பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
அத்தியாயம்-11
சாரதி புது பைக்கிலிருந்து பார்வையை அகற்றி அத்தெரு வாசலில் யாரையோ தேடுவதாக தெரிய, காஞ்சனா வந்ததும், "யாரை சாரதி தேடற " என்றார்.
"அது வந்து மா." என்று லாவண்யாவை பற்றி கூற வந்தவன், ஏனோ தயங்கி ஒன்னுமில்லைமா" என்றான்.
சைக்கிள் தொலைந்த பொழுது சந்தித்த பெண்ணை பார்த்தேன் என்று கூறவா முடியும்? அதற்கு முன்னரே லாவண்யாவை பார்த்ததால் கூற தயங்கினான். மேலும், இப்பொழுது தான் பைக் வாங்கி உள்ளது. இந்த நேரம் பெண் என்று ஆரம்பித்தால் எங்கே பொறுப்பற்ற பேச்சு என்று நினைத்தாலும் கஷ்டம். காஞ்சனா அவ்வாறு நினைப்பவர் அல்ல.. ஆனாலும் தவிர்த்தான்.
லாவண்யா பின்னால் திரும்பி திரும்பி பார்த்து நடக்கவும் இலக்கியாவுமே, "என்னடி முன்னால பார்க்காம பின்னால பார்க்கற?" என்றார்.
"இல்லை சித்தி.. இஷிதா மயங்கி விழுந்தப்ப ஒருத்தர் உதவி செய்தார். ஆனா அவரோட சைக்கிள் தொலைந்துடுச்சுனு சொன்னேன்ல... அவருக்கு சைக்கிள் கிடைச்சிடுச்சு. பைக் வேற வாங்கவும் செய்திருக்கார் போல வெளிய இருந்தது. அதை பார்த்துட்டு சந்தோஷமா இருந்தார். நீங்க ஏதாவது நினைப்பிங்களோனு பேசாம வந்துட்டேன்" என்றாள்.
"ஏன்டி இஷிதா மயங்கினப்ப உதவினார். என்னை கூப்பிட்டுருந்தா நன்றி சொல்லியிருப்பேன். ஏன் தப்பா நினைக்க போறேன். இங்க பாரு உங்கம்மா அளவுக்கு நான் தப்பா நினைக்க மாட்டேன். ஆம்பள பசங்களிடம் பேசினாவே தப்புனு சொல்லலை" என்று பேசவும், லாவண்யா தவறை உணர்ந்தாள்.
இலக்கியாவோ ''மறுபடியும் எங்கயாவது பார்த்தா சுட்டிகாட்டு பேசுவோம்." என்று முன்னால் நடந்தாள்.
லாவண்யாவோ இலக்கியாவின் பேச்சால் கலவரம் குறைந்து ஏதோ ஆனந்தமாய் வந்தாள்.
வீட்டில் ஆவுடையப்பன் சுரேஷ் பேசிக் கொண்டிருந்தார்கள். மாலதியை பொண்ணு பார்க்க வரும் போது சொந்தமென யாராவது இருக்க வேண்டுமென்று சித்தப்பா ஆவுடையப்பன் மற்றும் சுரேஷ் இலக்கியாவை தான் அழைத்திருந்தார். ஏனெனில் புருஷோத்தமனும் தந்தைக்கு ஓரே பையன், ஆவுடையப்பன் சித்தப்பாவுக்கும் சுரேஷ் ஒரே பையன் என்பதால் உறவென இருப்பவர் தானே செல்ல வேண்டும்.
இங்கு ஆவுடையப்பன் பெரும்பாலும் இருக்குமிடம் தெரியாமல் இருப்பவர்.
வயதான காலத்தில் அலைச்சல் வேண்டாமென வருவதை தவிர்க்க, சுரேஷ் இலக்கியா செல்ல பேசினார்கள்.
ஆவுடையப்பனுக்கு சாப்பாடு என்று பேச்சு அடிப்படும் போது, லாவண்யாவோ 'எனக்கு சமைக்க தெரியும் சித்தி. நான் பார்த்துக்கறேன்." என்றாள்.
"அப்படியா.. செமஸ்டர் வேற. படிச்சிட்டு எழுதிட்டு இருப்ப, இதுல சமையல் வேற, வேலை கூடுமே" என்றாள்.
"அதெல்லாம் ஒரா நாள்ல சமாளிச்சிடுவேன் சித்தி" என்றாள்.
அதனால் அடுத்து வேலூருக்கு செல்ல முடிவெடுத்தார்கள் சுரேஷ் இலக்கியா.
அன்றைய நாள் இனிதாக கழிய, அடுத்த நாள், சைக்கிளில் தான் டிப்போவிற்கு வந்தான் சாரதி.
காஞ்சனா கூட, ஏன் சாரதி பைக்ல போகலாமே. வீட்ல சும்மா வாங்கி வச்சி அழகு பாராக்கவா வாங்கியது" என்று கேட்க, "அப்படியில்லைம்மா... இத்தனை நாள் சைக்கிள்ல வந்தது, சட்டுனு பைக்னா.. ஒருமாதிரி அசௌகரியமா இருக்கு. நான் பைக்கை எங்கயாவது வேற விஷயத்துக்கு கொண்டு போய் சுத்தறேன். கொஞ்சம் நாள் கழிச்சு டிப்போவுக்கு போக உபயோகிக்கறேன்" என்றான்.
'உன் இஷ்டம்யா' என்றதும் சைக்கிளில் வந்து அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு அங்கே நிர்வாகிக்கும் ஆளிடம் சைக்கிளை பத்திரமாக பார்த்துக்க கூறி, கையெழுத்து போட்டு நடத்துனர் இருக்கையில் அமர, அவனுக்கு முன்னே இருந்தது லாவண்யா தேவி தான்.
ஒரு சிநேக புன்னகை சிந்தி, "முத்து அண்ணா ரைட்" என்றான்.
தேவியிடம் லாவண்யா, "மாலதி அக்காவை பொண்ணு பார்க்க சுரேஷ் சித்தப்பாவையும், இலக்கியா சித்தியும் போறாங்க. இஷிதாவை கூட கூட்டிட்டு போறாங்க. நானும் சின்ன தாத்தா மட்டும் தான். ஏதாவது ஈஸியா சமைக்க டிப்ஸ் கொடு" என்றாள்.
தேவியோ "மேகி பாஸ்தா பாக்கெட்டை வாங்கி சுடுதண்ணில போட்டு கொண்டு வா. எனக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்" என்றாள்.
"அய்ய... மூனு வேளை செய்ய கேட்டா ஒரு வேளைக்கு சொல்லற. உன்னை மாதிரி ஆளுக்கு தான் எல்லாமே பாக்கெட்ல விற்கறது வந்துடுச்சு." என்று கடிந்தாள்.
சாரதி பேசியதை கேட்டு லேசாக சிரிக்க, லாவண்யா சாரதி சந்திப்புகள் 'தெரிந்தவர்', என்ற ரீதியில் தான் பயணித்தது.
அப்படியென்றும் இலக்கியா இல்லாத நாளில் லாவண்யா பயந்து போகவில்லை காலையில் உப்புமா, மதியம் பூண்டு குழம்பு அப்பளம் என்று வைத்தாள்.
தேவி கூட "நான் எதுக்கோ உனக்கும் சேர்த்து எங்கம்மாகிட்ட டிபன் வாங்கிட்டு வந்தேன்" என்றாள்.
"உப்புமாவை டேஸ்ட் பண்ணி பாரு" என்றாள். பேருந்தில் சின்னதாக இருந்த டிபன்பாக்ஸை திறந்து, சீனியை தொட்டு சாப்பிட்ட தேவியோ "இருக்கறதிலயே எனக்கு பிடிக்காத புட் உப்புமா. ஆனா அதையே செய்து என்னை சாப்பிட வச்சி, செமையா இருக்குனு சொல்ல வச்சிட்ட. உனக்கு வர்றவன் பொழைச்சிப்பான்" என்றாள்.
"உன்னை.." என்று தோளில் இடித்து டிபன் பாக்ஸை மூடினாள். சாரதி அதெல்லாம் கவனித்தவனாக முறுவலிட்டான்.
சில நேரம் தான், இதே போன்ற பயணியர்களோடு சிரிப்பும் பேச்சும் கேட்டு ரசிப்பது.
பெரும்பாலும் குழந்தைகள் முன்ன வந்து நின்றால் அந்த நேரம் முகத்தை உற்றென்று மாற்றி சிரிக்க வைப்பான். அதிலும் விசிலை வைத்து ஓசையெழுப்பி, அது போல லாவண்யாவை கவனிப்பதையும் வாடிக்கையானது.
கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பொழுதும் வீடு பெருக்கி, சுத்தம் செய்து தாத்தாவுக்கு டீயை போட்டு தந்தாள்.
தேவியிடம் பேசியபடி இரவு சப்பாத்தி செய்து தந்தாள். தேவியுமே அன்று அங்கு தான் சாப்பிட்டாள்.
நேரமாகவும், தேவி சென்றப்பின் உறங்க போனாள்.
ஆவுடையப்பனோ "லாவண்யா... கதவை நல்லா தாழ்போடு.. மறந்துட போற.. அப்பறம் கேஸ் ஆப் பண்ணிட்டியா? ஒருக்கா பார்த்துக்கோ. அந்த ஜன்னல் கதவு அதையும் சாத்திடு. இல்லைன்னா ஏதாவது பூச்சிகிச்சி வந்துடும்" என்று ஒவ்வொன்றாக கூற, "கேஸ் ஆப் பண்ணிட்டேன் தாத்தா. லாக் பண்ணிட்டேன்." என்று கூறியவள் இரவு அக்கா மாலதியிடம் வீடியோ காலில் 'மாப்பிள்ளையை பார்த்தியா? உனக்கு பிடிச்சிருக்கா? மாமா எப்படியிருக்கார்" என்றெல்லாம் கேட்டாள்.
"அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு. நகை பத்தி பேசினாங்க. வரதட்சனை எவ்வளோ கேட்டதா சித்தி சொன்னாங்க. அப்பா எல்லாம் போடறதா சொன்னார்.
நீ கூட இல்லையேனு வருத்தமா இருந்தது" என்றாள் மாலதி.
"எனக்கும்... அங்கிருந்தா உன் கூட சண்டை போட்டுட்டு சுத்திட்டு இருந்தேன். இப்ப இங்க வந்தப்பிறகு உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன். அதுவும் உனக்கு கல்யாண தடை ஆகுதுனு அம்மா ஒரு வருஷமா புலம்பவும், நான் சாமிகிட்ட கூட வேண்டினேன். அக்காவுக்கு பிடிச்சவனா வந்து கல்யாணம் நடக்கணும்னு." என்றாள் லாவண்யா. என்னயிருந்தாலும் அக்கா தங்கை உறவு என்பது அடித்தாலும் அணைத்துக் கொள்ளும் அல்லவா.
"சரி.. இப்ப.. பொண்ணு பார்க்க தான் வரலை. கல்யாணத்துக்கு எந்த எக்ஸாம் இருந்தாலும் வரணும். எப்படியும் செமஸ்டர் டேட் எல்லாம் பார்த்து தான் அப்பா நிச்சயம், கல்யாணம் வைப்பார்." என்று பேச, லாவண்யா ஆமென்றாள்.
அப்படியே அன்னை அலமேலுவோ, "சாப்பிட்டியா இல்லையாடி." என்று கேட்டார்.
"சப்பாத்தி சாப்பிட்டாச்சும்மா." என்றாள்.
"லாவண்யா... பூனை நடுராத்திரி வரும் அதனால ஜன்னலை சாத்திடு" என்றாள்.
"பூனை உள்ள வருமா சித்தி. பாலை சூடுபடுத்தி ப்ரிட்ஜில வச்சிட்டேனே." என்றாள்.
"அட பால் இல்லைன்னாலும் கிச்சனை உருட்ட வரும்" என்றார்.
"அவ தூங்கிட்டா நடுவுல எந்திரிக்கவே மாட்டா" என்று அலமேலு கூற, "அம்மா.. குறை சொல்லறதிலயே இரும்மா. சித்தி ஜன்னலும் லாக் பண்ணிடறேன் சித்தி." என்றாள் லாவண்யா.
அன்னை அலமேலு, அக்கா மாலதி, அப்பா புருஷோத்தமன், சித்தப்பா சுரேஷ்யிடம் எல்லாம் பேசிவிட்டு இஷிதாவை பற்றியும் கேட்டுவிட்டு திரும்ப, ஆவுடையப்பன் தாத்தா எப்பொழுதே உறங்கியிருந்தார்.
நைஸாக தேவியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள். பிறகு நேரம் கழித்து உறங்கினாள்.
அடுத்த நாள் மதியமே இலக்கியா வந்துவிடுவார் என்றாலும் பருப்பும் அவரை பொரியலும் சமைத்து வைத்து கிளம்பினாள்.
இரண்டு மூன்று முறை அடுத்தடுத்த நாட்கள் சாரதி நட்பாக தான் புன்னகைத்தான்.
லாவண்யாவுமே... அப்படி தான். ஏன் கூடவந்த தேவியும் நட்பு ரீதியில் புன்னகைத்து ஏறுவார்கள்.
அப்படி சென்றுக் கொண்டிருக்கும் தருணம், அன்று தேவி ஏறிவிட்டு, லாவண்யா ஏறினாள்.
தேவிக்கு இடம் கிடைக்கவும் அமர்ந்துவிட்டாள். ஆனால் லாவண்யாவுக்கு இடம் கிடைக்காமல் நின்றுக் கொண்டு வந்தாள்.
சாரதி பின்னிருக்கையிலிருந்து முன்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, டிக்கெட் பணம் வாங்கி கிழித்து டிக்கெட் கொடுத்தபடி, ஆங்காங்கே நின்று விசிலடித்து முன் நோக்கி வந்தான்.
லாவண்யாவை கடக்கும் போது முத்து அண்ணா சிக்னல் என்று வண்டியை சட்டென நிறுத்த, லேசாக இடித்து விட்டான் சாரதி. ஆனால் பதட்டத்துடன் 'சாரி." என்று கூற, லாவண்யாவோ அங்கும் இங்கும் பார்த்து மௌனமாய் தன் துப்பட்டாவை சரிசெய்துக் கொண்டாள்.
சாரதிக்கு அவளது செய்கையால் பகீரென்றது. லாவண்யா தோளை தான் உரசியபடி மேலே சாய்ந்தான். இத்தனை நாள் நட்பாக பேசிய பெண் மீது எதிர்பாராமல் உரசியதை கண்டு அவனுமே பதறினான்.
அடுத்தடுத்து டிக்கெட் கிழிப்பதில் கூட கவனம் சிதறியது. லாவண்யா ஸ்டாப் இறங்கும் போது, லாவண்யா சாரதியை காண அவனோ கஷ்டத்துடன் 'சாரி' என்ற முகவாட்டத்துடன் தான் பார்த்தான்.
லாவண்யா தெரியாமல் நடந்திருக்கும் என்று அன்றைய நாளை கடந்தாள். பிறகு மதியம் கூட அவன் பேருந்தில் வந்தாலும், அவனது பார்வையை தவிர்த்து கொண்டாள்.
சாரதியும் காலையில் தெரிந்து உரசியதால் அவள் பார்வை தவிர்ப்பதாக புரிந்துக் கொண்டான்.
இரண்டு நாள் கழித்து சாரதி டிக்கெட் கிழித்து கம்பியில் கை வைக்க, சட்டென திரும்பிய லாவண்யாவோ முதுகில் தட்டி விட்டாள்.
சாரதிக்கோ தெரியாம கை பட்டுடுச்சா? என்று தான் குழம்பினான்.
ஏனோ லாவண்யா முறைத்து தள்ளுவது போல சாரதிக்கு தோன்றியது.
அடுத்த இரண்டு நாளும் பார்வைகள் தவிர்த்தாள் லாவண்யா.
ஆனாலும் அதே வழக்கமான ஏழு மணி பஸ்ஸை தவிர்க்க இயலாது சோர்ந்தாள்.
சாரதி காது பக்கம் வந்து விசிலடித்து தொலைக்க, லாவண்யா வெடுக்கென முறைத்தாள்.
"அறிவில்லை... பக்கத்துல வந்து.. இப்படியா?" என்று பல்லை கடித்தாள்.
சாரதியோ அக்கம் பக்கம் பார்த்து, என்ன நடந்ததென புரியாமல், தவிர்த்து அடுத்து வாயிலேயே விசில் சப்தம் எழுப்பினான்.
ஏன் தன்னிடம் அறிவில்லையா?' என்ற அளவு அனைவர் மத்தியிலும் திட்டினாளென்று சாரதிக்கு புரியவில்லை.
அதே நேரம் கல்லூரியில் லாவண்யாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தேவி எவ்வளவோ என்னவென கேட்டும் மௌனமாய் சொல்லாமல் மறுத்தாள்.
சாரதி சமீபத்தில் பேருந்து பிரேக் அடித்ததும் தன் மீது வந்து மோதி, தள்ளி சென்ற நாளிலிருந்து நினைத்து பார்த்து, பேருந்து பயணத்தையே கிட்டதட்ட வெறுத்தாள்.
ஆனாலும் கல்லூரி முடியவும் இம்முறையும் பேருந்தில் தானே பயணம் செய்ய வேண்டியதாயிருந்தது.
சாரதி பேருந்து வரவும், லாவண்யா தேவியிடம், "தேவி.. அடுத்த பஸ்ல போகலாமா?" என்று ஏறாமல் கேட்டாள்.
தேவியோ "என்ன விளையாடறியா? நேரத்துக்கு வீட்டுக்கு வந்து தொலைக்கலை அங்க எங்கம்மா ஏன் எதுக்கு லேட்டுனு கேட்டு தொலைப்பாங்க. என்ன தான் பிரச்சனைனு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கற" என்று பேருந்து படிக்கட்டில் ஏறினாள்.
"நீ வர்றியா வரலையா?" என்று கேட்க, சாரதியை பார்த்து வேண்டாவெறுப்பாக ஏறினாள்.
சாரதிக்கு லாவண்யா கோபமாக இருப்பதை ஒரளவு யூகித்திருந்தான். அவனுக்கும் அவளது பார்வை மாறிய விதத்தை வைத்து, யோசித்து பார்த்து, தான் அவள் மீது மோதியதில் இருந்து, இந்த எரிச்சலுடன் தன்னை காண்பதை யூகித்துக் கொண்டான்.
சிநேக புன்னகை வீசியது கடவுளுக்கு கூட பொறுக்கவில்லை போலும். அதனால் பயணியராகவே கடந்து செல்ல முயன்றான்.
அம்பத்தூர் எஸ்டேட் வந்ததும் டிப்போவில் வண்டி நின்றது. பயணிகள் எல்லோரும் விழுந்தடித்து இறங்குவதை கண்டாள்.
தேவியும் அவசரமாய் இறங்க போனவளிடம், "இருடி... இந்த கூட்டத்துல இடிச்சிட்டு இறங்க வேண்டாம். எல்லாரும் இறங்கினப் பிறகே இறங்கலாம்." என்று லாவண்யா கூற, தேவியும் சரியென மற்றவர் இறங்க காத்திருந்தனர்.
அந்த நேரம், ஒரு வயசான பெண்மணியோ "தம்பி பிராட்வேல ஏறினப்ப, மீதி சில்லரை இறங்கறப்ப கேளுங்க தர்றேன்னு சொன்னியே" என்றதும், "சாரி பாட்டி... ஏதேதோ யோசனையில மறக்க பார்த்தேன் இருங்க" என்று ஐம்பது ரூபாய் நோட்டும் இருபது ரூபாய் நோட்டை எடுத்தான். கூடவே ஏழு ரூபாயுக்கு சில்லரை தேடினான். லாவண்யாவின் மாற்றத்தை புரிந்துக்கொள்ள இயலாத சிந்தனை தான் அது.
பையில் ஐந்து ரூபாய் காயினும், இரண்டு ரூபாய் காயினும் எடுத்து நீட்டும் நேரம் முகம் நிமிராமல் கையை நீட்ட சாரதியின் கை அந்த நேரம் பார்த்து, லாவண்யா குறுக்கே அவசரமாய் இறங்க போகவும், அவள் கழுத்தில் தீண்டியது.
லாவண்யா பதறி பின்னால் நகரும் முன், சாரதியோ நாணயத்தின் பிடியை நழுவ விட, ஐந்து ரூபாய் நாணயமோ அவளது ஆடைக்குள் சென்றது. சாரதியும் ரூபாய் தாளை பாட்டியிடம் தந்தவன், பதட்டத்துடன் மீண்டும் ஐந்து ரூபாய் சில்லறை காயினை அவசரமாக எடுத்து பாட்டியிடம் தந்தான்.
அனைவரும் முட்டி மோதி இறங்கி முடிக்க, லாவண்யாவோ "அப்ப அவ்ளோ திட்டிட்டேன்னு இப்ப பழிவாங்கிட்டல்ல? அதுவும் காயினை எங்க போடற? நான் என்ன போஸ்ட் பாக்ஸா? இல்லை உண்டியலா? அறிவில்லை உனக்கு? உனக்கு இதே வேலையா?" என்று கத்த, கூட வந்த தேவியோ "என்னடி ஆச்சு?" என்று கேட்டாள்.
சாரதி கை தன் கழுத்துக்கு கீழ் வந்து தீண்டி, சில்லரை வேறு தன் மார்புக்கு மத்தியில் சிக்கிக் கொண்டதை கூற தயங்கினாள்.
சாரதியோ, லாவண்யாவை பார்த்து, "இங்க பாரு.. நான் எதையும் வேண்டுமின்னே பண்ணலை. நான் உன்னை கவனிக்கலை. தேவையில்லாம கத்தாத. நான் கன்டெக்டரா நாலு வருஷம் சர்வீஸ்ல இருக்கேன்.. இந்த மாதிரி எப்பவும் நடந்ததில்லை. ஏன் தான் உன்னிடம் இப்படி மாட்டிக்கிட்டேன்னு சத்தியமா தெரியலை. தயவு செய்து பெருசுப்படுத்தாத." என்றான்.
"ஏது... இப்ப நடந்ததை பெருசுப்படுத்தக் கூடாதா? அத சொல்ல நீயாருடா. ஆப்ட்ரால் ஒரு கண்டெக்டர்." என்று லாவண்யா கத்தவும், டிரைவர் முத்துவோ "என்னப்பா சாரதி அங்க என்ன பிரச்சனை?" என்று வந்தார்.
"அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணா." என்று கூறியவன். லாவண்யாவிடம் மென்குரலில், "தயவு செய்து ஏதாவது சொல்லி நீயே உன்னை பேசுப்பொருளா மாத்தாத." என்றான் அவசரமாய்.
"சீ.. உன்னிடம் பேசறதே அசிங்கம். இதுல நடந்ததை மறைக்க சொல்லறல்ல" என்று நின்றாள்.
தேவியோ "என்னடி நடந்துச்சு? கொஞ்ச நாளா நீ அப்செட்டாவே பஸ்ல டிராவல் பண்ணற. கேட்டா சொல்ல மாட்டேங்கற" என்று கேட்டாள்.
லாவண்யாவோ அதே கோபத்தில் நிற்க, சாரதியோ, "உனக்கு என்கூட சண்டை போடணுமா.. அங்க டிப்போவுக்குள்ள இருப்பேன். ஏதாவது புகார் தந்துட்டு, நீயே சண்டை போட வா. இப்ப என்னை விடு" என்று அவசரமாய் இறங்கி டிப்போவுக்குள் சென்றான்.
மதிய நேர உணவு நேரமென்பதால் நிறைய கண்டெக்டர் டிரைவர் இருந்தார்கள். சாரதிக்கு இந்த நேரம் அந்த பெண் இங்கு வந்து தவறுதலாக நடந்ததை கூறி என்னை தவறாக நினைக்க வைத்தால்?' என்று பயந்தான். இத்தனை நாள் வாங்கி வைத்த நல்ல பெயரும், தந்தைக்கு உண்டான மதிப்பும் நொடியில் அழிந்துடுமோ என்று பயந்தான்.
ஆனால் என்ன தான் நடந்தது? இப்பொழுது நடந்ததும், முன்பு அவள் மீது மோதியதும் தவறு தானே என்று சாட்சி கடிந்தது.
சாரதி வேதனையின் உச்சத்தில் நின்றான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 11)
அட ராமா ! எல்லார் விஷயத்துலயும் மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடியும்ன்னு சொல்வாங்க, பட்.. இங்கே நல்லவொரு அறிமுகத்துல ஆரம்பிச்சு இப்படி முகத்தை திருப்பிக்கிட்டு போற அளவுக்கு ஆகிடுச்சே. ஆனால், சாரதி தெரியாமத்தானே இடிச்சான் அதுக்கு ஏன் இந்த காச்சு, காச்சுறான்னு தெரியலையே.
அதே மாதிரித்தான் சில்லறையும் கைத்தவறித்தானே சுடிதாருக்குள்ள விழுந்தது, அதுக்கும் ஏன் தவறா எடுத்துக்குறான்னு புரியலையே, சாரதி மேல இருந்த நல்ல அபிப்ராயமெல்லாம் எங்கே போயிடுச்சு ?? காத்தோடு போயாச்சோ ?
😐😐😐
CRVS (or) CRVS 2797
Sarathy pannathu thappu na lum athu theriyama nadanthathu than ah coin vizhunthathu aachum thavara edam athuku ava kathurathu kooda ok aana avan theriyama idichathuku ava andha alavuku koba pattu appo la irundhu ava apadi react panna aarambicha athuku enna karanam than theriyala.
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
20 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-9
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-8
2 days ago
- 25 Forums
- 329 Topics
- 1,582 Posts
- 1 Online
- 420 Members
