Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-5

7 Posts
7 Users
0 Reactions
200 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#343]

அத்தியாயம்-5

அதிகாலை நேரம் அலாரம் அடிப்பதற்கு முன்பே சாரதி கண்விழித்து விட்டான்.

சில நொடிகள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தவனுக்கு, நேற்று இரவு அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது.

'நிஜம்டா... ஒருத்தி வருவா.' என்ற வார்த்தையை நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது.

எழுந்து குளித்து கண்ணாடியில் தன்னை கவனித்தான்.‌ கையில் பிரஷுடன், கண்ணாடியில் தன்னை கண்டான்.‌ வலது கையால் தாடையின் வலது இடதென தொட்டு பார்த்து, முன் நெற்றியில் இருந்த முடியை கோதி, பெருமூச்சை வெளியிட்டான்.

'அவ எங்க இருந்தாலும் என்னைத் தேடி வந்து நிப்பாளாம்' என்று அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்தவன், தனியாக சிரித்துக் கொண்டான்.

'இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. நேத்து ஏதோதோ பேசி, இப்ப என்னை கிறுக்கன் மாதிரி கண்ணாடியை பார்த்து சிரிக்க வச்சிட்டாங்க. இப்ப காலையிலேயே கல்யாணம், பொண்ணு என்றதே மண்டைக்குள்ள ஓடுது. இவங்களிடம் ஏதாவது பேசினா மருமகன்னு ஆரம்பிச்சுடுவாங்க.' என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான்.

அறையிலிருந்து வெளியே வந்தபோது, காஞ்சனா ஏற்கனவே விழித்திருந்தார்.

"எழுந்துட்டியா ராஜா?" என்றதும் ''ஆமா அம்மா." என்றான்.

"டீ போட்டு வச்சிருக்கேன். குடிச்சுட்டு போ." என்று டம்ளரை நீட்டினார்.

"நீங்க எப்ப எழுந்தீங்க?" என்றான்

"நான் எப்ப எழுந்தாலும் உனக்கு என்ன? நீ முதல்ல டீயைக் குடி."

"சரி மா." என்று வாங்கியவன், சுவரில் சாய்ந்தபடி சூடான டீயை மெதுவாகக் குடித்தான்.

காஞ்சனா சமையலறைக்குள் சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

டீ முடித்த சாரதி டம்ளரை வைத்துவிட்டு, "நான் குளிச்சிட்டு வர்றேன்மா." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

அவன் குளித்து முடித்து வெளியே வருவதற்குள், காஞ்சனா சமையலை கிட்டத்தட்ட முடித்து விட்டிருந்தார். அடுப்பில் இட்லி பாத்திரம் ஆவியெழுப்பிக் கொண்டிருந்தது. கத்திரிக்காய் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. மற்றொரு பாத்திரத்தில் வெண்டைக்காய் பொரியல்.

சாரதி சமையலறை வாசலில் நின்றபடி பார்த்தான்.

"என்னம்மா... இவ்வளவு சீக்கிரமா எல்லாம் ரெடி பண்ணிட்டீங்க?" என்று ஆச்சரியப்பட்டான்.

"நீ சாப்பிட்டு கிளம்பணும்ல. அதான். நேத்து கூட சாப்பாடு கட்டிக்கொடுக்கலை" என்றதும்

"நேத்து தெரியாம போச்சு. இன்னைக்கு தெரிஞ்சதால பொறுமையா கூட பண்ணலாமே" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, ஏறிட, இட்லிகளை தட்டில் மகன் சாப்பிட எடுத்து வைத்தார்.

சாரதி சிரித்தபடி அமர்ந்தான். "சரி... சாப்பிடலாம்." மூன்று நான்கு இட்லிகளைத் தட்டில் போட்டுக் கொண்டவன், மேலே கத்திரிக்காய் சாம்பாரை ஊற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

"ம்மா... சாம்பார் நல்லா இருக்கு."

"ம்ம்... சாப்பிடு."

"வெண்டைக்காய் பொரியலும் நல்லா இருக்கு." என்று சாரதி சிரித்துக் கொண்டே சாப்பிட்டான்.

சில நிமிடங்களில் தட்டிலிருந்த இட்லிகள் காலியாகின.

"ம்மா... இன்னும் கொஞ்சம் சாம்பார்." என்று கூறியவன் எழுந்து சமையலறைக்குள் சென்றான். "சாம்பார் அடுப்புல இருக்கு. கொஞ்சம் கரண்டி எடுத்து ஊத்திக்கோயா." பாத்திரத்தை எடுக்கச் சென்றவன், அங்கிருந்த இட்லி பாத்திரத்தை கவனித்தான்.

அதில் ஒரு தட்டு மட்டுமே இருந்தது. சாரதியின் புருவம் சுருங்கியது.

"ம்மா..." என்று அழைக்க "என்ன?" என்று திரும்பினார்.

"நீங்க உங்களுக்காக இட்லி ஊத்திக்கலையா?" என்றான்.

காஞ்சனாவோ "நான் தோசை ஊத்திக்கிறேன் டா." என்று மழுப்பினார்.

"சரி." என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் தட்டைக் கொண்டு வந்தவன், சாப்பிடத் தொடங்கினான். ஆனால் அவனுடைய பார்வை மட்டும் அந்த இட்லி பாத்திரத்தின் மீதே இருந்தது.

சாப்பிட்டு முடித்து கைகளை அலம்பச் சென்றபோது, அருகில் இருந்த காலியான மாவு பாத்திரம் அவன் கண்ணில் பட்டது. அவன் அப்படியே நின்றுவிட்டான்.

'மாவே இல்லையே. எதுல தோசை ஊத்தப் போறாங்க?' என்றவனுக்கு உடனே புரிந்துவிட்டது.

அன்னை நேற்று போல சரியாக சாப்பிடப் போவது இல்லையென.

என்ன சாப்பிடப் போறீங்க என்று கேட்டால், எதாவது பண்ணிக்கறேன், என்று சொல்லிவிட்டு சமையலறையை உருட்ட செல்வார்கள் என்பது சாரதிக்கு புரிந்தது.

அவனுக்கு எரிச்சலா... வருத்தமா... என்ன உணர்வு என்று புரியவில்லை.

பிறகு அவசரமாய் சட்டையை மாட்டிக் கொண்டவன், 'அம்மா... இதே வந்துட்டுறேன்." என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

'எங்க போறான்' என்று பார்வையிட அன்னையின் பார்வையால் "வந்துடறேன்மா!" என்று மட்டும் குரல் கொடுத்துவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்தான்.

காஞ்சனா வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். "இந்த நேரத்துல இவன் எங்க போறான்?" என்று யோசித்தபடி வீட்டுக்குள் சென்றார்.

சாரதி போகும் வழியிலிருந்த சிறு டிபன் கடையை நோக்கி வேகமாக மிதித்தான். அங்கே பூரி ஒரு செட் வாங்கிக்கொண்டு, சில நிமிடங்களில் கையில் ஒரு பொட்டலத்துடன் திரும்பி வந்தான்.

அவன் மூச்சு வாங்கியபடி சைக்கிளை நிறுத்தினான்.

"என்னய்யா... ஏன் எங்க போன?" என்று காஞ்சனா பதறியபடி கேட்டார்.

சாரதி கையில் இருந்த பொட்டலத்தை அவரிடம் நீட்டினான்.

"பூரி மசாலா." என்றான்.

"எதுக்குயா?" என்று காஞ்சனா கேட்க

"மாவு காலின்னு சொல்ல மாட்டீங்களாம்மா?" என்று கடிந்தான்.

"அதுக்காகவா இவ்வளவு அவசரமா போன?" என்றார்.

"நேத்த மாதிரியே சாப்பிடாம இருந்துடுவீங்கன்னு நினைச்சேன். கொஞ்சம் உங்களையும் கவனிங்கம்மா. ஏதோதோ கல்யாணம் மருமக.. எனக்குனு ஒருத்தி வருவானு பேசறிங்க. அதெல்லாம் பார்க்க வேண்டாமா? என் பையனோ பொண்ணோ வந்து உங்க கையால சாப்பிட வேண்டாமா. அதுக்கு நீங்க உங்க உடலை கவனிக்கணும்" என்று கூறியவன் பொட்டலத்தைத் திறந்து ஒரு பூரியை எடுத்து அவரிடம் நீட்டினான்.

"பிடிங்க." என்றான். காஞ்சனாவின் முகம் மலர்ந்து பின்னர் சற்றே வாடியது. மகன் கூறியதை கேட்டு முகம் மலர்ந்தது. கல்யாணம் பேரன் பேத்தி குழந்தை என்றவரை பேசியதால்... அடுத்த நிமிடம் இந்த கவலையும் தன் நெஞ்சில் அழுத்திக் கொண்டே உள்ளதே.

அவனுக்கென ஒருத்தியை தேடி பிடித்து அவள் கையில் சாரதியை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு. தனக்கு பின் சாரதிக்கு யார் உள்ளார் என்ற வருத்தம் நொடியில் நெசஞ்சில் அழுத்தியது.

"இதுக்காகத்தான் நீ இவ்வளவு அவசரமா ஓடினியா?" என்று மனதில் நினைத்ததை மறைத்து கேட்டார்.

"நேரமாகுது மா. ஒழுங்கா சாப்பிடுங்க" என்று டிபன் பாக்ஸ் பையை எடுத்துக் கொண்டான்.

'எனக்குன்னு நீ இருக்கேடா... உனக்குனு ஒருத்தியை பார்க்க வேண்டாமா?' என்று மெதுவாகச் சொன்னவர், மகனையே பார்த்தார்.

"நீ உடம்பை நல்லபடியா பார்த்துக்கோ. தினமும் இப்படி ஓடி ஓடி என்னை கவனிக்காத." சாரதி சிரித்தான்.

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க சாப்பிடுங்க. நான் கிளம்பறேன்." சைக்கிளைத் திருப்பியவன், மீண்டும் வீட்டை நோக்கிப் பார்த்தான்.

"பூரி முழுசும் சாப்பிடணும்."

"சாப்பிடறேன்."

"சொல்லாதீங்க. செய்யுங்க" என்றான்.

"சரி ராஜா." என்று காஞ்சனா சிரித்தார்.

சாரதி சைக்கிளை மிதித்தபடி டகப்போ சென்றான். அவன் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த காஞ்சனாவின் கண்களில் பெருமிதம் கலந்த ஈரம்.

'இந்த காலத்துல இப்படியொரு பையன் அம்மாவுக்காக யோசிப்பானா?' என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவர், 'இவன் இப்படி இருக்கறதாலதான்... இவனுக்குன்னு ஒருத்தியை நான் இருக்கும் போதே கட்டி வைக்கணும்.' என்றபடி வானத்தைப் பார்த்தார்.

"எங்க இருக்காளோ... எப்ப நல்லது நடக்குமோ..." என்று முணுமுணுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

சாரதி டிப்போவை அடைந்தபோது, முத்து ஏற்கனவே பேருந்தருகில் நின்றிருந்தார்.

"என்னப்பா... இன்னைக்கு லேட்டா?" என்று மணியை கவனிக்க, "இல்லண்ணா. சரியா தான் இருக்கு. வீட்டுல ஒரு சின்ன வேலை." என்று சொல்லியபடி அவசரமாய் டிப்போவில் அவன் கையெழுத்து போட்டுவிட்டு பணப்பையையும் டிக்கெட் பையையும் வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக, சாப்பாட்டுப் பையை முத்துவின் கால் அருகில் வைத்தான்.

"அட... இன்னைக்கு வீட்டுல சாப்பாடு கட்டிட்டாங்களா?" என்றார் டிரைவர் முத்து.

"ஆமா. அதுவும் ஒரு பெரிய கதையண்ணா." என்று சிரித்தவன், தன் டிக்கெட் பையை எடுத்துக் கொண்டான்.

பேருந்துக்குள் ஏற்கனவே சில பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். சாரதி தன் இடத்தில் நின்றபடி, "டிக்கெட்... டிக்கெட் வாங்கிக்கோங்க." என்று குரல் கொடுத்துக் கொண்டே ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கத் தொடங்கினான்.

அன்று காலை வழக்கத்தைவிட கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பேருந்து நகரத் தொடங்கியதும், விசில் சத்தம் அவ்வப்போது பேருந்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க, சாரதி ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் சென்று டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான்.

கூட்ட நெரிசலில் யாரையும் தேவையில்லாமல் இடிக்காமல், ஆண், பெண் என்று வேறுபாடு பார்த்து நிற்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, பேருந்து குலுங்கும்போதும் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு வேலை பார்த்தான்.

அந்த அனுபவம் அவனுக்கு ஒரே நாளில் வந்ததல்ல. முதல் ஆறு மாதங்கள் அவனுக்கு இதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருந்தது.

யார் எங்கே நிற்பார்கள்? எப்படி கூட்டத்துக்குள் செல்வது? எந்த நேரத்தில் விசில் அடிக்க வேண்டும்? எப்போது வண்டியை நிறுத்தச் சொல்ல வேண்டும்? எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பிறகுதான் இந்த வேலை அவனுக்கு இயல்பாகிப் போயிருந்தது.

அந்த நினைவு வந்ததும் சாரதி சின்னதாகச் சிரித்தான்.

அப்போது ஒரு பெண் பேருந்தில் ஏறினார். அவரைப் பார்த்த கல்லூரி மாணவர்கள் சிலர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, "ஏய்... மலை வருது! மலை வருது! வழிவிடுங்கடா!" என்று சத்தமாகச் சிரித்தனர்.

அருகில் இருந்த மாணவர்களும் சிலரும் சிரித்தனர். அதே நேரத்தில் வெளியே மழை தான் வருகின்றதா என்று இவர்கள் மலை மழை என்ற குழப்பத்தில் திரும்பி ஜன்னல் புறம் பார்த்தனர். அதில் லாவண்யாவும் தேவியும் கூட திரும்பி பார்த்து மழையா எங்க?' என்பது போல குழம்பினார்கள்.

சாரதி அந்த மாணவர்களைப் பார்த்து, "ஏன் தம்பிகளா.. பாடி ஷேமிங் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? அவங்க பேருந்துல ஏறுறதுக்கு கஷ்டமா இருக்கலாம். அதுக்காக இப்படி கிண்டல் பண்ணறது சரியா? படிக்கற பசங்க தானே. ஒருத்தரோட உருவத்தை பார்த்து கிண்டல் கேலி செய்யக்கூடாதுனு தெரியாது" என்று கேட்டான்.

அவனுடைய குரல் சற்று உரக்க இருந்ததால், அருகில் இருந்த பயணிகளின் காதிலும் விழுந்தது.

ஒரு மாணவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "அட அவங்களை சொன்னா நீங்க கோபப்படறிங்க. கன்டெக்டர் பயணியரிடம் லவ்ஸ் விடறதா பேசிக்கறாங்களே.. இதான்டா அது. கேரளா போல தமிழ்நாடும் அடுத்து நியூஸ்ல சொல்வாங்க" என்றான்.

சாரதி அமைதியை கைவிடுத்து அந்த மாணவனை பார்த்து கோபமாக ஏறிட்டு பல்லைக் கடிப்பது மற்றொரு மாணவன் கவனித்தான்.

அவனோ பேசிய மாணவனை அடக்கி, "சும்மாயிருடா.. கோச்சிக்காதிங்க அண்ண... சும்மா ஜாலிக்கு தானே?" என்றான்.

"உங்களுக்குப் ஜாலியா இருக்கலாம்பா. கிண்டலில் சிக்கிட்டு இருக்கற அவங்களுக்கு எப்படி இருக்கும்?" என்று சாரதி அமைதியாகக் கேட்டான்.

மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"சரி அண்ணா. சாரி" என்று ஒருவன் மெதுவாக அப்பெண்ணிடமும் சொன்னான்.

"சரி... உள்ள போங்க. படியில நிக்காதீங்க. நான் டிக்கெட் தர்ற பஸ்ல படில நிற்கவோ, மத்தவங்களை கேலி கிண்டல் செய்துட்டு பொண்ணுகளிடம் ஏதாவது கைவரிசை காட்டினா போலீஸ் ஸ்டேஷன்ல தான் வண்டியை நிறுத்த சொல்வேன்." என்று கூறிவிட்டு சாரதி மீண்டும் டிக்கெட் பையைத் திறந்தான்.

   அந்த பருமனான பெண்ணோ நன்றியுடன் சாரதியை நோக்கினாள்.

அந்தச் சம்பவத்தை அருகில் நின்ற லாவண்யா கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு சாரதியைப் பற்றி மனதில் ஏதோ ஒரு எண்ணம் உயர்வாக தோன்றியது.

நேற்று காலையில் துப்பட்டாவைச் சரி செய்யச் சொன்னவன். இப்போது யாரையும் கிண்டல் செய்யக் கூடாது என்று சொல்லும் அதே மனிதன்.

அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, சாரதி அடுத்த பயணியிடம் டிக்கெட் கேட்டுக் கொண்டிருந்தான்.

தேவியிடம் லாவண்யா திரும்பி, "நேத்து போன பஸ்லயும், இதே டிரைவர் இதே கன்டெக்டர் தானே இருந்தாங்க." என்று கேட்டாள்.

தேவி கன்டெக்டரான சாரதியை திரும்பி பார்த்து, "அட நேத்தும் இதே பஸ்ல தான் வந்தோம். ஏழு மணி பஸ் இது. அதனால அதே டிரைவர் அதே கன்டெக்டர்." என்றாள்.

லாவண்யாவோ 'ஓ... அதான்.' என்று ஏதோ சிந்திக்க, "இவர் நம்ம ஏரியா தான். நம்ம வீட்டை தாண்டி தான் அவர் வீட்டுக்கு போவார். ஆனா வீடெல்லாம் தெரியாது." என்று உபரி தகவல் தந்தாள்.

'ஓ... ஆனா.. நேத்து காலையில ஓகே... மதியமும் பார்த்த மாதிரி இருக்கே. கீழே இறங்கினப்பவும் இவரை தான் பார்த்தேன். நேத்து போறப்பவும் வர்றப்பவும் ஒரே பஸ்ல தான் வந்தேனா? என் துப்பட்டா தரையில தரையில இருப்பதை சுட்டிக் காட்டினார். இப்ப ஒரு பொண்ணை ஆம்பள பசங்க குண்டுனு கேலி செய்யவும் கேலி செய்யாதிங்கனு சொல்லறார்.' என்று சிந்தித்தாள்.

''அங்க என்னம்மா யோசிக்கற.. கோல்டன் ஜுப்ளி பிளாட்ஸ் வந்துடுச்சு.. சட்டுனு இறங்குங்க'' என்றான்.

'என்னத்த யோசிக்கறேன்... ஒன்னும் யோசிக்கலையே' என்று லாவண்யா பேந்த பேந்த விழித்தாள். கன்டெக்டரோ தன் பணியாக, இறங்குமிடம் வந்ததும் மற்ற பயணியை இறங்க கூறி கத்துவதை அறிந்தாள்.

தலையை உலுக்கிக் கொண்டு, ஜன்னலை நோக்கி பார்வையை மாற்றிக் கொண்டாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : September 2, 2026 6:42 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Sarathy correct ah super ah sonnan pa baby shaming panrathu oruthar ah pathi gossip pesura tho pesuravagaluku jolly ah irukum aana samandhapattavagaluku vali than ah athu 


 
Posted : September 2, 2026 9:28 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 5)

இந்த அம்மாக்களே இப்படித்தான் போல, தான் பட்டினி கிடந்தாலும் பிள்ளைங்க வயிறை காய விடமாட்டாங்க போல. ஆனால், நோய் நொடியை இழுத்து வைச்சுக்கிட்டு, டாக்டருக்கு மொய்ப்பணம் எழுதுவாங்க போல.
ஏன் தான் இப்படி இருக்கிறாங்களோ..?

அது சரி, நம்ம ஹீரோ சாரதி காதல், கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம் ஓகே தான், ஆனால் டிகிரி வாங்கலை போலவே, பட்.. லாவண்யா டிகிரி படிச்சிட்டிருக்காளே, பொண்ணு தருவாங்களா, இல்ல ரிஜக்ட் பண்ணிடுவாங்களா...?

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 2, 2026 10:19 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

By his activities he is creating an impression 


 
Posted : September 2, 2026 10:32 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Amma na amma than pillainga sapdanum avanga sapdama kuda irupanga . Good sarathy neeum kavani amma va crt time la velaiku vanthudra ithula body shaming pana kudathu nu bus la vara passenger ah pathukura thts really nice


 
Posted : September 2, 2026 3:50 pm
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Super sarathy. Natural narration sis.


 
Posted : September 3, 2026 9:21 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சாரதியின் அம்மா பிள்ளை பாசம் அழக... உருவகேலி பண்ணறவங்களுக்கு சந்தோசமா இருக்கும் ஆனால் அதை அனுபவிக்கறவங்களுக்கு தான் தெரியும் கேலிக்கையின் வலிகள் 


 
Posted : September 9, 2026 1:03 am

Scroll to Top