பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-3
அத்தியாயம்-3
சாரதியின் நடத்துனர் பணி, பிராட்வேயிலிருந்து அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் எஸ்டேட்டிலிருந்து மீண்டும் பிராட்வே என மதிய நேரம் வரை பயணத்திலேயே கழிந்தது.
காலையில் இருந்த பரபரப்பு மதியம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறி இறங்கும் பயணிகளுக்கிடையே சாரதியின் வேலை மட்டும் ஓயவில்லை.
டிக்கெட் கிழிப்பது, சில்லறை கொடுப்பது, படிக்கட்டில் நிற்பவர்களை உள்ளே அனுப்புவது, வயதானவர்களைப் பார்த்துக் கொள்வது என அவனுடைய கவனம் முழுவதும் பேருந்தின் பயணிகள் மீதே இருந்தது.
மதிய நேரத்தில் பிராட்வே வந்து சேர்ந்ததும், வயிற்றில் பசி எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
"வா சாரதி… சாப்பிட்டுட்டு போலாம்." என்று முத்து அழைக்க, இருவரும் அருகிலிருந்த சின்ன ஹோட்டலுக்குள் சென்றனர்.
கைகளை அலம்பி, முகத்திலும் தண்ணீர் தெளித்துக் கொண்ட சாரதி, கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு வந்து அமர்ந்தான். அவர்களை போலவே நடத்துனர் ஒட்டுனர் என்று பலரும் அந்த ஹோட்டலில் வந்திருந்தனர்.
அப்போது சரியாக அவனுடைய மொபைல் ஒலித்தது.
திரையில் 'அம்மா' என்ற பெயரைப் பார்த்ததும் எடுத்தான்.
அதென்னவோ பிள்ளைகளின் நலனில் அம்மா எப்பொழுதும் வந்துவிடாவார்கள். அதிலும் நேரத்திற்கு சாப்பிட்டார்களா என்ற அதே பல்லவியை பலமுறை கேட்டுவிடுவார்கள். "சொல்லும்மா" என்று காதில் வைத்தபடி கேட்க, "எய்யா… சாப்பிட்டியா? காலையிலேயே டீ கூட குடிக்கலை, சாப்பிடாம போயிட்ட." என்று கவலையாக கேட்டார்.
"அம்மா… காலையில வந்ததும் மசாலா தோசை சாப்பிட்டேன். இதோ… இப்பவும் சாப்பிட வந்துட்டேன்." என்றவாறு, எதிரில் வந்த பரிமாறுபவரிடம்,
"அண்ணா… மினி மீல்ஸ்." என்றான்.
அவன் சொல்லி முடிப்பதற்குள் சாப்பாடு மேசையில் வந்து வைக்கப்பட்டது.
"காலையில மசாலா தோசையா… சரி சரி. ஏன்யா இப்ப மினி மீல்ஸ்ஸா? வயித்துக்கு வஞ்சனை இல்லாம புல் மீல்ஸ் சாப்பிடுயா. வாழ்றதே சாப்பிடத்தானே?" என்று காஞ்சனா வழக்கம்போல மகனை கடிந்து கொண்டார்.
"அய்யோ அம்மா… அதெல்லாம் நடுவுல டீ வேற குடிச்சேன்மா. வயிறு புல்லாவே இருக்கற மாதிரி இருந்தது. அதனாலதான்." என்று கூறினான்.
"அதெல்லாம் சரி... இருந்தாலும் நீ ஒழுங்கா சாப்பிடு." என்றார்.
'ம்ம்… நீங்க சாப்பிட்டீங்களாம்மா?" என்று கேட்டான் சாரதி.
"ஆங்… காலையில டீயும் ரஸ்க்கும் சாப்பிட்டேன்டா. இப்ப ரசமும் அப்பளமும் வச்சிருக்கேன்." சாரதி சாப்பிட வந்திருந்த கையை அப்படியே நிறுத்தினான்.
"ஏன்மா… என்னைச் சொல்லிட்டு நீ ஏன்மா ஒழுங்கா சாப்பிடமாட்டேங்கற? டீயும் ரஸ்க்கும் குடிச்சதை சாப்பிட்டேன்னு சொல்லாதம்மா. இப்பவாவது ஏதாவது காய்கறி போட்டு குழம்பு, பொரியல் வச்சு சாப்பிடலாம்ல? ரசமும் அப்பளமும்னு என்னம்மா இப்படி பண்ணற?" என்று கவலைக் கொண்டான்.
''டேய்… நீ சாப்பிடாம போனா எனக்கு எப்படி டா பசிக்கும்?" அந்த வார்த்தையில் சாரதி ஒரு நொடி அமைதியானான்.
"உஃப்ஸ்…" என்று பெருமூச்சு விட்டவன், தலையை லேசாகக் குனிந்து அம்மாவை திருத்த முடியாது.. அம்மாவிடம் எதைச் சொல்லி புரிய வைப்பது?
தனக்காக என்றால் என்னென்னவோ செய்து சமைத்து வைப்பார்.
நான் சாப்பிடுகிறானா என்று பத்து முறை கேட்பார்.
ஆனால் அவருக்கென்று வந்துவிட்டால் மட்டும்,
'பின்னாடி சாப்பிட்டுக்கலாம்' இது போதுமென்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்.
"சரி… ஒழுங்கா சாப்பிடுங்க."
என்று கொஞ்சம் கடுமையாகச் சொல்ல, "சரியா சரியா… நீ சாப்பிடு. நான் சாப்பிடறேன்.”
என்று காஞ்சனா சமாதானப்படுத்தினார்.
"சரி மா." என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் சாரதி.
மொபைலை மேசையில் வைத்தவன், இடது கையைத் தலையில் வைத்து முடியை கோதிவிட்டான்.
அவனுடைய எதிரில் அமர்ந்திருந்த முத்து இதையெல்லாம் கவனித்தபடியே, "என்ன சாரதி… உங்கம்மாவும் இதே மாதிரிதானா?" என்றார்.
"எப்படின்னா?" என்று விழிக்க,
"தனக்கு உடம்பு முடியாம இருந்தாலும், நீ சாப்பிட்டியான்னுதான் முதல்ல கேட்பாங்க போல." என்றதும் சாரதி சிரித்தான்.
"எங்க அம்மானு மட்டுமில்லை அண்ணா… எல்லா அம்மாக்களும் அப்படித்தான்." என்றான்.
முத்து சாப்பாட்டை கிளறியபடி மெதுவாக "இந்தப் பொம்பளைங்க உலகமே இப்படித்தான். நம்ம சாப்பிடலைன்னா அவங்களுக்கு பசி வராது. அவங்களுக்கே உடம்பு முடியாம இருந்தாலும் நம்ம மேலதான் கவலை." என்றதும் சாரதி தலையசைத்தான்.
"ஆமா அண்ணா.. இந்தப் பெண் உலகமே அப்படிதான். தனக்குன்னா சாதாரணமாவும்… அவங்க நேசிக்கிற உறவுன்னா அசாதாரணமாவும் அன்பை செலுத்துறாங்க. அதை முழுசா புரிஞ்சுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்." என்றான்.
முத்து அவனைப் பார்த்து சிரித்தார். இருவரும் சாப்பிடத் தொடங்கினர். அன்று கொஞ்சம் பத்து நிமிட தாமதமாகத்தான் மீண்டும் வண்டியை எடுத்தனர்.
புரசைவாக்கம் வழியாகப் பேருந்து மேம்பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த பெரிய கடைகளும், உயரமான கட்டிடங்களும் சாரதியின் பார்வையில் பட்டன.
ஒருபுறம் தங்களுக்கென்று ஒரு உலகமே இருப்பது போல கெத்தாக நடந்து செல்லும் இளைஞர்கள். இன்னொரு புறம் ஜோடி ஜோடியாக காதலர்கள்.
அந்தக் காட்சிகள் அவன் பார்வையில் பட்டதும், ஏனோ மனதை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
அப்பா இருந்திருந்தால் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் வந்து நின்றது.
'அப்பா என்றொரு ஜீவன் இருந்தால், மகன் ராஜாவாக வாழ்வானென்று சும்மாவா சொல்வார்கள்' தந்தை இல்லாத மகனாக இருப்பதன் வலி, யாரிடமும் சொல்லாமல் அவனுக்குள் எப்போதாவது இப்படி எழுந்து வந்து நெஞ்சை அடைக்கும்.
அதை வெளியில் காட்டாமல் விழுங்கிக் கொண்டான். மதியம் என்பதால் பேருந்தில் கூட்டம் ஓரளவு குறைவாகவே இருந்தது.
நடத்துனர் இருக்கையில் அமர்ந்திருந்தவன், தன் கையை அந்த இருக்கையின் மீது வைத்துத் தடவினான்.
ஏனோ நெஞ்சுக்குள் மீண்டும் ஒரு பாரம். அதை உதறிவிட்டு எழுந்தவன், விசிலை வாயில் வைத்து ஊதினான்.
"டிக்கெட் வாங்காதவங்க வாங்கிக்கோங்க…" என்று குரல் கொடுத்தபடி, கையில் இருந்த நோட்டுகளை ஒழுங்குபடுத்திக் கொண்டான்.
வண்டி ஒவ்வொரு நிறுத்தமாகக் கடந்து சென்றது.
"அண்ணா நகர்… அண்ணா நகர்!" என்று சாரதி குரல் கொடுத்தபடி விசிலை ஊதினான்.
பேருந்து நின்றதும், கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் அவசரமாக ஏறினார்கள்.
அவர்களுக்கிடையே லாவண்யாவும் தேவியும் இருந்தனர். காலையில் இருந்த அதே பேருந்து. காலையில் இருந்த அதே நடத்துனர். அதெல்லாம் அந்த நேரம் லாவண்யா தேவி கவனித்திடவில்லை.
ஆனால் காலை இருந்த அந்தத் தயக்கமும் புதுமையும் லாவண்யாவின் முகத்தில் இப்போது இல்லை.
"அம்மாவுக்கு போன் பண்ணணும். அப்பாவுக்கும் இன்னைக்கு காலேஜ் முதல் நாள் எப்படி போச்சுன்னு சொல்லணும். அப்பா சந்தோஷப்படுவார்." என்று தேவியிடம் பேசிக்கொண்டே பேருந்தில் இடம் கிடைக்காமல் இருவரும் நின்றார்கள்.
"ஓரளவு எனக்கு சென்னை செட்டாயிடும்னு தோணுது தேவி." என்றாள் லாவண்யா.
"அதான் சொன்னேன்ல… இரண்டு நாள்ல எல்லாம் பழகிடும். வெளியூர்ல இருந்து வர்ற யாராயிருந்தாலும் சென்னைக்கு அடாப்ட் ஆகிடுவாங்க. சொல்லப்போனா சொந்த ஊராவே தெரிந்து வச்சிப்பாங்க." என்று தேவி சிரித்தாள்.
அப்போது சாரதி அவர்களருகில் வந்தான்.
"எங்கம்மா போகணும்" என்று கேட்க, இம்முறை லாவண்யாவே முன்னதாகப் பணத்தை நீட்டினாள்.
"இரண்டு அம்பத்தூர் எஸ்டேட்." சாரதி பணத்தை வாங்கிக் கொண்டு, டிக்கெட் கிழித்தான்.
இரண்டு டிக்கெட்டுகளையும் அவளிடம் நீட்டியபோது, அவன் பார்வை லாவண்யாவின் தோளில் சென்றது.
துப்பட்டா ஒரு பக்கம் ஒழுங்காக இருக்க, இன்னொரு பக்கம் சரிந்து கீழே வந்து தரையைத் தீண்டும் அளவுக்கு இருந்தது.
சாரதி சுட்டிக்காட்டியபடி,
"துப்பட்டா மத்தவங்க கால்ல படப்போகுது." என்றான்.
அவ்வளவுதான். லாவண்யா சட்டென்று தன் துப்பட்டாவைப் பார்த்தாள். "அச்சோ… தரையில புரளுதே.." என்று சரி செய்துகொண்டவள், "தே… தேங்க்ஸ்…" என்றாள்.
அவள் குரலில் இந்த முறை ஏதோ தயக்கம். 'காலையில் இறங்கும்போதும் இதே மாதிரி ஒரு கன்டெக்டர் சொன்னாரே' என்ற எண்ணம் சட்டென்று வந்தது.
அதனால் திரும்பிப் பார்த்தாள்.
அதே நேரத்தில் சாரதிக்கும் ஒரு எண்ணம் வந்தது.
'காலையில இதே மாதிரி நாம ஒரு பொண்ணுகிட்ட சொன்னோமோ?' என்று அவனும் லாவண்யாவை நோக்கித் திரும்பினான்.
அடுத்த நொடி இருவரின் பார்வையும் நேராக நேர்கோட்டில் சந்தித்தது. ஏதோ மின்னல் வெட்டியது போன்ற உணர்வு.
லாவண்யா முதலில் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். சாரதியும் எதுவும் நடக்காதது போல அடுத்த பயணியை நோக்கித் திரும்பினான்.
அந்த ஒரு நொடி மட்டும் இருவருடைய நினைவிலும் தங்கிவிட்டது.
பேருந்து நகர்ந்ததும், தேவி லாவண்யாவை உலுக்கி, "அந்த சீட்ல இருக்கறவங்க இறங்கறாங்க. வா" என்று அழைத்து செல்ல, லாவண்யா தேவி பின்னால் நடந்தாள்.
அங்கே இரண்டு பேர் இறங்கவும், இவர்கள் இருவரும் அவ்விடத்தில் அமர்ந்துக் கொண்டனர். அப்பொழுது லாவண்யாவுக்கு அவளது அப்பா புருஷோத்தமன் அழைத்தார்.
"அப்பா.. கரெக்டா கால் பண்ணறார்" என்று தேவியிடம் கூறிவிட்டு, "அப்பா.. காலேஜ் விட்டு தேவியோட பஸ்ல வர்றேன்பா." என்றாள்.
"காலேஜ் எல்லாம் எப்படி போச்சும்மா. ஒன்னும் கஷ்டமில்லையே. காலேஜ் ரொம்ப தொலவட்டா தெரியுதா? மதிய ஷிப்ட் என்றாலும் சாப்பிட்டுட்டியா? இல்லை வீட்டுக்கு போய் தானா?" என்று கேட்டார்.
"இன்னிக்கு தானப்பா வந்தேன். தூரமா தான் தெரியுது. ஆனா நேரம் குறைவா தான் இருக்கு. காலேஜும் நல்லா இருந்துச்சு. கூட படிக்கற பிள்ளைங்க எல்லாம் நல்லா பழகினாங்க. இன்னிக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகிக்கிட்டோம்
நான் காலையில ஷிப்ட்ல படிக்கறதால இப்ப திரும்ப வந்துட்டு இருக்கேன். மதிய ஷிப்ட் கிளாஸ் இருக்கறவங்க வந்தாங்க. இதெல்லாம் இப்ப தான் பார்க்கறேன்பா. மிஸ் எல்லாம் கூட நல்லா பழகினாங்க" என்று தெரிவித்தாள்.
"நல்லதும்மா... சித்தப்பா வீட்ல தங்கி படிக்கற. எந்த குறையும் இல்லாம பார்த்துக்கோ. உனக்கு மாசம் மாசம் ஆகற செலவை நான் அவங்களிடம் தந்துடுவேன். ஆனாலும் கையில காசு வச்சிருக்கியா? இல்லைன்னா கார்டுல பணத்தை எடுத்துக்கோ." என்று கூற, "தேவைப்பட்டா செலவு செய்துக்கறேன்பா. உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வாங்கி தராம நல்ல பெயரை எடுப்பேன்பா" என்று வாக்கு தந்தாள்.
"அம்மா இருக்காங்களா?" என்று கேட்க, 'நான் வேலைக்குனு வெளியே வந்துருக்கேன் லாவண்யா. அம்மா வீட்ல இருப்பா. நான் போய் சொல்லறேன். இல்லைன்னா நீ போன் போட்டு பேசிக்கோ." என்றார்.
"சரிங்கப்பா... நீங்க உடம்பை பார்த்துக்கோங்க" என்று அணைத்தாள்.
லாவண்யா போனில் அப்பா அப்பா என்று பேசியதாலோ என்னவோ சாரதி பார்வை அவளையே தழுவியிருந்தது. சற்றுமுன் தானே தந்தை நினைவில் சுழன்றான்.
சண்முகம் இருந்தவரை சாரதிக்கு இப்படி போனில் அழைத்தால், முதலில் போனையே எடுக்க மாட்டான். இல்லையென்றால் எதுக்கு பண்ணினிங்க. என்ன ஏது என்று கடுகடுவென கேட்டுவிட்டு சட்டென போனை துண்டித்து விடுவான்.
அதை எண்ணி பார்த்தவனுக்கு, 'தந்தை மீண்டும் ஒருமுறை தனக்கு அழைத்து பேசமுடியாத வகையில் இறைவனடி சேர்ந்ததில் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.
"வாவின் ஸ்டாப் வந்துடுச்சு. வண்டியை நிறுத்தலை. கன்டெக்டர் தம்பி வண்டியை நிறுத்துங்க" என்று கூறவும் விசில் சத்தத்தை உடனடியாக தொடுத்தான்.
லாவண்யா திரும்பி பார்க்க, மீண்டும் இருவரின் விழிகள் உரசிக் கொண்டது.
லாவண்யா சட்டென திரும்பிக் கொள்ள, சாரதியும் இயல்பாய் பயணிகள் இறங்கியதும் விசிலடித்து வண்டியை இயக்க வைத்தான்.
-பயணிப்போம்.
-பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 3)
எப்பவுமே எதுவும் இருக்கிறச்ச அருமைத் தெரியுறதில்லை,
இருக்கும்போது ஒரேயடியா அலட்சியப்படுத்துவோம், மதிக்கவும் தோணாது. ஆனால், நம்மை விட்டுப் போனப்பிறகு தான் அதோட அருமையும், பெருமையுமே தெரியும் போலயிருக்கு.
😐😐😐
CRVS (or) CRVS 2797
Super conductor oda velaiya apadi thana ena pana kural koduthuten irukanum ellam pakanum . Amma na summava pillaingalukaga e vazha aarambikuranga oru time la avanga sapta tha amma ku niraium ithe thanaku ethum senji sapda matanga oru avaluku ethukunu. Appa Niyabagam vantha mari ivalum appa kitta pesuradha pathu enguran irukum pothu arumai Theriyala illathapo ippadi aluthu ena pana
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
2 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
2 days ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 0 Online
- 420 Members
