Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12

7 Posts
7 Users
0 Reactions
32 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#352]

அத்தியாயம்-12

சாரதிக்கு ஏன் லாவண்யா தன்னை முறைத்துப் பார்க்கிறாள் என்பதே புரியவில்லை.

பேருந்தில் முன்பு நடந்தது தவறுதலானது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அதற்குப் பிறகு அவள் பார்வையில் தெரிந்த கோபம். அவனை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.

அதற்குமேல் டிப்போவில் அவள் பேசிய விதம் வேறு. "ஆப்ட்ரால் ஒரு கன்டெக்டர்..." அந்த வார்த்தை இன்னமும் அவன் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

தான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை என்பதை அவளிடம் சொல்லிவிட்டான். இருந்தாலும் அவள் தன்னை நம்பினாளா இல்லையா என்பதே தெரியவில்லை.

அந்தக் குழப்பத்தோடும் மனக்கஷ்டத்தோடும் மீண்டும் தன்னுடைய டியூட்டிக்குச் சென்றான்.

மாலை வரைக்கும் அவனுடைய மனம் அமைதியாகவில்லை.

அதே நேரம்... தேவியும் லாவண்யாவும் மாடியில் பேசிக்கொண்டே நின்றிருந்தனர். அவள் கண்ட மோசமான அனுபவமாக சாரதியை பற்றி கூறினாள். தேவிக்கு என்ன செய்வதென்று புரியாமல் "சரி... இப்ப என்ன செய்யணும்?" என்று தேவி கேட்டபோது, இலக்கியா வந்தார். மாலதி நிச்சயதார்த்தம் வரவும், லாவண்யா சேலை கட்டுவதற்கு, தைக்கக் கொடுக்க வேண்டியிருந்த பிளவுஸ் துணியை லாவண்யாவின் கையில் கொடுத்திருந்தார்.

"இந்த பிளவுஸை தைக்கக் கொடுத்துட்டு வந்துடுங்க. பார்க் தாண்டி இரண்டு தெரு போனா... ஐந்தாவது வீடு. அங்கே காஞ்சனா அப்படின்னு கேளுங்க. அவங்கதான் தைப்பாங்க." என்றார் இலக்கியா. ஏற்கனவே இதை பற்றி பேசி கூறியதால், "சரி சித்தி..." என்றாள். 

தேவி தான் லாவண்யாவை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு பைக் வந்தது.

லாவண்யாவின் பார்வை தன்னையும் அறியாமல் அந்தப் பக்கம் சென்றது.

அது சாரதி. அவளைத் தாண்டிச் செல்லும் அந்த நொடி, சாரதியும் அவளை கவனித்தான்.

ஆனால் முன்பைப் போல அவன் முகத்தில் புன்னகை இல்லை. அவளை நோக்கிய பார்வையில் ஒரு தயக்கம். அதனுடன் சிறு வருத்தமும் இருந்தது.

தேவி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். 'இவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை? ஏன் இந்த திடீர் சம்பவம்.' அவளுக்குப் புரியவில்லை.

சாரதி வீட்டுக்கு வந்ததும் பைக்கை வாசலில் நிறுத்தினான்.

பைக்கை வாங்கிய நாளே காஞ்சனா தன் கையால் தைத்துக் கொடுத்திருந்த அழகான கவரை எடுத்தான்.

வீட்டில் தையல் வேலை செய்வதால், மீதமாகும் துணிகளில் பைக் கவர், ஃப்ரிட்ஜ் கவர், வாஷிங் மெஷின் கவர் என்று தேவையானவற்றை காஞ்சனா தைத்துக் கொடுப்பது வழக்கம்.

ஆனால் சாரதிக்காக மட்டும் அவள் ஒரு அழகான சேலையை வைத்து பைக் கவர் தைத்திருந்தார். சைக்கிளுக்கும் அப்படித்தான்.

அந்தக் கவரை மெதுவாக பைக்கின் மீது போர்த்திவிட்டு வீட்டுக்குள் வந்தான். "சாரதி... டீ போடவாப்பா?" என்று கேட்டார் காஞ்சனா.

"நா... நான் போட்டுக்கறேன்மா. நீங்க வேலை பாருங்க." என்று முகத்தைக் கழுவிக் கொண்டவன், சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றான்.

பால், சர்க்கரை, டீத்தூள் என தேவையான அளவு போட்டுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தான்.

அப்போது வெளியிலிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

"மனசே ஆறமாட்டேங்குது தேவி..." சாரதியின் கை வடிக்கட்டியை எடுத்த பொழுது, சட்டென்று நின்றது.

அந்தக் குரல்... லாவண்யா! அவனுடைய இதயம் ஒரு நொடி திடுக்கிட்டது. "அவ இங்க எதுக்கு வந்திருக்கா?"

அடுத்த நொடி அவன் மனதில் வேறொரு பயம் எழுந்தது. 'கம்ப்ளைன்ட் பண்ணப் போறேன்னு சொன்னாளே... இங்கே அம்மாகிட்ட ஏதாவது சொல்லிடுவாளா?' அவனுடைய உள்ளங்கையில் வியர்வை படர்ந்தது. தான் செய்யாத ஒன்றுக்காக தன்னுடைய குணத்தைத் தவறாகச் சித்தரித்துவிட்டால்?

அம்மா என்ன நினைப்பார்? தன்னுடைய அப்பாவைப் பற்றி இந்த ஊரில் இருந்த நல்ல பெயர் என்ன ஆகும்?

எல்லாமே அவன் மனதுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடியது.

அப்போது, "ஆன்ட்டி... இங்க காஞ்சனா அப்படின்னு டிரஸ் தைக்கறவங்க நீங்கதானே?" என்று தேவி கேட்ட குரல் கேட்டது.

"ஆமாம்மா... என்னம்மா?" என்று காஞ்சனா கேட்டார்.

"அம்மா... டீ..." என்று சொல்லிக் கொண்டு சாரதியும் சமையலறையிலிருந்து அவசரமாய் வெளியே வந்தான்.

வாசலில் லாவண்யாவையும் தேவியையும் பார்த்ததும் அவன் அப்படியே நின்றுவிட்டான்.

லாவண்யாவுக்கும் அவனைப் பார்த்ததும் பேச்சே வரவில்லை.

'இவர் வீட்டுக்கா வந்திருக்கோம்?' அவள் பார்வை தன்னையும் அறியாமல் வீட்டைச் சுற்றிப் பார்த்தது.

"உட்காருங்கம்மா..." என்று காஞ்சனா இரண்டு பேர் அமரக்கூடிய திண்டு வைத்திருந்த இருக்கையைக் காட்டினார்.

தேவியும் லாவண்யாவும் அமர்ந்தனர். "டீ குடிக்கறீங்களாம்மா?" என்று காஞ்சனா கேட்க,  "ஆங்... வேண்டாம் ஆன்ட்டி." என்று தேவி மறுத்தாள்.

"சாரதி... டீ இருந்தா ஊத்திட்டு வா." அவனுக்கு மீண்டும் ஒரு கலக்கம்.

சைக்கிள் தொலைந்தபோது இருந்த பதற்றம் போலவே இப்போதும் உள்ளுக்குள் ஏதோ உருண்டது.

'இவங்க முன்னாடி நான் இப்படியா இருக்கணும்?' அவன் அமைதியாக உள்ளே சென்று டீயை ஊற்றிக் கொண்டிருந்தான்.

"அளவு பிளவுஸ் இருக்காம்மா?" என்று காஞ்சனா கேட்டார்.

"இல்ல ஆன்ட்டி. பிளவுஸ் தைக்கணும். ஆனா அளவு பிளவுஸ் கொண்டு வரல."

"சரிம்மா. இந்த டீ குடிங்க. இதை முடிச்சதும் அளவு எடுத்துக்கலாம். கன்டினியூ மிஸ் ஆகிடும். இரண்டு நிமிஷம் தான்." சாரதி அவசரமாக டீயை ஊற்றி எடுத்துக்கொண்டு வந்தான்.

அவசரத்தில் டீ கொஞ்சம் சூடாகவே இருந்தது.

லாவண்யா டம்ளரை வாங்கி ஒரு மிடறு வைத்ததும், "ஸ்ஸா..." என்று உதட்டைச் சுருக்கினாள்.

அதே நேரம் சாரதியும் தன் கையில் கொதிக்கும் டீ பட்டிருந்ததை உணர்ந்து, கையை லேசாக ஊதிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த லாவண்யா ஒரு நொடி அவனைப் பார்த்தாள். 'எனக்கு கொதிக்கும் டீ ஊற்றிக்கொண்டு, அவர் கையிலும் ஊத்திக்கிட்டிருக்காரு.' அவளுடைய கோபத்தின் நடுவே ஒரு சிறிய குற்றவுணர்வு வந்து தொட்டது.

"என்னப்பா... நீ போய் உன் வேலையைப் பாரு. அம்மா டீ குடிச்சிடுவேன்." சாரதி அங்கேயே நின்றான்.

"நேரத்துக்கு எதுவும் சாப்பிட மாட்டேன்னு பக்கத்துலயே இருந்து குடிக்க வச்சி சாப்பிட வச்சுட்டுத்தான் வேற வேலை பார்ப்பான்.'' என்று பொதுவாய் இரு பெண்களிடம் கூறிவிட்டு,  "சூடா இருக்கு சாரதி. நீ போ. அம்மா குடிச்சிடுவேன்." என்றார்.

"சரிம்மா." அவன் மெதுவாக அறைக்குள் சென்றான். ஆனால் கதவை மூடவில்லை.

ஜன்னல் வழியாக அவனது பார்வை வெளியே சென்றது. தேவியும் லாவண்யாவும் காஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

'டிப்போல கம்ப்ளைன்ட் பண்ணப் போறேன்னு சொன்னவ... இப்ப அம்மாகிட்ட என்ன சொல்லப் போறாளோ?' அவன் மீண்டும் பதற்றமடைந்தான்.

"டீ நல்லாயிருக்குல்ல?" என்று தேவி மெதுவாக லாவண்யாவிடம் கிசுகிசுத்தாள்.

"ம்ம்..." என்றாள் லாவண்யா. இங்கே டீ குடிக்கவா வந்தோமென சலிப்பும் கூடியது.

அதைக் கேட்ட காஞ்சனா புன்னகைத்தார்.

"அவன் எல்லாமே செய்வான்மா. சமையல் கூட நல்லா பண்ணுவான். எனக்கு மேலுக்கு முடியாத நேரத்துல சமையல் பொறுப்பையே கையில எடுத்துக்குவான். டீ, காபி எல்லாம் சில நேரம் அவன் தான்." மகனைப் பற்றி பெருமையாகப் பேசினார்.

லாவண்யாவின் மனதுக்குள் ஏதோ அசைந்தது. சில நிமிடங்களில் அளவு எடுக்கத் தொடங்கினர் காஞ்சனா. "கை தூக்கும்மா..." லாவண்யா கையை உயர்த்தினாள்.

"கை இவ்வளவு போதுமா? இன்னும் கொஞ்சம் இடுப்பு இறக்கம் வைக்கவா?" 

"இவ்வளவு போதும் ஆன்ட்டி."

"முதுகு இவ்வளவு வைக்கலாமா?"

"ம்ம்... ஓகே ஆன்ட்டி." என்றாள். 

பிறகு காஞ்சனா நெக் டிசைன் அட்டை ஒன்றைக் காட்டினார்.

"இதுல எது பிடிச்சிருக்கு? சொல்லுங்க. அதையே வச்சிடலாம்." என்று இருவரும் பேசிட, "இது ஓகே ஆன்ட்டி." பணம், எப்போது வந்து வாங்க வேண்டும் என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டாள்.

காஞ்சனா துணியின் ஒரு சிறிய துண்டை வைத்துக் கொண்டு, பெயர், அலைபேசி எண்ணையும் குறித்து வைத்தார்.

"தைத்ததும் கால் பண்ணறேன்மா." என்றார்.

"சரிங்க ஆன்ட்டி." தேவியும் லாவண்யாவும் எழுந்தனர்.

"சரி ஆன்ட்டி... நாங்க கிளம்பறோம்." என்றாள். 

"பத்திரமா போயிட்டு வாங்கம்மா." அவர்கள் வெளியே வந்தனர்.

ஜன்னல் வழியாக அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாரதிக்கு, ஒரு நொடி நிம்மதி வந்தது.

'லாவண்யா எதுவும் சொல்லலை..' ஆனால் அடுத்த நொடியே இன்னொரு எண்ணம்.

'இப்ப அவளிடம் பேசாம விட்டுட்டா... இந்தப் பிரச்சனை தீராது.' என்றது புரிய, அவன் சட்டென்று ஹேங்கரில் இருந்த வேறு ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான்.

தலையை இரு கைகளாலும் கோதிவிட்டு, பைக் சாவியை எடுத்தான். "அம்மா... நான் இப்ப வந்துடறேன்."

"எங்கப்பா"

"சும்மா... இப்ப வந்துடறேன்மா."

"பார்த்து பத்திரம்யா!" அவன் பதில் சொல்லாமல் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

பார்க்கைத் தாண்டி லாவண்யாவும் தேவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

"இவர் வீட்டுக்கே போய் நிற்போம்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை" என்றாள் லாவண்யா. தேவியும், எனக்கு இவர் வீடு இந்த பக்கம்னு தெரியும். இந்த வீடுனு தெரியாது.'' என்றாள்.

திடீரென அவர்கள் முன்னால் பைக்கை வந்து நிறுத்தினான் சாரதி. 

லாவண்யா திகைத்தாள். "உன்கிட்ட பேசணும்." தேவி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

"நீங்க பேசுங்க. நான்..." என்று செல்லப் போனாள் தேவி.

"தேவி... நானும் வர்றேன்." என்றாள் லாவண்யா‌ நழுவும் பொருட்டு.

"லாவண்யா..." சாரதியின் குரலில் இருந்த வேதனை அவளை நிறுத்தியது.

"நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கே புரியல." லாவண்யா அமைதியாக அவனைப் பார்த்தாள்.

"ஆனா... இரண்டு நாளா நீ என்னை ஒரு குற்றவாளி மாதிரி பார்க்கற. உன் பார்வையே என்னை எரிச்சலடைய வைக்குது." அவன் குரல் உடைந்தது.

"என்னால அதைத் தாங்க முடியல. நாம சரியா பேசினதே இல்ல. ஆனா இதே இடத்துல உன்னைப் பார்த்தப்போ... என்னைப் பத்தி கொஞ்சமாவது புரிஞ்சிருப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ என்னை அறிவில்லாதவன்னு கூட சொல்லற அளவுக்கு வந்துட்ட." அவன் ஒரு பெருமூச்சு விட்டான். "நான் பஸ்ல இருந்தப்ப பிரேக் போட்டதும் தெரியாம தான் இடிச்சேன். இன்னிக்கு நடந்ததும் அப்படி தான். உனக்குத் தெரியலையா?" என்று தவித்தபடி கூறினான். 

"நீங்க இரண்டு முறைன்னு சாதாரணமா சொல்றிங்க..." என்றாள் லாவண்யா குழப்பமாக.

"ஆமா. இரண்டு முறை." தேவி உடனே இடையில் வந்தாள்.

"அண்ணா... இரண்டு முறை இல்ல. நாலு முறை." சாரதி புரியாமல் பார்த்தான்.

"முதல்ல பிரேக் போட்டப்போ அவ மேல உரசினிங்க." என்று தேவி லிஸ்ட் போட, 

  "அது தெரியாம நடந்ததும்மா.. முத்து அண்ணா பிரேக் போட்டார். நான் கொஞ்சம் பேலன்ஸ் பண்ணாம நின்றுட்டேன்" என்றான் சாரதி. 

"சரி. அடுத்து டிக்கெட் கொடுக்கும்போது முதுகுல கைப்பட உரசினிங்க." என்றதும் சாரதியின் முகம் மாறியது.

"நா... நானா?"

"ஆமா."

"ஒரு நிமிஷம்..."

அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

"எனக்கு ஞாபகமே இல்ல. எத்தனையோ பேர் டிக்கெட் வாங்க பணத்தை நீட்டியிருக்காங்க. அவங்களை தொட்டு தடவி ரசிக்கற அளவுக்கு நான் கீழ்த்தரமானவன் இல்லை" என்றான். 

தேவி தொடர்ந்தவளாக, "அதுக்கப்புறம் இன்னைக்கு காலையில அவ இடுப்புல கை வச்சு அழுத்தினிங்களாம்." என்று பெரியளவில் குற்றச்சாட்டினாள்.

"என்ன?" சாரதியின் முகத்தில் உண்மையான அதிர்ச்சி. அவன் மறுப்பாய் தலையாட்டினான். 

"இன்னிக்கு ஈவினிங் சில்லரையை இவ சுடிதாருக்குள்ள போட்டிருக்கிங்க." என்றதும் சாரதி "நான் சில்லரை வேண்டுமின்னே போடலயே. அது நழுவிப் போச்சு. அதோட அவ தான் முன்ன வந்தா, ஆக்சிடெண்டா அவ ஸ்கின்ல பட்டதும் கை பதறி இழுத்தேன்." என்றான்.‌

"அதெல்லாம் தப்பும் தவறுமா  இவளுக்கு நடந்தது தானே?" சாரதி சில நொடிகள் பேசாமல் நின்றான்.

"இங்க பாரு லாவண்யா.." என்று லாவண்யாவை நோக்கிப் பார்த்தான்.

"பிரேக் போட்டப்போ உன் மேல உரசியது தற்செயல். அதுக்கு நான் அன்னிக்கே  சாரி கேட்டேன். இன்னைக்கு சில்லரை பாட்டி கேட்டதும் எடுத்துக் கொடுக்கும்போது... எதிரே யாரும் இல்லைன்னு நினைச்சு கையை நீட்டினேன். நீ முன்னாடி வந்துட்ட. காயின் நழுவிடுச்சு. வேண்டும்னே நான் எதையும் உள்நோக்கத்தோட பண்ணல." அவன் குரல் பதற்றமடைந்தது.

"ஆனா... இடுப்பை நான் தொடவே இல்லை." லாவண்யா அமைதியாக அவனைப் பார்த்தாள்.

"உன் முதுகை என் கையால உரசியதாவும் எனக்கு ஞாபகம் இல்லை." என்றான். லாவண்யா சந்தேகமாய் நிற்கவும் சாரதி திடீரென, "எங்கப்பா மேல பிராமிஸ்... நான் அப்படி செய்யலை." என்றான். 

  அந்த வார்த்தையில் இருந்த உண்மை லாவண்யாவின் மனதைத் தொட்டது.

அவள் சில நொடிகள் பேசாமல் நின்றாள். "லாவண்யா..." அவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.

"புகார் தர்றதா இருந்தாலும்... எங்கம்மாகிட்ட எதுவும் சொல்லி அவங்களை காயப்படுத்தாத." அவன் குரல் மிகவும் மென்மையாகியது.

"எதுவா இருந்தாலும் என்னிடமே சொல்லு. என்னைத் தண்டிக்கணும்னா... தண்டனை கொடு. ஆனா என் அம்மாவை இந்த விஷயத்துக்குள்ள கொண்டு வராத." லாவண்யாவின் பார்வை மாறியது.

"என்னை குழப்பாதிங்க." சாரதி அமைதியாக நின்றான்.

"ஒரு பொண்ணுக்கு ஒரு தீண்டல் தப்பா... சரியானதா... தெரியாம இருக்காது. அந்த இரண்டு தீண்டலும் எனக்கு தப்பான தீண்டல் தான்." என்றாள் உறுதியாக.

சாரதியின் முகம் வெளிறி இறுகியது. "ஆனா..." அவள் தயங்கினாள். "நீங்க தொடவே இல்லைன்னு சொல்லும்போது... உங்களை நம்பாமலும் இருக்க முடியலை." சாரதி அவளைப் பார்த்தான்.

"ஏன்னா... இதே இடத்துல அன்னிக்கு உங்களைப் பார்த்திருக்கேன். பஸ்ல கூட... சில நேரம் உங்களோட சின்ன சின்ன அசைவுகள், செய்கைகள், குழந்தைகளிடம் பேசுற விதம். வயசானவங்களுக்கு உதவுற விதம்... அதெல்லாம் நான் கவனிச்சிருக்கேன்." அவள் ஒரு நொடி அவனைப் பார்த்தாள்.

"அதனால நீங்க வேண்டும்னே இப்படிச் செய்திருக்க மாட்டீங்கன்னு என் மனசு இப்பவும் சொல்லுது." சாரதியின் கண்களில் ஒரு சிறிய நிம்மதி தோன்றியது. ஆனால் அவள் அடுத்த வார்த்தை அந்த நிம்மதியை முழுமையாக வரவிடவில்லை."ஆனா... அந்தத் தீண்டல் என்னை எரிச்சல்படுத்துதே." அவன் அமைதியாக நின்றான்.

"இப்போதைக்கு... நான் போறேன் என்னை யோசிக்க விடுங்க." தேவியின் கையைப் பிடித்துக் கொண்டு லாவண்யா நடந்தாள்.

சாரதி அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவளைத் தடுக்க அவனுக்கு மனம் இல்லை.

அவள் தன்னை முழுமையாக நம்பவில்லை. ஆனால் முழுமையாகத் தவறாகவும் நினைக்கவில்லை.

அதுவே இப்போதைக்கு அவனுக்கு கிடைத்த ஒரே ஆறுதல். அவள் சில அடிகள் சென்ற பிறகு ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.

சாரதி இன்னும் அதே இடத்தில் நின்றிருந்தான். அவன் பார்வையும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

இருவருக்கும் நடுவே ஒரு உறவுக்கான பாலம் கட்டத் தொடங்கியிருந்த நேரத்தில், அதைத் தாண்டிச் செல்ல வேண்டிய பாதையில், ஒரு சிறிய பிரிவு வந்து நின்றது.

அந்தப் பிரிவு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருவருடைய மனதிலும் ஒருவரைப் பற்றிய எண்ணம் மட்டும் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தது.

-தொடரும்

-பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : September 9, 2026 6:48 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Lavanya oda kobam niyam than aana ava sonna rendu sambhavam um Sarathy ku samandham illa aana atha ivan seiyuthan nenachikitu than ava ivolo kobam ah irundha pola 


 
Posted : September 9, 2026 9:20 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Sarathy is gentleman. So he wont do it intentionally.  Some culprit play with Lavanya. Wait for that culprit. Very intresting sis.


 
Posted : September 9, 2026 9:24 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 12)

அதெப்படி நாலு முறை, ரெண்டு முறை தானே...? நாடுகளும் கவனிச்சோமே...? ப்ரேக் போட்டப்ப ஒருமுறை, சில்லறை கை தவறி விழுந்தது அவ்வளவு தானே..?
ஒருவேளை, முதல் ரெண்டு அத்தியாயத்துல ஒருத்தன் பொண்ணுங்களை பாடி ஷேமிங் பண்ணிட்டிருந்தானே அவன் ஏதாவது சைக்கிள் கேப்ல இப்படி வல்கரா பிஹேவ் பண்றானோ ?
இந்த லாவண்யா அவனை கவனிக்காமல் இவனை மட்டுமே ப்ளேம் பண்றாளோ ?

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 9, 2026 10:38 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Yevano vela paathu vitrukaan.. maatuva da nee


 
Posted : September 9, 2026 11:41 am
(@lachu-balu-varadhan)
Posts: 1
New Member
 

Enaku enamo vera yaro avala touch panunatha Ivan dan panitan nu ava thappa nenaichutu Iruka pola adan bus la cctv irukumla atha check pannu na terichurum


 
Posted : September 9, 2026 1:52 pm
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

இருவருக்கும் நடுவில் வேற யாரோ இந்த வேலையை பார்த்து இருக்காங்க


 
Posted : September 9, 2026 2:13 pm

Scroll to Top