பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-9
அத்தியாயம்-9
லாவண்யா கல்லூரியிலிருந்து புறப்படும் நேரம், "எனக்கென்னவோ இன்னைக்கி முழுக்க அந்த கன்டெக்டர் நினைப்பாதான் இருந்துச்சு." என்று சொல்லிக்கொண்டே வர, தேவி கையில் இருந்த சாக்லேட்டை பிரித்துக் கடித்து சுவைத்தவள், லாவண்யாவை வினோதமாகப் பார்த்தாள்.
"இல்ல... பாவம்யா அவர். இஷிதா மயங்கி விழுந்தப்போ, அவர் ஓடி வந்து உதவி பண்ணாரு. உதவி பண்ணின மனுஷருக்கு அடுத்த நிமிஷமே சைக்கிள் திருட்டுப் போச்சுன்னா... மனசுக்கு கஷ்டமா இருக்காதா?" என்று சொல்லியவள் அவளுக்கான சாக்லேட்டை பையிலேயே வைத்துக் கொண்டாள்.
தேவி லாவண்யாவையே சில நொடிகள் பார்த்தாள்.
"அட... இதையே நினைச்சிட்டு இருப்பியா? வேற வேலையே இல்லையா உனக்கு?" என்றாள்.
"அதெப்படி தேவி? கஷ்டப்பட்டு நல்லது செய்யறவங்களுக்கு இருக்கறதும் போகறதைப் பார்த்துட்டு பீல் பண்ணாம இருக்க முடியுமா?" என்று லாவண்யா மனிதரின் மனதை படித்தவளாக கூறினாள்.
"சரி... சரி... உன் நல்ல மனசுக்கு அளவே இல்ல." என்று தேவி சலித்துக் கொண்டாள்.
அதே நேரம் தூரத்தில் பேருந்து வருவது தெரிய, "பஸ் வருது... ஏறு." என்றாள்.
இருவரும் அவசரமாக பேருந்தில் ஏறினர். உள்ளே ஏற்கனவே பயணிகள் கூட்டம் இருந்தது.
சாரதி நடத்துனர் இருக்கையில் இருந்தான். ஆனால் லாவண்யா ஏறியதை அவன் முதலில் கவனிக்கவே இல்லை.
காலை பார்த்தபோது இருந்த இறுக்கம் அவன் முகத்தில் இல்லை. சைக்கிள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோ, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிடைத்த தகவலோ அவன் மனதுக்குள் கொஞ்சம் தெளிவைத் தந்திருந்தது.
அவன் வழக்கம்போல தன் வேலையில் இருந்தான்.
"டிக்கெட்..." என்று கேட்டு, பணத்தை வாங்கி, டிக்கெட்டை கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
லாவண்யாவுக்கும் தேவிக்கும் பின்புறத்தில் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது.
அமர்ந்ததும் லாவண்யாவின் பார்வை தன்னையும் அறியாமல் முன்னே சென்றது.
சாரதி பயணிகளிடம் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனை இப்படி கவனித்து பார்த்ததே இல்லையே என்று அவளுக்கே தோன்றியது.
முன்பு அவன் பேருந்தில் இருந்தால் கூட, அவன் இருப்பதே தன்னுடைய கவனத்திற்குள் வராது.
இன்று மட்டும் ஏன்? காரணம் தெரியும். அவனுடைய சைக்கிள் இஷிதாவால் பறிப்போனது. அதுவும் வெறும் சைக்கிள் இல்லை என்று நேற்று அவன் முகத்தில் தெரிந்த வேதனை...
லாவண்யாவின் பார்வை மீண்டும் அவன் முகத்தில் பதிந்தது. அவன் ஒருமுறையாவது தன்னைப் பார்ப்பானா? என்று தெரியாமல் காத்திருந்தாள்.
ஆனால் சாரதி அவளைப் பார்க்கவே இல்லை. டிக்கெட்டை சரிபார்த்தான். பயணிகள் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தான்.
பஸ் ஏறும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக ஏறுகிறார்களா என்று பார்த்தான். இறங்கும் போது யாராவது அவசரமாக இறங்குகிறார்களா என்றும் கவனித்தான்.
பஸ் நகர்வதற்கு முன்பு படிக்கட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டான்.
அவனுடைய ஒவ்வொரு செயலையும் லாவண்யா கவனித்துக் கொண்டிருந்தாள்.
'இவரு எப்பவும் இப்படித்தானா இருப்பாரு?' என்று நினைத்தாள்.
முன்னால் இருந்தால் ஒருவேளை இவ்வளவு கவனித்திருக்க மாட்டாள். ஆனால் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்ததால், சாரதி அவளது கண்களுக்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தான்.
"சாக்லேட் சாப்பிடல?" என்று தேவி கேட்டாள்.
"இல்ல."
"ஏன்?"
"இஷிதாவுக்குக் கொண்டு போய் தர்றேன்." என்றாள் லாவண்யா. இஷிதா சிறுமி என்பதால் இந்த சலுகை..
பிறகு ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது போல சாரதியை கவனிதாதாள்.. "என்ன? ஜன்னல் சீட் கிடைக்கலன்னு ஏக்கமா லுக் விடறியா?" என்று தேவி கிண்டலாகக் கேட்டாள்.
"பச்..." என்று முகத்தைச் சுளித்தாள் லாவண்யா.
"எக்ஸாம் வேற வருது. படிக்கணும். நீ எல்லாம் படிச்சியா?" என்றதும் தலையாட்டினாள்.
முதல் செமஸ்டர். நன்றாகப் படிக்க வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்.
ஆனால் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினாலும், சில நிமிடங்களுக்கு ஒருமுறை அவளது கண்கள் தானாகவே முன்னால் சென்றன.
அவன் இன்னும் தன்னைப் பார்க்கவில்லை.
"வாவின் ஸ்டாப்.... யாராவது இருக்கீங்களா? நீங்க இறங்கணும்." என்று சாரதி குரல் கொடுத்தான்.
லாவண்யா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். 'என்னையா சொல்றாரு?' என்று விழித்தாள்.
அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அருகில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நின்றிருந்த ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டினான்.
"அவங்க."
"நீங்க வாவின் வந்தா சொல்ல சொன்னிங்களே." என்றதும் குழந்தையை தூக்கக வைத்திருந்த பெண்மணி, 'ஆமா..." என்றார்.
"வாங்க... வந்துடுச்சு" என்றதும் அந்தப் பெண் அவசரமாக எழுந்தாள்.
"இருங்கம்மா... இருங்க. பொறுமையா இறங்குங்க. குழந்தையை வச்சிருக்கீங்க." என்று சாரதி சொல்லிக்கொண்டே படிக்கட்டருகே சென்றான்.
அந்தப் பெண்ணிடம் இருந்த லக்கேஜை பார்த்தவன், "அதை நான் இறக்கறேன். நீங்க குழந்தையை பத்திரமா பிடிச்சுக்கிட்டு இறங்குங்க." என்றான்.
குழந்தை மிகவும் குட்டியாக இருந்தது. தலையைத் தானாக நிறுத்த முடியாத அளவுக்கு சின்னக் குழந்தை. அதனால் சாரதி கவனமாக அந்தப் பெண்ணை இறங்க உதவினான்.
"தேங்க்ஸ்ங்க."
"பரவாயில்லம்மா." என்று புன்னகைத்தான்.
அந்தப் புன்னகையைப் பார்த்த லாவண்யாவின் உதட்டிலும் தானாகவே ஒரு புன்னகை மலர்ந்தது.
அந்தப் பெண்ணும் சாரதியைப் பார்த்து நன்றி சொல்லும் விதமாக புன்னகைத்தாள்.
அதைப் பார்த்த அடுத்த நொடியே... லாவண்யாவின் வாய் தன்னையும் அறியாமல் சற்று கோணியது.
'ச்சே...' என்று அவளுக்கே தன் செயல் பிடிக்கவில்லை.
'ஏன் இப்படி பண்ணினேன்?' என்று உள்ளுக்குள் கேட்டுக் கொண்டாள். அந்தப் பெண் திருமணமானவர். கையில் குழந்தையும் இருக்கிறது. அப்படி இருந்தும் ஏதோ ஒரு சிறிய பொறாமை... அவளுக்குள்ளிருந்து எங்கிருந்தோ வந்து அவளைத் தொட்டுச் சென்றது.
அதன் காரணம் அவளுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் கூட... அதை ஒத்துக் கொண்டிருப்பாளா என்பதும் தெரியாது.
பேருந்து மீண்டும் நகர்ந்தது. சில நொடிகளில் சாரதியின் பார்வை பின்புறம் வந்தது. அவனது கண்களில் லாவண்யா பதிந்தாள்.
இந்த முறை அவன் அவளைத் தவிர்க்கவில்லை. லாவண்யாவும் அவனைப் பார்த்தாள். காலை முழுவதும் மனதில் வைத்திருந்த ஒரு கேள்வி. 'சைக்கிள் கிடைச்சுதா?' என்று கேட்க வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் நேரடியாகப் பேச லாவண்யாவுக்கு தயக்கமாக இருந்தது.
ஏற்கனவே தேவி "க்கு" வைத்துப் பேசியிருந்தாள். அதையும் தாண்டி எதையாவது பேசினால்... என்ன நினைப்பாள்? என்று அவள் மனம் தயங்கியது.
அந்த நேரத்தில் அவளது அலைபேசி ஒலித்தது. அன்னை அலமேலு தான் அழைத்திருந்தார்.
"ஆ அம்மா... சொல்லுங்க.. எக்ஸாம் வருதும்மா..." என்று லாவண்யா பேச ஆரம்பித்தாள்.
சாரதியின் பார்வை மீண்டும் வேறு பக்கம் திரும்பியது.
அவன் தன் வேலையில் மூழ்கிவிட்டான். "ஆமாம்மா... நல்லா படிக்கறேன்."
"தேவியோட தான் போறேன். வீடு விட்டா காலேஜ்... காலேஜ் விட்டா வீடு... இப்படித்தான் வந்துடுவேன்மா." என்றாள்.
"ஏன்மா பயப்படற?" என்று சிரித்தவள், அடுத்த நொடி,
"அட... அக்காவை பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்களா?" என்று உற்சாகமானாள்.
"சூப்பர்மா!"
"பொண்ணு பார்க்க வர்றாங்களா? வாவ்..." சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தவள் முகம் மாறியது.
"எப்பம்மா?"
"அய்யோ... எனக்கு அப்ப செமஸ்டர் ஆச்சே."
"ஆங்... சரிம்மா. பரவாயில்லை. அக்காவுக்கு செட்டானா போதும்." சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
"ம்ம்... சரிம்மா. ஒழுங்கா சாப்பிடறேன்." என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
தேவி உடனே "என்னடி அம்மாவிடம் ரொம்ப நேரம் பேசின" என்று கேட்டாள்.
"அக்காவை வரன் பார்த்தாங்கள்ல.. அதுல ஒருத்தருக்கு அக்காவை பிடிச்சிருக்காம். பொண்ணு பார்க்க வர்றாங்களாம்." என்றாள்.
"அட சூப்பர்ல!" என்று தேவி கூறினாள்.
"ஆமா... ஆனா செமஸ்டர் வருது. அதனால நான் போக மாட்டேன். சித்தி போக வாய்ப்புண்டு." என்று கூறியபடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
பேருந்து எஸ்டேட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
எஸ்டேட்டில் பயணிகள் டிப்போ வந்ததும் எல்லாரும் இறங்கத் தொடங்கினார்கள். சாரதி படிக்கட்டருகே நின்று கொண்டிருந்தான்.
முத்து டிப்போவிற்குள் இறங்கி நடந்து கொண்டிருந்தார்.
"முத்து அண்ணா..." என்று சாரதி அழைத்தான்.
"என்னப்பா?"
"நான் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். சைக்கிளைத் திருடினவனைப் பற்றி விவரம் தெரிஞ்சு கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க."
முத்துவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
"நல்லதுப்பா. பார்த்தியா... காலையில இருந்து உன் மூஞ்சியே சரியில்லை. இப்பதான் கொஞ்சம் பளிச்சுனு இருக்கு." சாரதி லேசாகப் புன்னகைத்தான்.
"கவலைப்படாத. சைக்கிள் கிடைச்சிடும். அது உங்கப்பா நினைவுன்னு எனக்குத் தெரியும்." முத்து அவனது தோளில் தட்டினார்.
"போயிட்டு வா. எதுவானாலும் எனக்கு போன் பண்ணு." என்று கூறி, அவசரமாக மாற்று கன்டெக்டரை வரவழைத்து அடுத்த பயணத்திற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே போனில் கேட்டு செய்திருந்தான்.
"சாரதி... எதுனாலும் போன் பண்ணுடா!" என்று முத்து மீண்டும் கத்தினார்.
"சரிண்ணா." என்று சாரதி திரும்பினான்.
அந்த நேரம்... லாவண்யாவின் உதடுகள் மெதுவாக அசைந்தன.
'சா...ரதி.' அவள் தன்னையும் அறியாமல் அவன் பெயரை உச்சரித்தாள். இதுவரை அவளுக்குத் தெரியாமல் இருந்த அவனது பெயர். இப்போது தெரிந்துவிட்டது.
"லாவண்யா...." என்று தேவி அழைத்தாள்.
"லாவண்யா..." என்றவாறு தேவி அழைக்க, "அட இவ ஒருத்தி..." என்று சலித்துக் கொண்டாள்.
சாரதி அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
லாவண்யா காலையில் பார்த்த அதே பெண். சமீபகாலமாக சந்திக்கின்ற கண்களுக்கு சொந்தக்காரி. அவன் ஒரு நொடி தடுமாறினான்.
அவளைப் பார்த்தவுடன் அப்படியே கடந்து செல்லவும் முடியவில்லை. அதே சமயம் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியவில்லை.
அவன் பார்வை அவளிடம் நின்றது. தேவி முன்னால் நடந்து கொண்டிருந்தாள்.
லாவண்யா மட்டும் இன்னும் சில அடிகள் பின்னால் வந்து, "சைக்கிள் கிடைச்சிடுச்சா அண்ணா" என்றாள் தேவி.
சாரதியின் பார்வை லாவண்யாவிடம் இருந்து தேவியிடம் சென்றது.
"ஸ்டேஷன் போறேம்மா. சைக்கிளைப் பத்தி விவரம் தெரியும். கிடைச்சிடும்னு நம்பிக்கைதான்." என்றான்.
"ஓ... சரி அண்ணா. நேத்துலயிருந்து இவ அவ சித்திப்பா பொண்ணால உங்க சைக்கிள் போச்சுனு புலம்பிட்டா. ஏன்.. காலேஜ்லயிருந்து கிளம்பறப்ப கூட புலம்பினா" என்று தேவி பேசினாள்.
"கிடைச்சிடும்னு நம்பறேன்மா. அது எங்கப்பா உபயோகிச்ச சைக்கிள். அவர் இப்ப உயிரோட இல்லை. அவரோட நினைவா நான் வச்சியிருந்தது. கிடைச்சிடும்" என்று நம்பிக்கையாக பேசினான்.
"ஓ.. ஓகே அண்ணா... உங்க பெயர் சாரதியா?" என்று தேவி கேட்டாள்.
சாரதி லாவண்யாவை ஒரு கணம் பார்த்தான். பிறகு இருவரிடமும் பொதுவாகப் பேசுவது போல, "ஆமா." என்றான்.
''சரிங்கண்ணா.. நாங்க கிளம்பறோம்" என்று தேவி முன்னால் நடந்து செல்ல, லாவண்யா அவளைப் பின்தொடர்ந்தாள்.
ஆனால் இரண்டு அடிகள் சென்றதும்... திரும்பிப் பார்த்தாள். சாரதி அங்கேயே நின்றிருந்தான்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். லாவண்யா உடனே முன்னால் திரும்பிக் கொண்டாள்.
'பார்க்காதே... அவனை பார்க்காதே' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
ஆனால் இன்னும் இரண்டு அடிகள் சென்றதும், மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
இந்த முறை சாரதியும் திரும்பிப் பார்த்தான். அவன் ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறுவதற்காகச் சென்றான்.
கதவைத் திறக்க முனைந்தவன், ஏதோ நினைத்தது போல மீண்டும் திரும்பினான்.
லாவண்யாவின் கண்களும் அதே நேரத்தில் அவனைத் தேடி திரும்பியது.
இருவரின் பார்வையும், முன்பு எதர்ச்சையமாக சந்தித்தது. இன்று முதல் முறையாக நேருக்கு நேர் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தில் சந்தித்தது.
இருவரின் மனதிலும் ஏதோ ஒன்று சத்தமில்லாமல் விழித்துக் கொண்டிருந்தது. லாவண்யாவின் பார்வை முதலில் விலகிக் கொண்டாள்.
சாரதியின் உதட்டில் மெல்லிய புன்னகை தோன்றியது. அவள் முன்னால் நடந்து சென்றாள்.
அவனும் ஆட்டோவில் ஏறினான். ஆனால் இருவருடைய மனதிலும், அந்த ஒரு பார்வை லேசாக ஆக்கிரமித்தது.
அப்பொழுது கூட சாரதி பாவம் அவங்க சித்தப்பா பொண்ணால் என் சைக்கிள் தொலைந்ததாக வருந்துகின்றாளென எண்ணினான்.
லாவண்யாவுமே 'சே... அவரோட அப்பா இறந்துட்டார் போல அவரோட நினைவா சைக்கிள் வச்சிருந்திருக்கார். ஆனா அது தங்களால் தொலைந்து களவாடப்பட்டுள்ளது எப்படியும் திரும்ப வாங்கிட்டேனென நாளை கூறினால் ஆனந்தமாக இருக்குமென நடந்தாள்.
சைக்கிள் கிடைக்கின்றதோ இல்லையோ... இனி இருவர் மனதிலும் இதயத்தை தொலைத்திட வாய்ப்புண்டு என்று பிரம்மன் நகைத்தான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 9)
உண்மை தான், நல்லது செய்தா நல்லது தானே நடக்கணும், பட்..
இப்படி கெட்டது நடந்தால், நல்லது செய்யவே தோணாது தானே ?
அப்படின்னா சைக்கிள் இன்னும் கிடைக்கலையா, அட ராமா !
கிடைக்கலைன்னா போகட்டும்ன்னும் சொல்ல முடியலை, ஏன்னா, அது அப்பாவோட ஞாபக சின்னமா இருக்கிற ஒரேயொரு நினைவுச் சின்னம்., அதனால அப்படி விடவும் முடியலையே. ஆனா, இந்த சைக்கிள் காணாமல் போனதால ரெண்டு இதயங்கள் இப்ப இடம் மாறி ஒண்ணோடு ஒண்ணா இணையப்போகுதுன்னு தெரியறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
2 days ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
