக்கம் பக்கம் பார்த்து சங்கடமாய். 

"ஏன் வரக்கூடாதா?" என்றாள்.

"இங்க பாரு... எனக்கு வேலை இருக்கு. நின்னு நிதானமா பேச முடியாது. வேண்டுமின்னா... ஈவினிங் சந்திச்சு பேசலாம்" அவனது குரலில் பதற்றம் இருந்தது.

ஏனெனில் லாவண்யா நேராக டிப்போவைத்தான் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

"யோவ் கண்டெக்டரே..." என்றாள் லாவண்யா. சாரதி புருவத்தை உயர்த்தினான்.

"நான் பஸ் பாஸ் ரெனிவல் பண்ண வந்தேன்." என்றாள்.‌

'அப்படியா' என்று நொந்து விட்டான். அது அவன்‌ முகத்தில் தெரிந்தது. "ஆமா. உன்னிடம் கொஞ்ச வந்தேன்னு நினைச்சியா?" என்றவளிடம், சாரதிக்கு பதில் சொல்ல முடியவில்லை.

அவன் இருந்த இடத்தை விட்டு நகர பார்க்க, "ஈவினிங் நீயா தான் பேசலாம்னு சொன்ன. அப்பறம் வேலை இருக்கு. அது இதுன்னு கம்பு சுத்தாத.. ஈவினிங் சந்திப்போம்" என்றாள்.

"முடியாது. நான் எங்கயும் வரமாட்டேன்." என்றான். 

"நீ வரலைன்னா... நான் உங்க வீட்டுக்கு முன்னாடி வந்து நிற்பேன்." என்றவள் பேச்சால் சாரதி அதிர்ந்தான்.

"சாரதி..." என்று முத்துவின் குரல் கேட்டது. "இதோ வந்துட்டேன் அண்ணா!" என்று சொல்லிவிட்டு சாரதி அங்கிருந்து கிட்டத்தட்ட ஓடினான்.

    லாவண்யா அவன் செல்வதைப் பார்த்து சிரித்தாள்.

பஸ் பாஸை ரெனிவல் செய்துவிட்டு அவளும் மெதுவாக வெளியே வந்தாள்.

தேவி அவளைப் பார்த்ததும், "போட்டு தாக்கற லாவண்யா. பாவம் அந்த அண்ணாவுக்கு கொஞ்சம் டைம் குடு. நீ பாட்டுக்கு காதலிக்கறேன்னு சொல்லற. ஓகே சொல்லாம விட மாட்டேங்கற. இதுல ஈவினிங் சந்திக்கணும்னு வேற மிரட்டற." என்று பேச பேச லாவண்யா சிரித்தாள்.

  லாவண்யாவோ "ஆமா.. அப்படியே மிரட்டிட்டேன். காலையில அண்ணா நகர்ல நான் இறங்காம இருந்தப்ப 'ஏய்... இறங்கு'ன்னு சொன்னாரே. அதை நீ கவனிக்கலையா?" என்றாள். 

லாவண்யா முகத்தில் குறும்புப் புன்னகை. "எல்லாம் காதலிக்கறேன்னு பதிலுக்கு ஒரு வார்த்தை வாங்கற வரைக்கும் இதெல்லாம் பண்ணணும்" என்று தோளைக் குலுக்கினாள்.

-தொடரும்

-பிரவீணா தங்கராஜ்.

வாசிப்பவர் தங்கள் கருத்தை முன் மொழியலாம்.

 


 
Posted : September 13, 2026 4:37 am
(@guna-sundari)
Posts: 140
Estimable Member
 

Wow Lavanya super. Sarathy really u are pavam. Very intresting sis.


 
Posted : September 13, 2026 7:31 am
(@crvs2797)
Posts: 190
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 16)

அடிப்பாவி ! அப்பா சாதி சங்க செயலாளரா...? சுத்தம், இவங்க காதல் இப்பவே என் கண்ணு முன்னாடி ஜெகஜோதியா தெரியுது போங்க. ஏம்மா, லாவண்யா உனக்கு இந்த விஷப்பரிட்சை தேவையா..? இதுல பவனோட ஃப்ரெண்ட்ஸ் அவன் கிட்ட உங்களைப்பத்தி எப்ப போட்டுக் கொடுக்கலாம்ன்னு சமயம் பார்த்து காத்திட்டிருக்காங்க... மொத்தமா முடிஞ்சிடும் போலவே.

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 13, 2026 8:11 am
(@subhakumar85)
Posts: 114
Estimable Member
 

Avanugaluku theriyama erunthale parava ella.. yeppo yelraya kootumo therila


 
Posted : September 13, 2026 9:01 am

Scroll to Top